![](pmdr0.gif)
சி. சுப்ரமணிய பாரதியார் கட்டுரைகள்
தொகுப்பு - 1
(தத்துவம், காமதேனு, உண்மை, ஓம் சக்தி, மாதர்)
Essays (collection /1)
of ci. cupramaNiya pArtiyAr
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
This work has been prepared using the Google Online OCR tool to generate
the machine-readable text and subsequent proof-reading.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2016.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
சி. சுப்ரமணிய பாரதியார் கட்டுரைகள்
தொகுப்பு -1
Source:
1. மகாகவி பாரதியார் கட்டுரைகள்
சாகித்ய அகாடமி / பாரி நிலையம், 2010
2. கட்டுரைகள் - பாரதியார்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2015
3. பாரதியார் கட்டுரைகள்
பூம்புகார் பிரசுரம்.
---------
பாரதியார் கட்டுரைகள்
தத்துவம் - யாரைத் தொழுவது?
பல தேவராக வணங்காமல் ஒரே மூர்த்தியாகத் தெய்வத்தை உபாஸனை செய்வதற்கும் இந்து மதம் இடங்கொடுக்கிறது. இவ்வித உபாஸனை சித்தத்தை எளிதிலே ஒருமுகப்படுத்தும். பக்திக்கு இதுவே சுலபமான வழி. ஆதலால், வீர சைவன், வீர வைஷ்ணவன் இவர்களுடைய உபாஸனை வேத விரோதமில்லை. இதர தெய்வங்களை விஷயந் தெரியாமல் பழித்தால், அதுதான் வேத விரோதம். வட ஹிந்துஸ்தானத்தில் சில இடங்களில் ராமன் கக்ஷி, கிருஷ்ணன் கக்ஷி என இரண்டு பகுதிகளாகப் பிரிந்து சிலர் பரஸ்பரம் பகையைச் செலுத்துகிறார்கள். இஃதெல்லாம் மடமையின் லக்ஷணம்.
பிரமாவுக்குக் கோவில் அரச மரத்தடியில் பிள்ளையார் கோவிலாக ஊர்தோறும் ஏற்பட்டிருக்கிறது. சிவனுக்கும் பார்வதிக்கும் விவாகம் நடந்தபோது, முதலாவது கணபதிக்குப் பூஜை "நடந்ததாக வேதம் சொல்லுகிறது. வேதத்தில் அக்னியை இரண்டு ரூபமாக்கி, ஒரு ரூபம் குமாரனாகவும் தேவசேனாதிபதியாகவும், மற்றொரு ரூபம் தேவகுரு வாகவும் சொல்லப்படுகிறது. அக்னியை ருத்ரனுடைய பிள்ளை என்று வேதம் சொல்லுகிறது. அக்னியே ருத்ரனென்றும் சொல்லப்படுகிறது. தேவகுரு, அமிர்த வாக்கையுடைய பிரஹ்மணஸ்பதி, கணநாதன். அவனையே ஹிந்துக்கள் ஸகல பூஜைகளிலும், ஸகல கர்மங்களிலும், முதலாவது வணங்குகிறார்கள். வேதபுராணங்களில் சொல்லப்படும் மூர்த்திகளெல்லாம் ஒரே பரமாத்மாவின் கலைகளென்பதை ஹிந்துக்கள் எப்போதும் மறக்கக் கூடாது.''ஒக்கத்தொழு கிற்றிராயின், கலியுகம் ஒன்றுமில்லை''என்று நம்மாழ்வார் சொல்கிறார். ஹிந்துக்கள் தங்களுடைய வேதப் பொருளை நன்றாகத் தெரிந்து கொண்டு கூடித் தொழுவார்களானால், கலியுகம் நீங்கிப் போய்விடும்.
-----------
தத்துவம் - இனி
நடந்தது எல்லாம் போக இனிமேல்: நடக்க வேண்டிய காரியத்தை நாம் யோசனை செய்யவேண்டும்.
கோவில் குருக்களுக்கு இனி நம்முடைய தேசத்து ஜனங்கள் ஒத்து நடக்க வேண்டுமானால், ஜனங்களிடம் பூசாரிகள் எதையும் மறைக்காமல், எந்த விஷயத்திலும் ஜனங்களை ஏமாற்றாமல், விஷயத்தைச் சொல்ல வேண்டும்.
"கடவுள் எங்கும் இருக்கிறாரே? எல்லாம் கடவுள் தானே? ஊருக்கு நடுவில் ஒரு கோவிலைக் கட்டி, அதில் ஒரு கல்லையோ செம்பையோ நட்டு, அங்கேதான் எல்லோரும் வந்து கும்பிடவேண்டும் என்ற நியமம் எதற்காக?" என்றால், ஜனங்களுக்குள் ஐக்யம் ஏற்படுவதற்காக.
கல்லில் மாத்திரம் தெய்வம் இருக்கிறதென்று நம்பி, நம்மைச் சூழ்ந்த ஜனங்களிடம் தெய்வம் இல்லை என்று நம்பலாமா?
கவனி! அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே நம்மைச் சூழும் அநந்த கோடி ஜீவராசிகளாக நின்று சலிக்கிறது.
இது தான் வேதத்தின் கடைசியான கருத்து. ''தன்னிடத்தில் உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்? என்பது முன்னோர் கொள்கை.
உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான் முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை - எல்லோரும் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம்.
ஒன்றுகூடிக் கடவுளை வணங்கப் போகுமிடத்து, மனிதரின் மனங்கள் ஒருமைப்பட்டு, தமக்குள் இருக்கும் ஆத்ம ஒருமையை அவர்கள் தெரிந்து கொள்ள இடம் உண்டாகுமென்று கருதி முன்னோர் கோவில் வகுத்தார்கள்.
ஊரொற்றுமை கோவிலால் நிறைவேறும். வீட்டுக்குள் தனியாகச் சிலை வைத்துக் கும்பிடுவது குடும்ப ஒருமை உண்டாகும் பொருட்டாக.
கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்லுகிறேன்; ஆணாகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில் பெண் தெய்வம் எல்லாம், உன் தாய், மனைவி, சகோதரி, மகள் முதலிய "பெண்களினிடத்தே வெளிப்படாமல் இதுவரை மறைந்து நிற்கும் பராசக்தியின் மகிமையைக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய். அவளைப் போலவே நம்முடைய பெண்கள், மனைவி, சகோதரி, மாதா முதலியோர் ஒளி வீச நாம் பார்க்க வேண்டும் என்பது குறிப்பு.
ஆண் தெய்வமெல்லாம், நீ, உன் பிதா, உன் சகோதரர், உன் மகன், உன்னைச் சேர்ந்த ஆண்மக்கள் அடைய வேண்டிய நிலைமையைக் குறிப்பிடுகின்றன.
சிவன் நீ; சக்தி உன் மனைவி.
விஷ்ணு நீ; லக்ஷ்மி உன் மனைவி.
பிரம்மா நீ; ஸரஸ்வதி உன் மனைவி.
இதைக் காட்டி மிருக நிலையிலிருந்து மனிதரைத் தேவ நிலையிற் கொண்டு சேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப் பள்ளிக்கூடங்களே கோயில்களாம்.
இதைப் பூசாரிகள் மறைக்கிறார்கள்.
----------
தத்துவம் - இனி
கும்பிடுவோர் நித்ய அடிமைகளாகவும், தெய்வாம்சம் உடையோர் தாமாகவும் இருந்தால் நல்லது என்று பூசாரி யோசனை பண்ணுகிறான். பிறரை அடிமை நிலையில் வைக்க விரும்புவோரிடம் தெய்வாம்சம் ஏற்படாது.
அப்படி இருக்கப் பல பூசாரிகள் தம்மிடம் தெய்வாம்சம் இருப்பது போலே நடித்து ஜனங்களை வஞ்சனை செய்து பணம் பிடுங்குகிறார்கள்.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள். எத்தனை காலம் ஒரு மோசக்கார மனிதனை மூடிவைத்து அவனிடம் தெய்வங் காட்ட முடியும்? ஆகையால் இந்தப் பூசாரிகளுடைய சாயம் "சீக்கிரம் வெளுத்துப் போகிறது. ஜனங்கள் பூசாரிகளை அவமதிப்பாக நடத்தி, பழைய மாமூலை உத்தேசித்துக் கல்லை மாத்திரம் கும்பிடுகிறார்கள். அப்படிப்பட்ட கல் வரம் கொடுக்கவே கொடுக்காது. எப்படிச் சாதாரணமாக ஒரு கல்லில் நல்ல சாதுக்கள் பக்தியுடன் மந்திரம் ஜபித்துக் கும்பிட்ட மாத்திரத்தில் பகவான் நேரே வந்து நர்த்தனம் பண்ணுவாரோ, அதுபோல் யோக்யதை இல்லாத பூசாரி தொட்ட மாத்திரத்தில் பகவான் அந்தக் கல்லை விட்டுப் போய் விடுவார். அது மறுபடி சாதாரண ரஸ்தா உருளை ஸ்தானத்திற்கு வந்து சேர்ந்துவிடும்.
கோவிலுக்குப் போனாலும் சரி; போகாவிட்டாலும் சரி: தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி; கும்பிடாவிட்டாலும் சரி; பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால், தெய்வம் அருள்புரியும். துளிகூட, ஓர் அணுக்கூட மற்றவர்களை ஏமாற்றுவதே கிடையாது என்று ஒருவன் பரிபூரண சித்தி அடைவானாகில், அவனே ஈசுவரன். குருவி, காக்கை, புழு, எறும்பு - ஒரு ஜந்துவுக்கும் வஞ்சனை பண்ணக் கூடாது. வஞ்சனை இல்லாமல், "ஏதோ உலகத்திற் பிறந்தோம். தெய்வம் விட்டதே வழி" என்று ஆற்றின் மீது மிதந்து செல்லும் கட்டைபோல் உலக வெள்ளத்தில் மிதந்து செல்ல வேண்டும். அங்ஙனம் முற்றிலும் பராதீனனாய் எவன் ஈசுவரன் மீது ஸகல பாரத்தையும் போட்டுவிட்டு நடக்கிறானோ, அவனுக்குத் தெய்வத் தன்மை உண்டாகும். இதில் ஸந்தேஹமே கிடையாது.
பலஹீன ஜந்துக்களுக்கு மனிதன் எதுவரை அநியாயம் செய்கிறானோ அதுவரை கலியுகம் இருக்கும். அநியாயம் நீங்கினாற் கலி இல்லை; உலகம் முழுதும் கலி இல்லை. ''உலகம் முழுதும் அநியாயத்தை விட்டுச் சமீப காலத்தில் நீங்கு மென்று நினைக்க ஏது இல்லை; "ஆதலால் கிருதயுகம் வரப்போவதில்லை நாம் மாத்திரம் ஏன் நியாயம் செய்ய வேண்டும்?'' என்று விபரீதமாக யோசித்து எவனும் தான் நடக்கும் அநியாய வழியிலே தொடர்ந்து செல்லக் கூடாது. எவன் அநியாயத்தை விடுகிறானோ, அவனுக்குக் கிருதயுகம் அந்த க்ஷணமே கைமேலே கிடைக்கும், இதில் ஸந்தேஹம் இல்லை.
ஒருவன் கலியை உடைத்து நொறுக்கினால், அவனைப் பார்த்துப் பத்துப் பேர் உடனே நொறுக்கி விடுவார்கள். இங்ஙனம், ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், லக்ஷம், கோடியாக, மனித ஜாதியில் ஸத்யயுகம் பரவுதலடையும் காலம் ஏற்கனவே ஆரம்பமாய் விட்டது. இதில் ஸந்தேஹம் இல்லை.
-------
தத்துவம் - பாரததேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியானம்
தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனிதன் தான் விரும்புகிறபடியே ஆகிறான். இதைக் காரணங்கள் காட்டி ருஜூப்படுத்த வேண்டுமானால,் அது ஒரு பத்திரிகைக் குறிப்பின் அளவுக்குள் முடிவு பெறமாட்டாது. ஆனால் அநுபவத்தில் பார்த்துக்கொள்ளலாம்.
ஒருவன் மனத்தில் நிமிஷத்துக்கு நிமிஷம் தோன்றிமறையும் தோற்றங்க ளெல்லாம் தியானமாக மாட்டா. புதர்க் கூட்டத்திலே தீப்பிடித்தாற்போல மனதிலுள்ள மற்றக் கவலைகளையும் எண்ணங்களையும் எரிக்கும் ஒரே ஜோதியாக விளங்கும் பெரிய விருப்பத்தைத் தியானமென்று கூறுகிறோம். உள்ளத்தில் இவ்வித அக்னி ஒன்று வைத்துக்கொண்டிருப் போமானால், உலகத்துக் காரியாதிகளெல்லாம் நமது உள்ள நிலைக்கு இணங்கியவாறே மாறுபடுகின்றன.
சுவாமிகள் ஆத்ம நாசத்திற்கு இடமான ஒருவகை இன்பத்தையே தியானமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். உலகத்திலுள்ள மெய்யான இன்பத்தை யெல்லாம் நுகர்ந்து, தமக்கும் பிறர்க்கும் நிலைத்த பயன்கள் விளைவதற்குரிய நற்காரியங்கள் செய்து, உள்ளத்திலுள்ள குழப்பங்களும் துன்பங்களும் நீங்கி, சந்தோஷமும் புகழும் பெற வேண்டுமென்ற இச்சை உடையவர்கள், தமது இச்சையை நிறைவேற்றிக் கொள்வது அசாத்தியமன்று. அது இவ்வுலகத்திலேயே இந்த ஜன்மத்திலேயே சாத்தியமாகும்.
அஃதெப்படி என்றால், தமது உள்ளத்திலே தீரத் தன்மை, அமைதி, பலம், தேஜஸ், சக்தி அருள், பக்தி, சிரத்தை இந்த எண்ணங்களையே நிரப்ப வேண்டும்.
''இவற்றை யெல்லால் நான் எனது உடைமையாக்கிக் கொள்வேன். இவற்றுக்கு எதிர்மறையான சிந்தனைகள் எனது அறிவினுள்ளே நுழைய இடங்கொடுக்க மாட்டேன்'' என்று ஒவ்வொருவனும் உறுதி செய்து கொள்ளவேண்டும்.

'தனது உள்ளத்தில் இன்ன இன்ன எண்ணங்களைத்தான் வளரவிட வேண்டும்; இன்ன இன்ன எண்ணங்களை வளரவிடக்கூடாது என்று நிச்சயிக்கும் அதிகாரம் - திறமை - ஒவ்வொருவனுக்கும் இயற்கையிலேயே ஏற்பட்டிருக்கின்றது. இதை அனுபவத்துக்குக் கொண்டு வரும்போது ஆரம்பத்தில் சில கஷ்டங்கள் உண்டாகும். உன்னை எதிர்த்துச் சில விவகாரமான சிந்தனைகள் அறிவிற்குள் வந்து நுழைந்து கொண்டு, 'வெளியே பிடித்துத் தள்ளினாலும் போகமாட்டோம்' என்று பிடிவாதஞ் செய்யும். அங்ஙனம் சிறுமைக்கும் உரிய "எண்ணங்கள் உன் அறிவில் புகுந்து கொண்டு தொல்லைப் படுத்துமானால், நீ அவற்றை வெளியே தள்ளுவதில் நேராக வேலை செய்ய வேண்டாம். நீ அதைத் தள்ளத் தள்ள, அது அங்கே தான் இருக்கும். அதற்கு யுக்தி வேறு. நீ அந்த எண்ணத்திற்கு நேர்மாறான வேறொரு நல்ல சிந்தனையில் அறிவு செலுத்துக. அப்போது அந்த நல்ல சிந்தனை வந்து அறிவில் இருந்து கொள்ளும். உன்னைத் தொல்லைப்படுத்திய குட்டிச்சாத்தான் தானாகவே ஓடிப்போய் விடும். தெய்வபக்தி உள்ளவர்களாயினும், நாஸ்திகர்களாயினும், எந்த மார்க்கஸ்தர்களாக இருந்தாலும், ஒரு மார்க்கத்தையும் சேராதவர்களாக இருந்தாலும், அவர்களுக்குத் தியானம் அவசியம். பாரத தேசத்தில் ஒவ்வொருவனுக்கும் தற்காலத்தில் நல்ல தியானம் உணவைக் காட்டிலும் இன்றியமையாதது. சோற்றை விட்டாலும் விடு. ஒரு தனியிடத்தே போயிருந்து உயர்ந்த சிந்தனைகள், அமைதி கொடுக்கக்கூடிய சிந்தனைகள், பலம் தரக்கூடிய சிந்தனைகள், துணிவும் உறுதியும் தரக்கூடிய சிந்தனைகள் - இவற்றால் அறிவை நிரப்பிக்கொண்டு தியானம் செய்வதை ஒரு நாளேனும் தவற விடாதே. "தெய்வபக்தியுடையவர்கள் இஷ்ட தெய்வத்தை அறிவில் நிறுத்தி, அதனிடம் மிகுந்த தாகத்துடனும் உண்மையுடனும் மேற்கூறியவாறு பெருமைகள் உண்டாக்குமாறு பிரார்த்தனை செய்ய வேண்டும்.வாயினால் பழங்கதை ஒன்றை முணுமுணுப்பது அதிகப் பயன் தரமாட்டாது. உன்னுடைய உள்ளுயிரிலிருந்து அந்தப் பிரார்த்தனை வெளியேற வேண்டும். நீயாக உனது சொந்தக் கருத்துடன் சொந்த வசனங்களில் உயிர் கலந்து தியானம் செய்வதே பயன்படும். நாஸ்திகர் கூட, இஷ்ட தெய்வம் இல்லாவிட்டாலும் வெறுமே தியானம் செய்வது நன்று ''உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்'' என்பது குறள்.
பரிபூரண விருப்பத்துடன் தியானம் செய். சோர்வும் அதைரியமும் விளைவிக்கத்தக்க எண்ணங்களுக்கு இடம் கொடாதே. ஊற்றிலிருந்து நீர் பெருகுவது போல, உனக்குள்ளிருந்தே தெளிந்த அறிவும், தீரத் தன்மையும், சக்தியும் மேன்மேலும் பொங்கிவரும். உன் இஷ்ட சித்திகளெல்லாம் நிறைவேறும். இது சத்தியம். அனுபவத்திலே பார்.
---------
தத்துவம் - மூடபக்தி
நம்முடைய ஜனங்களுக்கிடையே இந்த நிமிஷம் வரை நடைபெறும் மூட பக்திகளுக்குக் கணக்கு வழக்கே கிடையாது. இதனால் நம்மவர்களின் காரியங்களுக்கும் விவஹாரங்களுக்கும் எற்படும் விக்கினங்களுக்கு எல்லை இல்லை.
இந்த மூட பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்திகளுக்கும் நாள் நக்ஷத்திரம், லக்னம் முதலிய பார்த்தல், க்ஷவரம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்றால், அதற்குக்கூட நம்மவர் மாஸப் பொருத்தம், பக்ஷிப் பொருத்தம், திதிப் பொருத்தம், நாட்பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது. "க்ஷவரத்துக்குக் கூட இப்படியென்றால், இனிக்கலியாணங்கள், சடங்குகள், வியாபாரங்கள், யாத்திரைகள், விவசாய ஆரம்பங்கள் முதலிய முக்கிய கார்யங்கள் பல்லாயிரத்தின் விஷயத்திலே நம்மவர் மேற்படி பொருத்தங்கள் பார்ப்பதில் செலவிடும் கால விரயத்துக்கும் பொருள் விரயத்துக்கும் வரம்பே கிடையாது. சகுனம் பார்க்கும் வழக்கமும் கார்யங்களுக்குப் பெருந்தடையாக வந்து மூண்டிருக்கிறது. இதில் நேரும் அழிவுகளும், அவற்றால் பொருள் அழிவுகளும் எவ்வளவு உண்டாகின்றன என்பதை நம்மவர் கவனிப்பதே கிடையாது சகுனம் பார்ப்பதனால் கார்ய நஷ்டம் மாத்திரம் உண்டாகிறது. நாட்பொருத்தம் முதலியன பார்க்கு மிடத்தே, கார்யநஷ்டம் மட்டுமன்றி மேற்படிலக்னம் முதலியன பார்த்துச் சொல்லும் சோதிடருக்கு வேறு பணம் செலவாகிறது.
"காலம் பணவிலை உடையது" என்ற குறிப்புடைய இங்கிலீஷ் பழமொழி ஒன்று இருக்கிறது. இந்த சமாசாரம் நம்மவருக்குத் தெரிவதே கிடையாது. பொழுது வீணே கழிக்கப்படுமாயின், அதனால் பண லாபம் கிடையாமற்போகும். இன்று செய்யக்கூடிய கார்யத்தை நாளைக்குச் செய்யலாமென்று தாமஸப்படுத்தி வைப்பதனால், அந்தக்கார்யம் பலமான சேதமடைந்து போகும். எதையும் தோன்றிய மாத்திரத்திலே சூட்டோடு செய்யும்போது, அதில் வெற்றி பெரும்பாலும் நிச்சயமாகக் கிடைக்கும். அதைத் தூங்கப் போட்டுவிட்ட பிறகு செய்யப் போனால், அதில் ஆரம்பத்தில் இருந்த ரஸம் குறைந்து போகும். அதற்குத் தக்கபடி பயனும் குறைவெய்தும்.
"இத்தகைய மூட பக்திகளெல்லாம் ''படிப்பில்லாமையால் ஏற்பட்டிருக்கின்றன'' என்றும், ''ஜனங்களுக்குப் படிப்புக் கற்றுக்கொடுத்தால் இவை அழிந்து போய்விடும்" என்றும் இங்கிலீஷ் படிப்பாளிகள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். நானும் ஒருவாறு அது மெய்யென்றே நம்புகிறேன். ஆனால், அதற்குத்தற்காலத்தில் நமது தேசத்துப் பாடசாலைகளில் பயிற்றுவிக்கப்படும் இங்கிலீஷ் படிப்பு, சுத்தமாகப் பிரயோஜன மில்லை என்பது ஸ்பஷ்டமாக விளங்குகிறது. சென்ற நூறு வருஷங்களாக இந்நாட்டில் இங்கிலீஷ் படிப்பு நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான பாடசாலைகள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றுள் லக்ஷக்கணக்கான - கோடிக்கணக்கான ஜனங்கள் படித்துத் தேறியிருக்கிறார்கள். இவர்கள் மூடபக்திகளை எல்லாம் விட்டு விலகி நிற்கிறார்களா? இல்லை, நமது தேசத்தில் முப்பத்து மூன்று கோடி ஜனங்கள் இருக்கிறார்கள். இத்தனை ஜனங்களுக்கும் ஒருவர் மிச்சமில்லாமல் உயர்தரக் கல்வி கற்றுக் கொடுத்த பின்புதான் மேற்கூறிய ஸாமான்ய மூடபக்திகள் விலக வேண்டுமென்பது அவசியமில்லை. ஏற்கனவே, இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் படித்துத் தேறியவர்கள் இந்த விஷயத்தில் தமது மனச்சாக்க்ஷிப்படி யோக்யமாக நடந்து வந்திருப்பார்களானால், மற்றவர்களிலும் பெரும்பாலோர் நடை திருந்தியிருப்பார்கள். இன்னும் எத்தனையோ விஷயங்களில் நம்மவர் இங்கிலீஷ் படித்தவரின் நடையைப் பின்பற்றித் தங்கள் புராதன வழக்கங்களை மாற்றிக் கொண்டிருக்கக் காண்கிறோம். அது போலவே இந்த விஷயத்திலும் நடந்திருக்கும்.
---------
தத்துவம் - மூடபக்தி
ஆனால், இங்கிலீஷ் பள்ளிக்கூடத்திற்குப்போய் தேறினவர்களிடம் மனசாக்க்ஷிப்படியும் தன் அறிவுப் பயிற்சியின் விசாலத்திற்குத் தகுந்தபடியும் நடக்கும் யோக்யதை மிகமிகக் குறைவாக இருக்கிறது. இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் எத்தனையோ சாஸ்திரங்கள்-நிஜ சாஸ்திரங்கள், பொய் சாஸ்திரங்கள் இரண்டுங் கலந்தன-எத்தனையோ விதச் சாஸ்திரங்கள் பயிற்றுகிறார்கள்.
ஆனால் ஸ்வதந்திரம், ஆண்மை, நேர்மை, உண்மை, வீர்யம்-இவை அத்தனை ஜாக்கிரதையாகக் கற்றுக் கொடுப்பதில்லை. அதிலும் ஒருவன் தன் மனமறிந்த உண்மையின்படி ஒழுக வேண்டுமென்றும், அங்ஙனம் ஒழுகாதிருத்தல் மிகவும் அவமானமும் பாவமுமாகும் என்றும் கற்றுக் கொடுக்கும் வழக்கமே இல்லை. இந்த விஷயத்தைக்கூட வாய்ப்பாடமாய்ப் படிப்பித்துக் கொடுக்கிறார்கள். ஆனால் ஒழுக்கப் பயிற்சி இல்லை. "புஸ்தகத்துக்கும் வாய்ப்பேச்சுக்கும் செய்கைக்கும் இடையே லக்ஷம் யோசனை தூரமாக நடப்பவர்களுக்கு த்ருஷ்டாந்தம் காட்டப் புகுமிடத்தே, நமது நாட்டில் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் தேறிவரும் மனிதரைப்போல் இத்தனை சிறந்த த்ருஷ்டாந்தம் வேறெங்கும் கிடைப்பது மிகவும் துர்லபமென்று தோன்றுகிறது.
இதன் பொருள்-வாய்ப்பேச்சு ஒரு மாதிரியாகவும் செய்கை வேறொரு மாதிரியாகவும் உடையோரின் உறவு கனவிலும் கொள்ளுதல் தீது-என்பதேயாகும். பி.ஏ., எம்.ஏ. பரீக்ஷைகள் தேறி, வக்கீல்களாகவும், உபாத்தியாயராகவும், என்ஜினீயர்களாகவும், பிற உத்தியோகஸ்தராகவும் வாழும் கணக்கில்லாத ஐயர், ஐயங்கார், பிள்ளை முதலியவர்களில் எவராவது ஒருவர் தம் வீட்டுக்கல்யாணத்துக்கு லக்னம் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று நிறுத்தியிருப்பாரா?"பெண் பிள்ளைகளின் உபத்திரவத்தால் இவ்விதமான மூடபக்திகளுக்குக் கட்டுப்பட்டு வாழும்படி நேரிடுகிறது" என்று சிலர் முறையிடுகிறார்கள். பெண் பிள்ளைகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்க வேண்டும். மூடத்தனமான, புத்திமான்கள் கண்டு நகைக்கும் படியான செய்கைகள் செய்ய வேண்டுமென்று ஸ்திரீகள் பலனின்றிப் "பிதற்றுமிடத்தே அவர்களுடைய சொற்படி நடப்பது முற்றிலும் தவறு. மேலும் அது உண்மையான காரணமன்று, போலிக்காரணம். நம்மவர் இத்தகைய ஸாதாரண மூட பக்திகளை விட்டுவிலகத் துணியாமலிருப்பதன் உண்மையான காரணம் ''வைதிகரும் பாமரரும் நம்மை ஒருவேளை பந்தி போஜனத்துக்கு அழைக்காமல் விலக்கிவிடுவார்கள்'' என்பதுதான். இங்கிலீஷ் படித்த மேற்குலத்து ஹிந்துக்கள் கணக்கில்லாத மூட பக்திகளைக் கை விலங்குகளாகவும், கழுத்து விலங்குகளாகவும் பூட்டிக்கொண்டு தத்தளிப்பதன் தலைமைக் காரணம் மேற்படிபந்தி போஜனத்தைப் பற்றிய பயந்தான். அதைத் தவிர வேறொன்றுமில்லை. அந்த மெய்யான காரணத்தை மறைத்துவிட்டு ஸ்திரீகளின் மீது வீண்பழி சுமத்தும் இந்த வீரர்கள் மற்றும் எத்தனையோ விவகாரங்களில் தம்மினத்து மாதரை விலையடிமைகள் போலவும், விலங்குகள் போலவும் நடத்தும் விஷயம் நாம் அறியாததன்று. எண்ணில்லாத பொருள் நஷ்டமும் கால நஷ்டமும் அந்தக்காரணத்தின் இகழ்ச்சியும் உலகத்து அறிஞரின் நகையாடலும் ஸத்யதெய்வத்தின் பகைமையும் சிறிதென்று கொண்டீர்! பந்தி போஜனஸ்வதந்திரம் பெரிதென்று கொண்டீர்! தைரியமாக நீங்கள் உண்மை என்று உணர்ந்தபடி நடவுங்கள். பந்தி போஜனம் சிறிது காலத்துக்குத்தான் உங்களுக்குக் கிடைக்காதிருக்கும். பிறகு உங்கள் கூட்டத் தொகை அதிகமாகும். ஸத்ய பலம் முதலிய பல காரணங்களால் மேற்படி பந்தி போஜனமும் உங்களுக்கு ஸித்தியாய்விடும். தைர்யமாக வேலை செய்யுங்கள்.
-----------
தத்துவம் - சக்தி தர்மம்
ஆத்மா உணர்வு, சக்தி செய்கை
உலகம் முழுவதும் செய்கை மயமாக நிற்கிறது. விரும்புதல், அறிதல், நடத்துதல் என்ற மூவகையான சக்தி இவ்வுலகத்தை ஆளுகின்றன. இதைப்பூர்வ சாஸ்திரங்கள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என்று சொல்லும்.
---------
தத்துவம் - ஆறு மதங்கள்
ஆதி சங்கராசார்யார் பௌத்த மதத்தை எதிர்த்த போது, தமக்குச் சார்பாக வேதத்தை ஒப்புக்கொள்ளும் எல்லா வகுப்புக்களையும் ஒன்றாக்கிக் கொண்டனர். அக்காலத்தில் பௌத்தம், ஜைனம் என்ற வேத விரோதமான மதங்களில் சேராமல் வேதத்தை ஆதாரமாகக் கொண்டோர் ஆறு மதங்களாகப் பிரிந்து நின்றனர்.
இந்த ஆறு மதங்களில் எதையும் கண்டனம் செய்யாமல் சங்கராசார்யார் இவ்வாறும் வெவ்வேறு வகையான வைதிகப்படிகளென்றும், வேதாந்தமே இவையனைத்திற்கும் மேலான ஞானமென்றும் சொன்னார். இது பற்றியே அவருடைய கூட்டத்தார் அவருக்கு "ஷண்மத "ஸ்தாபனாசார்யார்" என்று பெயர் சொல்லுகிறார்கள்.
இந்த ஆறு மதங்களாவன:
1. ஐந்திரம் - தேவர்களிலே இந்திரன் தலைவன் என்று சொல்லி, பரமாத்மாவை "இந்திரன்" என்ற பெயரால் வழிபடுவது.
2. ஆக்னேயம் - அக்னியே முதற் கடவுள் என்பது.
3. காணாபத்தியம் - பரமாத்மாவைக் கணபதி என்ற நாமத்தால் வழிபடுவது.
4. சைவம் - சிவனே தேவர்களில் உயர்தவன் என்பது.
5. வைஷ்ணவம் - விஷ்ணுவே மேலான தெய்வம் "என்பது.
6. சாக்தம் - சக்தியே முதல் தெய்வமென்பது.
வேதம் உபநிஷத் இரண்டையும் இந்த ஆறு மதஸ்தரும் ஒருங்கே அங்கீகாரம் செய்தார்கள். ஆனால் புராணங்கள் வெவ்வேறாக வைத்துக் கொள்ளுதல் அவசியமாயிற்று. திருஷ்டாந்தமாக, வைஷ்ணவர் சிவபுராணங்களையும், சைவர் வைஷ்ணவபுராணங்களையும் உண்மையாக ஒப்புக்கொள்வதில்லை. பொதுக் கதைகளை எல்லாப் புராணங்களிலும் சேர்த்துக் கொண்டார்கள்.
இதிகாசங்களையும் பொதுவாகக் கருதினர் எனினும், பழைய சாக்த தர்மத்தின் அழுத்தம் பொது ஜனங்களின் சித்தத்தை விட்டுப் பிரியவில்லை. மதுரை சுந்தரேசர், காஞ்சி ஏகாம்பர மூர்த்தி என்ற பெயர்களைக் காட்டிலும் மதுரை மீனாக்ஷி, காஞ்சிக் காமாக்ஷி என்ற பெயர்கள் அதிகப் பெருமை கொண்டு நிற்கின்றன. மாரி, காளி என்ற பெயருடன் சக்தித் தெய்வத்தையே மஹாஜனம் மிகுதியாகக் கொண்டாடி வருகிறது.
----------
தத்துவம் - நவசக்தி மார்க்கம்
சக்தி வணக்கம் இத்தனை சாதாரணமாக இருந்த போதிலும், அந்த மதத்தின் மூலதர்மங்களை ஜனங்கள் தெரிந்துகொள்ளவில்லை. வெறுமே பொருள் தெரியாமல்சிலைகளையும் கதைகளையும் கொண்டாடுவோர்க்குத் தெய்வங்கள் வரங்கொடுப்பதில்லை.
பரமாத்மா வேறாகவும் பராசக்தி வேறாகவும் நினைப்பது பிழை. சர்வலோகங்களையும் பரமாத்மா சக்தி ரூபமாக நின்று சலிக்கச் செய்வதால், சாக்தமதஸ்தர் நிர்குணமான பிரம்மத்தை ஸகுண நிலையில் ஆண்பாலாக்காமல் பெண்பாலாகக் கருதி "லோக மாதா" என்று போற்றினர். ராமகிருஷ்ண பரமஹம்ஸர்"என் தாய் காளி? என்று தான் "பெரும்பாலும் பேசுவது வழக்கம். ஜனங்கள்வணங்கும் "லோக மாதா" இன்ன பொருள் என்று நாம் அவர்களுக்குத் தெரிவிக்கவேண்டும். நவசக்தி என்பது புதிய தெய்வமன்று. அதனைப் பொருள்தெரிந்து போற்றும் முறையே நவசக்தி மார்க்கம். இந்தத் தர்மத்தின் பலன்களைத் தாயுமானவர் பின்வருமாறு சொல்லுகிறார்:
இந்து மதம் ஸந்யாஸத்தை ஆதரிப்பதன்று; இகலோகத்தில் இருந்து தேவ வாழ்க்கை வாழவேண்டும் என்ற நோக்கமுடையது.
குருக்களுக்குள்ளே மேற்படி மதவேற்றுமைகள் தீவிரமாக இருந்திருக்கலாமாயினும், பொதுஜனங்கள் எல்லாத் தெய்வங்களையும் தம் தம் மனப்படி வைத்து வணங்கி வந்தனர். சங்கராசார்யார் "கொள்கையை அனுசரிப்போர், ''எல்லாத் தெய்வங்களையும் ஒன்று போலவே வணங்கலாம்'' என்று சொல்லியது பொது ஜனங்களின் வழக்கத்துக்கு நல்ல பலமாயிற்று. மேலும், ஞானிகளும் சித்தர்களும் இடைக்கிடையே தோன்றி, ''ஒரே பரம்பொருளைத்தான் ஆறுமதங்களும் வெவ்வேறு பெயர் கூறிப் புகழ்கின்றன'' என்ற ஞாபகத்தை ஜனங்களுக்குள்ளே உறுதிப்படுத்திக் கொண்டு வந்தார்கள்.
மேற்கூறப்பட்ட ஆறு மதங்களில் இப்போது வைஷ்ணவம், சைவம் என்ற இரண்டுமே ஓங்கி நிற்கின்றன. மற்ற நான்கும் ஒருவாறு க்ஷீணமடைந்து போனதாகக்கூறலாம். ''ஒருவாறு'' என்றேன்; ஏனெனில் ஐந்திரம் ஒன்றைத் தவிர மற்றவை முழுவதும் க்ஷீணமடயவில்லை. ஐந்திர மதமொன்றுதான் இருந்த சுவடே தெரியாதபடி மங்கிப் போய்விட்டது. நாடு முழுதிலும் கணபதி பூஜை உண்டுஆனால் கணபதியே முதற்கடவுளென்று பாராட்டும் காணாபத்ய மதம் பரவிநிற்கவில்லை. மஹாராஷ்டிரத்தில் இக் கொள்கையுடையோர் சிலர் இப்போதும் இருப்பதாகக் கேள்வி நிச்சயமாகத் தெரியாது. அக்னி பூஜை பிராமணர்க்குள்இருக்கிறது. ஆனால் ஆக்னேய மதம் இல்லை.
---------
தத்துவம் - சாக்தம்
இப்போது சாக்த மதம் வங்காளத்தில் உயிர் கொண்டு வலிமை பெற்று நிற்கிறது. மற்ற இடங்களில் பொதுஜனங்கள் எங்கும் சக்தியை மிகுந்த கொண்டாட்டத்துடன் வணங்கி வருகிறார்களாயினும், தனியாகச் சாக்தம் என்ற கொள்கை இல்லை. பூர்வீக ஹிந்து ராஜாக்கள் காலத்தில் சாக்த மதம் மிகவும் உயர்வு பெற்றிருந்தது.ஹூணர்களை எல்லாம் துரத்தி, மஹா கீர்த்தியுடன் விளங்கி, தனது பெயரைத் தழுவி ஒரு சகாப்தக் கணக்கு வரும்படி செய்த விக்கிரமாதித்ய ராஜா மஹாகாளியை உபாஸனை செய்தவன். "அவன் காலத்தில் தோன்றி, பாரத தேசத்திற்கும், பூமண்டலத்திற்கும் தலைமைக் கவியாக விளங்கும் காளிதாஸன்சக்தி ஆராதனத்தை மேற்கொண்டவன். சிவாஜி மஹாராஜாவுக்குப் பவானியே தெய்வம்.
(தென்னாட்டிலே இப்போதும் சிலர் சக்தியுபாஸனை என்று தனிமையாகச் செய்து வருகிறார்கள். இவர்கள் புராதன க்ஷத்திரிய வழக்கத்திலிருந்த மது மாமிசங்களை அந்தத் தெய்வத்துக்கு அவசியமான நைவேத்தியம் என்ற தப்பெண்ணத்தால் தாமும் வழக்கப்படுத்திக் கொண்டு, ஜாதியாரின் பழிப்புக்கு அஞ்சி ரஹஸ்யமாகப் பூஜை செய்து வருகிறார்கள். எனவே, சில இடங்களில்,"சாக்தன்" என்றால் "ரஹஸ்யமாகக் குடிப்பவன்" என்ற அர்த்தம் உண்டாய்விட்டது. காலத்தின் விந்தை! )
-------
தத்துவம் - கணபதி
வேதத்தில் பிரம்ம தேவனையே கணபதி என்று ரிஷிகள் வணங்கினர். அவரே ப்ரஹ்மணஸ்பதி; அவரே ப்ருஹஸ்பதி.
விநாயகர் பிரணவ மந்திரத்தின் வடிவம். யானை முகம் பிரணவமந்திரத்தைக் காட்டுவது. அறிவின் குறி 'கணா நாம் த்வா கணபதியும் ஹவாமஹே' என்று ஸாமான்ய வழக்கத்திலுள்ள வேத மந்திரத்தில் பிள்ளையாரைப் பிரம்ம தேவனென்று காட்டியிருப்பது தெரிந்து "கொள்ளுக.
''ஒன்றே மெய்ப்பொருள்; அதனை ரிஷிகள் பலவிதமாகச் சொல்லினர்'' என்று வேதமே சொல்லுகிறது கடவுளின் பல குணங்களையும் சக்திகளையும் பலமூர்த்திகளாக்கி வேதம் உபாஸனை செய்கிறது. வேதகாலம் முதல் இன்று வரை ஹிந்துக்கள் தம் தெய்வங்களை மாற்றவில்லை. வேதம் எப்போது தொடங்கிற்றோ, யாருக்கும் தெரியாது. கிரேக்க, எகிப்திய, பாபிலோனிய தெய்வங்களெல்லாம் காலத்தில் மறைந்து போயின. ஹிந்துக்களுடைய தெய்வங்கள் அழியமாட்டா. இவை எப்போதும் உள்ளன.
-------
தத்துவம் - காளி
படைப்பு, காப்பு, அழிப்பு ஆகிய முத்தொழிலையும் குறிப்பிட்டுப் புராணங்களில் மூன்று மூர்த்தியாகப் பரமாத்மாவைப் பேசுகிறார்கள். பிரம்மம் என்ற பெயரை விசேஷமாகப் பரமாத்மாவுக்கு வேதாந்த சாஸ்திரம் வழங்குகிறது. பிரம்மம் என்பது வேள்வியையும் மந்திரத்தையும் ஞானத்தையும் குறிப்பிட்டு வேதரிஷிகளால் வழங்கப்பட்டது. மந்திர நாதனும், ஸரஸ்வதி நாயகனும், வேதமூர்த்தியுமாகிய பிரம்ம தேவனை வேதம் 'ப்ரஹ்மணஸ்பதி' என்று கூறும்.அதாவது, ப்ரஹ்மத்தின் பதி அல்லது தலைவன் என்று அர்த்தம். மூன்று மூர்த்திகளில் ஒவ்வொன்றையும் உபாஸனையின் பொருட்டுப் "பிரிவாகக் காட்டினாலும், அந்த மூர்த்தியையே ஸாக்ஷாத் பரமாத்மா வாகவும் தெரிந்த கொள்ள வேண்டும். நாராயணன் பரிபாலன மூர்த்தி, பரப்ரஹ்மம் அவரே. சிவன் ஸம்ஹாரமூர்த்தி, பரப்ரஹ்மம் அவரே. பிரம்மா சிருஷ்டி மூர்த்தி; அவரே ஸாக்ஷாத்பரப்ரஹ்மம். அவருடைய பெயரைத்தான் ப்ரஹ்மத்திற்கு வைத்திருக்கிறது.
இந்திரன், அக்னி, வாயு, வருணன் என்ற நாமங்கள் வேதத்தில் பரமாத்மாவுக்கே வழங்குகின்றன. மேலே ''ஏகம் ஸத்'' என்ற ரிக்வேத மந்திரத்தின் பொருள் குறிப்பிட்டிருக்கிறோம். மூர்த்தியுபாஸனைக் கூட்டத்தாருக்கிடையே லௌகிககாரியங்களை அனுசரித்துப் பிற்காலத்தில் பல சண்டைகள் உண்டாயின. தக்ஷயாகத்தில் வீரபத்திரன் வந்து, இந்திரன், அக்னி, சூரியன், பகன், விஷ்ணு முதலிய தேவர்களைத் தண்டனை செய்ததாக ஒரு புராணம் சொல்லுகிறது. இப்படியே, பல புராணங்கள் தாம் உபாஸனைக்குக் காட்டும் மூர்த்தி மற்ற மூர்த்திகளைப் பல விதங்களில் விரோதித்துத் தண்டனை செய்ததாகச் சொல்லுகின்றன. இப்படிப்பட்ட கதைகள் பழைய புராணங்களில் பிற்காலத்தாரால் நுழைக்கப்பட்ட பொய்க் கதைகளேயன்றி வேறில்லை. இந்தக்கதைகள் வேதக்கருத்துக்கு முற்றிலும் விரோதம். வேதத்தில் ஹிந்துக்களுடைய தேவர்கள் ஒருவரையொருவர். பழிப்பதும் அடிப்பதும் இல்லை.
--------
தத்துவம் - சிதம்பரம்
காலை பத்து மணி இருக்கும். நான் ஸ்நானம் செய்து, பூஜை முடித்து, பழம்தின்று, பால் குடித்து, வெற்றிலை போட்டு, மேனிலத்திற்கு வந்து நாற்காலியின் மேல் உட்கார்ந்து கொண்டு இன்ன காரியம் செய்வதென்று தெரியாமல் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஜன்னலுக்கு எதிரே வானம் தெரிகிறது. இளவெயில் அடிக்கிறது. வெயிற்பட்ட மேகம் பகற் சந்திரன் நிறங்கொண்டு முதலையைப் போலும் ஏரிக்கரையைப் போலும் நானாவிதமாகப் படுத்துக்கிடக்கிறது. எதிர்வீட்டில் குடி இல்லை. அதற்குப் பக்கத்து வீட்டிலிருந்து சங்கீத ஓசைவருகின்றது. வீதியிலிருந்து குழந்தைகளின் சப்தம் "கேட்கிறது. வண்டிச்சப்தம், பக்கத்து வீட்டுவாசலில் விறகு பிளக்கிற சப்தம். நான்கு புறத்திலும் காக்கைகளின் குரல், இடையிடையே குயில், கிளி, புறாக்களின் ஓசை, வாசலிலே காவடிகொண்டு போகும் மணியோசை, தொலையிலிருந்து வரும் கோயிற் சங்கின் நாதம், தெருவிலே சேவலின் கொக்கரிப்பு, இடையிடையே தெருவில் போகும் ஸ்திரீகளின் பேச்சொலி, அண்டை வீடுகளில் குழந்தை அழும் சப்தம், ''நாராயணா, கோபாலா!; என்று ஒரு பிச்சைக்காரனின் சப்தம், நாய் குரைக்கும் சப்தம், கதவுகள் அடைத்துத் திறக்கும் ஒலி, வீதியில் ஒருவன் ''ஹூகும்'' என்று தொண்டையை லேசாக்கி இருமித்திருத்திக் கொள்ளும் சப்தம், தொலையிலேகாய்கறி விற்பவன் சப்தம், ''அரிசி, அரிசி'' என்று அரிசி விற்றுக்கொண்டு போகிற ஒலி-இப்படிப் பலவிதமான ஒலிகள் ஒன்றன்பின் மற்றொன்றாக வந்து செவியில் படுகின்றன. இந்த ஒலிகளையெல்லாம் பாட்டாக்கி இயற்கைத் தெய்வத்தின் மஹாமௌனத்தைச் சுருதியாக்கி என் மனம் அனுபவித்துக்கொண்டு இருந்தது.
-------
தத்துவம் - வல்லூறு நாயக்கர்
இப்படி இருக்கையில், என் முன்னே வேதபுரம் கிருஷ்ணகான சபையாரின் காரியதரிசியாகிய வல்லூறு நாய்க்கர் வந்து நின்றார். உட்காரும்படி சொன்னேன். உட்கார்ந்தார். 'விஷயமென்ன?' என்று கேட்டேன். அவர் சொல்லுகிறார்: "அடுத்த செவ்வாய்க்கிழமை இரவு நமது சபையின் ஆதரவின்கீழ் நடைபெறும் ராமாயண உபந்நியாசக் கோவையில் இரண்டாவது பகுதியாகிய சீதா கல்யாணம் நடக்கிறது. முதல் கதையாகிய ஸ்ரீராமஜனனம் சென்ற புதன்கிழமை நடந்தது. தஞ்சாவூரிலிருந்து மிகவும் நன்றாகப் பாடக்கூடிய பின்பாட்டுக்காரர் வந்திருக்கிறார். இவருக்குச் சன்னமான சாரீரம்; ஆனால் பெண் குரல் அன்று. நன்றாகப் பாடுவார். ஒருதரம் வந்து "கேட்டால் உங்களுக்கே தெரியும். மேலும் இந்த ராமாயணக் கதையில் வசூலாகும் பணத்தில் ஒரு சிறு பகுதி நமது அரசாங்கத்தாரின் சண்டைச் செலவிற்கு உதவி செய்வதாக அதிகாரிகளிடம் வாக்குக் கொடுத்திருக்கிறோம். நான்கு ரஸிகர் வந்து கேட்டால்தானே பாகவதற்குச் சந்தோஷம் ஏற்படும். ரஸிகராக இருப்பவர் வந்து கேட்டால் மற்ற ஜனங்களும் வருவார்கள். நம் சபைக்கு லாபம் உண்டு. பாகவதர் ராமாயணப் பிரசங்கத்தில் தேர்ச்சியுடையவர். மிருதங்கம் அடிக்கிற பிராமணப் பிள்ளை பதினைந்து வயதுடையவன்; ஆனால் மிகவும் நன்றாக அடிக்கிறான். தாங்கள் அவசியம் வரவேண்டும்" என்றார்.
அதற்கு நான், ''சீதா கல்யாணம், பாதுகா பட்டாபிஷேகம், லக்ஷ்மண சக்தி, பட்டாபிஷேகம் என்கிற நான்கு கதைக்கும் நான் வரலாமென்று உத்தேசிக்கிறேன்; நிச்சயமாக வருகிறேன். எனக்கு இரவில் தூக்கம் விழிப்பது கொஞ்சம் சிரமம், ஆயினும் தங்கள் பொருட்டாகவும், தங்கள் சபையின் தலைவராகிய ஓங்காரச் செட்டியார் பொருட்டாகவும், அந்தச் சிரமத்தைப் பார்க்காமல் வருவேன்'' என்றேன். "இராமாயணப் பிரசங்கத்தில் வரும் தொகையிலே ராஜாங்கத்தாரின் சண்டைச் செலவிற்காக உதவி செய்யப்படும் என்ற விஷயத்தைத் தனியாகக் காட்டி ஒரு விசேஷ விளம்பரம் போடப் போகிறோம்; அதில் என்ன மாதிரி வக்கணை எழுத வேண்டும் என்பதைத் தாங்கள் தெரிவிக்க வேண்டும்" என்று வல்லூறு நாயக்கர் பிரார்த்தித்துக் கொண்டார். நான் வக்கணை சொன்னேன். இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் குள்ளச்சாமி வந்து சேர்ந்தார்.
---------
தத்துவம் - ஜீவன் முக்தி: அதுவே சிதம்பரம்
குள்ளச்சாமி யாரென்பதை நான் முன்னொரு முறை சுதேசமித்திரன் பத்திரிகையில் எழுதிய "வண்ணான் கதை"யில் சொல்லியிருக்கிறேன். இவர் ஒரு பரமஹம்ஸர். ஜடபரதரைப் போல், யாதொரு தொழிலும் இல்லாமல் முழங்காலுக்குமேல் அழுக்குத் துணி கட்டிக் கொண்டு போட்ட இடத்தில் சோறு தின்றுகொண்டு, வெயில் மழை பாராமல் தெருவிலே சுற்றிக்கொண்டிருக்கிறார். இவருடைய ஒழுக்க விநோதங்களை மேற்படி பாரதி அறுபத்தாறு 30, 31, பாடல்களையும் காண்க. வண்ணான் கதையிலே காண்க. இவர் வந்து "சோறு போடு என்று கேட்டார். தாம் திருவமுது செய்யுமுன்பாக, ஒரு பிடி அன்னம் என்கையில் நைவேத்தியமாகக் கொடுத்தார். நான் அதை வாங்கியுண்டேன். அப்பொழுது சாமியார் போஜனம் முடித்த பிறகு, என்னுடன் மேல் மெத்தைக்கு வந்தார். ''கண்ணை மூடிக்கொள்'' என்றார். கண்ணை மூடிக்கொண்டேன். நெற்றியில் விபூதியிட்டார், ''விழித்துப் பார்'' என்றார். கண்ணை விழித்தேன். நேர்த்தியான தென்றல் காற்று வீசுகிறது. சூரியனுடைய ஒளி தேனைப் போல மாடமெங்கும் பாய்கின்றது. பலகணி வழியாக இரண்டு சிட்டுக்குருவிகள் வந்து கண்முன்னே பறந்து விளையாடுகின்றன. குள்ளச்சாமியார் சிரிக்கிறார். கடைக்கண்ணால் தளத்தைக் காட்டினார். கீழே குனிந்து பார்த்தேன். ஒரு சிறிய ஒலைத்துண்டு கிடந்தது. அதை நான் எடுக்கப் போனேன். அதற்குள்ளே அந்தக் குள்ளச்சாமி சிரித்துக் கொண்டு வெளியே ஓடிப்போனார். அவரைத் திரும்பவும் கூப்பிட்டால் பயனில்லை என்பது எனக்குத் தெரியும். அவர் இஷ்டமானபோது வருவார்; இஷ்டமானபோது ஓடிப்போவார். சிறு குழந்தை போன்றவர். மனுஷ்ய விதிகளுக்குக் கட்டுப்பட்டவரில்லை. ஆகவே, நான் அவரைக் கூப்பிடாமலே கீழே கிடந்த ஓலையை எடுத்து வாசித்துப் பார்த்தேன்.
1. "எப்போதும் வானத்திலே சுற்றும் பருந்துபோல் போக விஷயங்களினால் கட்டுப்படாமல், பரமாத்மாவின் ஞானக் கதிரை விழித்து நோக்குதலே, விடுதலை. அதுதான் சிதம்பரம். மகனே! சிதம்பரத்துக்குப் போ. 2. சிதம்பரத்தில் நடராஜருடன் சிவகாம சக்தி பக்தருக்கு வரதானம் கொடுக்கிறார். போய் வரம் வாங்கு. 3. சிதம்பரமே ஸ்ரீரங்கம்; அதுவே பழனிமலை. எல்லாப் புண்ணிய க்ஷேத்திரங்களும் ஜீவன் முக்திச்சின்னங்கள் என்று தெரிந்துகொள். உனக்கு க்ஷேமமும் நீண்ட வயதும் ஜீவன்முக்தியும்விளைக" என்று எழுதியிருந்தது. இந்த வசனங்கள் நமது புராதன வேத தர்மத்திற்கு ஒத்திருக்கிறபடியால், அவற்றைச் சுதேசமித்திரன் பத்திரிகை மூலமாக வெளியிடலானேன்.
குறிப்பு:- "சிதம்பரம் போகாமல் இருப்பேனோ? இந்த ஜன்மத்தை வீணாகக்கழிப்பேனோ?" என்று நந்தன் சரித்திரத்தில் கோபாலகிருஷ்ண பாரதியார் பாடியிருப்பதற்கும் இதுவே பொருள் என்று உணர்க.
----------
தத்துவம் - மஹாலக்ஷ்மி
"இல்லறம் பெரிதா, துறவறம் பெரிதா?" என்பது கேள்வி.
ரிக்ஷி சொல்லுகிறார் "அரசனே, என்னோடு பாதசாரியாக வருவாயானால் தெரியப்படுத்துகிறேன்" என்று.
அப்படிக்குப் பாதசாரியாகப் போகும்போது கன்னட தேச ராஜகுமாரத்திக்கு விவாகம் நிச்சயித்திருப்பதால், ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் ராஜகுமாரத்தியின் விவாகத்திற்கு வந்திருக்கிறபோது அவ்விடத்திற்கு மேற்படி அரசனும் ரிஷியும் இருவருமாகப் போய்ச் சேர்ந்தார்கள். இப்படி எல்லோரும் "விவாகமண்டபத்தில் கூடியிருக்க, அந்த விவாக மண்டபத்தில் ஒரு பால்ய ஸந்நியாசியும்வேடிக்கை பார்க்க வந்தார். "கன்னடத்து ராஜகுமாரி! எந்த ராஜகுமாரனை விவாகம் செய்து கொள்ளுகிறாய்?" என்று தோழியானவள் கேட்டுக்கொண்டே போனாள். அவ்விடத்து ராஜகுமாரர்களையெல்லாம் ''வேண்டாம், வேண்டாம்'' என்று களைந்துபோய்,இந்தப் பால்ய ஸந்நியாஸியைக் கண்டு புஷ்ப மாலையை அணிந்தாள். அந்த புஷ்ப மாலையானது பாம்பாகி, மேற்படி பால்ய ஸந்நியாசியின் கழுத்தில் யமனுடைய பாசம்போல் வந்துவிழ, அவன் திடுக்கிடாமல் "ஓம் சக்தி'' ஓம் சக்தி" என்ற மந்திரத்தை ஜபித்து மனத்தைத் தைரியப் படுத்திக்கொண்டான். பிறகு அதே மாலை மீண்டும் பரிமள கந்தகமுடைய புஷ்ப மாலையாய்விட்டது.
இதனை மேற்படி மஹரிஷியானவர் அந்த ராஜனிடத்திலே காண்பித்து "இல்லறத்தில் வாழ்ந்தால் இப்படிப்பட்ட தைரியத்துடன் வாழவேண்டும். மணமாலையே பாம்பாக வந்து விழுந்த போதிலும் மனம் பதறக்கூடாது. தைரியம் பாம்பைக்கூட மணமாலையாக மாற்றிவிடும். இவ்விதமான தைரியத்துடன் இல்லறத்தில் நிற்பார் வீடு பெறுவர், துறவறத்துக்கும் இதுவே வழி. ஆகவே இரண்டும் ஒன்றுதான்" என்று சொன்னார்.
வரலக்ஷ்மி நோன்பு சில தினங்களுக்கு முன் நடை பெற்றது. அதன் விவரம்: அன்றைத்தினம் பெண் மக்களெல்லாம் ஸ்நானம் செய்து விட்டு, பழைய பட்டுக் கயிறுகளைக் கட்டிக்கொண்டு நெற்றியில் பொட்டிட்டுக் கொண்டு கூந்தல்களில் புஷ்பங்களை அணிந்து கொண்டு, பார்க்கிற பார்வைக்கு வரலக்ஷ்மியைப் போலவே, அதிபக்தி விநயத்துடன் இருந்து சில பலகாரங்களையும் பழவர்க்கங்களையும் வைத்து அம்பாளுக்கு நைவேத்யம் செய்து, பெண் குழந்தைகளுக்கு விநியோகப்படுத்தி, அன்றிரவு பூர்த்தி செய்து, மறுதினம் காலையில் பௌர்ணமி பூஜை, சாப்பாடு செய்து அவர்களுக்குரிய இஷ்ட காம்யார்த்த சித்திபெற்று, ஜீவகோடிகள் அம்பாள் அனுக்ரஹத்தினால், அவள் திருவடியை முடிமீது சூட்டி, ஞானசித்தியை உணர்ந்து, ஸதா முக்தர்களாக வாழும் வழியைக் காட்டுகிறார்கள்.
--------
தத்துவம் - நவராத்திரி - 1
ஒன்பதிரவு பராசக்தியைப் பூஜை செய்கிறோம். லக்ஷ்மி என்றும், ஸரஸ்வதி என்றும், பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி. இவ்வுலகத்தை ஆக்கல், அழித்தல், காத்தல் என, மூன்று தொழில் நடத்துவது.
ஹிமாசலந் தொடங்கிக் குமரி முனை வரை, வேதத்தை நம்பும் கூட்டத்தார் எல்லாம் இந்தப் பூஜை செய்கிறோம். ஏழைகளாக இருப்போர் பராசக்திக்கு மலரையும் நீரையும் உள்ளத்தையும் கொடுத்து வலிமை பெறுகிறார்கள். செல்வமுடையோர் விருந்துகளும் விழாக்களும் செய்கின்றனர். பக்தி செய்யும் செல்வரும் உண்டு.
மஹாளய அமாவாஸ்யை கழிந்தது.
இருளும் ஒளியும் மாறி மாறி வருவது இவ்வுலக இயற்கை. பகலிலே பெரும்பாலும் ஒளி உண்டு; மேகங்கள் வந்து சூர்யனை மறைத்தாலொழிய; சில சமயங்களில் கிரஹணம் பிடிக்கும். அதையும் தவிர்த்து விட்டால், இரவிலே தான் ஒளியின் வேறுபாடுகளும், மறைவுகளும் அதிகப்படுகின்றன; பகல் தெளிந்த அறிவு;இரவென்பது மயக்கம். பகலாவது விழிப்பு, இரவாவது தூக்கம். மஹாளய அமாவாசை ஒழிந்து போய்விட்டது.
சக்தி: நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி. விக்கிரமாதித்யனும், காளிதாசனும் வணங்கிய தெய்வம். "உலகத்தார் இந்தப் பராசக்தியை நல்ல மழை அருள் புரியும். சரத்காலத்தின் முதல் ஒன்பதிரவும் "வணங்கிப் பூஜைகள் செய்யவேண்டும்" என்பது பூர்வீகர் ஏற்பாடு. மிகப் பயனுடைய காரியம். மேலான வழி. கும்பகோணம் சங்கரமடத்தில் இந்தப் பூஜை மிகவும் கோலாஹலமாக நடத்தப் போவதாகப் பத்திரிகையில் ஒரு தந்தி போட்டிருந்தது. சஹஜமான விசேஷம். தேசம் முழுவதும் [இப்படி] நடப்பது [நல்லது].சங்கர மடத்திலும் [எனக்கு] ஒரு விதமான ஆவல் உண்டானதால் தந்தியை வாசித்துப் பார்த்தேன். அந்தத் தந்தியிலே பாதி சாஸ்திரம். வர்த்தமானத் தந்திக்குள்ளே சாஸ்திரத்தை நுழைத்தது ஒரு விநோதம். ஆனால், அதிற்கண்ட சாஸ்திரம் உண்மையாக இருந்தது. நான் எதிர் பார்க்கவில்லை. எனவே தந்தியைப் படித்தபோது எனக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று.
கும்பகோணத்துத் தந்தி பேசுகிறது: இந்த பூஜைகளின் நோக்கம் உலக நன்மை. நவராத்திரிக் காலத்தில் யோகமாயை துர்க்கை, லக்ஷ்மி, ஸரஸ்வதி என்ற மூன்று வித வடிவங்கொண்டு, துஷ்டரை எல்லாம் அழித்து மனித ஜாதிக்கு மகிழ்ச்சி பெருகவைத்தாள். மனிதர் படும் துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டாக தேவி அவ்வாறு அவதாரம் செய்த காலம் முதல் இன்று வரை, பாரத தேசத்தில் எல்லாப்பாகங்களிலும் ஆரியர் இந்தத் திருவிழாவைக் கொண்டாடி வருகிறார்கள். தேவி உலகம் முழுவதிலும் பரவி இருக்கிறாள். ஒவ்வொரு தனிப் பொருளிலும் நிறைந்து நிற்கிறாள். இவளே மாயை, இவளே சக்தி; செய்பவளும,் செய்கையும், செய்கைப் பயனும் இவளே; தந்தையும் தாயும் இவள்; இவளே பரப்பிரம்மத்தின் வடிவம். இவள் காத்திடுக" என்பது தந்தி.
உண்மைதான். ஆனால், "தேவி அவ்வாறு அவதாரம் செய்த காலம் முதல்" என்ற வாக்கியம் மாத்திரம் கதை. தேவி எப்போதும் அந்த வடிவங்களிலே நிற்கிறாள். ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற முத்தொழிலும் எப்போதும் நடக்கின்றன. லோகஸம்ரக்ஷணை எப்போதும் செய்யப்படுகிறது. எப்போதும் ஆராதனை செய்யவேண்டும். சரத்காலத் துடக்கத்திலே பேரருளைக் கண்டு விசேஷ விழா நடத்துகிறோம். ''தவம், கல்வி, தெய்வத்தைச் சரண் புகுதல் இம்மூன்றும் கர்மயோகம் (கிரியாயோகம்)'' என்று பதஞ்சலி முனிவர் சொல்கிறார். லௌகிகக் கவலைகளாலே இம்மூன்று தொழிலையும் எப்போதும் செய்துகொண்டிருக்க முடியாமல் தடுக்கப்படும் சாமானிய ஜனங்கள் நவராத்திரி ஒன்பது நாள் இரவும் பகலும் மேற்கூறிய மூவகை நெறியில் நிலைபெறும் வண்ணமான விதிகள் ஆகமங்களிலே கூறப்பட்டன.
ஒன்பது நாளும் தியானம். கல்வி, தவம், இவற்றிலே செலவிடத் திறமையில்லாதோர் கடைசி ஒன்பதாம் நாள் மாத்திரமேனும் விரதம் காக்கவேண்டும்; இந்தப் பூஜையின் பொருள் மிகவும் தெளிந்தது.
சக்தியால் உலகம் வாழ்கிறது;
நாம் வாழ்வை விரும்புகிறோம்;
ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம்.
--------
தத்துவம் - நவராத்திரி - 2
ஒவ்வொருவனுக்கும் மூன்றுவிதச் சக்தி வேண்டும்:
1. அறிவு, 2. செல்வம், 3. தைரியம். இந்த மூன்றும் நமக்கு இஹலோகத்திலே கிடைக்கும்படியாகவும் இதனால் பரலோக இன்பங்களுக்கும் சாத்தியமாகும்படியாகவும், நாம் தெய்வத்தை வழிபடுகிறோம். முக்திக்கு, மாத்திரமே தெய்வத்தை நம்புவது சிலருடைய வழி; இஹலோக இன்பங்களுக்கும் தெய்வமே துணை என்று நம்பி, இன்பங்கள் வேண்டுமென்று தெய்வத்திடம் கேட்டுவாங்கிக் கொள்வது மற்றொரு வழி. சுந்தரமூர்த்தி நாயனாருக்குப் பரமசிவன் என்னவெல்லாம் செய்தார்? அர்சுனன் தனக்குச் சுபத்திரையை வசப்படுத்திக் கொடுக்கும்படி யாரிடத்தில் கேட்டான்?ஸ்ரீீகிருஷ்ணனிடத்திலே கேட்டான். ஸ்ரீகிருஷ்ணன் சுபத்திரையைக் கவர்ந்து செல்வதற்கு வேண்டிய உபாயங்கள் காட்டினார். ஆம், தெய்வம் எல்லாம் செய்யும்.
இஹலோகத்தில் எல்லாவிதமான இன்பங்களும் நமக்கு வேண்டும். அவற்றை வசமாக்குவதற்கு அவசியமான அறிவுத்திறனை நமக்குத் தரும்படி தெய்வத்தைக் கேட்கிறோம். "தெய்வமே, நான் தூங்குகிறேன். நீ எனக்கு மாம்பழம் கொடு" என்று கேட்கவில்லை. "தெய்வமே ! தெய்வமே! மாம்பழ விஷயத்தில் எனக்கு இத்தனை ருசி ஏற்படுத்திக் கொடுத்த தெய்வமே! உனக்குப் புண்ணிய முண்டு. மா விதை எங்கே அகப்படும்? ஒட்டு மாஞ்செடி எப்படி வளர்ப்பது?சொல்லு. பாடுபடச் சம்மதம்; காத்துக் கொண்டிருக்கச் சம்மதம். ஆனால் மாம்பழம் கொடுத்துத் தீரவேண்டும். நீ தானே இந்த ருசியை ஏற்படுத்தினாய்?" என்று கேட்கிறோம். இது நியாயமான கேள்வி. தெய்வம் உதவி செய்யும்.
விக்கிரமாதித்யன் வணங்கிய தெய்வம்; காளிதாஸனுக்குக் கவிதை காட்டிய தெய்வம்; பாரத நாட்டு மஹாஜனங்கள் இன்னும் தலைமையாகக் கொண்டாடும் தெய்வம்; ஸ்ரீ மந்நாராயண மூர்த்தியின் சக்தியாக விளங்கும் லக்ஷ்மி தேவதை; சிவபிரானுடைய வலிமையாகத் திகழும் பார்வதி, பிரமதேவன் தலைவியாகிய சரஸ்வதி; மூன்று மூர்த்திகள்; மூன்று வடிவங்கள்; பொருள் ஒன்று; அதன் சக்தி ஒன்று; பொருளும் அதன் சக்தியும் ஒன்றே. இங்ஙனம் ஒன்றாக விளங்கும் சக்தி என்ற தெய்வத்தை ஹிந்துக்கள் உபாஸனை செய்வதற்கு விசேஷப் பருவமாக இந்த நவராத்திரியின் காலத்தை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். காரணம் என்ன?
பராசக்தி மழையருள் புரியும் சரத்காலத்தின் ஆரம்ப மென்று கருதியா? சரத்காலம் நம் நாட்டில் ஒன்று போல எல்லாப் பகுதிகளிலும் தொடங்கவில்லை யாயினும், ஓரிடத்திலே தோன்றிய திருவிழா நாடு முழுவதும் பரவியிருக்கலாம்.
'மஹாளய அமாவாஸ்யை' என்பது யோகாநுபவத்தில் மரணத்திற்குப் பெயர். அதைத்தப்பிய புதிய உயிர் கொண்டவுடன், சேர்ந்தபடியாகப் பல நாள் பராசக்தியை இடைவிடாமல் உபாஸனை செய்ய வேண்டுமென்ற கொள்கையின் அறிகுறியாக இருக்கலாம். "கும்பகோணம் சங்கராச்சாரிய மடத்திலிருந்து பாரிகைகளுக்கு வந்த தந்தி ஒன்றிலே நவராத்திரி பூஜைக்குப் புராணப்படி முகாந்தரம் சொல்லப்பட்டிருக்கிறது. நவராத்திரி காலத்தில் தேவி (யோகமாயை) லக்ஷ்மி, ஸரஸ்வதி, துர்க்கை என்று மூன்று விதமாக அவதாரம் செய்து பல அசுரர்களை அழித்ததாகவும் அது முதல் வருஷந்தோறும் நமது தேசத்தில் இந்தத் திருவிழா நடந்து வருவதாகவும் மடத்தார் தந்தியில் விளக்கப்பட்டிருக்கிறது. இது புராண ஐதீகம். இதற்குப் பொருள் அத்யாத்மம். பராசக்தி எங்கும் இருக்கிறாள். எப்போதும் அவள் இருக்கிறாள். தொழிலே உலகம். அவளே உலகம். குழந்தைகளும் ஸாமான்ய ஜனங்களும் அவளைச் சிலையென்று நினைக்கிறார்கள். அவள் சிலையில்லை. உண்மையொளி. அது கோயிற் புறத்திலே மாத்திரம் இல்லை:- அகத்திலும் இருக்கிறது. கடல் அசைப்பது; பாதாளத்தின் கீழே மற்றொரு பாதாளம்; அதன் கீழே ஒன்று. அதன் கீழே ஒன்றாக எல்லையின்றிப் பரந்த திசை முழுதையும் கவர்ந்தது.
எப்படிப் பார்த்தாலும் ஆரம்பமில்லாமலும், எப்படிப் பார்த்தாலும் முடிவில்லாமலும் இருக்கும் அற்புத வஸ்து.
கோடானகோடி அண்டங்களை ஒரு சிறு மூக்கினால் உடைப்பது.
ஒரு சிறிய மலரின் இதழிலே வர்ணம் தீட்டுவதற்குப் பல்லாயிர வருடங்கள் இருந்து பழகும் நெடுநேர்மை கொண்டது; பெரிதும் சிறிதுமாகிய முதற்பொருள்; பராசக்தி.
இதனைத் தியானத்திலே நிறுத்துகிறோம். இதனை நாவிலே புகழ்ச்சி புரிகின்றோம். செய்கையில் இதனைப் பின்பற்றுகிறோம். நமது மதி தெய்வமாகின்றது. நமது நாவு புதிய வலிமையும் மஹிமையும் பெறுகின்றது. நமது செய்வினை தர்மமாகின்றது. ஒரே வார்த்தை; சக்தியை வேண்டினால் சக்தி கிடைக்கும். "கேட்டது பெறுவாய்" என்று யூத நாட்டு மரியம்மை பெற்ற கிருஸ்து சித்தர் சொல்லுகிறார்.
--------
காமதேனு - நம்பிக்கையே காமதேனு
இன்று ராமானுஜ தரிசனம் முக்கிய ஹிந்து தரிசனங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஆனால் ஆரம்பத்தில் அப்படி இல்லை. ராமானுஜ மதத்தைக் காக்கும் பொருட்டு ராமானுஜரின் முக்கிய சிஷ்யராகிய கூரத்தாழ்வான் கண்களைப் பறிகொடுக்கும்படியாக நேரிட்டது. இவருடன் பெரிய நம்பி என்ற யோகிக்கும் அதே தண்டனை ஏற்பட்டது. பெரிய நம்பி அப்போது கிழவர். கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு கொல்லையிலே பெரியநம்பி கண் போன வேதனையைப் பொறுக்க மாட்டாமல் பக்கத்தில் வேண்டியவர்கள் எவரும் இல்லாமல் கூரத்தாழ்வான் மடியில் படுத்துக் கொண்டு மஹா ஸந்தோஷத்துடன் உயிர் துறந்தார். கூரத்தாழ்வானோ ''தரிசனத்துக்காகத் தரிசனத்தை இழந்தேன். அது எனக்குப் பெரிய பாக்கியம'' என்று மகிழ்ச்சி கொண்டாடினார். தம்முடையகொள்கை நிலைபெறும் என்ற நம்பிக்கை அவர்கள் மனதில் உறுதியாக நின்றது.
----------
காமதேனு - நம்பினார் கெடுவதில்லை
சிவாஜி மஹாராஜா இளம்பிள்ளையாக இருந்தபோது மஹாராஷ்டிரம் என்னநிலைமையில் இருந்தது? சிவாஜி இறக்கும்போது என்ன நிலைமை? சிவாஜி துணிவினால் ராஜ்ய ஸம்பத்தை அடைந்தான். நம்பிக்கையினால் நெப்போலியன் ராஜா பிரான்ஸ் தேசத்தைக் கட்டியாண்டு ஐரோப்பா முழுவதிலும் தன்னுடைய ஆதிக்கத்தை நிறுத்தினான். நம்முடைய முயற்சியின் ஆரம்பத்தில் நம்மைப் பிறர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். பலர் துணை செய்ய மாட்டார்கள். ஆனால் நம்பிக்கையைக் கைவிடாமல் இருந்தால் காலக்கிரமத்தில் வெளியுதவிகள் தாமே வரும். ஆரம்பத்தில் நமக்கு நாமே துணை. எத்தனை இடையூறுகள் எவ்வளவு பெரிதாகி வந்தபோதிலும் எடுத்த காரியத்தை ஒரே உறுதியாக நடத்திக் கொண்டு போவதே ஆரிய லக்ஷணம். அவ்வாறு செய்யக்கூடியவனே மனிதரில் சிறந்தவன்.
நம்பினார் கெடுவதில்லை
நான்கு மறைத்தீர்ப்பு - இது
நான்கு மறைத்தீர்ப்பு.
-----------
காமதேனு - திருநாவுக்கரசர்
மனிதனுக்குப் பகை புறத்திலில்லை. நமக்குள்ளே சத்துருக்கள் மலிந்துகிடக்கிறார்கள். பயம், சந்தேகம், சோம்பல் முதலான குணங்கள் நம்மை ஐயம் அடைய வொட்டாமல் தடுக்கும் உட்பகைகளாம். இவை அனைத்துக்கும் ஒரே பெயர்: அதாவது, நம்பிக்கைக் குறைவு. இந்த ராக்ஷஸனை அழித்தாலொழிய நமக்கு நல்ல காலம் வராது. பகீரதன் கங்கையை வரவழைத்த கதையை இந்தக் காலத்தில் நாம் பொய்க் கதையாகச் செய்து விட்டோம். முன்னோர் அக்கதையின் உட்பொருளைக் கொண்டனர். நம்பிக்கையினால் ஆகாய கங்கையைப் பூமியில் வரவழைத்தார்களாம். எத்தனை பெரிய ஆபத்துக்கள் வந்து குறுக்கிட்ட போதிலும் அவற்றை நம்பிக்கையினால் வென்று விடலாம்.
----
காமதேனு - சில முயற்சிகள்
இக்காலத்திலே பலர் நமது பாஷைகளை ஒளிமிகச் செய்து பூமண்டலத்தார் வியக்கும்படி செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்கள். பலர் நமது பூர்வ சாஸ்திரங்களின் உண்மையை உலக முழுவதும் கேட்டு உஜ்ஜீவிக்கும்படி செய்யவேண்டுமென்று பாடுபடுகிறார்கள். பலர் நமது நாட்டுச் செல்வத்தை வெளியேற வொட்டாமலதடுக்க வழி தேடுகிறார்கள். பலர் ஹிந்து தேசத்துக்குத் தன்னாட்சி வேண்டுமென்று தொழில் செய்து வருகிறார்கள். பலர் ஆரிய வேதத்தைச் சரண்புகுந்து பூமண்டலம் வாழும்படி செய்யவேண்டுமென்று தீர்மானம் செய்திருக்கிறார்கள். இவ்வனைவருக்கும் வெற்றி உண்டு; நம்பிக்கை உண்டானால் வெற்றி உண்டு.
-------
காமதேனு - ராமானுஜர் வெள்ளையுடை தரித்தது
சோழனுடைய பயத்தாலே ராமானுஜமுனி ஸந்நியாசி வேஷத்தை மாற்றி ஸ்ரீீரங்கத்தைவிட்டுப் புறப்பட்டு நீலகிரிச் சாரலில் வேடர்களுடைய உதவியினால் தேனும் தினைமாவும் தின்று பசி தீர்த்துக்கொண்டு படாத பாடெல்லாம் பட்டு மைசூரபக்கத்திலே போய் வாழ்ந்தார். ''இனிமேல் ராமானுஜ கூட்டம் அதிகப்படாது; ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்துவிட்டோம்'' என்று ராஜா நினைத்தான். அநுபவத்தில் பார்த்தீர்களா? அந்த ராஜா ராமானுஜருடைய நம்பிக்கையைக் கணக்கிலே சேர்க்கவில்லை.
--------
காமதேனு - சிலுவை
யூதர்களை ரோம தேசத்தார் வென்று யூதநாட்டில் பிலாத்து ரோமன்ராஜாதிகாரியாய்விட்டான். இயேசு கிருஸ்து தெய்வத்தை நம்பி விடுதலையை முழக்கினார். யூதகுருக்களே அவருக்கு விரோதமாய் அன்னியனான அதிகாரியிடம் கோள் மூட்டிவிட்டார்கள். உள்ளூர் யோக்கியர்கள், வெளிநாட்டு யோக்கியர்கள் எல்லோருமாகச் சேர்ந்து கிருஸ்துவைச் சிலுவையில் அடித்துக் கொன்றார்கள்.'கிருஸ்து மதத்தையே கொன்றுவிட்டோம்' என்று அந்த மூடர்கள் நிச்சயித்தார்கள். இன்று கிருஸ்து மதம் உலக முழுவதையும் சூழ்ந்து நிற்கிறது. வருந்தினால் வாராதது ஒன்றுமில்லை.
--------
காமதேனு - நம்பிக்கையின் முக்கிய லக்ஷணம்
நம்பிக்கை உண்டானால் வெற்றி உண்டு. அந்த நம்பிக்கையினமுக்கிய லக்ஷணம் என்னவென்றால் விடாமுயற்சி. மனத்திற்குள் நிலைத்த நம்பிக்கை இருந்தால் செய்கை தடைப்படுமா?முயற்சி தூங்குமா? இடுக்கண் பயமுறுத்துமா? உள்ளம் சோருமா? ராமானுஜர் சோழநாட்டிலிருந்து போகும் காலத்தில் தம்பின்னே தம்மைப்பிடித்துச் செல்லும்பொருட்டு, குதிரைப்படை வருகிறது என்று கேள்விப்பட்டபொழுது, தம்முடன் வந்த சிஷ்யர்களிடம் சொல்லிய மந்திரம் நல்ல மந்திரம்:
'எனது கோல் ஆடும்பொழுது எமனும் கிட்ட வரமாட்டான்' என்று சொன்னார்.அதற்குப் பெயர் தான் நம்பிக்கை.
காமதேனு - முஹம்மதுநபி
'பழைய பொய்ச் சிலைகளின் வணக்கத்தை ஒழித்து எங்கும் வியாபித்து நிற்கும் பிரம்மத்தையேதொழவேண்டும்? என்று முஹம்மது நபி அலகிவஸல்லாம் அவர்கள் ஒரு புதிய மதம் உண்டாக்கினார் என்ற கோபத்தால்,குராயிஷ் கூட்டத்தார் அவருடைய சிஷ்யர்களைப் பயமுறுத்தியும கொலை செய்தும் அடக்கிவிட்டு நபியையும் கொல்லவேண்டுமென்று சதிசெய்து கொண்டிருக்கையிலே, அந்த மஹான்மெக்கா நகரத்திலிருந்து தப்பி மெடீனா நகரத்திற்குச் செல்லும்போது பின்னே அவரைப் பிடிக்கும் பொருட்டாகக் குராயிஷ் குதிரைப் படை துரத்திக்கொண்டு வந்தது. நபியானவர் தம்மோடு வந்த ஒரே சிஷ்யருடன் அங்கு ஒரு புதரில் ஒளிந்திருந்தார். துரத்திவரும் குதிரைகளின் காலடி சமீபமாகக் கேட்டது. சிஷ்யன் பயந்துபோய், 'இனி என்ன செய்வது?' என்று தயங்கினான். அப்போது நபி, ''அப்பா, நான் அல்லாவின் தர்மத்தை உலகத்தில் நிலைநிறுத்தும் பொருட்டாக வந்திருக்கிறேன். என் காரியம் நிறைவேறும் வரை எனக்கு மரணம் இல்லை. என்னுடன் இருப்போர் பயப்படாமல் இருந்தால் அவர்களுக்கும் இல்லை'' என்று சொல்லி அபயதானம் செய்தார். ஆபத்து வரவில்லை. குதிரைப்படையோர் இடந்தெரியாமல் ஏமாறித் திரும்பினார்கள். முஹம்மது நபி பின்னிட்டுக் காலானுகூலம் பெற்று அந்த ராஜ்யத்துக்கெல்லாம் தாமே ராஜேஸ்வரராய், தமது தரிசனத்தை என்றும் அழியாமல் நிலைநிறுத்திச சென்றார். நம்பிக்கையே காமதேனு: அது கேட்ட வரமெல்லாம் கொடுக்கும்.
---
காமதேனு - வாசக ஞானம்
வியாபாரம், கைத்தொழில், ராஜாங்கச் சீர்திருத்தம், ஜனசமூகத் திருத்தம்முதலிய லௌகிக விவகாரங்கள எல்லாவற்றிலும், மனிதர் ஏறக்குறைய எல்லாத் திட்டங்களையும் உணர்ந்து முடித்துவிட்டனர். ஒரு துறை அல்லது ஓர் இலாகாவைப் பற்றிய ஸூக்ஷம தந்திரங்கள் மற்றொரு துறையில் பயிற்சி கொண்டோர் அறியாதிருக்கலாம். ஆனால், அந்த அந்த நெறியில் தக்க பயிற்சி கொண்ட புத்திமான்களுக்கு அதனை யதனைப் பற்றிய நுட்பங்கள் முழுமையும் ஏறக்குறைய நன்றாகத் தெரியும்.
பொதுவாகக் கூறுமிடத்தே. மனித ஜாதியார் அறிவு சம்பந்தப்பட்டமட்டில் மஹா ஸூக்ஷமமான பரம ஸத்தியங்களையெல்லாம் கண்டுபிடித்து முடித்துவிட்டனர். ஆனால் அறிவுக்குத் தெரிந்ததை மனம் மறவாதே பயிற்சி செய்ய வலிமை யற்றதாய் நிற்கிறது. அறிவு சுத்தமான பின்னரும், சித்தசுத்தி ஏற்பட வழி இல்லாமல் இருக்கிறது எனவே அறிவினால் எட்டிய உண்மைகளை மனிதர் ஒழுக்கத்திலே நடத்திக் காட்டுதல் பெருங் கஷ்டமாக முடிந்திருக்கிறது. ஆத்ம ஞானத்தின் சம்பந்தமாகக் கவனிக்குமிடத்தே, இந்த உண்மையைத் தாயுமானவர்,
என்ற கண்ணியில் வெளியிட்டிருக்கிறார்.
இதன் பொருள் "வெறுமே வாக்களவாக ஏற்பட்டிருக்கும் ஞானத்தினால் ஆனந்தமெய்த முடியவில்லையே! என் செய்வோம்? பாழ்பட்ட மனம் ஓயாமல் பூசலிட்டுக் கொண்டிருக்கிறதே? இந்தப் பூசல் எப்போது தீரும்? கடவுளே, நீ அதனைத் தெரிவிப்பாய்" என்பதாம். இதே உண்மையை உலக நீதி விஷயத்தில் ஏற்கும்படி, திருவள்ளுவர்.
என்ற குறளால் உணர்த்துகிறார்.
இதன் பொருள் 'வாயினால் ஒரு தர்மத்தை எடுத்துச் சொல்லுதல் யாவர்க்கும் சுலபமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அந்தச் சொல்லின்படி நடத்தல் மிகவும் துர்லபம்' என்பது
------
காமதேனு - வாசக ஞானம்
திருஷ்டாந்தமாக, 'ஆண்களும் பெண்களும் ஸமானமான ஆத்ம இயல்பும், ஆத்மகுணங்களும் உடையோராதலால், பெண்களை எவ்வகையிலும் இழிந்தவராகக்கருதுதல் பிழை' என்ற கொள்கை ஐரோப்பாவில் படிப்பாளிகளுக்குள்ளே மிகவும் ஸாதாரணமாகப் பரவியிருக்கிறது. ஆயினும், பெண்களுக்கு வாக்குச்சீட்டு ஸ்வதந்தரம் வேண்டும் என்று கேட்டால், அதைப் பெரும்பான்மையான ஐரோப்பிய "ராஜதந்திரிகளும் பண்டிதர்களும் எதிர்த்துப் பேசுவதுடன், அங்ஙனம் எதிர்ப்பதற்குப் பல போலி நியாயங்களையும் காட்டவும் துணிகிறார்கள்.
'விஷ்ணு பக்தியுடையோர் எந்தக் குலத்தோர் ஆயினும் எல்லா வகையிலும் ஸமானமாகப் போற்றுவதற்குரியர் என்பது ராமானுஜாசார்யருடைய பரம் சித்தாந்தம்'என்பதை நன்குணர்ந்த தற்காலத்து வைஷ்ணவர்கள் பிராமண சூத்ர பேதங்களை மற்ற வகுப்பினரைக் காட்டிலும் அதிகமாகப் பாராட்டுவது மாத்திரமன்றி, இன்னும் வடகலை தென்கலைச் சண்டைகளைக்கூட விடாமல் வீண் சச்சரவுகளில் ஈடுபட்டு உழல்கின்றார்கள்.
'எல்லாச் சரீரங்களிலும் நானே ஜீவனாக இருக்கிறேன்"என்று கண்ணன் கீதையால்உணர்த்திய உண்மையையும், "எல்லா உயிர்களினிடத்தும் தன்னையும் தன்னிடத்தே எல்லா உயிர்களையும் காண்பவனே காட்சியுடையவன்" என்று கண்ணபிரான் அதே கீதையில் சொல்லிய கொள்கையையும் வேதோப நிஷத்துக்களின் முடிவான தீர்மானம் என்று தெரிந்த ஹிந்துக்கள் உலகத்திலுள்ள மற்றெல்லா ஜனங்களைக் காட்டிலும், ஜாதி வேற்றுமை பாராட்டுவதில் அதிகக் கொடுமை செலுத்துகிறார்கள்.
என்ற குறளின்படி, ''இனிய சொற்கள் சொல்வதினின்றும் நன்மைகள் விளைவதுகண்டும் மானிடர் ஒருவருக்கு ஒருவர் கொடுஞ் சொற்கள வழங்குவது மடமை'' என்பது உலகத்தில் சாதாரண அனுபவமுடையவர்களுக்கெல்லாம் தெரியும். அங்ஙனம் தெரிந்தும், கொடுஞ் சொற்களும் கோபச் செயல்களும் நீங்கியவர்களை உலகத்தில் தேடிப் பார்த்தாலும் காண்பது அரிதாக இருக்கிறது.
'மரணம் பாவத்தின் கூலி" என்று கிருஸ்தவ வேதம் சொல்வது எல்லாக் கிருஸ்தவர்களுக்கும் தெரியும். அப்படியிருந்தும், பாவத்தை அறவே ஒழித்த கிருஸ்தவர்கள் "எவரையும் காணவில்லை. ''நாமெல்லோரும் பாவிகள்'' என்பதைப் பல்லவி போல சொல்லிக்கொண்டு காலங் கடத்துகிறார்கள்.
இதென்ன கொடுமை! இதென்ன கொடுமை! இதென்ன கொடுமை! ஸாதாரணமாக வியாபாரம், விவசாயம் முதலிய காரியங்களிலே கூட மனிதர் நிச்சயமாக லாபங்கிடைக்கும் என்று தெரிந்த வழிகளை அநுசரிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இந்தப் பெரிய சக்தி ஹீனத்திற்கு மாற்றுக் கண்டு பிடிக்காமல் நாம் சும்மா இருப்பது நியாயமன்று.
----------
காமதேனு - வாசக ஞானம்
கண்ணைத் திறந்துகொண்டு படுகுழியில் விழுவது போல, மனித ஜாதி நன்மையை நன்றாய் உணர்ந்தும் தீமையை உதற வலிமையின்றித் தத்தளிக்கிறது.
இதற்கு என்ன நிவாரணம் செய்வோம்? தைரியந்தான் மருந்து. தற்கால அஸௌகர்யங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் மனிதர் உண்மை என்று கண்டதை நடத்தித் தீர்த்துவிட வேண்டும். அங்ஙனம் தைரியத்துடன் உண்மை நெறி பற்றி நடப்போரை மற்றவர்கள் புகழ்ச்சியாலும் ஸம்மானங்களாலும் ஊக்கப்படுத்த வேண்டும். கலி போதும்; வீண் துன்பங்களும் அநாவசியக்கஷ்டங்களும் பட்டுப் பட்டு உலகம் அலுத்துப்போய்விட்டது.
வாருங்கள், மக்களே! வாருங்கள், அண்ணன் தம்பிமார்களே! ஒருவரிருவர் நேர்மை வழியில் செல்ல முயல்வதில் பல இடர்கள் ஏற்படுகின்றன. அதனால் நேர்மை வழியில் செல்ல விரும்புவோர்க்கெல்லாம் அதைரியம் ஏற்படுகிறது. வாருங்கள்,உலகத்தீரே! கூட்டங் கூட்டமாக நேர்மை வழியில் புகுவோம்.
ஆண் பெண் ஸமத்வமே தர்மமென்று தெரிகிறதா?அப்படியானால் வாருங்கள்; மாதர்களை லக்ஷக்கணக்காக விடுதலை செய்வோம். ஜாதி பேதங்கள் பிரயோஜனம் இல்லை என்று தெரிந்ததா? நிற வேற்றுமைகளும் தேச வேற்றுமைகளும் உபயோகம் இல்லாதன என்று தெரிந்ததா? நல்லது, வாருங்கள். கோடிக்கணக்காக, ஸமத்வ நெறியிலே பாய்ந்து விடுவோம். பழைய கட்டுகளை லக்ஷக்கணக்கான மக்கள் கூடி நின்று தகர்ப்போம்.
''அன்பே இன்பம் தரும். பகைமை அழிக்கும'' என்று தெரிந்தோமோ? நல்லது, எழுங்கள், கோடிக்கணக்கான மானிடர் எங்கும், எப்போதும், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தத் தொடங்குவோம். கலியை அழிப்போம். சத்யத்தை நாட்டுவோம்.
----------
காமதேனு - அமிர்தம் தேடுதல்
''காக்க நின்னருட் காட்சியல்லாலொரு போக்குமில்லை.'' --தாயுமானவர்.
பல வருஷங்களின் முன்னே தெரு வழியாக ஒரு பிச்சைக்காரன் பாடிக்கொண்டு வந்தான்.
இந்தப் பாட்டைக் கேட்டவுடனே எனக்கு நீண்ட யோசனை உண்டாகி விட்டது. என்னடா இது! இந்த உடல் இத்தனை சந்தேகமாக இருக்கும்போது இவ்வுலகத்தில் நான் என்ன பெருஞ் செய்கை தொடங்கி நிறைவேற்ற முடியும்?ஈசன் நம்மிடத்தில் அறிவை விளங்கச் செய்கிறான். அறிவே தமது வடிவமாக அமைந்திருக்கிறான். அறிவு, இன்பத்தை விரும்புகிறது. அளவில்லாத அழகும் இன்பமும் கொண்ட உலகமொன்று நம்மோடு இருக்கிறது. எப்போதும் இவ்வுலகம்இன்பம். இந்த உலகம் கவலையற்றதாகும்; இதிலே அணுவிலும் அணுவொக்கும் சிறிய பூமண்டலத்தின் மீது தான் நம்மால் ஸஞ்சரிக்க முடிகிறது. இதுபோல் கணக்கில்லாத மண்டலங்கள் வானவெளியிலே சுழல்கின்றன. அவற்றின் இயல்பையும் நாம் அறிவினாலே காண்கிறோம். அவற்றிலே ஒரு பகுதியின் வடிவங்களைக் கண்ணாலே தூரத்திலிருந்தே பார்க்கிறோம். இவ்வளவில் எங்கே பார்த்தாலும் ஒரே அழகுமயமாக இருக்கிறது. நமது பூமண்டலத்திற்கு வான் முழுதும் ஒரு மேற்கட்டி போலத் தோன்றுகிறது. இடையெல்லாம் ஒரே தெளிவான வெளி, ஸூரியன் செய்கிற ஆயிர விதமான ஒளியினங்கள், மலை, காடு, நதி, கடல் - அழகு.
தவிரவும், எதைத் தொட்டாலும் இன்பமும் துன்பமும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் நாம் "அறிவினாலே பொருள்களின் துன்பத்தைத் தள்ளி இன்பத்தை எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர், குளித்தால் இன்பம்; குடித்தால் இன்பம்; தீ, குளிர் காய்ந்தால் இன்பம்; பார்த்தாலே இன்பம்; மண், இதன்விளைவுகளிலே பெரும்பான்மை இன்பம்,இதன் தாங்குதல் இன்பம்; காற்று இதைத் தீண்டினால் இன்பம்; மூச்சிலே கொண்டால் இன்பம்; உயிர்களுடனே பழகினால் இன்பம்; மனிதரின் உறவிலே அன்பு இருந்தால் இன்பக் கட்டி. பின்னும் இவ்வுலகத்தில், உண்ணுதல் இன்பம். உழைத்தல் இன்பம்; உறங்கல் இன்பம்; ஆடுதல் இன்பம்; கற்றல், கேட்டல், பாடுதல், எண்ணுதல் அறிதல்-எல்லாம் இன்பந்தான்.
---------
காமதேனு - துன்பத்தை நீக்குதல் விரைவிலே ஈடேறவில்லை
ஆனால் இன்பங்களெல்லாம் துன்பங்களுடனே கலந்திருக்கின்றன. துன்பங்களை அறிவினால் வெட்டி எறிந்து விட்டு இன்பங்களை மாத்திரம் சுவை கொள்ளவேண்டுமென்று ஜீவன் விரும்புகிறது. துன்பங்களை வெட்டிஎறியத் திறமைகொண்ட அறிவும் உறுதியும் வேண்டுமானால்,அது எளிதில் முடிகிற காரியமாகத் தோன்றவில்லை. பெரியபெரிய கஷ்டங்கள் பட்டபிறகுதான், சிறிய உண்மைகள்புலப்படுகின்றன. நம்மைச்சுற்றி இன்பக் கோட்டைகள் கட்டிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொருவனுக்கும் இருக்கிறது. மஹத்தான அறிவு வேண்டும். அழியாத நெஞ்சுறுதி வேண்டும். கல்விகள் வேண்டும். கீர்த்திகள் வேண்டும். செல்வங்கள் வேண்டும். சூழ்ந்திருக்கும் ஊரார் தேசத்தார் உலகத்தார் எல்லோரும் இன்பத்துடன் வாழும் படி நாம் செய்யவேண்டும். நல்லாசைகள் பெரிது பெரிதாக வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆசைகள நிறைவேற வேண்டுமானால், பலமான அடிப்படை போட்டு மெல்ல மெல்லக் கட்டிக்கொண்டு வரவேண்டும். நிலை கொண்ட இன்பங்களை விரைவிலே உண்டாக்குதல் சாத்தியமில்லை. ஏழையாக இருப்பவன் பெரிய செல்வனாக வேண்டுமானால் பல வருஷங்கள் ஆகின்றன. கல்வியில்லாதவர் கற்றுத்தேறப் பல வருஷங்கள் ஆகின்றன. உலகத் தொழில்களிலே தேர்ச்சியடைய வேண்டுமானால் அதற்குக் "காலம் வேண்டும். ஆத்ம ஞானம் பெறுவதற்குக் காலம் வேண்டும். 'பொறுத்தவன் பூமியாள்வான்.''பதறின காரியம் சிதறும்' இடையே குறுக்கிடும் மரணம். இங்ஙனம் இன்பங்களின் தேட்டத்தில் நம்மாலஇயன்ற வரையில் இடைவிடாமல் முயற்சி செய்துகொண்டு நாம் காலத்தின் பக்குவத்துக்காகக் காத்திருக்கும்படி நேரிடுகிறது இதனிடையே மேற்படி பிச்சைக்காரன் பாட்டு வாஸ்தவமாய் விட்டால் என்ன செய்வது? தூங்கையிலே வாங்குகிற மூச்சு, அது சுழிமாறிப் போனாலும் போச்சு. என்ன ஹிம்ஸை இது? நூறு வயதுண்டு என்பதேனும் நல்ல நிச்சயமாக இருந்தால் குற்றமில்லை. நூறு வருஷங்களில் எவ்வளவோ காரியம் முடித்து விடலாம். ''அடுத்த நிமிஷம் நிச்சயமில்லை'' என்று தீர்ந்துவிட்டால் எதைக் கொண்டாடுவது? இது கட்டிவராது. எப்படியேனும், தேகத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும். நமது காரியம் முடிந்த பிறகுதான் சாவோம்; அதுவரை நாம் சாக மாட்டோம். நம் இச்சைகள், நமுடைய தர்மங்கள் நிறைவேறும்வரை நமக்கு மரணமில்லை.
----------
காமதேனு - தர்மம்
"ஹிந்துஸ்தான் ரெவ்யூ" என்று அலஹாபாத்தில் பிரசுரமாகும் மாதப் பத்திரிகையில் ஸ்ரீீ வாடியா என்பவர் ''ஒழுக்கம்'' என்பது பற்றி மிகவும்நேர்த்தியான லிகிதம் "எழுதியிருக்கிறார். அதில் அவர் சில ரஸமான கேள்விகள் கேட்கிறார்.அவருடைய வசனங்களை முழுதும் மொழி பெயர்க்காமல் அந்தக் கேள்விகளின் ஸாரத்தை இங்கே சொல்லுகிறேன்:
'தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் போரென்று ஸாமான்யர் சொல்லுகிறார்கள். சில சமயங்களில் தர்மங்களே ஒன்றுக்கொன்று முட்டுகின்றன. ஒரு தந்தை தன் மகனைக் கொலைத்தண்டனையிலிருந்து மீட்கும் பொருட்டாய்ச் சாட்சி சொல்லுவதாக வைத்துக்கொள்வோம். அவனுடைய செய்கையை எவ்விதமாகத் தீர்மானஞ் செய்வோம்? மகனைக் காப்பது தந்தையின் கடமை. ராஜ்யத்தில் நீதி பரிபாலனத்திற்கு, தான் துணை புரிவதும் கடமை. இரண்டும் தர்மம். ஆனால் ஒன்றுக்கொன்று முட்டுகின்றன. தவிரவும், பூர்வசரித்திரங்களை ஆராய்ச்சி செய்யுமிடத்தில், யூனியுஸ் புரூத்தஸ் என்ற ரோம தேசத்தான் தேசபக்தியின் மிகுதியால் தன் சொந்த மகனைக் கொன்றான். மார்க்குஸ் புரூத்தஸ் அதே காரணத்தைச் சொல்லி யூலியுஸ் கேஸரைக் கொன்றான். பதிவிரதை நோன்பு பெரிதென்று கருதி லூக்ரேஸியா தற்கொலை செய்துகொண்டாள்; ஸீதை ராமனுடைய ஸந்தேக நிவர்த்திக்காக நெருப்பிலே விழத் துணிந்தாள். ஹிந்து மதத்தைப் புதுப்பிக்க வேண்டுமென்றஅவாவினால் சிவாஜி அப்ஜுல்கானைக் கொலை செய்தான். தர்மங்களுக்குள்ளே பரஸ்பர முட்டுப்பாடு அவசியம் ஏற்படத்தான் செய்கிறது. தர்மசாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொண்டால் இரண்டு பக்கமும் பேசுகிறது. இதற்குத் தீர்ப்பு என்ன'
மேலும், 'ஒழுக்கம் என்ற சொல்லுக்கே பொருள் சில இடங்களில் சரியாக வழங்கவில்லை' என்று அவர் சொல்லுகிறார். ஒழுக்கத்திற்குப் பணிவு, கீழ்ப்படிதல் அவசியமென்று சிலர் சொல்லுகிறார்கள். சரித்திரத்தில் மேன்மை கொண்ட பெரியோர்களைக் கருதுவோம். புராதன உலகத்தில் அலெக்ஸாந்தர், யூலியுஸ்கேஸர், ஹானிபால் என்பாரும், இங்கிலாந்தில் க்ராம்வெல், சேதாம் என்பாரும், நெப்போலியன். பிஸ்மார்க், அக்பர், சிவாஜி, ஹைதர் அலி முதலிய சக்திமான்களும், இலக்கியத்தில் மில்டனும், கெத்தேயும் மிகுந்த கீழ்ப்படிவுள்ள குணத்துடன் இருக்கவில்லை. தன்னம்பிக்கை அவர்களிடம் பரிபூரணமாக இருந்தது. ?நமது காலத்தில் நாம் மகத்தான காரியங்கள் செய்வோம்; இளைக்க மாட்டோம்: பின் "வாங்கமாட்டோம்" என்று தீவிரமாக வேலை செய்தார்கள்;சரித்திரத்தின் நாயகராயினர். நீதி சாஸ்திரம் இன்னும் நேரேவகுத்தாகவில்லை.
'அட போ. பழமொழிகளை நம்பி ஒழுக்கத்தை நடத்துவோமென்று நினைப்பதும் பயனில்லை' என்று மேற்படி வாடியா சொல்லுகிறார். 'பதறின காரியம் சிதறும என்பதாக ஒரு பழமொழி சொல்லுகிறது. 'சோற்றுக்கு முந்திக்கொள' என்று மற்றொரு பழமொழி சொல்லுகிறது. எந்தப் பழமொழியைநம்பலாம்? 'ஒழுக்கமாவது மனோதைரியம், இஷ்டத்தைக் கைவிடாத மேன்மைக் கொள்கை; மற்றதெல்லாம் அதற்கிணங்க வைத்துக்கொண்டால் அதுவே சரியான தீர்ப்பு' என்று ஸ்ரீவாடியா சொல்கிறார்.
கடைசியாகத் தம்முடைய முடிவை ஒருவிதமாக மேற்படி லிகித கர்த்தா காட்டுகிறார்:
'ஆரம்பத்தில் சொல்லியபடி பொய்ச் சாக்ஷி கூறி மகனுயிரை நீதி வஞ்சனையால் மீட்கக் கருதிய பிதாவினுடைய திருஷ்டாந்தத்தை எடுப்போம். அவன் கேவலம் தன்னுடைய குடும்ப தர்மமே உயர்வென்று நினைக்காமல் லோகதர்மமே மேலென்று நினைத்து அதன்படி உண்மை கூறியிருந்தால், மகனுயிர் போய்விடலாம். நெஞ்சு தகரலாம், மானம் அழியாமலும் தர்ம ஸம்பத்துக்கு வழியாகவும் இருக்கும' என்பது மேற்படி லிகித ஸாரம்.
---------
உண்மை - ரத்தினக் களஞ்சியம்
பூமண்டலத்தில் வெவ்வேறு தேசங்களில் வெவ்வேறுகாலங்களிலே பிறந்து, மனுஷ்ய ஜாதியாருக்கு ஞானதானம் செய்தசில பெரியோரின் வசனங்களை இங்கே கோத்தெழுதுகிறேன்.தயவுசெய்து சிரத்தையுடன் படிக்கும்படி தமிழ்நாட்டு மஹாஜனங்களை வேண்டுகிறேன்.
தெலுங்கு தேசத்து ஞானியாகிய வேமன்ன கவிசொல்லுகிறார்:
''கல்லைக் குவித்துப் பெரிய கோவில்கள் ஏன்கட்டுகிறீர்கள் ? தெய்வம் உள்ளுக்குள்ளே இருப்பதை அறியாமல், வீணாக ஏன் தொல்லைப்படுத்துகிறீர்கள் ?''
ஸ்வாமி விவேகானந்தர்:- ''ஒவ்வொரு மனிதனுடையஅறிவிலும் பரமாத்மா மறைந்து நிற்கிறது. வெளியுலகத்தையும்உள்ளுலகத்தையும் வசப்படுத்தி உள்ளே மறைந்திருக்கும் தெய்வத்தை வெளிப்படுத்துவதே நாம் செய்யவேண்டிய காரியம்.செய்கை, அன்பு, யோகம், ஞான இவற்றினால் அந்தப் பொருளைஅடைந்து விடுதலை பெற்று நில்லுங்கள். தர்மம் முழுதும்"இஃதேயாம். மற்றப்படி மதங்கள், கொள்கைகள், கிரியைகள்,சாஸ்திரங்கள், கோயில்கள், ஆசாரங்கள் எல்லாம் இரண்டாம்பக்ஷமாகக் கருதத்தக்க உபகரணங்களேயன்றி வேறில்லை'.
அமெரிக்கா தேசத்து மஹா வித்வானும் ஞானியுமாகியஎமெர்ஸன் சொல்லுகிறார்:
'எவன் வந்தாலும் சரி, அவனிடமுள்ள தெய்வத்தைநான் பார்ப்பதற்குத் தடையுண்டாகிறது. ஒவ்வொருவனும் தன்னுள்ளேயிருக்கும் திருக்கோயிலின் கதவுகளை மூடிவைத்துவிட்டு மற்றொருவனுடைய தெய்வத்தையும், மற்றொருவனுக்குவேறோருவன் சொல்லிய தெய்வத்தையும் பற்றிப் பொய்க்கதைகளை என்னிடம் சொல்ல வருகிறான்.'
த்ஸென்-தஸே-த்ஸுங் என்ற சீன தேசத்து ஞானிசொல்லுகிறார்:-
'பழைய காலத்திலிருந்து வந்ததென்று கருதி, ஒரு மதம் உண்மையென்பதாக நிச்சயித்து விடலாகாது. உண்மை இதற்கு நேர்மாறானது. மனித ஜாதி நாளாக நாளாக வாழ்க்கையின் உண்மை"விதிகளை நன்றாகத் தெரிந்து கொள்ளுகிறது நமது பாட்டன்மாரும்பூட்டன் மாரும் நம்பிய விஷயங்களையே நாமும் நம்பவேண்டுமென்ற விஷயமானது, குழந்தையாக இருக்கும்போதுதைத்த உடுப்புக்களையே பெரியவனான போதும்போட்டுக்கொள்ள வேண்டுமென்பதற்கு ஒப்பாகும்.'
மேற்கூறிய எமெர்ஸன் பண்டிதரின் சிஷ்யரும் நல்லஞானியுமான தோரோ சொல்லுகிறார்:-
'என்ன ஆச்சரியம்! உண்மையின் பிரகாசங்களில் நமதுகாலத்துக்குப் பயன்படாத பழையனவற்றை உலகம் ஒப்புக் கொள்ளுகிறது. இப்போது புதிய ஞானிகள் கண்டு சொல்லும் உண்மைகளை வீணாக மதிக்கிறது; சிற்சில சமயங்களில்பகைக்கவும் செய்கிறது. என்ன ஆச்சரியம்! '
ராமகிருஷ்ண பரமஹம்ஸர்:-
'ஆச்சரிய சித்திகள் காட்டுவதாகச் சொல்லும் மனிதர் இருக்குமிடத்துக்குப் போக வேண்டாம். அவர்கள் உண்மைநெறியினின்றும் தவறிவிட்டார்கள்.'
ருஷியா தேசத்து ஞானியாகிய டால்ஸ்டாய் (தோல்ஸ் தோய்):
---------
உண்மை - முடிவுரை
எனவே, எல்லா மதங்களும் உண்மைதான்: ஒருமதமும் முழு உண்மையன்று. ஆதலால் மதப்பிரிவுகளைக் கருதிமனிதர் பிரிந்துவிடக்கூடாது. எல்லா மதஸ்தரும் ஒரேதெய்வத்தைத்தான் வணங்குகிறார்கள். லௌகிக விஷயங்களைப்போலவே மத விஷயங்களிலும் ஒப்பு, உடன் பிறப்பு, விடுதலைமூன்றும் பாராட்ட வேண்டும்.
-------------
உண்மை - நம்பிக்கை
மயிலாப்பூரில் ஸ்ரீ கலவல கண்ணன் செட்டியார்ஏற்படுத்திய புதிய ஸம்ஸ்க்ருத கலாசாலையின் க்ருஹப் பிரவேசத்தை ஒட்டி நீதிப்ரவீண ஸ்ரீ சுப்பிரமணிய அய்யர்செய்த ஆசி வசனங்களிடையே, ராமானுஜா சார்யருடையமகிமையைப்பற்றிச் சில வார்த்தைகள் சொன்னார். ஸ்ரீமான்நீதிமணி அய்யர் பிரம்மவேதாந்தியாகையால் இவருக்குத்துவைதம், விசிஷ்டாத்து வைதம், அத்வைதம், என்ற மூன்றுகட்சியும் ஸம்மதம். ஸத்யம் ஒன்று; அதனை ஆராதனைசெய்யும் வழிகள் பல; அத்வைத ஸ்தாபனம் செய்தசங்கராச்சார்யரே ஷண்மத ஸ்தாபனமும் செய்ததாகஅவருடைய சரித்திரம் சொல்லுகிறது.
பக்தியின் பெருமையை உலகத்துக்கு விளங்கக்காட்டிய மஹான்களிலே ராமானுஜாசாரியார் ஒருவர்; பக்தியாவதுதெய்வத்தை நம்புதல்; குழந்தை தாயை நம்புவது போலவும்,பத்தினி கணவனை நம்புவது போலவும், பார்த்தபொருளைக் கண்"நம்புவது போலவும், தான் தன்னை நம்புவது போலவும்தெய்வத்தை நம்பவேண்டும். இரவிலும் பகலிலும், இன்பத்திலும்துன்பத்திலும், தொழிலிலும் ஆட்டத்திலும், எப்போதும் இடைவிடாமல் நெஞ்சம்தெய்வ அருளைப்பற்றி நினைக்க வேண்டும்.நோய் வந்தால், அதனைத் தீர்க்கும்படி தெய்வத்தைப் பணியவேண்டும். செல்வம் வேண்டுமானால், தெய்வத்தினிடம் கேட்கவேண்டும். கல்வி, அறிவு, புகழ், ஆயுள் முதலிய எல்லாமங்களங்களையும் தெய்வத்தினிடம் உண்மையுடன் கேட்டால்அது கொடுக்கும். தெய்வம் கொடுக்காவிட்டாலும் அதை நம்பவேண்டும். கேட்டவுடனே கொடுப்பது தெய்வத்திற்கு வழக்கமில்லை. பக்தி பக்குவமடைந்த பிறகுதான் கேட்ட வரம்உடனே கிடைக்கும். அதுவரை தாமஸங்கள் உண்டாகும். இதுகர்ம விதி. ''அடுத்து முயன்றாலும் ஆகுநாளன்றி எடுத்தகருமங்கள் ஆகா''. எனவே,நாம் தெய்வத்தினிடம் கேட்ட பயன்கைகூடுவதற்கு எத்தனை காலமான போதிலும், அதைரியப்படாமல்,தெய்வபக்தியையும் அதனாலுண்டாகும் ஊக்கத்தையும்முயற்சியையும் துணையாகக் கொண்டு நடக்கவேண்டும். விதியின்முடிவுகளைத் தெய்வபக்தி வெல்லும். இந்த உலகம் முழுமைக்கும்ஈசனே தலைவன். அவனும் பக்தர்களுக்கு வசப்பட்டவன். பக்தன்எது கேட்டாலும் கைகூடும். நம்பு; கேள். ஓயாமல் தொழில் செய்துகொண்டிரு. பயனுக்கு அவசரப்படாதே. தெய்வம் நிச்சயமாக வரம்கொடுக்கும். தெய்வம் பிரஹ்லாதனை ஹிரண்யனிடமிருந்து காத்தது."முதலை வாயிலிருந்து யானையை விடுவித்தது. பாஞ்சாலியின்மானத்தைக்காத்தது. தெய்வம் விக்கிரமாதித்யனுக்கும்,காளிதாஸனுக்கும், சிவாஜி ராஜாவுக்கும், நிகரில்லாத வெற்றியும் தீராதபுகழும் கொடுத்தது. இவ்விதமான தெய்வ பக்தியை ராமாநுஜர் மனிதருடைய இஹபரவாழ்வுக்கு முதல் ஸ்தானமாகச் சொன்னார்.ஆழ்வார்களுடைய பாட்டில் விடுதலை யொளி நிற்பதுகண்டு,அவற்றை வேதம் போல் கருதவேண்டுமென்று போதனை செய்தார்.
ஆழ்வார்களுடைய குலம் நானாவிதம்;அப்படியிருந்தும் அவர்களைக் கோயிலில் வைத்துப் பூஜைசெய்யலாமென்று ராமாநுஜர் நியமித்தார். முற்காலத்தில்பிராமணர் இதர ஜாதியாரை இழிவாக வைத்துக் கெடுத்தார்களென்றும், ஞானத்துக்குத் தகாதவரென்று சொல்லி அடிமைப்படுத்தினார்களென்றும் பொய்க்கதைகள் சொல்லி ஹிந்துதர்மத்தை அழிக்க விரும்புகிற கிறிஸ்துவப் பாதிரிகளும்அவ்விடத்து, சிஷ்யர்களும் ராமாநுஜாசாரியர் பிராமணர்என்பதை அறிய மாட்டார் போலும். சூத்திரராகிய திருக்கச்சிநம்பியை ராமாநுஜர் குருவாகக்கொண்டு அவருடையஉச்சிஷ்டத்தை உண்ணத் திருவுளங் கொண்டார். திருநாராயணபுரத்தில் பறையர் ஒருசமயம் கோயிலுக்குள் வரலாமென்றுஸ்ரீராமாநுஜர் நியமித்தருளிய முறை இன்றைக்கும் நடந்துவருகிறது.
இப்படிப்பட்ட மனுஷ்யர்களுடைய தர்மத்தைஇக்காலத்தில் வளரும்படி செய்யவேண்டுமென்ற நோக்கத்துடன்ஸ்ரீ கண்ணன் செட்டியார் ஏற்படுத்தியிருக்கும் கலாசாலையில்,பிற மதங்களும் உண்மையென்ற சமரஸ ஞானத்தை ஊட்டத்தவறலாகாது. இந்த ஸமரஸ ஞானம் இல்லாவிட்டால் எந்தச்சித்தாந்தமும் நாளடைவில் பொய்யாகவும், குருட்டுநம்பிக்கையாகவும், வீண் அலங்காரமாகவும் முடிந்து ஜனங்களை "மிருகங்களைப் போலாக்கிவிடும். வேத தர்மம் ஒன்று. அதில்ராமாநுஜர் தர்மம் ஒரு கிளை. பாஷ்ய விசாரணை நல்லது.உண்மையான பக்தியே அமிர்தம். எல்லா உயிர்களிடத்திலும்நாராயணன் விளங்குவது கண்டு, அந்த ஞானத்தாலே கலியைவென்று தர்ம ஸ்தாபனம் செய்வதற்குள்ள பயிற்சி மேற்படிகண்ணன் செட்டியார் கலாசாலையிலும், அதுபோன்று எல்லாப் பாடசாலைகளிலும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தால், தேசம்மறுபடி மேன்மையடையும். இது கைகூடும் வண்ணம் பராசக்திஅருள் செய்க.
----------
உண்மை - தைரியம்
நமது முன்னோர்களும் அவர்களைப் பின்பற்றிநாமுங்கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும்ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத்தெய்வபாஷை என்று சொல்வது விளையாட்டன்று. மற்றஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்றுசொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடையபாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா?அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷையென்கிறோம்.
அந்தப் பாஷையில் தைரியம் என்பதோர்சொல்லுண்டு தீரனுடைய இயற்கை. தைரியம். தீரன் என்றவார்த்தையின் தாதுப் பொருளைக் கவனிப்போமானால்"அறிவுடையவன் என்ற அர்த்தமாகும். துணிவுடையவனுக்கும்அந்தப் பாஷையிலே அதுவே பெயராக வழங்கப்படுகிறது.எனவே 'தைரியம்' என்ற சொல் அறிவுடைமை யென்றும்துணிவுடைமையென்றும் இருவித அர்த்தங்கள் உடையது.இங்ஙனம் இவ்விரண்டு கருத்துக்களுக்கும் ஒரே சொல்லைவழங்குவது அந்த பாஷையின் பெருமைக்குள்ள சின்னங்களிலே ஒன்றாகும்.
உலகத்தில் வேறு எந்தப் பாஷையிலும்மேற்கூறிய இரண்டு கருத்துக்களையும் சேர்த்துக் குறிப்பிடக்கூடிய ஒரே பதம் கிடையாது. எந்த நாட்டினரைக் காட்டிலும்அதிகமாக யதார்த்தங்களைப் பரிசோதனை செய்து பார்த்தமஹான்கள் வழங்கிய பாஷையாதலால், அந்தப் பாஷையிலே இவ்விரண்டு பொருள்களுக்கும் ஒரே பதம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து தெரியக்கூடியது யாதென்றால்,துணிவுள்ளவனையே அறிவுள்ளவனென்பதாக நமதுமுன்னோர்கள் மதிக்கிறார்கள். எடுத்ததற்கெல்லாம் அஞ்சும்இயல்புடைய கோழையொருவன் தன்னைப் பலசாஸ்திரங்கள்கற்றவன் என்றும் அறிவாளியென்றும் சொல்வானானால்,அவனை நம்பாதே! அவன் முகத்தை நோக்கிக் காறியுமிழ்ந்துவிட்டு, அவனிடம் பின்வருமாறு சொல்:- ''?அப்பா, நீ ஏட்டைத்துளைக்கும் ராமபாணப் பூச்சியைப்போல், பல நூல்களைத் துளைத்துப் பார்த்து ஒரு வேளை வாழ்நாளைவீணாக்கி யிருக்கக்கூடும். ஆனால் அச்சம் இருக்கும் வரை நீஅறிவாளியாகமாட்டாய். அஞ்சாமைக்கும் அறிவுக்கும் நமதுமுன்னோர்கள் ஒரே சொல்லை உபயோகப்படுத்தியிருக்கிறார்கள்.அதை நீ கேள்விப்பட்டதில்லை போலும்!'''
ஆம், அச்சமே மடமை. அச்சமில்லாமையே அறிவு.விபத்துக்கள் வரும்போது நடுங்குபவன் மூடன். அவன்எத்தனை சாஸ்திரம் படித்திருந்தாலும் மூடன்தான். விபத்துக்கள்வரும்போது, எவன் உள்ளம் நடுங்காமல் துணிவுடன்"அவற்றையெல்லாம் போக்க முயற்சி செய்கிறானோ, அவனேஞானி. ''ஹரி: ஓம்'' என்று எழுதத் தெரியாத போதிலும் அவன்ஞானிதான்.
சிவாஜி மஹாராஜா தமது சொந்தப்பிரயத்தனத்தினாலும்,துணிவாலும், புத்தி கூர்மையாலும் அவுரங்கசீப்பின்கொடுங்கோன்மையை அழித்து, மகாராஷ்டிரம் ஏற்படுத்திதர்மஸ்தாபனம் செய்தார். அவர் ஏட்டுப்படிப்பில் தேர்ந்தவர்அல்லர். இந்தக் காலத்தில் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் படித்துப் பரீக்ஷைகள் தேறி 15 ரூபாயைக் கொண்டு பிழைப்பதற்காகத் தமது தர்மத்தையும் ஆத்மாவையும் விலைப்படுத்தக் கூடிய மனிதர்கள், ஆயிரக் கணக்கான சுவடிகள் படித்துக் கண்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சிவாஜிக்கு மகாராட்டிர ராஜ்யம் லாபம்.இவ்விருவரிலே யார்சிறந்தவர்,இவ்விருவரிலே யார் அறிஞர்?
பாரதவாசிகளாகிய நாம் இப்போது புனருத்தாரணம்பெறுவதற்குக் கல்வி வேண்டும் என்று சிலர் சொல்லுகிறார்கள்.நாம் 'துணிவு வேண்டும்' என்கிறோம். துணிவே தாய்; அதிலிருந்துதான் கல்வி முதலிய மற்றெல்லா நன்மைகளும் பிறக்கின்றன.
-------------
உண்மை - உயிரின் ஒலி
சில தினங்களுக்கு முன்பு கல்கத்தாவில் ஸ்ரீ ஜகதீசசந்திரவஸு, தமது ''வஸு மந்திரம்'' என்ற கூடத்தைப்பாரதமாதாவுக்குச் சமர்ப்பணம் செய்கையில், ''உயிரின் ஒலி''என்ற மகுடமிட்டு ஒரு பிரசங்கம் செய்தார்.
அவருடைய கொள்கை எப்படியென்றால்:- நாம்ஜடபதார்த்தமாக நினைக்கும் உலோகாதிகளில் உயிர்நிறைந்திருக்கிறது. ஐந்துக்களைப் போலவே விருக்ஷாதிகளுக்கும்உணர்ச்சியிருக்கிறது. ஆகவே, மண், செடி, ஐந்து, மனுஷ்யன்அத்தனைக்குள்ளும் ஒரே விதமான ப்ராணசக்தியிருக்கிறது. 'இந்தஉலகமே உயிர்க்கடல்ய என்பது அவரது சித்தாந்தம். அவர் பலநுட்பமான கருவிகள் செய்திருக்கிறார். ஹிந்து தேசத்துத்தொழிலாளிகளைக் கொண்டு அந்த ஸூக்ஷ்மக் கருவிகளைஎல்லாம் செய்து கொண்டார். அந்தக்கருவிகளின் நேர்த்தியைப்பார்த்து ஐரோப்பிய சாஸ்திரிகளும் யந்திரிகளும்"ஆச்சரியப்படுகிறார்கள். அந்தக் கருவிகளின் உதவியால், ஒருபூண்டின் கையில் ஒரு ஊசி எழுதுகோல் கொடுக்கிறார். ஒருபுகைபட்ட கண்ணாடியின் மேல் அந்த ஊசி எழுதுகிறது;அதாவது,கோடுகள் கீறுகிறது. அந்தக் கோடுகளினால் மேற்படி செடியின்உள்ள நிலையை, அதன் நாடியின் அசைவு தெரிவிக்கிறது.
செடிக்கு விஷத்தைக் கொடுத்தால் மூர்ச்சைபோடுகிறது.மறுபடி, தெளிய மருந்து கொடுத்தால் தெளிகிறது. மதுபானம்செய்வித்தால் உண்டாட்டுக் கேளிகள் நடத்துகிறது. செடியின்சந்தோஷம், சோர்வு, வளர்ச்சி, சாவு ஆகிய எல்லாநிலைமைகளையும் கண்ணாடியிலே கீறிக் காட்டுவதைப்பார்க்கும்போது ''செடியின் நாடியுணர்ச்சிகளுக்கும் இதரமனுஷ்யமிருகாதி ஐந்துக்களின் நாடியுணர்ச்சிகளுக்கும் பேதமில்லை''என்பது ருஜுவாகிறது.
இவ்விதமான அற்புதப் பரீக்ஷைகளினால் உலகத்தின்உயிரொலியை நமக்குத் தெரியும்படி செய்த மஹானாகிய மேற்படிஜகதீச சந்திரவஸு நம்முடைய ஹிந்து மதத்தில் ஆழ்ந்தபக்தியுடையவர் என்பது சொல்லாமலே விளங்கும். ஹிந்துக்களின்மேன்மையைப்பற்றி அவர் வார்த்தை சொல்லும்போது, அந்தவார்த்தைகளிலே மிகச்சிறந்ததொரு ஜீவநாதம் உண்டாகிறது. அந்தவார்த்தைகளைப் படிக்கும்போதே படிப்போரின் ஜீவசக்திமிகுதிப்படுகிறது.
அவர் சொல்லுகிறார்:- 'ஸாதாரணக் கருவிகளால்மஹத்தான காரியங்களை நிறைவேற்றிய மஹான்களின்ஸந்ததியிலேநாம் பிறந்திருக்கிறோம். ஒருவன் ஒரு பெருங்காரியத்தில் முழுதும்தன்னை ஈடுபடுத்தினால், அடைத்திருந்த கதவுகள் திறக்கும்.அஸாத்யமாகத் தோன்றுவது அவனுக்கு ஸாத்யமாகும்; உண்மை"தேடுவதையே தொழிலாகக் கொண்ட ஒருவன் சிற்றின்பங்களைவிரும்பலாகாது. லாப நஷ்டங்களையும் வெற்றி தோல்விகளையும்ஒன்று போலக் கருதி அவன் தனது ஜீவனை உண்மைக்குநைவேத்யமாக விடவேண்டும். பாரததேசம் இப்போது வென்றுகாப்பாற்ற வேண்டிய வஸ்து யாது? சிறியதும் வரம்புற்றதுமாகியஒரு பொருளினால் பாரதமாதா திருப்தியடைவாளா? இவளுடையஅற்புதமான பூர்வ சரித்திரத்தையும் பூர்வ சாஸ்திரங்களையும்செயல்களையும் யோசிக்கும்போது, தாழ்ந்த தரமுள்ளது சிலநாள்நிற்கிறதுமான பாலமொன்றை இவள் விரும்பமாட்டாளென்பதுதெரியும்.
'இப்போது நம்முடைய கண்முன்னே இரண்டு விதமானதர்மங்கள் காணப்படுகின்றன.
''முதலாவது, (ஐரோப்பியரைப் போல நாமும்) படிப்பின்பரவுதலாலும், நகரத்தானுக்குரிய கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதாலும், கைத்தொழில், வியாபார சம்பந்தமான பலவிதமுயற்சிகளாலும், பாரதநாட்டை வலிமையுடைய நாடாகச் செய்யவேண்டும். இவையெல்லாம் தேசக் கடமையின் முக்கியாம்சங்கள்.இவற்றைப் புறக்கணித்தால் நமது ஜீவனுக்கே ஆபத்து நேரிடும்,வாழ்க்கையிலே ஜயமும், அவனவன் தன் தன் அவாவைத் திருப்திசெய்து கொள்ளும் வழியும் வேண்டிப் பாடுபட்டால், அதிலிருந்தேமேற்கூறிய லௌகிக தர்மத்திற்குத் தூண்டுதல் உண்டாகும்.இரண்டாவது, ஆத்மதர்மம். க்ஷணமாயிருக்கும் இன்பங்களைமாத்திரம் கருதாமல், மனுஷ்ய வாழ்க்கையின் அத்யுந்நதமான"நோக்கத்தை நாடி உழைத்தவர்கள். நமது நாட்டில் எக்காலத்திலும்மாறாமல் இருந்து வருகிறார்கள்.'
ஆத்ம தர்மமாவது யாதென்றால், ஸ்ரீ வஸுசொல்லுகிறார்: 'மனுஷ்ய ஜாதியின் பரம க்ஷேமத்திற்காக ஒருவன்தன்னைத் துறந்து விடுதல்' என்று. வந்தே மாதரம். இந்தத்தர்மத்தை எக்காலத்திலும் இடைவிடாமல் ஒரு சிலரேனும் ஆதரவுசெய்து வந்தமையாலேதான்-அஸ்ஸிரியா தேசத்திலும் நீலநதிக்கரையிலும் தலைதூக்கி நின்ற பெரிய ஜாதிகள் அழிந்துபோயின - நாம் அழியாமல் என்றும் இளமை கொண்டிருக்கிறோம்.கால வெள்ளத்தில் வரும் மாறுதல்களுக்கெல்லாம் மாறாமல், தான்அவற்றைத் தனதாக்கிக்கொண்டு வாழும் திறமை நமது நாட்டிற்குஇருக்கிறது.
வந்தே மாதரம்.
இதுவே உயிரின் ஒலி. ஹிந்துஸ்தானத்தைவணங்குகிறேன், ஹிந்து தர்மத்தைப் போற்றுகிறேன். லோகநன்மைக்காக என்னை மறந்து, என்னை இரை கொடுப்பேன்.
இதுதான் ஜீவசக்தியின் சாந்தி வசனம். தர்மம்ஐரோப்பியருக்குத் தெரியாது. அதை நாம் ஐரோப்பியருக்குக்கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களுடைய முயற்சிகளை நாம்"கற்றுக்கொண்டு, பிறகுதான் அவர்களுக்கு நாம்உபாத்யாயராகலாம்.
ஐரோப்பாவின் தொழில் நுட்பங்களை நாம் பயிற்சிசெய்தல் எளிதென்பது ஸ்ரீமான் வஸுவின் சரிதையிலே நன்குவிளங்கும். நம்முடைய சாந்தி தர்மத்தை ஐரோப்பியர் தெரிந்துகொள்வதால், அவர்களுக்கு விளையக்கூடிய நன்மையோ மிகமிகப் பெரியது.
ஸ்ரீீமான் ஜகதீச சந்திர வஸு சொல்லுகிறார்:- 'தன்னை அடக்கியாளும் சக்தியில்லாமையால் மனுஷ்யநாகரிகமானது சேதப் படுகுழியின் கரையில் நடுங்கிக் கொண்டுநிற்கிறது. ஸர்வ நாசத்திலே கொண்டு சேர்ப்பதாகிய இந்த வெறிகொண்ட வேகத்திலிருந்து மனிதனைக் காப்பாற்ற மற்றொருதர்மம் வேண்டும்.' அதாவது, நம்முடைய ஹிந்து தர்மம்.ஏனென்றால், 'ஆத்மத்யாகம் தனக்குத் தனக்கென்ற அவாவினால்உண்டாகாது. எல்லாச் சிறுமைகளையும் அழித்துப் பிறர்நஷ்டமெல்லாம் தனக்கு லாபமென்று கருதும் அஞ்ஞானத்தை"வேரறுப்பதால் விளையும்' என்கிறார்.
முன்னொரு முறை சில வருஷங்களுக்கு முன்புஜகதீசசந்திரர் சொல்லிய வாக்கிய மொன்றையும் இங்கு மொழிபெயர்த்துக்காட்டுதல் பொருந்தும். லண்டன் நகரத்தில் 'ராயல்ஸொஸைடி'என்ற பெரிய சாஸ்திர சங்கத்தார் முன்பு செய்தப்ரசங்க மொன்றிலே அவர் சொன்னார்:- 'ஸ்வலி கீதங்களின்பேசாத ஸாக்ஷ்யத்தை நான் பார்த்தேன். எல்லாப் பொருளையும்தன்னுள்ளே கொண்ட ஏகவஸ்துவின் கலை ஒன்றை அங்குக்கண்டேன். ஒளியின் சிறு திரைகளுக்கிடையே தத்தளிக்கிறதுரும்பும், பூமியின் மேலே பொதிந்து கிடக்கும் உயிர்களும்,நமது தலைமேலே சுடர் வீசும் ஞாயிறும் - எல்லாம் ஒன்று.இதைக் கண்ட பொழுதே, மூவாயிர வருஷங்களுக்கு முன்புஎன் முன்னோர் கங்கைக் கரையில் முழங்கின வாக்கியத்திற்குச்சற்றே பொருள் விளங்கலாயிற்று. ''இந்த ஜகத்தின் பேதரூபங்களில் ஒன்று, காண்பார் எவரோ அவரே உண்மைகாண்பார்.'' பிறர் அல்லர், பிறர் அல்லர்; இதுதான் ஜீவஒலி.வாயுபகவானுடைய ஸ்ரீ முக வாக்யம். எல்லாவற்றிலும் ஓருயிரேஅசைகிறது. அதை அறிந்தால் பயமில்லை; பயம் தீர்ந்தால்சாவில்லை.அமிர்தம் ஸதா.'
---------
உண்மை - புனர்ஜன்மம் (1)
புனர் ஜன்மம் உண்டு.
மதுரையிலே ஒரு சாஸ்திரியார் நேற்று மாலை இறந்துபோனதாக வைத்துக் கொள்ளுவோம். அவர் திரும்பவும்பிறப்பாரா ?தெரு வழியாக ஒருவன் நடந்து போகும்போது காலிலேஒரு சிற்றெறும்பு மிதிபட்டு இறந்து போவதாக வைத்துக்கொள்ளுவோம். அது திரும்பவும் பிறக்குமா? இதையெல்லாம்பற்றிச் சாஸ்திரங்கள் மிகவும் விஸ்தாரமாகப் பேசியிருக்கின்றன.அவற்றிலே படித்துக்கொள்ளலாம். ஆனால், நான் இப்போது சொல்லவந்த கதை இதுவன்று. நான் சொல்ல வந்த விஷயம்ஹிந்துஸ்தானத்தின் புனர்ஜன்மம்.
'ஹிந்து ஸ்தானம்' என்பது ஹிந்துக்களின் ஸ்தானம். இதுநமது தேசத்திற்கும், தேசத்திலுள்ள ஜனக் கூட்டத்திற்கும் பெயர்.இந்த ஜனக்கூட்டத்திற்கு 'பாரத ஜாதி' என்று பெயர்
சொல்வதுண்டு.
-----------
உண்மை - பாரத ஜாதி
பாரதம், பரதன் நிலைநாட்டியது. இந்தப் பரதன்துஷ்யந்த ராஜாவின் மகன். இமயமலை முதல் கன்யாகுமரிமுனை வரையிலுள்ள நமது நாட்டை இவன் ஒன்றுசேர்த்துஅதன்மிசை முதலாவது சக்ராதிபத்யம் ஏற்படுத்தியபடியால்,இந்த நாட்டிற்கு 'பாரத தேசம்' என்று பெயர் உண்டாயிற்று.கங்கையிலே வந்து சேரும் வாய்க்கால்களெல்லம் கங்கையாகவே மாறிவிடும். பாரத தேசத்தில் வந்துகுடியேறித் தலைமுறை தலைமுறையாக இங்குவாழ்பவர்களெல்லாம் நமது ஜனக் கூட்டத்தைச்சேர்ந்தவராகின்றனர்.
கிருஸ்தவர்களாயினும், பார்ஸிகளாயினும்,"மகம்மதியராயினும், இங்கிருந்து வந்து எந்த இஷ்டதெய்வத்தைக் கொண்டாடிய போதிலும், பாரத பூமியிலேபிறந்து வளர்ந்து இதையே சரணாகக் கொண்ட மனிதர்களையெல்லாம் பாரத ஜாதியிலே சேர்த்துக் கணக்கிட வேண்டும்.இது ஒரே ஜாதி பிரிக்க முடியாதது; அழிவில்லாதது.இதற்குஆதாரமும் மூலபலமுமாவது யாதெனில், ஆர்ய ஸம்பத்து.அதாவது ஆரியரின் அறிவும் அந்த அறிவின் பலன்களும்.
--------
உண்மை - ஆர்ய ஸம்பத்து
ஸம்பத்து என்பது ஸம்ஸ்கிருதச் சொல். இதன்பொருள் செல்வம் ஆனால் இங்கு செல்வம் என்பதுதிரவியத்தையும், பூஸ்திதியையும், ஆடு மாடுகளையும்மாத்திரமே குறிப்பிடுவதன்று. (1) அறிவுச்செல்வம், (2)ஒழுக்கச் செல்வம், (3) பொருட்செல்வம் ஆகியமூன்றையும் குறிப்பிடும். 'ஆர்ய ஸம்பத்து' என்பதுஹிந்துக்களுடைய அறிவு வளர்ச்சி.
நமது வேதம், நமது சாஸ்திரம், நமதுஜனக்கட்டு, நமது பாஷைகள், நமது கவிதை, நமது சிற்பம்,நமது ஸங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில் முறைகள்,நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள்-இவை அனைத்துக்கும் பொதுப் பெயர்'ஆர்ய ஸம்பத்து.'காளிதாசன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தி பாக்ஷையிலேதுளஸீதாஸர் செய்திருக்கும் ராமாயணம், கம்பராமாயணம்,"சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி - இவையனைத்துக்கும் பொதுப் பெயராவது ஸம்பத்து.தஞ்சாவூர் கோயில், திருமலை நாய்க்கர் மஹால், தியாகையர்கீர்த்தனங்கள், எல்லோராவிலுள்ள குகைக்கோயில்,ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், சரப சாஸ்திரியின் புல்லாங்குழல்- இவையனைத்துக்கும் பொதுப் பெயர் ஆர்ய ஸம்பத்து.எனவே, ஆர்யஸம்பத்தாவது ஹிந்துஸ் தானத்தின் நாகரீகம்.இந்த ஸம்பத்தைப் பாதுகாக்கும் வரையில் இந்த ஜாதிக்குஉயிருண்டு. இந்த ஸம்பத்திலே துருப்பிடிக்க இடம்கொடுத்தால், இந்த ஜாதியைச் செல் அரித்துவிடும்.
இந்த ஆர்ய ஸம்பத்தை உலகம் உள்ளவரைஸம்ரக்ஷணம் செய்து, மேன்மேலும் ஒளியும் சிறப்பும்உண்டாகும்படி செய்யுங் கடமை, தேவர்களால் பாரதஜாதிக்கு ஏற்படுத்தப்பட்ட கடமையாகும்.
---------
உண்மை - இடையில் நமக்கு நேர்ந்த கேடு
இந்த ஆர்யஸம்பத்தை நாம் பல நூற்றாண்டுகளாகஆதரித்துக் கொண்டு வந்தோம். சென்ற சில நூற்றாண்டுகளாகஇதில் துருப்பிடிக்க இடங் கொடுத்து விட்டோம். தேவர்கள்நமக்குக் கொடுத்த கடமையைக் கர்வத்தாலும், சோம்பலாலும்,சிறுமையாலும் உல்லங்கனம் செய்யத் தொடங்கினோம்.தேவர்கள் 'இந்தப் பாரத ஜாதியைக் கொஞ்சம் செல் அரிக்கக்கடவது' என்று ஆசீர்வாதம் பண்ணினார்கள்.
மலைப் பாம்புக் கதை கேட்டிருக்கிறீர்கள் அல்லவா?அதன் வாலிலே தீப்பற்றி எரியுமாம். மலைப் பாம்பு சுகமாகக்குறட்டை விட்டுத் தூங்குமாம். செல்லரித்துக் கொண்டு போனதுநமது ஸ்மரணையிலே தட்டவில்லை. அத்தனை கர்வம்,"அத்தனை கொழுப்பு, அத்தனை சோம்பல்.
நமது கவிதையிலே ஆனந்தம் குறையத்தொடங்கிற்று; ருசி குறைந்தது. கரடுமுரடான கல்லும் கள்ளிமுள்ளும் போன்ற பாதை நமது கவிகளுக்கு நல்ல பாதையாகத்தோன்றலாயிற்று. கவிராயர் ''கண்'' என்பதை ''சக்கு'' என்றுசொல்லத் தொடங்கினார். ரஸம் குறைந்தது;சக்கை அதிகப்பட்டது.உண்மை குறைந்தது; பின்னல் திறமைகள் அதிகப்பட்டன.
'சவியுறதெளிந்து தண்ணென்றொழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்'
என்று கம்பன் பாடியிருக்கின்றான்.
''சவி'' என்பது ஒளி; இது வடசொல்; கம்பன் காலத்தில்அதிக வழக்கத்திலிருந்தது போலும். ''ஒளி பொருந்துபடி தெளிவுகொண்டதாகித் தண்ணென்ற (குளிர்ந்த) நடையுடையதாகி, மேலோர்"கவிதையைப் போலக் கிடந்தது கோதாவரி நதி' என்று கம்பன்வர்ணனை செய்கிறான். எனவே, கவிதைகளில் ஒளி, தெளிவு,குளிர்ந்த நடை மூன்றும் இருக்கவேண்டுமென்பது கம்பனுடையமதமாகும். இதுவே நியாயமான கொள்கை.
மேலும், நெடுங்காலத்துக்கு முன்னே எழுதப்பட்டநூல்கள் அக்காலத்துப் பாஷையைத் தழுவினவை. காலம் மாறமாற,பாஷை மாறிக்கொண்டு போகிறது; பழைய பதங்கள் மாறிப் புதியபதங்கள் உண்டாகின்றன. புலவர் அந்த அந்தக் காலத்துஜனங்களுக்குத் தெளிவாகத் தெரியக்கூடிய பதங்களையே வழங்கவேண்டும். அருமையான உள்ளக்காட்சிகளை எளிமை கொண்டநடையிலே எழுதுவது நல்ல கவிதை. ஆனால் சென்ற சிலநூற்றாண்டுகளாக, புலவர்களும் சாமியார்களும் சேர்ந்து வெகுஸாதாரண விஷயங்களை அஸாதாரண அலௌகிக அந்தகாரநடையில் எழுதுவதுதான் உயர்ந்த கல்வித் திறமை என்று தீர்மானஞ்செய்துகொண்டார்கள்.
-----------
உண்மை - இடைக்காலத்து ஸங்கீதம்
பாரத தேசத்து ஸங்கீதம் பூமியிலுள்ள எல்லாத்தேசத்து ஸங்கீதத்தைக் காட்டிலும் மேலானது. கவிதையைப்போலவே ஸங்கீதத்திலும் நவரஸங்களின் தொழில் இருக்கவேண்டும். நவரஸங்களைப்பற்றி இந்தப் பத்திரிகையிலே*சுதேசமித்திரன் பத்திரிக்கை தனியாக ஒரு வியாஸம் பின்எழுதப்படும். இன்ன இன்ன ராகங்களிலே இன்ன இன்னசமயங்களில் இன்ன இன்ன ரஸங்கள் தோன்றப் பாடவேண்டுமென்று விதிகள் எல்லாம் பூர்வகாலத்து நூல்களிலேகாணப்படுகின்றன. கீர்த்தனத்திலுள்ள சொற்களின் அர்த்தமும்ராகத்தின் ஒளியும் ரஸத்திலே ஒன்றுபட்டிருக்க வேண்டும்.தியாகையர் காலம்வரை நமது தேசத்து ஸங்கீதம்ஒளியுடனிருந்தது. பிறகு இதிலும் இருள் சேரத்தொடங்கி"விட்டது. பாட்டிலே ரஸச் சேர்க்கை கிடையாது.அப்படியேசேர்த்தாலும் சோக ரஸம் (கருணாரஸம்) தான் சேர்ப்பார்கள். மற்றவை மடிந்து போயின. பாட்டுக் கிசைந்தபடி தாளம்''என்பது மாறிப் போய்'' தாளத்துக்கிசைந்தபடி பாட்டாகிவிட்டது.''இன்பத்தைக் காட்டிலும் கணக்கே பிரதானம்'' என்று முடிவுசெய்து கொண்டார்கள். இன்பமும் கணக்கும் சேர்ந்திருக்கவேண்டும். இன்பமில்லாமல் கணக்கு மாத்திரமிருந்தால், அதுபாட்டாகாது
-------------
உண்மை - மறு பிறப்பு
இடைக் காலத்தே நமக்குச் சேர்ந்த கேட்டிற்குஸங்கீதத்தையும் கவிதையையும் திருஷ்டாந்தங் காட்டினோம்.ஆனால், இந்தக் கேடு அவை இரண்டையும் மாத்திரமேதொட்டு நிற்கவில்லை. நமது சித்திரத் தொழில், நமது சிற்பம்,நமது ஜனக்கட்சி, ஜன நீதி, நமது சாஸ்திரம், தலை, கால் -எல்லாவற்றிலும் இந்தக் கேடு பாய்ந்து விட்டது. நோய்முற்றிப்போயிருந்தது. பராசக்தி நல்ல வேளையில் நமக்குள்உயர்ந்த வைத்தியர் பலரை அனுப்பினாள். அவளுக்கும்நம்மீது கிருபை வந்து விட்டது. எனவே, பிழைத்தோம்ஆனாலும், இம்முறை பிழைத்தது புனர்ஜன்மம். இந்தப் புனர்ஜன்மத்தின் குறிகளை எல்லாவற்றிலும் காண்கிறோம். பாரதஜாதி புதிதாய் விட்டது. தற்காலத்திலே பூமண்டலத்து மஹா"கவிகளில் நமது ரவீந்த்ரநாதர் ஒருவர் என்று உலகம் ஒப்புக்கொள்ளுகிறது. இதுவரை ஐரோப்பியப் பண்டிதர்கள் இயற்கைநூல் (ப்ரகிருதி சாஸ்திரம்) தமது விசேஷ உடமை என்றுகருதி வந்தார்கள். இப்போது நமது ஜகதீச சந்திர வஸு அந்தவழியில் நிகரற்ற திறமை பெற்றவர் என்பதை மேல் நாட்டுவித்வான்களில் ஒப்புக்கொள்ளாதார் யாருமில்லை. தமிழ்நாட்டிலே புதிய கவிதையும் சாஸ்திர ஒளியும் விரைவிலேதோன்றும். உலகம் பார்த்து வியப்படையும்.
செத்துப் பிழைத்தோம். ஆனால் உறுதியாக நல்லவயிரம் போலே பிழைத்து விட்டோம். புதிய ஜன்மம் நமக்குமிகவும் அழகான ஜன்மமாகும்படி தேவர்கள் அருள்புரிந்திருக்கிறார்கள் அதன் பொருட்டு அவர்களை இடைவிடாமல்வாழ்த்துகின்றோம்.
----------
ஓம் சக்தி - ஜன வகுப்பு
இனிமேல் யாரேனும் ஒரு மஹான் வந்து மனுஷ்யனைச் சாகாமல் நூறாண்டேனும் பயமில்லாது வாழக் கூடிய மருந்தும் உபாயமும் உலகத்துக்குக் காண்பிக்கலாம். மனுஷ்யன் பாபத்தை விட்டால் அமரத் தன்மையை அடையலாம்.'பாபத்திற்கு மரணம் சம்பளம்' என்று கிருஸ்துவ வேதம் சொல்லுகிறது பாபத்தை நீக்கி மனிதர் மரணத்தை வெல்லக் கூடிய காலம் வரலாம்.
ஆனால், இப்போதுள்ள நிலைமையில் மனிதன் இந்த உலகத்தில் வாழ்வது சதமில்லை. 'இன்றைக்கிருப்பாரை நாளைக்கிருப்பார், என்று எண்ணவோ திடமில்லையே' என்று தாயுமானவர் சொன்னார்.
எங்கிருந்தோ வந்து இவ்வுலகத்தில் சில நாள் வாழ்கிறோம். செத்த பிறகு நம்முடைய கதி என்ன ஆகுமோ?கடவுளுக்குத் தான் தெரியும். மூன்றே முக்கால் நாழிகை உயிர் வாழ்வது, சந்தோஷத்துடன் இருந்துவிட்டுப் போகக் கூடாதா? அடடா! இந்தப் பூமியில் மனித உயிருக்கு எத்தனை கஷ்டம், எத்தனை பயம், எத்தனை இடையூறு, எத்தனை கொலை, எத்தனை துரோகம், எத்தனை பொய், எத்தனை கொடுமை, எத்தனை அநியாயம், ஐயோ பாவம்!
அடா, மனிதர்களே; எத்தனை சாஸ்திரங்களுக்கும், ஆக்கினைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும், நம் மனிதர் உட்பட்டிருக்கவில்லையா? ஒரு புதுக் கட்டுப்பாடு செய்து கொள்வோமே. அந்தக் கட்டுப்பாடு யாதெனில்: 'ஒருவர்க்கொருவர் மனத்தாலும் தீங்கு நினைப்பதில்லை. ஒருவர்க் கொருவர் பயப்படல் இல்லை.' மானிடரே இந்த விரதம் எடுத்துக் கொள்ளுங்கள். இது பிழைக்கும் வழி. தெருவில் நடக்கும்போதே முன்பின் தெரியாத மனிதர்கூட ஒருவர்க்கொருவர் கோபம் அல்லது அவமதிப்பு அல்லது பயத்தோடு பார்த்துக் கொள்கிறார்கள். மனிதனுக்கு மனிதன் இயற்கையில் விரோதம் என்ற நிலையில் உங்களுடைய மூடத்தனமாக மனுஷ்ய நாகரீகம் வந்து சேர்ந்து இருக்கிறது. இதை மாற்றி, அன்பை மூலாதாரமாக்க வேண்டும்.
முதலாவது, சிலருக்குச் சோறு மிதமிஞ்சியிருக்க, பலர்தின்னச் சோறில்லாமல் மடியும் கொடுமையைத் தீர்த்துவிட வேண்டும். இது இலக்கம் ஒன்று. பூமியின் மீதுள்ள நன்செய், புன்செய், தோப்பு, துரவு, சுரங்கம், நதி, அருவி, குப்பை, செத்தை, தரை - கடவுளுடைய சொத்தில் நாம் வேலி கட்டக்கூடிய பாகத்தையெல்லாம் சிலர் தங்களுக்குச் சொந்தமென்று வேலி கட்டிக் கொண்டனர் பலருக்கு ஆகாசமே உடைமை. வாயு ஆகாரம். இதற்கு மருந்து என்னவென்றால் 'எல்லோரும் சமானம், அண்ணன் தம்பிபோல' என்ற புத்தி உண்டாய் ஏழைகள் வயிறு பசிக்காமல் செல்வர்கள் காப்பாற்ற வேண்டும்.
அது முடியாவிட்டால், ஐரோப்பாவில் 'சோஷலிஸ்ட்' கட்சியார் சொல்வது போல நிலத்தை ஸகலருக்கும் பொதுவென்று ராஜ்யவிதி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
மனிதர் அத்தனை பேருக்கும் போதுமான ஆகாரம் பூமி தேவி கொடுக்கும். பூமிதேவியின் பயனை நேரே கையாளத் தெரியாமல் பொறாமையாலும், அறியாமையாலும், தாறுமாறாக விழல்படுத்தி, சோறு தேடும் இடத்தில் சோறு தேடாமல்,ஒருவர்க் கொருவர் கொல்ல வழி தேடி, பலர் வயிறு வாடச் சிலர் வயிறு ஜீர்ண சக்தியில்லாமல் போக, மனிதர் பரிதாபமாகக் காக்கையிலும் கடைப்பட்ட வாழ்வு வாழ்ந்து வீணே நசித்துப் போகிறோம். 'ஏழைகள் வருந்தினால் நமக்கென்ன?' என்றுநினைப்பவர் பரமமூடர். பலர் சௌகரியப்படும் வரை சிலர் சௌகரியம் அடைதல் இந்த உலகத்தில் சாத்தியமில்லை. பொருளாளி நல்ல உடுப்புகள் அணிந்து கொண்டு தெருவில் உலாவப் போவதையும், அவனுடைய கன்னத்தில் சதை உப்பியிருப்பதையும், அவனுடைய ஏவலாட்களின் தொகையும் சிறுமையும், மேற்படி பொருளாளி பிறரை அவமரியாதை செய்வதையும் கண்டு மயங்கிப் போய் அவன் பரமானந்த நிலையிலிருப்பதாக ஏழை நினைக்கிறான். அது தவறு. அவன் மனத்தில் ஒளிந்து கிடந்து அவன் உயிருக்கு நரகவேதனை செய்யும் துயரங்களை ஏழை அறியமாட்டான். ஒரு வகுப்பின் மனம் மற்றொரு வகுப்புக்குத் தெரியாமலும் ஒருவனுடைய உள்ளம் மற்றொருவனுக்குத் தெரிய இடமில்லாமலும், மனுஷ்ய நாகரீகம் அவ்வளவு மூடத்தனமான நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
----------
ஓம் சக்தி - வறுமையின் பயன்
ஏழையின் அழுக்குத் துணியையும், அழுக்குடம்பையும், சிரைக்காத முகத்தையும் பார்த்துப் பொருளாளியின் குழந்தைகள் மேற்படி ஏழை தமது மனுஷ்ய பதவிக்குத் தாழ்ந்த பன்றி, நாய், மாடு வகுப்பைச் சேர்ந்தவன் என்று நினைக்கிறார்கள் ஐரோப்பாவில் ஏழைக்கும் பொருளாளிக்கும் விரோதம் முற்றிப்போய், உள் நாட்டுச் சண்டைகள் நேரிட்டும், அப்படி நேரிடாதபடி தடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் ஜனங்களை ஒன்று சேர்க்கும் பொருட்டாக வெளிநாடுகளின் மீது சில ராஜாக்கள் போர் தொடங்க, கண்டங்களில் போர் பரவியும், பூமண்டலம் தூள் தூளாகிறது. கிழக்குத் தேசங்களிலும், யுத்தமில்லாமல் சமாதானத்துடன் இருக்கும் இடங்களிலும் - திருஷ்டாந்தமாக நமது தமிழ் நாட்டுப் பறையர்கூட கண் விழித்துத் தாங்கள் மனிதர் என்பதைத் தெரிந்துகொண்டு மற்ற ஜாதியாருக்குத்தாங்கள் சமானமென்று சபை கூட்டித் தீர்மானம் செய்கிறார்கள். மந்திரி மாண்டேகுவிடம் முறையிட்டார்கள். கிழக்குத் தேசங்களில் சமாதான எல்லைகளிலே கூட ஏழைகள் கண் திறந்து பொருளாளிகளை எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
சுருங்கக் கூறுமிடத்து, சோற்றுக்காக மனிதர் ஒருவர்க்கொருவர் செய்து கொள்ளும் அநியாயம், நாய்களும் பன்றிகளும் தமது ஜாதிக்குள்ளே செய்யும் வழக்கமில்லை என்பது உலகப் பிரசித்தமான விஷயம். ஆங்கில பாஷையில் (Lord Byron - லார்டு பைரோன்) என்ற மகா கவி ஒரு சமயத்தில் மனிதரை 'நாய்கள்' என்று கூறினார். பிறகு, உண்மையில் மனிதரைக் காட்டிலும் நாய் ஜாதி மேம்பட்ட தாகையால் மனிதரை நாய்களே என்று சொல்லியதிலிருந்து நாய் ஜாதிக்கு அவமரியாதை செய்வதாக ஏற்படுமாகையால், அதை மாற்றி 'ஏ மனிதரே' என்று கூப்பிட்டார்.
---------
ஓம் சக்தி - தீர்ப்பு
அன்புதான் இதற்கெல்லாம் தீர்ப்பு. எல்லா மனிதருக்கும், ஆணுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும், வெள்ளைக்கும், மஞ்சளுக்கும், செம்புக்கும், கருநிறத்துநீக்ரோவருக்கும் சகலருக்கும் உள்ளே பரமாத்மா பரம புருஷனாகிய நாராயணனே அந்தர்யாமியாக நின்று வெளித் தொழில்களை நிகழ்த்துகிறான். ஆதலால் மானிடரே, சகோதர உணர்ச்சியே தீர்ப்பு. சகோதர உணர்ச்சியைப்பற்றிக் கவிதைகள் பாடுவதும், நீதி நூல்கள் புகழ்வதும், வர்த்தமானப் பத்திரிகைகள் கர்ஜனை செய்வதும் இவ்வுலகத்தில் சாதாரணமாக இருக்கிறது. நடையில், எந்தக் கண்டத்திலும் எந்த மூலையிலும் அந்த முயற்சி காணப்படவில்லை. அதுநடைக்கு வரவேண்டும். கண்ணில்லாதவன் வான சாஸ்திரம் படிக்க முடியாது. இன்பமோ அன்புலகத்தைச் சேர்ந்த பதார்த்தம் ஆதலால் அன்பில்லாவிடின் இன்பமில்லை. இன்பத்தைத் தேடித்தேடி எங்கும் எப்பொழுதும் எதனினும் காணாமல் வருந்துகிற மானிடரே, கேளுங்கள்.
அன்புண்டானால் இன்பமுண்டு என்பதைப் புத்தபகவான் கண்டுபிடித்துச் சொன்னார். அந்த யுக்தியின் மகிமையை நேரே மனிதர் தெரிந்துகொள்ளாமல், அவர் காட்டிய பயனை அடையாமலே இருந்து வருகிறார்கள். அன்பு, கொள்கையில் இருந்தால் போதாது; செய்கையில் இருக்க வேண்டும். உன்னிடம் ஒரு கோடி ரூபாய் இருந்தால் தேச நன்மைக்காகக் கொடுத்துவிட்டு நீ ஏழையாகிவிடத் துணிவாயானால், நீ உன் தேசத்தின்மீது அன்புடையவனாகக் கருதப்படுவாய். உன்னுடைய குழந்தை உயிரைக் காக்கும் பொருட்டாகப் புலியின் வாயில் நீ போய் முதலாவது கையிடத்துணிவாயானால், நீ குழந்தையிடம் அன்புடையவனாகக் கருதப்படுவாய். பறையனுக்கும் போஜனம் செய்வித்துப் பக்கத்தில் வைத்துக்கொண்டு சாப்பிட்டால், நீ மனுஷ்யனிடம் அன்புடையவனாக விளங்குவாய்.
---------
ஓம் சக்தி - யேசு கிருஸ்துவின் வார்த்தை
யேசுவினிடம் ஒரு நாள் ஒரு மனிதன் வந்து "ஸ்வாமி எனக்கு நித்ய வாழ்வு வேண்டும். அதற்கு உபாயம் என்ன?" என்று கேட்டான்.
அதற்கு யேசு சொன்னார்:- "ஈசன் கட்டளைகள் பத்து. அவற்றின்படி நட. விகபசாரம் பண்ணாதே, சொல்லாதே, திருடாதே, பொய்ச்சாட்சி சொல்லாதே, வஞ்சனை பண்ணாதே, தாய் தந்தையரைப் போற்று" என்று. வந்த மனிதன்: "நான் இந்த விதிகளை எல்லாம் தவறாமல் நடத்தி வருகிறேன்" என்றான். அப்போது யேசு கிருஸ்து: "ஒரு குறை இன்னும் உன்னிடத்திலே இருக்கிறது. வீட்டுக்குப்போய் உன்னுடைய சொத்தை எல்லாம் விற்றுப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்துவிடு. உனக்கு மோக்ஷச் செல்வம் உண்டாகும். சிலுவையை (அதாவது வேள்வி விரதத்தைக்) கைக்கொண்டு என்னுடனே வா" என்றார்.
வந்த மனிதன் இந்த வார்த்தையைக் கேட்டு மிகவும் துயரத்துடன் திரும்பிப்போனான். அவன் பெரிய பணக்காரன். அவ்வளவையும் ஏழைகளிடம் கொடுத்து விட்டுச் சிலுவையைத் தூக்கிக்கொண்டு யேசுவின் பின்னே போவதில் அவன் மனத்திற்கு இன்பந்தோன்றவில்லை. அப்போது யேசு கிருஸ்து பக்கத்திலிருந்த தமது சீடரை நோக்கிச் "செல்வமுடையார் மோக்ஷ ராஜ்யத்தில் புகுதல் மிகவும் அரிது" என்றார். சீடரெல்லாம் இதைக் கேட்டு வியப்பெய்தினர் ஸஹஜந்தானே?பணம் நிரம்ப வைத்திருப்போர் யார்? ராஜா, மந்திரி, ஸேனாதிபதி, வியாபாரி, ஜமீன்தார், கோயிலதிகாரிகள், மடாதிகாரிகள் - இத்தனை பேருக்கும் மோக்ஷம் ஸந்தேஹமென்று சொன்னால் கேட்போருக்கு வியப்புண்டாவது ஸஹஜந்தானே? குருக்கள் கூட நரகத்துக்குத்தானா போகவேண்டும்? யேசுகிருஸ்து பின்னும் சொல்லுகிறார்:-"மக்களிலே செல்வமுடையோர் ஈசனுலகத்திற்குள்ளே புகுதல் மிகவும் அரிது. ஊசித்தொளையில் ஒட்டகை நுழைவதைக் காட்டிலும், செல்வன் மோக்ஷத்துக்குள் நுழைவது கடினம்" என்றார். அப்போது பேதுரு என்ற சீடன் சொன்னான்: "நாங்கள் அனைத்தையும் விட்டு உம்முடன் வந்திருக்கிறோம்" என்று. அப்போது "என் பொருட்டாகவும் வேதத்தின் பொருட்டாகவும் எவனொருவன் வீட்டையேனும், உடன் பிறந்தாரையேனும், தாய் தந்தையரையேனும் விட்டு வருகிறானோ, அவனுக்கு அவையனைத்தும் நூறு பங்கு பெருகிவரும். இஹத்தில் உடன்பிறந்தார், தாய்தந்தையர், பெண்டு பிள்ளைகள், பூமி-எல்லாம் திரும்பக் கிடைக்கும்; ஆனால் கொடுமை அனுபவிக்கவேண்டும். பரத்தில் நித்யவாழ்வு கிடைக்கும்; ஆனால் இப்போது முதற்பட்டிருப்போர் கடைப்படுவார்கள்" என்று யேசு சொன்னார்.
மேற்படி கதையை ஸ்ரீ காந்தி எடுத்துக் காட்டிச் சில தினங்களின் முன்பு பிரயாகையிலே ஒரு அர்த்த சாஸ்திர சபையின் முன்பு செய்த பிரசங்கத்தின் கருத்து என்னவென்றால்:- 'ஐரோப்பியர் செல்வம் தேடுவதையே ஒரு பெரிய தர்மமாக நினைத்துவிட்டார்கள். அப்படி நினைத்தபடியால், அவர்களுக்குப்பலவித அஸௌகர்யங்கள் நேரிட்டன. நாம் செல்வத்தைப் பெரிதாக வைக்கக் கூடாது' என்பதேயாம்.
ஸ்ரீ மான் காந்தி சொல்லுகிறார்:
இது கொண்டே முற்காலத்திலும் பணந்தேடும் காரியங்களுக்கு ஒரு வரம்பு ஏற்படுத்தினார்கள். லௌகீக ஆசையெல்லாம் நிறுத்திவிடவேண்டுமென்று நான் சொல்ல வில்லை. பொருள் தேடுவதையே நோக்கமாகக் கொண்ட கூட்டமொன்று நம்முள்ளே இருக்கலாம். ஆனால் அந்த நோக்கம் ஸர்வ உந்நதமன்று.
மேற்குத் தேசத்தார் தங்களுடைய அபிவிருத்தியைப் பவுன், ஷில்லிங், பென்ஸ், கணக்குப் போட்டுப் பார்க்கிறார்கள்; அமெரிக்காவின் செல்வத்தை அளவெடையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
"அங்கே எல்லாத் தேசத்தாருக்கும் அமெரிக்காவைக் கண்டால் பொறாமை. நமது தேசத்தில் சிலர் அமெரிக்காவைப்போல நாமும் செல்வந் தேடுவதே சரியென்றும், ஆனால் அந்தமாதிரி நாம் வேலைசெய்ய வேண்டாமென்றும் சொல்லுகிறார்கள். இந்த முயற்சி ஈடேறாது. ஒரு மனிதன் ஏக காலத்தில் உத்தமம், மத்திமம், அதமம் என்று மூன்று நிலைமையிலும் இருக்க முடியாது....யந்திரசாலை, ஆலை இவற்றால் என்ஜின் புகையேறிய நாட்டிலே தேவர்கள் இரார் நவீன யந்திர தந்திரங்களினாலும் அவற்றால் விளையும் செல்வத்தினாலும் இன்ப முண்டாகா."
இங்ஙனம் ஸ்ரீமான் காந்தி யேசுநாதரை மாத்திரமே யல்லாமல் முஹம்மது, நானக், கபீர், சைதன்யர், சங்கராசார்யார், தயாநந்தர், ராமகிருஷ்ணர் போன்ற ஞானிகளை எல்லாம் காட்டி, இவ்வனைவரும் வறுமையை விரதமாகக் கொண்டு மேன்மை பெற்றதையும், உலகத்துக்கு நல்ல வழி காட்டியதையும் ஞாபகப் படுத்துகிறார். ஆதலால் வறுமை விரதமே உயர்வு என்கிறாரா? ஒரேஅடியாக அப்படியும் சொல்லவில்லை. "பொன்னைக் காட்டிலும்" அதிக உண்மை காட்டவேண்டும்; அதிகாரத்தைக் காட்டிலும் அதிக தீரம், சுயநலத்தைக் காட்டிலும் அதிக ஈகை இவை வேண்டும். நமது வீடுகளையும், அரண்மனைகளையும் கோவில்களையும் பணக்கோலம் குறைவாகவும் குணக்கோலம் அதிகமாகவும் விளங்கச்செய்வோமானால், நம்மிடத்தில் பாரமான சைன்யமில்லாமலே எதிர்த்து வரும் சேனைக் கூட்டங்களைத் தடுக்கலாம்" என்று ஸ்ரீமான் காந்தி சொல்லிவருவதில் எனக்குப் பெரும்பாலும் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது. தெய்வமில்லை என்று எந்தத் தவறு செய்தாவது பணந் தேடுவோர் பணத்தையே தெய்வமென்று கொண்டோர். இவ்வினத்தார் எல்லாத் தேசங்களிலும் இருக்கிறார்கள். இவர்கள் மனத்திலே தம்மை மேதாவிகளாக நினைத்திருக்கிறார்கள். இவர்களுடைய மேதாவித் தனம் மடத்தனம். 'தெய்வத்தை நம்பி, எப்போதும் உண்மை சொல்ல வேண்டும்; பயப்படக்கூடாது. எது நியாயமென்று தோன்றுகிறதோ, அதை அச்சமில்லாமல் செய்து முடிக்க வேண்டும்'என்று காந்தி சொல்வதை நான் வேதவாக்காக ஒப்புக் கொள்ளுகிறேன். தெய்வத்தின் 'அருள் பெற்றால் மற்றச் செல்வங்களெல்லாம் கூடி வரும்' என்று யேசுகிருஸ்து சொல்லியதைக் காந்தி எடுத்துக் காட்டுகிறார். அதுவும் வேதவாக்கியமாம். ஆனால் அவர் சொல்வது துறவு நெறி. அது சிலருக்குச் சில காலங்களில் பயன்படலாம். இக்காலத்தில் பலருக்கு அது தீமை உண்டாக்கும். தெய்வத்தை எதிர்த்துச் செல்வம் தேடுதல் தீமை என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் தெய்வத்தை நம்பி உடனே செல்வம் சேர்க்க வேண்டும். இது என்னுடைய கொள்கை. எனக்குத் தெரிந்தவரை, ருக்வேதம் இது போலவே சொல்லுகிறது.
--------
ஓம் சக்தி - இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை
[20-6-20, ஞாயிற்றுக்கிழமை மாலையில், பொட்டல் புதூரிலே தெற்குப் புது மனைத் தெருவில், எல்லா வகைகளிலும் பெருமை பொருந்திய ஒரு முஸ்லீம் ஸபையின்முன்னே, "இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை" என்ற விஷயத்தைக் குறித்து ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதி செய்த பிரசங்கத்தின் ஸாரம்.]
இன்று மாலை எடுத்துக்கொண்ட விஷயத்தைப் பற்றிப் பேசு முன்பு, நான் அல்லாவின் மீது பாடிக்கொணர்ந்திருக்கும் தமிழ்ப் பாட்டை இங்கு வாசித்துக் காட்ட அனுமதி தரும்படி வேண்டுகிறேன். ஏற்கெனவே அரபி பாஷையில் 'பாத்திஹா' (ஜபம்) ஓதி முடிந்து விட்டது. அதற்கு அனுஸரணையாக இந்தத் தமிழ்ப் பாட்டைப் பாடுகிறேன்:
எனக்கு முதல் முதல் இஸ்லாம் மார்க்கத்திலே அன்புண்டானதின் காரணம் பின்வருமாறு:-
பல வருஷங்களின் முன்பு நான் ஒரு ஆங்கிலேய பண்டிதர் எழுதிய புஸ்தகமொன்றைப் படித்துக் கொண்டிருந்தேன்.அதில் முஹம்மது நபியின் சரித்திரத்தைக் குறித்த சில விஷயங்கள்காணப்பட்டன. அவற்றைப் படித்துப் பார்த்தபோது, நான் அற்புதமுண்டாய்ப் பரவசமடைந்தேன்.
மக்கா நகரத்தில், பூஜாரிகளின் ஸபை கூடியிருக்கிறது. பிரமாண்டமான ஸபை. நாட்டிலுள்ள பூஜாரிகள் அத்தனை பேரும் சேர்ந்து கூடும் வருஷாந்தரக்கூட்டம் திருவிழாக் காலத்தை ஒட்டி நடந்தது; முஹம்மது நபி மேற்படி பூஜாரிகளின் வம்சத்தில் பிறந்தவர். அரபி தேசத்து ஜனங்கள் அந்தக் காலத்தில் விக்ரஹாராதனையிலும் பல தேவ உபாஸனையிலும் தற்காலத்தில் தணிந்த ஜாதி ஹிந்துக்கள் எத்தனை மூழ்கிக் கிடக்கிறார்களோ, அத்தனை மூழ்கிக் கிடந்தார்கள். அவர்களிடையே முஹம்மது நபியின் குடும்பத்தாரகோவிற் குருக்களையும் பட்டர்களையும் ஒத்திருந்தனர். இவர்களுடைய வைதிகக் கோஷ்டியின் ஸபைக்கு நடுவே முஹம்மது நபி எழுந்து நின்று சொல்லுகிறார்:- நான் அல்லாவை நேரே பார்த்திருக்கிறேன். அவர் என்னைத் தமது முக்கிய பக்தராகவும் பிரதிநிதியாகவும் நியமனம் செய்திருக்கிறார். நீங்கள் இனிமேல் அவரைத் தொழுங்கள். அவரை மாத்திரம் தொழுதால் போதும். கடவுள் ஒருவர்தான் இருக்கிறார். பல ஈசுவரர் இல்லை. ஈசனைத் தவிர ஈசன் வேறில்லை. லா இலாஹா இல் அல்லா. அல்லாவைத் தவிர வேறு அல்லா கிடையாது. (அரபி பாஷையில் அல்லா என்ற பதத்திற்குக் கடவுள் என்று அர்த்தம்.)அவர் நம்மைப்போல தோலுடம்பும் கைகால் முதலிய உறுப்புக்களு முடையவரல்லர். அவரைச் சிலைகள் வைத்துத் தொழுவதிலும் அவருக்கு உங்களுடைய ஆகாரங்களை நைவேத்தியம் பண்ணுவதிலும் பயனில்லை. அவர் எல்லாவற்றையும் படைத்து எல்லாவற்றையும் இயக்கிக்காத்து எல்லாவற்றையும் வடிவுமாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் எல்லாவற்றையும் தம்முடைய உடம்புகளாகவும் தம்முடைய ரூபங்களாகவு முடையவர். அறிவு வடிவமாக நிற்பவர். அருள் வடிவமாக நிற்பவர். அவரை மனமாகிய கோயிலில் நிறுத்தி, வீரியம் பக்தி என்ற பூக்களால் அர்ச்சிப்பதேசரியான பூஜை. இடைவிடாமல் அசையாமல் அவரிடம் தீராதமாறாத பக்தி செலுத்துங்கள். அவ்விதமான பக்தி "இஸ்லாம்"என்று சொல்லப்படும். இந்த இஸ்லாமைத் தரித்திருப்போர் நித்தியானந்த வாழ்க்கையாகிய முக்தி வாழ்க்கையை எய்துவார்கள்.ஆதலால், நீங்கள் இந்தப் புராதனக் கிரியைகளையும் கொள்கைகளையும் விட்டுவிட்டு என் மதத்தில் சேர்ந்து அல்லாவின் திருவடி நிழலை அடைந்து வாழ முற்பட்டு வாருங்கள்" என்று முஹம்மது நபி யாண்டவர் திருவாய் மலர்ந்தருளினார்.
இதைக் கேட்ட மாத்திரத்தில் அங்கிருந்த பெருச்சாளிக் குருக்களெல்லோரும் தங்கள் சிஷ்யர் ஸஹிதமாக முஹம்மது நபியைப் பரிஹாஸம் பண்ணினார்கள். அந்தச் சமயத்தில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களின் மருமகனாகிய அலி என்பவர் எழுந்து "மாமா, உங்கள் கொள்கையை யார் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, நான் நம்புகிறேன். லா இலாஹா இல் அல்லா முகம்மதூர் ரஜூல் உல்லா, அல்லாவைத் தவிர வேறு கடவுளில்லை. அவருக்குச் சிறந்த நபி முஹம்மது" என்று பிரதிக்கினை செய்து கொடுத்தார். இது ஒரு செய்தி.
இரண்டாவது செய்தி, முஹம்மது நபியைத் தமது குமஸ்தாவாகப் பல வருஷம் வைத்திருந்த பிறகு அவருக்கு மாலையிட்டவராகிய கதீஜா பீவியம்மை அவருடைய மதத்தில் சேர்ந்து கொண்டது. ஒருவன் தான் நேரே கடவுளைப் பார்த்ததாகவும் அதனின்றும் தெய்வங்கள் தன்னிடத்தில் விளங்குவதாகவும் வெளியூராரிடம் சொல்லி, அவர்களை நம்பும்படி செய்தல் எளிது. இரவு பகல் கூடவே யிருந்து, நீ நோய் வேதனை பொறுக்கமாட்டாமல் அழுவதையும் இன்னும் உன்னுடைய பலஹீனங்கள், அதைர்யங்கள், அச்சங்கள், அநீதிகள், குரூரங்கள், பொறாமைகள், அதர்மங்கள், குறைகள் எல்லாவற்றையும் ஸஹிப்போராகிய உன் சுற்றத்தாரும், அத்யந்த நண்பர்களும், பக்கத்து வீட்டாரும் உன்னைக் கடவுளின் அருளும் அம்சமும் அடைந்த மஹானென்று நம்பவேண்டுமானால், நீ உண்மையிலேயே தெய்வத்தைக் கண்டால்தான் முடியும். மற்றபடி ஏமாற்றலினாலும், வேஷங்களாலும், நடிப்புகளாலும் இவர்களை நம்பும்படி செய்தல் சாத்தியமில்லை. இதுபற்றியே,இங்கிலீஷில் "எந்த மனிதனும், தன் சொந்த ஊரில்"தீர்க்கதரிசியாக மாட்டான்" என்றொரு வசனம் சொல்லுகிறார்கள்.
முஹம்மது நபியை முதல் முதல் அலியும், அதை காட்டிலும் ஆச்சர்யந் தோன்றும்படி, கதீஜாபீவியும் கடவுளின் முக்கிய பக்தனென்றும், தெய்வ அருள் பெற்றவரென்றும் பூமண்டலத்தில் கடவுளுடைய பிரதிநிதியாக அவதரித்தமஹானென்றும் அங்கீகாரம் செய்து கொண்டதைக் கவனிக்குமிடத்தே, அவர் நிகரில்லாத ஞானி யென்பதும் பக்தகுல சிரோமணி யென்பதும் மிகத் தெளிவாக விளங்குகின்றன.
மக்கத்தில் முஹம்மது நபிக்கு அநேகர் சீடராகச் சேர்ந்து விட்டார்கள். அவருடைய மதம் நாளுக்கு நாள் பிரபலமாகத் தொடங்கிவிட்டது. இதைக் கண்டு பழைய விக்ரஹாராதனைக்காரருக்குப் பொறாமையும் அச்சமும்மிகுதிப்படலாயின. மக்கத்து அதிபதி, நபியவர்களையும் அவருடைய முக்கிய நண்பர்களையும் சீடரையும் பிடித்துச் சிறையிலிடும்படி, தன் சேவகரிடம் கட்டளையிட்டான். இந்தச் செய்தி நபி ஆண்டவனுடைய செவிக்கு எட்டி விட்டது. இது 622 கி.பி. வருஷத்தில் நடந்தது. அப்பால், சில நண்பரின் வேண்டுகோளுக்கும் அல்லாவின் உத்தரவுக்கும் இணைந்த முஹம்மது ஒரே ஒரு சீடருடன் மதினாவுக்குப் புறப்பட்டார். போகிற வழியில் காடு; இவ்விருவரும் தனியே சென்று கொண்டிருந்தனர். இவர்கள் ஊரை விட்டுத் தப்பிய செய்தியறிந்து, மக்கத்து அதிபதி இவர்களின் பின்னே ஒரு குதிரைப் படையை அனுப்பினான். இவ்விருவரும் காட்டுவழியே போகையில், பின்னே குதிரைப்படைவரும் சத்தம் இவர்களுடைய காதிற் பட்டது. அங்கொரு புதருக்குள்ளே போய்ப் பதுங்கிக் கொண்டார்கள். குதிரைப் படையின் பாத ஒலி மிகவும் சமீபத்தில் கேட்டது. அப்போது நபியுடன் இருந்த "சீடர்:- "ஐயோ, இனி என்ன செய்யப் போகிறோம்? ஏது, நாம் தப்புவது கிடையாது. நம்மை இவர்கள் பார்த்துதான் போடுவார்கள். மக்கத்திற்குப் போனால் நம்மை வெட்டிக் கொல்வார்களோ, தூக்குத்தான் போடுவார்களோ!" என்று சொல்லிப் பலவாறு பரிதபிக்கலானான். அப்போது முஹம்மது நபி (ஸல்லல்லா ஹூ அலைஹி வஸல்லம்) அவர் சொல்லுகிறார்:-
"கேளாய், நண்பனே; நான் இந்த உலகத்தில் அல்லாவின் காரியஸ்தனாக வேலை செய்து வருகிறேன். அல்லாவினால் எனக்கு மானுஷ லோகத்தில் நிறை வேற்றும்படி விதிக்கப்பட்டிருக்கும் காரியங்களெல்லாம் நிறைவேறி முடியும் வரை, என்னைஉலகத்து மனனர்களெல்லோரும் ஒன்றுகூடிக் கொல்ல விரும்பினாலும் எனக்கொரு தீங்கும் வரமாட்டாது. என் தலையில் ஆயிரம் இடிகள் சேர்ந்து விழுந்தபோதிலும் எனக்கு மரணம் நேரிடாது. அல்லா ஸர்வ வல்லமை யுடையவர். அவருடைய சக்திக்கு மேற்பட்ட சக்தி இந்தஜகத்தில் வேறில்லை. ஆதலால் எனக்குப் பயமில்லை. என்னுடன் இருப்பதனால் உனக்கும் ஆபத்து வராது. நீயும்பயப்பட வேண்டிய அவசியமில்லை" என்றார்.
அப்பால் அந்தக் குதிரைப் படை அவர்களைப் பாராமலே போய்விட்டது.
இந்தச் சமாசாரத்தை நான் வாசித்துப் பார்த்தவுடனே என் மனதில் முஹம்மது நபியிடமிருந்த மதிப்பு ஆயிரம் மடங்கு மிகுதியாயிற்று ஸாதாரண காலங்களில் தைர்யத்துடனிருப்பது ஸுலபம். ஆபத்து நேரே தலையை நோக்கிவரும்போது "கடவுள் துணை செய்வார். எனக்குப் பயமில்லை" என்று மனதுடன் சொல்வோன் உண்மையான தெய்வ பக்தன். தெய்வ பக்தி ஒன்றைத் தவிர வேறெந்த சக்தியும் மனிதக் குண்டின் முன்னே தைர்யம் கொடுக்காது. சீறி வரும் பாம்பை நோக்கி அஞ்சாமல் நகைக்கவல்ல தீரர் கடவுளின் கருணை பெற்றோரேயாவர். மற்றப்படி வேறெந்த பலமும் அவ்விதமான தைர்யத்தைத் தராது. "பாம்பென்றால் படையும் நடுங்கும்." இன்னும், மதீனாவுக்கு நபி சென்ற பிறகு இதுவரை பல தடவைகளில் மக்கத்தாரின் கொரேஷ் படைகள் எதிர்த்து வந்தன. முஹம்மது நபியிடம் சேர்ந்தவர்கள் தக்க ஸைன்யப் பயிற்சி பெறவில்லை. பயிற்சி பெற்று வந்த படைகளைப் பயிற்சியற்ற மனிதர்களைத் துணைக்கொண்டு முஹம்மது நபி வென்றார். 'கலங்காத நெஞ்சுடைய ஞான தீரமும் அழியாத நம்பிக்கையும்' அவரிடத்தே யிருந்தன. ஆதலால் அவருக்கு
இடையிடையே நான் என் மனத்திற்குள் முஹம்மது நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களைப்பற்றிச் சித்திரம் போட்டுப் பார்ப்பது வழக்கம். நடுப்பாலைவனத்தில், நள்ளிரவிலே தனி மணல் வெளியிலே, ஒட்டகையின் மீது தனியாக ஏறிக்கொண்டு போகிறார். அல்லது, அங்கொரு குன்றின் மேல் ஏறி நிற்கிறார். கேள்வியாலும், நெடுங்காலத்துப் பக்தியாலும், நிகரற்ற அன்பினாலும், ஞானத்தினாலும் பக்குவப்பட்ட இவருடைய ஹ்ருதயம் அப்படிப்பட்ட இடத்தில் அல்லாவை நாடுகிறது. வேறு நினைப்புக்கு இடமில்லை.
அப்போது அங்கு ஞானவொளி வீசிற்று; நபி அல்லாவைக் கண்டார். சுகப் பிரம்ம ரிஷிக்கு நேர்ந்த அனுபவம் முஹம்மது நபிக்கு எய்திற்று.
அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ எங்கும் ஏன் ஏன் என்ற தென்ன, பராபரமே என்று தாயுமானவர் பாடியிருக்கிறார்.
இந்தக் கதை எப்படியென்றால், சுகப் பிரம்ம ரிஷிகாட்டு வழியாகப் போய்க் கொண்டிருக்கையில் கடவுளைப் பார்க்க வேண்டுமென்ற தாகமேலீட்டால், "கடவுளே கடவுளே" என்று தறிக்கொண்டு போனாராம். அப்போது காட்டிலிருந்த கல், மண், மணல், நீர், புல், செடி, மரம், இலை, பூ, காய், காற்று, ஜந்துக்கள் எல்லாவற்றினின்றும்,"ஏன், ஏன்" என்ற மறுமொழி உண்டாயிற்று. அதாவது, கடவுள் ஞானமயமாய் எல்லாப் பொருள்களிலும் நிரம்பிக் கிடப்பதைச் சுக முனிவர் கண்டார் என்பது இக்கதையின் பொருள். முஹம்மது நபி மஹா ஸுந்தர புருஷர், மஹா சூரர், மஹா ஞானி, மஹா பண்டிதர், மஹா பக்தர், மஹா லௌகீக தந்திரி, வியாபாரமானாலும், யுத்தமானாலும் முஹம்மது நபிகவனித்தால், அந்த விஷயத்தில் வெற்றி மிகவும் உறுதி. ஆதலால் அவர் மிகவும் அபிமானிக்கப்பட்டார்.
எனினும், புதிய மதமொன்று கொண்டு வந்ததினின்றும் அவர் சுற்றத்தாரும் அத்யந்த நண்பர்களும் பகைமை செலுத்தலாயினர். ஆனால், நபி பொருட்டாக்கவில்லை முஹம்மது நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள், உலகத்தின் பொது நன்மைக்கும் தர்மத்திற்கும் நீதிக்கும் ஸத்தியத்திற்கும் அல்லாவிற்கும்முன்னே, தம்முடைய சொந்த ஸுகங்களையும், ஸௌகர்யங்களையும், வாழ்வையும், செல்வத்தையும், அதனால் விளையும் பெருமைகளையும், இன்பங்களையும், ரக்ஷணைகளையும், உயிரின் பாதுகாப்பையுங்கூடச் சிறிய பொருளாகக் கருதினர்.
இவரிடத்தில் இத்தனை உறுதியான பக்தியிருப்பதைநோக்கியே, அல்லா இவரைத் தமக்கு மிகவும் பிரியமான நபியாகத் தெரிந்தெடுத்தார். இங்கு ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதி முஹம்மது நம்பியவர்களின் சரித்திரத்தைச் சுருக்கமாக எடுத்துரைத்தார். ஆனால் ரவண ஸமுத்திரத்திலே இஸ்லாம் மதத்தின் மஹிமையைக் குறித்துச் செய்த உபன்யாஸத்தில்,அவ்விஷயம் சொல்லப்பட்டு ஏற்கனவே மித்திரனில் வெளிப்பட்டு இருப்பதால், இங்கு மீண்டும் ப்ரசுரம் செய்யவில்லை.
அரபியா தேசத்தில் மக்கா நகரத்தில் அப்துல்லா என்ற மஹானுக்கு அவருடைய தர்ம பத்தினியாகிய ஆமீனாவுக்கும் குமாரராக கி.பி. 570-ஆம் ஆண்டில் நமது நபி ஜனித்தார். புஸ்தகப் படிப்புக் கிடையாது. கேள்வியால் மஹா பண்டிதரானார்: ஸஹவாஸத்தால் உயர்ந்த ஞானியானார்; நிகரில்லாதபக்தியால் அரசனும், கலீபும் தீர்க்க தரிசியுமானார். மக்கத்தில் பெருஞ் செல்வியாகிய கதீஜா பீவியையும், வேறு எட்டு ஸ்திரீகளையும் மணம் புரிந்தார். தம்முடைய ஒன்பது பத்தினிகளிலே அபூபக்கரின் குமாரியான பீவியைப் பிரதானநாயகியாகக் கொண்டிருந்தார். நாற்பதாம் ஆண்டில் தம்மை ஈசன் நபியாக்கிவிட்டதாக உலகத்துக்குத் தெரிவித்தார். கி.பி.632-இல் இந்தமண்ணுலகை விட்டு முஹம்மது நபி வானுலகம் புகுந்தார்.
மக்கத்தை விட்டு, இளமையிலேயே இவர் வியாபாரத்துக்காக வெளி நாடுகளில் ஸஞ்சரிக்கும்படி நேர்ந்த ஸமயங்களில், யூத கிருஸ்தவபண்டிதர்களைக் கண்டு அவர்களுடைய மதக் கொள்கையைப்பற்றி விசாரணை செய்வது வழக்கம். அதனின்றும் விக்ர ஹாராதனை விஷயத்திலும் பல தேவர் வணக்கத்திலும் இவருக்குப் பற்றுதலில்லாமற் போக ஹேது உண்டாயிற்று. ஏகேசுவர மதத்தைக் கைக்கொண்டார். யூதருக்கும் கிருஸ்தவருக்கும் பொதுவாகிய "பழைய ஏற்பாடு" என்ற பைபிலின் பூர்வ பாகத்தை இவர் உண்மையாகவே அங்கீகாரம் செய்து கொண்டார். கிருஸ்தவ நாதரையும் இவர் ஒரு சிறந்த நபியாகக் கொண்டார்; கடவுளின்அவதாரமாக ஒப்புக்கொள்ளவில்லை. விக்ரஹங்களிடத்தே கடவுளைக் காட்டி வணங்குதல் பொருந்தாத கார்யமென்று யூதருக்கும் கிருஸ்தவருக்கு ம் தோன்றியது போலவே, ஒரு மனிதன் பக்தி ஞானங்களில் எவ்வளவு சிறப்பெய்திய போதிலும்,அவன் கடவுளை நேருக்கு நேரே கண்டறிந்த வரையிலும், அதுபற்றி அவனை மிக உயர்ந்த பக்தனென்றும் முக்தனென்றும் போற்றலாமேயல்லாது, மனித வடிவத்தில் ஸாக்ஷாத் கடவுளையே சார்த்துதல் பொருந்தாதென்று முஹம்மது நபி எண்ணினார் போலும். இந்த அம்சத்தில் என்னுடைய சொந்தக் கருத்துப் பின்வருமாறு:-
இந்த உலகம் முக்காலத்திலும் உள்ளது; இது அசைகிறது; அண்டங்களாக இருந்து சுழன்றோடுகிறது; காற்றாகத் தோன்றி விரைகின்றது; மனமாக நின்று சலிக்கிறது; ஸ்தூல அணுக்களும் ஸுக்ஷ்ம அணுக்களும் ஸதா மஹா வேகத்துடன்,மஹா மஹா மஹா மஹா வேகத்துடன், இயங்கிய வண்ணமாகவேஇருக்கின்றன. இந்த உலகத்திலிருந்துகொண்டு இதனை அசைக்கிற சக்தியையே கடவுளென்கிறோம். எல்லாம் அவன். உலகத்தின் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள்.
அவனுடைய நிஜ வடிவம், அதாவது, பூர்வ வடிவம்யாது? சைதன்யம் அல்லது சுத்தமான அறிவே கடவுளின் மூலரூபம். மனிதருடைய ஸாதாரணச் செயல்கள் யாவுமே கடவுளின் செய்கைகளே யன்றி வேறில்லை. எனினும், ஜகத்தில் ஞான மயமான கடவுள் எங்கும் நிரம்பிக் கிடப்பதை நேரே ஒருவன் கண்ட பிறகு, அந்த மனிதனுடைய செயல்களிற் பல, கடவுளின் நேரான கட்டளையின்படி செய்யப்படுகின்றன. அப்படிப்பட்ட நிலைமையை எய்தின மனிதனை நபி அல்லது தீர்க்கதரிசி என்கிறோம். அப்பால் அல்லா, எப்போதுமே ஒருவனுடைய ஹ்ருதயத்தில் அந்தக் கரணத்துக்கு நன்றாக விளங்கும்வண்ணம் குடி புகுந்து, கற்றறிந்தவனுடைய அறிவு முழுவதையும் தாம் விலை கொடுத்து வாங்கிய கருவி போலே ஆக்கி கொண்டு,புறச் செயல்களும் உலகத்தாருக்கு வழிகாட்டிகளாகும்படி பரிபூர்ணசைதன்ய நிலையிலே நடத்திக்கொண்டு வரத்திருவுளம் பற்றுவாராயின், அப்படிப்பட்ட மனிதனைக் கடவுளின் அவதாரமென்று சொல்லலாம். ஆனால், கிருஸ்துநாதர் இந்நிலை அடைந்ததாக முஹம்மது நபி நம்பவில்லை போலும். இது நிற்க.
இஸ்லாம் மார்க்கத்தின் முதலாவது கலீபாவாக முஹம்மது நபி அரசாண்டார். அவருக்குப்பின் அபுபகர் அந்த ஸ்தானத்தை ஐந்து வருஷம் வகித்தார். அப்பால் ஏழு வருஷம் உமர் கலீபாவாக ஆண்டார். அந்தக் காலத்திற்குப் பின்பு, முஸல்மான்களிலே, ஷியா, ஸுந்தி என்ற இரண்டு பிரிவுகள் உண்டாயின. குரான் இஸ்லாம் மார்க்கத்திற்கு வேதம். இதை முஹம்மது நபி தம்முடைய வாக்காகச் சொல்லவில்லை. கடவுளுடைய வாக்கு, தேவதூதரின் மூலமாகத் தமக்கு எட்டியதென்றும், தாம் அதை ஒரு கருவிபோலே நின்று உலகத்தாருக்கு வெளியிடுவதாகவும் சொன்னார்.
-------------
ஓம் சக்தி - லோக குரு
சென்ற ஜூன் மாதம் பன்னிரண்டாம் தேதி ஜப்பான் ராஜதானியாகிய டோக்கியோ நகரத்தில் ஸாம்ராஜ்ய ஸர்வ கலா சங்கத்தாரின் முன்பு ரவீந்திர நாதர் செய்த பிரசங்கம் பூமண்டலத்தின் சரித்திரத்திலே ஒரு புதிய நெறியைக் காட்டுவது. விவேகாநந்தர் செய்துவிட்டுப் போன தொழிலை வளர்ப்போரில் ரவீந்திரர் ஒருவர்.
விவேகாநந்தர் ஆத்மாவின் பயிற்சியை மாத்திரம் காட்டினார். ரவீந்திரர், 'உலக வாழ்க்கையும், உண்மையான கவிதையும், ஆத்ம ஞானமும் ஒரே தர்மத்தில்நிற்பன' என்பதை வெளி நாடுகளுக்குச் சொல்லும் பொருட்டாகப் பாரத மாதாவினால் அனுப்பப்பட்டிருக்கிறார்.
'பாரத தேசமே லோக குரு' என்ற செய்தி ஏற்கெனவே பல ஜப்பானியப் பண்டிதருக்குத் தெரியும். எனினும், நம்மவர் ஒருவர் நேரே போய் அந்த ஸ்தானத்தை நிலை நிறுத்துவதற்கு இதுவரை அவகாசப்படாமலிருந்தது. வங்காளத்து மஹா கவியாகிய ரவீந்திரநாத் தாகூர் போய் அந்தக் குறையைத் தீர்த்து வைத்தார். இந்தத் தொழிலுக்கு அவர் மிகவும் தகுதியுடையவர் அவருடைய கவிதையின் கீர்த்தி பூமண்டல முழுதும் ஏற்கெனவே பரவி யிருக்கிறது. உலகத்து மஹா கவிகளின் தொகையில் அவரைச் சேர்த்தாய்விட்டது
'கீதாஞ்சலி' முதலாவதாக, அவர் இங்கிலீஷ் பாஷையில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் நூல்கள் மிகவும் சிறியன; பார காவியங்களல்ல, பெரிய நாடகங்களல்ல; தனிப் பாடல்கள் சில காண்பித்தார். உலகம் வியப்படைந்தது. நல்வயிர மணிகள் பத்துப் பன்னிரண்டு விற்றால், லக்ஷக்கணக்கான பணம் சேர்ந்து விடாதோ? தெய்வீகக் கதையிலேபத்துப் பக்கம் காட்டினால் உலகத்துப் புலவரெல்லாம் வசப்படமாட்டாரோ?
கோபோ நகரத்தில் உயேனோ என்றதோர் பூஞ்சோலையிருக்கிறது. அதனிடையே அழகான பௌத்தக் கோயில் ஒன்று இருக்கிறது. அந்தச் சோலையிலே குளிர்ந்த மரங்களின் நிழலில் பல ஜப்பானிய வித்வான்கள் கூடி அவருக்குநல்வரவுப் பத்திரிகை படித்தார்கள். ஜப்பானிய ஸாம்ராஜ்யத்தில் முதல் மந்திரியாகிய ஒகூமாப் பிரபு என்பவரும், வியாபார மந்திரியாகிய ஸ்ரீமான் கோனோவும், கல்வி மந்திரியாகிய பண்டித தகாத்தாவும் வேறு பல பெரிய கார்யஸ்தர்களும் அந்தச் சபைக்கு வந்திருந்தார்கள். நல்வரவுப் பத்திரிகை வாசித்து முடிந்தவுடனே, ரவீந்திரநாதர் பின்வருமாறு வங்காளி பாஷையில் பேசலானார்:-"எனக்கு ஜப்பானிய பாஷை தெரியாது. இங்கலீஷ் தெரியும்; ஆனால்அது உங்களுடைய பாஷையன்று. உங்களிடம் அந்தப் பாஷை பேச எனக்கு ஸம்மதமில்லை. மேலும், எனக்கே அது இரவல் பாஷை;ஆனபடியால் ஸரளமாக வராது. ஆதலால், வங்காளியிலே உங்களிடம் பேசுகிறேன்" என்றார். பண்டித கிமுரா என்ற ஜப்பானிய வித்வானொருவர் வங்கத்து மொழி தெரிந்தவராதலால் ரவீந்திர நதரின் வார்த்தைகளைச் சபையாருக்கு ஜப்பானிய பாஷையில்மொழிபெயர்த்துச் சொன்னார்.
பின்பு, ரவீந்திர நாதர் பேசுகிறார்:- "கோபோ நகரத்தில் வந்து இறங்கியவுடனே எனக்கு ஜப்பான் விஷயத்தில் அதிருப்தியுண்டாகி விட்டது. எதைப் பார்த்தாலும் மேற்குத் தேசங்களின் மாதிரியாகவேயிருக்கிரது. ஜப்பானியர் தமது ஸ்வயமான தர்ம ஸம்பத்தை இழந்துவிடலாகாது" என்றார். இந்தக் கருத்தின் விவரத்தைப் பின்னே நாம் படிக்கப் போகிற டோக்கியோ ஸர்வ கலா ஸங்க உபந்யாஸத்திலே விஸ்தாரமாகக் காணலாம். அப்போது மஹா மேதாவியாகிய முதல் மந்திரி ஒகூமா எழுந்திருந்து ரவீந்திரருக்கு நன்றி கூறினார். ஸ்ரீமான் ஒகூமா கூறியது:- "எனக்கு இங்கிலீஷ் நேரே தெரியாது இவர் வங்காளி பாஷை பேசியதை நான் இங்கிலீஷ் என்று நினைத்தேன். நல்ல தருணத்திலே இவர் நமது தேசத்துக்கு வந்தார். நியாயமான எச்சரிக்கை கொடுத்தார். நமது தேசத்தின் சித்த நிலை இப்போது இரண்டுபட்ட பாதைகளின் முன்பு வந்திருக்கிறது. நமதறிவு எந்த வழியிலே திரும்புதல் தகும் என்பதை இப்போது நிச்சயிக்க வேண்டும். இத் தருணதில் நமக்கு நல்வழி காட்டும் பொருட்டாக இந்த மஹான் தோன்றினார்."
டோக்கியோ உபந்யாஸத்தைப் பற்றி ஒரு தனிப்பகுதி எழுத வேண்டும்.
"அதன் ஸாராம்சம்:- உறங்கின ஆசியாவை ஜப்பான் எழுப்பிவிட்டது. அதன் பொருட்டு நாமெல்லோருமஜப்பானுக்கு நன்றி செலுத்த வேண்டும். உறங்கும் பூமண்டலத்தை, பாரத நாடு தலைமையாக ஆசியா எழுப்பிவிடப் போகிறது." இந்தக் கருத்தை ஜப்பானிய பண்டிதர் அந்நாட்டுப் பத்திரிகைகளில் அங்கீகாரம் செய்துகொண்டு மிகவும் அழகாக நன்றி வார்த்தைகள் சொல்லியிருக்கிறார்கள்.
டோக்கியோ ஸாம்ராஜ்ய கலாசங்கத்தில் பாரத கவி ரவீந்திரர் செய்த ஆச்சரியமான பிரசங்கத்திலே அவர் சொன்னதாவது:- "முதலாவது, உங்களுக்கு நன்றி சொல்லுகிறேன். ஆசியா கண்டத்தில் பிறந்த எல்லா ஜனங்களும் உங்களுக்கு நன்றி செலுத்தக் கடன் பட்டிருக்கிறோம். எல்லாப் பந்தங்களைக் காட்டிலும் இழிவான பந்தம் உள்ளச் சோர்வு. இதனால் கட்டுண்டவர் தம் நம்பிக்கையில்லாதவர். கேட்டீர்களா, சிலர் சொல்லுவதை:- "ஆசியாக் கண்டம் பழமையிருளில் மூழ்கிக் கிடக்கிறது; அதன் முகம் பின்னே முதுகுப் புறமாகத் திருப்பி வைக்கப்பட்டிருக்கிறது"என்று. இப்படி வார்த்தை சொல்வோரின் பேச்சை நாமும் நம்பினோம். சிலர் இதையே ஒரு தற்புகழ்ச்சியாக்கி "அப்படித்தான்; நாங்கள் பழமையிலே தானிருப்போம். அதுதான் எங்களுக்குப் பெருமை" என்றார்கள்.
"விஷயங்கள் இந்த ஸ்திதியில் இருக்கும்பொழுது நாமெல்லாம் ஒரு மோஹ நித்திரையில் வீழ்ந்திருந்த காலத்திலே, ஜப்பான் தனது கனவு நிலைமை நீங்கி எழுந்தது; நடக்கத் தொடங்கிற்று; பூதாகாரமான அடியெடுத்து வைத்தது; நிகழ் காலத்தைஅதன் முடிவிலே போய்ப் பற்றிக் கொண்டது. எல்லோரும் தட்டி யெழுப்புண்டோம்." பூமியின் மேலே, சில எல்லைக்குள்ளிருக்கும் சில தேசத்தாருக்கு மாத்திரம் முன்னேற்றம் வசப்படாது' என்ற மாயை போய்விட்டது. "ஆசியா கண்டத்தில் பெரிய ராஜ்யங்கள் ஸ்தாபனம் செய்திருக்கிறோம். பெரிய சாஸ்திரம், கலை,காரியம் - எல்லாம் இங்கே தழைத்தன. உலகத்திலுள்ள பெரிய மதங்களெல்லாம் இங்கே பிறந்தன. 'இந்த மனிதனுடைய சுபாவமே மதிச் சோர்வும் வளர்ச்சிக் குறையும் உண்டாகும்' என்று சந்தேகப் படவேண்டாம். பல நூற்றாண்டு நாம் நாகரிக நாகரிக விளக்கைத் தூக்கி நிறுத்தினோம். அப்போது மேற்குலகம் இருளில் தூங்கிக் கொண்டிருந்தது. நமக்குப் புத்தியுண்டு. நம்முடைய புத்தி ஒரு நத்தைப் பூச்சியில்லை. நம்முடைய கண் மாலைக் கண்ணில்லை. "ஆசியா, ஜப்பானுக்குக் கொடுத்தது அந்தப் பயிற்சி, ஜப்பான் இக்காலத்திலே புதியவளும் பழையவளுமாக விளங்குகிறாள். குல உரிமையால் கீழ்த்திசையில் நமது பழைய பயிற்சி அவளுக்குக் கிடைத்திருக்கிறது. 'மெய்யான செல்வமும் மெய்யான வலிமையும் வேண்டுமானால், ஆத்மாவுக்குள்ளே நோக்கத்தைச் செலுத்த வேண்டும், என்று கற்பித்த பயிற்சி, ஆபத்து வரும்போது பிரார்த்தனை தவறாதபடி காப்பாற்றும் பயிற்சி, மரணத்தை இகழச் சொல்லிய பயிற்சி, உடன் வாழும் மனிதனுக்கு நாம் எண்ணற்ற கடமைகள் செலுத்த வேண்டும் என்று தெளிவித்த பயிற்சி, 'கண்ட வஸ்துக்களிலே, அகண்ட வஸ்துவைப் பார், என்று காட்டிய பயிற்சி. 'இவ்வுலகம் ஒரு மூடயந்திரமன்று. இதற்குள்ளேயே தெய்வ மிருக்கிறது; இது யதேச்சையாக நிற்பதன்று; கண்ணுக்கெட்டாத தொலையில் வானத்திலிருக்கவில்லை; இங்கே இருக்கிறது அந்தத் தெய்வம்.' இந்த ஞானத்தை உயர்த்திய பயிற்சி: அநாதியாகிய கிழக்குத் திசையில் புதிய ஜப்பான் தாமரைப் பூவைப் போல் எளிது தோன்றி விட்டாள். பழைய மூடா சாரங்களை ஜப்பான் உதறித் தள்ளி விட்டாள்; சோம்பர் மனதிலே தோன்றிய வீண் பொய்களை மறந்து விட்டாள். நவீன நாகரிகப் பொறுப்புக்களைத் தீவிரமாகவும் தகுதியாகவும் தரித்து வருகிறாள்.
ஜப்பான் இக்காலத்திலே புதியவளும் பழையவளுமாக விளங்குகிறாள். குல உரிமையால் கீழ்த்திசையில் நமது பழைய பயிற்சி அவளுக்குக்கிடைத்திருக்கிறது. 'மெய்யான செல்வமும் மெய்யான வலிமையும் வேண்டுமானால், ஆத்மாவுக்குள்ளே நோக்கத்தைச் செலுத்த வேண்டும், என்று கற்பித்த பயிற்சிஆபத்து வரும்போது பிரார்த்தனை தவறாதபடி காப்பாற்றும் பயிற்சி, மரணத்தை இகழச் சொல்லிய பயிற்சி, உடன் வாழும் மனிதனுக்கு நாம் எண்ணற்ற கடமைகள் செலுத்தவேண்டும் என்று தெளிவித்த பயிற்சி, 'கண்ட வஸ்துக்களிலே, அகண்ட வஸ்துவைப் பார், என்று காட்டிய பயிற்சி'இவ்வுலகம் ஒரு மூட யந்திரமன்று. இதற்குள்ளேயே தெய்வ மிருக்கிறது; இது யதேச்சையாக நிற்பதன்று;கண்ணுக்கெட்டாத தொலையில் வானத்திலிருக்கவில்லை; இங்கே இருக்கிறது அந்தத் தெய்வம்.' இந்த ஞானத்தைஉயர்த்திய பயிற்சி: அநாதியாகிய கிழக்குத் திசையில் புதியஜப்பான் தாமரைப் பூவைப் போல் எளிது தோன்றி விட்டாள்.பழைய மூடா சாரங்களை ஜப்பான் உதறித் தள்ளி விட்டாள்; சோம்பர் மனதிலே தோன்றிய வீண் பொய்களை மறந்து விட்டாள். நவீன நாகரிகப் பொறுப்புக்களைத் தீவிரமாகவும் தகுதியாகவும் தரித்து வருகிறாள்.
"ஜப்பான், ஆசியாவுக்குத் தைரியம் கொடுத்தது.உள்ளே உயிர் இருக்கிறது. நமக்குள் வலிமை யிருக்கிறது.மேல் தோல்தான் காய்ந்து போயிருக்கிறது. அதைக் கழற்றியெறிந்து விட்டு அதற்கு அப்பால் ஓடுகிற கால நதியிலேமுழுகி ஸ்நானத்தைப் பண்ணி யெழவேண்டும். தற்காலத்துக்குப் பயந்து, முற்காலத்திலே போய்த் தலையை நுழைத்துக் கொள்ளுவோன் உயிருந்த போதிலும் செத்தவனுக்குஸமானமே." இது ஜப்பான் சொல்லிக் கொடுத்த விஷயம். பழைய விதையிலே உயிர் ஸத்து நீங்கவில்லை. புதிய காலமாகிய வயலிலேயே நடவேண்டும். இது ஜப்பான் சொல்லிக் கொடுத்த விஷயம். ஜப்பான் பிறரைப் போல் வெளியபிநயம் காட்டி இந்தப் பெரிய ஸ்தானத்தை அடையவில்லை. பிறரைப் பார்த்து நாமும் அவர்களைப்போல்ஆகவேண்டுமென்று பாவனைகள் காட்டினால், வலிமையுண்டாகாது. பிறரிடம் சாஸ்திர ஞானம் வாங்கிக் கொள்ளுதல் வெளியபிநயம் அன்று. பிறர் கல்வியை நாம் வாங்கலாம்;கோணல்களை வாங்கக்கூடாது. தேசத்தாருக்கென்று பிரிவுபட்டதனித்தனிக் குணங்கள் பலவுண்டு. எல்லாத் தேசத்தாருக்கும்பொதுவான மானுஷீக குணங்கள் பலவுண்டு. பிறரிடம் ஒன்றைவாங்கிக்கொள்ளும் போது, ஸாவதானமாக வாங்கிக்கொள்ளவேண்டும்."
ரவீந்திர கவியின் உபந்யாஸத்தை ஜப்பான் தேசத்தார் மிகவும் பக்தியுடன் கொண்டாடுகிறார்கள். பத்திரிகைகள் உயர்ந்த புகழ்ச்சி பேசுகின்றன. நல்ல காரியம் செய்தார். இப்படியே இங்கிலாந்து முதலிய எல்லாத் தேசங்களிலும் போய், பாரத தேசத்தின் அறிவு மஹிமையை மற்றொரு முறை விளக்கி வரும்படி புறப்பட்டிருக்கிறார் போலும். 'டோக்கியோ மானிச்சி' என்ற ஜப்பானியப் பத்திரிகைசொல்லுகிறது:- "அறிவில் ஜப்பான் பாரத தேசத்திற்குக் கடன்பட்டிருக்கிறது. ஜப்பான் நாகரீகம் பெறாதிருந்த காலத்தில்,பாரததேசம் அதில் உயர்ந்திருந்தது. பாரத ஞானம் பூ மண்டலமமுழுவதையும் தீண்டியிருக்கின்றது. 'ப்லாத்தோ'வுக்கு உபதேசம்பாரததேசத்திலிருந்து கிடைத்தது. ஸ்வேதன் போர்க் ஸாபன் ஹோவர் என்ற பிற்காலத்து ஞானிகளும் பாரத தேசத்தின் அறிவுக்கு வசப்பட்டார். பாரத நாகரீகம் நமக்குச் சீனா, கொரியா வழியாக வந்தது. நாம் இந்தியாவின் கடனைத் திரும்பக் கொடுக்க வேண்டும். ரவீந்திர நாதரை நாம் மிகவும்கௌரவப் படுத்த வேண்டும்."
"யோர்த்ரை" என்ற ஜப்பானியப் பத்திரிகை சொல்லுகிறது:- "உலக வாழ்க்கையும் கவிதையும் சுதி சேர்ந்து நிற்க வேண்டும்" என்பது ரவீந்திரர் கொள்கை. ஜப்பான் பாரத நாட்டுக்கு மிகவும் அறிவுக் கடன் பட்டிருக்கிறது.
இவ்வாறு ரவீந்திரருடைய பேச்சு வரும்போது, ஜப்பானியப் பத்திரிகைகள் தமது நாடு பாரத பூமிக்கு அறிவுக்கடன் பட்டிருப்பதை நினைத்துக் கொள்ளுகின்றன. ரவீந்திரருடைய கீர்த்தி உலகத்தில் அதிகமாகப் பரவி ஏறக்குறைய நான்கு வருஷங்களாகவில்லை. இந் நான்கு வருஷங்களுக்குள், ஜப்பான் தேசத்தில் ஸம்ஸ்கிருத இலக்கண புஸ்தகங்கள் எப்போதைக்காட்டிலும் அதிகமாக விலையாகின்றனவாம். 'பாரத தேசமே லோக குரு' என்பதைஉலகத்தார் அங்கீகாரம் செய்வார்கள். நாம் போய் நினைப்பூட்ட வேண்டும்.
பாரத பூமி உலகத்தாருக்கு எந்த விதமான ஞானத்தைக் கொடுத்துப் புகழைக் கொள்ளுமென்பதை விளக்குவதற்கு முன்பாக, சாஸ்திர (ஸயின்ஸ்) வார்த்தைஓரிரண்டு சொல்லி முடித்து விடுகிறேன் 'செடியின் நாடி மண்டலம் மனிதனுடைய நாடி மண்டலத்தைப் போலவே உணர்ச்சித் தொழில் செய்கிறது' என்பதை உலகத்தில் சாஸ்திர நிரூபணத்தால் ஸ்தாபனம் செய்தவர் நமது ஜகதீச சந்திர வஸூ. உலோகங்களிலும், இவர் பல புதிய சோதனைகள் செய்திருக்கிறார். ஒளி நூலில் மஹாவித்வான்.தந்தியில்லாத தூரபாஷைக் கருவியை 'மார்க்கோனி' பண்டிதர்உலகத்துக்கு வழக்கப்படுத்து முன்பே, ஜகதீச சந்திரர் அந்த விஷயத்தைப்பற்றித்துல்ய ஆராய்ச்சிகள் செய்து முடித்திருந்தார் செடிகளுடைய ப்ராணனில் நாடியுணர்ச்சி யெங்ஙனமெல்லாம் தொழில் செய்கிறது என்பதைக் கண்டுபிடித்ததே, இவர் மனிதசாஸ்திரத்துக்கு இதுவரை செய்திருக்கும் உபகாரங்களில் பெரிது.இப்போது சில வருஷங்களாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள பண்டிதக் கூட்டத்தார் ஜகதீச வஸுவினிடம்மிகுந்த மதிப்புப் பாராட்டி வருகின்றனர்; நல்ல புகழ்ச்சி கூறுகின்றனர். நவீன சாஸ்திர ஆராய்ச்சிக்கு மிகவும் நுட்பமானகருவிகள் வேண்டும். ஜகதீச வஸூவின் ஆராய்ச்சிக் கருவிகள்கல்கத்தாவில் நமது தேசத் தொழிலாளிகளாலே செய்யப்படுவன.ஐரோப்பிய ராஜ தானிகளிலே இத்தனை நேர்த்தியாக அந்தக் கருவிகளைச் செய்யத்தக்க தொழிலாளிகள் இல்லை. ஆகையால்அங்குள்ள பண்டிதர்கள் புதிய வழியில் செடியாராச்சிக்கு வேண்டியகருவிகளையெல்லாம் கல்கத்தாவிலிருந்து வரவழைத்துக் கொள்கிறார்கள்.
சாஸ்திரம் பெரிது, சாஸ்திரம் வலியது. அஷ்ட மஹாசித்திகளும் சாஸ்திரத்தினால் ஒருவேளை மனிதனுக்கு வசப்படலாம். பூர்வ காலத்தில் பலவகைக் கணித சாஸ்திரங்களும்இயற்கை நூலகளும் பாரத நாட்டிலேதான் பிறந்த பின்பு உலகத்திலபரவியிருப்பதாகச் சரித்திர ஆராய்ச்சியிலே தெரிகிறது. இப்போது"ஸயின்ஸ்" பயிற்சியில் இவ்வளவு தீவிரமாக மேன்மை பெற்று வருகிறோம்; காலக் கிரமத்தில் தலைமை பெறுவோம்.
இனிமேல், கதையைச் சுருக்கிவிடவேண்டும்; வருங்காலத்தில் உலகத்துக்குப் பாரத தேசம் என்ன பாடம் கற்பிக்கும்? எதனால் இந்நாடு 'லோக குரு' ஆகும்?உலகத்திற்கு நாம் கற்றுக் கொடுக்கப் போவது கர்மயோகம்.கடமையைச் செய்து, தவறாதபடி செய்து, இன்பத்தோடிருக்கவழி எப்படி? யோகமே வழி. "யோகமாவது செய்கைத் திறமை" என்று பகவான் கீதையிலே சொல்கிறார். பூமண்டலத்திற்கு யோகம் நாட்டுவோம்.
சென்னைக் கிருஸ்துவ கலாசாலையில் டாக்டர்மில்லர் என்றொரு பாதிரி யிருந்தார். அவர் நல்ல "புத்திசாலிஎன்று பெயரெடுத்தவர். அவர் ஹிந்து மதத்தைப் பற்றிப் பேசும்போது, கடவுளின் அந்தர்யாமித் தன்மையை மற்றெல்லாமதங்களைக் காட்டிலும் ஹிந்து மதத்திலேதான் தெளிவாகக் காட்டி யிருக்கிறார்களென்று சொல்லியிருக்கிறார். சாதாரணப் பாதிரி. கொஞ்சம் புத்திசாலியாகையால் இதைத் தெரிந்துகொண்டார். கடவுள் சர்வாந்தர்யாமி என்பது எல்லா மதங்களிலுமுண்டு. ஆனால் இங்கேதான் அதைத் தெளிவாகச் சொல்லுகிறோம். பிற மதங்களில் தெளிவில்லை.
'அந்தர்யாமி ' 'உள்ளே செல்வோன்.' 'உள்ளே நிற்போன்.' 'உள்ளே செல்வோன்' என்பது தாதுப் பொருள்.'உள்ளே நிற்போன்' என்பது வழக்கப் பொருள். "தெய்வம் எதற்குள்ளேயும் நிற்கிறது" என்று சாதாரணமாக எல்லோரும் சொல்லுகிறார்கள். இதன் அர்த்தத்தைஅவர்கள் நன்றாக மதியினாலே பற்றிக் கொள்ளவில்லை. "தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்." ஆம், அதன் பொருள் முழுதையுங் கண்டாயா?சாத்தன் எழுதுகிறான், கொற்றன் எழுதச் சொல்லுகிறான். "எழுதுவோன், எழுதுவிப்போன் - இரண்டும் தெய்வம். பன்றிசாகிறது; பன்றியாக இருந்து சாவது தெய்வம். எதனிலும்உள்ளே நிரம்பிக்கிடக்கிறது' என்றால், செய்கையெல்லாம் அதனுடையது என்று அர்த்தம்.
"இயற்கையின் குணங்களால் செய்கையெல்லாம் நடப்பன. அகங்காரம் கொண்ட மூடன் 'நான் செய்கிறேன்' என்று நினைத்துக் கொள்ளுகிறான்" என்று பகவத் கீதையிலே பகவான் சொல்லுகிறான். செய்கைகள் எல்லாம் பரமாத்மாவின் செய்கைகள். 'அவனன்றி ஓர் அணுவும் அசையாது.' 'என் செயலாவது யாதொன்றுமில்லை.'
நமக்குப் பொறுப்பில்லை, தொல்லை யில்லை, செய்கையில்லை; கடமை மாத்திரம் உண்டு.
'கடமையில் உனக்கு அதிகாரம், பயனிலே இல்லை,என்பது கீதை. 'செய்கையில்லாது நீங்கிவிடுவது' என்றால் சோம்பேறியாய் விடுதல் என்று அர்த்தமில்லை. பகவத் கீதை மூன்றாம் அத்தியாயத்தை ஒவ்வொரு ஆர்யனும் தினம் மூன்று வேளை வாசிக்க வேண்டும்.
முதலாவது விஷயம்:- ஒருவிதமான செய்கையுமில்லாமல் சும்மாயிருப்பது இவ்வுலகத்தில் எப்பொழுதும் சாத்தியப்படாது. நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், உன்னை எப்போதும் பிரகிருதி செய்கையிலேபுகுத்தி ஆட்டிக் கொண்டிருக்கிறாள். உன்னிஷ்டப்படி யெல்லாம் நடக்கவில்லை, நீ இஷ்டப்படுவதே மழை பெய்வதைப்போல் இயற்கையிலேயே விளையும் செய்கை.சித்தமே ஜடம்.'
இரண்டாவது விஷயம்:- 'நான் பிரிவில்லை என்று கண்டு, தெய்வமே உள்ளதாகையால் அதற்குச் சேவகமாக "உலகத் தொழில்களைப் பிழையில்லாமல் செய்து கொண்டு வரவேண்டும். கடமையைத் தவிருவோன் விடுதலை பெற்றவன் அன்று. விடுதலையின் தலைமேலே ஒரு கடமை நிற்கிறது. தெய்வத்துக்கே கடமையுண்டு. பகவான் கர்மயோகி.ஸந்யாஸம் அவசியமில்லை. பெண்டு பிள்ளைகள் பொய்யில்லை.மற்ற மனிதர்கள் மண் கட்டிகள் அல்லர். அவர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய கடமைகள் உண்டு."
'கடமை செய்யாதவன் வயிறு பிழைப்பதே நடக்காது'என்று கிருஷ்ணன் அழுத்திச் சொல்கிறார்.
'இவ்வுலகத்துச் செய்கைகளுக்கு நாம் பொறுப்பில்லை'என்று எல்லாச் செயல்களையும் ஈசனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டோர். சோம்பேறிகளாய்ப் பிறருக்கு எவ்விதப் பயனும்இல்லாமல் வெறுமே பிறர் போடும் தண்டச் சோறு தின்று கொண்டிருக்கும் துறவு நிலையிலே போய்ச்சேரும்படி நேரிடும்'என்று சில புத்திமான்கள் பயப்படுகிறார்கள். 'அப்படிப் பயப்படஇடம் இல்லை' என்பதை வற்புறுத்திக் காட்டும் பொருட்டாகவே,நான் இந்த வார்த்தையை இத்தனை விஸ்தாரப் படுத்துகிறேன்.
'தெய்வமே துணை' என்று இருப்போர் ஓயாமல் தொழில் செய்து கொண்டிருப்பார்கள். தெய்வ பக்தி உண்மையானால் பரோபகாரம் அங்கே யிருக்கும். பரோபகாரமஇல்லாத இடத்தில், "தெய்வபக்தி வேஷத்தைத் தவிர வேறொன்றுமில்லை. ஆங்கிலேயர், பிரெஞ்சியர், ருஷியர், பெல்ஜியர், செர்வியர், யுனைடெட் ஸ்டேட்ஸ்காரர், இத்தாலியர்,ஜப்பானியர், மாண்டிநீக்ரோவர், அல்பானியர், போர்ச்சுகேசியர்,ருமானியர், க்யூபா நாட்டார், பனாமர், கிரேக்கர், சீய நாட்டார்ஆகிய பதினாறு தேசத்தாரும் ஜர்மனிக்கும் அதனுடன் சேர்ந்தஆஸ்திரியா, துருக்கி, பல்கேரியா தேசத்தாருக்கும் விரோதமாகபபோர்புரிந்து வருகிறார்கள். மேன்மேலும் நம்முடைய நேசக் கட்சியாருக்குத்தான் துணை சேருகிறதே ஒழிய, ஜெர்மனிக்குப்புதிய துணை கிடையாது. மேற்கூறிய பதினாறு தேசங்களைத் தவிர, சீனா, ப்ரஜீல், பொலிவியா, க்வாடிமாலா, ஹொண்டூராஸ், நிகராகுவா, லிப்ரியா, ஹெய்தி, ஸாண்டோமிங்கோ முதலிய நாட்டார் மேற்படி ஜர்மானியருடன் தூது சம்பந்தங்களை நீக்கித்தமது விரோதத்தை உணர்த்தியிருக்கிறார்கள்.
இத்தனைக்கும் பயப்படாமல் அந்த மானங்கெட்ட ஜர்மனிக்காரப் பயல்கள், நேசக்கட்சியாருடைய நியாயங்களைக் காட்டிலும் தங்களுடைய இரும்பு வலிமையே பெரிய வலிமை என்று எண்ணி, வீண் இறுமாப்புக்கொண்டு சண்டை நடத்திக்கொண்டு வருகிறார்கள்.
'இன்றைக்கானாலும், நாளைக்கானாலும், நாளையன்றைக்கானாலும், ஒரு மாசம் சென்றாலும், ஒரு வருஷம் சென்றாலும், என்றைக்கானாலும், ஜர்மனியை நம்மால்தோற்கடிக்க முடியுமாதலால், ருஷ்யாவில் கோன்ஸ்கியை நீக்கி அதிகாரம் பெற்றிருக்கும் மாக்ஸிமிஸ்த் கட்சியார் ஜர்மனியுடன் தனி சமாதானமும் பேசத் தொடங்கியிருப்பது பெரிய காரியமில்லை.நாம், கடைசி ஆள், கடைசி ரூபாய் மிஞ்சும்வரை போரை நிறுத்தமாட்டோம்' என்ற ஒரே உறுதியுடன் மிஸ்டர் லாயிட் ஜார்ஜ் முதலிய நேசக் கட்சி மந்திரிகள் பேசுகிறார்கள்.
இதனிடையே, 'நேசக் கட்சியார் இந்தப் போரை நடத்திவரும் நோக்கந்தான் யாதோ?' என்று கேட்டால், 'ஒரு ஜாதியாரை மற்றொரு ஜாதியார் தம் இஷ்டப்படி அந்தந்தத் தேசத்தாரால் ஆளப்பட வேண்டுமென்ற கொள்கையை நிலை நிறுத்தும் பொருட்டாகவும் சண்டை போடுகிறோம்' என்று நேசக்கட்சி மந்திரிகளும் ப்ரசிடென்ட்மார்களும், பத்திராதிபர்களும், சென்ற மூன்று வருஷங்களாகத் தினம் மூன்றுமுறை ஓதிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வார்த்தையைக் கேட்டவுடன் பாரத புத்திரராகிய ஹிந்து முஹமதியர்கள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு, "சபாஷ்! நேசக் கட்சியாருக்கும் நமக்கும் ஒரே நோக்கம். நம்முடைய தேசத்தில ஆங்கிலேயர் தம் இஷ்டப்படி அரசு செலுத்தும் முறைமையை மாற்ற வேண்டும் என்றே நாமும் முயற்சி செய்து வருகிறோம். ஏற்கனவே, இங்கிலாந்தும் நம்முடைய கொள்கையைததழுவி விட்டதாகச் சொல்லுகிறபடியால், இங்கிலாந்து கஷ்ட தசையிலிருக்கும் இத்தருணத்தில் நாம் இங்கிலாந்துக்கு இடையூறுசெய்யாமல், இங்கிலாந்துக்கு நம்மால் இயன்ற உதவி செய்யவேண்டும்" என்று தீர்மானம் செய்து கொண்டார்கள்.
பாரத தேசத்தாரில் லட்ச லட்சமான ஜனங்கள் இந்தப்போரில் மடிந்து ஆங்கிலேயருக்கு உதவி புரிந்தோம் கோடானுகோடிதிரவியத்தைக் கொடுத்து வருகிறோம். இன்னும் சேனையில் ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே, நாம் வாய் திறந்து கேட்டால், இங்கிலாந்து நமக்கு இப்போது சுயராஜ்யம் கொடுக்கும்.நம்மை ஏமாற்றாது. இந்தச் சமயத்தில், நாம் இத்தனை உதவி செய்யும்போது, காங்கிரஸ் முஸ்லீம் சபையார் சொல்வதை நாம் சரி என்று நினைக்கவில்லை. சண்டை முடியுமுன்பாக இப்பொழுதேகைமேலே சுயராஜ்யம் வேண்டும் என்றுநம்மவர் கேட்கவேண்டும்என்று நான் சொல்லுகிறேன். சண்டை முடிந்த பிறகு சுயராஜ்யம் போதுமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், அது கிடைப்பது அரிதாகும். இப்பொழுதே ஏன் கொடுக்கும்படி கேட்கக் கூடாது? அயர்லாந்து தேசத்தில் சண்டை முடியு முன்பாகவே ஸ்வராஜ்யம் கொடுப்பதற்குரிய முறைமைகளைப்பற்றி ஆலோசனை செய்வதற்காக ஒரு சபை நடந்து வருகிறது. அதில் ஸகல கட்சியாரும் சேர்ந்திருக்கிறார்கள். அதுபோலவே, இந்தத் தேசத்திற்கும் ஒரு சபை ஏற்படுத்த வேண்டும்; அதில் இங்கிலீஷ் பிரதிநிதிகள் பாதித்தொகை, பாரதப் பிரதிநிதிகள் பாதித்தொகையாக இருந்து நடத்தவேண்டும். அவ்விதமான சபையை மந்திரி மாண்டேகு இந்தத் தேசத்தில் இருக்கும்போதே நியமிக்க வேண்டுமென்று நம்மவர் கிராமந்தோறும் சபைகள் கூடி 'கூ! கூ!' என்று பெரிய சப்தம் போடவேண்டும். திராவிடக் கட்சியார் என்றும், இஸ்லாமியக் கட்சியார் என்றும், யாரோ சிலர் செய்யும் பொய் மேளக் கச்சேரியை நாம் இகழ்ந்து நகைத்து, 'காங்கிரஸ் முஸ்லீம் சங்கங்களே தேசத்துக்குப் பொது'என்பதை ஒரே வார்த்தையாகஎங்கும் நிலைநிறுத்த வேண்டும். காங்கிரஸ் முஸ்லீம் சபைகளை எதிர்த்து, நமக்கு சுயராஜ்யம் வேண்டாமென்று சொல்லும் ஸ்வதேச விரோதிகளை அடக்கி விட்டு, நாம் இப்போதே ஸ்வராஜ்யம் கேட்கும்படி நமது பிரதிநிதிகளாகிய காங்கிரஸ்முஸ்லீம் சபையாரைத் தூண்டவேண்டும்.
மந்திரி மாண்டேகு சென்னைக்கு வந்திருப்பதால், இந்தச்சத்தம் கிராமங்களில் இடிமுழக்கம் போலே நடைபெற்று வரவேண்டும்.
ஜனங்களே! உடனே சுயராஜ்ய ஸ்தாபன சபையைக் கூட்டும்படி இரைச்சல் போடுங்கள். அழுதபிள்ளை பால்குடிக்கும்.
-----------
ஓம் சக்தி - அடங்கி நட
[வங்க பாஷையில் ஸ்ரீமான் ஸர். ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் எழுதப்பெற்று, 'மாடர்ன் ரிவியூ' பத்திரிகை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, அதனின்றும் ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியாரால் மொழிபெயர்க்கப்பட்டது.]
மழை கொஞ்சம் தூற 'ஆரம்பித்தால், எங்கள்சந்நிலும், அதுபோய் சேரும் சித்பூரி ரஸ்தாவிலும் நீர் வெள்ளமாய் விடுகிறது. நான் தலை நரைத்த கிழவனாய்விட்டேன். சிறுபிராய முதல் இதுவரை, ஒரு முறைகூடத் தவறாமல் வருஷந்தோறும் இப்படி நடப்பதைப் பார்க்கும்போது, இவ்வுலக வாழ்க்கையில் நீரில் பாதி, நிலத்தில் பாதிகுடியிருக்கும் ஜந்துக்களுக்குள்ள யோக்யதைத்தான் நமக்கும் இருக்கிறதென்ற எண்ணம் என் மனதில் அடிக்கடிஉதிப்பதுண்டு.
இங்ஙனம் அறுபது வருஷங்கள் ஆய்விட்டன.இதற்கிடையே உலகத்தில் நடந்த மாறுதல்கள் பல. கலியுகத்தின் குதிரையாக இருந்த நீராவியை இப்போதுமின்சார சக்தி கண்டு நகைக்கிறது. கண்ணுக் கெட்டாதிருந்ததுபரமாணு. இப்போது மனதுக் கெட்டாதிருந்த சித்தாந்தம் உண்டாயிருக்கிறது. சாகப் போகிற எறும்பைப்போல் மனிதன்சிறகு முளைத்துப் பறக்கிறான். 'வானத்தில் இடம், உனக்கா எனக்கா?' என்று நீதிஸ்தலத்திற்கு வியாஜ்யங்கள் விரைவாகவரக்கூடிய காலத்தை வக்கீல்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒரே நாள் இரவில் சீனர் எல்லோரும் 'பன்றிக் குடுமி'யை நறுக்கி எறிந்தனர். ஐந்நூறு வருஷத் தாவுதலை ஜப்பான் ஐம்பது வருஷத்தில் தாவிவிட்டது. ஆனால் இந்தச் சித்பூர்ரஸ்தாவில் மழை பெய்தால் சேறு உண்டாகாமற் செய்ய வழியில்லை அதன் ஸ்திதிக்கு மாறுதல் இல்லை. காங்கிரஸ்என்ற பெயர் உண்டாவதற்கு முன்பு நமது ஜாதிப்பாட்டு எத்தனை சோகமாயிருந்ததோ, அத்தனை சோகமாகத்தான்இப்போது ஸ்வராஜ்யம் நெருங்கி வரும் தருணத்திலும் இருக்கிறது.
குழந்தைப் பிராயமுதலாகவே நாம்பழகி விட்டபடியால், இதெல்லாம் நமக்குஆச்சரியமாகத் தோன்றவில்லை. ஆகவே, கவலைஏற்படவில்லை. தண்ணீர் தங்கி ஓயாமல் செப்பனிட்டட்ராமதண்டவாளத்தில் என்னுடைய வண்டிச் சக்கரம் போகும்போது,எனக்கு மறதி தெளிந்து ஜனங்களின் போக்குக்கும் நீரோட்டத்துக்கும் சண்டை உண்டாய் அதிலிருந்து அழுக்குத்தண்ணீர் என்மேல் வந்து தெறிக்கும் செய்தியிலே புத்தி செல்லுகிறது. 'இதை நாம் ஏன் பொறுக்கிறோம்?' என்று சிறிதுகாலமாக எனக்கொரு யோசனை உண்டாய் வருகிறது,
இதைப் பொறுக்க வேண்டுமென்று கட்டாயமில்லை. பொறுக்கக் கூடாதென்று தீர்மானிப்பதால் அனுகூல முண்டு. அதற்கு ஐரோப்பியர்கள் வாஸம் செய்கிற'சௌரிங்கி' ரஸ்தா சாக்ஷி. அந்த ரஸ்தாவில் முக்கால் பங்குக்குமேலே ட்ராம் தண்டவாளத்தைப் போட்டு, அதில் முடிவில்லாமல் 'யானை நடை'யில் செப்பனிட்டுக் கொண்டிருந்தால் அந்த வீதியார் ட்ராம்வே அதிகாரிகளுக்குஊணுறக்கம் இல்லாதபடி செய்து விடுவார்கள். நாமோ, கீழ்ப்படிதலாகிய குணமே வடிவெடுத்து வந்திருப்பதால், எதையும் திருத்த முடியுமென்பதை நம்மால் நம்பமுடியவில்லை.இதனால் நமது கன்னத்தில் கண்ணீர்ப் பெருக்கும் நமது வீதியில் ஜலதாரைப் பெருக்கும் தீர இடமில்லை. இது ஸாமான்ய விஷயமன்று. எதிலுமே 'நமக்கு நாம் நாயகர்'என்ற எண்ணம் நமக்கு ஏற்படவில்லை.
கண்ணாடி மூடிக்குள்ளே தண்ணீர் விட்டு அதில்வளர்க்கப்பட்ட பொன்னிற மீன்கள், கண்ணாடியைத் தண்ணீர்என்று நினைத்து அதில் வந்து மோதிக் கொள்ளுமாம்; பிறகுபெரிய தொட்டியில் கொண்டு போட்டாலும் தண்ணீரைக் கண்ணாடி என்று நினைத்துப் பயந்து பழைய எல்லைக்குள்ளேசுற்றுமாம். 'அதுபோல, தலை உடைந்து போமோ, என்கிற பயம் நம்முடைய எலும்புக்குள் ஊறிக்கிடக்கிறது. மஹாபாரதத்தில்,அபிமன்யு பகைவரின் வ்யூகத்துக்குள் நுழையக் கற்று, மீளுவதைக் கற்காமல் மாண்டது போலே. நாமும் பிறவி முதல்கட்டுப்படக் கற்று, அவிழ்க்கக் கல்லாமல், நமக்கு நேரிடும் சகலவிபரீதங்க்ளுக்கும் தலைகுனிகிறோம்.
மனிதருக்கும், நூல்களுக்கும், திசைகளுக்கும்,எல்லைகளுக்கும், கற்பனைத் தடைகளுக்கும் தலை குனிந்துபல தலை முறையாய் வழக்கமாய் விட்டப்படியால், எந்ததுறையிலும் நாமாக ஒன்று செய்ய முடியும்' என்கிற உண்மைநம் முகத்தின் முன்னே நின்றாலும், கண்ணுக்குத் தெரியாமல் போகிறது. ஐரோப்பிய மூக்குக்கண்ணாடி போட்டுக் கொண்டாலும்நமக்குத் தெளிவுண்டாக வில்லை.
தனக்குத்தானே நாயகனாயிருக்கும் உரிமைஎல்லா மனித உரிமைகளிலும் பெரிது. ஆனால் இந் நாட்டிலே இவ்வுரிமை, நூல் வசனங்களாலும், பழமொழிகளாலும், கிரியை சடங்குகளாலும் மறுக்கப் பட்டிருக்கிறது. இந்தத் தேசத்தில் மனிதனுடைய புத்தி வழிதவறிப் போகாமலிருக்க, கிரியைகளாலும் சாஸ்திரங்களாலும் கையையும் காலையும் கட்டிப் போட்டிருக்கிறார்கள். அடிகோணாமற் காக்குமாறு, பாதைகளை அழித்து விட்டார்கள். தெய்வத்தின் பெயர் சொல்லி மனிதனை மனிதன் கீழ்ப்படுத்தி அவமதிக்கும்படிசெய்து விட்டார்கள். இப்படிப்பட்ட தேசம் அடிமைகளைச்செய்வதற்கு நல்ல தொழிற்சாலையாயிற்று.
ஸர்க்கார் அதிகாரிகளும் அப்படியே சொல்லுகிறார்கள்:- "நீங்கள் பிழை செய்யக் கூடும். ஆதலால் சுயசிந்தையும், சுய காரியமும் உங்களுக்குத் தகாது"என்கிறார்கள். இங்ஙனம், மனுபராசராதிகளுடைய பல்லவியை இங்கிலீஷ்காரர் பாடும்போது நமக்கு செவி கூசுகிறது. இங்கிலீஷ்காரரிடம் அவர்களுடைய கொள்கைக் கிணங்கப் பின்வரும் மறுமொழி சொல்லுகிறோம்; 'பிழை செய்தால் பெரியஆபத்தில்லை. தனக்குத்தானே நாயகனாயில்லாதிருத்தல் பெரிய ஆபத்து. நம்மிஷ்டப்படி இடறி நடந்து பழகினாலொழிய நாம் உண்மைக்கு வந்து நிலைபெற முடியாது" என்கிறோம். பின்னும் சொலுகிறோம்: நம்மை ஆளுவோர் இப்போது 'ஜனாதிகாரம்' என்ற மோட்டார் வண்டியில் ஏறிப்போகிறார்கள்.ஆனால் இவர்களுடைய பழைய பார்லிமெண்ட் சபையாகிய வண்டி இரவில் பயணந் தொடங்கிய காலத்தில் ஒரு வழக்கத்திலிருந்து மற்றொரு வழக்கத்திற்கு மாறினபோது, அதன் இரைச்சல் வெற்றித்தேர்போலே கேட்கவில்லை. ஒரு வேளை ராஜாவின் சார்பு; பின்பு கோயிற் கக்ஷி; பின் ஜமீன்தார்கக்ஷி; பிறகு சாராயம் வடிப்போர் கக்ஷி; இங்ஙனம் கக்ஷி பேதமும், லஞ்சம் வாங்குதலும், கூச்சலும் சக்திஹீனமும் உடையதாய், அந்த வண்டி பக்கத்துக்குப் பக்கம் சரிந்து சரிந்துநடந்தது. ஒரு காலத்தில் அந்தச் சபை 'மெம்பர்கள் கூட்டத்துக்குவராவிட்டால் தண்டனை உண்டென்று பயமுறுத்தி அழைக்க "நேரிட்டதன்றோ? பிழைகளைக் குறித்துப் பேசுமிடத்தில் 'பார்லிமெண்ட் சபைகளின் தாய்' என்று சொல்லப்படும் பிரிட்டிஷ் பார்லிமெண்ட் சபை முன்பு அமெரிக்காவிலும், ஐர்லாந்திலும் செய்த பிழைகள் முதலாக, நேற்று 'டார்டனென்ஸ்,' 'மெஸொ-பொட்டேமியா' விஷயமாக எத்தனையோ பிழைகள்செய்யவில்லையா? இந்தியாவில் செய்திருக்கும் பிழைகள் கொஞ்சமா? மேலும் அமெரிக்கா ராஜ்யத்தில் பொருளாளிகள்நுழைந்து செய்யும் அக்கிரமங்கள் கொஞ்சமில்லை. 'த்ரெய்புஸ்'என்றவர்மேல் ஏற்பட்ட விசாரணையிலே, பிரான்ஸ் தேசத்து ராணுவ ஊழல்கல் வெளிப்பட்டன. ஆயினும், "ஸ்வராஜ்யமென்கிற ஜீவநதியானது எந்த வேகத்தால் பிழையாகிறகுழியிற் போய்விழுகிறதோ அதே வேகத்தால் அங்கிருந்து கிளம்பித் தனக்கேற்படும் இடறுகளைத் தானே நீக்கிக்கொள்ளும்'என்ற விஷயத்திலும் அத்தேசங்களிலேயுள்ள ஜனங்கள் சந்தேகப்படவில்லை."
நாம் வற்புறுத்தி மேலும் சொல்லத்தக்கதொன்றுண்டு: ஸ்வராஜ்யத்திலிருந்து ஸாமார்த்தியமும்,பாரபுத்தியும் உண்டாவதுடன் உயிருக்கே அதிகபல முண்டாகும். ஒரு கிராமம் அல்லது வகுப்பின் எல்லைக்குள் புத்தியைக் கட்டுப்படுத்தியிருப்போர் அங்ஙனம் இல்லாமல் பெரிய ராஜ்ய சிந்தனையும் அதற்குத் தக்க செய்கையும் பெறுவாரானால், மானுஷீகத்தைப் பற்றி அவர்களுக்கு விரிந்த உணர்ச்சியுண்டாகிறது. இந்த ஸௌகரியம் இல்லாமையால் இந்நாட்டில் ஒவ்வொருவனும் அரை மனிதனாகவே யிருக்கிறான். அவனுடைய யோசனைகளும், சக்திகளும்,ஆசைகளும், முயற்சிகளும் அற்பமாகவே யிருக்கின்றன.இங்ஙனம் வலிய வந்திருக்கும் உள்ளச் சிறுமை உயிர்ச்சேதத்திலும் பெரிய கேடாகும். ஆதலால் தவறுதல் நேரிடக்கூடும் என்பதைப் பொருட்டாக்காமல் நாம் சுயராஜ்யம் பெறக்கடவோம். பாதையில் இடறுதல்களை மாத்திரம் கருதி, எங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கலாகாது. இதுவே உண்மையான உத்திரம்."
இந்த மறுமொழியை ஒருவன் அதிகாரிகளிடம்சோர்வில்லாமல், மீட்டுமீட்டும் சொல்லித் தொல்லைப்படுத்தினால அவனை அதிகாரிகள் 'பந்தோபஸ்த்' பண்ணிவைக்கிறார்கள். ஆனால் அவனுக்கு ஸ்வதேசத்தாரின் மதிப்புஉண்டாகிறது. ஆயின் இதே மாதிரி ஜவாப்பை ஜாதிப்புரோஹிதரிடம் சொல்லப்போய், "ஐயரே, இது கலியுகமென்றும், மனிதனுடைய எளிய புத்தியைச் சுயேச்சைப்படி விட்டால் கெட்டுப்போகும் என்றும், ஆதலால் மூளையை உழைப்பதிலும், தலையைச்சாஸ்திரங்களுக்கு வணங்குதலே சிறந்ததென்றும் சொல்லிகிறீர்.இந்த அவமான வார்த்தைக்கு நாங்கள் அடங்கமாட்டோம்" என்று சொன்னால், அவர்களுடைய கண் சிவந்துபோய் உடனே ஜாதியைவிட்டுத் தள்ளும் படி உத்தரவு போடுகிறார்கள். ராஜாங்க விஷயமானால் வானத்தில் பறக்கும்படியாகவும், ஜாதி யாசாரமானால் கட்டையில் காலைக்கட்டிப்போடும்படியாகவும் இவர்கள் விரும்புகின்றனர். வலப்புறம் திருப்பவும் இடப்புறம் திருப்பவும் தோணியிலே சுக்கான்ஒன்றுதான் உண்டு. அது போலே, மனிதன் ராஜ்ய விஷயத்திலும் ஜாதியாசார விஷயத்திலும் இரண்டிலும் உண்மை நிலைபெற வேண்டுமானால், அதற்கு ஒரே வழிதான் உண்டு. இந்த விதியின் அனுசரணையிலேதான் சித்பூர்ரஸ்தாவுக்கும் சௌரிங்கி ரஸ்தாவிற்கும் உள்ள பேதம் தோன்றுகிறது. "எல்லாம் அதிகாரி கையில் இருக்கிறது. நம்முடைய கையைக்கட்டிக்கொண்டு நடப்பதே சரி" என்கிறதுசித்பூர் ரஸ்தா. சௌரிங்கி "ரஸ்தாவோ, "எமது கைக்குள் காரியங்கள் அடங்கி நடக்காவிட்டால், நமக்கு கையிருந்து பயன் என்ன?" என்று கேட்கிறது. தனது கைக்கும் தெய்வத்தின் கைக்கும் சம்பந்தம் உண்டென்று தெரிந்துகொண்டபடியால், 'சௌரிங்கி' உலக முழுதையும் வசப்படுத்திக்கொண்டது. இந்த நம்பிக்கையை இழந்துவிட்டபடியால் 'சித்பூர்'உலகத்தை இழந்துவிட்டது; அரைக் கண் மூடிமவுனியாய், நிஷ்டையின்பங்களை நாடுகிறது.
கண்ணை மூடிக்கொண்டால் ஒழிய, நம்முடைய அற்புதமான ஆசாரங்களைத் தவறாமல் அனுசரிப்பது ஸாத்யமில்லை. கண்ணைத் திறந்தாலோ, உலக முழுதையும் ஆளுகிற பொதுவான லோகவிதி நமக்குத் தென்படாமல் இராது. ஒரு கூட்டத்தாரேனும், ஒரு மனிதனேனும், இந்த விதியை வசப்படுத்தினால், அதிலிருந்து அதிகாரம், செல்வம்,விடுதலை என்ற பரிசுகள் கிடைக்கும். இந்த விதியைஉறுதியான அஸ்திவாரமாகக் கொண்டு ஐரோப்பிய நவீனநாகரீகம் நிலை பெற்றிருக்கிறது இதில் நம்பிக்கை யிருப்பதனால், அது பெரிய விடுதலை பெற்று நிற்கிறது.நாமோ கையைப் பிசைந்துகொண்டு, யஜமான் ஆக்கினைக்குக் காத்திருக்கிறோம். வீட்டிலே மூத்தவன், போலீஸ், தலையாரி, கோயில் குருக்கள் முதலியவர்களில்ஏதேனும் ஒன்றைப் பூஜைபண்ணி நம்முடைய சொந்த யோசனையையும், சொந்தச் செய்கையின் திறமையையும்ஆயிரம் தூளாக உடைத்து நான்கு பக்கத்துக் காற்றிலுமவீசி எறிந்து விடுகிறோம்.
இதற்கொரு காலேஜ் மாணாக்கன், "நாங்கள்இந்தக் கதையை எல்லாம் நம்புவது கிடையாது. வைசூரிக்குப்பால் குத்திக் கொள்ளுகிறோம். பேதிக்கு உப்புக் கொடுக்கிறோமவிஷ ஜ்வரம், கொசு வாயில் சுமந்து வரும் கண்ணுக்குத் தெரியாத பூச்சியால் உண்டாவதை அறிவோம். இவற்றை எல்லாம் தெய்வங்களின் கூட்டத்திற் சேர்க்கவில்லை" என்றுசொல்லக்கூடும். கொள்கை மாறக்கூடும். ஆனால் நாம் நமக்குநாயகராகாமல், புறத்தே ஓரதிகாரத்தை எப்போதும் குருட்டுத்தனமாக நம்பித் தொங்கும் குணம் நம்முடைய ஊக்கத்தை வேரறுக்கிறது. இப்படி எங்கும் சூழ்ந்த பயமானது நம் அறிவையும் உள்ளத்தையும் வசப்படுத்தி யிருப்பதால், நமதுமனம் கோழைப்பட்டிருக்கிறது. இதன் காரணம் என்னவென்றால்,உலக முழுதும் தழுவிய மாற்றொணாத ஸ்ர்வவிதியை நாம் நம்புவதில்லை. ஐயப்படுதலும், 'எது வந்துவிடுமோ, நாம் எப்படிஒன்றைத் துணிவாகச் செய்யலாம்' என்று திகைப்பதும் பயத்தின்குணங்களாகும். நமது ராஜாங்கத்தாரிடத்திலே கூட இந்தக் குணம் சில சமயங்களில் காணப்படுகிறது. ராஜாங்க யந்திரத்திலேஎப்போதேனும் ஓட்டை யுண்டாகி. அதன் வழியே பயம் நுழைந்து அதனால் அவர்கள் தமக்கினியவாகிய ஸ்வதர்மங்களைமறந்து தம் ஆட்சியை உறுதியாகத் தாங்கும் வேர்க் கொள்கையைக் கோடரியால் வெட்டுகிறார்கள். அப்போது தர்மமும் நீதியும் ஒதுங்கிப் போய், கௌரவத்தைக் காப்பாற்றவேண்டுமென்கிற எண்ணம் முன்னே நிற்கிறது. தெய்வ விதியைமீறி அழுகைக் கண்ணீரை அந்தமான் தீவில் மறைத்துவிட்டால்கசப்பு இனிப்பாய்விடும் என்று நினைக்கிறார்கள். 'ஸகல ரோகாநிவாரணி' என்று தான் ஒரு மருந்தைப் பாவனை செய்துகொண்டு, உலகப் பொது விதியைச் சிலர் உல்லங்கனம் செய்வதற்கு இஃதொரு திருஷ்டாந்தம். இதற்கெல்லாம். உட்காரணம் அற்பத்தனமான "பயமும் தன்னலம் வேண்டலும்;அல்லது, அற்பத்தனமான சூதினால் நேர் வழியை விட்டு விலகமுயலுதல். இங்ஙனம் நாம் எண்ணத் தொலையாத அதிகாரிகளுக்கு, பூஜை நைவேத்தியம் பண்ணி குருட்டு அச்சத்தால், மானுஷீக உரிமைகளைப் புறக்கணிக்கிறோம். பௌதிகசாஸ்திரத்திலும் ராஜ்ய சாஸ்திரத்திலும் நாம் எத்தனை உயர்வாகப் பரீக்ஷை தேறிய போதிலும், பிறர் உத்திரவுக்குக் காத்திருப்பதாகிய ஊறின வழக்கத்தை நம்மால் விட முடியவில்லை.தற்கால வழியை அனுசரித்து நாம் ஜனாதிகார சபைகள் ஏற்படுத்தினால் அவற்றிலும் எவனாவது ஒருவன் நாயகனாகி மற்றவர்களை மேய்க்கும் தன்மை உண்டாகிறது. இதன் காரணம்யாதெனில், பொது ஜனங்கள் தன்னை மறந்திருத்தல், தூங்குதல்,உண்ணுதல், குடித்தல், கலியாணம் பண்ணுதல், பாடையேறுதலமுதலிய ஸகல காரியங்களையும் பிறருடைய ஆணைப்படியேசெய்து வழக்கப்பட்டிருக்கிறார்கள்.
பிராமணன் ஒருவன் குடத்தில் கொண்டுவரும்ஜலம் அழுக்காக இருப்பதால் குடிக்கத்தகாதென்றும், சண்டாளன்ஒருவன் சுத்தமாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு வந்த நீர் சுத்தமாக இருப்பதால் குடிக்கத் தகும் என்றும் நான் சொன்னால்,வெறுமே குயுக்தி பேசுகிறான் என்று சொல்லி என்னைக் கண்டிப்பார்கள். ஏனெனில், எனது கொள்கை 'யஜமான் உத்தர'வுடன் ஒட்டவில்லை.
'ஒட்டாவிட்டால் என்ன குடிகெட்டுப் போயிற்று?''என்று நான் கேட்டால் உடனே என்னை ஜாதியிலிருந்து தள்ளிவிடுவார்கள். என்னை விருந்துக்குக் கூப்பிடமாட்டார்கள். நான் செத்துப்போனால், சாவுக் கிரியைகளுக்குக் கூட வரமாட்டார்கள்.
இப்படி உலக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் குரூரமான கொடுங்கோன்மை நடப்பதனால் ஜனங்களுக்கு நன்மையென்று நம்புவோர் ராஜாங்கத்தில் கூசாமல் பரிபூர்ண விடுதலை கேட்பது மிகுந்த வியப்புக் கிடமாகிறது. முன்பு, நமது தேசத்திலே, உபநிஷத்துக்காரர் தெய்வத்தின் விதியைக் குறித்துப் பேசும்போது சொல்லுகிறார்;'தெய்வத்தின் விதியை மாற்ற முடியாது. அது எங்கும் எப்போதும் இசையும்' என்று. இதை நமது முன்னோர் கண்டிருந்தனர். அந்த விதி நித்யமானது, க்ஷணிகம் அன்று. ஆதலால் அதை நாம் அறிந்துகொண்டு செய்கையில் பயன்படுத்தவில்லை. எத்தனைக் கெத்தனை அவ்விதியை நாம் ஸ்வீகரிக்கிறோமோ, அத்தனைக்கத்தனை நமது பாதையில் உள்ள தடைகள் விலகும். இந்த விதியின் ஞானமே இயற்கைநூல் (ஸயின்ஸ்) என்று சொல்லப்படும். இந்த 'ஸயின்ஸ்' வலிமையாலன்றோ ஐரோப்பா தற்காலத்தில், "பூமியில் விஷக்காய்ச்சல் இல்லாமல் செய்து விடுவேன். மனிதரின் வீடுகளில் சோற்றுப்பஞ்சமும் கல்விப்பஞ்சமும் இல்லாமல் செய்துவிடுவேன். ராஜ்யத்தின் பொதுநன்மைக்கும் மனுஷ்யனுடைய ஸ்வதந்திரத்திற்கும் முரண்படாமல் செய்வேன்" என்று துணிவுடன் கூறுகிறது.
'அறியாமையால் கட்டும், அறிவினால் விடுதலையும் கைகூடும்' என்பதை முன்னோர் அறிவார். பொய் எது? தன்னை ஸர்வத்திலிருந்து பிரிவாகக் காணுதல்.உலகமும் தானும் ஒன்றெனக் காண்பதே உண்மையறிவு. 'இத்தனை பெரிய உண்மையை அக்காலத்தில் எப்படிக் கண்டுபிடித்தார்கள்' என்பதை இப்போது நினைக்க வியப்புண்டாகிறது.பிறகு அரண்ய ரிஷிகளின் காலம் மாறி, பௌத்த சந்நியாசிகளின்காலம் வந்தது. மேற்கூறிய மகத்தான ஞானத்தை உலகத்திலிருந்துபிரித்து 'உலகத்தைத் துறப்பதே முக்தி' என்று சொல்லத் தொடங்கி விட்டார்கள். இங்ஙனம் உண்மைக்கும் பொய்க்கும் ஒப்பந்தமுண்டாய் இடையே பாகச்சுவர் போடப்பட்டது. ஆகவே,இக்காலத்தில் ஜாதியாசாரங்களில் எத்தனை அநாகரீகமும் மடமையும் இருந்த போதிலும், உண்மை கண்டவரின் சார்பிலிருந்து யாதொரு ஆட்சேபமும் பிறக்கவில்லை. உண்மைபபக்கத்தார் இதற்கெல்லாம் இடங்கொடுத்தே பேசுகிறார்கள். மரத்தின் கீழ் இருந்து சந்நியாசி சொல்லுகிறான்:- 'தன்னிடம்உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் காண்பவனே உண்மை காண்பான்' என்று. அது கேட்ட சம்சாரி தன்னிடம்உள்ள சிறந்த வஸ்துக்களை சந்நியாசியின் திருவீட்டுக்குள்ளேபோட்டுவிடுகிறான். ஆனால், தெய்வத்தின் பொது விதிக்குஅடங்கி நடப்போருடைய வீட்டிற்கு வண்ணான், அம்பட்டன் போகக்கூடாதென்று சம்சாரி விதி போடும்போது, சந்நியாசிஅதனை மகமலர்ச்சியுடன் ஏற்றுத் தனது ருஷ்டி மண்சாத்திஆசீர்வதிக்கிறான். இப்படித்தான் நமது ஜாதி வழக்கே கெட்டுப்போயிற்று. உண்மைக்குப் பரிந்து பேசுவோர் யாரும் இல்லாமலே போய்விட்டது. இதனால் பல நூற்றாண்டு நேர்ந்த அவமானத்தை-யெல்லாம் நாம் பொறுத்துக்கொண்டு அழுது கொண்டிருக்கும்படி நேரிட்டது.
ஐரோப்பாவில் அப்படி இல்லை. அங்கேஉண்மையை மனதிற்குள் மறைக்காமல் வழக்கத்திற் காட்டுகிறார்கள். ஜனக்காட்டிலும் ராஜ்யத்திலும் ஏதேனும்குற்றம் வெளிப்பட்டால் அதைப் பொதுஜனங்கள் உண்மைவழக்கால் சோதித்துத் திருத்த வழியுண்டு. இதனால் கிடைக்கும் சக்தியும் விடுதலையும் எல்லாருக்கும் பயன்பட்டுநம்பிக்கையையும் தைரியத்தையும் உண்டாக்குகின்றன. இந்தஉண்மை மாயமந்திர இருளில் மறைந்து கிடக்கவில்லை.திறந்த வெளியில், எல்லோரும் காணும்படி தானும் வளர்ந்துபிறரும் வளரும்படி செய்கிறது.
பல நூற்றாண்டு நாம் வாயை மூடிக்கொண்டுஅவமானப்பட்டதெல்லாம் ஒன்றுசேர்ந்து கடைசியில் அந்யராஜ்யமாகப் பரிணமித்தது. கை எப்போதும் உடம்பில் நோயுள்ள இடத்தைப் போய்த் தீண்டுவது போலவே நம்முடையகருத்து முழுதும் நம்மை ஆளும் மேற்குத் திசையாருடையராஜ்ய நெறியில் செல்லுகிறது. மற்றதை எல்லாம் மறந்து, 'எங்களுடைய இஷ்டத்தைச் சற்றே கவனித்து எங்களாட்சி நடக்கவிட வேண்டும். வேண்டினாலும் வேண்டாவிடினும், புறத்திலிருந்து விதிநியமங்கள் எங்கள் தலைமேல் பொழியாதுஇருக்கவேண்டும். ராஜ்யபாரம் முழுவதும் எங்களுக்குச் சுமையாகாதபடி, சக்கரங்கள் போட்ட யந்திரமாக்கி அதை உங்களுடன் நாங்களும் சேர்ந்து தள்ள இடம் கொடுக்க வேண்டும். பொறுப்பில்லாத அன்னியரின் ஆட்சியிலிருந்து விடுதலைபெற வேண்டும் என்ற பிரார்த்தனை இப்போதும் உலகத்தில் எல்லாத் திசைகளிலும் எழுகிறது. காலசக்தியின் தூண்டுதலால், இந்தப் பிரார்த்தனையில் நம்முடைய வாக்கையும்சேர்த்தது நன்றாயிற்று. அப்படியன்றி இப்போதும் வழக்கம் போல'யஜமானன் 'உத்திரவை' ஒப்புக் கொண்டு நடந்தால் அது நமக்குத்தீராத அவமானமாக முடிந்திருக்கும். இதனால் நம்முள்உண்மையின் ஒரு கிரணம் நுழையக்கூடிய துணை "இன்னும் ஏதோ மிஞ்சி இருப்பதாகத் தெரிகிறது. நாம் பார்த்தது உண்மையின் கிரணம் ஆனபடியாலே தான், நம்மையசையாதபடிபலிமிருகம் போல கட்டிப்போட்டிருந்த வீண்தற்புகழ்ச்சியை நான்நம்பிக்கையுடன் பழிக்கின்றேன். ராஜாங்கத்தாரை நோக்கி 'ஸாம்ராஜ்ய சபைகளில் எங்களுக்கு ஸ்தானம் வேண்டும்' என்றுகேட்பதும், ஜனங்களை நோக்கி, 'ஜாதியாசாரங்களிலும் சொந்தக்காரியங்களிலும்கூட எஜமான் போட்ட கோட்டை மீறி நடக்காதே'என்று சொல்வதும் ஒரேவித கர்வத்தால் உண்டாவது வினோதமன்றோ?
இதற்குப் பெயர் 'ஸனாதன தர்ம புனர் உத்தாரணம் என்கிறோம். ஸனாதன கக்ஷித் தலைவர் நாம் ஒரு கண்ணால் உறங்கி மற்றொரு கண்ணால் விழித்திருக்கும்படி அஸாத்ய உத்தரவு போடுகிறார்கள்.
கடவுளுடைய கோபமாகிய கழி நம் முதுகின்மேல் அடிக்கும்போதும், தேசாபிமானத்தால் மனம் புண்ணாகி,"மூங்கிற் காடுகளை எல்லாம் வெட்டிப் போடுவோம்" என்றுகூவலானோம். நாம் எத்தனை வெட்டினாலும் மூங்கிற்காடு உலகத்தில் மிஞ்சி இருக்கத்தான் செய்யும். காடென்ன செய்யும்?குற்றம் நமது. அது யாதெனில்:- நாம் உண்மையைவிட அதிகாரம்மேல் என்று மதிக்கிறோம். கண்ணைக் காட்டிலும் தோல் முகப்படாம் மேல்' என்று நினைக்கிறோம். நாம் இந்தக் குணத்தை நீக்கும் வரை, ஏதேனும் ஒரு காட்டில் நம்மை அடிக்க யாதேனும் ஒரு கழி மிஞ்சி இருக்கத்தான் செய்யும். ஐரோப்பாவிலும் முன்ஒரு காலத்தில் எல்லா விவகாரங்களிலும் பாதிரிகளுடைய அதிகாரம் மூர்த்தன்யமாய் நடந்தது. எங்கும் வீசி இருந்த பாதிரிவலையை அறுத்தபிறகுதான், ஐரோப்பிய ஜனங்கள் ஸ்வராஜ்யப்பாதையிலே கால் வைக்க இடம் உண்டாயிற்று. இங்கிலாந்து மாத்திரம் தீவானபடியாலும் கோயிலின் ராஜதானியாகிய ரோமாபுரியிலிருந்து மிகத் தூரம் ஆனபடியாலும் பிழைத்தது. இங்கிலாந்திலும் கோயில் (சர்ச்) அதிகாரம் முற்றிலும் நசித்து விடவில்லை. 'இங்கிலீஷ் கோயில்' பாட்டியைப் போல் முன் நடத்திய ஸர்வாதிகாரம் நீங்கி இப்போது இரக்கத்தால் அதுவும்இருந்து போகட்டுமென்று விடப்பட்டிருக்கிறது.
இங்ஙனம் 'மாமூல் கிழவி'யை இங்கிலாந்து தேசத்தார் அசைத்தது போலவே, ஸ்பெயின் தேசத்தார் செய்யக்கூடவில்லை. முன்னொரு காலத்தில் ஸ்பெயின் தேசத்தார் பாடுமிகவும் கொண்டாட்டமாக இருந்தது. அந்த அநுகூலத்தை அவர்கள் ஏன் இழந்தார்? 'மாமூல் கிழவி'க்கு மணியம் கொடுத்தமையாலேதான். ஸ்பெயின் தேசத்து பிலிப் ராஜா இங்கிலாந்தின் மீது சண்டை தொடுத்த காலத்தில், ஸ்பெயின்தேசத்துக் கப்பற் படை விவகாரங்களும் கோயில் விவகாரங்களைப்போலவே வலிய தளைகளுக்கு உட்பட்டிருந்தமை வெளியாயிற்று.இங்கிலீஷ் கப்பற் படையோ மிகச் சிறந்த சேனாதிபதிகளின் கீழே,தான் மிதக்கும் கடலலைகள் எப்படி விடுதலைகொண்டு வீசும் காற்றுக்கு ஒத்துச் சொல்லுமோ அதுபோல தானும் சென்றது. ஸ்பானியக் கப்பற்படையில் ஜாதிமரபுப்படி அதிகாரம் வகுத்திருந்தது. அது அசையாத மாமூலின் இரும்புப்பிடியினின்றுவிலக வழியில்லாமல் போயிற்று. இங்ஙனம் ஐரோப்பாவில் கோயிற்கட்டுக்குக் குருட்டுத்தனமாகக் கீழ்ப்பட்டிருந்த தளையைவெட்டித் தன் மதிப்பைக் காக்கக் கற்ற ஜாதியாரே தலைதூக்குவது இயல்பாயிற்று. ருஷ்யாவில் அவ்வாறு செய்யாத படியால், அங்கே உத்தியோகஸ்தர் காடாகப் பரந்து, ஜனங்கள்மிகச் சிறிய சர்க்கார் அதிகாரிக்கும் மிகவும் அற்பமான பழஞ்சாஸ்திரக் கட்டளைக்கும் முழந்தாள் படியிட்டு ஆண்மை இழந்துபோகின்றனர்.
ஸமயம் (மதம்) வேறு; குருக்கள் 1கட்டுப்பாடு வேறு என்பதை மறக்கலாகாது. அவை ஒன்றுக்கொன்று தீயும் சாம்பரும் போலாம். மதத்தை மீறி, கட்டுப்பாடு சொல்லும் போது நதியை மணல் மூடுவது போல் ஆகிறது. அங்கு நீர்கெட்டுப் பாலைவனம் போல் தோன்றும். 'இந்த நிலையைக் கண்டு மகிழ்ச்சி அடைவோர் மிகக் கேடு கெட்டவர்கள்' என்பதுவெளிப்படை.
ஒருவன் மற்றொருவனைக் கஷ்டப்படுத்தினால்,இருவருக்கும் கெடுதி என்று (சமயம்) மதம் சொல்லுகிறது.
மகள் விதவையாகிப் பட்டினி கிடக்கும்போது'இன்ன திதியில் அவளுக்குத் தாகத்துக்கு ஜலம் கொடுத்தாலபெற்றோர்களுக்குப் பாவம்' என்று குருக்களின் கட்டுப்பாடுசொல்லுகிறது. 'பச்சாத்தாபத்தாலும் ஒருவன் பாபத்தைக் கழுவலாம்' என்று ஸமயம் சொல்லுகிறது. 'கிரகணத்தன்று ஒருவன் இன்ன நீரில் முழுகினால்தான் பாவம் தீர்வதுடன் பதினான்கு தலைமுறை பிதிர்கள் செய்த பாவமும் தீரும்' என்று கட்டுப்பாடு சொல்லுகிறது. 'மலைகளையும் கடல்களையும் கடந்து போய், இவ்வழகிய உலகத்தின் வியப்புகளைக் கண்டு களிக்கவேண்டும்' என்று ஸமயம் சொல்லுகிறது'கடலைக் கடந்தவன் மண்ணிற் புரண்டு பிராயச்சித்தம் பண்ணவேண்டும்' என்று கட்டுப்பாடு சொல்லுகிறது. 'எக்குடிப் பிறந்தாலும், உண்மையுடையவன் தொழத்தக்கவன்' என்று ஸமயம் சொல்லுகிறது. 'பிராமணனாகப் பிறந்தவன் அயோக்கியனாக இருந்த போதிலும் அவன் பாத தூளை, பிறர்சிரத்தில் தரிக்கலாம்' என்று கட்டுப்பாடு சொல்லுகிறது. சுருக்கிச்சொன்னால், ஸமயம் விடுதலை போதிக்கிறது; குருக்கள்கட்டுப்பாடு அடிமை நிலையைப் புகழ்ந்து கீர்த்தனம் பாடுகிறது.
பக்தி குருட்டுப் பக்தியாக இருந்தாலும் அதிலொருவெளியழகுண்டு. இவ்வழகை நமது நாட்டில் யாத்திரை செய்யும்அன்னியர் சிலர் கண்டு மெச்சுகிறார்கள். சித்திரக்காரன் ஒருவன் இடிந்த வீட்டின் புராதன அழகுகளைப் பார்த்து மயங்கி, 'அதில்குடி இருக்க யோக்யதை இல்லை' என்பதை மறந்துவிடுவது போலே கங்கா ஸ்நானத்துக்குத் திருவிழாக் காலத்தில் பாரிஸால்நகரத்திலிருந்து ஆயிரக் கணக்கான யாத்திரைக்காரர் - பெரும்பகுதி ஸ்திரீகள் - வருவதைப் பார்த்திருக்கிறேன். அடடா! புகைத் தோணியிலிருந்து புகை வண்டிக்கும் புகைவண்டியிலிருந்து புகைத்தோணிக்கும் மாறுகிற கூட்டங்களில எல்லாம் அவர்கள் படும் கஷ்டத்துக்கும் அவமானத்துக்கும் ஓய்வில்லை. அவர்களுடைய பரிதாபத்துக்கிடமான பொறுமையிலும் ஒருவித அழகு இருக்கத்தான் செய்கிறது.அவர்களுடைய துயரங்கள் எப்போதும் அழகு பெறுகின்றன.வீண் கிரியை சடங்குகளுக்கு இடையே அவர்கள் வளர்க்கும்பிள்ளைகள் இவ்வுலக இன்பங்களுக்குப் பல்லைக் காட்டியிருந்துபரலோக நிழல்களைக் கண்டு நடுங்குகிறார்கள். தாம் நடக்கும்பாதையில் வளைவுதோறும் தாமே தடைகள் கட்டுவது அவர்களுடைய வாழ்க்கையின் ஒரே தொழிலாகக் காணப்படுகிறது. அத்தடை உயர்வதையே அபிவிருத்தி என்று கருதுகிறார்கள்.
இப்படி அவர்கள் தண்டனை அடையுமகாரணம் யாதெனில், ஈசனால் மனிதனுக்குக் கிடைத்தபேறுகளில் சிறந்தபேறாகிய தியாக சக்தியை இவர்கள் துர்விநியோகம் செய்கிறார்கள். கணக்குக் காட்டும் காலம்வரும்போது இவர்களால் நஷ்டக் கணக்குத்தான் காட்டமுடியும். இன்னும் ஓர் இடத்தில் லக்ஷக்கணக்கான ஜனங்கள், ஆணும் பெண்ணுமாக ஸ்தல தரிசனம் செய்து புண்ணியம்தேடப்போயினர். பாதையோரத்தில் ஒருவன் சாகக் கிடந்தான்.அவனுடைய ஜாதி இன்னதென்று தெரியாத காரணத்தால்,அவனுக்கு யாரும் தாகத்துக்கு ஜலம் கொடுப்பாரில்லை.பெருஞ் செலவு செய்து புண்ணியம் தேடப்போகும்இவர்களுடைய குருட்டுப் பக்தி எத்தனை அழகாகத் தோன்றியபோதிலும் இவருடைய காருண்யம் எத்தனை பயங்கரமானதுபார்த்தீர்களா! ஒரு தண்ணீரில் அனைவரும் சேர்ந்து விழும்படிதூண்டுகிற குருட்டுத் தன்மைதான், இனம் தெரியாத மனிதர்கஷ்டப்படும் போதும் இரக்க முண்டாகாமல் செய்துவிடுகிறது.தான் கொடுத்த சிறந்த வரத்தை இவர்கள் இங்ஙனம் துர்விநியோகம் செய்வதில் ஈசனுக்குத் திருப்தியில்லை.
படிப்பு, பக்தி, ஒழுக்கம் மூன்றும் இல்லாத கோயிற்குருக்களுடைய காலில், ஸ்திரீகள் பணத்தைக் கொட்டுவதை நான் பார்த்திருக்கிறேன். இங்ஙனம் செய்யும்வன்மையால் இவர்கள் உண்மைக்கும் கருணைக்கும் அருகே ஓர் அடியளவேனும் நெருங்கி வந்தனரா? இல்லை.
இங்கு ஓராக்ஷேபம் சொல்லலாம்:- "குருபுண்ணிய ஆத்மா என்று நம்பித்தானே பணம் கொடுத்தார்கள்.இந்த நம்பிக்கை அவர்களுக்கில்லாவிட்டால் மேற்படிபணத்தைச் செலவின்றி வைத்திருப்பார்கள். அல்லது சொந்தச்செலவுக்குச் செலவிட்டிருப்பார்கள். குருவின் கையில் கொடுத்தது விசேஷந்தானே?" என்று கேட்கலாம். தனக்காகச்செலவிட்டால் பணத்தின் பயனாவது கண்டிருப்பார்கள். தெய்வ பக்தியினால் செய்தோமென்ற பொய்மயக்கத்துக்கு அடிமைப்பட்டிருக்க மாட்டார்கள்.
வெளியே ஒரு நாயகனுடைய ஆக்கினைக்குஅஞ்சித்தன் உயிரை இழக்கத் துணிபவன் தனக்குத்தானே நாயகனாகும்போது, தர்மத்துக்காக உயிர் கொடுக்காமல் போகிறான்.
இங்ஙனம் நமது கிராமங்களில், ஆரோக்கியம்,கல்வி, உயிரின்பம் யாவும் வற்றிப் போய்விட்டன. 'கிராமத்தார் தம்முடைய சக்திகளைத் தாம் அறியும்படி செய்தாலொழிய அவர்களைக் காப்பாற்ற வேறு வழியில்லை'என்று கருதி நான் ஒரு கிராமத்தில் பிரயத்தனம் செய்தேன்.அந்தக் கிராமத்தில் ஒரு பக்கத்துக்கு ஜலம் ஒரு துளிக்கூடக்கிடையாது. தீ பிடித்தெரிந்தது. தழல் வீசி எரிகையிலே, கிராமத்தார் கூடியழுவதை யொழிய வேறொன்றும் செய்யமாட்டாமற் போயினர். நான் அவர்களிடம் சொன்னேன்:- "நீங்கள் பிரயாசை கொண்டு கிணறு தோண்ட இணங்கினால்கல் சுண்ணாம்புக் கிரயம் நான் கொடுக்கிறேன்" என்றேன்.கஷ்டத்தில் பாதி அவர்களுடையதாகவும் புண்ணியம்முழுவதையும் நான் கொள்ளையிட விரும்பிய தந்திரத்தைமெச்சித் தங்களால் முடியாதென்று சொல்லிவிட்டார்கள். அந்தக்கிணறு இன்னும் தோண்டியாகவில்லை. தண்ணீர்ப் பஞ்சம் இங்கே தீராமலேதான் இருக்கிறது. அக்நி உத்ஸவம் அடிக்கடிநடந்து வருகிறது.
ஆகவே நமது கிராமக் கஷ்டங்கள்தீராமல் இருப்பதன் காரணம் யாதெனில், ஒரு காரியம்செய்வதற்கு மோக்ஷ புண்ணியத்தை விரும்பிச் செய்தாலொழிய வேறு வழியில்லை. ஆகவே, ஒவ்வொருகுறையும் தெய்வந்தானே வந்து தீர்க்க வேண்டும்; அல்லதுமோக்ஷத்தை வேண்டி யாராவது செய்தாலுண்டு. மற்றபடிதாகத்துக்கு ஜலம் இல்லாமல் செத்தாலும் சாவார்களேயன்றி,கிராமத்தார் தாமாக ஒருகிணறு தோண்டிக் கொள்ளமாட்டார்கள்.இதற்குக் கிராமத்தாரைக் குறை கூறுவதிற் பயனில்லை. 'மாமூல் கிழவி' அபினி கொடுத்து அவர்களைப் பாதிததூக்கத்தில் வைத்திருக்கிறாள். ஆனால், படித்த பிள்ளைகள்அந்தக் கிழவியின் ஸ்துதியைப் பாடக் கேட்கும்போது, எனக்குஆச்சர்ய மிகுதியால் பேசமுடியாமல் போகிறது. "ஆஹா; இந்தககிழவி எத்தனை நல்ல மருத்துவச்சி; இவள் கைக்குள் நமதுதேசம் இருப்பது மஹிமையன்றோ! இவள் மடியிலிருந்தபடியேநமக்கு ஸ்வராஜ்யச் செங்கோலும் கிடைத்து விட்டால், எத்தனைநன்றாக இருக்கும்!" என்கிறார்கள்.
பட்டினி, தொத்து வியாதி, பஞ்சம், - இவை தலைதூக்கி ஆடுகின்றன. நம்மைப் புலியும் திருடரும் அடிக்காமற்காத்துத் துப்பாக்கி வைத்துக் கொள்ளும்படி ராஜாங்கத்தார்அனுமதி கொடுக்காமல் இருப்பது போலவே, மேற்கூறியதுன்பங்களைத் தடுப்பதற்குரிய உபாயங்களைத் தேடவொட்டாமல் ஜாதியாசாரத் தலைவர் தடுக்கிறார்கள் ஆனால் இவர்கள் நம்மிடையே 'தற்காப்புக்கு நீங்கள் கருவிகள்தேடலாமே. நீங்கள் ஸயின்ஸ் படித்து அதைத் தற்காப்புக்குஉபயோகப்படுத்தக் கூடாதென்று யாவரும் தடுப்பாரில்லையே"என்று கூறலாம். உண்மைதான்.
'தற்காப்புக்குரிய ஆயுதங்கள் நமக்குக் கிடைக்கவொட்டாமல் செய்துவிட்டார்கள் எனில் அதிசயோக்தியாகும்.ஆனால் அவற்றில் பயிற்சி பெற இடமில்லாமல் செய்வதற்குவேண்டிய முன் ஜாக்கிரதை எத்தனை உண்டோ அத்தனையும்பண்ணி வைத்திருக்கிறார்கள். நமது தேசத்தார் ஒரு பக்கம்,இராஜாங்கத்தார் ஒரு பக்கமாக, நம்மைச் சூழ ஏற்படுத்திஇருக்கும் எண்ணற்ற விதிகளைக் கடக்கக் கூடாதென்றபயத்தினால் நாம் சக்தி இழந்து, நம்மிடம் துப்பாக்கி இருந்தால்,திருடரால் ஏற்படும் விபத்தைக் காட்டிலும் துப்பாக்கியால்அதிக விபத்து நமக்கே உண்டாகும் போல் இருக்கிறது.
இந்தக் கஷ்ட தசையில் நாம் இருப்பதற்கு அன்னியர் அரசாட்சியே காரணம் என்றுசொல்லும் கக்ஷியை இப்போது ஆராய்ச்சி செய்வோம்.பிரிட்டிஷ் ராஜ்யத்தின் வேர்க்கொள்கை யாதெனில் 'ஜனங்கள்ஆட்சியில் கலக்க வேண்டும்' என்பதேயாம். அன்னியர் யாரும்பொறுப்பின்றி அரசு செய்யும் முறைமையை அக்கொள்கைகண்டிக்கிறது. நம்மிடம் இந்த விஷயத்தை அவர்கள் மறைக்கவில்லை. ஸர்க்கார் பள்ளிக்கூடங்களில் இதை நமக்குப்பஹிரங்கமாகக் கற்றுக் கொடுக்கிறார்கள். இதைப்பரீக்ஷைக்கு உருப்போடுகிறோம். இந்த அறிவை இனி நம்மிடமிருந்து பறிக்கஇடமில்லை. நம்முடைய காங்கிரஸ் சபைகளும் சங்கங்களும் இந்தக் கொள்கையை ஆதாரமாக உடையன. ஐரோப்பிய ஸயின்ஸ் தன் இயற்கையாலேயே எல்லாருக்கும் கிடைக்கத்தக்கதாக இருப்பதுபோல், மேற்படி பிரிட்டிஷ் ராஜ்யக் கொள்கையும் தன் இயற்கையாலேயே பாரத தேசத்துஜனங்களின் அங்கீகாரத்தை வேண்டுகிறது. ஹிந்து தேசத்துப்பிள்ளைகளுக்கு ஐரோப்பிய ஸயின்ஸ் கற்றுக் கொடுக்கக்கூடாதென்று சொல்லும் ஆங்கிலேயர், ஒன்று, அல்லது பத்து,அல்லது ஐந்நூறுபேர் இருக்கக்கூடும். ஆனால், அந்த ஸயின்ஸ் (சாஸ்திரமோ) பிறப்பிடத்தையும் நிறத்தையும் பொருட்டாக்காமல் எல்லோரும் வந்து தன்னைப் படித்துப்பயன் பெறும்படி கூவியழைத்து, அவ்வாங்கிலேயரை அவமானப்படுத்தும். அதுபோல், ஐந்நூறு அல்லது ஐயாயிரம்ஆங்கிலேயர் பிரசங்கங்களிலும் பத்திரிகைகளிலும் ஹிந்துதேசத்தார் ஸ்வராஜ்யம் பெறுவதைத் தடுக்க வேண்டுமென்று உபந்நியஸித்தாலும், பிரிட்டிஷ் ராஜ்ய கொள்கையானது பிறப்பிடத்தையும் நிறத்தையும் பொருட்டாக்காமல் எல்லோரும்தன் பக்கம் சேரும்படி கூவி இவ் வாயிரக்கணக்கான ஆங்கிலேயர் சொல்லும் வார்த்தையை இகழ்ச்சிக்கு இடமாக்குகிறது. 'பிரிட்டிஷ் கொள்கைகள் நம் போல்வார்க்குததகுதியில்லை' என்ற அநாகரீகமான மறுமொழி சொல்லக்கூடும்.பிரம்ம ஞானமும் விரிந்த வாழ்வும் சூத்திரனுக்குக் கிடையாதென்று முன்பு பிராமணர் விதிபோட்டது போலேதான்.
ஆனால், பிராமணன் தனது ஸ்தானத்தைமுன் ஜாக்கிரதையலே கெட்டிப்படுத்திக் கொண்டான். புறத்தைஒடுக்கு முன்பு ஜனங்களின் அறிவை ஒடுக்கி விட்டான். அறிவின்வேர்களைச் சூத்திரனிடமிருந்து பறித்து விட்டபடியால் இவன் ஸ்வதந்தர கார்யம் செய்ய ஸாத்தியப்படவில்லை. பிறகுசூத்திரனுடைய தலை பிராமணனுடைய பாததூளியிலேஈடுபட்டிருப்பதை ஸாவதானமாகக் காக்க வேறு சிரமம் வேண்டியதில்லை ஆயிற்று. ஆனால் நம்முடைய பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் விடுதலைக்கு வழிகாட்டும் அறிவுக்கதவை முற்றிலும்அடைத்துவிடவில்லை. அதிகாரிகளுக்குப் பச்சாத்தாபம் உண்டாய்,இங்கொரு கதவை அங்கொரு கதவை அடைப்பதாகிய முயற்சியைமிகத் தாமஸமாகக் கைக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும்,'சுகத்தை உத்தேசித்துத் தர்மத்தைக் கைவிடுதல் ஆத்ம சக்திக்குவழியில்லை' என்பதை அவர்களாலே கூட மறக்கலாவதில்லை.
பிரிட்டிஷாருடைய உட்குணத்தில் நம்ஸ்வதந்திரங்கள் புதைந்து கிடக்கின்றன. இந்த ஸந்தோஷகரமான உண்மையை நமது முழுவலிமையுடன்புத்தியில் நிறுத்திக் கொண்டோமானால், அது நிறைவேறுவதற்காக, நாம் கஷ்ட நஷ்டங்களுக்கு உட்படுதல்எளிதாகும். பழைய சாத்திரப்படி "அடங்கி நடப்பதை"க்கைப்பிடித்தோமோனால், நமக்கு மகத்தான ஆசாபங்கம் நேரிடும். இரண்டு வகைகளில் ஏற்கனவே இது வெளிப்பட்டுநிற்கிறது. ரஹஸ்யக் கூட்டத்தாரின் கொடுஞ் செயல்கள் ஒருவகை, நம்முடைய கூட்டத்து ராஜ தந்திரிகள் தர்க்கம் பண்ணுகிற வியர்த்தம் மற்றொரு வகை. "இந்த வைஸ்ராய்நல்லவரா? அந்த வைஸ்ராய் நல்லவரா? 'மார்லி' வந்தால்நமக்கு நிறையச் சீர்திருத்தம் கிடைக்குமா கிடைக்காதா?வீட்டுப் பூனை காட்டுக்குப் போனால், காட்டுப் பூனைபோலேகாட்டுத் தனமாய் விடுமா, ஆய்விடாதா?"
இருந்த போதினும், நாம் மானுஷ்ய ஜாதியினிடம்அவநம்பிக்கை கொள்ளக்கூடாது. பிரிட்டிஷ் ராஜ்யத்தின்அதன் வலிமை ஒன்று மாத்திரமே பெரிதன்று. அதன் அஸ்திவாரக் கொள்கைகள் அதனிலும் பெரியன என்பதைநாம் மனதார ஒப்புக்கொள்ளுகிறோம். அடிக்கடி இதற்குவிரோதமாக நடக்கக்கூடும். 'லோபம், அதிகார விருப்பம்,கோபம், பயம், கர்வம், இவை எல்லாம் தொழில் செய்வதைநாம் பார்க்கலாம்' என்பது மெய்தான். மஹிமையும், தீரமும்,விரதமும், பக்தி விசுவாசங்களும் உடையவராகிய ராஜ ஜாதியாரிடத்தில் உள்ள நல்ல அம்சங்களுடன் நாம் ஒட்டலாம்.அங்கே சத்துருக்கள் நம்மை எங்ஙனம் தாக்கிய போதிலும்,நாம் வெற்றி பெறுவோம். நினைத்த பொழுதெல்லாம், புற வெற்றி கிடைக்காவிடினும், அகவெற்றி நிச்சயம். நாம்அற்பர்களாய்ப் பயம் கொண்டிருந்தால், நம்மை ஆளுவோரின்பெரிய கொள்கைகளையெல்லாம் நமது மட்டம் ஆக்கிவிடுவோம். அவர்களுடைய கெட்ட குணங்களே தலை தூக்கஇடங்கொடுப்போம். பிராமணன் தன்னைக் கீழ் ஜாதி என்பதைச்சூத்திரன் எப்பொழுது ஒப்புக்கொண்டானோ, அப்பொழுதுபிராமணனுக்குப் பள்ளம் தோண்டியாய் விட்டது. எளியவன்வலியவனுக்குச் செய்யும் தீமை, வலியவன் எளியவனுக்குச்செய்யும் பகைமைக்கு நிகராகக்கூடும். ஒருமுறை ஒரு உயர்ந்தஸர்க்கார் உத்தியோகஸ்தர் என்னிடம், "போலீஸ் கொடுமையைப்பற்றி எப்போதும் முறையிடுகிறீர். என் மட்டில், நீங்கள்சொல்வதை நம்பக்கூடாதென்ற எண்ணமில்லை. ஆனால்,பெயர்வழி, விஷயம் எல்லாம் கொண்டுவந்து ருஜுப்படுத்தும்"என்றார். உண்மைதான். எல்லா அநியாயங்களையும் பஹிரங்கமாகத் தூற்றி, உலகறிய மீட்டும் மீட்டும் முறையிடத்தக்க தைரியவான்கள் சிலரேனும் நமது தேசத்துக்குவேண்டும். ஆனால் அற்பப் போலீஸ் சேவகனாக இருந்தபோதிலும் அவன் பின்னே பூதாகாரமான ராஜ்யாதிகாரம்ஒன்றிருக்கிறது. அவன் மேல் குற்றஞ் சாராதபடி காப்பாற்றுவற்காகப் பொதுப் பணத்திலிருந்து ஆயிரக் கணக்காகச் செலவு "செய்யக் கூடுமென்ற பீதியை மறுக்கமுடியாது. நம்மைநசுக்கினால் பொறுத்துக் கொண்டிருப்பதே நம் உடம்புக்கு நல்ல தென்று சில அதிகாரிகள் சொல்வது நல்ல மாதிரிதானே?இல்லாவிட்டால் அதிகாரிகளுடைய "ப்ரெஸ்டிஜ்" (கௌரவம்)குறைந்து போகாதோ? "ப்ரெஸ்டிஜ்" நம்மைப் பயமுறுத்தினபழம் பூச்சாண்டி; எப்பொழுதும் நம்முடைய செவியைப் பிடித்துக் கொண்டிருக்கும் நாயகன்; பேஹிலா காவியத்திற்குரியமாநஸா கவி சங்கனுடைய சண்டி; அதன் பூசைக்குப் போகையில் தர்ம நியாயங்களை அவமதித்து இடறிக் கொண்டுபோகவேண்டும்; இல்லாவிட்டால் அது நம்மை இடறும். எனவே, "ப்ரெஸ்டிஜ்" தேவதைகளுக்கு நமஸ்காரம் போடு.
ஆனால் இது வெறும் அவித்தை; மாயைதவிர வேறொன்றும் இல்லை. நம்முடைய புறக் கண்ணுக்குத்தோன்றிய போதிலும் நாம் அதை நம்பக்கூடாது. உண்மைஅதன் பின்னே நிற்கிறது. அது யாதெனில் "நம்முடையஆட்சி, நம்முடைய விவகாரம்" இந்த உண்மையிலேதான்பிரிட்டிஷ் ராஜ்யத்துக்கு வலிமை உண்டாகிறது. இதுவே நமக்குப்பலம். பிரிட்டிஷ் ராஜ்யத்துக்கு வலிமை உண்டாகிறது. இதுவேநமக்குப் பலம். பிரிட்டிஷ் கொள்கைகளை நாம் தைரியமாக நம்பாவிட்டால், போலீஸ் நம்மை நசுக்கிக் கொண்டேதான் இருக்கும். மாஜிஸ்ட்ரேட்டால் நம்மைக் காகவும் முடியாது; "ப்ரெஸ்டிஜ் தேவதை மனுஷ்ய பலிகேட்டுக் கொண்டே இருக்கும். இங்கு சிலர்:- "பலத்தைக் காட்டிலும் தர்மம் பெரிதன்று; பரமார்த்திகமாகப் பேசலாமே யொழிய, நடையில்வெளியிட்டால் ஆபத்து வரும்" என்று கூறி ஆக்ஷேபிக்கலாம்ஸங்கடம் வரக்கூடும். இருந்தாலும், நாம் நம்பிக்கைப்படி செய்யவேண்டும். 'ஸ்வதேசத்தாரே "லஞ்சம் வாங்கிக் கொண்டும், பயந்தும் உமக்கு விரோதமாக ஸாக்ஷி சொல்வார்களே" என்றுசொல்லக்கூடும். இருந்தாலும், உண்மை யென்று கண்டு கொண்டதை வெளியிட்டுச் சொல்ல வேண்டும். ஸ்வதேசத்தாரேஉம்மை மறந்து நின்று தலையில் அடிப்பார்களே. லஞ்சத்தையும்ஸ்தியையும் வேண்டிச் செய்யலாம்; எனினும், நாம் உண்மையை நம்பவேண்டும். "அவ்வளவு தூரம் நம்பலாமா?"சரியாக, அவ்வளவு நம்பியாக வேண்டும்; துளி குறைந்தாலும்போதாது.
ராஜாங்கத்தாரிடம் பெரிய விஷயங்கள் கேட்கிறோம்.ஜனங்களுக்குப் பெரிய வரங்கள் தரவேண்டும். இல்லாவிட்டால்ராஜாங்கத்தாரிடம் செய்யும் பிரார்த்தனை பயன்படாது.
'எல்லோருமே வீரர் அல்லர்; பயந்தவர்கள் உலகத்தில் உண்டு' என்பதை நான் அறிவேன். இருந்தாலும்,எல்லாத் தேசங்களிலும், எல்லாக் காலங்களிலும் சிலர் தமதுஜாதியின் இயற்கைப் பிரதிநிதிகளாகப் பிறந்து தேசத்தின் கஷ்டங்களைத் தாம் பொறுக்கிறார்கள். எதிர்ப்பை எல்லாம் வெட்டிப் பாதை போட்டு, மற்றவர்பின் வருவதை எளிதாக்குகிறார்கள்; மனுஷ்ய ஜாதிகளின் வெளிநடைகளில் எத்தனை விபரீதங்கள் இருப்பினும், அவற்றைப் பொருட்டாக்காமல் அதனிடம் நம்பிக்கை செலுத்துகிறார்கள்;நிஜாந்தகாரத்தினிடையே கண் விழித்து உதயம் வருமென்றுகாத்திருக்கிறார்கள். கோழைகளின் பயத்தை நகைத்து,
அதாவது, "இந்தத் தர்மத்தில் சிறிதளவுபெரிய பயத்தினினுறும் காப்பாற்றுகிறது" என்ற, வாக்யத்தை உரைக்கிறார்கள். ராஜ்யத்தில் உண்மை அம்சம்உண்டானால் அதை வணங்குவோம்; பாபத்தை வணங்கோம், பயத்தை வணங்கோம்.
ஒருவனுடைய குழந்தைக்கு உடம்பு சொஸ்தமில்லை; ஐரோப்பிய டாக்டருக்கு பெரிய தொகைகொடுத்து வரவழைத்தான்; டாக்டரும் நாட்டு மந்திரவாதியைப் போல உச்சாடனங்கள் செய்யத் தொடங்கினான்; "சிகிச்சை செய்யும்; இந்தக் காரியத்துக்கு உம்மை அழைக்கவில்லை" என்று இவன் சொன்னான்;டாக்டர் கோபத்துடன், 'உனக்கென்ன தெரியும்? நான்வைத்தியன்; நான் எது செய்தாலும் அதுவே வைத்தியம்' என்றான். அப்போது இவன் 'உன்னைக் காட்டிலும் உன் தொழிலே பெரிது. நான் பணம் கொடுத்தது தொழிலைக்கருதி, என்கிறான். டாக்டர் இவனை அடித்துக் கீழே தள்ளிபபணத்தை இடுப்பில் சொருகிக் கொண்டு"போவதாக பாவனைசெய்து கொள்வோம். அவன் வண்டி சவாரி செய்துகொண்டுவீட்டுக்குப் போகையில் அவன் மனமே அவனைச் சீயென்றுசொல்லாதா? அதுபோல, இப்போது பிரிட்டிஷ் அதிகாரிகளின்உத்தரவுகளுக்கு உட்படாமல், பிரிட்டிஷ் ஜாதியின் ராஜ்யக்கொள்கைகளை நான் அங்கீகாரம் செய்வதை உத்தேசித்துஒருவேளை இன்று என்னை அதிகாரிகள் கஷ்டப்படுத்தலாகும்;ஆனாலும், எனக்கு நாளை வெற்றியுண்டாகும்.
நூற்றைம்பது வருஷம் பிரிட்டிஷ் ஆட்சி நடந்தபிறகு, இன்று சென்னை மாகாணத்தாரின் கஷ்டங்களுக்கு வங்காளத்தார் இரக்கப்படக் கூடாதென்று கட்டளை போடுகிறார்கள். பிரிட்டிஷ் ராஜ்யத்தின் முதலாவது நன்மை என்னவென்றால், 'அதனால் பம்பாயும், சென்னைப் பட்டணமும், வங்காளமும், பஞ்சாபும் ஐக்கியப்பட்டு வருகின்றன,என்று சொல்லக் கேள்வியுண்டு. மேற்குக் கண்டத்தில் பிரிட்டிஷார் பெல்ஜியத்துக்காகவும் பிரான்ஸுக்காகவும் இரத்தத்தை சிந்தி யமனை எதிர்க்கிறார்கள் என்றும் வதந்தி.அதே மூச்சிலே சென்னைப்பட்டணத்தாரின் சுகதுக்கங்களைவங்காளத்தார் கவனிக்கக் கூடாதென்று சொல்லலாமா? அதைஎத்தனை உரக்கக் கூறிய போதிலும், மனதிற்குள்ளே வெட்கம்உண்டாகாதோ?
அதிகாரிகளின் ரஹஸ்ய லஜ்ஜைக்கும் நம்முடையபஹிரங்க உல்லங்கனத்துக்கும் இடையே ஒரு பாலம் போடவேண்டும். இங்கிலீஷ்காரர் இந்தியாவிற்கு கொடுத்த வாக்கினால்கட்டுப்பட்டிருக்கிறார்கள். ஐரோப்பிய நாகரீகத்தின் பிரதிநிதியாகியஇங்கிலாந்து இந்தியாவிற்கு வந்தது பிரதிநிதியாகிய இங்கிலாந்துகொடுத்த வாக்குறுதியே மேற்படி ஐரோப்பிய நாகரீகத்தின் ஞானமந்திரம். இதுவே அவர்களுடைய ராஜ்யத்துக்கு பலம். இதைமஹிமைப்படுத்துவோம். 'இந்தியாவை நசுக்கும் பொருட்டுஆங்கிலேயர் இங்கு வரவில்லை' என்பதை அவர்கள் மறக்கநாம் இடங்கொடுக்கமாட்டோம்.
ஏதேனும் ஒரு பெரிய ஜாதியாருக்குபெரிய அனுபூதி உண்டாயின், அது பிறர்க்கும்கொடுக்கத்தக்கது, லோபத்தினால் தனக்கே நஷ்டம் உண்டாகும். ஸயன்ஸும் மனுஷ்ய உரிமைகளும் ஐரோப்பாவின் அனுபவப் பயன். இந்தச் செல்வத்தை நமக்குக் கொடுக்கும் பொருட்டாக தெய்வம் இங்கிலாந்தைநம்முடைய கரைகளில் கொண்டுவந்து சேர்த்தது. இந்தக்கடமையை நிறைவேற்றும்படி அவர்களை வற்புறுத்துவதுநம்முடைய கடமை. ஒரு பாலார் தம்முடைய கடமையைச்செய்யாவிட்டால், இருபாலாருக்கும் மறதியும் வீழ்ச்சியும்உண்டாகும்.
இங்கிலீஷ்காரர் தம்முடைய தேச சரித்திரத்தைத்திருஷ்டாந்தமாகக் காட்டி, "நாங்கள் நெடுங்காலம் போராடிஉழைத்ததன் பயனாக மிகவும் தாமஸமாகவே எங்களுக்குஸ்வராஜ்யம் கிடைத்தது" என்று சொல்லக்கூடும். இருக்கலாம்!வழிகாட்டுகிற ஜாதிக்குக் கஷ்டம். பின்னே வருகிற ஜாதிக்குசுலபம். திருஷ்டாந்தமாக, அமெரிக்காவில் வங்காளிமாணாக்கர்கள் தாமே யந்திரங்கள் செய்கிறார்கள். அதற்காகஆதி காலத்தில் அடுப்புச் சட்டியிலிருந்து நீராவிக் கருவிதோன்றிய நாள் முதல் இன்று வரையில் படிப்படியாக வந்த நூறு ஆண்டு காலம் இவனும் படித்துக்கொண்டு வரவில்லை.ஐரோப்பாவில் பலகாலம் வளர்ந்த பயிரை ஜப்பான் ஒருக்ஷணத்தில் கொண்டுபோய் வைத்து நேரே பயிரிட்டு வருகிறது.ஸாமர்த்தியம் குறைவென்றால், அதற்கு விரைவாகவே ஸ்வராஜ்யவழக்கத்தைக் கைக்கொள்ளவேண்டும். 'ஒருவனிடம் ஒரு திறமைஇல்லை' யென்று நாம் முன்னதாகவே தீர்மானம் செய்தால்,அப்படியே இல்லாமல் போகும். அவன் திறமை நம்முடையகண்ணுக்குத் தெரியாமலே போகும். நம்மவரை நாமே இகழ்ந்து,அவர்களிடம் நம்மை பிறப்பதை நாம் தடுத்து அவர்களை உலகம் இகழவைத்தால், அதைவிடப் பெரிய குற்றம் வேறொன்றும் இல்லை. சரித்திரத்தில் ஸூர்யோதயமாகிறபோதுகிழக்கே ஒளி ஊர்ந்தூர்ந்து வராது; பாய்ந்து வரும். எட்டுத்திசையையும் உடனே நிரம்பச் செய்யும். 'உலகத்து ஜாதியார்அங்குலத்தின் மேல் அங்குலமாக மேன்மைக்கு நகர்ந்துதான்செல்லவேண்டும்' என்று விதிபோட்டால் எந்த ஜாதிக்கும்மேன்மை நேரிடாது. தகுதி உண்டான பின்புதான் விடுதலையை விரும்பலாமென்று விதி போட்டால், எந்த ஜாதிக்கும் விடுதலைஉண்டாயிராது.
ஐரோப்பியர் தம்முள் ஜனாதிகாரம் உண்டென்றுபுகழ்ச்சி சொல்லிக் கொள்கிறார்கள். ஐரோப்பியர் அமெரிக்கர்வெளி டம்பத்துக்குள் மறைந்துகிடக்கும் அழுகற்சேற்றை கீறவிரும்பவில்லை. இவர்களுக்குத் தலை அதிகாரமாக ஒன்றைநாட்டி, மேற்படி சேறு முழுதும் கழுவின பிறகுதான், ஜனாதிகாரம் நடத்தலாமென்று விதி போட்டால் சேறும் நீங்காது;நீங்குமென்ற நம்பிக்கைக்கும் இடமிராது.
இப்படி நமது ஜாதியாசாரங்களிலும்,தனி நாட்டங்களிலும், பிழைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை நான் மறைக்க விரும்பினாலும்என்னால் முடியாது. எப்படிக்கும் நம்மை நாமே ஆளவேண்டும். ஒரு விளக்கு மங்கினதைக் குறித்து,மற்றொரு விளக்கை ஏற்றாமல் தவிர்க்கவிடலாகாது. மனுஷ்யஜாதி மொத்தத்துக்கே பெரிய திருவிழா நடக்கிறது. எல்லாநாட்டு விளக்குகளும் எல்லா விஷயங்களிலும் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஊர்கோலம் முன்னே செல்லுகிறது. நம்முடைய விளக்குச் சற்றே அவிந்தால் இங்கிலாந்தின் விளக்கிலே சற்று பற்றவைத்துக் கொள்ளலாகாதோ? இதற்கேன்கோபம்? இதனால் பிரிட்டிஷ் ஒளி குறையாது. உலகத்தின்ஒளி அதிகப்படும்.
திருவிழாவில் தெய்வம் நம்மைக் கூப்பிடுகிறது.பூசாரி தடுக்க நாம் இடம் கொடுக்கலாமா? சிறு பணக்காரர்வந்தால் பூசாரி பல்லைக் காட்டுவான். ஆஸ்திரேலியாவும்,கனடாவும் வந்தால் எதிர்கொண்டழைத்து நல்வரவு சொல்லுவான்.திருவிழாக் கடவுளுக்குக் கண் குருடில்லை. இப்படிப்பட்ட வேற்றுமைகளை அவர் பொறுக்க மாட்டார். உள்ளத்திலேபாவம் வெட்கமாக வந்து சுடாவிட்டால், வெளியே தெய்வகோலமாக வந்து சுடுகின்றது.
பிரிட்டிஷாரும் நாமும் கலந்து இக்காரியம்செய்யவேண்டும். வங்காளிகளிடம் எனக்கு நம்பிக்கைதான்.வாலிபர் கிழவேஷம் போட்டுக்கொண்டு கீழ்ப்பார்வை பார்க்கக்கூடாது. ஆங்கிலேயருக்குள் சில மஹாத்மாக்கள் தோன்றிஇங்கிலாந்தின் சரித்திரப் பயனை நாமும் அனுபவிக்கும்படிபேசி சில ஜனங்களிடம் அவமானப்படுகிறார்கள்.
இந்தியாவிலும் பிறர் சினத்தையும் தமர் நகைப்பையுங் கருதாமல், தோல்விக் கஞ்சாமல், ஆண்மை காட்டும் ஆண் மக்கள் வேண்டும்.
நமது தேசத்தின் குலதெய்வம், என்றும் விழித்திருக்கும் நித்யதேவன், நம்முடைய ஜீவன் இப்பொழுதுவெளியதிகாரிகளுக்குப் பயந்து குருட்டாசாரம் என்ற தளைபூண்டு புழுதியில் கிடப்பதை நீக்கி, அதன் ஸஹஜ நிராகாரநித்ய ஜயாமிர்த ரூபமான ஆத்ம ரூபத்தில் சேரும்படி அந்தஈசன் கூறுகிறான்.
அடிமேல் அடியடித்து "ஆத்மா நம் வித்தி","தன்னை அறி" என்கிறான்.
காலத்துக்கு முந்தியே கிழவனாகி, குருட்டு நம்பிக்கை என்ற மூடச்சுமையால் முதுகு வளைந்துபோய்,தன்னைத் தான் நம்பாத கோழையே, கேள்!
நமக்குள்ளே சில்லறைச் சண்டை, அற்பப்பகை, அற்பப் பொறாமைகளுக்கெல்லாம் இதுவன்றுகாலம். கஞ்சிக்குப் பிச்சைக்காரர் சண்டையிடுவது போலே,சிறு தயவுகளை விரும்பி நமக்குள்ளே சண்டைபோடும்காலம் சென்றது. இருட்டு மூலைக்குள் உட்கார்ந்து கொண்டு,நம்மை 'நாமே மஹான்கள்' என்று பாவனை செய்வதில்பயனில்லை. உலகத்தாரின் சபைகளில் நம்முடைய கர்வம்சிறுமைப்படுகிறது. சக்திஹீனர் போலே நாம் பிறரைக் குற்றங்கூறுதல் கூடாது. பல நூற்றாண்டு செய்த பாவம் பெருஞ்சுமையாய், நமதாண்மையை நசுக்கி நம் அறிவை மயக்கி விட்டது. அவற்றின் பெருஞ் சுமையைத் தள்ளி எறிய ஒருபெரிய முயற்சி செய்யக் காலம் இதுவேயாம். நாம் முன்னேபோகவொட்டாமல் இந்தச் சுமை பின்னே இழுக்கிறது. சென்றதை வருவதை வசியவித்தை போல கலங்கச் செய்கிறது. சென்றகாலப் புழுதியுஞ் சருகும் புதிய உதயத்தைமறைக்கின்றன. நம்முடைய புதிய இளமைத் தொழிலை அவை மூடுபனி போலே மறைக்கின்றன. நிஷ்பிரயோஜனம் என்ற அவமானத்திலிருந்து தப்ப விரும்பினால், இந்தச்சுமையைக் கூசாமல் வீசி எறிந்துவிட வேண்டும். மனுஷ்யஜாதி எப்போதும் முன்னே நோக்கிச் செல்லுகிறது; எப்போதும்விழிப்புடன் புது நிலங்களைத் தேடி மரணத்தை வெல்லுகிறது.ஜகத்தின் பெரிய சிற்பிக்கு வலக்கை போன்றது. உண்மையைக்கெஞ்சி அறிவுச் சுடர் கொளுத்திய வீதிவழியே செல்லும்பொழுது, யுகத்துக்கு யுகம் "வெற்றிகொண்டு முன்னேறும்போது,உலகம் முழுவதும். எதிரொலி கேட்கத் தனி ஆரவாரம் உண்டாகிறது. இந்த மனுஷ்ய ஜாதியுடன் நாம் ஸம நடையாகச்செல்ல விரும்பினால். இந்த முதுகுச் சுமையைக் கூச்சப்படாமல்வீசி எறிந்து விடவேண்டும்.
புறத்திலிருந்து நம்மீது இடைவிடாமல் அவமானமும்கஷ்டமும் பட்டுப்பட்டு தீண்டலாயிருப்பதைச் சுத்தி பண்ணித்தீர்க்கவேண்டும். 'தானாக விரும்பித் தான் உழைத்தல், என்னும்ஹோமத்தைச் செய்து, சுத்தி பண்ணவேண்டும். அந்த யாகத்தீயில் நம்முடைய பாவங்கள் வெந்துபோம். அஞ்ஞானப் புகைவிலகும். சோம்பற்குணம் சாம்பாலாகும்.
பெரிய தீ தேவா! நீ தீரன், தேவன்; எம்மிடத்தேமஹத்தாயும். துக்கரஹிதமாயும், நாசரஹிதமாயும் நாயக மாயும்அமரமாயும் உள்ள அம்சத்துக்கு நீ நாதன்,
அதனை உனது ராஜ ஸிம்ஹாஸனத்துக்கு வலக்கையாக அழைக்கிறாய். நம்முடைய சோர்வும், அறியாமையும் பழியுற்று, நமதடிமைக்குணம் தண்டனைப்பட்டு நம்மினின்றும் பிரிந்து செல்க; நன்மை விளைக.
------------
ஓம் சக்தி - புனர்ஜன்மம் (2)
பாப புண்ணியங்களுக்கு இணங்க மானிடரின் மர்மத்தினுடைய பலனாக அடுத்த ஜன்மத்தில் உயர்ந்த பிறப்பேனும் தாழ்ந்த பிறப்பேனும்கிடைக்கும் என்பது நமது தேசத்துப் பொது நம்பிக்கை.பாவம் செய்யும் ஒருவனை 'நீ அடுத்த ஜன்மம் மிருகமாகப் பிறப்பாய்' என்றால் அவனுடைய மனம்பதைக்கிறது. ஆனால், இந்த ஜன்மத்திலேயே தாம்மிருகங்களைப் போலிருப்பதைக் கவனிப்பது கிடையாது.ஒவ்வொரு நிமிஷத்திலேயும் ஒருவன் நினைக்கும் நினைப்புகளும் செய்யும் செய்கைகளும் அவன் பலவிதப்பிறவிகளை அடைவதற்குக் காரணமாகின்றன. இந்த உலகத்திலேயே, இப்பொழுதே, ஒரே சரீரத்திலுள்ள ஒருவன்ஆயிரம் பிறவிகள் பிறந்து மடிகிறான். ஒவ்வொரு க்ஷணமும்ஒவ்வொருவனும் பிறந்து பிறந்து பிறந்து மடிகிறான்; ஒவ்வொரு க்ஷணமும் ஒவ்வொருவனும் பிறந்து பிறந்துமாய்கிறான் என்று கூறத் தகும். மிருகங்களைப் போன்றமனிதர்களை நாம் பார்த்ததில்லையா? நம்மை "நாம்கவனிக்குமிடத்து, எத்தனை விதமான மிருகங்களாயி ருந்திருக்கிறோம் என்பது தெரியும். வஞ்சனையாலும் சூத்திரத்தாலும் சமயத்திற் கேற்பப் பலவித கபடங்கள் செய்துஜீவிப்பவன் நரிதானே? ஊக்கமில்லாமல் ஏதேனுமொன்றைநினைத்துக் கொண்டு மனஞ்சோர்ந்து தலைகவிழ்ந்துஉட்கார்ந்திருப்பவன் தேவாங்கு. மறைந்திருந்து பிறருக்குத்தீங்கு செய்பவன் பாம்பு. தாமதத்திலும், புகழிலும் விருப்பமில்லாமல், அற்ப சுகத்திலே மூழ்கிக் கிடப்பவன்பன்றி. சுயாதீனத்திலே இச்சையில்லாமல் பிறர்களுக்குப்பிரியமாக நடந்து கொண்டு, அவர்கள் கொடுத்ததை வாங்கிவயிறு வளர்ப்பவன் நாய், கண்ட விஷயங்களிலெல்லாம்திடீர் திடீர் என்று கோபமடைகிறவன் வேட்டைநாய். காங்கிரஸ்சபையிலேயும் சேர்ந்து கொண்டு, ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் ஹிதமாக நடக்க வேண்டுமென்ற விருப்பமுடைய ''மேத்தா'' கட்சியைச் சேர்ந்தவன் வௌவால்.அறிவுத் துணிவால் பெரும் பொருள்களைத் தேர்ந்து கொள்ளாமல் முன்னோர் சாஸ்திரங்களைத் திரும்பத் திரும்பவாயினால் சொல்லிக் கொண்டிருப்பவன் கிளிப்பிள்ளை.பிறர் தன்னை எவ்வளவு அவமதிப்பறாக நடத்தியபோதிலும்,அவன் அக்கிரமத்தை நிறுத்த முயலாமல் தமது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன் கழுதை. வீணமினுக்கு மினுக்கி டம்பம் பாராட்டுகின்றவன் வான்கோழி.கல்வியறிவில்லாதவனை மிருகக் கூட்டத்திலேயும் சேர்க்கலாகாது. அவன் தூண். தான் சிரமப்படாமல் பிறர்சொத்தை அபகரித்து உண்ணுபவன் கழுகு. ஓர் நவீன உண்மை வரும்போது, அதை ஆவலோடு அங்கீகரித்துக் கொள்ளாமல் வெறுப்படைகிறவன் (வெளிச்சத்தைக் கொண்டுஅஞ்சும்) ஆந்தை.
ஒவ்வொரு நிமிஷமும் "சத்தியமே பேசித் தர்மத்தை ஆதரித்துப் பரமார்த்தத்தை அறிய முயலுகிறவனேமனிதனென்றும் தேவனென்றும் சொல்வதற்குரியவனாவான். மிருக ஜன்மங்கனை நாம் ஒவ்வொருவரும் க்ஷணந்தோறும்நீக்க முயலவேண்டும்.
---------
ஓம் சக்தி - உலக வாழ்க்கையின் பயன்
உலக வாழ்க்கையில் மானிடராலும் மற்ற உயிர்களாலும் விரும்பப்படும் மிகச் சிறந்த பயன் யாது?எப்போதும் நீங்காத, எப்போதும் மாறாத, எப்போதும்குறையாத இன்பமெய்தி வாழ்தல்.
இவ் வகையான இன்பத்தை எய்தும் பொருட்டாகவே மானிடர் கல்வி கற்பதும், பொருள் சேர்ப்பதும், தவங்கள் செய்தலும், அரசாள்வதும், களவு செய்தலும், கொலை செய்வதும், பேசுதலும் சிரித்தலும், ஆடுதலும், பாடுதலும,் அழுதலும், உழுதலும் - எல்லாத்தொழிலும் செய்கிறார்கள். மனிதர் மட்டுமேயன்றி மற்ற எல்லாஉயிர்களும் தாம் செய்யும் எல்லாத் தொழில்களையும் மேற்கூறிய ஒரே நோக்கத்தோடுதான் செய்கின்றன.
ஆயினும், இதுவரை மேற்படி நித்யானந்த நிலையைஎந்த உயிரும் எய்தவில்லையென்பது தெளிவு. உலகத்தில் தவிர்க்கமுடியாத துக்கம் நிறைந்திருப்பதே, புத்தர் கண்டதாகக் கூறப்படும்நான்கு உண்மைகளில், முதலாவது. இங்ஙனம் தீராத துன்பம்இருப்பதற்குக் காரணம் ஒவ்வொர் உயிரும் தன்னையேனும் பிறஉயிர்களையேனும் பார்த்தும் கருதியும் ஓயாமல் அருவருப்பும்பயமும் அடைகின்றன வாதலேயாம்.
இங்ஙனம் ஒவ்வொரு உயிர்க்கும் தன்னிடத்தும் பிறஉயிர்களிடத்தும் பொருள்களிடத்தும் தீராத சகிப்பின்மையும், பயமும், வெறுப்பும், கவலையும் ஏற்படுவதற்குக் காரணம், அநாதி காலந் தோட்டு ஜீவர்களுக்குள்ளே நிகழ்ந்துவரும் ஓயாதபோராட்டத்தால ஏற்பட்ட பழக்கந்தவிர வேறொன்றுமில்லை.
எல்லா வஸ்துக்களும் எல்லாக் குணங்களும்ஒன்றென்னும் வேதாந்த ஞானத்தால் இந்த அஞ்ஞானப்பழக்கத்தை நீக்கவேண்டும். மேற்படி ஞானம், உலகம் தோன்றிய கால முதலாக, எத்தனையோ பண்டிதர்களின் மனத்திலும் கவிகளின் மனத்திலும் உதித்திருக்கிறது; எத்தனையோ கோடிக்கணக்கான பாமரர் மனத்துள் அவைஅழுத்தாமல், வாயினால் பிதற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஆயினும், பண்டிதர்களுக்கும் பாமரர்களுக்கும்ஒருங்கே அந்த ஞானத்தை நித்ய அநுபவத்தில் கொண்டுவரமுடியாதபடி, பழைய அஞ்ஞானம் தடுக்கிறது.
"அஞ்ஞானத்தை வென்றால், தீராத இன்பநிலையெய்தி வாழலாம், என்று சாஸ்திரம், யுக்தி, அநுபவம் - மூன்றுபிரமாணங்களாலும் விளங்குகிறது. எனினும், அந்த அஞ்ஞானப்பிசாசையும் அதன் குட்டிகளாகிய காமம், குரோதம், மோஹம்,லோபம், மதம். மாத்ஸர்யம் என்ற ஆறு யமதூதர்களையும் வெல்ல மனிதனுடைய சித்தம் இடங்கொடுக்கமாட்டேன் என்கிறது.நாயைக் குளிப்பாட்டி நல்ல உணவளித்து நடு வீட்டில் வைத்தால்.அது மறுபடியும் அசுத்த உணவு விரும்பி வாலைக் குழைத்துக்கொண்டு ஓடத்தான் செய்கிறது. எத்தனை புதிய இன்பங்களைக் காட்டியபோதிலும், மனம் அவற்றில் நிலைபெறாமல், மீண்டும் ஏதேனும் ஒரு துன்பக் குழியிலே கண்ணைத் திறந்து கொண்டுபோய் விழுந்து தத்தளிக்கத் தொடங்குகிறது.
மனம் கலங்கிய மாத்திரத்தில் புத்தி கலங்கிப்போய்விடுகிறது. ஆகையால், புத்தியை நம்பி எவனும் மனத்தைக்கலங்க விடாதிருக்கக் கடவன். மனத்தைக் கலங்க விடாமல்பயிற்சி செய்வதே எல்லாவித யோகங்களிலும் சிறந்த யோகமாகும்.மனம் தவறி ஒரு துன்பக் குழியில் போய் விழுங்காலத்தில், புத்திசும்மா பார்த்துக்கொண்டு நிற்கிறது. ஒரு வேளை புத்தி தடுத்த போதிலும், அதை மனம் கவனிப்பதில்லை. புத்தியை மீறி உழலும்சக்தி மனத்துக்கு இருக்கிறது.
ஆதலால், மனம் துன்பத்தில் நழுவி விழத் தொடங்கும்போது, அதை உறுதி அல்லது தைர்யம் என்ற கடிவாளத்தால் பிடித்துநிறுத்திப் பழகுவதே சரியான யோகப் பயிற்சியாம். இந்தப் பயிற்சிஏற்படுத்திக்கொள்ளுமாறு சிலர் உலகத்தை விட்டு நீங்கித் தனியிடங் களிலிருந்து கண்ணை மூடிக்கொண்டு பழகுகிறார்கள். வேறு சிலர் மூச்சைப் பல இடங்களில் கட்டியும் அவயவங்களைப் பலவாறு திருப்பியும் பழகுகிறார்கள். தனியே இருந்து ஜபம் பண்ணிப் பார்க்கிறார்கள்.
இதிலெல்லாம் இது வேகாது. உலகத்தாருடன் கூடி எல்லா வகைகளிலும் மற்ற உலகத்தாரைப் போலவே தொழில் செய்துகொண்டு உலக விவகாரங்களை நடத்திய வண்ணமாகவே சஞ்சலத்துக்கு இடங் கொடாதபடித் தன் மனத்தைக் கட்டக்கூடியதிறமையே பயன் தரக்கூடியது. மற்ற முயற்சிகளெல்லாம் வீண்.
நீதி, ஸமாதானம், ஸமத்துவம், அன்பு இவற்றாலேயேஇவ்வுலகத்தில் தீராத தைரியமும், அதனாலே தீராத இன்பமும் எய்தலாம். வேறு வழியில்லை.
-----------
ஓம் சக்தி - உழைப்பு
ராமகிருஷ்ணர் 'நீ யுண்டு, நீ யுண்டு,நீ யுண்டு, நானில்லை, நானில்லை, நானில்லை' என்று ஜபம் பண்ணினார். அவர் சோம்பேறியா? ஆஹா! ராமகிருஷ்ணர் விவேகானந்தரை உண்டாக்கினார். விவேகானந்தரோ புதிய பாரத தேசத்தை உண்டாக்கினவர்களிலமுதல் வகுப்பைச் சேர்ந்தவர்.
'உழைப்பு எப்போதும் உண்டு. தெய்வமே சரணென்றிருப்பார் உள்ளத்திலே தாபமில்லாமல் உழைப்பவர்களஆனபடியால், அவர்களுடைய செய்கைக்கு வலிமை அதிகம்,வேகம் அதிகம், உயர்வு அதிகம், அழகு அதிகம், பயன் அதிகம்' என்பது சொல்லாமலே விளங்கும்.
உழைப்பு எப்போதுமுண்டு. தெய்வத்தின் தலையிலேசுமையைப் போட்டுவிட்டு, நாம் கவலை, பயன் என்ற இரண்டுநாய்களுக்கும் உள்ளத்தை இரையாக்காமல், ஸந்தோஷமாகப் பாட்டுப் பாடிக்கொண்டு நிலத்தை உழுவது நல்லது. அழுதுகொண்டேஉழுதால் உழவுக்குக் கெடுதி; மனத்துக்கு ஸந்தோஷமில்லை; மடத்தன்மை தவிர வேறொன்றுமில்லை.
உழைப்பு எப்போதும் உண்டு. இதிலே நான் என்றபாரத்தை நீக்கிவிட்டு உழைத்தால், வேலை கிறுகிறுவென்று வேகமாகவும் பிழையில்லாமலும் நடக்கும். தன்னைத் தூக்கித் தலையிலே வைத்துக் கொண்டு வேலை செய்தால் வேலை குழம்பும்.
தன்னை மறந்து, வித்தையின் இன்பத்திலே தன் புத்திமுழுவதையும் செலுத்தி ஆடும் தாசி நன்றாக ஆடுவாள். நாம் அழகோ அழகில்லையோ? வகுப்பு சரியாயிருக்கிறதோ இல்லையோ? நெற்றிப் பொட்டு நேரே விழுந்திருக்கிறதோ என்னவோ? பாதி ஆட்டத்தில் முன்னொரு முறை வயிற்று வலி வந்ததுபோல் வந்துவிடுமோ என்னவோ? என்று தன் சித்தம் குழம்பிப் போயிருந்தால் ஆட்டம் நேரே வராது.
ஓம் சக்தி - புராணங்கள்
வேதக் கொள்கைகளை எல்லா ஜனங்களுக்கும் தெளிவாக உணர்த்தும் பொருட்டுமுன்னோர்களால் புராணங்கள் ஏற்படுத்தப்பட்டன. 'நான்' 'எனது' என்ற அகந்தையாலும் பிறருக்குப் பலவிதங்களிலே தீங்கிழைப்பதும், தமக்குத்தாமே பலவிதமானஅச்சங்களும் தீங்குகளும் வருவித்துக் கொள்ளுதல் ஜீவர்களின் இயற்கை. இந்த இழிவு கொண்ட இயற்கையைஞானத்தீயிலே போட்டுப் பொசுக்கி விடுதல் வேத ரிஷிகளால்ஏற்படுத்தப்பட்ட யக்ஞம் அல்லது வேள்வியின் கருத்து.
எல்லாம் ஈசன் செயல்; எல்லாம் அவனுடையரூபம். கம்ப ராமாயணத்தில் ஹிரண்யனுக்கு ப்ரஹ்லாதாழ்வான் உபதேசித்தருளியடி, அவன்
சாணிலு முளன்: மற்றாங்கோர் அணுவினைச் சத கூறிட்ட
கோணிலும் உளன்; மாமேருக் குன்றிலும் உளன்: இந்நின்ற
தூணிலும் உளன்: யான் சொன்ன சொல்லிலும் உளன்.
அவனைத் தவிர வேறு பொருளே கிடையாது. 'அவனன்றி ஓர் அணுவு மசையாது' ஆதலால், இந்த உலக முழுவதும்பரிபூரண அழகுடையது; பரிபூரண மங்களத் தன்மை யுடையது.அந்தக் கடவுள் ஸர்வ சக்தியுடையவன். ஆதலால் கீதையிலேசொல்லியபடி, எல்லாப் பொறுப்புக்களையும் அவன் பாதங்களிலேசுமத்திவிட்டு, நாம் எப்போதும் கவலையின்றி ஆனந்தத்துடன்வாழும்படியாக நம் மனத்தைத் திருத்திக் கொள்ளக் கடவோம்என்ற துணிவே ஞானத் தீ என்று சொல்லப்படும். அது வேதாக்நி.
இங்ஙனம் நிச்சயிக்கப்பட்ட கடவுளிடத்தும், அவனுடைய கலைகளாகிய எல்லா ஜீவர்களிடத்தும், தீராத மாறாத அன்பு செலுத்துதலே பக்தி என்று சொல்லப்படும். இந்தப் பக்திதான் முடிவான ஸாதனம். இதனால் ஈசன் நம்மிடத்தேகருணை பூண்டு நமக்கு மோக்ஷ ஸாம்ராஜ்யத்தைக் கொடுப்பான்.இது அமிர்த பானம். இதுதான் நான்கு வேதங்களின் தீர்ப்பு.
இந்தக் கடவுளை முழுமையாக நோக்குமிடத்தே,வேதம் அவனுக்கு "தத்" (அஃது) அதாவது பரப்ரஹ்மம் என்றபெயரும், "ஸத்" (உண்மைப் பொருள்) முதலிய பெயர்களும்கொடுக்கிறது.
படைத்தல், காத்தல், மாற்றுதல், அருள் செய்தல்,வலிமையுடைமை, தெளிவுடைமை, ஒளியுடைமை, எங்கும்,பரந்திருக்குந் தன்மை, பலபடத் தோன்றுந் தன்மை,ஆனந்த இயல்பு முதலிய கடவுளின் எண்ணிறந்த குணங்களையும்இயல்புகளையும் பிரிவுபடுத்தி நோக்குமிடத்தே, வேதம் அந்தந்தக்குணங்களுக்கும் இயல்புகளுக்கும் தக்கபடி, அவன் ஒருவனுக்கேபிரமன், விஷ்ணு, சிவன், இந்திரன், வாயு, ஸோமன், ஸூர்யன்,வருணன், அக்நி, பகவான் முதலிய பலவேறு நாமங்களை வழங்குகிறது.
இந்த விஷயத்தை ரிக் வேதம் "ஏகம் ஸத்" என்றதொடக்கமுடைய மந்திரத்தில் மிகவும் தெளிவாக விளக்கிக்காட்டுகிறது.
எனவே, வேதத்தின் வழி நூல்களாகியபுராணங்களில், இக் கடவுளை உணர்வதற்கு ஸாதனாங்களாகிய தவம், பக்தி, யோகம் முதலியனவற்றைஅனுஷ்டிக்கும் நெறிகளும், இந்த வழியே செல்ல விரும்புவோனுக்கு இன்றியமையாதனவாகிய திடசித்தம், நேர்மை, ஜீவகாருண்யம் முதலிய குணங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளும் நெறிகளும் இந்தக் குணங்கள்ஏற்படாதபடி தடுக்கும் பயம், கர்வம், கோபம், நிஷ்டூரம் முதலிய அசுர குணங்களை அறுக்கும் நெறிகளும் பல திருஷ்டாந்தங்களாலும் சரித்திரங்களாலும் உவமைக் கதைகளாலும் உபதேசங்களாலும் விஸ்தாரமாகக் காட்டப்பட்டிருக்கின்றன.
உபாஸனை புரிவோரின் இயல்புகளுக்கும் வேண்டுதல்களுக்கும் தக்கபடி, அப் புராணங்கள் பரமாத்மாவின் முக்கியமான மூர்த்தி பேதங்கள் அதாவது குணபேதங்களைச் சிறப்பாகக் காட்டவேண்டி, சில இடங்களில்அக்கினியையும், சில இடங்களில் இந்திரனையும், இங்ஙனமேமற்ற மூர்த்திகளையும் முதன்மையாகக் கூறும் வேத வழியைஅனுசரித்து, புராணங்களும் சில அக்கினியை மேம்படுத்தியும்சில விஷ்ணுவை மேம்படுத்தியும் சில சிவனை மேம்படுத்தியும்காட்டுகின்றன.
ஆயினும், கால நடையிலே இப்புராணங்களைமாத்திரமே ஆதாரமாகக் கொண்ட மதபேதங்கள் நம்முடையதேசத்தில் ஏற்பட்டுவிட்டன. வேதக் கல்வியும் வேத ஞானமும்குன்றிப்போயின. வேத ஆராய்ச்சி ஒரு வகுப்பினருக்கே விசேஷஉரிமையாகக் கொண்டாடப்பட்டது. இதனால் பொது ஜனங்களுக்குள்ளே வேத ஆராய்ச்சி சூன்யமாய் விட்டது. புராணங்களில் வேறு வேறு மூர்த்திகளுக்கு ஆதிக்யம் சொல்லப்பட்டிருப்பதை யொட்டி, மத பேதங்கள் கட்சி பேதங்களாகி முடிந்தன. இதனால் வைதிக மதமாகிய ஹிந்துமதம்பல பிரிவுகளுடையதாய் விட்டது. ஜனத்தொகை, அவ்வக்காலத்துஅரசர்களின் கொள்கை-இவற்றிற்குத் தக்கபடி ஹிந்து மத பேதங்களுக்கு மேன்மையும் தாழ்வும் ஏற்படலாயின. பெயரளவில் எல்லா மதங்களும் வேதம் ஒன்றையே பிரமாணமாகப் பேசியபோதிலும், நடையிலே ஹிந்து மதஸ்தர்களதத்தம் புராணங்களையே தலைமையாகக் கொண்டு அவற்றின்கருத்துக்குத் தக்கபடி வேதத்தை மாற்றிப் பொருள் செய்யலாயினர். தம் தம் மூர்த்திகளை உயர்வாகக் கூறுவதின்உண்மைப் பொருளை மறந்து இந்த மதஸ்தர்கள் மிகப் பெரியஅஞ்ஞானத்தில் ஆழ்ந்து வேதத்திற் காட்டிய இந்த "மூர்த்திகளைஇழிவுபடுத்திப் பேசலாயினர். இந்திரன், அக்கினி, வாயு வருணன்என்ற மூர்த்திகளே வேதத்தில் முக்கியமானவை. பின்னிட்டு இந்தமூர்த்திகளை தாழ்ந்த தேவதைகளாக மதிக்கத் தொடங்கி விட்டார்கள். காலக் கிரமத்தில் வைஷ்ணவம், சைவம், சாக்தம்முதலிய சில மதங்களே நாட்டில் மிஞ்சி நின்றன. எனவே, வேதத்தில் முக்கிய மூர்த்திகளாகிய வாயு, வருணன், சூரியன்,இந்திரன் முதலியவர்களைப் பிற்காலத்துப் புராணங்கள் தூஷணை செய்யத் தொடங்கிவிட்டன. முற்பகல் செய்தது பிற்பகல் விளையும். பின்னிட்டுச் சைவ வைஷ்ணவ புராணங்களில் அவ்வக் காலத்து ராஜாக்கள் ஜனங்களின்கோட்பாடுகளை உயர்த்தும் பொருட்டாக மேற்படி கட்சி பேதங்கள் பஹிரங்க விரோதங்களாக முடிந்து, சைவ புராணங்களில் விஷ்ணு தூஷணைகளும், வைஷ்ணவ புராணங்களில் சிவ தூஷணைகளும் ஏராளமாகச் சேர்க்கப்பட்டன. அதற்கிசையவே புதிய கதைகளும் கற்பிக்கப்பட்டன.
எனவே, இந்நூல்கள் பெரும்பாலும் நம்முடைய தெய்வத் தன்மையையும் வைதிக மாண்பையும் இழந்து போய், வெட்கமற்ற அவைதிக தூஷணைகள் நிரம்பிக் கக்ஷிச் சண்டைகளை மிகுதியாகச்சேர்த்து ஜனங்களுக்குள்ளே பகைமைத் தீயை மூட்டிவிடலாயினர். இங்ஙனம் பரம சத்தியமாகிய ஹிந்து மதம்சிதைவு பெற்றுப் போயிற்று. ஹிந்து ஜாதியார் வீழ்ச்சியடைந்தனர். வேதம் ஒளி மறைந்து, பிற்காலத்தில்வேதத்துக்கு நாம மாத்திரையாக கொடுக்கப்பட்ட உயர்வைக்கூட இந்தக் கக்ஷிக்காரர் சிலர் மறுக்கலாயினர். திருஷ்டாந்தமாகப் பிற்காலத்துச் சைவர்களிலே சிலர் வேதங்களைக் காட்டிலும் சிவாகமங்களே மேலென்று சொல்லத்தலைப்பட்டார்கள். இங்ஙனம் ஏற்பட்ட புராணச் சண்டைகளுக்கு வேதமே, காரணமாக இருந்ததென்று தவறாகக்கருதி வைதிக ஞானிகளே சிலர் வேதத்தைக் கர்ம காண்டமென்றும் உபநிஷத்தை ஞானகாண்டமென்றும்சொல்லலாயினர்.
வஸிஷ்டர் முதலியவர்களைக் 'கர்மி'களென்றும்பிற்காலத்துப் பண்டாரங்களை 'ஞானி' களென்றும் ஜனங்கள்மதிக்கலாயினர். இந்த அலங்கோலங்களெல்லாம் தீர்ந்து, ஹிந்துமதம் ஒருமை நிலையெய்தி, ஹிந்துக்கள் ஒற்றுமையும் வைதிகஞானமும் எய்தி, மேம்பாடு பெற்று, பூமண்டலத்தின் ஆசார்யபதவிகொண்டு வாழவேண்டுமாயின், அதற்கு நாம் கையாள வேண்டிய உபாயங்கள் பின்வருவன:-
(1) வேதம், உபநிஷத்துக்கள், புராணங்கள்-இவற்றை இக்காலத்தில் வழங்கும் தேச பாஷைகளில் தெளிவாக மொழி பெயர்க்கவேண்டும்.
(2) புராணங்களில் தத்தம் தேவர்களை மேன்மைப்படுத்தும் அம்சங்களையும், மேற்படி பொது வேதக் கொள்கைகளாகிய தவம், உபாஸனை, யோகம் முதலியவற்றைவிளக்கும் அம்சங்களையும், உலகநீதி, பூர்வசரித்திரம் இவற்றைவிளக்கும் அம்சங்களையும் மாத்திரமே ப்ரமாணமாகக் கொண்டு,இதர தேவதூஷணை செய்யும் அம்சங்களை ப்ரமாணமில்லாதனவென்று கழித்துவிட வேண்டும்.
(3) வேதத்தின் உண்மைக் கருத்தை உணர்ந்தோரும்ஸமரஸ ஞானிகளுமான பண்டிதர் மூலமாக நாடு முழுவதும்புஸ்தகம், பத்திரிகை, உபந்யாஸங்கள் முதலியவற்றால் பிரமாண்டமான ப்ரசாரத் தொழில் நடத்த வேண்டும். ஹிந்துக்களே,பிளவுண்டு மடியாதீர்கள்! வேதத்தின் பொருளை உணர்ந்து மேம்பட்டு வாழ வழி தேடுங்கள்!
-------------
ஓம் சக்தி - கொள்கைக்கும் செய்கைக்குமுள்ள தூரம்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையைஉடையவராயிருக்கலாம். அதாவது, மற்ற எல்லாரையும்விடஒரு நியாயம் அல்லது ஒரு தர்மம் அல்லது ஒரு மதம்இவற்றில் ஒன்றில் ஒருவன் விசேஷ மனப்பற்றுடையவனாய்இருக்கலாம். இவை ஒவ்வொன்றும் ஸர்வ ஸம்மதமாய் நன்மை பயக்கத் தக்கதாய் இருக்கவேண்டும் என்பது அவசியமிலை. ஒரு கொள்கை தீமையை விளையச் செய்யினும் செய்யும். ஆனால், ஒருவர் ஒரு கொள்கைப்படிகருமங்களைச் செய்யும்பொழுது அது தனக்காகவது பிறருக்காகவது நன்மை தருமென்றே செய்வார். ஒருவன்கொடுங்கோல் அரசில் குடித்தனம் செய்தால் வயிற்றுக்குசசோறில்லாமலும் சர்க்கார் அதிகாரிகளின் ஹிம்சையால் மானமிழந்தும் துன்பமடைய வேண்டியிருக்கிறது; குடியானவனாயிருந்து பயிர்த்தொழில் செய்யவோ அநேகதடங்கல்கள் இருக்கின்றன; பட்டத்தில் மழை பெய்யவில்லை;அப்படி மழை பெய்தாலும், உழ எருதுகள் இல்லை; உழுதாலும், விதைக்க வித்துக்களில்லை; விதை விதைத்தாலும்,களைகளைச் சரியான காலத்தில் எடுத்துப் பயிர் அடித்துக் காவல் காத்து மாசூலை அறுவடை செய்து வீடு கொண்டுவந்து சேர்த்து ஸூகிக்க ஐவேஜி இல்லை; அப்படி வீடுகொண்டு வந்து சேர்த்துப் பலனை அநுபவிக்கவும் இடமில்லை;ஏனென்றால் சர்க்கார் தீர்வைக்கே தானிய தவசங்களைக்களத்தில் விற்றுவிட வேண்டியிருக்கிறது. ஆகையால், உழுதுஉண்ணுவதைவிட வேறு என்ன தொழில் செய்தாயினும்பிழைக்கலாமென்று "கொள்ளைக்கூட்டத்தோடு சேர்ந்து பிரயாணிகளை வழிப்பறி செய்தோ, கன்னம் வைத்துத்திருடியோ பிழைக்க ஆரம்பிக்கிறான். அவன் செய்யும்தொழில் ஒரு கொள்கையினடியாய் உண்டானதாயினும், அதுஅவனுக்குத்தான் நன்மை தருமேயல்லாது இதரர்களுக்குத்தீமையே செய்யும். இருந்தாலும், ஆபத் தர்மம் என்ற கொள்கையை அவன் அனுசரிக்கிறான் மனைவி மக்கள்உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றிப் பார்த்தவரெல்லாம்பரிதாபங் கொள்ளும்படியாய், ஒரு புருஷன் குடும்ப சவரக்ஷனை செய்தால், அவன் மானம் அழிந்து போகிறது.'பயிர்த் தொழிலில் ஒன்றும் கிடைக்காது' என்ற நிச்சயம் ஏற்பட்டு விட்டது. திருட்டுத் தொழிலில் ஏதேனும் பசியாரஉண்ணக் கிடைக்கும் என்ற திண்ணம் உண்டு. பிரயாணிகளோஆங்கிலேயர் ஆசீர்வாதத்தால் நிராயுதபாணிகயாய் இருக்கிறார்கள். போலீஸ் என்ற உள் நாட்டுக் காவற்காரரோசம்பளம் சொற்பமானதாலும், அந்நியர் அரசாட்சி தங்கள் தயவின்றி நடவாதென்ற நம்பிக்கையாலும், தாங்களே திருடத்தயாராயிருக்கிறார்கள். கொள்ளைக் கூட்டத்தாரோடு 'எக்கிரிமெண்டு' (உடன்படிக்கை) செய்து கொண்டு அவர்கொள்ளையில் ஒரு பங்கு பெற்றுக் காலத்தைத் தள்ளக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தியாதி சவுகரியங்களால்திருட்டுப் பிழைப்பே மேலானதென்று ஒரு குடியானவன்அதைக் கைக் கொள்ளுகிறான். ஆனால், அந்தத் தொழிலில்ஜீவஹிம்ஸை செய்தே நடக்க வேண்டியிருக்கிறது. அப்படிச்செய்வது பாபமாகும். அந்தப் பாபத்தால் பாபத்திற்குரியமோடசத் தடை நேரிடும் என்ற பயமோ, சந்தேகமோஅவனுக்கு உண்டாகிறது. அதற்கு ஈடாக அவன் வழிப்பறிசெய்யுங்காலத்தில் ஒரு தருமத்தை அனுசரிக்கிறான். அதாவது, சில வகுப்பார்களை அவன் தொடுவதில்லை.ஏழைகள், துணையின்றிச் செல்லும் ஸ்திரீகள் நோயாளிகள்,தூர ஸ்தலங்களிலிருந்து வரும் யாத்திரைக்காரர்கள் ஆகியஇவர்களையும் இவர்களைப் போன்ற மற்றவர்களையும்ஹிம்ஸிப்பதில்லை. அதோடு நில்லாமல், தான் கொள்ளையடித்து ஈட்டிய பொருளில் ஒரு பாகத்தைக் கொண்டு தான தருமங்களும் செய்கிறான். தன்னைப் பகலில் கொள்ளையடித்த "சாவுகாரனையும், லேவாதேவிசெய்யும் நிஷ்கண்டகனையும், ஏன் இரவிற் கொள்ளையடிக்கக் கூடாதென்று தன்னைத்தானே கேட்கிறான். 'குனிந்தால் வரி,நிமிர்ந்தால் வரி, நின்றால் வரி, உட்கார்ந்தால் வரி, நில வரி,நீர் வரி, பாசி வரி, ரோட்டு வரி, காட்டு வரி, வீட்டு வரி,மோட்டு வரி, கொடுக்கல் வரி, வாங்கல் வரி, வருமான வரி,தொழில் வரி, தோல்கேட்டு வரி, ரயில் வரி, சாக்கடை வரி,சாராயக்கடை வரி, மாட்டு வரி, ஆட்டுவரி, நாய் வரி, பூனை வரி, இறக்குமதி வரி, ஏற்றுமதி வரி, - இன்னும்எண்ண முடியாத வரிகளைப் போட்டு, வீடு வாசல், நிலம் கரை,ஆடு - மாடு, சட்டி பொட்டி இவைகளை ஜப்தி செய்து ஏலங்கூறி கொள்ளையடித்துப் போகும் சர்க்கார் பணத்தைநாம் ஏன் திரும்பக் கொள்ளையடிக்கப் படாது?' என்றகேள்வியும் அவனுக்கு உண்டாகிறது. இவ்விதமாக ஆட்சேபணை ஸமாதானங்களால் தம் மனதில் கொள்ளையடித்துப் பிழைப்பதே நல்லதென்று ஒரு தீர்மானம் செய்துகொள்கிறான். இந்தத் தீர்மானம் அவன் பிறவிக் குணத்துக்குவிரோதமாய் இருப்பினும், தர்ம சாஸ்திரத்திற்கு முற்றும் ஒவ்வாததாய் இருப்பினும், காலசுபாவம் என்ற அவசியத்தால்ஆபத் தர்ம்மாக அவன் சித்தத்தில் நிலைத்து விடுகிறது. இதைஒரு கொள்கையாக வைத்துக்கொண்டு அவன் காரியங்களைஆரம்பிக்கிறான். சிலர் இதை நல்லதென்று சொல்லுவார்கள்.எவர் எதைச் சொல்லினும், எவர் எதைச் செய்யினும், தான்கொண்டதே கொள்கையென்று அவன் காலத்தைக் கழித்துவருகிறான். அவன் கொள்கைக்கும் செய்கைக்கும் ஒற்றுமைஇருக்கிறது. இரண்டும் ஒன்றையொன்று அடுத்துத் தொடர்ந்தேவருகிறது. அவன் மனோதிடம் வாய்ந்த புருஷன் என்றே சொல்லலாம்.
ஒரு கொள்கை என்பதென்ன? இதைநாம் ஆராய்ந்து அறிவது அவசியம். ஏனெனில், கொள்கையின்றிக் காரியங்களைச் செய்து திரியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள். பகுத்தறியும் சக்தி இல்லாதஎவனுக்கும் கொள்கையென்று ஒன்று இருக்காது. ஒரு கொள்கையை யுடையவன் பகுத்தறியும் சக்தி உடையவனாகவே இருக்கவேண்டும். ஆனால், அவ்வறிவின் துணையால் ஒரு கொள்கையை ஒப்புக்கொண்டு அதன்சாயலாகவே தன் கருமங்களைச் செய்து வருபவனல்ல.எத்தனையோ ஜீவப்பிரேதங்கள், ஜீவியத்தின் நோக்கம்இன்னதென்றே அறியாமல், கேவலம் இந்திரிய பாதைகளைக்கழித்துக்கொண்டு, உண்டு உடுத்தி, வாழ்ந்து இறந்து போகின்றனர்.அவர்களெல்லாம் ஏதோ நல்லதோ கெட்டதோ கொள்கைகளைக் கடைப்பிடித்துக் கருமங்களை அவரவற்றிற்குரியபடி செய்துஜீவிக்கும் மனிதர்களல்ல. ஆகையால் கொள்கை யென்பதென்ன?
ஒரு கொள்கையாவது, 'பகுத்தறிவின் துணையால்செய்யத்தக்கது இது, செய்யத்தகாதது இது' என்று ஒருவன்அறிந்து முன் பின் யோசித்துத் தன் வாழ்நாளில் நீடித்துச் செய்ய மனத்தால் ஒப்புக்கொள்ளும் கருமத்தொடரின் அஸ்திவாரமாகிய ஒரு கருத்தாம். நம்நாட்டில் இவ்வாறு கொள்கைகளைத் தேர்ந்து எடுத்துக்கொள்ளும் சக்தி வாய்ந்தமனிதர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் கொள்கைகளைஅவாவோடு மனத்தால் கிரகித்தல் வேறு, அவற்றின்படி நடத்தல் வேறு. யாதேனும் ஒரு கொள்கையை ஒருவன் அங்கீகரித்துக் கொண்டு அதன்படி நடக்க முடியாதவனாய் இருந்தால், அவனும் ஜீவப் பிரேதந்தான்.
இதிலிருந்து, 'கொள்கையற்ற மானிடப் பதர்கள்,கொள்கையிருந்தும் அதன்படி நடக்கவியலாத மானிடப் பதர்கள்'என்ற இரண்டு ஜாதிகள் உண்டென்று ஏற்படுகிறது. இவ்விரண்டுவகுப்பாரால் ஜன சமூகத்திற்கு அவ்வளவு கெடுதல் நேரிடாது.அவர்கள் இருக்கும் வரை சோற்றுகுக் கேடாகவும் நிலத்திற்குப்பளுவாகவும் இருந்து போவார்கள்.
ஆனால், தாங்கள் வசிக்கும் நாட்டிற்குக் குடலைத்தின்னும் அரிபூச்சுகள் போல ஒரு வகுப்பார் தலையெடுததிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தலை நிறைய திவ்வியமானகொள்கைகளை அடைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அக் கொள்கைகளை விற்றும் ஜீவிக்கிறார்கள். பொது பீடங்களினின்றும் உலகறிய அவற்றை ஸாங்கோபாங்கமாகப்போதிக்கிறார்கள். பொது ஜனங்கள் அக் கொள்கைகளைக் கேட்டுப் 'இவ்வரிய கருத்துக்களுக்கு ஆலயமாகவிருக்கும் இவர்கள் "பூஜிதையையும் ஏற்றுக்கொண்டு வெறியடைகிறார்கள்.ஆனால் அவர்களைப் பின்தொடர்ந்து அவர்களின் வீட்டிற்குச்செல்வோமானால், அங்கே எலும்பும் தோலும் குப்பையும்சகலவிதமான அழுக்குகளும் நிறைந்து கிடக்கின்றன. இம்மஹான்களின் செய்கைகள் அவர் கொண்ட கொள்கைகளுக்குமுற்றிலும் விரோதமாய் இருக்கின்றன. 'தட்டிச் சொல்ல ஆள்இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டம்' என்றபடி பேசிவிட்டு,ஆபத்து வந்த காலத்தில் 'நான் சொன்னபடி நீங்கள் செய்யவேண்டும். நான் செய்கிறபடி நீங்கள் செய்யப்படாது' என்றுஜனங்களை ஏமாற்றுகிறார்கள். அதிலும் கேடாய், தங்களுடையகொள்கைகளை ஜால வித்தைக்காரன் போல் மாற்றிவிடுகிறார்கள்.
இம் மஹா பாதகர்களால் நம் தேசத்திறகுவிளையும் தீமைகள் கணக்கில் அடங்கா. ஏனெனில் இவர்களைப் பார்த்து அநேகம் அறிவில்லாத மனிதர்கள்செல்லக் கூடாத மார்க்கங்களிற் சென்றுவிடுகிறார்கள். நமக்குகொள்கை வேண்டுமே யல்லாது ஆள் வேண்டியது அவசியமில்லை. ஒருவன் தான் பறையறையும் நல்லதோர் கொள்கையை விட்டுவிட்டு விலகி நடப்பானானால் அப்பொழுது நாம் அவனைக் கொண்டாடுவது மதியீனம். அவனை எவ்வகையாலும் நாம் இகழ்ச்சி செய்தே நடத்த வேண்டும். தான் குடிக்கும் காபிக்காகவும், தான் தின்னும் சோற்றிற்காகவும், தான் உடுத்தும் ஆடைக்காகவும் ஒருவன்தன்னுடைய அருமையான கொள்கைகளைக் கைவிடுவானானால், அவனை மானிடரால் எந்த வகுப்பில் நாம் சேர்க்கலாம்? அவனிலும் பதரான மனிதன் ஒருவன் இருக்கமுடியாது. அவன்சம்பந்தப்பட்ட மட்டில், கொள்கைக்கும் செய்கைக்கும் வெகுதூரம் உண்டு.
பாரத தேசத்தாராகிய நாம் சகலவிதமான சுதந்திரங்களையும் இழந்து எங்கேயோ யிருந்துவந்த ஒரு வெள்ளை நிற ஜாதியாருக்கு அடிமைப்பட்டிருக்கிறோம். நாம்முப்பது கோடி ஜனங்கள். அவர்கள் இரண்டு லக்ஷங்கூட இல்லை.உலகத்தோர் எல்லோரும் இதை எங்கு எக்காலத்திலும் இல்லாதஅற்புதம் என்று நினைக்கிறார்கள். இதனால் உலகத்திலுள்ள மற்றஜாதியார்கள் நம்மை (முப்பது கோடி அல்லது மூவாயிரம் லக்ஷம்ஜனங்களையும்) அடக்கி ஆளும் ஆங்கிலேயர்களை மகாவீரசூரர்களென்றும், ஒப்பற்ற பலிஷ்டர்களென்றும் ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் அதற்குப் பதிலாய், நம்மிடத்தில் அவர்களுக்கு அவ்வளவுக்கவ்வளவு வெறுப்பும் மதிப்புக் குறைவும் ஏற்பட்டு விடுகிறது. இந்தியன் எங்கே போனாலும்நிந்திக்கப் படுகிறான். யாரும் நம்மீது காறித் துப்புகிறார்கள்.உலகத்தோர 'இந்த இந்தியர் என்ற ஆடுகளை ஆங்கிலேயர்மட்டுமல்ல, வேறே எந்த ஜாதியாரும் இலேசாக ஆளலாம்.என்று நம்பியிருக்கிறார்கள். அப்படியிருக்க, நாம் மிகுந்த அந்தஸ்துக்களைப் பாராட்டினால் அது ஒவ்வா ஒழுக்கம். நாம்சுயாதீனம் அடைந்தபிறகு மீசை முறுக்கலாம். இப்பொழுது வீண் டம்பங்களைச் செய்தால் எல்லோரும் நகைப்பார்கள்.
நம்மில் ஒவ்வொரு புருஷனும் ஒவ்வொரு ஸ்திரீயும்ஏற்றுக்கொள்ள வேண்டிய கொள்கை ஒன்றேதான் உண்டு. அதாவது, நம்முடைய அருமை நாட்டில் சுயாதீனத்தை நாட்டிப்பிறர் அஞ்சி மதிக்கும்படியாக நாம் ஜீவிக்கவேண்டியது. இந்தக்கொள்கைப்படி நடக்க என்ன இடையூறுகள் வந்தாலும் இவற்றைநாம் விலக்கிக் கொண்டு போக வேண்டும். இந்தக் கொள்கையைக் கடைப்பிடித்து நடப்பதில் எவ்விதமான சுகத்தையும், மரியாதையையும் அந்தஸ்தையும் இச்சிக்கப்படாது. வீடு, வாசல், மனை மக்கள், எல்லோரையும் இழக்கும்படி நேர்ந்தாலும் இழந்தே தீரவேண்டும்.
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வவர் தீமையு மேற் கொள்ளார் - செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்வார் கருமமே கண்ணா யினார்,
என்ற மூதுரைக்கு இணங்கியே நாம் நடக்க வேண்டும். இவ்வாறு நடக்க முடியாதவன் தான் பேடியென்று ஒப்புக்கொண்டு பின்னடையவேண்டும். நானும் ஸ்வராஜ்யக் கொள்கையுள்ளவன் என்று முன்வந்து நிற்கவேண்டாம். சுதந்திரக் கொள்கையை உடையவன் தன்ஆத்மாவைத் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் இழந்துவிடச்சித்தமாயிருக்கவேண்டும், ஹோ பரதா! சோம்பலுள்ளவனுக்கு எவ்விதக் கொள்கையும் ஏற்காது மழையென்றும், வெய்யிலென்றும், காற்றென்றும், பசியென்றும், தாகமென்றும், நித்திரையென்றும் பாராட்டாதே, இந்தச் சரீரமே அநித்தியம் "என்றால்,அதையொட்டிய அவஸ்தைகள் நித்தியமாகுமா? இந்திரியஅவஸ்தைகளுக்கு அஞ்சியாவது இந்திரிய சுகங்களைக் கோரியாவதுதேசிய தர்மத்தைக் கைவிடாதே. பிரம்மமே நித்தியம், சத்தியாமஜெயம். நீயும் அடிமைத் தனத்திலிருந்து நீங்கவேண்டும். உன்னுடைய ஜய பேரிகையை அடித்துக் கொண்டு உலகத்தில்எந்தெந்த பாகத்தில் யார் யார் அடிமைப்பட்டிருக்கிறார்களோ அவரவரை விடுவிக்க வேண்டும். உன் செயலால் பாரதமாதா முன்போல் உலகத்திற்குத் திலகமாய் ஜ்வலிக்க வேண்டும். இந்தக் கொள்கைகளைக் கைவிடாதே. கைவிடாதே, கைவிடாதே. முக்காலும்சொன்னோம்.
வந்தேமாதரம்.
-------------
மாதர் - பெண்
வேதபுரத்தில் தர்மவீதியில் வாத்தியார் பிரமராயஅய்யர் என்றொரு பிராமணர் இருக்கிறார். இவர் சாக்தமதத்தைச் சேர்ந்தவர். ''சக்தி பூஜை'' பண்ணுவோரில் சிலர்மதுமாம்ஸ போஜனம் செய்கிறார்கள். இந்த வாத்தியார் அப்படியில்லை. இவர் ''சுத்த சைவம்''. அதாவது ஆட்டுக்குட்டியை மாம்ஸம் தின்னும்படி செய்தாலும் செய்யலாம். இவர் வார்த்தியாரை மாம்ஸம் தின்னம்படி செய்ய முடியாது. இவர் இங்கிலீஷ், ப்ரெஞ்சு என்ற இரண்டு பாஷைகளிலும் நல்ல பாண்டித்யமுடையவர். கொஞ்சம் ஸமஸ்கிருதமும் தெரியும். பகவத்கீதை, வால்மீகி ராமாயணம், குமாரஸம்பவம் மூன்று நூலும் படித்திருக்கிறார். வேதாந்த விசாரணையிலே நல்ல பழக்கமுண்டு. கதை, காலக்ஷேபம், உபந்யாஸம் முதலியன நடந்தால், தவறாமல் கேட்கப் போவார்.பெரும்பாலும் கதை கேட்டுவிட்டு அதிருப்தியுடனே திரும்பிவருவார். வீட்டுக்கு வந்து உபந்யாஸிகளின் கொள்கைகளை ஒரு மாதம் தொடர்ச்சியாக நண்பர்களுடனே தர்க்கிப்பார். ''ஹிந்துக்கள் முற்காலத்தில் நல்ல மேதாவிகளாக இருந்தனர். இன்னும் அதிசீக்கிரத்தில் மேலான நிலைமைக்கு வரப்போகிறார்கள். ஆனால், இந்தத் தேதியில், பண்டிதர்களாக வெளிப்பட்டு பிரஸங்கங்களும், கதைகளும், காலக்ஷேபங்களும் நடத்தும் ஹிந்துக்களிலே நூற்றுக்குத் தொண்ணூறு பேர் சமையல் வேலைக்குப் போக வேண்டியவர்கள். அதை விட்டு உலகத்துக்கு ஞானோபதேசம் பண்ணக் கிளம்பிவிட்டார்கள். இதுபெரிய தொல்லை, உபத்திரவம், தொந்திரவு, கஷ்டம், ஸங்கடம், ஹிம்ஸை, தலைநோவு. இந்தத் தேதியில், ஹிந்து ஜாதி முழுமூடமாக இருக்கிறது. நம்மவர்கள் மூளைக்குள்ளே கரையான் பிடித்திருக்கிறது. எனக்கு ஹிந்துக்களின் புத்தியை நினைக்கும்போது வயிற்றெரிச்சல் பொறுக்க முடியவில்லை. படகோனியா தேசத்தில் கூட சராசரி நூற்றுக்கு இத்தனை பேர் மூடர்களாக இருப்பார்களென்று தோன்றவில்லை? என்று நானாவிதமாக நம் தேசத்தாரின் அறிவு நிலைமையை தூஷணை செய்துகொண்டேயிருப்பார்.
மேற்படி பிரமராய வாத்தியாருக்குத் தமிழிலும் கொஞ்சம் ஞானமுண்டு. ஐரோப்பியரின் சாஸ்திரங்களில் பலவற்றைத் தமிழில் எழுதியிருக்கிறார். சில சமயங்களில் கவிதை கூட எழுதுவார். இவருடைய கவிதை மிகவும்உயர்ந்ததுமில்லை, தாழ்ந்ததுமில்லை; நடுத்தரமானது. இவருக்கு சங்கீதத்தில் நல்ல ஞானமுண்டு. ஆனால் பாடத் தெரியாது. தொண்டை சரிப்படாது. தாளத்தில் மஹா நிபுணர். பெரியபெரிய மிருதங்கக்காரரெல்லாம் இவரைக் கண்டால் பயப்படுவார்கள்.
இவர் இந்தத் தெருவில் வார்த்தை சொன்னால் மூன்றாவது தெருவுக்குக் கேட்கும். பகலில் பள்ளிக்கூடத்துவேலை முடிந்தவுடனே வீட்டுக்கு வந்து, ஸாயங்காலம் ஆறு மணி முதல் எட்டு மணிவரை தன் வீட்டுத்திண்ணையில் சினேகிதர்களுடன் பேசிக்கொண்டு, அதாவது,கர்ஜனை செய்து கொண்டிருப்பார். பிறகு சாப்பிடப் போவார். சாப்பிட்டுக் கையலம்பிக் கை ஈரம் உலர்வதற்கு முன்பு, மறுபடி திண்ணைக்கு வந்து சப்தம் போடத் தொடங்கிவிடுவார். இவருடைய வீட்டுத் திண்ணைக்கு அக்கம் பக்கத்தார், 'இடிப் பள்ளிக் கூடம்' என்று பெயர்"வைத்திருக்கிறார்கள். அந்த இடிப்பள்ளிக்கூடத்துக்கு வந்து மாலைதோறும் நாலைந்து பேருக்குக் குறையாமல் இவருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த நாலைந்து பேருக்கும் இன்னும் காது செவிடாகாமலிருக்கும் விஷயம் அனேகருக்கு ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.
மேற்படி வாத்தியாருக்கும் எனக்கும் ஸ்நேகமுண்டு. நானும் அடிக்கடி இடிப் பள்ளிக்கூடத்துக்குப் போய் பேச்சுக் கேட்கும் வழக்கமுண்டு. ஹிந்துக்கள் பரம மூடர்களென்று அவர் சொல்லும் வார்த்தையை மாத்திரம் நான் அங்கீகாரம் செய்துகொள்வது கிடையாது. மற்றபடி, அநேக விஷயங்களில் அவருடைய அபிப்பிராயங்கள் எனக்கு நியாயமாகவே தோன்றும்.
நாலாநாள் ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் மழைத் தூற்றலாக இருந்தபடியால், நான் வெளியே உலாவப்போகாமல், பொழுது போக்கும் பொருட்டாக மேற்படி இடிப் பள்ளிக்கூடத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கே வாத்தியார் கர்ஜனை அட்டஹாஸமாக நடந்து கொண்டிருந்தது. கேட்டுக்கொண்டிருந்தவர்களின் ''ஜாப்தா'' பின்வருமாறு:
(1) வீராசாமி நாயக்கர். (இந்த நாயக்கர் ஆனைக்குட்டியைப் போலிருப்பார்; சர்க்கார் உத்தியோகம்; முப்பத்துமூன்று வயது; அதற்குள் சரியான வழுக்கை; நல்ல வ்யவஹார ஞானமுடையவர்; வாய் பேசுவது கிடையாது. கோபம் வரும்போது கொஞ்சம் பொடியெடுத்து மூக்கில் போட்டுக் கொள்வார்).
(2) கொங்கண பட்டர். (இவர் பெருமாள் கோயில்பட்டர்; ஏழரையடி உயரம்; இவரை யார் வேண்டுமானாலும் வையலாம்; வேஷ்டியைப் பிடித்திழுக்கலாம். மேற்படி வீராசாமி நாயக்கர் இவருடைய தலையில் கால்மணி நேரத்திற் கொருதரம் குட்டுவார். இவருக்குக் கோபம் வராது. இவருடைய ஜாதகத்திலே கோபத்துக்குரிய கிரகம் சேரவில்லை யென்று கேள்வி).
(3) நாராயண செட்டியார் (பணக்காரர். குள்ளம், வட்டிக்குக் கொடுக்கல் வாங்கல், இடிப்பள்ளிக்கூடம் -இந்த இரண்டு தொழிலையுந் தவிர, மூன்றாவது கார்யத்தை இவர் கவனிப்பதே கிடையாது. வாரத்துக்கொருமுறை வெள்ளிக் கிழமையன்று பிள்ளையார் கோவிலுக்குப் போவார். மற்றப் படி வீட்டை விட்டு வெளியேற மாட்டார். இவரை அந்தப் புரச்செட்டியாரென்றும் சொல்லுவார்கள்.
(4) குருசாமி பாகவதர். (ஸங்கீத வித்வான்; குழந்தைகளுக்குப் பாட்டு வாத்தியமும் சொல்லிக்கொடுப்பார். சாரீரம் கட்டை.)
மேற்படி சபையில் நானும் போய்ச் சேர்ந்தேன். பிரமராய வாத்தியாருக்கு என்னைக் கண்டவுடன் கொஞ்சம் சந்தோஷம் ஏற்பட்டது.
'வாருங்கள், வாருங்கள், உங்களுக்கு ரஸப்படக்கூடிய விஷயந்தான் பேசிக் கொண்டிருக்கிறோம்' என்றார்.
'அதாவது என்ன விஷயம்?' என்று கேட்டேன்.
'ஸ்திரீயுடைய பேச்சு' என்றார்.
'ஸ்திரீகளைப் பற்றின பேச்சா? சரிதான், மேலே உபந்யாஸம் நடக்கட்டும்' என்றேன்.
வாத்தியார் கர்ஜனையைத் தொடங்கினார்:
'நான் சொன்ன விஷயத்தைச் சுருக்கமாக ஸ்ரீபாரதியாரின் புனை பெயர். ''சக்திதாஸ''ருக்கு மறுமுறை சொல்லிக் காட்டிவிட்டு மேலே சொன்னால் தான் அவருக்குத் தொடர்ச்சி தெரியும்' என்று சொல்லி பூர்வ கதையையெடுத்தார்.
அந்த நிமிஷத்தில் வீராசாமி நாயக்கர் ஒரு தரம்பொடிபோட்டுக் கொண்டு கொங்கண பட்டர் தலையில் ஒருகுட்டுக் குட்டினார்.
'சில்லரை விளையாட்டு வேண்டாம். வாத்தியார் பிரசங்கம் நடக்கட்டும்' என்றேன்.
வாத்தியார் கர்ஜனை செய்யலானார்.
'இந்தியாவின் ஆண் பிள்ளைகளுக்குக்கூட வாக்குச் சீட்டுக் கிடையாது. அதாவது ஜனங்களுடைய இஷ்டப்படி ஆள் நியமித்து ஜன சபையாலே நடத்தும் அரசாட்சியுரிமை ஹிந்துகளுக்குக் கிடையாது. ஹிந்துக்களுக்குப் புத்தி சொற்பம். நம்முடைய தேசத்தில் ஆண் பிள்ளைகளுக்குக் கிடையாத மேற்படி வாக்குச் சீட்டுச் சுதந்திரம் வேறு சில தேசங்களிலே பெண்களுக்கு உண்டு. அதாவது, அரசாட்சி இன்னபடிதான் நடக்கவேண்டுமென்று நியமிக்கும் பாத்தியதை அங்கே ஸ்திரீகளுக்கும் உண்டு.
''ஆஸ்திரேலியா, ந்யூஸிலாந்து, டென்மார்க், நார்வே, யுனைடெட் ஸ்டேட்ஸிலே பாதி, கானடா- இத்தனை தேசங்களில்,பெண்களுக்கு வாக்குச் சீட்டு கெட்டியாகவுண்டு. இங்கிலாந்திலேகூட அந்த அநுஷ்டானத்தை ஏற்படுத்த வேண்டுமென்று பலர் மன்றாடுகிறார்கள். போன மந்திரி ஆஸ்க்வித் கூட அந்தக்கட்சியை நெடுங்காலமாக எதிர்த்து வந்து, ஸமீபத்தில் அதற்கனுகூலமாகப் பேசுகிறாரென்று கேள்வி, இதை விடுங்கள்.
''துருக்கி தேசம் தெரியுமா ? அங்கே நேற்று வரை ஸ்திரீகளை மூடிவைத்திருப்பது வழக்கம். கஸ்தூரி மாத்திரைகளை டப்பியில் போட்டு வைத்திருக்கிறார்களோ இல்லையோ ? அந்தமாதிரி; திறந்தால் வாசனை போய்விடும் என்று நம்முடைய தேசத்திலேயே கூட அநேக ஜாதிக்காரர் அந்த மாதிரிதானே செய்கிறார்கள். ஹிந்து ஸ்திரீ ஏறக்குறைய அடிமை நிலைமையிலிருக்கிறாள். நம்முடைய வீடுகளில் அறைக்குள் அடைத்து வைப்பது கிடையாது. அறைக்குள்ளே தான்இருந்தாலென்ன, குடி கெட்டுப் போச்சுது? அடிமையைத் தண்ணீர் கொண்டுவர தெருவிலே விட்டால்தானென்ன? அதுவும் கூடாதென்று கதவைப் பூட்டிக் கைதியாக வைத்திருந்தாலென்ன? எந்த நிலைமையிலிருந்தாலும் அடிமை அடிமைதானே ஸ்வாமி? மனுஷ்ய ஜீவனுக்கு இரண்டு வித நிலைமைதான் உண்டு. எதுவும் தன்னிஷ்டப்படி செய்து, அதனால் ஏற்படக்கூடிய இன்ப நஷ்டங்களுக்குத் தான் பொறுப்பாளியாக இருப்பது ஒரு நிலைமை, அதுதான் சுதந்திரம். அப்படி இல்லாமல், பிறர் இஷ்டப்படி தான் இஷ்டமிருந்தாலும் இல்லாவிட்டாலும் மீறி நடக்கக்கூடாதபடி ட்டுப்பட்டிருத்தல், அடிமை நிலை. அந்த ஸ்திதியில் நம்முடைய"ஸ்திரீகளை வைத்திருக்கிறோம். சும்மா பொய்க்கதை சொல்வதில் ரயோஜனமென்ன, ஸ்வாமி? நம்முடைய ஸ்திரீகள் அடிமைகள். திலே சந்தேகமில்லை. ஹிந்துக்களுக்குள்ளே புருஷர்களுக்கே ரசாட்சியில் வாக்குச் சீட்டுக் கிடையாது. அவர்களுக்குள்ளே ஸ்திரீகள் அடிமைகள். ஹிந்து ஸ்திரீகளைக் காட்டிலும் இப்போது துருக்கி ஸ்திரீகள் நல்ல நிலைமையில் வந்திருக்கிறார்கள். மிஸ். எல்லிஸன் என்றொரு இங்கிலீஷ்காரி ஒரு புஸ்தகம் போட்டு, நேற்றுத்தான் ஒரு பத்திரிகையில் அந்தப் புஸ்தகத்தைப் பற்றி அபிப்பிராயம் போட்டிருந்தது. அந்த அபிப்பிராயம் எழுதினவர் ஒரு சிங்களத்துப் பௌத்தர். அவர் பெயர் ஜினராஜதாஸர். அவர் ஒரு இங்கிலீஷ்காரியைக் கலியாணம் பண்ணிக்கொண்டிருக்கிறார். துருக்கி ஸ்திரீகள் படிப்பு, ராஜியப் பொறுப்பிலே ஊக்கம் முதலிய சகல அம்சங்களிலேயும் போதுமானபடி விருத்தியாய்க் கொண்டுவருவதாக அந்த இங்கிலீஷ் புத்தகத்தில் போட்டிருப்பதாக அந்த பௌத்தர் சொல்லுகிறார். ஐயோ, ராமா, ராகவா, கேசவா, விசுவாமித்ரா!- நமக்கு ஸந்தியாவந்தனம் கொஞ்சம் மறதி!'
இங்ஙனம், அவர் பிரசங்கத்தில் கொஞ்சம் மூச்சுவாங்கும் பொருட்டாக, ஒருவிகட வார்த்தை சொன்னவுடனே, அவருடைய முக்கிய சிஷ்யராகிய கொங்கணபட்டர் கொல்லென்று சிரித்தார். வீராசாமி நாயக்கர் மேற்படி பட்டாசார்யாருடைய தலையில் ஒருகுட்டுக்குட்டி ஒரு தரத்துக்குப் பொடி போட்டுக்கொண்டார்.
வாத்தியார் மறுபடியும் கோஷிக்கலானார்.
''ருதுவான பிறகு, பெண்ணுடைய இஷ்டப்படி கலியாணம் செய்யவேண்டும்; புருஷன் கொடுமையைச் சகிக்க முடியாமலிருந்தால், ஸ்திரீ சட்டப்படி அவனை த்யாஜ்யம் செய்துவிடச் சட்டமும் இடம் கொடுக்கவேண்டும் ; ஊர்க்காரரும் தூஷணை செய்யக்கூடாது. பெண் உழைத்துச் சாப்பிட முடியாது. அந்த விஷயத்தில் ஐரோப்பிய ஸ்திரீ ஸ்வதந்திர முயற்சிக்காரருடைய அபிப்பிராயத்திலிருந்து என் அபிப்பிராயம் பேதப்படுகிறது. பெண்ணை ஸம்பாத்யம் பண்ணி பிழைக்கவிடக்கூடாது. அவளுக்கு பிது ரார்ஜிதத்தில் பாகமிருக்கவேண்டும். கலியாணம் செய்து கொண்டால் புருஷனுடைய சொத்து அவளுடையதாகவே பாவிக்கவேண்டும். (பெண்டாட்டி கையில் காசு கொடுக்கக் கூடாதென்று சொல்லுகிற மனுஷ்யர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.) பெண் அவளிஷ்டப்படி சஞ்சரிக்கலாம். தனி இடங்களில் ஸ்திரீகளைக் கண்டால் மரியாதை செய்து வணங்கவேண்டும். அப்படி எந்தப் புருஷன் மரியாதை செய்யவில்லை யென்று தோன்றுகிறதோ, அவனை கிருகஸ்தர்கள் நெருங்கக்கூடாது. அவன்கூட ஒருவனும் பேச்சு வார்த்தை வைத்துக்கொள்ளாமல் இருந்து விடவேண்டும். அப்படி வீதி வழியோ, கடைத்தெருவோ, ரயில் வழியோ,காசிப்பட்டணமோ ஸ்திரீகள் தனியே போனாலும், புருடர் கண்டு வணங்கும்படி ஏற்பாடு செய்வது நாளது தேதியில் இந்த தேசத்தில் வெகு கஷ்டம். என்ன செய்யலாம்? ஹிந்துக்களிலே நூற்றுக்குத் தொண்ணூறு பேர் மூட ஜனங்கள். அது எப்படி நாசமாய் போனாலும் படித்துக் கௌரவமாகக் குடித்தனம் பண்ணும் ஜனக்கூட்டத்துக்குள்ளே ''ஸ்திரீகள் சுயேச்சையாகப் பேசலாம், சுயேச்சையாக ஸஞ்சரிக்கலாம்'' என்று வைக்க வேண்டும். அது ஸாத்யமாகும்படி புருஷரைத் தண்டிக்க வேண்டும். கையாலாகாதபேரைத் தண்டிப்பதிலே என்ன பிரயோசனம்! ஸ்வாமி எத்தனை நாள் இந்தத் தேசத்தில் பழங்குப்பையில் முழுகிக் கிடக்கப்போகிறார்கள் ? நத்தைப் புழுவைப்போல ஆணும் பெண்ணும்கூடப் பிறக்கிறோம். உடன் பிறந்தான் ஆண்டான், உடன்பிறந்தவள் அடிமை, ஸ்வாமி ! சுத்த பாமரஜனங்கள்' என்றுசோனாமாரியாகப் பொழிந்தார்.
இந்தச் சமயத்தில் என்னுடைய குழந்தை வீட்டிலிருந்து ஒடிவந்து என்னைச் சாப்பிடக் கூப்பிட்டது. நான் எழுந்தேன்.'பிரமராய வாத்தியார் சொல்லுகிற விஷயத்தைக் குறித்து உம்முடைய அபிப்பிராயமென்ன?' என்று என்னை நோக்கிக் கொங்கணபட்டர் கேட்டார்.
நான் சொல்லத் தொடங்கு முன்னே, வீராசாமிநாயக்கர் மேற்படி பட்டாசார்யாருடைய தலையில் ஒரு குட்டுக் குட்டி, 'நீர் சும்மா இருமே, ஓய்' என்று சொன்னார். பிறகு நான்: 'பூலோகத்துப் பஞ்சாயத்தெல்லாம் எனக்கு வேண்டியதில்லை ஸ்வாமி, யாருக்கு என்ன காரியம் சித்தியாக வேண்டுமானாலும், 'ஓம் சக்தி, ஓம் சக்தி' என்று சொன்னால், அவர்களுக்கு அந்தக்காரியம் சித்தியாகும். இதுதான் எனக்குத் தெரிந்த விஷயம்' என்றேன்.
பிரமராய வாத்தியார் 'அது உண்மை' என்றார். இடிப்பள்ளிக்கூட முழுவதும் ''வாஸ்தவந்தான்'' என்று ஒப்புக்கொண்டது. நான் போஜனத்துக்குப் புறப்பட்டேன்.
---------
மாதர் - தமிழ்நாட்டின் விழிப்பு
ஜீவஹிம்ஸை கூடாது. மது மாம்ஸங்களால் பெரும்பான்மையோருக்குத் தீங்கு உண்டாகிறது. மதுமாம்ஸங்கள் இல்லாதிருந்தால் பிராமணருக்கு பெரிய கீர்த்தி.அது பெரிய தவம். அது கிருத யுகத்துக்கு வேராகக் கருதக்கூடிய அநுஷ்டானம்.
ஆனாலும், தாம் ஒரு காரியத்தைச்செய்யாமலிருக்குமிடத்து, அதைப் பிறர் செய்யும்போது அஸூயைகொள்வது தவறு.
ஊண், உடை, பெண் கொடுக்கல், வாங்கல் முதலியவிஷயங்களில் மூடத்தனமாகக் கட்டுப்பாடுகளும் விதிகளும்,தடைகளும் கட்டுவதில் யாதொரு பிரயோஜனமும் கிடையாது.
மேலும் உலகத்து மனிதர்களெல்லோரும் ஒரே ஜாதி. 'இந்தச் சண்டையில் இத்தனை ஐரோப்பியர் அநியாயமாக மடிகிறார்களே'' யென்பதை நினைத்து நான் கண்ணீர் சிந்தியதுண்டு. இத்தனைக்கும் சுதேசியத்திலே கொஞ்சம் அழுத்தமானவன், அப்படியிருந்தும் ஐரோப்பியர் மடிவதில் எனக்குச் சம்மதம் கிடையாது. எல்லா மனிதரும் ஒரேவகுப்பு.
சகல மனிதரும் சகோதரர். மனுஷ்யவர்க்கம் ஓருயிர். இப்படியிருக்க நாம் ஒரு வீட்டுக்குள்ளே மூடத்தனமாக ஆசாரச்சுவர்கள் கட்டி, 'நான் வேறு ஜாதி. என் மைத்துனன் வேறு ஜாதி. இருவருக்குள் பந்தி போஜனம் கிடையாது. அவனை ஜாதிப்பிரஷ்டம் பண்ணவேண்டும்' என்பது சுத்த மடமையென்பதைக் காட்டும் பொருட்டாக இத்தனை தூரம் எழுதினேனே தவிரவேறில்லை.
தமிழ் நாட்டில் ஜாதி ஸம்பந்தமான மூட விதிகளும் ஆசாரங்களும் சடசடவென்று நொறுங்கி விழுகின்றன.
அடுத்த விஷயம், பெண் விடுதலை. தமிழ் நாட்டில் பெண் விடுதலைக் கக்ஷிக்கு தலைவியாக ஸ்ரீமான் நீதிபதி சதாசிவய்யரின் பத்தினி மங்களாம்பிகை விளங்குகிறார். ஸ்ரீஅனிபெசண்ட் இந்த விஷயத்தில் அவருக்குப் பெரிய திருஷ்டாந்தமாகவும், தூண்டுதலாகவும் நிற்கிறார்.
இவ்விருவராலும் இப்போது பாரத தேசத்தில் உண்மையான பெண் விடுதலை உண்டாக ஹேது ஏற்பட்டது இவ்விருவருக்கும் தமிழுலகம் கடமைப்பட்டது இவர்களுடைய கக்ஷி என்னவென்றால், ஸ்திரீகளுக்கு ஜீவன் உண்டு; மனம்உண்டு; புத்தியுண்டு; ஐந்து புலன்கள் உண்டு. அவர்கள் செத்தயந்திரங்களல்லர். உயிருள்ள செடிகொடிகளைப் போலவுமல்லர். சாதாரணமாக ஆண் மாதிரியாகவேதான். புறவுறுப்புக்களில் மாறுதல்; ஆத்மா ஒரே மாதிரி.''
இதனை மறந்து அவர்களைச் செக்கு மாடுகளாகப் பாவிப்போர் ஒரு திறத்தார். பஞ்சுத் தலையணிகளாகக் கருதுவோர்மற்றொரு திறத்தார். இரண்டும் பிழை.
ஸ்திரீகள் தமக்கிஷ்டமான பேரை விவாகம்செய்து கொள்ளலாம். விவாகம் செய்துகொண்ட புருஷனுக்கு ஸ்திரீ அடிமையில்லை; உயிர்த்துணை; வாழ்க்கைக்கு ஊன்றுகோல்; ஜீவனிலே ஒரு பகுதி; சிவனும் பார்வதியும்போலே. விஷ்ணுவும் லக்ஷ்மியும் போலே. விஷ்ணுவும் சிவனும் பரஸ்பரம் உதைத்துக் கொண்டதாகக் கதை சொல்லும் பொய்ப் புராணங்களிலே லக்ஷ்மியை அடித்தாரென்றாவது, சிவன் பார்வதியை விலங்கு போட்டு வைத்திருந்தாரென்றாவது கதைகள் கிடையா. சிவன் ஸ்திரீயை உடம்பிலே பாதியாக தரித்துக்கொண்டார். விஷ்ணு மார்பின் மேலே இருத்தினார். பிரம்மா நாக்குக் குள்ளேயே மனவியைத் தாங்கி நின்றார். ஜத்திற்கு ஆதாரமாகிய பெருங் கடவுள் ஆண் பெண் எனஇரண்டு கலைகளுடன் விளங்குகிறது. இரண்டும் பரிபூர்ணமானசமானம். பெண்ணே அணுவளவு உயர்வாகக் கூறுதலும் பொருந்தும். எனவே, இன்று தமிழ் நாட்டில் மாத்திரமேயல்லாது பூமண்டல முழுதிலும், பெண்ணைத் தாழ்வாகவும் ஆணைமேலாகவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு. அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம் அநீதிகளுக்கெல்லாம் கோட்டை; கலியுகத்திற்குப் பிறப்பிடம்.
இந்த விஷயம் தமிழ் நாட்டில் பல புத்திமான்களின் மனதிலே பட்டு, பெண் விடுதலைக் கக்ஷி தமிழ் நாட்டின் கண்ணே பலமடைந்து வருவதை நோக்குமிடத்தே எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி யுண்டாகிறது. இந்த விஷயத்திலும் தமிழ் நாடு பூமண்டலத்துக்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்குமென்பதில் ஆக்ஷேபமேயில்லை.
அடுத்த விஷயம் மத பேதங்களைக் குறித்தது. இதில்பாரத தேசம் - முக்கியமாகத் தமிழ்நாடு - இன்று புதிதாக அன்று, நெடுங்காலமாக தலைமையொளி வீசிவருதல் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ராமானுஜர் தமிழ் நாட்டில் பிறந்தவர் அன்றோ? "ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவதாரம் புரிந்தது தமிழ்நாட்டிலன்றோ? பறையனைக் கடவுளுக்கு நிகரான நாயனாராக்கிக் கோயிலில் வைத்தது தமிழ் நாட்டிலன்றோ ? சிதம்பரம் கோயிலுக்குள்ளே நடராஜாவுக்கு ஒரு சந்நதி, பெருமாளுக்கொரு சந்நதி. ஸ்ரீரங்கத்திலே, பெருமாளுக்கு ஒரு துருக்கப் பெண்ணைத் தேவியாக்கித் துலுக்கநாச்சியார் என்று பெயர் கூறி வணங்குகிறார்கள். 'எம்மதமும் சம்மதம்' என்றார் ராமலிங்கஸ்வாமி.
உலகத்திலுள்ள மதபேதங்களை யெல்லாம் வேருடன் களைந்து ஸர்வ ஸமய ஸமரஸக் கொள்கையை நிலைநாட்ட வேண்டுமானால், அதற்குத் தமிழ் நாடே சரியான களம். உலகமுழுவதும் மத விரோதங்களில்லாமல் ஒரே தெய்வத்தைத் தொழுது உஜ்ஜீவிக்கும்படி செய்யவல்ல மஹான்கள் இப்போது தமிழ்நாட்டில் தோன்றியிருக்கிறார்கள். அது பற்றியே பூமண்டலத்தில் புதிய விழிப்பு தமிழகத்தே தொடங்குமென்கிறோம்.
மேலே சொன்னபடி, ''பரிபூரண ஸமத்வம் இல்லாத இடத்தில் நாம் ஆண் மக்களுடன் வாழமாட்டோம்'' என்று சொல்லுவதனால் நமக்கு நம்முடைய புருஷராலும் புருஷ சமூகத்தாராலும் நேரத்தக்க கொடுமைகள் எத்தனையோ யாயினும், எத்தன்மை-யுடையனவாயினும் நாம் அஞ்சக் கூடாது. சகோதரிகளே! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு; தர்மத்துக்காக இறப்போரும்இறக்கத்தான் செய்கிறார்கள். ஆதலால், சகோதரிகளே! பெண்விடுதலையின் பொருட்டாகத் தர்ம யுத்தம் தொடங்குங்கள். நாம்வெற்றி பெறுவோம். நமக்குப் பராசக்தி துணைபுரிவாள். வந்தே மாதரம்.
-----------
மாதர் - பதிவிரதை
இந்தக் காலத்தில், பல பொய்கள் இடறிப்போகின்றன.பல பழைய கொள்கைகள் தவிடு பொடியாகச் சிதறுகின்றன. பலஅநீதிகள் உடைக்கப்படுகின்றன. பல அநியாயக்காரர்கள்பாதாளத்தில் விழுகிறார்கள்.
இந்தக் காலத்தில், யாருக்கும் பயந்து நாம் நமக்குத்தோன்றுகிற உண்மைகளை மறுக்கக் கூடாது. பத்திரிகைகள்தான், இப்போது உண்மை சொல்ல, சரியான கருவி. பத்திராதிபர்கள் இந்தக் காலத்தில் உண்மைக்குப் புகலிடமாக விளங்குகிறார்கள்.
'ஸ்திரீகள் பதிவிரதையாக இருக்க வேண்டும்' என்று எல்லாரும் விரும்புகிறார்கள். அதிலே கஷ்டம் என்ன வென்றால், ஆண் பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை. ஆண் மக்களில்ஒவ்வொருவனும் தன் மனைவி மக்கள் பதிவிரதைகளாக இருக்கவேண்டுமென்பதில் எத்தனை ஆவலோடு இருக்கிறானோ, அத்தனை ஆவல் இதர ஸ்திரீகளின் பதிவிரத்யத்திலே காட்டுவதில்லை ஒவ்வொருவனும் ஏறக்குறைய தன் இனத்து ஸ்திரீகளைப் பதிவிரதை என்று நம்புகிறான்.
ஆணும் பெண்ணும் ஒன்றுக்கொன்று உண்மையாக இருந்தால் நன்மையுண்டாகும்; பதிவிரதைக்கு அதிக வீரமும் சக்தியும் உண்டு. சாவித்ரீ தனது கணவனை எமன் கையிலிருந்து மீட்ட கதையில் உண்மைப் பொருள் பொதிந்திருக்கிறது. ஆனால், பதிவிரதை இல்லை என்பதற்காக ஒரு ஸ்திரீயை வதைத்து ஹிம்சை பண்ணி அடித்து ஜாதியை விட்டுத் தள்ளி ஊரார் இழிவாக நடத்தி அவளுடன் யாவரும் பேசாமல் கொள்ளாமல் தாழ்வுபடுத்தி அவளைத் தெருவிலே சாகும்படிவிடுதல் அநியாயத்திலும் அநியாயம்.
அட பரம மூடர்களா! ஆண் பிள்ளைகள் தவறினால் ஸ்திரீகள் எப்படி பதிவிரதையாக இருக்க முடியும்? கற்பனைக் கணக்குப் போட்டுப் பார்ப்போம். ஒரு பட்டணத்தில் லக்ஷம் ஜனங்கள், ஐம்பதினாயிரம் பேர் ஆண்கள், ஐம்பதினாயிரம் பேர் பெண்கள். அதில் நாற்பத்தையாயிரம்ஆண்கள் பரஸ்திரீகளை இச்சிப்பதாக வைத்துக்கொள்வோம். அதிலிருந்து குறைந்த பக்ஷம் நாற்பத்தையாயிரம் ஸ்திரீகள் பரபுருஷர்களின் இச்சைக்கிடமாக வேண்டும். இந்தக் கூட்டத்தில் இருபதினாயிரம் புருஷர்கள் தம் இச்சையை ஓரளவு நிறைவேற்றுவதாக வைத்துக்கொள்வோம். எனவே குறைந்தபக்ஷம் இருபதினாயிரம் ஸ்திரீகள் வ்யபசாரிகளாக இருத்தல் அவசியமாகிறது. அந்த இருபதினாயிரம் வ்யபசாரிகளில் நூறுபேர்தான் தள்ளப்படுகிறார்கள். மற்றவர்கள் புருஷனுடன் வாழ்கிறார்கள். ஆனால், அவளவளுடைய புருஷனுக்கு மாத்திரம் அவளவள் வ்யபசாரி என்பது நிச்சயமாகத் தெரியாது.தெரிந்தும் பாதகமில்லையென்று சும்மா இருப்பாருமுளர்.
ஆகவே, பெரும்பாலோர் வ்யபசாரிகளுடனே தான் வாழ்கிறார்கள். இதனிடையே, பாதிவ்ரத்யத்தைக் காப்பாற்றும்பொருட்டாக ஸ்திரீகளைப் புருஷர்கள் அடிப்பதும், திட்டுவதும்,கொடுமை செய்வதும் எல்லையின்றி நடைபெற்று வருகின்றன.சீச்சீ! மானங்கெட்ட தோல்வி, ஆண்களுக்கு! அநியாயமும் கொடுமையும் செய்து பயனில்லை!
இதென்னடா இது! ''என்மேல் ஏன் விருப்பம் செலுத்தவில்லை?''என்று ஸ்திரீயை அடிப்பதற்கு அர்த்தமென்ன? இதைப்போல் மூடத்தனம் மூன்று லோகத்திலும் வேறே கிடையாது.
ஒரு வஸ்து நம்முடைய கண்ணுக்கு இன்பமாக இருந்தால், அதனிடத்தில் நமக்கு விருப்பம் இயற்கையிலே உண்டாகிறது. கிளியைப் பார்த்தால் மனிதர் அழகென்று நினைக்கிறார்கள். தவளை அழகில்லை என்று மனிதர் நினைக்கிறார்கள் இதற்காகத் தவளைகள் மனிதரை அடித்தும், திட்டியும், சிறையிலே போட்டும் துன்பப்படுத்த அவற்றுக்கு வலிமை இருப்பதாக வைத்துக் கொள்வோம் அப்படி அவை செய்தால் நாம் நியாயமென்று சொல்லுவோமா?
தேசங்களில் அன்னியர் வந்து கொடுங்கோல் அரசு செலுத்துகிறார்கள். அவர்களிடம் அந்த ஜனங்கள் ராஜ பக்தி செலுத்த வேண்டுமென்றும் அங்ஙனம் பக்தி செய்யா விட்டால், சிறைச்சாலையிலே போடுவோம் என்றும் சொல்லுகிறார்கள். அப்படிப்பட்ட ராஜ்யத்தை உலகத்து நீதிமான்கள் அவமதிக்கிறார்கள்.
அந்த அரசுபோலே தான், ஸ்திரீகள் மீது புருஷர்"செய்யும் ''கட்டாய ஆட்சியும்'' என்பது யாவருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாக விளங்கும். கட்டாயப்படுத்தி,என்னிடம் அன்பு செய் என்று சொல்வது அவமானமல்லவா?
ஸ்திரீகள் புருஷர்களிடம் அன்புடன் இருக்க வேண்டினால், புருஷர் ஸ்திரீகளிடம் அசையாத பக்தி செலுத்தவேண்டும். பக்தியே பக்தியை விளைவிக்கும். நம்மைப் போன்றதொரு ஆத்மா நமக்கு அச்சத்தினாலே அடிமைப்பட்டிருக்கும் என்று நினைப்பவன் அரசனாயினும்,குருவாயினும், புருஷனாயினும் மூடனைத் தவிர வேறில்லை. அவனுடைய நோக்கம் நிறைவேறாது. அச்சத்தினால் மனுஷ்யஆத்மா வெளிக்கு அடிமைபோல் நடித்தாலும் உள்ளே துரோகத்தை வைத்துக் கொண்டுதான் இருக்கும்.
அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது.
-----------
மாதர் - பெண் விடுதலை (1)
இங்கிலாந்தில் பெண்களுக்கு வாக்குச் சீட்டுக் கொடுத்தாய்விட்டதென்று சில தினங்களின் முன்பு 'ராய்டர்' தந்திவந்தது. 'அதைப்பற்றிய பத்திராதிபர் குறிப்பொன்று ''ஸ்திரீகளின்ஐயம்'' என்ற மகுடத்துடன் சுதேசமித்திரன் பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது. நேற்று மாலை நானும் என்னுடைய சினேகிதர் சிரோமணி ராமராயரும் வேறு சிலருமாக இருக்கையில் மேற்படி தேதி (அதாவது ''ஸ்திரீகளின் ஜயம்'' எழுதியிருந்த) சுதேசமித்திரன் பத்திரிகையைக் கையில் எடுத்துக்கொண்டு மோட்டு வீதி கோபாலய்யர் பத்தினி வேதவல்லி அம்மை வந்தார்.
வேதவல்லி அம்மைக்கு நாற்பது வயது. தமிழிலும்இங்கிலீஷிலும் உயர்ந்த படிப்பு. ஸமஸ்கிருதம் கொஞ்சம் தெரியும். இவளுடைய புருஷன் கோபாலய்யர் பெரிய சர்க்கார் உத்தியோகத்திலிருந்து விலகி பணச்செருக்கு மிகுந்தவராய் தமது பத்தினியாகிய வேதவல்லியுடனும் நான்கு குழந்தைகளுடனும் சௌக்கியமாக வேதபுரத்தில் வாழ்ந்துவருகிறார். வேதவல்லிக்கு அவர் விடுதலை கொடுத்து விட்டார். எங்கும் போகலாம், யாருடனும் பேசலாம். வீட்டுச் சமையல் முதலிய காரியமெல்லாம் ஒரு கிழவி பார்த்துக் கொள்கிறாள். வேதவல்லி அம்மை புஸ்தகம், பத்திரிகை, சாஸ்திர ஆராய்ச்சி, பொதுக்கூட்டம் முதலியவற்றிலே காலங்கழித்து வருகிறார்.
வேதவல்லி வரும்போது நான் ராமராயர் முதலியவர்களுடன் வேதவியாசர் செய்த பிரம்ம சூத்திரத்திற்கு சங்கராச்சாரியர் எழுதின அத்வைத பாஷ்யத்தை வாசித்து அதன் சம்பந்தமாகத் தர்க்கித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் வேதவல்லியார் வந்தனர். (ஒருமை பன்மை இரண்டும்பெண்களுக்கு உயர்வையே காட்டும்) வேதவல்லிக்கு நாற்காலி கொடுத்தோம். உட்கார்ந்தாள். தாகத்துக்கு ஜலம் கொண்டுவரச் சொன்னாள். பக்கத்திலிருந்த குழந்தையை மடைப்பள்ளியிலிருந்து ஜலம் கொண்டு கொடுக்கும்படி ஏவினேன். அதனிடையே,வேதவல்லி அம்மை 'என்ன சாஸ்திரம் ஆராய்ச்சி செய்கிறீர்கள்?' என்று கேட்டாள். சங்கரபாஷ்யம் என்று சொன்னேன். வேதவல்லி சிரித்தாள். 'சங்கர பாஷ்யமா! வெகுஷோக். இந்துக்களுக்கு இராஜ்யாதிகாரம் வேண்டுமென்று சொல்லித்தான் மன்றாடப்போய் ''அன்னிபெஸண்ட்'' வலைக்குள் மாட்டிக்கொண்டாள். அவள் இங்கிலீஷ்கார ஸ்திரீ. நம்முடைய தேசத்து வீராதிவீரராகிய ஆண்பிள்ளைச் சிங்கங்கள் சங்கரபாஷ்யம் வாசித்துப்பொருள் விவரித்துக் கொண்டிருக்கிறார்கள்.க்ஷோக்! ஷேக்! இரட்டை ஷேக்!' என்றாள்.
ராமராயருக்குப் பளிச்சென்று கோபம் வந்துவிட்டது. 'சரிதானம்மா, நிறுத்துங்கள். தங்களுக்குத் தெரிந்த ராஜயுக்த்திகள் பிறருக்குத் தெரியாதென்று நினைக்க வேண்டாம்' என்றார்.
''இங்கிலாந்தில் ஸ்திரீகளுக்குச் சீட்டுக் கொடுத்தாய்விட்டது'' என்று சொல்லி வேதவல்லி தன் கையில் இருந்த சுதேசமித்திரன் பத்திரிகையை ஏறக்குறைய ராமராயர் முகத்தில்வந்து விழும்படி வீசிப் போட்டாள். ராமராயர் கையில் தடுத்துக்கீழே விழுந்த பத்திரிகையை எடுத்து மெதுவாக மேஜையின்பேரிலே வைத்துவிட்டு தலைக்குமேலே உத்தரத்தைப் பார்த்துக்கொண்டு ஏதோ யோசனையில் இறங்கிவிட்டார். குழந்தை இச்சமயத்தில் ஜலம் கொண்டு கொடுத்தது.வேதவல்லியம்மை இதை வாங்கி சற்றே விடாய் தீர்த்துக்கொண்டாள். ''என்ன ராமராயரே,! மோட்டைப் பார்க்கிறீரே? மோட்டில் என்ன எழுதியிருக்கிறது. 'ப்ரம்மம் ஸத்யம் லோகம்மித்யை ஆதலால், விதவான்கள் எப்பொழுதும் பொய் சொல்லிக்கொண்டே இருப்பதே மேன்மை' என்றெழுதியிருக்கிறதா?''"என்று கேட்டாள்.
ராமராயருக்கு முகம் சிவந்து போய்விட்டது.கொஞ்சம் மீசையைத் திருகி விட்டுக்கொண்டார். தாடியை இரண்டு தரம் இழுத்தார். கடகடவென்று சிரிக்கத் தொடங்கினார்.
ஸ்ரீமதி ஆன்னி பெஸண்ட் ராஜ்ய விஷயத்திலே தலையிட்டு சுதேசியமே தாரகமென்றும், வந்தே மாதரம் ஒன்றே ஜீவமந்திரம் என்றும் பேசத்தலைப்பட்டது மேற்படி ராமராயருக்குச் சம்மதமில்லை. வேதாந்திகள் எப்போதும் பரப்ரஹ்மத்தையே கவனிக்க வேண்டும்; லௌகிக விஷயங்களைத் துளிகூடக் கவனிக்கக் கூடாதென்பது அவருடைய மதம்.
வேதவல்லி அம்மை ராமராயரை நோக்கிச் சொல்லுகிறார்:- 'எடுத்ததற்கெல்லாம் ஆன்னி பெஸண்ட் சொன்னதே பிரமாணம் என்று தொண்டை வறண்டு போகக்கத்தி கொண்டிருந்தீர். இப்போது அந்த அம்மாள் சுயராஜ்யம் நல்லதென்று சொல்லும்போது அவளைப் புறக்கணிக்கிறீர்! ஐயோ! கஷ்டம்! புருஷ ஜன்மம்! ஸ்திரீகளுக்குள்ள திறமையிலே நாலிலொரு பங்கு புருஷர்களுக்கில்லை. எல்லா தேசங்களிலும் புருஷரைக் காட்டிலும் ஸ்திரீகளுக்கு ஆயுள் அதிகம். அதனால் சரீர உறுதி அதிகம் என்று ருஜு வாக்கியாயிற்று; புத்தி அதிகமென்பதுந்தான். ராமாயணத்தில் சீதை பொய் மானை மெய் மான் என்று நினைத்து ஏமாற்றம் அடைந்தாள் என்றும் எங்கள் வீட்டில் ஒரு தாத்தா நேற்று வந்து பேசிக்கொண்டிருந்தார். அந்த சீதை சொல்லுக்குக் கட்டுப்பட்டுஅதை வேட்டையாடப் போன ராமனுடைய புத்தியைக் காட்டிலும் அவளுக்குப் புத்தி அதிகமா, குறைவா, என்று நான் கேட்டேன். தாத்தா தலையைக் குனிந்து கொண்டு வாயில் கொழுக்கட்டையைப் போட்டுக்கொண்டு சும்மாயிருந்தார். சகல அம்சங்களிலும் ஸ்திரீயே மேல். அதில் சந்தேகமில்லை' என்று வேதவல்லி சொன்னாள்.
'ஸ்திரீகளுக்குப் பேசும் திறமை அதிகம்? என்றுராமராயர் சொன்னார்.
வேதவல்லி யம்மை சொன்னார்: 'அன்னிபெஸண்டுக்கு ஸமானமாக நம்முடைய புருஷரில் ஒருவருமில்லை. அந்த அம்மாள் கவர்னருடனே சம்பாஷணை செய்ததைப் பார்த்தீரா? அந்த மாதிரி கவர்னரிடத்தில் நீர் பேசுவீரா?'
இதைக் கேட்டவுடன் ராமராயர், ''நான் வீட்டுக்குப்போய்விட்டு வருகிறேன்'' என்று சொல்லி எழுந்து நின்றார். நான் இரண்டு கட்சியையும் சமாதானம் பண்ணிக் கடைசியாக வேதவல்லியம்மை பொதுப்படையாக ஆண் பிள்ளைகளை எவ்வளவு கண்டித்துப் பேசியபோதிலும் ராமராயரைச் சுட்டிக் காட்டி ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாது என்று தீர்மானம் செய்துகொண்டோம். அப்பால் வேதவல்லி அம்மையின் உபந்யாஸம் நடக்கிறது:-
''ஹிந்து ஸ்திரீகள் ராஜ்ய விவகாரங்களிற் சேர்ந்து பாடுபடாதவரையில், இங்குள்ள புருஷர்களுக்கு விடுதலை ஏற்பட நியாயமில்லை. இந்தத் தேசத்தில் ஆதிகாலத்துப் புருஷர் எப்படி யெல்லாமோ இருந்ததாகக் கதைகளில் வாசித்திருக்கிறோம். ஆனால் இப்போதுள்ள புருஷரைப் பற்றிப்பேசவே வழியில்லை. ஹிந்து ஸ்திரீகள் ராஜ்ய விவகாரங்களிலே தலையிட்டால் அன்னி பெஸண்டுக்கு ஸமானமாக வேலை செய்வார்கள். இங்குள்ள ஆண் பிள்ளைகள் வேதாந்த விசாரணைக்கும் குமாஸ்தா வேலைக்கும் தான்உபயோகப்படுவார்கள். ராஜ்ய க்ஷேமத்தைக் கருதி தைர்யத்துடன் கார்யம் நிறைவேறும்வரை பாடுபடும் திறமைஇத்தேசத்துப் புருஷருக்கு மட்டு. ஸரோஜினி நாயுடு எவ்வளவுதைரியமாகப் பேசுகிறார்கள், பார்த்தீர்களா? உலகத்தில் எங்குமே புருஷரைக் காட்டிலும் ஸ்திரீகள் அதிக புத்திசாலிகள் என்றும்,தைரியசாலிகள் என்றும் தோன்றுகிறது. மற்ற தேசங்களில் எப்படியானாலும், இங்கே பெண்ணுக்குள்ள தைர்யமும் புத்தியும் ஆணுக்குக் கிடையாது. இங்கிலாந்தில் பெண்கள்ஆண் பிள்ளைகளை வசப்படுத்தி எவ்வளவு சுலபமாகச் சீட்டு வாங்கி விட்டார்கள்.
ஹோ! ஹோ! அடுத்த தடவை இங்கிருந்து காங்கிரஸ்காரர் இங்கிலாந்திற்கு ஸ்வராஜ்யம் கேட்கப்போகும்போது, அங்குள்ள புருஷரைக் கெஞ்சினால் போதாது. ஸ்திரீகளைக் கெஞ்சவேண்டும். அதற்கு இங்கிருந்து புருஷர் மாத்திரம் போனால் நடக்காது. இந்த தேசத்துப் புருஷர்களைக் கண்டால் அங்குள்ள ஸ்திரீகள் மதிக்க மாட்டார்கள். ஆதலால்,காங்கிரஸ் ஸபையார் நமது ஸ்திரீகளை அனுப்புவதே நியாயம். எனக்கு இங்கிலீஷ் தெரியும். என்னை அனுப்பினால் நான் போய் அங்குள்ள பெண் சீட்டாளிகளிடம் மன்றாடி இந்தியாவுக்கும் சீட்டுரிமை வாங்கிக் கொடுப்பேன். பெண்பெருமை பெண்ணுக்குத் தெரியும். உங்களிடம் சொல்லிப் பிரயோஜனம் இல்லை' என்று சொன்னாள்.
ராமராயர்:- 'வேறு விஷயம் பேசுவோம்' என்றார். தான் பாதி பேசும்போது, ராமராயர் தடுத்துப் பேசியதிலிருந்து, அந்த வேதவல்லி அம்மைக்குக் கோபம் உண்டாகி, 'நான் இவரைக் குறிப்பிட்டு ஒன்றும் சொல்லுவதில்லை யென்றும்,இவர் சும்மாயிருக்கவேண்டும் என்றும், ஆரம்பத்தில் செய்யப்பட்ட தீர்மானத்தை இவர் அதற்குள்ளே மறந்துவிட்டார்' என்று சொல்லி வெறுப்புடன் எழுந்து போய்விட்டார்.
நான் எத்தனையோ சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. ''ராமராயர் இருக்கும் சபையிலே தான் இருக்கலாகாது'' என்று சொன்னாள். அந்த அம்மை சென்றபிறகு ராமராயர் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.'என்ன சொல்லுகிறீர்?' என்று கேட்டேன்.
ஸ்திரீகளுக்கு விடுதலை கொடுப்பது மிகவும் அவசியத்திலும் அவசியம் என்று ராமராயர் சொன்னார். பிறகு மறுபடி சங்கர பாஷ்யத்தில் இறங்கி விட்டோம்.
-----------
மாதர் - பெண் விடுதலை (2)
அடிமைகள் யாராயினும், அவர்களுக்கு விடுதலை கொடுத்தால், அதினின்றும் யுகப்பிரளயம் நிச்சயமாக நேரிட்டு, அண்டச் சுவர்கள் இடிந்து போய் ஜகத்தே அழிந்துவிடும் என்று சொல்லுதல் அவர்களை அடிமைப்படுத்திஆள்வோருடைய ஸம்பிரதாயம்.
இருபது முப்பது வருஷங்களுக்கு முன்பு, பெண்கல்வி ஏற்பட்டால் மாதர் ஒழுக்கத்தில் தவறி விடுவார்களென்று தமிழ் நாட்டில் பலர் கூறினர். இப்போதோ,பெண் கல்வி தமிழ்நாட்டில் சாதாரணமாகப் பரவியிருக்கிறது. அண்டச் சுவர்கள் இன்னும் இடிந்து போகவில்லை. இதுவரைகூடிய மட்டும் பத்திரமாகவே இருந்து வருகின்றன. ஆனால், இப்பொழுது பெண்களுக்கு விடுதலை கொடுத்தால், ஏழுலோகமும் கட்டாயம் இடிந்து பூமியின்மேல் விழும் என்றும், வால் நக்ஷத்திரம் வகையராக்களெல்லாம் நடுவிலே அகப்பட்டுத் துவையலாய் விடும் என்றும் பலர் நடுங்குகிறார்கள். 'மதறாஸ் மெயில்' போன்ற ஆங்கிலேயப் பத்திராதிபதியிடம் போய் இந்தியாவிற்கு சுயராஜ்யம் கொடுத்தால் என்ன நடக்கும் என்று கேளுங்கள். ''ஓஹோ!ஹோ! ஹோ! இந்தியாவிற்கு சுயராஜ்யம் கொடுத்தால் பஞ்சாபிகள் ராஜபுத்திரரைக் கொல்வார்கள். பிறகு, ராஜபுத்திரர் மஹாராஷ்டிரரின் கூட்டத்தையெல்லாம் விழுங்கிப் போடுவார்கள். அப்பால், மஹாராஷ்டிரர் தெலுங்கரையும் கன்னடரையும் மலையாளிகளையும் தின்று விடுவார்கள். பிறகு மலையாளிகள் தமிழ்ப் பார்ப்பாரையும், தமிழ்ப் பார்ப்பார் திராவிடரையும், சூர்ணமாக்கி விடுவார்கள். சூர்ணித்த திராவிடர் வங்காளி எலும்புகளை மலையாகப் புனைவர்' என்று சொல்லிப் பெருமூச்சு விடுவார். அதே கேள்வியை நீதிபதி மணி அய்யர், கேசவப்பிள்ளை, சிதம்பரம் பிள்ளை முதலியவர்களைப் போய்க் கேளுங்கள். 'அப்படி பெரிய அபாயம் ஒன்றும் உண்டாகாது. ஸ்வராஜ்யம் கிடைத்தால் கஷ்டம் குறையும். பஞ்சம் வந்தால் அதைப் பொறுக்கத் திறன் உண்டாகும். அகால மரணம் நீங்கும் அவ்வளவுதான்' என்று சொல்லுவார்கள்.
அதுபோலவே, பெண்களுக்கு விடுதலை கொடுத்ததனால் ஜனசமூகம் குழம்பிப் போய்விடும் என்றுசொல்லுவோர், பிறர் தமது கண்முன் ஸ்வேச்சையுடன் வாழ்வதை தாம் பார்க்கக்கூடாதென்று அசூயையால் சொல்லுகிறார்களேயொழிய வேறொன்றுமில்லை. விடுதலை என்றால் என்ன அர்த்தம்? விடுதலை கொடுத்தால் பிற ஸ்திரீகள் என்ன நிலையில் இருப்பார்கள்? பெண்களுக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்? வீடுகளை விட்டு வெளியே துரத்திவிடலாமா? செய்யவேண்டிய விஷயமென்ன என்றுபலர் சங்கிக்கலாம். இங்ஙனம் சங்கையுண்டாகும்போது விடுதலையாவது யாது என்ற மூலத்தை விசாரிக்கும்படி நேரிடுகிறது. இதற்கு மறுமொழி சொல்லுதல் வெகுசுலபம். பிறருக்குக் காயம் படாமலும், பிறரை அடிக்காமலும், வையாமலும், கொல்லாமலும், அவர்களுடைய உழைப்பின் பயனைத் திருடாமலும், மற்றபடி ஏறக்குறைய ''நான் ஏதுபிரியமானாலும் செய்யலாம்'' என்ற நிலையில் இருந்தால் மாத்திரமே என்னை விடுதலையுள்ள மனிதனாகக் கணக்கிடத்தகும் 'பிறருக்குத் தீங்கில்லாமல் அவனவன் தன் இஷ்டமானதெல்லாம் செய்யலாம் என்பதே விடுதலை'' என்று ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்சொல்லுகிறார்.
இந்த விதிப்படி உலகத்தில் பெரும்பான்மையான ஆண் மக்களுக்கே விடுதலை உண்டாகவில்லை. ஆனால் இவ்விடுதலை பெரும் பொருட்டாக நாடுதோறும் ஆண்மக்கள் பாடுபட்டு வருகிறார்கள். ஆண்மக்கள் ஒருவருக்கொருவர் அடிமைப்பட்டிருக்கும் கொடுமை சகிக்கமுடியாது ஆனால், இதில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களைக் காட்டிலும் பல்லாயிர மடங்கு அதிகக் கஷ்ட நஷ்டங்கள் பெண் கூட்டத்தை ஆண் கூட்டம் அடிமைப்படுத்தி வைத்திருப்பதால் விளைகின்றன.
அடிமைத் தேசங்களிலே கூட ஆண் மக்களிற் பெரும்பாலோர் - அதாவது ரஹஸ்யப் போலீஸ்" உபத்திரவத்திற்கு இடம் வைத்துக் கொண்டவர். தவிர மற்றவர்கள் - தம் இஷ்டப்படி எந்த ஊருக்குப் போகவேண்டுமானாலும், போகலாம், எங்கும் சஞ்சரிக்கலாம். தனியாக சஞ்சாரம் பண்ணக்கூடாதென்ற நியதி கிடையாது.ஆனால் பெண் தன்னிஷ்டப்படி தனியே சஞ்சரிக்க வழியில்லாத தேசங்களும் உள. அவற்றில் நமது தேசத்தில் பெரும் பகுதி உட்பட்டிருப்பதைப் பற்றி மிகவும் விசனப்படுகிறேன்.
'ஓஹோ! பெண்கள் தனியாக சஞ்சாரம் செய்ய இடங்கொடுத்தால் அண்டங்கள் கட்டாயம் இடிந்து போகும். ஒருவிதமான நியதியும் இருக்காது. மனுஷ்யர் மிருகப் பிராயமாய் விடுவார்கள்' என்று சில தமிழ்நாட்டு வைதிகர் நினைக்கலாம். அப்படி நினைப்பது சரியில்லை. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பெண்கள் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் போகலாமென்று வைத்திருக்கிறார்கள். அதனால் பூகம்ப மொன்றும் நேர்ந்துவிடவில்லை. ஸ்ரீமதி அனிபெஸண்டை நம்மவர்களிலே பலர் மிகவும் மரியாதையுடன் புகழ்ந்து பேசுகிறார்கள். ''அவரைப்போலே நமதுஸ்திரீகள் இருக்கலாமே'' என்றால், நம்மவர் கூடாதென்று தான் சொல்லுவார்கள். காரணமென்ன? ஐரோப்பிய ஸ்திரீகளைக் காட்டிலும் நமது ஸ்திரீகள் இயற்கையிலே நம்பத்தகாதவர்கள் என்று தாத்பர்யமா?
''மேலும் ஐரோப்பியரை திருஷ்டாந்தம் காட்டினால் நமக்கு ஸரிப்படாது. நாம் ஆரியர்கள், திராவிடர்கள். அவர்களோ, கேவலம் ஐரோப்பியர்'' என்று சொல்லிச்சிலர் தலையசைக்கலாம்.
சரி, இந்தியாவிலே மஹாராஷ்டிரத்தில் ஸ்திரீகள் யதேச்சையாகச் சஞ்சாரம் பண்ணலாம். தமிழ் நாட்டில் கூடாது.ஏன்?
பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் இன்னும் முக்கியமான - ஆரம்பப் படிகள் எவையென்றால்:-
(1) பெண்களை ருதுவாகு முன்பு விவாகம் செய்துகொடுக்கக் கூடாது.
(2) அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனைவிவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.
(3) விவாகம் செய்துகொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது.
(4) பிதுரார்ஜிதத்தில் பெண்குழந்தைகளுக்கு ஸமபாகம்செய்து கொள்வதைத் தடுக்கக்கூடாது.
(5) விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றால் கௌரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங்கொடுக்க வேண்டும்.
(6) பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக்கூடாதென்றும் பழகக்கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்து விடவேண்டும்.
(7) பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.
(8) தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக்கூடாது.
(9) தமிழ் நாட்டில் ஆண்மக்களுக்கே ராஜரிக சுதந்திரம் இல்லாமல் இருக்கையிலே, அது பெண்களுக்கு வேண்டுமென்று இப்போது கூறுதல் பயனில்லை. எனினும் சீக்கிரத்தில்தமிழருக்கு சுயராஜ்யம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும் சென்ற வருஷத்து காங்கிரஸ் சபையில் தலைமை வகித்தவர் மிஸஸ் அன்னிபெஸண்டு என்ற ஆங்கிலேய ஸ்திரீ என்பதை மறந்து போகக் கூடாது.
இங்ஙனம் நமது பெண்களுக்கு ஆரம்பப்படிகள் காட்டினோமானால், பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூரணவிடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றுவார்கள். அப்போதுதான் நமது தேசத்துப் பூர்வீகரிஷி பத்தினிகள் இருந்த ஸ்திதிக்கு நமது ஸ்திரீகள் வர இடமுண்டாகும். ஸ்திரீகளை மிருகங்களாக வைத்து நாம் மாத்திரம் மஹரிஷிகளாக முயலுதல் மூடத்தனம். பெண் உயராவிட்டால் ஆண் உயராது.
------------
மாதர் - பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத்தக்கது யாது?
[புதுச்சேரியில் ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதியின் குமாரிஸ்ரீ தங்கம்மாவால் ஒரு பெண்கள் கூட்டத்தில் படிக்கப் பெற்றது.]
ஆறிலும் சாவு; நூறிலும் சாவு; ஆணுக்கு மட்டு மன்று,பெண்ணுக்கும் அப்படியே.
ஆதலால் உயிருள்ளவரை இன்பத்துடன் வாழவிரும்புதல் மனுஷ்ய ஜீவனுடைய கடமை. இன்பத்துக்கு முதல் அவசியம் விடுதலை. அடிமைகளுக்கு இன்பம் கிடையாது. தென் ஆப்பிரிக்காவில் ஹிந்து தேசத்தார் படுங்கஷ்டங்களைக் குறித்து,1896ம் வருஷத்தில் கல்கத்தாவில் கூடிய பன்னிரண்டாயிரம் ஜனசபைக் (காங்கிரஸ்) கூட்டத்தில் செய்யப்பட்ட தீர்மானமொன்றை ஆதரித்துப் பேசுகையில் வித்வான் ஸ்ரீ பரமேச்வரன் பிள்ளை பின்வருமாறு கூறினார்:-
''மிகவும் உழைப்பாளிகளாகிய ஹிந்து தேசத்தார் அந்த நாட்டில் பரம்பரை முறியடிமைகளாக வாழும்படி நேர்ந்திருக்கிறது.அங்கு நம்மவர் உத்திரவுச் சீட்டில்லாமல் யாத்திரை செய்யக்கூடாது. இரவு வேளையில் வெளியே சஞ்சரிக்கக்கூடாது. நகரங்களுக்கு நடுவே குடியிருக்கக் கூடாது. ஒதுக்கமாக நமக்கென்று கட்டப்பட்டிருக்கும் சேரிகளில் வசிக்க வேண்டும். ரயில் வண்டியில் மூன்றாவது வகுப்பிலேதான் ஏறலாம்; முதலிரண்டு வகுப்புக்களில் ஏறக்கூடாது. நம்மை ட்ராம் வண்டியிலிருந்து துரத்துகிறார்கள். ஒற்றையடிப் பாதையினின்று கீழே தள்ளுகிறார்கள். ஹோட்டல்களில் நுழையக்கூடாதென்கிறார்கள். பொது ரஸ்தாக்களில் நடக்கக் கூடாதென்று தடுக்கிறார்கள். நம்மைக்கண்டால் காறி உமிழ்கிறார்கள். 'ஹூஸ்'என்று சீத்காரம் பண்ணுகிறார்கள். நம்மை வைகிறார்கள். சபிக்கிறார்கள். மனுஷ்ய ஜந்துக்களினால் சகிக்கக்கூடாத இன்னும் எத்தனையோ அவமானங்களுக்கு நம்மை உட்படுத்துகிறார்கள். ஆகையால் நம்மவர் இந்த நாட்டிலேயே இருந்து பஞ்சத்திலும் கொள்ளை நோயிலும் அழிந்திட்டாலும் பெரிதில்லை. நமது ஸ்வதந்திரங்களை வெளிநாடுகளில் அன்னியர் காலின் கீழேபோட்டு மிதிக்காதபடி ராஜாங்கத்தாரால் நம்மைக் காப்பாற்ற முடியாவிட்டால், நம்மவர் வேற்று நாடுகளுக்குக் குடியேறிப்போகாமல் இங்கிருந்து மடிதலே நன்று' என்றார். என்ன கொடுமையான நிலை பார்த்தீர்களா?
ஆனால், சகோதரிகளே, தென் ஆப்பிரிக்காவில் மாத்திரமே இவ்விதமான கொடுமைகள் நடக்கின்றன என்று நினைத்து விடாதீர்கள்!
சகோதரிகளே! ஓளவையார் பிறந்தது தமிழ் நாட்டில் மதுரை மீனாக்ஷியும், அல்லி அரசாணியும் நேற்று மங்கம்மாளும் அரசு புரிந்த தமிழ் நாட்டிலே நம்முடைய நிலைமை தென்னாப்பிக்காவில் ஹிந்து தேசக் கூலிகளுடையநிலைமையைக் காட்டிலும் கேடு கெட்டிருக்கிறதா? இல்லையா?உங்களுடைய அனுபவத்திலிருந்து நீங்களே யோசனை பண்ணிச்சொல்லுங்கள்.
நாமும் ஸ்வேச்சைப்படி வெளியே சஞ்சரிக்கக்கூடாது. நம்மைச் சேரிகளில் அடைக்காமல் சிறைகளில் அடைத்து வைக்க முயற்சி செய்கிறார்கள். ரயில் வண்டிகளில் நமக்கென்று தனிப்பகுதி ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். நம்மைக் கண்டாலும் ஆண் மக்கள் நிஷ்காரணமாய் சீறிவிழுகிறார்கள்; காறி உமிழ்கிறார்கள்; வைகிறார்கள்; அடிக்கிறார்கள்; நாம் நமதிஷ்டப்படி பிறருடன் பேசக்கூடாதென்று தடை செய்கிறார்கள். மிருகங்களை விற்பதுபோல், நம்மை விலைக்கு விற்கிறார்கள். நம்முடைய நூல்களிலும் ஸம்பாஷணைகளிலும் ஓயாமல் நம்மைத் தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கத்தால் நாம் இத்தனை பாடுக்கும் ஒருவாறு ஜீவன் மிஞ்சியிருக்கிறோமெனினும், இந்த நிலை மிகஇழிதான தென்பதிலும், கூடிய சீக்கிரத்தில் மாற்றித் தீரவேண்டியதென்பதிலும் சந்தேகமில்லை. இதற்கு மருந்தென்ன?
தென் ஆப்பிரிக்காவில் ஹிந்து தேசத்துக் கூலியாட்களுக்கு ஸ்ரீமான் மோஹனதாஸ் கரம்சந்த் காந்தி எந்தவழி காட்டினாரோ, அதுவே நமக்கும் வழி. தென்ஆப்பிரிக்காவில் வெள்ளையரை ஹிந்துக்கள் ஆயுத பலத்தால் எதிர்க்கவில்லை. கைத்துப்பாக்கி, வெடிகுண்டு முதலியவற்றை உபயோகிக்க விரும்பினர் சில இளைஞரைக் கூட அது செய்யலாகாதென்று மஹாத்மா காந்தி தடுத்து விட்டார். 'அநியாயத்தை அநியாயத்தால் எதிர்த்தலென்பது அவசியமில்லை. அதர்மத்தை அதர்மத்தால்தான் கொல்ல வேண்டுமென்பது அவசியமன்று. நாம் அநியாயத்தை நியாயத்தால் எதிர்ப்போம்; அதர்மத்தை தர்மத்தால் ஒழிப்போம்'என்று காந்தி சொன்னார்.
சகோதரிகளே, நாம் விடுதலை பெறுவதற்கும் இதுவேஉபாயம். நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம்அன்புத் தளைகளால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள்அண்ணன் தம்பிகளாகவும், மாமன் மைத்துனராகவும், தந்தை பாட்டனாராகவும், கணவர் காதலராகவும், வாய்த்திருக்கின்றனர். இவர்களே நமக்குப் பகைவராகவும் மூண்டிருக்கையிலே, இவர்களை எதிர்த்துப் போர் செய்ய வேண்டுமென்பதை நினைக்கும்போது, என்னுடைய மனம், குருக்ஷேத்திரத்தில் போர்தொடங்கிய போது அர்ஜுனனுடைய மனது திகைத்ததுபோல, திகைக்கிறது. ஆண் மக்களை நாம் ஆயுதங்களால் எதிர்த்தல் நினைக்கத்தகாத காரியம். அதுபற்றியே, ''சாத்வீக எதிர்ப்பி''னால் இவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்ய வேண்டுமென்று நான் சொல்லுகிறேன்.
'அடிமைப்பட்டு வாழமாட்டோம்; ஸமத்வமாக நடத்தினாலன்றி உங்களுடன் சேர்ந்திருக்க விரும்போம்'என்று அவர்களிடம் வெளிப்படையாகவும் தெளிவாகவும் சொல்லி விட்டு, அதினின்றும் அவர்கள் கோபத்தால் நமக்கு விதிக்கக் கூடிய தண்டனைகளையெல்லாம் தெய்வத்தை நம்பிப் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுப்பதே உபாயம். இந்த சாத்வீக எதிர்ப்பு முறையை நாம் அனுசரிக்கத்தொடங்க வேண்டுமாயின், அதற்கு இந்தக் காலமே சரியானகாலம். இந்த வருஷமே சரியான வருஷம். இந்த மாஸமே நல்ல மாஸம். இன்றே நல்ல நாள். இந்த முகூர்த்தமே தகுந்தமுகூர்த்தம்.
சகோதரிகளே! இப்போது பூமண்டலமெங்கும் விடுதலைப் பெருங்காற்று வீசுகிறது. கொடுங்கோலரசர்களுக்குள்ளே கொடியவனாய் ஹிரண்யனைப்போல் ஐரோப்பாவின் கிழக்கே பெரும் பகுதியையும் ஆசியாவின் வடக்கே பெரும்பகுதியையும் ஆண்ட ஸார் சக்ரவர்த்தி, இப்போது ஸைபீரியாவில் சிறைபட்டுக் கிடக்கிறான். 'பாரதநாட்டைக் காப்பதிலே எனக்குத் துணை புரிய வாருங்கள்'என்று ஆங்கிலேயன் ஹிந்துக்களைக் கூப்பிடுகிறான். விடுதலைக் காற்று ''வீர், வீர்'' என்று வேகமாக வீசுகிறது.
ஒரு ஸ்திரீயானவள் இந்த ஸாத்வீக எதிர்ப்புமுறையை அனுசரிக்க விரும்பினால் தனது கணவனிடம் சொல்லத் தக்கது யாதெனில்:-
'நான் எல்லா வகையிலும் உனக்குச் சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மதமுண்டானால் உன்னுடன் வாழ்வேன். இல்லாவிட்டால் இன்று இராத்திரி சமையல் செய்யமாட்டேன். எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிருப்பேன். உனக்குச் சோறு போடமாட்டேன். நீ அடித்து வெளியே தள்ளினால் ரஸ்தாவில் கிடந்து சாவேன். இந்த வீடு என்னுடையது. இதை விட்டு வெளியேறவும் மாட்டேன்' என்று கண்டிப்பாகச் சொல்லி விடவும் வேண்டும்.இங்ஙனம் கூறும் தீர்மான வார்த்தையை, இந்திரிய இன்பங்களை விரும்பியேனும், நகை, துணி முதலிய வீண் டம்பங்களை இச்சித்தேனும், நிலையற்ற உயிர் வாழ்வைப்பெரிதாகப் பாராட்டியேனும் மாற்றக்கூடாது. சிறிது சிறிதாக,படிப்படியாக ஞானத்தை ஏற்படுத்திக் கொள்வோம் என்னும் கோழை நிதானக் கட்சியாரின் மூடத்தனத்தை நாம் கைக்கொள்ளக் கூடாது. நமக்கு ஞாயம் வேண்டும்.அதுவும் இந்த க்ஷணத்தில் வேண்டும்.
இங்ஙனம், ''பரிபூர்ண ஸமத்வ மில்லாத இடத்திலே ஆண் மக்களுடன் நாம் வாழமாட்டோம்'' என்று சொல்வதனால், நமக்கு நம்முடைய புருஷர்களாலும் புருஷ சமூகத்தாராலும் ஏற்படக்கூடிய கொடுமைகள் எத்தனையோ-யாயினும், எத்தன்மையுடையனவாயினும், அவற்றால் நமக்கு மரணமே நேரிடினும், நாம் அஞ்சக்கூடாது. ஸஹோதரிகளே! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு. தர்மத்துக்காக மடிகிறவர்களும் மடியத்தான் செய்கிறார்கள்; ஸாமான்ய ஜனங்களும் மடியத்தான் செய்கிறார்கள். ஆதலால் ஸஹோதரிகளே, பெண்விடுதலைக்காக இந்த க்ஷணத்திலேயே தர்ம யுத்தம் தொடங்குங்கள். நாம் வெற்றி பெறுவோம். நமக்கு மஹாசக்தி துணை செய்வாள்.
வந்தே மாதரம்.
-----------
மாதர் - தமிழ் நாட்டு மாதருக்கு
இந்தியா தேசத்து ஸ்திரீகள் இங்குள்ள ஆண்மக்களால் நன்கு மதிக்கப்படுவதற்குள்ள பல உபாயங்களில் வெளி நாட்டாரின் மதிப்பைப் பெற முயல்வதும் ஒருஉபாயமாம். திருஷ்டாந்தமாக, சில வருஷங்களுக்கு முன்பு, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் 'இந்தியா நாகரீகக் குறைவான தேசம்' என்ற எண்ணம் வெகு சாதாரணமாகப் பரவியிருந்தது. மேற்றிசையோர்களுக்குள்ளே சில விசேஷ பண்டிதர்கள் மட்டும் நம்முடைய வேதங்கள்,உபநிஷத்துக்கள், ஸாங்கியம், யோகம் முதலிய தர்சனங்கள் (அதாவது ஞான சாஸ்திரங்கள்); காளிதாஸன் முதலிய மஹாகவிகளின் காவியங்கள்; ராமாயணம், பாரதம்; பஞ்ச தந்திரம் முதலிய நீதி நூல்கள் - இவற்றை மூலத்திலும், மொழிபெயர்ப்புக்களின் வழியாகவும் கற்றுணர்ந்தோராய், அதிலிருந்து ஹிந்துக்கள் பரம்பரையாகவே நிகரற்ற ஞானத் தெளிவும் நாகரீகமும் உடைய ஜனங்கள் என்பதை அறிந்திருந்தனர். இங்ஙனம் மேற்கு தேசங்களில் பதினாயிரம் அல்லது லக்ஷத்தில் ஒருவர் இருவர் மாத்திரம் ஒருவாறு நமது மேன்மையை அங்கீகாரம் செய்தனர். எனினும், அந் நாடுகளிலே பொது ஜனங்களின் மனதில் "இந்தியா தேசத்தார் ஏறக்குறைய காட்டு மனிதரின் நிலையிலுள்ளோர்'' என்ற பொய்க் கொள்கையே குடிகொண்டிருந்தது. அப்பால், ஸ்வாமி விவேகானந்தரும் பின்னிட்டு ரவீந்திரநாத தாகூர், ஜகதீச சந்திரவஸு முதலிய மஹான்களும் மேற்றிசையில் விஸ்தாரமான யாத்திரைகள் செய்து தம்முடைய அபார சக்திகளைக் காண்பித்தபின்னரே, மேற்றிசை வாசிகளில் பலர், ''அடா! இந்தஹிந்துக்கள் நாகரீகத்திலும், அறிவிலும் இவ்வளவு மேம்பட்டவர்களா' என்று வியப்பெய்தினர்.
தவிரவும், மேற்கத்தியார் நம்மைக் குறைவாக நினைக்கிறார்கள் என்பதை அவ்விடத்துப் பத்திரிகைகளின் மூலமாகவும் புஸ்தகங்களின் மூலமாகவும் தெரிந்து கொண்டவர்களால் நமது தேசத்துக் கல்விப் பெருமையால் இந்தியாவின் உண்மையான மாட்சியை அறியாது நின்ற இங்கிலீஷ் படிப்பாளியாகிய நம்மவரின் பலரும் வெளி நாட்டாரின் எண்ணத்தையே உண்மையெனக் கருதி மயங்கி விட்டனர். காலச் சக்கரத்தின் மாறுதலால் இந்நாட்டில் அறிவுத் துறைகள் பலவற்றிலும் மேற்படி இங்கிலீஷ் படிப்பாளிகளே தலைமை வகிக்கும்படி நேர்ந்துவிட்டதினின்றும், இந்தியா தன் மாண்பை முற்றிலும் மறந்துபோய் அதோகதியில் விழுந்துவிடுமோ என்று அஞ்சக்கூடிய நிலைமை அநேகமாய் ஏற்படலாயிற்று. இப்படிப் பட்ட பயங்கரமான சமயத்தில் ஸ்வாமி விவேகானந்தர் முதலாயினோர் தம்முடைய ஞான பராக்கிரமத்தால் மேற்றிசை நாடுகளில் திக்விஜயம் பண்ணி மீண்டனர். இதினின்றும், இங்குள்ள இங்கிலீஷ் படித்த சுதேச தூஷணைக்காரர் தமது மடமை நீங்கி ஹிந்து நாகரீகத்தில் நம்பிக்கை செலுத்துவராயினர். மேற்றிசையோர் எது சொன்னாலும் அதை வேதமாகக் கருதிவிடும் இயல்பு வாய்ந்த நம்மவர், முன்பு இந்தியாவை அந்த அந்நியர் பழித்துக்கொண்டிருந்தபோது தாமும் பழித்தவாறே, இந்தியாவை அவர்கள் புகழத் தொடங்கியபோது தாமும் சுதேசப்புகழ்ச்சி கூறலாயினர். விவேகானந்தர் முதலானவர்கள் ஐரோப்பிய அமெரிக்ககர்களால் போற்றப்படுவதன் முன்பு அம் ஹான்களை நம்மவர் கவனிக்கவேயில்லை. அப்பெரியோர் மேற்றிசையில் வெற்றி பெற்று மீண்ட மாத்திரத்தில், அவர்களை நம்மவர் தெய்வத்துக் கொப்பாக எண்ணி வந்தனை வழிபாடுகள் செய்யத் தலைப் பட்டனர். இந்த விஷயத்தை நம்முடைய மாதர்கள் நன்றாகக் கவனித்தறிந்து கொள்ளுதல் நன்று
அறிவின் வலிமையே வலிமை. அறிவினால் உயர்ந்தோர்களை மற்றோர் இழிவாக நினைப்பதும், அடிமைகளாக நடத்துவதும் ஸாத்யப்படமாட்டா. அறிவின் மேன்மையால் வெளித் தேசங்களில் உயர்ந்த கீர்த்திபடைத்து மீள்வோரை அதன் பிறகு இந்தத் தேசத்தார் கட்டாயம் போற்றுவார்கள். சில ஹிந்து ஸ்திரீகள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்ந்த கீர்த்தி ஸம்பாதித்துக்கொண்டு வருவார்களாயின், அதினின்றும் இங்குள்ள ஸ்திரீகளுக்கெல்லாம் மதிப்பு உயர்ந்துவிடும். இந்த விஷயத்தை ஏற்கெனவே நம்முடைய மாதர் சிலர் அறிந்து வேலை செய்து வருகிறார்கள். வங்காளத்துப் பிராமண குலத்தில் பிறந்து ஹைதராபாத் நாயுடு ஒருவரை மணம் புரிந்து வாழும் ஸ்ரீமதி ஸரோஜினி நாயுடு என்ற ஸ்திரீ இங்கிலீஷ் பாஷையில் உயர்ந்த தேர்ச்சி கொண்டு ஆங்கிலேய அறிஞர்கள்மிகவும் போற்றும்படியாக இங்கிலீஷில் கவிதைஎழுதுகிறார். இவருடைய காவியங்கள் பல இங்கிலாந்தில் அச்சிடப்பட்டு அங்குள்ளோரால் மிகவும்உயர்வாகப் பாராட்டப்படுகின்றன. மேலும், இந்த ஸ்திரீ இங்கிலாந்தில் பல இடங்களிலே நமது தேசத்து முன்னேற்றத்தையொட்டி அற்புதமான ப்ரஸங்கங்கள்செய்து சிறந்த கீர்த்திடைந்திருக்கிறார். மேலும், வங்காளி பாஷையிலே கவிதை யெழுதுவோராகிய ஸ்ரீமதி காமிநீராய், ஸ்ரீமதி மன குமாரி தேவி, ஸ்ரீமதி அநங்கமோஹினி தேவி என்ற மூன்று ஸ்திரீகளுடைய பாட்டுக்களை இங்கிலீஷில் மொழிபெயர்த்து அமெரிக்காவிலுள்ள பத்திரிகையொன்று புகழ்ச்சியுரைகளுடன் சிறிது காலத்துக்கு முன்பு ப்ரசுரம் செய்திருப்பதினின்றும், இம்மாதர்களுக்கு அமெரிக்காவில் நல்ல கீர்த்தியேற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
புனா நகரத்துச் சித்திர பண்டிதராகிய ஜனாப்பை ஜீரஹ்மின் என்பவர் அமெரிக்காவின் ராஜதானியாகிய ''நியூயார்க்'' நகரத்திற்குப் போய் சென்ற வருஷத்தில் அந்நகரத்துச் சிற்பிகளால் மிகவும் போற்றப்பட்டார். இவருடைய சித்திரங்களை அங்குள்ளோர் மிகவும் வியந்தனர். "அஜந்தாவிலுள்ள குகைச்சித்திர வேலைகளின் ஆச்சரியத்தைக் குறித்து ஸ்ரீமான் பைஜீரஹ்மின் கொலம்பியா ஸஸவகலா சங்கத்தாரின் முன்னே நேர்த்தியான உபந்யாஸம் புரிந்தார். இவருடன் இவருடைய மனைவியும் அங்கு சென்றிருந்தாள். இவர் ''இந்தியா தேசத்து சங்கீதம்'' என இங்கிலீஷில் ஒருபுத்தக மெழுதியிருக்கிறார். ஹிந்து ஸங்கீத சாஸ்திரத்திலும் வாய்ப்பாட்டிலும் நல்ல தேர்ச்சியுடையவர். இவர் அமெரிக்காவில் பல மாதர் ஸபைகளின் முன்பு ஹிந்து ஸங்கீதத்தைக் குறித்து பல உபந்யாஸங்கள் செய்தார். இடைக்கிடையே தம் உபந்யாஸக் கருத்துக்களை திருஷ்டாந்தப்படுத்தும் பொருட்டு நேர்த்தியான பாட்டுக்கள் பாடி அந்நாட்டினரை மிகவும் வியப்புறச் செய்தார். இங்ஙனம், தமிழ்மாதர்களிலும் பலர் மேல்நாடுகளுக்குச் சென்று புகழ் பெற்று மீள்வாராயின், அதினின்றும் இங்கே நம்முடைய ஸ்திரீகளுக்குள்ள மதிப்பு மிகுதிப்படுமென்பதில் சிறிதேனும் ஐயமில்லை. எவ்வாறு நோக்கிய போதிலும், தமிழ்நாட்டு மாதர் ஸம்பூர்ணமான விடுதலை பெற வேண்டுவராயின் அதற்குக்கல்வித் தோணியே பெருந்துணையாம். எனவே, கொஞ்சம் கொஞ்சம் பல துறைகளில் பயிற்சி வாய்ந்திருக்கும் தமிழ்சகோதரிகள் இரவு பகலாகப் பாடுபட்டு அவ்வத்துறைகளில் நிகரற்ற தேர்ச்சி பெற முயலவேண்டும். இடைவிடாத பழக்கத்தால் தமிழ் மாதர் தமக்குள்ள இயற்கையறிவை மிகவும் உன்னத நிலைக்குக் கொணர்ந்து விடுதல் சாலவும் எளிதாம். ஓளவையார் பிறந்து வாழ்ந்த தமிழ் நாட்டு மாதருக்கு அறிவுப்பயிற்சி கஷ்டமாகுமா? சற்றே ஊன்றிப் பாடுபடுவார்களாயின், தமிழ் மாதர் அறிவுப் பயிற்சிகளிலே நிகரற்ற சக்தி படைத்து விடுவார்கள். அறிவு திறந்தால் பிறகு விடுதலைக் கோட்டையைக் கைப்பற்றுதல் அதி ஸூலபமாய் விடும். எனவே, பலவித சாஸ்திரங்கள் படித்துத் தேறுங்கள்; தமிழ்ச் சகோதரிகளே! அங்ஙனம் தேறியவர்களில் சிலரேனும் வெளிநாடுகளுக்குப்போய்க் கீர்த்தி ஸம்பாதித்துக் கொண்டு வாருங்கள். விடுதலைத் தெய்வம் உங்களைத் தழுவும் பொருட்டுஇரண்டு கைகளையும் விரித்துக்கொண்டு காத்து நிற்கிறது. தமிழ் மாதர்களே! மனம் சோர்ந்து விடாதீர்கள். உங்களுக்கு நல்ல காலம் வருகிறது! வந்து விட்டது; நீங்கள் விடுதலை பெறுவீர்கள்; உங்களால் உலகம் மேன்மையுறும்.
சகோதரிகளே!
தமிழ் நாட்டின் நாகரீகம் மிகவும் புராதனமானது.ஒரு தேசத்தின் நாகரீகம் அல்லது அறிவு முதிர்ச்சி இன்னதன்மை யுடையதென்று கண்டுபிடிக்க வேண்டுமாயின்,அதைக் கண்ணாடி போல விளக்கிக் காட்டுவது அந்த நாட்டில் வழங்கும் பாஷையிலுள்ள இலக்கியம். அதாவதுகாவியம் முதலிய நூல்களேயாம். இங்கிலாந்து தேசத்தின்தற்கால இலக்கிய நூல்களை வாசித்துப் பார்த்தோமாயின், அதன், தற்கால நாகரீகத்தை ஒருவாறு அளவிடக் கூடும்.எனவே, தமிழ் நாட்டின் புராதன நாகரீகத்தை அளவிட்டறிவதற்கு தமிழ் நூல்களே தக்க அளவுகோலாகின்றன. இந்தியாவில் பெரும்பான்மையான"பாஷைகள் ஸமஸ்க்ருதத்தின் திரிபுகளேயன்றி வேறல்ல; அங்ஙனம் திரிபுகளல்லாததுவும் ஸம்ஸ்க்ருதக் கலப்புக்குப்பிந்தியே மேன்மை பெற்றனவாம்.
தமிழ் பாஷைக்கோ இலக்கணம் முதல்முதலாக அகஸ்தியராலும் அவருடைய சிஷ்யராகிய திரணதூமாக்நி (தொல்காப்பியர்) என்ற முனிவராலுமே சமைத்துக் கொடுக்கப்பட்ட தென்பது மெய்யே. அதனின்றும் தமிழ் இலக்கணம் பெரும்பாலும் ஸம்ஸ்கிருத இலக்கணத்தை அனுசரித்தே சமைக்கப்பட்டிருக்கின்ற தென்பது மெய்யே எனினும் வடமொழிக் கலப்புக்கு முந்தித் தமிழுக்கு வேறுவகையான இலக்கணமிருந்து ஒரு வேளை பின்னிட்டு மறைந்திருக்கக் கூடுமென்று நினைப்பதற்குப் பல ஹேதுக்கள் இருக்கின்றன. இஃது எவ்வாறாயினும், ஸம்ஸ்கிருத பாஷையின் கலப்புக்கு முன்னாகவே, தமிழ்நாட்டில் மிகவும் உயர்ந்த நாகரீகமொன்று நின்று நிலவி வந்ததென்பதற்கு அடையாளமாகத் தமிழில் மிக உயர்ந்ததரமுடைய பல பழைய இலக்கிய நூல்கள் காணப்படுகின்றன.
ஐரோப்பாவிலும், ஆசியாவிலும், பிறஇடங்களிலும் காணப்படும் நாகரீகங்களுக்கெல்லாம் முந்தியதும் பெரும்பான்மை மூலாதாரமுமாக நிற்பது"ஆர்ய நாகரீகம். அதாவது, பழைய ஸம்ஸ்கிருத நூல்களிலே சித்தரிக்கப்பட்டு விளங்குவது இந்த ஆரிய நாகரீகத்துக்கு ஸமமான பழமை கொண்டது தமிழருடைய நாகரீகம் என்று கருதுவதற்குப் பலவிதமான ஸாக்ஷ்யங்களிருக்கின்றன. ''ஆதியில் பரம சிவனால் படைப்புற்ற மூல பாஷைகள் வடமொழியென்று சொல்லப்படும் ஸம்ஸ்கிருதமும் தமிழுமேயாம்'' என்று பண்டைத் தமிழர் சொல்லியிருக்கும் வார்த்தை வெறுமே புராணக் கற்பனை அன்று. தக்க சரித்திர ஆதாரங்களுடையது. ''தமிழரும் ஆரியருமல்லாதஜனங்களைக் கடவுள் பேச்சில்லாமலா வைத்திருந்தார்?'' என்று கேட்பீர்களாயின், மற்றச் சொற்களும் பல இருக்கத்தான் செய்தன. ஆனால், மனித நாகரீகத்தில் முதன் முதலாக இவ்விரண்டு பாஷைகளிலேதான் உயர்ந்த கவிதையும், இலக்கியமும், சாஸ்திரங்களும் ஏற்பட்டன. மற்றபாஷைகளின் இலக்கிய நெறிகள் இவற்றுக்கும் பின்னேசமைதன. பல இடங்களில் இவை இயற்றின நடையையேமுன் மாதிரியாகப் கொண்டன. அதாவது ஆரியரும் தமிழருமே உலகத்தில் முதல் முதலாக உயர்ந்த நாகரீகப்பதவி பெற்ற ஜாதியார். இங்ஙனம் முதல் முறையாக நாகரீகம் பெற்ற இவ்விரண்டு வகுப்பினரும் மிகப் பழைய நாட்களிலேயே ஹிந்து மதம் என்ற கயிற்றால் கட்டுண்டு ஒரே கூட்டத்தாராகிய செய்தி பூமண்டலத்தின் சரித்திரத்திலேயே மிக விசேஷமும் நலமும் பொருந்திய செய்திகளில் ஒன்றாகக் கணித்தற்குரியது.
தமிழ் நாட்டு மாதராகிய என் அன்புக்குரிய ஸகோதரிகளே! இத்தனை பழமையும் மேன்மையுஞ்சான்ற இரண்டு பகுதிகளின் கலப்பாகுந் தன்மையால் பாரத தேசத்திலேயே மற்றப் பிரதேசங்களிலுள்ள நாகரீகத்தைக் காட்டிலுங்கூட ஒருவாறு சிறப்புடையதாகக் கருதுவதற்குரிய ஆர்ய திராவிட நாகரீகம் உங்களுடைய பாதுகாப்பிலிருக்கிறது.
இதனை மேன்மேலும் போஷித்து வளர்க்குங் கடமை உங்களைச் சேர்ந்தது. எங்ஙனம் எனில்,பொதுப்படையாக நோக்குமிடத்தே மனித நாகரீகங்கள் ஆண் மக்களின் உதவி கொண்டு பிறப்பிக்கப்படுகின்றன. அப்பால் பெரும்பாலும் பெண்களாலேயே காக்கப்படுகின்றன. இடைக்காலத்தில் மகம்மதிய நாகரீகம்"வந்து ஹிந்து தர்மத்தைத் தாக்கிற்று. ஆனால், ஹிந்து தர்மம் அதிலுள்ள முக்கிய அம்சங்களைத் தனதாக்கிக்கொண்டு, அந்தத் தாக்குதலால் அழிவெய்தாமல், முன்னைக் காட்டிலும் அதிக சக்தியுடன் மிஞ்சி நின்றது.ஸமீப காலத்தில் ஐரோப்பிய நாகரீகம் இந்தியாவுக்குவந்து சேர்ந்திருக்கிறது. இதுவும் நமது நாட்டுநாகரிகத்துடன் நன்றாகக் கலந்து விட்டது. இனி இதன் விளைவுகளை நம் நாட்டாரின் அறிவினின்றும் முற்றிலும் பிரித்துக் களைதல் ஸாத்தியப்படாது. இது நம்முடைய தேசஞானத்தின் மர்மங்களுக்குள்ளே கலந்து பெரும்பாலும் நமதாய் விட்டது. எனினும், நம்மவரிலேபல பண்டிதர்கள் பல வருஷங்களாக, 'இந்த ஐரோப்பிய நாகரீகத்தை நாம் முற்றிலும் உதறித் தள்ளி விடுதல் நன்றோ? அல்லது, இதனை நாம் முழுமையாகவேதழுவிக் கொள்ளலாமா? அல்லது இதினுள்ளே நல்ல அம்சங்களை மாத்திரம் எடுத்துக்கொண்டு தீயவற்றைக் களைந்து விடலாமா?' என்ற விஷயங்களைக் குறித்துநீண்ட ஆலோசனைகளும் விசாரணைகளும், ஆராய்ச்சிகளும் நடத்தி வருகிறார்கள். ஆனால், இந்த ஐரோப்பிய நாகரீகமென்பது ஒரு ஸ்தூல வஸ்துவன்று. ஸ்தூல வஸ்துவாக இருந்தால் அதை நம் இஷ்டப்படிதுண்டு துண்டாக வகுக்கவும், வேண்டிய அம்சங்களை எடுத்துக் கொள்ளவும், பிறவற்றை விலக்கவும் ஸௌகர்யப்படும். மனிதர்களின் பயிற்சி இத்தகையபொருளன்று. அஃது ஸூக்ஷ்மப் பொருள்.
ஐரோப்பிய நாகரீகத்தின் உண்மை இயல்புக்கு ஸம்பந்தமில்லாதனவும், அதன் புறத்தோலின் மீது தோன்றும் தோற்றங்கள் போன்றனவுமாகிய முக்கியத் தன்மையில்லாத சில புற வழக்கங்களை விரும்பாத நம்மவரில் சிலர் அந்த நாகரீகத்தையே துண்டு துண்டாக வெட்ட வேண்டிய பகுதிகளைக் கொண்டு பிறவற்றை நீக்குதல் நலமென்று கருதுகிறார்கள். திருஷ்டாந்தமாக, தலைமயிரை கத்தரித்துக் கொள்ளுதல், சுருட்டுப் பிடித்தல், சாராயங் குடித்தல், பெண்களைத் தம் இஷ்டப்படி பரபுருஷருடன் பேசவும்பழகவும் இடங்கொடுத்தல் - இவை போன்றனவெல்லாம் ஐரோப்பிய நாகரீகத்தின் கெட்ட லக்ஷணங்களென்றும்,ஆதலால் இவற்றை நாம் நீக்கிவிட வேண்டுமென்றும், ஐரோப்பியரின் உழைப்பு, விடா முயற்சி, ஒற்றுமை, பொருள் சேர்ப்பதில் அவர்களுக்குள்ள திறமை இவைபோன்றவை யெல்லாம் அந்த நாகரீகத்தின் நல்ல லக்ஷணங்களென்றும், ஆதலால் இவற்றை நம்மவர் கைக்கொள்ள வேண்டுமென்றும் நம்மவரிலே பலர் அடிக்கடிசொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால், இங்ஙனம் பேசுவோர் விஷயங்களை ஆழ்ந்து கவனியாமல் அவற்றின் புறத்தோலை மாத்திரம் கருதும் இயல்புடையார். ஏனென்றால் தலை மயிரை வெட்டுவதும், சுருட்டுப் பிடிப்பதும், சாராயங் குடிப்பதும் ஐரோப்பிய நாகரீகத்தின் தத்துவங்களல்ல புகையிலை மாத்திரம் தான் சில நூற்றாண்டுகளின் முன்பு அமெரிக்காவிலிருந்து புதிதாக வந்த சாமான். ஐரோப்பா மூலமாக அது உலக முழுவதையும் வியாபித்தது. ஐரோப்பியர் அதைச் சுருட்டாகப் பிடிக்கிறார்கள். நம்மவரும் அந்த வழக்கத்தை அங்ஙனமே கைக்கொண்டார். பலர் அப்படிக்கின்றி, கொஞ்சம் வைதிகமான ஜனங்கள் அதை வாய்ப் புகையிலையாகவும், மூக்குப் பொடியாகவும் உபயோகிக்கிறார்கள். மதுபானம் ஐரோப்பியரின் ஸஹவாஸத்தால் இந்நாட்டில் மிகுதியுற்றதென்பது மெய்யேயாயினும், அது ஐரோப்பியரால் புதிதாகக் கொண்டு நுழைக்கப்பட்ட வழக்கமன்று; புராதன கால முதலாகவே நமது தேசத்திலுள்ளது. ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய சகோதரரும், அவதார புருஷரில் ஒருவருமாகிய பலராமர் பெருகுடியரென்றும், கிருஷ்ணனே சாதாரணமாகக் குடிக்கக்கூடியவரென்றும் பகவானுடைய மக்கள் குடிவெறி மிகுதியால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு செத்தார்களென்றும் புராணங்கள் சொல்லுகின்றன.
சுருட்டுப் பிடித்தல் முதலியன ஐரோப்பிய நாகரீகத்தின் தத்துவங்களல்ல என்று மேலே சொன்னேன். அவற்றை அங்ஙனம் பாவித்தல் வெற்றிலை போட்டுக் கொள்வதையும், மூக்குப்பொடி போட்டுக் கொள்வதையும்,உச்ச நிலையில் காலணா அகலக்குடுமி வைத்துக்கொள்வதையும் ஹிந்துமதத்தின் மூல தருமங்களாகக் கருதும் மடமைக்கு நிகராகும். மேலும் இவற்றையும் ஐரோப்பாவின் ஸ்திரீகளுக்குள்ள அதிக ஸ்வதந்திரங்களையும் ஒரே ஜாப்தாவில் சேர்த்துக் கணக்கிடுதல் மிதமிஞ்சிய அஞ்ஞானத்துக்கு லக்ஷணமாம். ஏனென்றால், ஸ்திரீ ஸ்வதந்திரம் ஆத்ம ஞானத்தை ஆதாரமாக உடையது. ஆண் பெண் எல்லாரும் சமானமென்பதும் பிறருக்குத் தீங்கு விளையாதவரையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் தன்னிஷ்டப்படி யெல்லாம் நடக்கக்கூடிய அதிகார முண்டென்பதும் ஐரோப்பிய நாகரீகத்தின் மூல ஸித்தாந்தங்கள். தலைமயிர்வெட்டிக் கொள்ளுதல் முதலியன ஸௌகர்யத்தையும் காலதேச வர்த்தமானங்களையும் தழுவியேற்படும் முக்கிய தன்மையில்லாத புறநடைகள். சரீர ஸௌகரியங்களைக் கருதியும் அலங்காரத்தின் பொருட்டாகவும் ஒரு தேசத்தார் ஏற்படுத்திக் கொள்ளும் வழக்கங்கள். சில சமயங்களில் அந்த தேசத்தாருக்கு நன்மையாகவும் பிறருக்குத் தீமையாகவுமிருக்கலாம். சில சமயங்களில் இவர்களுக்கே கேடாக முடியினும் முடியலாம். இவற்றுள், அலங்காரத்தைக்கருதி ஏற்படும் உடை வழக்கங்களும், மயிர் வைத்துக் கொள்ளும் வழக்கங்களும் எந்த நாட்டிலும் சாசுவதமாக நிற்கக் கூடியவை அல்ல. அடிக்கடி மாறும் இயல்புடையன. ஒரு தேசத்திலேயே எல்லோரும் ஒரே மாதிரிஅலங்காரத்தை விரும்புவதில்ல. சிலருக்கு அலங்காரமாகத் தோன்றுவது சிலருக்கு விகாரமாகத் தோன்றக்கூடும்.திருஷ்டாந்தமாக, தமிழ் நாட்டில் பிராமணரும் வேறு சிலவகுப்பினரும் மீசையைச் சிரைத்துக் கொள்ளுகிறார்கள். ஆனால் பெரும்பான்மையான தமிழ் மக்கள் மீசையில்லாமலிருப்பது விகாரமென்று நினைக்கிறர்கள். இங்கிலாந்தில் நூறு வருஷங்களுக்கு முன்பு ஆண்பிள்ளைகள் தலைமயிரை கத்திரித்துக்கொள்ளும் வழக்கம் கிடையாது. தலைமயிர் முழுவதையும் நீளமாக வளர்த்து விடுதலே வழக்கமாகக் கொண்டிருந்தனர். தென்னிந்தியாவில் பெரும்பான்மையான பிராமணர் மீசை வைத்துக்கொள்வதில்லை. வேத பூமியாகிய ஆரியவர்த்தத்தில், பிராமணர்கள் மீசையில்லாமல் இருப்பது சாஸ்திரவிரோதமென்று பாவிக்கிறார்கள். அங்கு ஒருவன் மீசையைச் சிரைத்தால் அவருடைய நெருங்கிய சுற்றத்தாரில் யாரேனும் இறந்து போவதற்கடையாளமாகக் கருதப்படுகிறது. பல வருஷங்களில் முன்பு நான் காசியில் ஜயநாராயண கலாசாலை என்ற இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து வாசிக்கப் போனேன். நான் தமிழ் நாட்டிலிருந்து சென்றவனாதலால் தமிழ் நாட்டின் பிராமணரின் வழக்கப்படி அடிக்கடி முகக்ஷவரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் படித்துக் கொண்டிருந்த பிள்ளைகள் என்னை நோக்கி மிகவும் ஆச்சரியப்பட்டனர். எப்போது பார்த்தாலும் இவன் மீசையை சிரைத்துவிட்டு வருவதின் காரணம் யாதென்று அவர்களுக்குள்ளே பலநாள் ஆலோசனை செய்து பார்த்தார்கள். அவர்களுக்கொன்றும் புலப்படவில்லை. கடைசியாக என்னையே ஒருவன்கேட்டுத் தீர்த்தான். ''உங்கள் குடும்பத்தில் யாரேனும் வாரந் தவறாமல் செத்துப் போய் கொண்டிருக்கிறார்களா?'' என்று என்னிடம் வினவினான். அவன் இங்ஙனம் கேட்டதின் காரணத்தை அறிந்து கொண்டு 'அப்படியில்லையப்பா, தமிழ் நாட்டில் பிராமணர் மீசை வைத்துக்கொள்ளும் வழக்கமில்லை' என்று தெரிவித்தேன். ஆசாரங்களும் பழக்கங்களும் சில சமயங்களில் மதக் கொள்கைகளை ஆதாரமாகக் கொண்டிருக்கக்கூடும். யதேச்சையாகவும் அங்ஙனமின்றி வெறுமே அர்த்தமில்லாமலும் தோன்றி நடைபெறவுங்கூடும். குடுமி வைத்துக் கொள்ளும் மாதிரிகள் இவை போன்ற சரீர அலங்கார சம்பந்தமான வழக்கங்களை நமது நாட்டின் பிற்காலத்தில் மதக் கொள்கைகளுடன் பிணைத்து ஸ்ம்ருதிகளிலே அவற்றைக் குறித்துச் சட்டம்போடத் தொடங்கினார்கள். இந்த பரிதாபகரமான தவறுதல் ஆதிகாலம் முதல் மற்ற நாடுகளிலும் ஏற்பட்டு வந்திருக்கிறது. சிறிது காலத்து முன்பு வரை சீனா தேசத்தார் 'பன்றிவால்'என்று சொல்லப்படும் தமது நீளக் குடுமியை மிகவும் வைதிகமாகவும் அதனை வெட்டி யெறிதல் பெரும்பாவமுமாகவும் கருதி வந்தார்கள். சில வருடங்களுக்கு முன்பு அந்நாட்டில் ராஜவம்சத்தின் ஆட்சி அழிந்து போய் குடியரசுஸ்தாபனம் செய்யப்பட்டபோது பதினாயிரம் லக்ஷக்கணக்கான சீனர் ஏககாலத்தில் குடுமிகளை வெட்டியெறிந்தனர். அந்தரோமங்கள் ஆயிரக்கணக்கான வண்டிகள் நிறைய ஏற்றப்பட்டு வியாபாரத்துக்காக பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இவ்விஷயத்தை நான் இவ்வளவு நீட்டாக சொல்ல வந்ததின் காரணம் யாதென்றால் இத்தகைய புற ஆசாரங்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் நமது தேசத்து மாதர் மிதமிஞ்சியகவலை செலுத்துவதை மாற்ற வேண்டுமென்ற நோக்கம்.
ஸஹோதரிகளே! நீங்கள் ஐரோப்பிய நாகரீகத்தின் சேர்க்கையைக் குறித்துச் சிறிதேனும் வருத்தப்படவேண்டாம். அது நமது தேசத்துப் பயிற்சியை அழிக்கும் வலிமையுடையதன்று. அது நமக்குத் துணை. அது நாம் அஞ்சுவதற்குரிய பிசாசன்று. வெவ்வேறு வகைப்பட்ட இரண்டு நாகரீகங்கள் வந்து கூடும்போது அவற்றுள் ஒன்று மிகவும் வலியதாகவும் மற்றொன்று மிகவும் பலவீனமாகவும் இருக்குமாயின், வலியது வலிமையற்றதை இருந்த இடம் தெரியாமல் விழுங்கிவிடும். வலிமையற்ற நாகரீகத்துக்குரிய பாஷையும் மதமும் முக்கியத் தன்மையற்ற புற ஆசாரங்கள் மாத்திரமேயன்றி விவாக முறை முதலிய முக்கிய ஆசாரங்களும் அழிந்து மறைகின்றன. அந்த நாகரீகத்தைக் காத்து வந்த ஜனங்கள் பலமுடைய நாகரீகஸ்தரின் பாஷை,மதம் முதலியவற்றைக் கைக்கொள்ளுகிறார்கள். பிலிப்பைன் தீவில் அமெரிக்க நாகரீகம் இவ்வகை வெற்றியடைந்திருக்கிறது. ஆனால் நம்முடைய ஹிந்து நாகரீகம் இங்ஙனம் சக்தியற்ற வஸ்துவன்று. பிற நாகரீகங்களுடன் கலப்பதனால் இதற்குச் சேதம் நேருமென்றுநாம் சிறிதேனும் கவலைப்படவேண்டிய அவசியமில்லை. உலகத்திலுள்ள நாகரீகங்கள் எல்லாவற்றிலும் நம்முடைய நாகரீகம் அதிக சக்தியுடையது. இது மற்றெந்த நாகரீகத்தையும் விழுங்கி ஜீர்ணித்துக் கொள்ளும் திறன் வாய்ந்தது. ஆதலால், ஐரோப்பிய நாகரீகத்தின் கலப்பிலிருந்து ஹிந்து தர்மம் தன்உண்மையியல்பு மாறாதிருப்பது மட்டுமேயன்றி முன்னைக் காட்டிலும் அதிக சக்தியும் ஒளியும் பெற்று விளங்குகிறது. இந்த விஷயத்தை நம்முடைய மாதர்கள் நன்றாக உணர்ந்து கொண்டாலன்றி, இவர்களுடைய ஸ்வதர்ம ரக்ஷணம் நன்கு நடைபெறாது.
தமிழ் நாட்டு ஸஹோதரிகளே! உங்களிடம் எத்தனையோ அரிய திறமைகளும், தந்திரங்களும் உயர்ந்து இருந்த போதிலும், கல்வியின் பரவுதல் அதிகமில்லாதபடியால் அவ்வப்போது வெளியுலகத்தில் நிகழும் செய்திகளையும் மாறுதல்களையும் நீங்கள் அறிந்து கொண்டு அதற்குத் தக்கபடி நடக்க இடமில்லாமற் போகிறது.''ஸ்வதர்மத்தைக் காப்பாற்றுவதில் இறந்து விட்டாலும்பெரிதில்லை'' என்று கிருஷ்ணபகவான் பகவத்கீதையில் சொல்லுகிறார். ஆனால், இங்ஙனம் உயிரினும் அருமையாகப் போற்றுதற்குரிய கடமைகள் அல்லது தர்மங்களுக்கும் அர்த்தமற்றனவும் ஸத்தில்லாதனவுமாகிய வெற்று வழக்கங்களுக்கும் பேதமறியாமல் நீங்கள் மருட்சி கொண்டு வீணேதுயரப் படலாகாது. திருஷ்டாந்தமாக, தமிழ் நாட்டு மாதருக்குமட்டுமே யன்றி உலகத்து நாகரீக தேசங்களிலுள்ள ஸ்திரீகளுக்கெல்லாம் கற்பு மிகச் சிறந்த கடமையாகக் கருதப்படுகிறது. அதைக் காக்கும் பொருட்டாக ஒரு ஸ்திரீ எவ்வளவு கஷ்டப்பட்ட போதிலும் தகும். ஆனால் குழந்தைப்பிராய முதலாகவே செவிகளில் மிகவும் கனமான நகைகளைத் தொங்கவிட்டுத் தோள்வரையிலும், சில சமயங்களில் மார்புவரையிலும், காது வளர்க்கும் வினோதமான ஆசாரம் தமிழ்நாட்டு மாதர்களில் பல பகுதியாரிடம் காணப்படுகிறது. நம்முள்ளே புதிதாக இங்கிலீஷ் படித்துத் தேறியவர்களில் பலர் தம்முடைய மனைவியர் ஏற்கெனவே நீளமாகவும் விகாரமாகவும் வளர்த்திருக்கும் செவிகளை மறுபடி சுருக்கித்தைத்துத் தோடு போட்டுக் கொள்ளும்படி செய்ய விரும்புகிறார்கள். தமக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கேனும் அங்ஙனம் காது வளர்க்காமலிருக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள். இதற்காக பல ஸ்திரீகள் புருஷருடன் முரண்பட்டு வீட்டில் தீராத மனஸ்தாபமும் சண்டை சச்சரவுகளும் நிகழும்படி நற்கிறார்கள். கற்பு எங்ஙனம் ஸ்வதர்மமோ அதுபோலவே காது வளர்ப்பதும் ஸ்வதர்மமென்று அந்த ஏழை ஸ்திரீகள் அறியாமையாலே நினைக்கிறார்கள். மாதரிடையே கல்வி பரவுமாயின், இவ்விதமான தப்பெண்ணங்கள் தாமே விலகிப்போய் விடும். குடும்ப வழக்கங்களாயினும் தேச வழக்கங்களாயினும் ஜாதி வழக்கங்களாயினும் அவற்றுள் முக்கியத்தன்மையுடையன எவை, இல்லாதனவை எவை என்ற ஞானம் நம்முடைய ஸ்திரீகளுக்கு ஏற்படவேண்டுமாயின், அதற்குக் கல்வியைத் தவிர வேறு ஸாதனமில்லை. ஆண்களுக்கு ஸமானமான கல்வித் திறமை பெண்களுக்குப் பொதுப்படையாக ஏற்படும் வரை, ஆண் மக்கள் பெண்மக்களைத் தக்கபடி மதிக்க மாட்டார்கள். தாழ்வாகவே நடத்துவார்கள். தமிழ் நாட்டு ஸஹோதரிகளே! கணவன்மார், உடன் பிறந்தார், புத்திரர் முதலியவர்களால் நன்கு மதிக்கப்பெறாமல் இழிவாகக் கருதப்பட்டு உயிர் வாழ்வதைக் காட்டிலும் இறந்து விடுதல் நன்று.
''மானமிழந்தபின் வாழாமை முன்னினிதே. கல்விகூட அத்தனை பெரிதில்லை, தைரியம் வேண்டும். எதுவரினும் நம்மைப் பிறர் தாழ்வாகக் கருதவும் தாழ்வாகநடத்தவும் இடங்கொடுக்கக் கூடாது என்ற மன உறுதிவேண்டும்.
ஐரோப்பிய நாகரீகத்தின் புறத் தோற்றங்களிலே ஆக்ஷேபத்துக்கு இடமான அம்சங்கள் பலவும் இருக்கின்றன என்பதில் ஸந்தேகமில்லை. ஆனால் இஃது வியக்கத்தக்கதொரு செய்தியன்று. நமது ஸநாதன ஹிந்துதர்மத்தின் புறநடைகளிலேகூடப் பல வெறுக்கத்தக்க அம்சங்கள் வந்து கலந்துதான் கிடக்கின்றன. அதுபற்றி ஐரோப்பிய நாகரீகத்தையே வெறுத்தல் சால மிகப் பெரிய பேதைமையாம். நம்முடைய ஹிந்து தர்மமாகிய வேத தர்மத்துக்கு ஐரோப்பிய நாகரீகம் தனது தத்துவ நிலையில் விரோதமன்று. அதன் உள்நிலை, நான் மேலே குறிப்பிட்டபடி, நமது ஹிந்து தர்மத்துக்குப் பெருத்துணையாக அமைந்திக்கிறது. ஸர்வ ஜீவ ஸமத்வம் எல்லா உயிர்களும் தம்முள்ளே நிகர் என்பது, ஸர்வ ஜீவ ஐக்கியம் - எல்லாஉயிர்களும் ஒன்றென்பது, இவையே ஸநாதன ஹிந்து தர்மத்தின் வேர்க்கொள்கைகள். இவற்றை மனிதர் எப்போதும் தம்முடைய நினைப்புகளில் செயல்களில் விளங்கச் செய்யும் போதுதான் ஹிந்து மதத்துக்கு உண்மையான வெற்றி ஏற்படும்.இக்கொள்கையின் ஒரு சிறு அம்சத்தையே ஐரோப்பியநாகரீகம் தனக்கு ஆதாரமாக உடையது. எல்லா ஜந்துக்களும் நிகரென்பது இறுதியான உண்மை. மனிதரெல்லாரும் தம்முள்ளே ஸமானராவாரென்பது இவ்வுண்மையின் ஒரு சிறுபகுதி. இந்தப் பகுதியுண்மையை நிலை நிறுத்தவேண்டுமென்பதே ஐரோப்பிய நாகரீகத்தின் உட்கருத்து.
ஆனால், ஆழ்ந்த உண்மைகளைக் கண்டுப்பிடிப்பதில் நாம் ஐரோப்பியரைக் காட்டிலும் மிகமிக உயர்ந்திருக்கிறோமெனினும், அவற்றை அனுஷ்டானத்துக்குக் கொண்டு வருவதில் நம்மைக் காட்டிலும் அவர்கள் அதிகஊக்கம் செலுத்துகிறார்கள். ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு ஆகாது. அனுஷ்டானத்துக்கு வராத ஞானத்தை ஞானமென்று சொல்வதே பிழை. ஆகவே, பூமி முழுமைக்கும் பெருந்துணையாக நின்றுமனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றக் கூடிய ஹிந்து மதத்தின் ஸார உண்மைகளை நாம் ஒழுக்கத்தில் காண்பிக்க வேண்டும். இங்ஙனம் காண்பிக்கும்படி நம்மவரைத் தூண்டி வழிகாட்டும் கடமையும் தகுதியும் நம்முடைய மாதர்களுக்கே உரியன. இதனை ஸாதிப்பதற்குரிய உபாயங்களைக் குறித்து மற்றொருமுறை எழுதுகிறேன்.
மாதர் - தமிழ் நாட்டு நாகரீகம்
தமிழ் நாகரீகத்தைக் குறித்து சென்ற வ்யாசத்திலே பொதுப்படையாக சில விஷயங்கள் சொன்னேன். இங்கு அவற்றைச் சற்று விஸ்தாரமாகத் தெரிவிக்கின்றேன். பண்டைத்தமிழ் நாகரீகத்தில் ஸ்திரீகளுக்கு அதிகமான ஸ்வதந்திரம் இருந்தது. இதற்குரிய காரணங்களில் முக்கியமானது யாதெனில்,தமிழ் நாட்டுக்கு மூல அரண்போல் இயற்கையால் வகுப்புற்றிருக்கும் மலையாள நாட்டின் பயிற்சிக்கும் தமிழ் நாகரீகத்திற்கும் எப்பொழுதும் அதிகமான ஊடாட்டமிருந்துகொண்டு வந்தது. மலையாளத்து நாகரீகமோ ஸ்திரீகளைமுன்னிட்டு விளங்குவது.
மிகப் பழைய தமிழ் பாஷையும் மிகவும்"புராதனமான மலையாள பாஷையும் ஒரே வஸ்துதான். பிற்காலத்திலும் சேரநாடு தமிழகத்தில் ஒரு பகுதியாகவே கணக்கிடப்பட்டு வந்தது. சேரரனைவரும் தமிழரசரே. தமிழ்நாடுவேந்தருள்ளே சேர்த்தெண்ணப்பட்டு வந்தனர். பாஷையையொப்பவே நாகரீக விஷயத்திலும் மிகப் பெரிய தமிழ் நாகரீகமும் மிகப் பழைய மலையாள நாகரீகமும் ஒரே வஸ்துதான்.
பிற்காலத்தில் மலைக்கோட்டைக்கு உட்பட்ட மலையாள நாடு பழைய தமிழ் நாகரீகத்தை இயன்றவரை சிதையாமல் காப்பாற்றிக்கொண்டு வந்தது. மலையடிக்குக் கிழக்கே மைதானத்தின் மீது வளர்ச்சி பெற்ற தமிழ் நாகரீகமோவெனில், தெலுங்கு முதலிய வடநாட்டுப்பயிற்சிகளின் ஊடாட்டத்தால் நாளுக்கு நாள் அதிக மாறுதல் பெற்று ஹிந்து தேசத்தின் பொது நாகரீகத்தை அனுசரித்து வருவதாயிற்று.
எனினும், மலையாளத்துப் பழக்கம் ஒருபோதும் நீங்கவேயில்லை. மலை நாட்டு ஆண் மக்கள், உலகமெங்கும் புலி, கரடி, ஓநாய் முதலிய மலை மிருகங்களுடன் போராடியும், மலை வெப்பத்துக்கும், மலை மழைக்கும், மலைப் பனிக்கும்,மலைத் தீக்கும் தப்பியும், கஷ்டத்துடன் பிழைக்க வேண்டியவர்களாதலால், மைதானங்களில் வாழும் ஜனங்களைப்போல் ஸ்திரீகளின் விஷயத்தில் அதிக கடின சித்தமில்லாமல் அவர்களைத் தயவுடனும், மதிப்புடனும் நடத்துவது வழக்கம். ஐரோப்பாவுக்குள்ளே ஸ்விட்சர்லாண்டு தேசத்து மலைப்பெண்கள் மற்றப் பகுதியிலுள்ள மாதரைக் காட்டிலும் அதிக ஸ்வதந்திரமுடையோராக வாழ்ந்து வருகின்றனர்.
மலையாளத்திலோ, மாதர்கள் மிக உயர்ந்த சுதந்திர முடையோர்களாக யிருப்பது மட்டுமேயன்றி சொத்துடைமை அங்கு பெண் சந்ததியாருக்கு ஏற்பட்டிருக்கிறது, இவ்விதமான மலையாள நாகரீகத்துள் நெருங்கிப் பழகி ஊடாடிக்கொண்டு வந்திருப்பதினின்றும், தமிழ்நாட்டு நாகரீகமும் இங்குள்ள மாதர்களுக்கு – ஹிந்து தேசத்தின் மற்றப் பகுதிகளிலுள்ள மாதர்களைக் காட்டிலும்- அதிக ஸ்வதந்திரம் கொடுத்துக்கொண்டு வந்திருக்கிறது.முகம்மதிய நாகரீகத்தின் ஆதிக்கம் பலமடைந்ததினின்றும், வட இந்தியாவில், மேல்ஜாதி ஹிந்து ஸ்திரீகளை கோஷா என்ற முகம்மதிய வழக்கத்தைக் கைகொள்ளும்படி ஏற்பட்ட காலத்திலேகூட, தமிழ் நாட்டிலும் அதன் நாகரீகத்தைத் தழுவிய தெலுங்கு, கன்னடம் முதலிய நாடுகளிலும் அந்த வழக்கம் உண்டாகவில்லை.
மேலும் உலகத்திலுள்ள மாதர்களுக்கெல்லாம் நீதி ஆண்மக்களாலேயே விதிக்கப்பட்டது. தமிழ் நாட்டு மாதரும் ராஜநீதி சம்பந்தப்பட்ட சிறிதளவிலே பொதுவான ஆண் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தனரேயாயினும், ஜனஸமூஹ நீதிகளின் விஷயத்தில் தமிழ் நாட்டில் எப்போதும் ப்ரமாணமாக இயன்று வருவது ஓளவையின் நீதி வாக்கியங்களும் நீதி நூல்களுமேயாம். ஆண்மக்களிலேகூட உயர்ந்த கல்வி பயின்றோர் மாத்திரமே ஜன ஸமூஹ விதாயங்களில் வள்ளுவர் குறள், நாலடியார் முதலியவற்றை ப்ரமாணமாகக் கூறுவர். அதிகப் படிப்பில்லாதவர்களும், படிப்பே தெரியாதவர்களுமாகிய ஜனங்கள் ஆண் பெண் அனைவருக்கும் ஒளவையாரின் நீதியே வழிகாட்டி. தமிழ் ஜனங்களில் பெரும்பான்மையோருக்குச் சுமார் சென்ற இரண்டாயிரம் வருஷங்களாக ஓளவையாரின் நீதியே ப்ரமாணமாக நடை பெற்று வருகின்றது.
ஸாமான்ய ஜனங்கள் ஓளவை நீதியைக் கொண்டாடி வருகிறார்களெனில், கற்றோரும் அரசரும் அதைப்புறக்கணித்து வந்தார்களென்று கருதுதல் வேண்டா. கற்றோருக்கும் அரசர்க்கும் தமிழ் மக்கள் எல்லோருக்கும் குறள், நாலடியார்முதலிய நூல்களைக் காட்டிலும் ஒளவையின் நூல்களில் அகப்பற்றுதலும் அபிமானமும் இருந்து வருகின்றன. ஆனால், இந்த நீதி நூல்கள் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னேயிருந்த முதல் ஓளவையார் இயற்றப்பட்டன அல்ல வென்றும் சுமார் ஆயிரம் வருஷங்களுக்கு முன்னேயிருந்த இரண்டாம் ஓளவையால் செய்யப்பட்டன என்றும் ஒரு கட்சியார் சொல்லுகிறார்கள்.
ஓளவையார் வெறுமே நூலாசிரியர் மட்டுமல்லர். அவர் காலத்திலேயே அவர் ராஜ நீதியில் மிகவும் வல்லவரென்று தமிழ் நாட்டு மன்னர்களால் நன்கு மதிக்கப்பெற்று ராஜாங்கத் தூதில் நியமனம் பெற்றிருக்கிறார். மேலும் அவர் சிறந்த ஆத்மஞானி; யோக சித்தியால், உடம்பை முதுமை, நோவு, சாவுகளுக்கு இரையாகாமல் நெடுங்காலம் காப்பாற்றி வந்தார்.
அதாவது, ஹிருதயத்தில் சுத்தமான, பயமற்ற, கபடமற்ற, குற்றமற்ற, பகைமையற்ற எண்ணங்களை நிறுத்திக் கொண்டால், உடம்பில் தெய்வத்தன்மை, அதாவது சாகாத்தன்மை, (அமரத் தன்மை) விளங்கும் என்றும் பொருள் படுவது. இந்தக் குறள் பாடியவர் ஓளவையார். இவர் தாமே நெடுந்தூரம் இக்கொள்கைப்படி ஒழுகியவரென்பது இவருடைய சரித்திரத்தில் விளங்குகிறது.
ஒரு தேசத்தின் நாகரீகத்துக்கு அந்த தேசத்தின் இலக்கியமே மேலான அடையாளமென்று முந்திய வியாசத்தில் சொன்னேன். திருஷ்டாந்தமாக ஆங்கிலேய நாகரீகத்துக்கு ''ஷேக்ஸ்பியர்'' முதலிய மஹா கவிகளின்நூல்களே அளவுக் கருவியாக கருதப்படுகின்றன. ''நாங்கள் இந்தியா தேசத்து ராஜ்யாதிகாரத்தை இழக்க ஒருப்பட்டாலும் ஒருப்படுவோமே யன்றி ஷேக்ஸ்பியரை இழக்க ஒருநாளும் ஒருப்படமாட்டோம்'' என்று நாம் மறுமொழி சொல்வோமென்று ''மெக்காலே'' என்னும் ஆங்கிலேய ஆசிரியர் சொல்லுகிறார்.
இந்த மாதிரியாகப் பெருமைப்படுத்தி நம்மவர் கம்பனைச் சொல்லலாம்; திருவள்ளுவரைச் சொல்லலாம்; சிலப்பதிகார மியற்றிய இளங்கோவடிகளைக் கூறலாம்; இன்னும் பல புலவர்களைக் காட்டலாம். எனினும், கம்பர், திருவள்ளுவர் முதலிய பெரும் புலவராலேயே தம்மனைவரிலும் மிகச்சிறந்தவராகக் கருதப்பட்ட ஓளவைப்பிராட்டியையே மிகவும் விசேஷமாக எடுத்துச் சொல்லக்கூடும். 'தமிழ் நாட்டின் மற்றச் செல்வங்களை யெல்லாம் இழந்துவிடப் பிரியமா?ஓளவையின் நூல்களை இழந்துவிடப் பிரியமா?' என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின், 'மற்றச் செல்வங்களை யெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மீட்டும் சமைத்துக்கொள்ள வல்லது. ஓளவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதப்பட மாட்டோம், அது மீட்டும் சமைத்துக்கொள்ள முடியாத தனிப் பெருஞ் செல்வம்' என்று"நாம் மறுமொழி உரைக்கக் கடமைப் பட்டிருக்கிறோம். தமிழ்நாட்டு நாகரீகத்துக்கு அத்தனை பெரும் செல்வமாகவும், இத்தனை ஒளி சான்ற வாடா விளக்காகவும் தனிப் பேரடையாளமாகவும் தமிழ் மாதொருத்தியின் நூல்கள் விளங்குவது நமது நாட்டுக்கு ஸ்திரீகளுக்குப் பெரு மகிழ்ச்சி தரத்தக்கதொரு செய்தியன்றோ? இது தமிழ் ஸ்திரீகளுக்கு வெறுமே புகழ் விளைவிப்பது மாத்திரமன்று. அவர்களுக்கு கிரமமான காவலுமாகும். ஓளவையார் பிறந்த நாட்டு மாதரை, ஓளவையார் இனத்து மாதரை, ஆண் மக்களைக் காட்டிலும் அறிவிலே குறைந்த கூட்டத்தாரென்று வாய் கூசாமல் எவனும் சொல்லத் துணிய மாட்டான். மற்ற தேசங்களில், திருஷ்டாந்தமாக இங்கிலாந்து தேசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே ஆண் மக்களுக்கு சமானமான உரிமைகளைப் பெண்களுக்குக் கொடுப்பது தகாதென்று வாதம் பண்ணுகிற கக்ஷியார், மாதர்கள் இயற்கையிலேயே ஆண்மக்களைக் காட்டிலும் அறிவில் குறைந்தவர்களென்றும், ஆதலால் வீட்டுக் காரியங்களுக்கே அவர்கள் தகுதியுடையோரா வாரல்லது அறிவு வன்மையால் நடத்தவேண்டிய நாட்டுப் பொதுக் காரியங்களை நிர்வகிக்க அவர்களுக்குத் திறமை கிடையாதென்றும் தர்க்கிக்குமிடத்தே, அதற்கு ஒரு ஸாக்ஷ்யமாக, 'ஆண் மக்களில் க்ஷேக்ஸ்பியர் என்னும் கவியரசர் எழுதியிருப்பது போன்ற கவிதை எழுதும் திறமை கொண்ட ஸ்திரீ ஒருத்தி நமது நாட்டில் எப்போதேனும் தோன்றியிருப்பதுண்டா? ஏன் தோன்றவில்லை? இதனால் இயற்கையிலே ஸ்திரீகள் ஆண் மக்களைக்காட்டிலும் புத்தியில் குறைந்த வாகளென்பது தெளிவாக விளங்குகிறதன்றோ?' என்கிறார்கள்.
தமிழ் நாட்டிலோவெனில், இப்படிப்பட்ட வாதம் செல்லாது. அதற்கு நேர் எதிரிடையாக இந்நாட்டில் ஸ்திரீகள்:- ''ஓளவையாரைப் போல் கவிதையும் சாஸ்திரமும் செய்யக்கூடிய ஓர் ஆண் மகன் இங்கு பிறந்திருக்கிறானா? ஏன் பிறக்கவில்லை? இதினின்றும் ஆண் மக்கள் இயற்கையிலேயே பெண்களைக் காட்டிலும் அறிவுத்திறமையில் குறைந்தவர்களென்பது தெளிவாக விளங்குகிறதன்றோ?'' என்று வாதிக்கக்கூடிய நிலைமையிலிருக்கிறார்கள்.
மகிமை பொருந்திய ஆத்ம ஞானியாகிய ஓளவையார் இயற்றியிருக்கும் 'ஓளவை குறள்' என்ற ஞானநூல் தமிழ் நாட்டு யோகிகளாலும் சித்தர்களாலும் உபநிஷத்துக்களுக்குச் சமானமாகப் போற்றப்பட்டு வந்திருக்கிறது. யோக சாஸ்திரத்துக்கும் மோக்ஷ சாஸ்திரத்துக்கும் இந்நூல் முக்கிய பாடங்களில் ஒன்றாகக் கருதத்தக்கது. மேலும் யோகாநுபூதி ஸம்பந்தமாகப் பிறர் எழுதுமிடத்தே மிகவும் கடினமும் அஸாதாரணமுமாகிய சொற்களையும் வாக்கியங்களையும் வழங்குதல் இன்றியமையாததென்ற கருத்துடன் வேலை செய்திருக்கிறார்கள். ஓளவையின் நூலோ மிகத் தெளிந்த, மிக எளிய தமிழ்நடையில் எல்லா ஜனங்களுக்கும் பொருள் விளங்கும்படியாக எழுதப்பட்டிருக்கின்றது. 'சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்' என்பது கவிதைத் தொழிலில் மிகவும் உயர்ந்த தொழில். இதில்ஓளவை ஒப்பற்றவள். இத்துடன் மிகவும் அருமையான நுட்பமான விஷயங்களை யாவருக்கும் அர்த்தமாகும்படி மிகவும் எளிய நடையில் சொல்வதாகிய அற்புதத் தொழிலை உயர்ந்த கவியரசர்களே தெய்வீகத் தொழில் என்றும்தெய்வசக்தி பெறாத சாதாரணக் கவிகளுக்கு சாத்தியப்படாத தொழில் என்றும் கருதுகிறார்கள். இந்த அற்புதத் தொழிலிலும் ஓளவை நிகரற்ற திறமை வாய்ந்தவள்.
புருஷார்த்தங்கள், அதாவது மானிட ஜன்மம் எடுத்ததினின்றும் ஒருவன் அடையக்கூடிய மிக உயர்ந்த பயன்களாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் வீடு என்று சொல்லப்படும் முக்தி வாக்குக்கும் மனதுக்கும் எட்டாதாகையால், அதனை விரித்துக் கூற முயலாமல், அதற்குச் சாதனமாகிய தெய்வபக்தியை மாத்திரம் முதல் அத்யாயத்தில் கூறி நிறுத்திவிட்டு, மற்ற மூன்று புருஷார்த்தங்களையும் விளக்கி, திருவள்ளுவ நாயனார் ''முப்பால்'' (மூன்று பகுதிகளுடையது) என்ற பெயருக்கு திருக்குறள் செய்தருளினார். ஆயிரத்து முன்னூற்று முப்பதுசிறிய குறட்பாக்களில் நாயனார் அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலையும் அடக்கிப் பாடியது மிகவும் அபூர்வமான செய்கை என்று கருதப்பட்டது. இது கண்ட ஓளவைப்பிராட்டி வீட்டுப் பாலையும் கூட்டி நான்கு புருஷார்த்தங்களையும் ஒரே சிறிய வெண்பாவுக்குள் அடக்கிப் பாடினார். இந்த ஆச்சரியாமான வெண்பா பின்வருமாறு:
எனவே, கைம்மாறு கருதாமல் பிறருக்கு எவ்விதத்திலேனும் செய்யப்படும் கஷ்ட நிவாரணங்களும் அனுகூலச் செயல்களும் ஈகை எனப்படும். இதுவே மனிதனுக்கு இவ்வுலகத்தில் அறம், அல்லது தர்மம், அல்லது கடமையாம். இனி, தீயசெயல்கள் செய்யாதபடி, எவ்வகைப்பட்ட அறிவு முயற்சியாலேனும் சரீர முயற்சியாலேனும் சேகரிக்கப்படும் உணவு, துணி முதலிய அவசியப் பண்டங்களும், குதிரை வண்டிகள், ஆபரணங்கள், வாத்தியங்கள், பதுமைகள் முதலிய சௌக்கிய வஸ்துக்களும், இவற்றை அனுபவிப்பதற்குச் சாதனங்களாகிய வீடு, தோட்டம் முதலியனவும், இப்பண்டங்களுக்கெல்லாம்பொதுக் குறியீடும் பிரதியுமாக மனிதரால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கும் பொற்காசு, வெள்ளிக்காசு, காகிதப் பணம் முதலியனவும், செல்வம் அல்லது அர்த்தம் எனப்படும் நற்செயல்களாலே சேர்க்கப்படும் பொருளே இன்பத்தைத் தருவதாகையாலும், தீச் செயல்கள் செய்து சேர்க்கும் பொருள்பலவிதத் துன்பங்களுக்கு ஹேதுவாய் விடுமாகையாலும், தீவினைகள் விட்டுச் சேர்ப்பதே பொருள் என்னும் பெயர்க்குரியதென்றும் தீவினைகளாலே சேர்ப்பது துன்பக் களஞ்சியமே யாகுமென்றும் ஓளவையார் குறிப்பிட்டருளினார்.
இனி, இன்பத்துக்கு ஓளவையார் கூறும் இலக்கணமோ நிகரற்ற மாண்புடையது. காதலின்பத்தையே முன்னோர் இன்பமென்று சிறப்பித்துக் கணக்கிட்டனர். பொருளைச் சேர்ப்பதிலும் அறத்தைச் செய்வதிலும் தனித்தனியே பலவகையான சிறிய சிறிய இன்பங்கள் தோன்றும். ஆயினும் இவை காதலின்பத்துக்குத் துணைக் கருவிகளாவது பற்றியே ஒருவாறு இன்பங்களென்று கூறத் தக்கனவாம். உலகத்தில் மனிதர் ருசியான பதார்த்தங்களை உண்டல், நல்ல பாட்டுக் கேட்டல், நல்லமலர்களை முகர்தல் முதலிய இந்திரிய இன்பங்களை விரும்பி அவற்றை அடையும் பொருட்டு மிகவும் பாடுபடுகிறார்கள். அதிகார இன்பம், புகழின்பம் முதலிய எண்ணற்ற வேறு பல இன்பங்களுக்காகவும் உழைக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் அற்பமான இன்பங்களென்று கருதி முன்னோர் இவற்றை இன்பப்பாலிலே சேர்க்கவில்லை. புகழ் அதிகாரம் முதலியவற்றை அறத்துப்பாலிலும், பொருட்பாலிலும் சார்ந்தனவாகக் கணித்தார்கள். இந்திரிய இன்பங்களுக்குள்ளே இனிய பக்ஷணங்களையும் கனிகளையும் உண்டல், மலர்களை முகர்தல் முதலியன மிகவும் எளிதிலே தெவிட்டக் கூடியனவும், வெறுமே சரீர சுகமாத்திரமன்றி ஆத்ம சுகத்துக்கு அதிக உபகார-மில்லாதனவுமாதல் பற்றி அவற்றையும் இன்பப்பாலிலேசேர்க்கவில்லை.
''காண்டல், கேட்டல், உண்டல், மோப்பு, தீண்டுதல்எனும் ஐவகை இந்திரியங்களையும் ஒருங்கே இன்புறுத்தும் இயல்பு ஒளி பொருந்திய வளையணிந்த இப்பெண்ணிடத்தேதானுள்ளது'' என்பது அக்குறளின் பொருள். இதனுடன்உயிருக்கும் மனத்துக்கும் ஆத்மாவுக்கும் சேர இன்பமளிப்பதனால் காதலின்பம் இவ்வுலக இன்பங்களளைத்திலும் தலைமைப்பட்டதாயிற்று. ஆதலால், நான்கு புருஷார்த்தங்களுள், அதாவது மனிதப் பிறவி எடுத்ததனால் ஒருவன் எய்தக்கூடிய பெரும் பயன்களைக் கணக்கிடப் புகுந்த இடத்து நம் முன்னோர் காதலின்பத்தையே இன்பமென்னும் பொதுப் பெயரால் சொல்லி யிருக்கிறார்கள். இங்ஙனம் இன்பமொன்றை பொதுப்பெயரால் சிறப்பித்துக் கூறத்தக்க பெருஞ் சுவைத் தனியின்பம் மனிதனுக்குக் காதலின்பமே யாகுமென்பதையும், அவ்வின்பத்தை தவறுதலன்றி, நுகர்தற்குரிய வழியின்னதென்பதையும் ஓளவைப் பிராட்டியார் சால இனிய தமிழ்ச் சொற்களிலே காட்டி அருள் புரிந்திருக்கிறார்.
ஒருவன் ஒருத்தியினிடத்திலும், ஒருத்தி ஒருவனிடத்திலும் மனத்தாலும், வாக்காலும் செய்கையாலும், கற்பு நெறிதவறாமல் நித்தியப் பற்றுதலுடையோரால் மன ஒருமையெய்தித் தம்முள் ஆதரவுற்றுத் துய்க்கும் இன்பமே இன்பமெனத் தகும் என்று ஓளவையார் கூறுகிறார்.
இனி, முக்தியாவது யாதெனில்:- கடவுளை உள்ளத்திலிருத்தித் தானென்ற கொள்கையை மாற்றி ஈசபோதத்தையெய்தி, மேற்கூறிய மூன்று புருஷார்த்தங்களிலும் எவ்விதமான ஸம்பந்தமுமில்லாமலே செய்கையற்று மடிந்து கிடப்பானென்- றெண்ணுதல் பெருந் தவறு. உயிருள்ள வரை ஒருவன் தொழில் செய்யாதிருக்கக் கடவுளுடைய இயற்கை இடங்கொடாது. 'யாவனாயினும் (மனத்தாலேனும், வாக்காலேனும், உடம்பாலேனும்) யாதேனு மொருவிதமான செய்கை செய்துகொண்டிராமல் சும்மாயிருத்தல் ஒரு க்ஷணங்கூட ஸாத்தியப்படாது. இயற்கையிலேயே பிறக்கும் குணங்களால் ஒவ்வொருவனும் தன் வசமின்றியே எப்போதும் தொழில் செய்து கொண்டிருக்கும்படி வற்புறுத்தப் படுகிறான்' என்று கண்ணபிரான் பகவத் கீதையில் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.
இன்னும் ஓளவைப் பிராட்டியின் நூல்களிலுள்ள வசனங்களை உதாரணங்காட்டி அவருடைய மகிமைகளையெல்லாம் விளக்கிக் கூறவேண்டுமாயின் அதற்கு எத்தனையோ சுவடிகள் எழுதியாக வேண்டும். நமது வியாசமோ ஏற்கெனவே மிகவும் நெடிதாய்விட்டது. ஆதலால் இந்தக் கவியரசியைக் குறித்துத் தற்காலத்தினர் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்களில் மிகவும் முக்கியமாக எனக்குத் தோன்றுவனவற்றை மற்றொரு வியாஸத்தில் சுருக்கமாகச் சொல்ல உத்தேசம் கொண்டிருக்கிறேன்.
தமிழ் நாட்டு மாதராகிய, என் அன்புக்கும் வணக்கத்துக்குமுரிய, சகோதரிகளே, இத்தனை பெருமை வாய்ந்த தமிழ் நாகரீகத்தின் எதிர்கால வாழ்வு உங்களுடைய பயிற்சிகளையும் முயற்சிகளையும் பொறுத்திருக்கிறது.பூமண்டலத்தில் நிகரில்லாத அருஞ்செல்வமுடைய சேமநிதியொன்றுக்குக் கடவுள் உங்களைக் காவலாக நியமித்திருக்கிறான். மனித உலகமோ இந்த நேரத்தில் பிரமாண்டமான சண்ட மாருதங்களைப் போன்ற மாறுதல்களாலும், கிளர்ச்சிகளாலும், புரட்சிகளாலும், கொந்தளிப்புற்ற கடலிடைப்பட்டதொரு சிறுதோணிபோல் அலைப்புண்டும், புறளுண்டும், மோதுண்டும், எற்றுண்டும், சுழற்றுண்டும், தத்தளிக்கிறது. இந்த மஹா பிரளயகாலத்தில் தமிழ் நாகரீகம் சிதறிப் போகாதிருக்கும்படி கடவுள் அருள் புரிவாராகுக. அஃது அங்ஙனம் சிதறாமலிருக்குமாறு தகுந்த கல்விப் பெருமையாலும், ஒழுக்க மேன்மையாலும் விடுதலையின் சக்திகளாலும். அதைக் காப்பாற்றக் கூடிய திறமையை உங்களுக்கு பரப்ரம்மம் அருள் செய்க.
-----------
மாதர் - பெண்கள் ஸம்பாஷணைக் கூட்டம்
''காசி'' எழுதுவது:-
புதுச்சேரியில் சில தினங்களின் முன்பு நடந்தபெண்கள் ''மஞ்சள் குங்குமம் (ஸம்பாஷணை) கூட்டமொன்றில் நடந்த விஷயங்கள் பின்வருமாறு:-
ஆரம்பம்
பார்வதி, லக்ஷ்மி, ஸரஸ்வதி முதலியபடங்களுக்குப் பூஜை முடித்த பிறகு விடுதலைப் பாட்டுகள்பாடப்பட்டன. பிறகு ஸ்ரீமான் ஸ்ரீநிவாஸாசார்யர் புத்திரி மண்டயம் ஸ்ரீமதி கிரியம்மா பின்வரும் உபந்யாஸம் செய்தார்:
முயற்சியின் பயன்
நமது தேசத்தில் தெய்வ பக்தி அதிகமென்பதையாரும் மறுக்க முடியாது. ஆனால் தெய்வத்தை நம்பிவிட்டு நாம் யாதொரு முயற்சியும் செய்யாமல் வெறுமே இருந்தால், தெய்வமும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கும்.தெய்வத்தை நம்பி நாமும் முயலவேண்டும். எப்படியென்றால் ஒரு குழந்தை அழாமல் வெறுமே இருந்தால் நாம் அதன்மீது கண்ணைச் செலுத்தாமல் மற்ற வேலைகளில் கவனஞ் செலுத்துகிறோம். அழத்தொடங்கினால் ஆத்திரத்துடன் வேலையைவிட்டு அதை எந்த விதத்திலாயினும் ஸமாதானப்படுத்த முயலுகிறோம். அதுபோல நாம் ஒரு கார்யத்தில் ஊக்கம் வைத்து பிரயத்தினப் பட்டால் அந்த வேலைக்கு எப்படியாவது ஒரு முடிவைத் தெய்வம் காட்டும்.
இப்போது நாம் முயற்சி செய்யவேண்டிய விஷயம் பெண் விடுதலை. பல்லாயிரம் வருஷங்களாக, நாம் அடிமைப் பட்டு வருகிறோம். தெய்வம் தானாக நமக்கு விடுதலை கொடுத்ததா? இல்லை.
'உங்களுடைய வழி இதுதான்' என்று ஒரு சட்டம் ஏற்படுத்தி வைத்தது.
இப்போது நாம் 'இப்படி இருக்கமாட்டோம்' என்றால், 'சரி, ஆனால் பாருங்கள். உங்களுக்காக இன்னெருவழி உண்டாக்கியிருக்கிறேன். அதன்படி நடவுங்கள்' என்றுகூறி நம்மை ஊக்கப்படுத்துகிறது.
'நான் தூங்குவேன்' என்று தெய்வத்தினிடம் சொன்னால் தெய்வம்:- 'ஸூசகமாகத் தூங்கு, உனக்குமெத்தென்று படுக்கை போட்டுத் தருகிறேன்' என்று சொல்லி நம்மைத் தட்டித் தூங்கப் பண்ணுகிறது.
'மாட்டோம்! நாங்கள் எழுந்து உலக விஷயங்களைக் கவனிக்க வேண்டும். இதோ; இதோ எழுகிறோம்' என்றால், 'எழுந்திரு குழந்தாய், இதோ பார்; "உனக்கு இந்தப் பெரிய வழியை ஏற்படுத்தி இருக்கிறேன்.அந்த வழியே போய் நீ நன்மை அடை' என்கிறது.
ஆதலால், ஸகோதரிகளே, தெய்வத்தை நம்பி நாம் முன்னடையும் வழியை நாமே தேட வேண்டும். 'முயற்சி திருவினை ஆக்கும்' என்பது முன்னோர் உறுதிமொழி. நாம்எல்லாரும் சேர்ந்து முயற்சி செய்தல் அவசியம். தெய்வம்நன்மை செய்யும். நம்முள் ஏதேனும் வருத்தம் நேர்ந்தால், அதை நாம் எல்லாரும் ஒன்று சேர்ந்த இடத்தில் தாக்ஷண்யமில்லாமற் சொல்லித் தீர்த்துக் கொள்ளவேண்டும். நாம் குழந்தைகள். நாம் அழுதால் லோகமாதா பராசக்தி உணவு கொடுப்பாள். நாம் அழுவதற்கு வழி முயற்சியினால் தெய்வத்தை இரங்குவித்தல். ஆதலால் முயற்சி செய்வோம். ஓம் வந்தே மாதரம்.
-----------
மாதர் - 'சியூ சீன்' என்ற சீனத்து ஸ்திரீயின் கதை
அப்பால் ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியின்குமாரியாகிய ஸ்ரீ தங்கம்மா பின்வரும் பத்திரிகையைப் படித்தனர்:-
சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன்னே சீனதேசத்தில் செகியாங் மாகாணத்தில் ஷாங் ஸிங் என்றபட்டணத்தில் ஒரு ராஜாங்க உத்தியோகஸ்தரின் மகளாக 'சியூ சீன்' என்ற நமது கதாநாயகி பிறந்தாள். இவளைக்குறித்துச் சென்ற வருஷம் ஆகஸ்டு மாசத்து 'ஏஷியாடிக்ரெவ்யூ' (ஆசிய பரிசோதனை) என்ற பத்திரிகையில்லயோ நெல்கிப்ஸ் என்ற ஆங்கிலேயர் எழுதியுள்ள கதையில் ஸாராம்சமான சில பகுதிகளை இந்த சபையின்"முன்னே தெரிவிக்கிறேன்.
ஆசியாவில் பெண் விடுதலைக் கொடியை நாட்டவேண்டுமென்று பாடுபட்டவர்களில் இவளும் ஒருத்தியாகையால் இவளுடைய கதை பெண் விடுதலையில் நாட்டம் செலுத்தி வரும் உங்கள் அனைவர்க்கும் மிகவும் ரஸமாகத் தோன்றக் கூடும்.
''சியூ சீன்'' என்ற பெயரில் சீன் என்பதற்கு''ஒளியுடைய ரத்நம்'' என்பது பொருள். ''சியூ'' என்ற உபநாமம் ''கார் பருவம்'' (மழை பெய்யுங்காலம்) என்ற பொருள்உடையது. பின்னிட்டு இவள் சிங்ஹஸியாங் என்ற பட்டப்பெயர் தரித்துக்கொண்டாள்; அதன் பொருள் ''ஆண்மக்களுடன் போர் செய்பவள்'' என்பது இவளுக்கு ''சியெந்-ஹெநு-சி-யெஹ்'' என்றும் ஒரு பெயருண்டு.அதன் பொருள் யாதெனில் ''கண்ணாடி ஏரிக்கரைப் பெண்வக்கீல்'' என்பது. ''கண்ணாடி ஏரி'' அந்தப் பிரதேசத்தில் ஒருஏரிக்குப் பெயர்.
பதினெட்டாம் வயதில் இவள் ''லாங்'' என்ற"பெயருள்ள ஒருவனை மணம் செய்து கொண்டு அவனுடன் சீனத்து ராஜதானியாகிய பெசிங் நகரத்தில் சென்று வாழ்ந்தாள்.அங்கே இவளுக்கு ஒரு பெண் குழந்தையும் ஓராண்குழந்தையும் பிறந்தன. 1900 ஆம் வருஷத்தில் பாக்ஸர்கலக நிமித்தமாக பெகிங் நகரத்தில் அன்னிய ராஜ்யப்படைகள் புகுந்து சீனத்துக்குச் செய்த பழிகளைக் கண்டுமனம் பொறுக்காமல், இவள் 'ஐயோ, மனுஷ்ய ஜன்மத்தில் பிறந்தும் நம்முடைய மனுஷ்ய சக்தியைக் காண்பிக்கும் பொருட்டாகக் கஷ்டங்களையும் விபத்துக்களையும் எதிர்த்துஉடைக்கும் பாக்கியம் நமக்கில்லாமல் போய்விட்டதே!வீட்டுக் காரியங்களின் அற்பக் கவலைகளுக் கிரையாகி மடியவா நாம் பூமியில் பெண் பிறந்தோம்' என்று சொல்லி பெருமூச்செறிந்து வருத்தப்பட்டாள்.
சீன பாஷையில் தகுந்த பாண்டித்யம்வஹித்திருந்தது மட்டுமேயன்றி இவளிடம் கவிதா சக்தியும் சேர்ந்திருந்தது. சீன ஸம்ப்ரதாயங்களின்படி கணவனுடன்கூடி வாழும் வாழ்க்கை இவளுடைய இயற்கைக்குப் பொருந்தவில்லை. யாதலால், இவள் பாக்ஸர், கலகத்திற்குப்பின் இரண்டு மூன்று வருஷங்களுக்குள் தன் கணவனிடமிருந்து ஸமாதானமாகவே பிரிந்துவந்துவிட்டாள்.
இதனிடையே இவளுக்குப் பூர்வார்ஜிதமாகக் கிடைத்த"பணம் முழுதையும் ஒரு அயோக்கிய வியாபாரியிடம் கொடுத்து அவன் மூலமாக வியாபாரச் சூதில் இழந்து போய்விட்டாள்.
பின்பு ''ஐப்பானில் போய் ஐரோப்பிய நவீனக்கல்வி பயின்றால் இக்காலத்தில் அதிகப் பயன் பெருகி வாழலாம்'' என்ற எண்ணமுடையவளாய்த் தன்னுடைய ஆபரணங்களை விற்றுப் பணம் சேகரித்துக் கொண்டு ஜப்பானுக்குப் புறப்பட ஆயத்தங்கள் செய்தாள். ஆனால், இவள் பெகிங் நகரத்திற்குப் புறப்படு முன்னே அங்கு சீர்திருத்த கக்ஷியைச் சேர்ந்த ஒருவனை அதிகாரிகள் பிடித்து அடைத்து வைத்திருப்பதாகவும், வக்கீல் நியமிக்கவும், வழக்கு நடத்தவும் பணமில்லாதபடியால் ஏனென்று கேட்பாரில்லாமல் அவன் சிறைக்களத்திற் கிடந்து வருவதாகவும் பணத்திற் பெரும் பகுதியை அவனுக்குக் கொடுத்தனுபி விட்டாள்.
மிஞ்சிய சிறு தொகையுடன் 1904-ஆம்வருஷம் ஏப்ரல் மாஸத்தின் இறுதியில் ஜப்பானுக்குக் கப்பலேறினாள். ஜப்பான் ராஜதானியாகிய டோக்யோ நகரத்தில் தன்னுடைய சாமர்த்தியத்தால் விரைவில் கீர்த்தியடைந்து விட்டாள். சீனத்து மாணாக்கரின் ஸபைகள் பலவற்றில் சேர்ந்து விளங்கினாள். மேலும் அப்போது சீனத்தில் அரசு செலுத்திய மஞ்சு ராஜ்யவம்சத்தை ஒழித்து விடவேண்டு மென்ற கருத்துடன் இவள் தானாகவே பல ராஜ்யப் புரட்சி ஸங்கங்கள் ஏற்படுத்தித் திறமையுடன் உழைத்து வந்தாள். சீனாவில் இப்போது நடைபெறும் குடியரசுக்கு வேர் நாட்டியவர்களில் இவளும் ஒருத்தி.
1905-ம் வருஷத்து வஸந்த காலத்தில் இவள்தன் கல்வியின் பொருட்டுப் பின்னும் பணம் சேர்க்குமாறு சீனத்துக்கு வந்தாள். அப்போது சீனத்திலிருந்த பெரியராஜ்யப் புரட்சித் தலைவர்களுடன் இவள் ஸ்நேகம் ஏற்படுத்திக்கொண்டதுமன்றிக் குடியரசுக் கக்ஷியாரின் மூலஸபையாகிய ''குலாங் - பூ'' (அற்புத உத்தாரண) ஸபையில் சேர்ந்தாள். பிறகு அவ்வருஷம் செப்டம்பர் மாஸத்தில்டோக்யோவுக்குத் திரும்பி அங்கு வாழ்ந்த ஸுனயத்-ஸேன் என்ற மஹாகீர்த்தி பெற்ற குடியரசுக் கக்ஷித் தலைவனுடன்பழக்கம் பெற்றாள்.
அப்பால் சீனத்திலுள்ள ''நான்ஜின்'' நகரத்தில் ஸ்ரீமதி ய்ஜுஹுஹ என்ற தனது தோழியும் தன்னைப்போல் கவி ராணியுமான ஸ்திரீயுடன் சேர்ந்து ஒருபெண் பள்ளிக்கூடத்து உபாத்திச்சியாக வேலை செய்தாள்.
அப்பால் நாடு முழுதிலும் கலாசாலைகள் ஸ்தாபனம் செய்தும், ரஹஸ்ய ராஜ்யப்புரட்சி ஸபையின் கிளைகள் ஏற்படுத்தியும், பத்திரிகைகள் நடத்தியும் தொழில் புரிந்தாள். இங்கிலீஷ் பாஷையிலும் இவள்தகுந்த தேர்ச்சி பெற்றிருந்ததாக லயோநெல்கிப்ஸ் சொல்லுகிறார்.
அப்பால் இவள் தன் ஜன்ம ஸ்தானமாகிய ஷாவ்ஸிங் நகரத்துக்கு மீண்டும் வந்து அங்கே ஒருபாடசாலை நடத்தினாள். ஆனால் அது வெளிக்குப் பாடசாலையாகவும் உண்மையில் குடியரசுப் படைப்பயிற்சிக் கூடமாகவும் நடை பெற்றது. மாணாக்கரெல்லாம் படையாட்களாகப் பயிற்சி பெற்றனர்.
இவளுடைய முடிவைக் குறித்து லயோநெல்கிப்ஸ் பின் வருமாறு எழுதுகிறார்: ஒரு நாள் பிற்பகலில்இவளுடைய ஒற்றர் அஞ்சி வந்து மஞ்சுப் படைகள்ஷாவ்ஸிங் நகரத்தின் மீது தண்டெடுத்து வருவதாகக்கூறினார்கள். அவள் மறுபடி ஒற்றுப் பார்த்து வரும்படிசிலரை ஏவினாள். நகரத்தருகிலுள்ள நதியைத் தாண்டிக்கீழ்க் கரைக்கு மஞ்சுப்படை வந்து விட்டதெனஇவ்வொற்றர் வந்து சொன்னார்கள். பிறகு மிக விரைவில்மஞ்சுப்படை நகரத்துள்ளே புகுந்து விட்டது. மாணாக்கர்கள்அவஸரமாகக் கூட்டங்கூடி பரியாலோசனை நடத்தி இவளைத் தப்பியோடும்படி சொல்லினர். இவள் மறுமொழிகூறவில்லை. மஞ்சுப்படை கலாசாலையின் முன்னே வந்துநின்றது. எனினும் உடனே உள்ளே நுழைய அதற்குதைர்யம் ஏற்படவில்லை. மாணாக்கர்களில் பெரும்பாலோர்புழக்கடை வழியாக வெளியே குதித்தோடிவிட்டனர்.ஏழெட்டுப் பேர்மாத்திரம் ஆயுதங்கள் ஏந்திக்கொண்டு வாயிலில் நின்ற தளத்தின்மீது பாய்ந்தனர். எதிர்பார்க்காதஇச் செய்கைகளைக் கண்ட மஞ்சுப் படை திகைத்து"விட்டது. அப்போது நடந்த போரில் மஞ்சுப்படையாளர்பலர் கொலையுண்டும் புண்பட்டும் வீழ்ந்தனர். மாணாக்கரிலும் இருவர் மாண்டனர். உள்ளே ஓரறையில்வீற்றிருந்த சியூசீனையும் அவளுடன் அறுவரையும் படைவந்து கைதியாக்கிற்று. மறுநாள் நியாயாதிகாரியின் முன்னேசியூசீனைக் கொண்டு நிறுத்தி வாக்கு மூலம் கேட்டபோது உடந்தையானவர்களைக் காட்டிக் கொடுக்கக் கூடாதென்றகருத்தால் இவள் ஒரு சொல்லேனும் மொழியவில்லை.
'சியூ யூசி யூதெங் சவிஷா ஜென்' என்ற கவிதைவாக்கியத்தை மாத்திரம் எழுதிக்காட்டினாள்.
இதன் பொருள்:- 'மாரி நாட் காற்றும் மாரி நாண்மழையும், மார் புண்ணாக வருத்துகின்றனவே' என்பது.
அப்பால் இவளுக்குக் கொலை என்பது தண்டனைவிதிக்கப்பட்டது. ஜூலை 15-ம் தேதி யன்று ஸுர்யோதயவேளையில் இவள் ஷங் ஸிங் நகர மண்டபத்தருகே தூக்குண்டாள். அத்தருணத்தில் இளஞ் செந்நிறமுடைய"மேகமொன்று இவள் தலையின்மீதே வானத்தில் பறந்ததென்றும்,குளிர்ந்த வாடை வீசிற்றென்றும் தூக்கிட்டோரும் பார்த்து நின்றோரும் துக்கத்தால் மெய் நடுங்கினரென்றும், ஆனால் சியூசீன் ப்ரிபூரண சாந்தியுடன் தூக்கு மரத்துக்குச்சென்றாளென்றும் லயோநெல் கிப்ஸ் சொல்லுகிறார்.
சியூ சீன் ஒரு பொதுக்கூட்டத்தில் செய்த உபந்யாஸமொன்றின் ஸாராம்சத்தை லயோநெல் கிப்ஸ் எழுதியிருக்கிறபடிஇங்கு மொழிபெயர்த்துச் சொல்லுகிறேன். அதினின்றும்இவளுடைய உண்மையான குணத்தை அறிந்து கொள்ளுதல்சற்றே எளிதாகுமென்று நினைக்கிறேன். சியூ சீன்சொல்லுகிறாள்:-
ஸஹோதரிகளே, பல்லாயிர வருஷங்களாக நாம்ஆண் மக்களின் கொடுமைக்குக் கீழ்ப்பட்டு வாழ்கிறோம்.எந்தக் காலத்திலும் நமக்கு ஓரணு வளவாயினும் ஸ்வதந்திரம் இருந்தது கிடையாது. மூன்று விதமான கீழ்ப்படிதலென்றும், நான்கு விதமான பெண்ணறங்களென்றும் சொல்லிப் பழைய சாஸ்திர விதிகள் நம்மை இறுகக் கட்டியது மன்றி இந்தபந்தத்தை எதிர்த்து நாம் ஒரு வார்த்தைகூட உச்சரிக்கக்கூடாத வண்ணமாக நம்மை அடக்கிவிட்டன. ஸ்திரீகளாகிய நம்மைச் சிறு குழந்தைப் பிராய முதலாகவே பாதங்களைக்கட்டுதல் என்ற வழக்கத்தால் எண்ணுதற்கரியதுன்பங்களுக்காளாக்கி விட்டார்கள். இந்த முறையால் நமது பாதம் வற்றிச் சதையும், எலும்பும் குறுகிச் சிதைந்து போகின்றன. இதனால் நம்முடல் பலமிழந்து உழைப்பதற்குத் தகுதியற்ற தாய் விடுகிறது. எல்லாக் காரியங்களிலும் நாம்ஆண் மக்களைச் சார்ந்து நிற்க நேரிட்டது. விவாகம்நடந்த பின்னர் நம்மைக் கணவர் அடிமைகளைப்போல நடத்துகிறார்கள். அவர்களுக்குத் துணிப்பெட்டி தைத்துக் கொடுக்கவும், சமையல் பண்ணவும், சோறு போடவும்,தேயிலைக் காய்ச்சிக் கொடுக்கவும், வாயில் தெளிக்கவும், குப்பை பெருக்கவும், அவர்களுக்கு ஸ்நானம் செய்து வைக்கவும், பணி செய்யவும் மாத்திரமே நம்முடையசக்திகளெல்லாம் செலவாகின்றன. முக்கியமான கார்யம் எதிலும் நாம் சிறிதளவேனும் கலக்கக் கூடாது. வீட்டுக்கு யாரேனும் விருந்தாளி வந்தால் உடனே நாம் அந்தர்த்தானம்பண்ணி அறைக்குள்ளே போய்ப் பதுங்கிக் கொள்ளவேண்டும். எதைக் குறித்தும் நாம் ஆழ்ந்த விசாரணை"செய்யக் கூடாது. ஏதேனும் வாதத்தில் நீண்ட மறுமொழிசொல்லப் போனால் ஸ்திரீகள் அற்பமதியுடையவர்களென்றும் ஸ்திரபுத்தியில்லாதவர்களென்றும்சொல்லி நம்முடைய வாயை அடைத்து விடுகிறார்கள்.இதற்கெல்லாம் காரணம் நம்முடைய தைர்யக்குறைவேயன்றி வேறில்லை. இந்த தைர்யக் குறைவுக்குரியபல ஹேதுக்களில் நம்மைக் குழந்தைப் பிராயத்திலேயேபாதங்கட்டி விடுதல் ஒன்றாகும். ''மூன்றங்குலப்பொற்றாமரைகள்'' என்றும், அவற்றின் 'மோஹனச் சிறுநடை' என்றும் வர்ணித்துப் பெண் குழந்தைகளின் அடிகளைக் கட்டிப் போடும் தீமையால் நாம் சக்தியிழந்துவிட்டோம். இன்று எனது ரத்தம் கொதிப்புற்று நிற்கிறது.உங்களுடைய ரத்தத்தையும் கொதிக்கும்படி செய்ய விரும்புகிறேன். முதலாவது, இனிமேல் எல்லாஸ்திரீகளும் சூர்ணம் தடவுவதையும் முகப்பூச்சுகள்பூசுவதையும் நிறுத்திவிட வேண்டும். மோஹப்படுத்தவேண்டுமென்று பொய்ப் பூச்சுகள் பூசக் கூடாது.ஒவ்வொரு மனுஷ்ய ஜந்துவுக்கும் கடவுள் கொடுத்த முகமிருக்கிறது. பாதங்களைக் கட்டும் நீச வழக்கத்தை உடனே வேரோடு களைந்து எறிந்து விடவேண்டும்.ஐந்து கண்டங்களிலுமுள்ள வேறெந்த நாட்டிலும் இவ்வழக்கம் கிடையாது. அப்படியிருந்தும் உலகத்தில் சீனாவே அதிக நாகரீகமுடைய தேசமென்று நமக்குள்ளே"பிதற்றிக் கொள்ளுகிறோம். பாதக்கட்டு மட்டுமேயன்றி,இன்னும் பழைய கெட்ட வழக்கங்கள் எத்தனை உள்ளனவோ அத்தனையும் ஒழித்தெறிவோம். ஆண்மக்களுக்கு இனி அடிமைகளாக வாழ மாட்டோம்.தைர்யத்துடன் எழுந்து நின்று தொழில் செய்துநம்முடைய ஸ்வதந்திரத்தை நிலைநிறுத்திக் கொள்ளுவோம்.
-----------
அப்பால் மேற்படி கூட்டத்தில் சகுந்தலா பின்வரும்பாட்டுப் பாடினாள்.
சீனபாஷையில் 'சீயூ சீன்' என்ற ஸ்திரீ பாடியபாட்டின் தமிழ் மொழி பெயர்ப்பு.
அப்பால் சில பெண்கள் பேசினர். மங்களப் பாட்டுடன்'மஞ்சள் குங்கும'க் கூட்டம் முடிவு பெற்றது.
நிகழும் காளயுக்தி வருஷம் சித்திரை மாதம்31-ம் தேதி திங்கட்கிழமை யன்று மாலை புதுச்சேரியில்ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதி வீட்டில் திருவிளக்கு பூஜைசெய்யப்பட்டது. சுமார் ஏழெட்டு ஸ்திரீகள் கூடி விளக்குபூஜை முடித்துப் பாட்டுகள் பாடினர். அப்பால் ஸ்ரீ வ.வே. சுப்பிரமணிய அய்யரின் பத்தினியாகிய திருமதிபாக்கியலக்ஷ்மியம்மாள் பின்வரும் உபன்யாஸம்புரிந்தனர்:-
ஊக்கம்
சகோதரிகளே,
பெண் விடுதலை முயற்சிக்கு இந்த ஊர்"ஸ்திரீகள் தகுந்த படி உதவி செய்யவில்லையென்று நாம்மனவருத்தப்பட்டு நம்முடைய நோக்கத்தைத் தளரவிடக்கூடாது. நாம் செய்யும் கார்யம் இந்த ஒரூர் ஸ்திரீகளுக்குமாத்திரமேயன்று; பூமண்டலத்து ஸ்திரீகளுக்காக நாம்பாடுபடுகிறோம்.
உலகமெங்கும் விடுதலை யருவிநீர் காட்டாறுபோலே ஓடி அலறிக்கொண்டுவரும் ஸமயத்தில் நீங்கள்நாவு வறண்டு ஏன் தவிக்கிறீர்கள்?
ஸகோதரிகளே, தயங்காதீர்கள், மலைக்காதீர்கள்.திரும்பிப் பாராமல் நாம் செய்யவேண்டிய எந்தக்கார்யத்தையும் நிறைவேற்றும் வரை - நம்முடையலக்ஷ்யத்தை அடையும் வரை - முன் வைத்த காலைப்பின் வைக்காமல் நடந்து செல்லுங்கள். பேடிகளாயிருந்தால்திரும்புங்கள்.
நாம் கொண்ட காரியமோ பெரிது. இதற்குப்பெரிய இடையூறுகள் நிச்சயமாக நேரிடும். ஆனால்நீங்கள் பயப்படக் கூடாது.
'பயமே பாபமாகும்' என்று விவேகாநந்தர்"சொல்லியதை மறவாதீர்கள். நந்தனார் விடுதலைக்குப் பட்டசிரமங்களை நினைத்துப் பாருங்கள்.
உங்களில் ஒவ்வொருவருடைய கொள்கைகளைஇன்று வாய் விட்டு விஸ்தாரமாகச் சொல்லிவிடுங்கள்.மனதிலுள்ள பயம், வெட்கம் என்ற பேய்களை தைர்யவாளால் வெட்டி வீழ்த்திவிட்டு பாரத ஸஹோதரிகள்பாரதமாதாவுக்குத் தெரிவிக்க வேண்டுமென்பதே என்னுடையப்ரார்த்தனை. ஓம் வந்தே மாதரம்.
ஸ்ரீரங்கப் பாப்பா
பிறகு ஸ்ரீமான் மண்டயம் ஸ்ரீநிவாஸாசாரியார்குழந்தை ரங்கா பின் வரும் உபந்யாஸத்தை படித்தது:-
அநாகரீக ஜாதியார்
இந்தியாவில் முன்பு ஆரியர் குடியேறு முன்னேஇருந்த பூர்வீக ஜனங்கள் கருநிறமாகவும் சப்பை மூக்காகவும்இருந்தார்கள்; நாகரீகமற்ற பேதை ஜனங்கள். அவர்களுடையசந்ததியார் இப்போது சில குன்றுகளின் மீதும் சில"கனிகளிடையிலும் வஸிக்கின்றனர். இந்த வகுப்பைச் சேர்ந்தஜூலாஸ் குலக் என்ற ஜாதி ஒன்று இப்போது ஒரிஸ்ஸாதேசத்தில் இருக்கிறது. துரைத்தனத்தார் அந்த ஜாதிக்குஇனாமாகத் துணி கொடுத்துக் கட்டிக் கொள்ளும்படி செய்து,துணி கட்டிக் கொள்வோருக்கு வெகுமதி கொடுத்துத் துணிகட்டும் நாகரீகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்திக்கொண்டு வருகிறார்கள். இதுவரை அந்த ஜாதியார் இவைகளைஉடைபோல் உடுப்பது வழக்கம். இந்த அநாகரீக ஜாதியிலுள்ளமனுஷ்யர் கூடப் பெண்களை மிருகங்கள் மாதிரியாகவேநடத்துகின்றனர்! ஆதலால், நம்முடைய ஆண் மக்கள் நம்மைக்கீழாக நடத்துவது தங்களுடைய உயர்ந்த அறிவுக்குலக்ஷணமென்று நினைத்தால் சரியில்லை. நம்மைக் காட்டிலும்ஆண் மக்கள் சரீர பலத்தில் அதிகம். அதனால் நம்மைஇஷ்டப்படி ஸஞ்சரிக்க வொட்டாமலும் பள்ளிக்கூடம் போய்படிக்கவொட்டாமலும் தடுக்க முடிந்தது. இதனால் அவர்கள்நம்மைவிட மேலென்று நினைத்துக்கொள்ளுதல் தவறு.
-----------
மாதர் - ரெயில்வே ஸ்தானம்
ஒரு சிறிய கதை
வஸந்த காலம். காலை நேரம். தென்காசிஸ்டேஷன். இது பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்தது.இதற்கு மேற்கேயுள்ள அடுத்த ஸ்டேஷன் செங்கோட்டை.இது திருவாங்கூர் ஸமஸ்தானத்தைச் சேர்ந்தது. தெற்கேஇரண்டு மைல் தூரத்தில் மிகக் கீர்த்திபெற்ற குற்றாலத்தருவிவிழுகிறது. பக்கமெல்லாம் மலைய கிரிச் சாரல். கொஞ்சம்மேற்கே போனால், செங்கோட்டை ஸ்டேஷன் முதல்திருவனந்தபுரம் வரை பாதையிலே பத்து ஸ்டேஷன் மட்டும்.இரண்டு பக்கங்களிலும், செங்குத்தான மலைகளும், ஆழமானபள்ளங்களும், மலையை உடைத்து ரயில் வண்டி ஊடுருவிச்செல்லும் பொருட்டாக ஏற்படுத்தப்பட்ட நீண்ட மலைப்புழைகளும் இருபாரிசத்திலும் இயற்கையாய்ப் பச்சை உடுத்து,சால மிகப் பெருஞ் செழிப்புடனே களிகொண்டு நிற்கும்பலவகைப்பட்ட வனக்காட்சிகளும் ஒரு முறை பார்த்தால்பிறகு எக்காலத்திலும் மறக்கமுடியாதன.
இந்தத் தென்காசி ஸ்டேஷன் வெளி முற்றத்தில்காலை நேரத்திலே திருநெல்வேலிப் பக்கம் கிழக்கே போகும்ரயில் வரப்போகிற சமயத்தில் சுமார் நூறு பிரயாணிகள் வந்து கூடியிருக்கிறார்கள்.
இவர்களிலே சிலர் பிராமண வைதீகர். நீர்க்காவிஅழுக்கு நிறமாக ஏறிப்போன மிகப் பழைய வெள்ளைத்துணி உடுத்து உடல் வேர்க்க உட்கார்ந்து கொண்டு, இன்னஊரில், இன்ன தேதி, இன்னாருக்குச் சீமந்தம் என்ற விஷயங்களைப் பற்றி சம்பாஷணை செய்து கொண்டிருக்கிறார்கள்.
பிராமண விதவைகள் பலர் ஒரு புறத்திலே யிருந்து தமக்குள் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். சுமங்கலிப் பிராமணத்திகள் ஒரு பக்கத்தில் தலைகுனிந்துநின்று கொண்டு, போவார் வருவோரை கடைக்கண்ணால்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு சில உத்தியோகஸ்தர்கள் தலைப்பாகை, கோட்டு, கெடிகாரச் சங்கிலிசகிதமாக உலாவுகிறார்கள். சில போலீஸ்காரர்கள் சக்கரவர்த்திகளைப் போல தலைநிமிர்ந்து நடக்கிறார்கள்.சில முகம்மதிய ஸ்திரீகள் முட்டாக்குப் போட்டு தலையையும் முகத்தையும் மூடிக்கொண்டு திசைக்கொருத்தியாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.வெற்றிலை, பாக்கு, புகையிலை. சுருட்டு, பீடி, பொடிப்பட்டை, முறுக்கு, தேன்குழல், சுகியன், காப்பி முதலியனவியாபாரம் செய்யும் ஓரிரண்டு பிராமணரும் சூத்திரமும்பகற் கொள்ளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதாவதுகாசு பெறாத சாமான்களுக்கு மும்மடங்கு நான்கு மடங்குவிலைவைத்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ரயில் வண்டி அன்றைக்கு ஒரு மணிநேரம் தாமஸமாக வந்தது. எனக்குப் பொழுது போகவில்லை. தண்டவாளத்தின் ஓரமாகச் சிறிதுதூரம் உலாவி வரலாமென்று கருதித் தென்புறமாகக்கூப்பிடு தூரம் போனேன். அங்கு ஒரு மரத்தடியிலேமிகவும் அழகுள்ள ஒரு மகம்மதிய கனவான் உட்கார்ந்திருக்கக் கண்டேன். சரிகைத் தொப்பி, சரிகைக் கரைகள் தைத்த மஸ்லீன் சட்டை. சரிகைக்கரை போட்ட நிஜார், சரிகை போட்ட செருப்பு, பூர்ணச் சந்திரன் போன்ற முகம், செழித்து வளர்ந்தமீசை. அவனைப் பார்த்த மாத்திரத்திலே அவன் பிரபுக் குலத்தில் பிறந்தவனென்று எனக்கு நிச்சயமாகிவிட்டது. அவன் கண்களினின்றும் தாரை தாரையாகக்கண்ணீர் ஊற்றுகிறது. இதைப் பார்த்து எனக்கு மிகவும்பரிதாப முண்டாயிற்று. நான் போய் அவனை ஏன்அழுகிறாய் என்று கேட்டால், அதினின்றும் அவனுக்குஒரு வேளை கோபம் உண்டாகுமோ என்பதைக்கூடயோசனை செய்யாமல் சரேலென்று அவன் முன்னேபோய் நின்றுகொண்டு:- ''தம்பி, ஏன் அழுகிறாய்?''என்று கேட்டேன்.
அவன் என்னை ஏற இறங்க ஒருமுறைபார்த்தான். அவனுக்கு 25 வயதுக்குமேல் இராது. அவன் தலையைக் குனிந்து அழுது கொண்டிருந்தபோதே மிகவும் சுந்தர புருஷனாகக் காணப்பட்டான்.பிறகு அவன் என்னைப் பார்த்தவுடன் கண்ணைந்துடைத்துக்கொண்டு என் இரண்டு கண்களுடனேஅவனிரண்டு கண்களும் பொருந்த நோக்கிய காலத்திலஅவன் ரூபம் எனக்கு சாட்சாத் மன்மத ரூபமாகவேதென்பட்டது.
என்னை உற்று நோக்கியதினின்றும் அவனுக்கு எப்படியோ என்னிடத்தில் நல்லெண்ணம்உண்டாய் விட்டது. சற்றேனும் என்னிடம் கோபம்கொள்ளாமல் ''ரயில் எப்போது வரப்போகிறது?'' என்றுகேட்டான்.
''இன்றைக்கு ஒரு மணி நேரம் ரயில்தாமதித்து வரப்போவதாக ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார்'' என்றேன்.
எனக்கு ஹிந்துஸ்தானி அல்லது உருது பாஷை நன்றாகத் தெரியும். ஆதலால் நான் அவனிடம்உருது பாஷையிலே ஆரம்ப முதல் பேசினேன். ?உங்களுக்கு உருது எப்படித் தெரியும்? உங்களைப்பார்த்தால் ஹிந்துக்கள் போலத் தோன்றுகிறதே? என்றுகேட்டான்.
அதற்கு நான்:- ''சிறு பிராயத்திலேயேநான் காசிப் பட்டணத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தேன். அங்கு எனக்கு ஹிந்துஸ்தானி பாஷை பழக்கமாயிற்று'' என்றேன்.
''காசியில் ஹிந்தி பாஷை அன்றோ பேசுகிறார்கள்?'' என்று அந்த முஸல்மான் கேட்டான்.
அதற்கு நான்:- ''ஹிந்தி, உருது, ஹிந்துஸ்தானி எல்லாம் ஒரே பாஷைதான். முகலாயராஜாக்கள் பாரசீக பாஷையிலே தான் பெரும்பாலும்ஆரம்பத்தில் விவகாரம் நடத்திவந்தார்கள். பின்னிட்டுஅவர்கள் தமக்கும் தம்முடைய பரிவாரங்களுக்கும் இந்ததேசத்துப் பாஷையாகிய ஹிந்தியைப் பொது பாஷையாகக்கைக்கொண்டார்கள். ஹிந்தி பாஷை ஸம்ஸ்கிருதத்திலிருந்துபிறந்தது. அது ஸம்ஸ்கிருத பாஷை சிதைவு. அதைஹிந்துக்கள் தேவ நாகரியில் எழுதி ஸ்வம்யம்புவாகப்பேசுகிறார்கள். அதையே பார்ஸி லிபியில் எழுதிக் கொண்டுபல பார்ஸி அரபி மொழிகளைக் கலந்து முஸல்மான்கள்பேசியபோது அதற்கு ஹிந்துஸ்தானி அல்லது உருது என்றுபெயர் வழங்கினார்கள். உருது என்றால் கூடார பாஷை யென்று அர்த்தம். அதாவது, மொகலாய ராஜ்யத்தின் சேனைகள் கூடாரம் அடித்துக்கொண்டு பல தேசத்துப் போர்வீரர்கள் கலந்திருக்கையில் அங்கு தோன்றிய கலப்பு பாஷைஎன்று பொருள். எனக்கு ஹிந்தி தான் மிகவும் நன்றாகத் தெரியும். எனிலும் ஹிந்துஸ்தானி அல்லது உருது மேற்படிஹிந்தி பாஷையில் பார்ஸி அரபிச் சொற்கள் சேர்ந்ததேயாகுமாதலால் தான் இதிலும் நல்ல பழக்கமுடையவனானேன்.இது நிற்க. ''நீ வருத்தப்பட்டுக்கொண்டிருந்த காரணம் யாது?''என்று மறுபடியும் என்னை அறியாமலே கேட்டேன். இதுகேட்டு அந்த முகம்மதியப் பிரபு சொல்லுகிறான்:-
''சுவாமி, உங்களைப் பார்த்த மாத்திரத்திலேயேஎனக்கு உங்களிடம் விசுவாசம் உண்டாகிறது. உங்களிடம்சொன்னால் என் துக்கத்திற்கு நிவர்த்தி உண்டாகுமென்று என்மனதில் ஒருவித நிச்சயம் தோன்றுகிறது. என் துயரம் சாதாரணமாக மற்றவர்களிடம் சொல்லக்கூடியதன்று. எனினும்உங்களிடம் சொல்லலாமென்று நினைத்துச் சொல்லுகிறேன்.என் துயரத்தைத் தீர்த்து விட்டால் உங்களுக்கு மிகுந்தபுண்ணிய முண்டு. இந்த உபகாரத்தை நான் இறந்து போகும்வரை மறக்க மாட்டேன்'' என்றான்.
''முதலாவது உம்முடைய கஷ்டத்தைச் சொல்லும்.தீர்க்க வழி கிடைத்தால் தீர்த்து விடுகிறேன்'' என்றேன்.
அப்போது அம் முகம்மதியப் பிரபு பின்வருமாறு சொல்லத் தொடங்கினார்:
''எங்கள் ஜாதியில் சிறிய தகப்பனார், பெரிய தகப்பனார் மக்களை விவாகம் செய்து கொள்ளலாமென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும். நான் பிறந்தது வடக்கே ஹைதராபாத் நகரம். சிந்து மாகாணத்து ராஜதானியாகிய ஹைதராபாத் அன்று. நிஜாம் அரசரின் ராஜதானியாகிய ஹைதராபாத் நகரம். நான் என்பிதாவுக்கு ஒரே பிள்ளை. நான் பிறக்கும் போது என் பிதாமிகவும் ஏழையாக இருந்தார். நான் பிறந்து சில வருஷங்களுக்குப் பின் எங்கள் ராஜ்யத்தில் ஒரு பெரிய 'லாட்டரி' ஏலச் சீட்டுப் போட்டார்கள். அந்தச் சீட்டுக்கு என் பிதா யாரிடமிருந்தோ 10 ரூபாய் "கடன் வாங்கி அனுப்பினார். அதிர்ஷ்டம் அவருக்கிருந்தது. அவருடைய தரித்திரத்தை நாசம் பண்ணிவிட வேண்டுமென்று அல்லா திருவுளம் பற்றினார். ஒரு கோடி ரூபாய் சீட்டு அவருக்கு விழுந்தது. பிறகு அவர் அதைக் கொண்டு சில வியாபாரங்கள் நடத்தினார். அந்த வியாபாரங்களிலும் அவருக்கு மிதமிஞ்சிய லாபம் கிடைக்கத் தொடங்கி சில வருஷங்களுக்குள்ளே ஏழெட்டுக் கோடிக்கு அதிபதியாய் விட்டார். அப்பால் சற்றே நஷ்டம் வரத்தொடங்கிற்று. என்பிதா நல்ல புத்திமான். நஷ்டம் வரத்தொடங்கிய மாத்திரத்திலே திடீரென்று வியாபாரங்களை யெல்லாம் நிறுத்திக்கொண்டு, பணங்களைத் திரட்டி ஏராளமான பூஸ்திதிகள் வாங்கி அவற்றினிடையே மாளிகை கட்டிக்கொண்டு தம்மால் இயன்றவரை பரோபகாரத்தில் ஈடுபட்டவராய் வாழ்ந்து வந்தார்.
நான் பதினைந்து வயதாக இருந்தபொழுது அவர் இறந்து போய்விட்டார். நான் ஒரே பிள்ளையாதலால் அவர் சொத்தெல்லாம்எனக்கு வந்து சேர்ந்தது. என் வீட்டு மேற்பார்வை செய்யஎனது சிறிய தகப்பனார் நியமிக்கப்பட்டிருந்தார். என் தந்தை இறக்குந் தறுவாயில் சிறிய தகப்பனாருக்குச் சில லக்ஷங்கள்பெறக்கூடிய பூமி இனாம் கொடுத்தது அன்றி, என்னைப்பராமரித்து வரும் கடமையையும் அவருக்கே சார்த்தி விட்டுப் போனார். எனது சிறிய தகப்பனார், முதலாவது வேலையாக, தம்முடைய குமாரத்திகளை எனக்கே மணம் புரிவித்தார். என் பிதா இறந்து இரண்டு வருஷங்கள் ஆகுமுன்னரே, மேற்படி விவாகம் நடைபெற்றது. என் சிறிய தகப்பனாருக்கு ஆண் குழந்தை கிடையாது. மூன்று பெண்பிரஜை தான் அவருக்குண்டு. ஆகவே என்னுடைய சொத்துவெளிக் குடும்பங்களுக்குப் போய்விடக்கூடாதென்று உத்தேசித்து அவர் இங்ஙனம் செய்தார். இந்த விவாகம் என் தாயாருக்குச் சம்மதமில்லை. அவள் தன்னுடைய வகையில் ஒரு அழகான பெண்ணை எனக்கு மணம் புரிவிக்க விரும்பினாள். அதை விட்டு நான் சிறிய தகப்பனாரின் பெண்களை விவாகம் செய்துகொண்டாலும் அவர்களில் யாரேனும் ஒரு பெண்ணை மாத்திரம் மணம் செய்து கொல்வதே சரியென்றும் ஒரேயடியாக மூவரையும் மணம்புரிவது கூடாதென்றும் என் தாய் வற்புறுத்தினாள். இதினின்றும் என் தாயாருக்கும் சிறிய தகப்பனாருக்கும் மனஸ்தாபம் மிகுதியாக ஏற்பட்டது. சிறிய தகப்பனார் என்னைத் தனியாக வேறே ஊருக்கு அழைத்துக்கொண்டுபோய் அங்கு என் தாயாருடைய அனுமதியில்லாமலே விவாகத்தை முடித்து வைத்து விட்டார். சிறிது காலத்துக்கெல்லாம் என் தாயார் என் செய்கையாலே ஏற்பட்ட துக்கத்தைப் பொறுக்க மாட்டாமலே உயிர் துறந்து விட்டாள்.
சிறிய தகப்பனார் இட்டதே என் வீட்டில் சட்டமாய் விட்டது. சொத்து விஷயங்களை நான் கவனிப்பதே கிடையாது. எல்லாம் அவர் வசத்தில் விட்டு விட்டேன். அவரும் என் சொத்தில் தம்மால் இயன்றவரை இரண்டு மூன்று வருஷங்களுக்குள்ளே அறுபத்தேழு லக்ஷம் - கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரை - தாஸிகளின் விஷயத்திலும் குடியிலும் நாசம் பண்ணிவிட்டு கடைசியில் குடி மிகுதியால் குடல் வெடித்துச் செத்துப்போனார். பிறகு என் சொத்தை யெல்லாம் நிர்வகிக்க வேண்டிய கடமை என்னைப் பொறுத்ததாயிற்று. சரி. இந்த விஷயத்தை விஷ்தாரமாகச் சொல்வது என்னுடைய நோக்கமன்று. சொத்துக் கொஞ்சம் நஷ்டமானதில் எனக்கு அதிகக் கஷ்டமில்லை. இதனிடையே என்னுடைய மூன்று மனைவிகளால் நான் படும் பாடு சொல்லுந் தரமன்று. அதோ - பார்த்தீர்களா? ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் முகம்மதிய ஸ்திரீகள் உட்கார்ந்திருக்கும் கூட்டம் தெரிகிறதன்றோ? நடுவே யிருக்கும் மூன்று பேரும் என்னுடைய பத்தினிமார். சுற்றி உட்கார்ந்திருப்போர் வேலைக்காரிகள். அந்த மூன்று பேரும் மூலைக் கொருத்தியாக முகத்தைத் திருப்பிக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்குள்ளே மனவொற்றுமை யில்லையென்பது பிரத்யக்ஷமாக விளங்கவில்லையா? இவர்களில் மூத்தவள் பெயர் ரோஷன். அவளுக்கு வயது இருபத்திரண்டு.அடுத்தவள் பெயர் குலாப் பீவி. அவளுக்கு வயது பத்தொன்பது. அதற்கடுத்தவள் பெயர் ஆயிஷா பீவி. அவளுக்கு வயது பதினாறு. ரோஷனிடத்தில் நான் பேசினால் குலாப் என்னை வெட்டலாமென்று கருதுகிறாள். குலாபிடம் வார்த்தை பேசுவது ஆயிஷாவுக்குச் சம்மதியில்லை. அவளுக்குஒரு நகை வாங்கிக் கொடுத்தால் இவள் ஒரு நகையை உடைத்தெறிகிறாள். இவளுக்கொரு பட்டுச் சட்டை வாங்கிக் கொடுத்தால்".
-------------
மாதர் - முகமதிய ஸ்திரீகளின் நிலைமை
இரண்டு தினங்களுக்கு முன்பு என்னுடைய முகம்மதிய நண்பர் ஒருவர் என்னைப்பார்க்கும் பொருட்டு வந்திருந்தார். இவர் இஸ்லாம் மார்க்கத்தில் ஆழ்ந்த பற்றுதல் உடையவர். எதிர்காலத்தில் இஸ்லாம் மதம் மிகுந்த மகிமையும் ஒளியும்உடையதாய் உலகத்துக்கு எண்ணிறந்த நன்மைகள் செய்யப்போகிறதென்று இவர் உறுதியாக நம்புகிறார்.இவரது நம்பிக்கை நிறைவேறு மென்பதற்கு பல அடையாளங்கள் இக் காலத்தில் உலகமெங்கும் பல அடையாளங்கள் இக் காலத்தில் உலகமெங்கும் தோன்றுவதால், நானும் இவருடைய கருத்தை அங்கீகாரம்செய்கிறேன். ஆதலால், இவருக்கும் எனக்கும் மிகுந்த நட்பேற்பட்டு வளர்ந்து வருகிறது.
இவர் அன்று மாலை என்னிடம் முதலாவதுகேட்ட கேள்வி:-
''சென்ற 22-5-20-ல் சுதேசமித்திரன் பத்திரிகை7-ம் பக்கத்தில் 'ரெயில்வே ஸ்தானம்' என்றொரு கதை எழுதியிருந்தீர்களே'' அது மெய்யாகவே நடந்த விஷயமா''வெறும் கற்பனைக் கதை தானா?'' என்றார்.
''வெறும் கற்பனை'' என்று நான் சொன்னேன்.
'என்ன கருத்துடன் எழுதினீர்?'' என்று அவர் கேட்டார்.
அதற்கு நான்:- ''பொதுவாக நான் கதைகளெழுதும் போதும், வெறுமே கற்பனை நயத்தைக் கருதிஎழுதுவது வழக்கமேயன்றி ஏதேனும் ஒரு தர்மத்தைப் போதிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் எழுதும் வழக்கமில்லை. தர்மபோதனைக்கு வியாஸங்களெழுதுவானேன்'' கற்பனைப் புனைவையே அதில் நான் முக்கியமாகக் கருதுவேன். எனிலும் என்னை மீறியே கதைகளிலும் பெரும்பாலும் தர்மபோதனைகள் வந்து நுழைந்து விடுகின்றன. அவ்வாறே இந்த ''ரெயில்வே ஸ்தானம்'' என்ற கதையிலும் ஒரு தர்மக் கொள்கை இருக்கத்தான் செய்கிறது. ஒருவன் பலமாதரை மணம்புரிந்து கொண்டால் அதினின்றும் அவனுக்குக் கஷ்டம் தான் விளையுமென்பதும், விவாகத்தில் ஒருவன் இன்பம் காணவேண்டினால் அவன் ஒருத்தியை மணம் செய்துகொண்டு அவளிடம் மாறாத தீராத உண்மைக் காதல் செலுத்துவதே உபாயமாகுமென்பதும் மேற்படி கதையினால் குறிப்பிடப்படும் உண்மைகளாகும்? என்றேன். அப்போது அந்த முஸ்லீம் நண்பர்:- ''அந்தக் கதையில் ஒரு பிழைஇருக்கிறது'' என்றார்.
"என்ன பிழை?" என்று கேட்டேன்.
''அக் கதையில் ஒரு முகம்மதியப் பிரபு மூன்றுசகோதரிகளை மணம் செய்ததாக எழுதியிருக்கிறீர்கள். அப்படி சகோதரமான மூன்று பெண்களை மணம் புரிந்து கொள்ளுதல் முகம்மதிய சாத்திரப்படி ''ஹராம்'' (பாதகம்) ஆகக் கருதப்படுகிறது. தன் மனைவி உயிருடனிருக்கையில் அவளுடன் பிறந்த மற்ற ஸ்திரீயை ஒரு முஸ்லீம் மணம் புரிந்து கொள்ளக்கூடாதென்பதே எங்களுடைய சாத்திரங்களின் கொள்கை'' என்று அந்த முகம்மதிய நண்பர் சொன்னார்.
இதைக் கேட்டவுடன் நான்:- ''சரிதான், எனக்கு அந்த விஷயம் தெரியாது. மனைவியொருத்தியின் சகோதரிகளை மணம் புரியும் வழக்கம் ஹிந்துக்குளுக்குள்ளே உண்டாதலால், அதுபோலவே முகம்மதியர்களுக்குள்ளேயே இருக்கலாமென்று நினைத்து அங்ஙனம் தவறாக எழுதி விட்டேன். எனவே அந்தக் கதாநாயகனாகிய முகம்மதியப் பிரபுவுக்கு அவனுடைய சிற்றப்பன் தன் மூன்று குமாரத்திகளையும் மணம் புரிவித்தானென்பதை மாற்றித் தன்னினத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை மணம் புரிவித்தானென்று திருத்தி வாசிக்கும்படி ''சுதேச மித்திரன்''பத்திரிகையில் எழுதி விடுகிறேன்'' என்றேன். (-ரெயில்வே ஸ்தானம்- என்ற கதையில் நான் மேலே கூறிய சாதாரணத்தவறு புகவிட்டது பற்றி பத்திராதிபரும் பத்திரிகை படிப்போரும் என்னைப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன். உலகமெல்லாம் மாதர்களுக்கு நியாயம் செய்ய வேண்டுமென்ற கிளர்ச்சி நடப்பதை அனுசரித்து முஸ்லீம்களும் ஏக பத்தினி விரதம், பெண் விடுதலை, ஆண் பெண் சமத்துவம் என்ற கொள்கைகளைப் பற்றிமேன்மை அடைய வேண்டுமென்பதே என் கருத்து. இந்தக் கருத்து நிறைவேறும்படி பரமாத்மாவான அல்லாஹூத்த ஆலா அருள் புரிவாராக).
இதிலிருந்து சம்பாஷணை பொதுவாக முகமதிய விவகாரங்களின் விஷயத்தைக் குறித்து நடைபெறலாயிற்று. அப்பால் முகம்மதிய மாதர்களின் ஸ்தானத்தைக் குறித்துப் பேசலானோம்.
என்னுடனே ஒரு ஹிந்து நண்பர்இருந்தார். அவர் அந்த முஸ்லீம் நண்பரை நோக்கி:-''உங்களுக்குள்ளே ஸ்திரீகளை அந்தப்புரத்தில் மறைத்து வைப்பதாகிய (கோஷா) வழக்கம் எக்காலத்தில் ஏற்பட்டது?'' என்று கேட்டார்.
அது கேட்டு அந்த முகம்மதிய நண்பர்:-''முகம்மது நபி (ஸல்லல்லாஹி அலகிவஸல்லா) அவர்கள் காலத்திற்கு நெடுங்காலம் முன்னே இந்த வழக்கம் அரேபியாவில் இருந்து இடையே மாறிப்போய்விட்டது.பிறகு முகம்மது நபி அதை மீளவும் விதியாக்கினார்''என்றார். அப்போது நான் ''மதவிஷயங்களை அதாவது அல்லாவிடம் செலுத்தவேண்டிய பக்தி முதலிய விஷயங்களைத் தவிர, விவாகம், ஸ்திரீகளை நடத்த வேண்டிய மாதிரி முதலிய ஜனசமூகத்தின் ஆசார நியமங்களில் காலத்துக்குத் தக்கபடி புதிய மாறுதல்கள் செய்து கொள்ளலாமன்றோ?'' என்று கேட்டேன்.
''அங்ஙனம் ஆசார விஷயங்களிலேகூட மாறுதல்கள் செய்ய எங்கள் சாஸ்திரங்கள் இடங்கொடுக்கவில்லை!'' என்று அந்த முஸ்லீம் நண்பர் சொன்னார்.''எந்த சாஸ்திரங்களுமே ஆசார நியமங்களில், அதாவது நம்மால் விதிக்கப்பட்ட புதிய ஆசாரமுறையில் அதற்குப்பிறகு யாதொரு மாறுதலும் ஏற்படக்கூடாதென்று விதிப்பதுதான் வழக்கம். ஆனால் அதன்படி எங்கும்நடப்பதில்லை. எல்லா ஜாதிகளிலும் எல்லா ஜன சமூகங்களிலும் எல்லா தேசங்களிலும் எல்லா மதஸ்தர்களுக்குள்ளும் காலத்துக்குக் காலம் ஆசாரங்களில் புதிய மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் வருகின்றன''என்று நான் சொன்னேன்.
''புராதன நபிகளால் விதிக்கப்பட்ட ஆசாரங்களில் சில முகம்மதிய நபியின் காலத்தில் மாறவில்லையோ? அது போல் முகம்மது நபியின் காலத்தில் ஏற்பட்ட ஆசாரங்களை அதன் பிறகு மாற்றக்கூடாதோ?'' என்று என் ஹிந்து நண்பர் கேட்டார்.
அது கேட்ட என் முஸ்லீம் நண்பர்:''கூடாது. ஏனென்றால் முகம்மது தான் கடைசி நபி.அவருடைய உத்தரவுகள் கடைசியான உத்தரவுகள். அவற்றை மாற்றுவதற்கு இடமில்லை'' என்றார்.
''முந்திய நபிகளின் கட்டளைகளும் கடவுளுடைய நேரான கட்டளைகளேயன்றி அந்தந்த நபிகளின் சொந்தக் கருத்துக்களல்ல என்பதை இஸ்லாமானவர்கள் அங்கீகாரம் செய்கிறார்கள். காலத்தின மாறுதலுக்கிணங்க, அல்லா, தன் பழைய கட்டளைகளைமாற்றி ஒவ்வொரு புதிய நபி மூலமாகவும் புதிய கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டு வந்திருக்கிறார்; எனவே, முகம்மது நபி இருந்த காலத்துக்கும் தேசத்துக்கும் பொருந்த அவர் மூலமாகப் புதியகட்டளைகள் கொடுக்கப்பட்டன மதக்கொள்கைகள் எக்காலத்துக்கும் எந்த தேசத்திற்கும் பொது. ஆதலால்அவற்றை மாற்றக்கூடாது. வெறுமே ஜனங்கட்கு சம்பந்தமான ஆசார விவகாரங்களை காலதேசங்களுக்குப் பொருந்தும்படி மாற்றலாமென்று முகம்மது நபி சொல்லவில்லையா?'' என்று அந்த ஹிந்து நண்பர் கேட்டார்.
அங்ஙனம் எங்கள் நபிநாயகம் அவர்கள்உத்தரவு கொடுக்கவில்லை'' என்று என் முஸ்லீம் நண்பர்தெரிவித்தார்.
''உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமோ? நீங்கள் கொரான் முழுதும் வாசித்திருக்கிறீர்களோ?'' என்றுநான் கேட்டேன்.
அதற்கு என் முஸ்லீம் நண்பர்:- ''நான் கொரான் முழுதும் ஓதியதில்லை. என் சுற்றத்தாரில் சிலர் கொரான் முற்றிலும் ஓதியிருக்கிறார்கள். இந்த விஷயத்தைப்பற்றி அவர்களிடம் கேட்டுத் தெரிவிக்கிறேன்'' என்றார். பிறகு இந்த விஷயத்தை விட்டுவிட்டோம்.
அப்பால் நான் என் முஸ்லீம் நண்பரை நோக்கி:- ''தென் ஜில்லாக்களிலே தமிழ்ப் பேசும் முஸ்லீம்(ராவுத்தர்) களுக்குள்ளே கோஷா வழக்கம் காணப்படவில்லையே! அதன் காரணம் யாது?'' என்று கேட்டேன்.''இங்கும் சிலர் அந்த வழக்கத்தைப் பரிபாலிக்கத்தான் செய்கிறார்'' என்று என் முஸ்லீம் நண்பர் சொன்னார்.
''எனினும் பலர் அதைப் பரிபாலிக்கவில்லையே?அதன் முகாந்திரம் யாது?'' என்று கேட்டேன்.
''வேதசாஸ்திர விதிகளில் அவர் செலுத்தக் கடமைப்பட்ட அளவு பயபக்தி செலுத்தாமலிருப்பதே அதற்கு முகாந்திரம்'' என்று என் முஸ்லீம் நண்பர் தெரிவித்தார்.
''அப்படியிருந்தும், தென் ஜில்லாக்களிலுள்ள இந்த முஸ்லீம்கள் மற்றப் பக்கத்து முஸ்லீம்களைக் காட்டிலும் அல்லாவின் பக்தியிலும் மதப்பற்றுதலிலும் சிறிதேனும் குறைந்தவர்களில்லை என்பது பிரத்யக்ஷ மன்றோ? அங்ஙனமாக, இவர்கள் கொரான் விதிகளில்போதிய அளவு பயபக்தி செலுத்தாமல் இருக்கிறார்கள்என்று சொல்லுதல் நியாயம் அன்று. இந்த கோஷா விஷயத்தில் மாத்திரம் இந்த தேச சம்பிரதாயங்களைத் தழுவி நடக்கிறார்கள். இவர்களுடைய கூட்டத்தில் எத்தனை ஞானிகளும் பக்திமான்களும் அவதாரம் செய்திருக்கிறார்கள். அவர்கள் இந்த கோஷா விஷயத்தை இக்கூட்டத்தின் மீது வற்புறுத்தாமல் தான் இருந்திருக்கிறார்கள். ஆதலால் மதபக்தி முதலிய விஷயங்களில் மாறுதல்கள் கூடாதேயொழிய, ஆசாரங்களில் காலத்துக்குத் தகுந்த இடத்துக்குத் தகுந்த மாறுதல்கள் செய்து கொள்ள இஸ்லாம் சாஸ்திரங்களே அனுமதி தரக்கூடும் என்று நினைக்கிறேன்'' என்று நான் சொன்னேன்.
இது கேட்டு அந்த முஸ்லீம் நண்பர் மீளவும்:-''நான் நன்றாகக் கொரான் ஓதியவர்களை விசாரித்து இந்த விஷயத்தில் முடிவு சொல்லுகிறேன்'' என்றார். ''இடைக்காலத்து சாஸ்திரங்கள் இந்த விஷயத்தில் அதிகமுரண் செலுத்தக் கூடும். ஆதலால் சாட்சாத் கொரான் வேதத்தையே நன்றாகப் படித்து உணர்ந்தவர்களிடம் விசாரணை செய்யுங்கள்'' என்றேன்.
''சரி, அங்ஙனமே செய்கிறேன்'' என்று என்முஸ்லீம் நண்பர் சொன்னார்.
பிறகு துருக்கி தேசத்தில் ஸ்திரீகளுக்குள்ளே பிரம்மாண்டமான விடுதலைக் கிளர்ச்சி நடந்து வருவதைப்பற்றியும் அங்கு பல மாதர்கள் கோஷா வழக்கத்தை முற்றிலும் ஒழித்துவிட்டு, கல்வி கேள்விகளில் உயர்ந்த தேர்ச்சியுடையோராய், தங்களுக்குள்ளே சபைகள் சேர்த்தும் தாங்களே உபந்நியாஸங்கள் முதலியன நடத்தியும், உலகத்துமற்ற மாதர்களைப்போல் துருக்கியிலுள்ள மாதரும் கல்வி, விடுதலை, ஆண்களுடன் சமத்துவம் இவற்றை எய்தி மேன்படுமாறு அதிதீவிரமான முயற்சிகள் செய்து வருவதைப்பற்றியும் நான் சில வார்த்தைகள் சொன்னேன்.
அப்பால் எங்கள் காலைக் கூட்டம் கலைந்துவிட்டது. என் முஸ்லீம் நண்பரும் தம் வீட்டுக்குப் போயினர்.
--------------
மாதர் - நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்
ருஷ்யாவில் ஜார் சக்ரவர்த்தியின் ஆட்சி பெரும்பாலும் ஸமத்வக் கக்ஷியார் அதாவது போல்ஷிவிஸ்ட் கக்ஷியாரின் பலத்தாலே அழிக்கப்பட்டது. எனினும் ஜார் வீழ்ச்சியடைந்த மாத்திரத்திலே அதிகாரம் போல்ஷிவிஸ்ட்களின் கைக்கு வந்துவிடவில்லை. அப்பால் சிறிது காலம், முதலாளிக் கூட்டத்தார் கெரன்ஸ்கி என்பவரைத் தலைவராக நிறுத்தி, ஒருவிதமான குடியரசுநடத்தத் தொடங்கினார்கள். ஆனால் கெரன்ஸ்கியின் ஆட்சிஅங்கு நீடித்து நடக்க வில்லை. இங்கிலாந்து, ப்ரான்ஸ்முதலிய நேச ராஜ்யங்களிடமிருந்து பலவகைகளில் உதவிபெற்ற போதிலும் புதிய கிளர்ச்சிகளின் வெள்ளத்தினிடையே, கெரன்ஸ்கியால் தலைதூக்கி நிற்க முடியவில்லை. சில மாதங்களுக்குள்ளே கெரன்ஸ்கி தன் உயிரைத் தப்புவித்துக் கொள்ளும் பொருட்டாக ருஷ்யாவினின்றும் ஓடிப்போய், நேசவல்லரசுகளின் நாடுகளில் தஞ்சமென்று குடிபுகநேரிட்டது.
போல்ஷிவிக் ஆட்சி ஏற்பட்ட காலத்திலே அதற்குப் பலவகைகளிலும் தோஷங்கள் கற்பிப்பதையே தம் கடமையாகக் கருதியவர்களிலே சிலர் அதன்மீது ராஜரீக நெறிகளிலே குற்றங்கள் சுமத்தியது போதாதென்று, போல்ஷிவிஸ்ட் கக்ஷியார் ஸ்திரீகளையும் பொதுவாகக்கொண்டு ஒருத்தியை பலர் அனுபவிக்கிறார்களென்று அபாண்டமான பழி சுமத்தப்பட்டது. ஆனால், 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு' ஒன்பதாம் நாள் உண்மை எப்படியேனும் வெளிப்பட்டுவிடும். ஒரு பெரிய ராஜ்யத்தைக் குறித்து எத்தனை காலம் பொய் பரப்பிக் கொண்டிருக்கமுடியும்? சில தினங்களுக்கு முன்பு, இங்கிலாந்து தேசத்தில் மாஞ்செஸ்டர் நகரத்தில் பிரசுரம் செய்யப்படும் 'மாஞ்செஸ்டர் கார்டியன்' என்ற பத்திரிகை நவீன ருஷியாவின் விவாக விதிகளைப் பற்றிய உண்மையான விவரங்களைப் பிரசுரம் செய்திருக்கிறது.
அவற்றைப் பார்க்கும்போது, நவீன ஐரோப்பிய நாகரீகம் என்று புகழப்படும் வஸ்துவின் நியாயமான உயர்ந்த பக்குவ நிலையை மேற்படி போல்ஷிவிஸ்ட் விவாக சம்பிரதாயங்களில் எய்தப்பட்டிருக்கிறதென்று தெளிவாக விளங்குகிறது ஆண், பெண் இருபாலாரும் பரிபூரண ஸமத்துவ நிலைமையுடையோர். இங்ஙனம் இருபாலாரும் முற்றிலும் சமானம் என்ற கொள்கைக்குப் பங்கம் நேரிடாதபடி விவாகக்கட்டைச் சமைக்க வேண்டும் என்பதே ஐரோப்பிய நாகரீகத்தின் உண்மையான நோக்கம். பெண்களுக்கு விடுதலை தாங்கள்வேறு பல ஜாதியார்களைக் காட்டிலும் அதிகமாகக் கொடுத்திருப்பதே தாம் நாகரீகத்தில் உயர்ந்தவர்கள் என்பதற்கு முக்கியமான அடையாளங்களில் ஒன்றாமென்று ஐரோப்பியர்கள் சொல்லுகிறார்கள். அந்த வகையிலே பார்த்தால், ஐரோப்பாவின் இதரப் பகுதிகளைக் காட்டிலும் நவீன ருஷியா உயர்ந்த நாகரீகம் பெற்றுள்ள தென்பது பரத்யக்ஷமாகத் தெரிகிறது.
''மாஞ்செஸ்டர் கார்டியன்'' சொல்லுகிறது:- தெற்கு ஸோவியட் (போல்ஷிவிஸ்ட்) ருஷியாவில் இதுவரையிலிருந்த வீண் நிர்ப்பந்தங்கள் இனி விவாகவிஷயத்தில் இல்லாதபடி ஒழித்துவிடப்படும். அதாவது,வேற்றுமைகள் முதலியன விவாகங்களுக்குத் தடையாகக்கணிக்கப் படமாட்டா! இப்போதுள்ள சட்டப்படி ஸ்திரீகளுக்கும் புருஷர்களுக்கும் எவ்விதத்திலும்வேற்றுமை கிடையாது. இருபாலோரும் ஸமானமாகவேகருதபடுவர். எல்லாக் குழந்தைகளும் ஸமூஹச் சட்டப்படி பரிபூரண சமத்வம் உடையனவாம். பாதுகாப்பில்லாத குழந்தைகள் யாருக்குப் பிறந்த போதிலும், அவற்றைப் பாதுகாக்க ஒரு தனி இலாகா ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் ராஜாங்க சாஸனப்படி நடைபெறும் விவாகங்களையே அங்கீகாரம் செய்யும். பெண்கள் பதினாலு வயதுக்குள்ளும், ஆண்கள் பதினெட்டு வயதுக்குள்ளும் விவாகம் செய்துகொள்ள வேண்டும். இரு திறத்தாரும் மனமொத்தால்தான் விவாகம் செய்யலாம். விவாகம் முடிந்ததும் புருஷன் அல்லது ஸ்திரீயின் பெயரைக் குடும்பத்தின் பெயராக வைத்துக் கொள்ளலாம். விவாகத்துக்குப் பிறகு தம்பதிகள் பரஸ்பரம் உதவியாக வாழக் கடமைப் பட்டிருக்கிறார்கள். புருஷனேனும் ஸ்திரீயேனும் விவாக பந்தத்தை நீக்கிக்கொள்ள விரும்பினால், அங்ஙனமே நீக்கிக் கொள்ளச் சட்டம் இடங்கொடுக்கிறது.'
மேற்படி விவரங்கள் 'மான்செஸ்டர் கார்டியன்' பத்திரிகையிலே காணப்படுகின்றன. சில தினங்களின் முன்பு ஒருகிராமாந்தரத்து ஸ்திரீ 'மாதர் நிலை' என்ற மகுடத்தின் கீழே 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் ஒரு வியாஸம் எழுதியிருந்தார். அந்த வியாஸத்தை வாசித்துப் பார்த்தால் (ஸ்ரீ மான்காந்தி சொல்லுவது போல) எவனுக்கும் அழுகை வராமல் இராது. அந்தவ்யாஸத்தில் நம்முடைய தேசத்து ஸ்திரீகளை நம்மவரில் ஆண்மக்கள் எத்தனை இழிவாகவும் குரூரமாகவும் நடத்துகிறார்களென்பதை அந்த ஸ்திரீ மிகவும் நன்றாக எடுத்து விளக்கியிருந்தார். உலகத்தில் ஒரு ஸ்திரீ ஜனன மெய்திய மாத்திரத்திலே பூமாதேவி மூன்றே சொச்சம் முழம் கீழே அமிழ்ந்து போய் விடுவதாக இந்நாட்டில் முந்தைய ஆண்மக்கள் எழுதி வைத்திருப்பதையும் அதுபோல் ஸ்திரீகளை இழிவாகவும் குறைவாகவும் சொல்லும் வேறு பல 'சாத்திர' வசனங்களையும் மேற்கோள் காட்டி, அந்த மாது நம் பெண்மக்களின் ஸ்திதி, விலங்குகளின் ஸ்திதியைக் காட்டிலும் பரிதாபத்துக்கு இடமாக விளக்கி மிகவும் வருத்த முணர்த்தியிருந்தார்.
இப்படிப்பட்ட நம்முடைய ஸ்திரீகளின் நிலைமையை நவீன ருஷ்யாவில் ஸ்திரீகளின் விஷயமாக ஏற்பட்டிருக்கும் சட்டங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போதுதான் நம்மை ஐரோப்பிய நாகரீகம் எந்த சக்தியினாலே கீழே வீழ்த்திற்று என்பதும், எந்த அம்சங்களில் நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் வழியைப் பின்பற்றத் தகும் என்பதும் தெளிவுறப் புலப்படும். நாம் ஐரோப்பியர் காட்டும் நெறிகளை முற்றிலுமேகைப் பற்றிக் கொள்ளுதல் அவசியமில்லை. திருஷ்டாந்தமாக, நாம் குழந்தைகளை குடும்ப சம்ரக்ஷணையினின்றும் பிரித்து ராஜாங்க ஸம்ரக்ஷணையில் விடவேண்டியதில்லை. பெண்கள் 14வயதுக்குள்ளும் ஆண்கள் 18 வயதுக்குள்ளும் விவாகம் பண்ணித் தீர வேண்டுமென்று நிர்பந்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை. விவாகத்தை ரத்து செய்யும் விஷயத்தில் அவஸரப்பட வேண்டியதில்லை. பொறுமையை உபயோகப்படுத்தி விவாகக் கட்டை நிரந்தரமாகப் பாதுகாப்பதே மனித நாகரீகத்தின் சிறப்பாதலால் நாம் அதற்குரிய ஏற்பாடு செய்வோம். ஆனால் 'ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்விதத்திலும் வேற்றுமை கிடையாது. இருபாலோரும் ஸமானமாகவே கருதப்படுவார்கள்' என்று ருஷ்யச் சட்டம் கூறுமிடத்திலே நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் கருத்தை அனுஸரித்தல் மிக, மிக, மிக, மிக அவசரம்.
-----------
மாதர் - தென் ஆப்பிரிக்காவில் பெண்கள் விடுதலை
தென் ஆப்பிரிக்காவிலே ''பியேட்டர் மாரிட்ஸ் புர்க்'' என்ற பட்டணத்தில் 1910-வருடத்தில் ''பெண்கள் விடுதலைச் சங்கம்'' என்றொரு சபை ஸ்தாபனம் செய்யப்பட்டது. இதிலே பல வகுப்புக்களைச் சேர்ந்த பெண்கள் ஒன்றுகூடி ''பார்லிமெண்டு'' சபையிலே பிரதிநிதிகள் நியமிப்பதற்காக சீட்டுப் (ஓட்)போடும் சுதந்திரம் பெண்களுக்குக் கொடுத்தால் ஒழியவேறு விதமான சீர்திருத்தங்கள் பெண்களுடைய நிலைமையிலே உண்டாக்குவது சாத்தியமில்லை என்று முடிவு செய்துகொண்டு அந்நோக்கத்தை நிறைவேற்றும்படி பிரயத்தனம் செய்து வருகின்றார்கள். இந்தச் சங்கம் ஆரம்பித்த காலத்தில் 'நட்டா' லிலே பெண்கள் நகர சபை(Municipality) க்குச் சீட்டுப் போடும் உரிமைகூட இல்லாதிருந்தனர். இச் சங்கத்தினரின் முயற்சியால் ஸ்திரீகளுக்குள்ளே ஜாதி, குலம், செல்வம், ஸ்தானம், பட்டம் முதலியவற்றால் ஏற்பட்டிருந்த அனாவசியமான தாரதம்யங்கள் குறைந்து வருகின்றன. கல்வி விஷயத்திலே (அதாவது பெண்கல்வி மாத்திரம் அன்று), பொதுவாக தேசத்து ஜனங்களின் படிப்பு விஷயத்தில் இவர்கள் மிகவும் சிரத்தை செலுத்தி வருகிறார்கள். பள்ளிப் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் இயற்கை விதிகள் நன்றாகக் கற்றுக் கொடுத்து மேற்படி விதிகளைத் "தவறினால் இயற்கையே தண்டனை செய்யம் என்பதை அவர்கள் நன்றாகத் தெரிந்து கொள்ளும்படி செய்து, பொதுஜன அறிவை இயற்கை நெறியில் ஓங்கும்படி செய்யவேண்டும் என்று பாடுபடுகிறார்கள். நிலை தவறிப்போன ஸ்திரீகளைக் கொடூரமான அவமதிப்பாலும் அசிரத்தையாலும் மேன்மேலும் கெட்டழிந்து துன்பப் படாதபடி நல்வழி காட்டி நேர்மைப்படுத்தலே தகுதியென்று தீர்மானித்து அதற்குரிய முயற்சி செய்து வருகிறார்கள். ''ஜன சபை ராசி'' (ஜன சபைபார்லிமெண்டு) ரோசி கமிட்டியென்று தன் ராசி ஒன்றுநியமித்து அந்த ராசி (கமிட்டி) யைச் சேர்ந்தவர்கள் அப்போதப்போது ஜன சபைக்கு முன்பு வரும் மசோதாக்களைப் படித்து ஆராய்ச்சி செய்கிறார்கள். ஏதேனும் ஒரு மசோதா சட்டமாவதனாலே ஜனங்களுக்குப் பிரதிகூலம் ஏற்படும் என்று தோன்றினால், உடனே ஜனசபைக் காரரைத் தனித்தனியே போய்ப் பார்த்து ஆட்சேபங்கள் செய்தல், தந்திகளின் மூலம் ஆட்சேபித்தல் முதலிய காரியங்கள் செய்கிறார்கள். ஸ்திரீகளுக்குத் தொழிற்சாலைகளிலே கொடுக்கும் சம்பளம் இன்ன அளவுக்குக் கீழே "போகக்கூடாதென்று நிர்ணயஞ் செய்தஜன சபையார் ஒரு ''சம்பளக் கீழெல்லை மசோதா'' கொண்டு வரவேண்டும் என்று சொல்லி, அதற்காகப் பல ''மெம்பர்''களைப் போய்ச் சந்தித்து வாதாடி வருகிறார்கள். (நடுவிலே ஒரு ரசமான வார்த்தை.''மெம்பர்'' என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் எனக்கு அகப்பட வில்லை. இது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். ''அவயவி'' சரியான வார்த்தை யில்லை. ''அங்கத்தான்'' கட்டிவராது. ''சபிகன்'' சரியான பதந்தான். ஆனால் பொதுஜனங்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்லபதங்கள் கண்டு பிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரைமணி நேரம் யோசித்துப் பார்த்தேன்; 'உறுப்பாளி' ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனதிற்குப் பொருந்தவில்லை. என்ன செய்வேன்! கடைசியாக ''மெம்பர்'' என்று எழுதி விட்டேன். இன்னும் ஆர, அமரயோசித்துச் சரியான பதங்கள் கண்டு பிடித்து மற்றொருமுறை சொல்லுகிறேன்)
ஸ்திரீகளுக்கு நகர சபையிலே சீட்டுப்போடும் சுதந்திரம் மேற்படி சங்கத்தாரின் முயற்சியாலே தான்கைக்கூடிற்று. ஸ்திரீகளையும் குழந்தைகளையும் யாரேனும் அடித்து ஹிம்சை செய்ததாக நியாய ஸ்தலங்களிலே வழக்கு வரும்போது, மேற்படி சங்கத்தின் காரியஸ்தர்கள் போயிருந்து கவனித்து வருகிறார்கள். தென்னாப்பிரிக்கா முழுமைக்குமாக ஒரு பெரிய 'விடுதலை'க்கோட்டம் (கோட்டம் என்பது பெருஞ் சபை) ஏற்பட்டிருக்கிறது. அதனுடன் இந்தச் சங்கமும் சேர்ந்திருக்கிறது. ''பிருத்தானிய ஸ்திரீ ஸாம்ராஜ்யம்'' என்ற பெரிய கோட்டத்துடன் இவையெல்லாம் ஐக்கியப்பட்டிருக்கின்றன. அந்நிய தேசங்களில் உள்ள விடுதலைக் கூட்டத்தாருடனே இவர்கள் அடிக்கடி கடிதப்போக்கு வரவு நடத்துகிறார்கள். இவ்விஷயமெல்லாம் சென்னையில் மிஸஸ் அன்னி பெஸண்ட் என்ற பண்டிதை நடத்தும் ''காமன்வீல்'' (பொது நலம்) பத்திரிகையிலே சொல்லப்படுகிறது. மிஸஸ் அன்னி பெஸண்ட் பெண்கள் விடுதலை விஷயத்திலே தீவிரமான பக்தியுடையவர் என்பது சொல்லாமலே விளங்கும். இப்படியே எல்லா தேசங்களிலும் பெண்கள் மேன்மேலும் சுதந்திரம் பெற்று மனித ஜாதியை மேன்மைப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.தமிழ் நாட்டு ஸ்திரீகள் மாத்திரம் தமது மனுஷ்ய பதவியை ருசுப்படுத்துவதற்கு யாதொரு வழியும் செய்யாமல் இருக்கிறார்களே! ஏன்? என்ன காரணம்?
---------
மாதர் - இந்தியாவில் விதவைகளின் பரிதாபகரமான நிலைமை
ஸ்ரீமான் மோஹனதாஸ் கரம்சந்திர காந்தி (மகாத்மா காந்தி)யால் நடத்தப்படும் ''நவஜீவன்''என்ற பத்தரிகையில் ஒருவர் பாரத தேசத்து விதவைகளைப் பற்றிய சில கணக்குகளைப் பிரசுரம்செய்திருக்கிறார். அவற்றுள் குழந்தை, கைம்பெண்களைப் பற்றிய பின் வரும் கணக்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் கணக்கின்படி இந்தியாவில் பிறந்து ஒரு வருஷமாகு முன்னரே விதவைகளாய்விட்ட மாதர்களின்தொகை 1,014! 15 வயதுக்குக் குறைந்த கைம்பெண்களின்தொகை 3 1/2 லக்ஷம்! இவர்களில் சற்றுக் குறைய 18000 பேர் ஐந்து வயதுக்குட்பட்டோர்!
இப்படிப்பட்ட கணக்குகள் சில கொடுத்துவிட்டுஅவற்றின் இறுதியில் மேற்படிக் கடிதம் எழுதியவர். ''இக்கைம்பெண்களின் மொத்தத் தொகை மிகவும் அதிகமாகஇருக்கிறது. இதைப் படிக்கும்போது எந்த மனிதனுடையமனமும் இளகிவிடும். (இந்நாட்டில்) விதவைகள் என்றபாகுபாட்டை நீக்க முயல்வோர் யாருளர்?'' என்று சொல்லிவருத்தப்படுகிறார்.
இந்த வியாசத்தின்மீது மகாத்மா காந்திபத்திராதிபர் என்ற முறையில் வியாக்கியானம் எழுதியிருக்கிறார். அந்த வியாக்கியானம் ஆரம்பத்தில் ஸ்ரீமான் காந்தி ''மேலே காட்டிய தொகையைப் படிப்போர்அழுவார்கள் என்பது திண்ணம்'' என்கிறார். அப்பால்,இந்த நிலைமையை நீக்கும் பொருட்டு, தமக்குப் புலப்படும்உபாயங்களில் சிலவற்றை எடுத்துச் சொல்லுகிறார். அவற்றின்சுருக்கம் யாதெனில், (1) பால்ய விவாகத்தை நிறுத்திவிடவேண்டுமென்பதும் (2) 15 வயதுக்குட்பட்ட கைம்பெண்களும் மற்ற இளமையுடைய கைம்பெண்களும் புனர் விவாகம் செய்துகொள்ள இடம் கொடுக்க வேண்டுமென்பதுமே யாகும்.
ஆனால் இந்த உபாயங்கள் விருப்பமுடையோர்அநுசரிக்கலாமென்றும், தமக்கு இவற்றை அநுசரிப்பதில்விருப்பமில்லையென்றும், தம்முடைய குடும்பத்திலேயேபலவிதவைகள் இருக்கலாமென்றும், அவர்கள் புனர் விவாகத்தைப்பற்றி யோசிக்கவே மாட்டார்களென்றும்,தாமும் அவர்கள் மறுமணம் செய்துகொள்ளும்படி கேட்கவிரும்பவில்லை என்றும் ஸ்ரீமான் காந்தி சொல்லுகிறார்.
----------
மாதர் - ஸ்ரீமான் காந்தி சொல்லும் உபாயம்
''ஆண்மக்கள் புனர் விவாகம் செய்து கொள்ளுவதில்லை என்ற விரதம் பூணுதலே விதவைகளின் தொகையைக் குறைக்கும் அருமருந்தாகும்'' என்று ஸ்ரீமான் காந்தி அபிப்பிராயப்படுகிறார். இந்த விநோதமான உபாயத்தை முதல் முறைவாசித்துப் பார்த்தபோது எனக்கு ஸ்ரீமான் காந்தியின் உட்கருத்து இன்னதென்று விளங்கவில்லை. அப்பால், இரண்டு நிமிஷம் யோசனை செய்து பார்த்த பிறகுதான், அவர் கருத்து இன்னதென்பது தெளிவுபடலாயிற்று. அதாவது, முதல் தாரத்தை சாககொடுத்தவன் பெரும்பாலும் கிழவனாகவே யிருப்பான். அவன் மறுபடி ஒரு சிறுபெண்ணை மணம் புரியுமிடத்தே அவன் விரைவில் இறந்துபோய் அப்பெண் விதவையாக மிஞ்சி நிற்க இடமுண்டாகிறது. ஆதலால் ஒரு முறை மனைவியை இழந்தோர் பிறகு மணம் செய்யாதிருப்பதே விதவைகளின் தொகையைக் குறைக்க வழியாகும்? என்பது ஸ்ரீமான் காந்தியின் தீர்மானம்.
சபாஷ்! இது மிகவும் நேர்த்தியான உபாயம்தான். ஆனால் இதில் ஒரு பெரிய சங்கடம் இருக்கிறது. அதுயாதெனில், இந்த உபாயத்தின்படி ஆண்மக்கள் ஒருபோதும் நடக்கமாட்டார்கள். மேலும், பெரும்பாலும் கிழவர்களே முதல்தாரத்தை இழப்பதாக ஸ்ரீமான் காந்தி நினைப்பதும் தவறு. 'இந்தியாவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சராசரி 25-ம் பிராயத்தில் மரணம் நேருகிறது' என்பதை ஸ்ரீமான் காந்தி மறந்துவிட்டார். எனவே, இளம்பிராயமுடைய பலரும் மனைவியாரை இழந்து விடுகிறார்கள். அவர்கள் ஸ்ரீமான் காந்தி சொல்லும் சந்நியாச மார்க்கத்தை ஒருபோதும் அநுஷ்டிக்க மாட்டார்கள். அவர் அங்ஙனம் அநுஷ்டிப்பதினின்றும் தேசத்துக்குப் பல துறைகளிலும் தீமை விளையுமேயன்றி நன்மை விளையாது. ஆதலால் அவர்கள் அங்ஙனம் துறவு பூணும்படி கேட்பது நியாயமில்லை.
ஸ்திரீ-விதவைகளின் தொகையைக் குறைக்க வழி கேட்டால், ஸ்ரீமான் காந்தி ''புருஷ-விதவை'' களின் (அதாவது: புனர் விவாகமின்றி வருந்தும் ஆண்மக்களின்) தொகையை அதிகப்படுத்த வேண்டுமென்கிறார்! இதினின்றும், இப்போது ஸ்திரீ-விதவைகளின் பெருந்தொகையைக் கண்டு தமக்கு அழுகை வருவதாக ஸ்ரீமான் காந்தி சொல்லுவதுபோல், அப்பால் புருஷ விதவைகளின் பெருந்தொகையைக்கண்டு அழுவதற்கு ஹேது உண்டாகும்.
மேலும், ஆணுக்கேனும், பெண்ணுக்குகேனும் இளமைப் பிராயம் கடந்த மாத்திரத்திலே போக விருப்பமும் போக சக்தியும் இல்லாமற் போகும்படி கடவுள் விதிக்கவில்லை. உலகத்தின் நலத்தைக் கருதி கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும்போக இச்சையை அக்கிரமமான வழிகளில் தீர்த்துக்கொள்ள முயல்வோரை மாத்திரமே நாம் கண்டிக்கலாம். கிரமமாக ஒரு ஸ்திரீயை மணம் புரிந்துகொண்டு அவளுடன் வாழ விரும்புவோர் வயது முதிர்ந்தோராயினும் அவர்களைக் குற்றம் சொல்வது நியாயமன்று. சிறிய பெண் குழந்தைகளை வயது முதிர்ந்த ஆண்மக்கள் மணம் புரியலாகாதென்பதை நாம் ஒருவேளை பேச்சுக்காக ஒப்புக் கொண்டபோதிலும், வயதேறிய பெண்களை வயது முற்றிய ஆண்மக்கள் மணம் புரிந்துகொள்ளக் கூடாதென்று தடுக்க எவனுக்கும் அதிகாரம் கிடையாது. எனவே, எவ்வகையிலே நோக்குமிடத்தும் ஸ்ரீமான் காந்தி சொல்லும்உபாயம் நியாய விரோதமானது; சாத்தியப்படாதது; பயனற்றது.
விதவைகளின் தொகையைக் குறைப்பதற்கும் அவர்களுடைய துன்பங்களைத் தீர்ப்பதற்கும் ஒரேவழிதான் இருக்கிறது. அதை நம்முடைய ஜனத்தலைவர்கள் ஜனங்களுக்கு தைர்யம் போதிக்க வேண்டும். அதை ஜனங்கள் எல்லோரும் தைர்யமாக அனுஷ்டிக்கவேண்டும். அதாவது யாதெனில்:- இந்தியாவில் சிற்சில ஜாதியாரைத் தவிர மற்றப்படியுள்ளோர்,நாகரீக தேசத்தார் எல்லோரும் செய்கிறபடி, விதவைகள் எந்தப் பிராயத்திலும் தமது பிராயத்துக்குத் தகுந்த புருஷரைபுனர் விவாகம் செய்துகொள்ளலாம். அப்படியே புருஷர்கள் எந்தப் பிராயத்திலும் தம் வயதுக்குத் தக்க மாதரை மறுமணம் செய்து கொள்ளலாம். இந்த ஏற்பாட்டை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வரவேண்டும். வீண் சந்தேகம், பொறாமை, குருட்டுக்காமம், பெண்களை ஆத்மாவில்லாத, ஹ்ருதயமில்லாத, ஸ்வாதீனமில்லாத அடிமைகளாக நடத்தவேண்டுமென்ற கொள்கை இவற்றைக்கொண்டே நம்மவர்களில் சில புருஷர்கள் 'ஸ்திரீகளுக்கு புனர் விவாகம் கூடாது' என்று சட்டம் போட்டார்கள். அதனாலேதான், மனைவியில்லாத கிழவர்கள் சிறு பெண்களை மணம் புரிய நேரிடுகிறது. அதனாலேதான், ஹிந்து தேசத்து விதவைகளின் வாழ்க்கை நரக வாழ்க்கையினும் கொடியதாய் எண்ணற்ற துன்பங்களுக்கு இடமாகிறது பால்ய விதவைகள் புனர் விவாகம் செய்து கொள்ளலாமென்று ஸ்ரீமான் காந்தி சொல்லுகிறார். ஆனால் அதைக்கூட உறுதியாகச் சொல்ல அவருக்குத் தைரியம் இல்லை.
----------
1. மகாகவி பாரதியார் கட்டுரைகள்
சாகித்ய அகாடமி / பாரி நிலையம், 2010
2. கட்டுரைகள் - பாரதியார்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2015
3. பாரதியார் கட்டுரைகள்
பூம்புகார் பிரசுரம்.
---------
பாரதியார் கட்டுரைகள்
- உள்ளடக்கம்
1. தத்துவம் | 2. காமதேனு |
3. உண்மை | 4. ஓம் சக்தி |
5. மாதர் |
1. தத்துவம்
1.1 யாரைத் தொழுவது? | 1.2 இனி |
1.3 பாரத தேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியானம் | 1.4 மூடபக்தி |
1.5 சக்தி தர்மம் | 1.6 ஆறு மதங்கள் |
1.7 நவசக்தி மார்க்கம் | 1.8 சாக்தம் |
1.9 கணபதி | 1.10 காளி |
1.11 சிதம்பரம் | 1.12 வல்லூறு நாயக்கர் |
1.13 ஜீவன் முக்தி: அதுவே சிதம்பரம் | 1.14 மஹாலக்ஷ்மி |
1.15 நவராத்திரி -- 1 | 1.16 நவராத்திரி -- 2 |

"கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல் வேறு பட்டார் தொடர்பு"
இதன் பொருள்-வாய்ப்பேச்சு ஒரு மாதிரியாகவும் செய்கை வேறொரு மாதிரியாகவும் உடையோரின் உறவு கனவிலும் கொள்ளுதல் தீது-என்பதேயாகும். பி.ஏ., எம்.ஏ. பரீக்ஷைகள் தேறி, வக்கீல்களாகவும், உபாத்தியாயராகவும், என்ஜினீயர்களாகவும், பிற உத்தியோகஸ்தராகவும் வாழும் கணக்கில்லாத ஐயர், ஐயங்கார், பிள்ளை முதலியவர்களில் எவராவது ஒருவர் தம் வீட்டுக்கல்யாணத்துக்கு லக்னம் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று நிறுத்தியிருப்பாரா?"பெண் பிள்ளைகளின் உபத்திரவத்தால் இவ்விதமான மூடபக்திகளுக்குக் கட்டுப்பட்டு வாழும்படி நேரிடுகிறது" என்று சிலர் முறையிடுகிறார்கள். பெண் பிள்ளைகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்க வேண்டும். மூடத்தனமான, புத்திமான்கள் கண்டு நகைக்கும் படியான செய்கைகள் செய்ய வேண்டுமென்று ஸ்திரீகள் பலனின்றிப் "பிதற்றுமிடத்தே அவர்களுடைய சொற்படி நடப்பது முற்றிலும் தவறு. மேலும் அது உண்மையான காரணமன்று, போலிக்காரணம். நம்மவர் இத்தகைய ஸாதாரண மூட பக்திகளை விட்டுவிலகத் துணியாமலிருப்பதன் உண்மையான காரணம் ''வைதிகரும் பாமரரும் நம்மை ஒருவேளை பந்தி போஜனத்துக்கு அழைக்காமல் விலக்கிவிடுவார்கள்'' என்பதுதான். இங்கிலீஷ் படித்த மேற்குலத்து ஹிந்துக்கள் கணக்கில்லாத மூட பக்திகளைக் கை விலங்குகளாகவும், கழுத்து விலங்குகளாகவும் பூட்டிக்கொண்டு தத்தளிப்பதன் தலைமைக் காரணம் மேற்படிபந்தி போஜனத்தைப் பற்றிய பயந்தான். அதைத் தவிர வேறொன்றுமில்லை. அந்த மெய்யான காரணத்தை மறைத்துவிட்டு ஸ்திரீகளின் மீது வீண்பழி சுமத்தும் இந்த வீரர்கள் மற்றும் எத்தனையோ விவகாரங்களில் தம்மினத்து மாதரை விலையடிமைகள் போலவும், விலங்குகள் போலவும் நடத்தும் விஷயம் நாம் அறியாததன்று. எண்ணில்லாத பொருள் நஷ்டமும் கால நஷ்டமும் அந்தக்காரணத்தின் இகழ்ச்சியும் உலகத்து அறிஞரின் நகையாடலும் ஸத்யதெய்வத்தின் பகைமையும் சிறிதென்று கொண்டீர்! பந்தி போஜனஸ்வதந்திரம் பெரிதென்று கொண்டீர்! தைரியமாக நீங்கள் உண்மை என்று உணர்ந்தபடி நடவுங்கள். பந்தி போஜனம் சிறிது காலத்துக்குத்தான் உங்களுக்குக் கிடைக்காதிருக்கும். பிறகு உங்கள் கூட்டத் தொகை அதிகமாகும். ஸத்ய பலம் முதலிய பல காரணங்களால் மேற்படி பந்தி போஜனமும் உங்களுக்கு ஸித்தியாய்விடும். தைர்யமாக வேலை செய்யுங்கள்.
-----------
தத்துவம் - சக்தி தர்மம்
ஆத்மா உணர்வு, சக்தி செய்கை
உலகம் முழுவதும் செய்கை மயமாக நிற்கிறது. விரும்புதல், அறிதல், நடத்துதல் என்ற மூவகையான சக்தி இவ்வுலகத்தை ஆளுகின்றன. இதைப்பூர்வ சாஸ்திரங்கள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என்று சொல்லும்.
---------
தத்துவம் - ஆறு மதங்கள்
ஆதி சங்கராசார்யார் பௌத்த மதத்தை எதிர்த்த போது, தமக்குச் சார்பாக வேதத்தை ஒப்புக்கொள்ளும் எல்லா வகுப்புக்களையும் ஒன்றாக்கிக் கொண்டனர். அக்காலத்தில் பௌத்தம், ஜைனம் என்ற வேத விரோதமான மதங்களில் சேராமல் வேதத்தை ஆதாரமாகக் கொண்டோர் ஆறு மதங்களாகப் பிரிந்து நின்றனர்.
இந்த ஆறு மதங்களில் எதையும் கண்டனம் செய்யாமல் சங்கராசார்யார் இவ்வாறும் வெவ்வேறு வகையான வைதிகப்படிகளென்றும், வேதாந்தமே இவையனைத்திற்கும் மேலான ஞானமென்றும் சொன்னார். இது பற்றியே அவருடைய கூட்டத்தார் அவருக்கு "ஷண்மத "ஸ்தாபனாசார்யார்" என்று பெயர் சொல்லுகிறார்கள்.
இந்த ஆறு மதங்களாவன:
1. ஐந்திரம் - தேவர்களிலே இந்திரன் தலைவன் என்று சொல்லி, பரமாத்மாவை "இந்திரன்" என்ற பெயரால் வழிபடுவது.
2. ஆக்னேயம் - அக்னியே முதற் கடவுள் என்பது.
3. காணாபத்தியம் - பரமாத்மாவைக் கணபதி என்ற நாமத்தால் வழிபடுவது.
4. சைவம் - சிவனே தேவர்களில் உயர்தவன் என்பது.
5. வைஷ்ணவம் - விஷ்ணுவே மேலான தெய்வம் "என்பது.
6. சாக்தம் - சக்தியே முதல் தெய்வமென்பது.
வேதம் உபநிஷத் இரண்டையும் இந்த ஆறு மதஸ்தரும் ஒருங்கே அங்கீகாரம் செய்தார்கள். ஆனால் புராணங்கள் வெவ்வேறாக வைத்துக் கொள்ளுதல் அவசியமாயிற்று. திருஷ்டாந்தமாக, வைஷ்ணவர் சிவபுராணங்களையும், சைவர் வைஷ்ணவபுராணங்களையும் உண்மையாக ஒப்புக்கொள்வதில்லை. பொதுக் கதைகளை எல்லாப் புராணங்களிலும் சேர்த்துக் கொண்டார்கள்.
இதிகாசங்களையும் பொதுவாகக் கருதினர் எனினும், பழைய சாக்த தர்மத்தின் அழுத்தம் பொது ஜனங்களின் சித்தத்தை விட்டுப் பிரியவில்லை. மதுரை சுந்தரேசர், காஞ்சி ஏகாம்பர மூர்த்தி என்ற பெயர்களைக் காட்டிலும் மதுரை மீனாக்ஷி, காஞ்சிக் காமாக்ஷி என்ற பெயர்கள் அதிகப் பெருமை கொண்டு நிற்கின்றன. மாரி, காளி என்ற பெயருடன் சக்தித் தெய்வத்தையே மஹாஜனம் மிகுதியாகக் கொண்டாடி வருகிறது.
----------
தத்துவம் - நவசக்தி மார்க்கம்
சக்தி வணக்கம் இத்தனை சாதாரணமாக இருந்த போதிலும், அந்த மதத்தின் மூலதர்மங்களை ஜனங்கள் தெரிந்துகொள்ளவில்லை. வெறுமே பொருள் தெரியாமல்சிலைகளையும் கதைகளையும் கொண்டாடுவோர்க்குத் தெய்வங்கள் வரங்கொடுப்பதில்லை.
பரமாத்மா வேறாகவும் பராசக்தி வேறாகவும் நினைப்பது பிழை. சர்வலோகங்களையும் பரமாத்மா சக்தி ரூபமாக நின்று சலிக்கச் செய்வதால், சாக்தமதஸ்தர் நிர்குணமான பிரம்மத்தை ஸகுண நிலையில் ஆண்பாலாக்காமல் பெண்பாலாகக் கருதி "லோக மாதா" என்று போற்றினர். ராமகிருஷ்ண பரமஹம்ஸர்"என் தாய் காளி? என்று தான் "பெரும்பாலும் பேசுவது வழக்கம். ஜனங்கள்வணங்கும் "லோக மாதா" இன்ன பொருள் என்று நாம் அவர்களுக்குத் தெரிவிக்கவேண்டும். நவசக்தி என்பது புதிய தெய்வமன்று. அதனைப் பொருள்தெரிந்து போற்றும் முறையே நவசக்தி மார்க்கம். இந்தத் தர்மத்தின் பலன்களைத் தாயுமானவர் பின்வருமாறு சொல்லுகிறார்:
" பதியுண்டு, நிதியுண்டு, புத்திரர்கள் மித்திரர்கள்
பக்கமுண் டெக்காலமும்,
பவிசுண்டு, தவசுண்டு, திட்டாந்தமாக யம
படர் எனும் திமிரம் அணுகாக்
கதியுண்டு, ஞானமாங் கதிருண்டு, சதுருண்டு,
காயச் சித்திகளு முண்டு."
- மலைவளர் காதலி, முதற் பாட்டு.
இந்து மதம் ஸந்யாஸத்தை ஆதரிப்பதன்று; இகலோகத்தில் இருந்து தேவ வாழ்க்கை வாழவேண்டும் என்ற நோக்கமுடையது.
குருக்களுக்குள்ளே மேற்படி மதவேற்றுமைகள் தீவிரமாக இருந்திருக்கலாமாயினும், பொதுஜனங்கள் எல்லாத் தெய்வங்களையும் தம் தம் மனப்படி வைத்து வணங்கி வந்தனர். சங்கராசார்யார் "கொள்கையை அனுசரிப்போர், ''எல்லாத் தெய்வங்களையும் ஒன்று போலவே வணங்கலாம்'' என்று சொல்லியது பொது ஜனங்களின் வழக்கத்துக்கு நல்ல பலமாயிற்று. மேலும், ஞானிகளும் சித்தர்களும் இடைக்கிடையே தோன்றி, ''ஒரே பரம்பொருளைத்தான் ஆறுமதங்களும் வெவ்வேறு பெயர் கூறிப் புகழ்கின்றன'' என்ற ஞாபகத்தை ஜனங்களுக்குள்ளே உறுதிப்படுத்திக் கொண்டு வந்தார்கள்.
மேற்கூறப்பட்ட ஆறு மதங்களில் இப்போது வைஷ்ணவம், சைவம் என்ற இரண்டுமே ஓங்கி நிற்கின்றன. மற்ற நான்கும் ஒருவாறு க்ஷீணமடைந்து போனதாகக்கூறலாம். ''ஒருவாறு'' என்றேன்; ஏனெனில் ஐந்திரம் ஒன்றைத் தவிர மற்றவை முழுவதும் க்ஷீணமடயவில்லை. ஐந்திர மதமொன்றுதான் இருந்த சுவடே தெரியாதபடி மங்கிப் போய்விட்டது. நாடு முழுதிலும் கணபதி பூஜை உண்டுஆனால் கணபதியே முதற்கடவுளென்று பாராட்டும் காணாபத்ய மதம் பரவிநிற்கவில்லை. மஹாராஷ்டிரத்தில் இக் கொள்கையுடையோர் சிலர் இப்போதும் இருப்பதாகக் கேள்வி நிச்சயமாகத் தெரியாது. அக்னி பூஜை பிராமணர்க்குள்இருக்கிறது. ஆனால் ஆக்னேய மதம் இல்லை.
---------
தத்துவம் - சாக்தம்
இப்போது சாக்த மதம் வங்காளத்தில் உயிர் கொண்டு வலிமை பெற்று நிற்கிறது. மற்ற இடங்களில் பொதுஜனங்கள் எங்கும் சக்தியை மிகுந்த கொண்டாட்டத்துடன் வணங்கி வருகிறார்களாயினும், தனியாகச் சாக்தம் என்ற கொள்கை இல்லை. பூர்வீக ஹிந்து ராஜாக்கள் காலத்தில் சாக்த மதம் மிகவும் உயர்வு பெற்றிருந்தது.ஹூணர்களை எல்லாம் துரத்தி, மஹா கீர்த்தியுடன் விளங்கி, தனது பெயரைத் தழுவி ஒரு சகாப்தக் கணக்கு வரும்படி செய்த விக்கிரமாதித்ய ராஜா மஹாகாளியை உபாஸனை செய்தவன். "அவன் காலத்தில் தோன்றி, பாரத தேசத்திற்கும், பூமண்டலத்திற்கும் தலைமைக் கவியாக விளங்கும் காளிதாஸன்சக்தி ஆராதனத்தை மேற்கொண்டவன். சிவாஜி மஹாராஜாவுக்குப் பவானியே தெய்வம்.
(தென்னாட்டிலே இப்போதும் சிலர் சக்தியுபாஸனை என்று தனிமையாகச் செய்து வருகிறார்கள். இவர்கள் புராதன க்ஷத்திரிய வழக்கத்திலிருந்த மது மாமிசங்களை அந்தத் தெய்வத்துக்கு அவசியமான நைவேத்தியம் என்ற தப்பெண்ணத்தால் தாமும் வழக்கப்படுத்திக் கொண்டு, ஜாதியாரின் பழிப்புக்கு அஞ்சி ரஹஸ்யமாகப் பூஜை செய்து வருகிறார்கள். எனவே, சில இடங்களில்,"சாக்தன்" என்றால் "ரஹஸ்யமாகக் குடிப்பவன்" என்ற அர்த்தம் உண்டாய்விட்டது. காலத்தின் விந்தை! )
-------
தத்துவம் - கணபதி
வேதத்தில் பிரம்ம தேவனையே கணபதி என்று ரிஷிகள் வணங்கினர். அவரே ப்ரஹ்மணஸ்பதி; அவரே ப்ருஹஸ்பதி.
விநாயகர் பிரணவ மந்திரத்தின் வடிவம். யானை முகம் பிரணவமந்திரத்தைக் காட்டுவது. அறிவின் குறி 'கணா நாம் த்வா கணபதியும் ஹவாமஹே' என்று ஸாமான்ய வழக்கத்திலுள்ள வேத மந்திரத்தில் பிள்ளையாரைப் பிரம்ம தேவனென்று காட்டியிருப்பது தெரிந்து "கொள்ளுக.
''ஒன்றே மெய்ப்பொருள்; அதனை ரிஷிகள் பலவிதமாகச் சொல்லினர்'' என்று வேதமே சொல்லுகிறது கடவுளின் பல குணங்களையும் சக்திகளையும் பலமூர்த்திகளாக்கி வேதம் உபாஸனை செய்கிறது. வேதகாலம் முதல் இன்று வரை ஹிந்துக்கள் தம் தெய்வங்களை மாற்றவில்லை. வேதம் எப்போது தொடங்கிற்றோ, யாருக்கும் தெரியாது. கிரேக்க, எகிப்திய, பாபிலோனிய தெய்வங்களெல்லாம் காலத்தில் மறைந்து போயின. ஹிந்துக்களுடைய தெய்வங்கள் அழியமாட்டா. இவை எப்போதும் உள்ளன.
-------
தத்துவம் - காளி
படைப்பு, காப்பு, அழிப்பு ஆகிய முத்தொழிலையும் குறிப்பிட்டுப் புராணங்களில் மூன்று மூர்த்தியாகப் பரமாத்மாவைப் பேசுகிறார்கள். பிரம்மம் என்ற பெயரை விசேஷமாகப் பரமாத்மாவுக்கு வேதாந்த சாஸ்திரம் வழங்குகிறது. பிரம்மம் என்பது வேள்வியையும் மந்திரத்தையும் ஞானத்தையும் குறிப்பிட்டு வேதரிஷிகளால் வழங்கப்பட்டது. மந்திர நாதனும், ஸரஸ்வதி நாயகனும், வேதமூர்த்தியுமாகிய பிரம்ம தேவனை வேதம் 'ப்ரஹ்மணஸ்பதி' என்று கூறும்.அதாவது, ப்ரஹ்மத்தின் பதி அல்லது தலைவன் என்று அர்த்தம். மூன்று மூர்த்திகளில் ஒவ்வொன்றையும் உபாஸனையின் பொருட்டுப் "பிரிவாகக் காட்டினாலும், அந்த மூர்த்தியையே ஸாக்ஷாத் பரமாத்மா வாகவும் தெரிந்த கொள்ள வேண்டும். நாராயணன் பரிபாலன மூர்த்தி, பரப்ரஹ்மம் அவரே. சிவன் ஸம்ஹாரமூர்த்தி, பரப்ரஹ்மம் அவரே. பிரம்மா சிருஷ்டி மூர்த்தி; அவரே ஸாக்ஷாத்பரப்ரஹ்மம். அவருடைய பெயரைத்தான் ப்ரஹ்மத்திற்கு வைத்திருக்கிறது.
இந்திரன், அக்னி, வாயு, வருணன் என்ற நாமங்கள் வேதத்தில் பரமாத்மாவுக்கே வழங்குகின்றன. மேலே ''ஏகம் ஸத்'' என்ற ரிக்வேத மந்திரத்தின் பொருள் குறிப்பிட்டிருக்கிறோம். மூர்த்தியுபாஸனைக் கூட்டத்தாருக்கிடையே லௌகிககாரியங்களை அனுசரித்துப் பிற்காலத்தில் பல சண்டைகள் உண்டாயின. தக்ஷயாகத்தில் வீரபத்திரன் வந்து, இந்திரன், அக்னி, சூரியன், பகன், விஷ்ணு முதலிய தேவர்களைத் தண்டனை செய்ததாக ஒரு புராணம் சொல்லுகிறது. இப்படியே, பல புராணங்கள் தாம் உபாஸனைக்குக் காட்டும் மூர்த்தி மற்ற மூர்த்திகளைப் பல விதங்களில் விரோதித்துத் தண்டனை செய்ததாகச் சொல்லுகின்றன. இப்படிப்பட்ட கதைகள் பழைய புராணங்களில் பிற்காலத்தாரால் நுழைக்கப்பட்ட பொய்க் கதைகளேயன்றி வேறில்லை. இந்தக்கதைகள் வேதக்கருத்துக்கு முற்றிலும் விரோதம். வேதத்தில் ஹிந்துக்களுடைய தேவர்கள் ஒருவரையொருவர். பழிப்பதும் அடிப்பதும் இல்லை.
--------
தத்துவம் - சிதம்பரம்
காலை பத்து மணி இருக்கும். நான் ஸ்நானம் செய்து, பூஜை முடித்து, பழம்தின்று, பால் குடித்து, வெற்றிலை போட்டு, மேனிலத்திற்கு வந்து நாற்காலியின் மேல் உட்கார்ந்து கொண்டு இன்ன காரியம் செய்வதென்று தெரியாமல் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஜன்னலுக்கு எதிரே வானம் தெரிகிறது. இளவெயில் அடிக்கிறது. வெயிற்பட்ட மேகம் பகற் சந்திரன் நிறங்கொண்டு முதலையைப் போலும் ஏரிக்கரையைப் போலும் நானாவிதமாகப் படுத்துக்கிடக்கிறது. எதிர்வீட்டில் குடி இல்லை. அதற்குப் பக்கத்து வீட்டிலிருந்து சங்கீத ஓசைவருகின்றது. வீதியிலிருந்து குழந்தைகளின் சப்தம் "கேட்கிறது. வண்டிச்சப்தம், பக்கத்து வீட்டுவாசலில் விறகு பிளக்கிற சப்தம். நான்கு புறத்திலும் காக்கைகளின் குரல், இடையிடையே குயில், கிளி, புறாக்களின் ஓசை, வாசலிலே காவடிகொண்டு போகும் மணியோசை, தொலையிலிருந்து வரும் கோயிற் சங்கின் நாதம், தெருவிலே சேவலின் கொக்கரிப்பு, இடையிடையே தெருவில் போகும் ஸ்திரீகளின் பேச்சொலி, அண்டை வீடுகளில் குழந்தை அழும் சப்தம், ''நாராயணா, கோபாலா!; என்று ஒரு பிச்சைக்காரனின் சப்தம், நாய் குரைக்கும் சப்தம், கதவுகள் அடைத்துத் திறக்கும் ஒலி, வீதியில் ஒருவன் ''ஹூகும்'' என்று தொண்டையை லேசாக்கி இருமித்திருத்திக் கொள்ளும் சப்தம், தொலையிலேகாய்கறி விற்பவன் சப்தம், ''அரிசி, அரிசி'' என்று அரிசி விற்றுக்கொண்டு போகிற ஒலி-இப்படிப் பலவிதமான ஒலிகள் ஒன்றன்பின் மற்றொன்றாக வந்து செவியில் படுகின்றன. இந்த ஒலிகளையெல்லாம் பாட்டாக்கி இயற்கைத் தெய்வத்தின் மஹாமௌனத்தைச் சுருதியாக்கி என் மனம் அனுபவித்துக்கொண்டு இருந்தது.
-------
தத்துவம் - வல்லூறு நாயக்கர்
இப்படி இருக்கையில், என் முன்னே வேதபுரம் கிருஷ்ணகான சபையாரின் காரியதரிசியாகிய வல்லூறு நாய்க்கர் வந்து நின்றார். உட்காரும்படி சொன்னேன். உட்கார்ந்தார். 'விஷயமென்ன?' என்று கேட்டேன். அவர் சொல்லுகிறார்: "அடுத்த செவ்வாய்க்கிழமை இரவு நமது சபையின் ஆதரவின்கீழ் நடைபெறும் ராமாயண உபந்நியாசக் கோவையில் இரண்டாவது பகுதியாகிய சீதா கல்யாணம் நடக்கிறது. முதல் கதையாகிய ஸ்ரீராமஜனனம் சென்ற புதன்கிழமை நடந்தது. தஞ்சாவூரிலிருந்து மிகவும் நன்றாகப் பாடக்கூடிய பின்பாட்டுக்காரர் வந்திருக்கிறார். இவருக்குச் சன்னமான சாரீரம்; ஆனால் பெண் குரல் அன்று. நன்றாகப் பாடுவார். ஒருதரம் வந்து "கேட்டால் உங்களுக்கே தெரியும். மேலும் இந்த ராமாயணக் கதையில் வசூலாகும் பணத்தில் ஒரு சிறு பகுதி நமது அரசாங்கத்தாரின் சண்டைச் செலவிற்கு உதவி செய்வதாக அதிகாரிகளிடம் வாக்குக் கொடுத்திருக்கிறோம். நான்கு ரஸிகர் வந்து கேட்டால்தானே பாகவதற்குச் சந்தோஷம் ஏற்படும். ரஸிகராக இருப்பவர் வந்து கேட்டால் மற்ற ஜனங்களும் வருவார்கள். நம் சபைக்கு லாபம் உண்டு. பாகவதர் ராமாயணப் பிரசங்கத்தில் தேர்ச்சியுடையவர். மிருதங்கம் அடிக்கிற பிராமணப் பிள்ளை பதினைந்து வயதுடையவன்; ஆனால் மிகவும் நன்றாக அடிக்கிறான். தாங்கள் அவசியம் வரவேண்டும்" என்றார்.
அதற்கு நான், ''சீதா கல்யாணம், பாதுகா பட்டாபிஷேகம், லக்ஷ்மண சக்தி, பட்டாபிஷேகம் என்கிற நான்கு கதைக்கும் நான் வரலாமென்று உத்தேசிக்கிறேன்; நிச்சயமாக வருகிறேன். எனக்கு இரவில் தூக்கம் விழிப்பது கொஞ்சம் சிரமம், ஆயினும் தங்கள் பொருட்டாகவும், தங்கள் சபையின் தலைவராகிய ஓங்காரச் செட்டியார் பொருட்டாகவும், அந்தச் சிரமத்தைப் பார்க்காமல் வருவேன்'' என்றேன். "இராமாயணப் பிரசங்கத்தில் வரும் தொகையிலே ராஜாங்கத்தாரின் சண்டைச் செலவிற்காக உதவி செய்யப்படும் என்ற விஷயத்தைத் தனியாகக் காட்டி ஒரு விசேஷ விளம்பரம் போடப் போகிறோம்; அதில் என்ன மாதிரி வக்கணை எழுத வேண்டும் என்பதைத் தாங்கள் தெரிவிக்க வேண்டும்" என்று வல்லூறு நாயக்கர் பிரார்த்தித்துக் கொண்டார். நான் வக்கணை சொன்னேன். இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் குள்ளச்சாமி வந்து சேர்ந்தார்.
---------
தத்துவம் - ஜீவன் முக்தி: அதுவே சிதம்பரம்
குள்ளச்சாமி யாரென்பதை நான் முன்னொரு முறை சுதேசமித்திரன் பத்திரிகையில் எழுதிய "வண்ணான் கதை"யில் சொல்லியிருக்கிறேன். இவர் ஒரு பரமஹம்ஸர். ஜடபரதரைப் போல், யாதொரு தொழிலும் இல்லாமல் முழங்காலுக்குமேல் அழுக்குத் துணி கட்டிக் கொண்டு போட்ட இடத்தில் சோறு தின்றுகொண்டு, வெயில் மழை பாராமல் தெருவிலே சுற்றிக்கொண்டிருக்கிறார். இவருடைய ஒழுக்க விநோதங்களை மேற்படி பாரதி அறுபத்தாறு 30, 31, பாடல்களையும் காண்க. வண்ணான் கதையிலே காண்க. இவர் வந்து "சோறு போடு என்று கேட்டார். தாம் திருவமுது செய்யுமுன்பாக, ஒரு பிடி அன்னம் என்கையில் நைவேத்தியமாகக் கொடுத்தார். நான் அதை வாங்கியுண்டேன். அப்பொழுது சாமியார் போஜனம் முடித்த பிறகு, என்னுடன் மேல் மெத்தைக்கு வந்தார். ''கண்ணை மூடிக்கொள்'' என்றார். கண்ணை மூடிக்கொண்டேன். நெற்றியில் விபூதியிட்டார், ''விழித்துப் பார்'' என்றார். கண்ணை விழித்தேன். நேர்த்தியான தென்றல் காற்று வீசுகிறது. சூரியனுடைய ஒளி தேனைப் போல மாடமெங்கும் பாய்கின்றது. பலகணி வழியாக இரண்டு சிட்டுக்குருவிகள் வந்து கண்முன்னே பறந்து விளையாடுகின்றன. குள்ளச்சாமியார் சிரிக்கிறார். கடைக்கண்ணால் தளத்தைக் காட்டினார். கீழே குனிந்து பார்த்தேன். ஒரு சிறிய ஒலைத்துண்டு கிடந்தது. அதை நான் எடுக்கப் போனேன். அதற்குள்ளே அந்தக் குள்ளச்சாமி சிரித்துக் கொண்டு வெளியே ஓடிப்போனார். அவரைத் திரும்பவும் கூப்பிட்டால் பயனில்லை என்பது எனக்குத் தெரியும். அவர் இஷ்டமானபோது வருவார்; இஷ்டமானபோது ஓடிப்போவார். சிறு குழந்தை போன்றவர். மனுஷ்ய விதிகளுக்குக் கட்டுப்பட்டவரில்லை. ஆகவே, நான் அவரைக் கூப்பிடாமலே கீழே கிடந்த ஓலையை எடுத்து வாசித்துப் பார்த்தேன்.
1. "எப்போதும் வானத்திலே சுற்றும் பருந்துபோல் போக விஷயங்களினால் கட்டுப்படாமல், பரமாத்மாவின் ஞானக் கதிரை விழித்து நோக்குதலே, விடுதலை. அதுதான் சிதம்பரம். மகனே! சிதம்பரத்துக்குப் போ. 2. சிதம்பரத்தில் நடராஜருடன் சிவகாம சக்தி பக்தருக்கு வரதானம் கொடுக்கிறார். போய் வரம் வாங்கு. 3. சிதம்பரமே ஸ்ரீரங்கம்; அதுவே பழனிமலை. எல்லாப் புண்ணிய க்ஷேத்திரங்களும் ஜீவன் முக்திச்சின்னங்கள் என்று தெரிந்துகொள். உனக்கு க்ஷேமமும் நீண்ட வயதும் ஜீவன்முக்தியும்விளைக" என்று எழுதியிருந்தது. இந்த வசனங்கள் நமது புராதன வேத தர்மத்திற்கு ஒத்திருக்கிறபடியால், அவற்றைச் சுதேசமித்திரன் பத்திரிகை மூலமாக வெளியிடலானேன்.
குறிப்பு:- "சிதம்பரம் போகாமல் இருப்பேனோ? இந்த ஜன்மத்தை வீணாகக்கழிப்பேனோ?" என்று நந்தன் சரித்திரத்தில் கோபாலகிருஷ்ண பாரதியார் பாடியிருப்பதற்கும் இதுவே பொருள் என்று உணர்க.
----------
தத்துவம் - மஹாலக்ஷ்மி
"இல்லறம் பெரிதா, துறவறம் பெரிதா?" என்பது கேள்வி.
ரிக்ஷி சொல்லுகிறார் "அரசனே, என்னோடு பாதசாரியாக வருவாயானால் தெரியப்படுத்துகிறேன்" என்று.
அப்படிக்குப் பாதசாரியாகப் போகும்போது கன்னட தேச ராஜகுமாரத்திக்கு விவாகம் நிச்சயித்திருப்பதால், ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் ராஜகுமாரத்தியின் விவாகத்திற்கு வந்திருக்கிறபோது அவ்விடத்திற்கு மேற்படி அரசனும் ரிஷியும் இருவருமாகப் போய்ச் சேர்ந்தார்கள். இப்படி எல்லோரும் "விவாகமண்டபத்தில் கூடியிருக்க, அந்த விவாக மண்டபத்தில் ஒரு பால்ய ஸந்நியாசியும்வேடிக்கை பார்க்க வந்தார். "கன்னடத்து ராஜகுமாரி! எந்த ராஜகுமாரனை விவாகம் செய்து கொள்ளுகிறாய்?" என்று தோழியானவள் கேட்டுக்கொண்டே போனாள். அவ்விடத்து ராஜகுமாரர்களையெல்லாம் ''வேண்டாம், வேண்டாம்'' என்று களைந்துபோய்,இந்தப் பால்ய ஸந்நியாஸியைக் கண்டு புஷ்ப மாலையை அணிந்தாள். அந்த புஷ்ப மாலையானது பாம்பாகி, மேற்படி பால்ய ஸந்நியாசியின் கழுத்தில் யமனுடைய பாசம்போல் வந்துவிழ, அவன் திடுக்கிடாமல் "ஓம் சக்தி'' ஓம் சக்தி" என்ற மந்திரத்தை ஜபித்து மனத்தைத் தைரியப் படுத்திக்கொண்டான். பிறகு அதே மாலை மீண்டும் பரிமள கந்தகமுடைய புஷ்ப மாலையாய்விட்டது.
இதனை மேற்படி மஹரிஷியானவர் அந்த ராஜனிடத்திலே காண்பித்து "இல்லறத்தில் வாழ்ந்தால் இப்படிப்பட்ட தைரியத்துடன் வாழவேண்டும். மணமாலையே பாம்பாக வந்து விழுந்த போதிலும் மனம் பதறக்கூடாது. தைரியம் பாம்பைக்கூட மணமாலையாக மாற்றிவிடும். இவ்விதமான தைரியத்துடன் இல்லறத்தில் நிற்பார் வீடு பெறுவர், துறவறத்துக்கும் இதுவே வழி. ஆகவே இரண்டும் ஒன்றுதான்" என்று சொன்னார்.
வரலக்ஷ்மி நோன்பு சில தினங்களுக்கு முன் நடை பெற்றது. அதன் விவரம்: அன்றைத்தினம் பெண் மக்களெல்லாம் ஸ்நானம் செய்து விட்டு, பழைய பட்டுக் கயிறுகளைக் கட்டிக்கொண்டு நெற்றியில் பொட்டிட்டுக் கொண்டு கூந்தல்களில் புஷ்பங்களை அணிந்து கொண்டு, பார்க்கிற பார்வைக்கு வரலக்ஷ்மியைப் போலவே, அதிபக்தி விநயத்துடன் இருந்து சில பலகாரங்களையும் பழவர்க்கங்களையும் வைத்து அம்பாளுக்கு நைவேத்யம் செய்து, பெண் குழந்தைகளுக்கு விநியோகப்படுத்தி, அன்றிரவு பூர்த்தி செய்து, மறுதினம் காலையில் பௌர்ணமி பூஜை, சாப்பாடு செய்து அவர்களுக்குரிய இஷ்ட காம்யார்த்த சித்திபெற்று, ஜீவகோடிகள் அம்பாள் அனுக்ரஹத்தினால், அவள் திருவடியை முடிமீது சூட்டி, ஞானசித்தியை உணர்ந்து, ஸதா முக்தர்களாக வாழும் வழியைக் காட்டுகிறார்கள்.
--------
தத்துவம் - நவராத்திரி - 1
ஒன்பதிரவு பராசக்தியைப் பூஜை செய்கிறோம். லக்ஷ்மி என்றும், ஸரஸ்வதி என்றும், பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி. இவ்வுலகத்தை ஆக்கல், அழித்தல், காத்தல் என, மூன்று தொழில் நடத்துவது.
ஹிமாசலந் தொடங்கிக் குமரி முனை வரை, வேதத்தை நம்பும் கூட்டத்தார் எல்லாம் இந்தப் பூஜை செய்கிறோம். ஏழைகளாக இருப்போர் பராசக்திக்கு மலரையும் நீரையும் உள்ளத்தையும் கொடுத்து வலிமை பெறுகிறார்கள். செல்வமுடையோர் விருந்துகளும் விழாக்களும் செய்கின்றனர். பக்தி செய்யும் செல்வரும் உண்டு.
மஹாளய அமாவாஸ்யை கழிந்தது.
இருளும் ஒளியும் மாறி மாறி வருவது இவ்வுலக இயற்கை. பகலிலே பெரும்பாலும் ஒளி உண்டு; மேகங்கள் வந்து சூர்யனை மறைத்தாலொழிய; சில சமயங்களில் கிரஹணம் பிடிக்கும். அதையும் தவிர்த்து விட்டால், இரவிலே தான் ஒளியின் வேறுபாடுகளும், மறைவுகளும் அதிகப்படுகின்றன; பகல் தெளிந்த அறிவு;இரவென்பது மயக்கம். பகலாவது விழிப்பு, இரவாவது தூக்கம். மஹாளய அமாவாசை ஒழிந்து போய்விட்டது.
சக்தி: நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி. விக்கிரமாதித்யனும், காளிதாசனும் வணங்கிய தெய்வம். "உலகத்தார் இந்தப் பராசக்தியை நல்ல மழை அருள் புரியும். சரத்காலத்தின் முதல் ஒன்பதிரவும் "வணங்கிப் பூஜைகள் செய்யவேண்டும்" என்பது பூர்வீகர் ஏற்பாடு. மிகப் பயனுடைய காரியம். மேலான வழி. கும்பகோணம் சங்கரமடத்தில் இந்தப் பூஜை மிகவும் கோலாஹலமாக நடத்தப் போவதாகப் பத்திரிகையில் ஒரு தந்தி போட்டிருந்தது. சஹஜமான விசேஷம். தேசம் முழுவதும் [இப்படி] நடப்பது [நல்லது].சங்கர மடத்திலும் [எனக்கு] ஒரு விதமான ஆவல் உண்டானதால் தந்தியை வாசித்துப் பார்த்தேன். அந்தத் தந்தியிலே பாதி சாஸ்திரம். வர்த்தமானத் தந்திக்குள்ளே சாஸ்திரத்தை நுழைத்தது ஒரு விநோதம். ஆனால், அதிற்கண்ட சாஸ்திரம் உண்மையாக இருந்தது. நான் எதிர் பார்க்கவில்லை. எனவே தந்தியைப் படித்தபோது எனக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று.
கும்பகோணத்துத் தந்தி பேசுகிறது: இந்த பூஜைகளின் நோக்கம் உலக நன்மை. நவராத்திரிக் காலத்தில் யோகமாயை துர்க்கை, லக்ஷ்மி, ஸரஸ்வதி என்ற மூன்று வித வடிவங்கொண்டு, துஷ்டரை எல்லாம் அழித்து மனித ஜாதிக்கு மகிழ்ச்சி பெருகவைத்தாள். மனிதர் படும் துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டாக தேவி அவ்வாறு அவதாரம் செய்த காலம் முதல் இன்று வரை, பாரத தேசத்தில் எல்லாப்பாகங்களிலும் ஆரியர் இந்தத் திருவிழாவைக் கொண்டாடி வருகிறார்கள். தேவி உலகம் முழுவதிலும் பரவி இருக்கிறாள். ஒவ்வொரு தனிப் பொருளிலும் நிறைந்து நிற்கிறாள். இவளே மாயை, இவளே சக்தி; செய்பவளும,் செய்கையும், செய்கைப் பயனும் இவளே; தந்தையும் தாயும் இவள்; இவளே பரப்பிரம்மத்தின் வடிவம். இவள் காத்திடுக" என்பது தந்தி.
உண்மைதான். ஆனால், "தேவி அவ்வாறு அவதாரம் செய்த காலம் முதல்" என்ற வாக்கியம் மாத்திரம் கதை. தேவி எப்போதும் அந்த வடிவங்களிலே நிற்கிறாள். ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற முத்தொழிலும் எப்போதும் நடக்கின்றன. லோகஸம்ரக்ஷணை எப்போதும் செய்யப்படுகிறது. எப்போதும் ஆராதனை செய்யவேண்டும். சரத்காலத் துடக்கத்திலே பேரருளைக் கண்டு விசேஷ விழா நடத்துகிறோம். ''தவம், கல்வி, தெய்வத்தைச் சரண் புகுதல் இம்மூன்றும் கர்மயோகம் (கிரியாயோகம்)'' என்று பதஞ்சலி முனிவர் சொல்கிறார். லௌகிகக் கவலைகளாலே இம்மூன்று தொழிலையும் எப்போதும் செய்துகொண்டிருக்க முடியாமல் தடுக்கப்படும் சாமானிய ஜனங்கள் நவராத்திரி ஒன்பது நாள் இரவும் பகலும் மேற்கூறிய மூவகை நெறியில் நிலைபெறும் வண்ணமான விதிகள் ஆகமங்களிலே கூறப்பட்டன.
ஒன்பது நாளும் தியானம். கல்வி, தவம், இவற்றிலே செலவிடத் திறமையில்லாதோர் கடைசி ஒன்பதாம் நாள் மாத்திரமேனும் விரதம் காக்கவேண்டும்; இந்தப் பூஜையின் பொருள் மிகவும் தெளிந்தது.
சக்தியால் உலகம் வாழ்கிறது;
நாம் வாழ்வை விரும்புகிறோம்;
ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம்.
--------
தத்துவம் - நவராத்திரி - 2
ஒவ்வொருவனுக்கும் மூன்றுவிதச் சக்தி வேண்டும்:
1. அறிவு, 2. செல்வம், 3. தைரியம். இந்த மூன்றும் நமக்கு இஹலோகத்திலே கிடைக்கும்படியாகவும் இதனால் பரலோக இன்பங்களுக்கும் சாத்தியமாகும்படியாகவும், நாம் தெய்வத்தை வழிபடுகிறோம். முக்திக்கு, மாத்திரமே தெய்வத்தை நம்புவது சிலருடைய வழி; இஹலோக இன்பங்களுக்கும் தெய்வமே துணை என்று நம்பி, இன்பங்கள் வேண்டுமென்று தெய்வத்திடம் கேட்டுவாங்கிக் கொள்வது மற்றொரு வழி. சுந்தரமூர்த்தி நாயனாருக்குப் பரமசிவன் என்னவெல்லாம் செய்தார்? அர்சுனன் தனக்குச் சுபத்திரையை வசப்படுத்திக் கொடுக்கும்படி யாரிடத்தில் கேட்டான்?ஸ்ரீீகிருஷ்ணனிடத்திலே கேட்டான். ஸ்ரீகிருஷ்ணன் சுபத்திரையைக் கவர்ந்து செல்வதற்கு வேண்டிய உபாயங்கள் காட்டினார். ஆம், தெய்வம் எல்லாம் செய்யும்.
இஹலோகத்தில் எல்லாவிதமான இன்பங்களும் நமக்கு வேண்டும். அவற்றை வசமாக்குவதற்கு அவசியமான அறிவுத்திறனை நமக்குத் தரும்படி தெய்வத்தைக் கேட்கிறோம். "தெய்வமே, நான் தூங்குகிறேன். நீ எனக்கு மாம்பழம் கொடு" என்று கேட்கவில்லை. "தெய்வமே ! தெய்வமே! மாம்பழ விஷயத்தில் எனக்கு இத்தனை ருசி ஏற்படுத்திக் கொடுத்த தெய்வமே! உனக்குப் புண்ணிய முண்டு. மா விதை எங்கே அகப்படும்? ஒட்டு மாஞ்செடி எப்படி வளர்ப்பது?சொல்லு. பாடுபடச் சம்மதம்; காத்துக் கொண்டிருக்கச் சம்மதம். ஆனால் மாம்பழம் கொடுத்துத் தீரவேண்டும். நீ தானே இந்த ருசியை ஏற்படுத்தினாய்?" என்று கேட்கிறோம். இது நியாயமான கேள்வி. தெய்வம் உதவி செய்யும்.
விக்கிரமாதித்யன் வணங்கிய தெய்வம்; காளிதாஸனுக்குக் கவிதை காட்டிய தெய்வம்; பாரத நாட்டு மஹாஜனங்கள் இன்னும் தலைமையாகக் கொண்டாடும் தெய்வம்; ஸ்ரீ மந்நாராயண மூர்த்தியின் சக்தியாக விளங்கும் லக்ஷ்மி தேவதை; சிவபிரானுடைய வலிமையாகத் திகழும் பார்வதி, பிரமதேவன் தலைவியாகிய சரஸ்வதி; மூன்று மூர்த்திகள்; மூன்று வடிவங்கள்; பொருள் ஒன்று; அதன் சக்தி ஒன்று; பொருளும் அதன் சக்தியும் ஒன்றே. இங்ஙனம் ஒன்றாக விளங்கும் சக்தி என்ற தெய்வத்தை ஹிந்துக்கள் உபாஸனை செய்வதற்கு விசேஷப் பருவமாக இந்த நவராத்திரியின் காலத்தை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். காரணம் என்ன?
பராசக்தி மழையருள் புரியும் சரத்காலத்தின் ஆரம்ப மென்று கருதியா? சரத்காலம் நம் நாட்டில் ஒன்று போல எல்லாப் பகுதிகளிலும் தொடங்கவில்லை யாயினும், ஓரிடத்திலே தோன்றிய திருவிழா நாடு முழுவதும் பரவியிருக்கலாம்.
'மஹாளய அமாவாஸ்யை' என்பது யோகாநுபவத்தில் மரணத்திற்குப் பெயர். அதைத்தப்பிய புதிய உயிர் கொண்டவுடன், சேர்ந்தபடியாகப் பல நாள் பராசக்தியை இடைவிடாமல் உபாஸனை செய்ய வேண்டுமென்ற கொள்கையின் அறிகுறியாக இருக்கலாம். "கும்பகோணம் சங்கராச்சாரிய மடத்திலிருந்து பாரிகைகளுக்கு வந்த தந்தி ஒன்றிலே நவராத்திரி பூஜைக்குப் புராணப்படி முகாந்தரம் சொல்லப்பட்டிருக்கிறது. நவராத்திரி காலத்தில் தேவி (யோகமாயை) லக்ஷ்மி, ஸரஸ்வதி, துர்க்கை என்று மூன்று விதமாக அவதாரம் செய்து பல அசுரர்களை அழித்ததாகவும் அது முதல் வருஷந்தோறும் நமது தேசத்தில் இந்தத் திருவிழா நடந்து வருவதாகவும் மடத்தார் தந்தியில் விளக்கப்பட்டிருக்கிறது. இது புராண ஐதீகம். இதற்குப் பொருள் அத்யாத்மம். பராசக்தி எங்கும் இருக்கிறாள். எப்போதும் அவள் இருக்கிறாள். தொழிலே உலகம். அவளே உலகம். குழந்தைகளும் ஸாமான்ய ஜனங்களும் அவளைச் சிலையென்று நினைக்கிறார்கள். அவள் சிலையில்லை. உண்மையொளி. அது கோயிற் புறத்திலே மாத்திரம் இல்லை:- அகத்திலும் இருக்கிறது. கடல் அசைப்பது; பாதாளத்தின் கீழே மற்றொரு பாதாளம்; அதன் கீழே ஒன்று. அதன் கீழே ஒன்றாக எல்லையின்றிப் பரந்த திசை முழுதையும் கவர்ந்தது.
எப்படிப் பார்த்தாலும் ஆரம்பமில்லாமலும், எப்படிப் பார்த்தாலும் முடிவில்லாமலும் இருக்கும் அற்புத வஸ்து.
கோடானகோடி அண்டங்களை ஒரு சிறு மூக்கினால் உடைப்பது.
ஒரு சிறிய மலரின் இதழிலே வர்ணம் தீட்டுவதற்குப் பல்லாயிர வருடங்கள் இருந்து பழகும் நெடுநேர்மை கொண்டது; பெரிதும் சிறிதுமாகிய முதற்பொருள்; பராசக்தி.
இதனைத் தியானத்திலே நிறுத்துகிறோம். இதனை நாவிலே புகழ்ச்சி புரிகின்றோம். செய்கையில் இதனைப் பின்பற்றுகிறோம். நமது மதி தெய்வமாகின்றது. நமது நாவு புதிய வலிமையும் மஹிமையும் பெறுகின்றது. நமது செய்வினை தர்மமாகின்றது. ஒரே வார்த்தை; சக்தியை வேண்டினால் சக்தி கிடைக்கும். "கேட்டது பெறுவாய்" என்று யூத நாட்டு மரியம்மை பெற்ற கிருஸ்து சித்தர் சொல்லுகிறார்.
--------
2. காமதேனு
2.1 நம்பிக்கையே காமதேனு | 2.2 நம்பினார் கெடுவதில்லை |
2.3 திருநாவுக்கரசர் | 2.4 சில முயற்சிகள் |
2.5 ராமானுஜர் வெள்ளையுடை தரித்தது | 2.6 சிலுவை |
2.7 நம்பிக்கையின் முக்கிய லக்ஷணம் | 2.8 முஹம்மது நபி |
2.9 வாசக ஞானம் | 2.10 அமிர்தம் தேடுதல் |
2.11 துன்பத்தை நீக்குதல் விரைவிலே ஈடேறவில்லை | 2.12 தர்மம் |
காமதேனு - நம்பிக்கையே காமதேனு
இன்று ராமானுஜ தரிசனம் முக்கிய ஹிந்து தரிசனங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஆனால் ஆரம்பத்தில் அப்படி இல்லை. ராமானுஜ மதத்தைக் காக்கும் பொருட்டு ராமானுஜரின் முக்கிய சிஷ்யராகிய கூரத்தாழ்வான் கண்களைப் பறிகொடுக்கும்படியாக நேரிட்டது. இவருடன் பெரிய நம்பி என்ற யோகிக்கும் அதே தண்டனை ஏற்பட்டது. பெரிய நம்பி அப்போது கிழவர். கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு கொல்லையிலே பெரியநம்பி கண் போன வேதனையைப் பொறுக்க மாட்டாமல் பக்கத்தில் வேண்டியவர்கள் எவரும் இல்லாமல் கூரத்தாழ்வான் மடியில் படுத்துக் கொண்டு மஹா ஸந்தோஷத்துடன் உயிர் துறந்தார். கூரத்தாழ்வானோ ''தரிசனத்துக்காகத் தரிசனத்தை இழந்தேன். அது எனக்குப் பெரிய பாக்கியம'' என்று மகிழ்ச்சி கொண்டாடினார். தம்முடையகொள்கை நிலைபெறும் என்ற நம்பிக்கை அவர்கள் மனதில் உறுதியாக நின்றது.
----------
காமதேனு - நம்பினார் கெடுவதில்லை
சிவாஜி மஹாராஜா இளம்பிள்ளையாக இருந்தபோது மஹாராஷ்டிரம் என்னநிலைமையில் இருந்தது? சிவாஜி இறக்கும்போது என்ன நிலைமை? சிவாஜி துணிவினால் ராஜ்ய ஸம்பத்தை அடைந்தான். நம்பிக்கையினால் நெப்போலியன் ராஜா பிரான்ஸ் தேசத்தைக் கட்டியாண்டு ஐரோப்பா முழுவதிலும் தன்னுடைய ஆதிக்கத்தை நிறுத்தினான். நம்முடைய முயற்சியின் ஆரம்பத்தில் நம்மைப் பிறர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். பலர் துணை செய்ய மாட்டார்கள். ஆனால் நம்பிக்கையைக் கைவிடாமல் இருந்தால் காலக்கிரமத்தில் வெளியுதவிகள் தாமே வரும். ஆரம்பத்தில் நமக்கு நாமே துணை. எத்தனை இடையூறுகள் எவ்வளவு பெரிதாகி வந்தபோதிலும் எடுத்த காரியத்தை ஒரே உறுதியாக நடத்திக் கொண்டு போவதே ஆரிய லக்ஷணம். அவ்வாறு செய்யக்கூடியவனே மனிதரில் சிறந்தவன்.
நம்பினார் கெடுவதில்லை
நான்கு மறைத்தீர்ப்பு - இது
நான்கு மறைத்தீர்ப்பு.
-----------
காமதேனு - திருநாவுக்கரசர்
மனிதனுக்குப் பகை புறத்திலில்லை. நமக்குள்ளே சத்துருக்கள் மலிந்துகிடக்கிறார்கள். பயம், சந்தேகம், சோம்பல் முதலான குணங்கள் நம்மை ஐயம் அடைய வொட்டாமல் தடுக்கும் உட்பகைகளாம். இவை அனைத்துக்கும் ஒரே பெயர்: அதாவது, நம்பிக்கைக் குறைவு. இந்த ராக்ஷஸனை அழித்தாலொழிய நமக்கு நல்ல காலம் வராது. பகீரதன் கங்கையை வரவழைத்த கதையை இந்தக் காலத்தில் நாம் பொய்க் கதையாகச் செய்து விட்டோம். முன்னோர் அக்கதையின் உட்பொருளைக் கொண்டனர். நம்பிக்கையினால் ஆகாய கங்கையைப் பூமியில் வரவழைத்தார்களாம். எத்தனை பெரிய ஆபத்துக்கள் வந்து குறுக்கிட்ட போதிலும் அவற்றை நம்பிக்கையினால் வென்று விடலாம்.
''கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே''
----
காமதேனு - சில முயற்சிகள்
இக்காலத்திலே பலர் நமது பாஷைகளை ஒளிமிகச் செய்து பூமண்டலத்தார் வியக்கும்படி செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்கள். பலர் நமது பூர்வ சாஸ்திரங்களின் உண்மையை உலக முழுவதும் கேட்டு உஜ்ஜீவிக்கும்படி செய்யவேண்டுமென்று பாடுபடுகிறார்கள். பலர் நமது நாட்டுச் செல்வத்தை வெளியேற வொட்டாமலதடுக்க வழி தேடுகிறார்கள். பலர் ஹிந்து தேசத்துக்குத் தன்னாட்சி வேண்டுமென்று தொழில் செய்து வருகிறார்கள். பலர் ஆரிய வேதத்தைச் சரண்புகுந்து பூமண்டலம் வாழும்படி செய்யவேண்டுமென்று தீர்மானம் செய்திருக்கிறார்கள். இவ்வனைவருக்கும் வெற்றி உண்டு; நம்பிக்கை உண்டானால் வெற்றி உண்டு.
-------
காமதேனு - ராமானுஜர் வெள்ளையுடை தரித்தது
சோழனுடைய பயத்தாலே ராமானுஜமுனி ஸந்நியாசி வேஷத்தை மாற்றி ஸ்ரீீரங்கத்தைவிட்டுப் புறப்பட்டு நீலகிரிச் சாரலில் வேடர்களுடைய உதவியினால் தேனும் தினைமாவும் தின்று பசி தீர்த்துக்கொண்டு படாத பாடெல்லாம் பட்டு மைசூரபக்கத்திலே போய் வாழ்ந்தார். ''இனிமேல் ராமானுஜ கூட்டம் அதிகப்படாது; ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்துவிட்டோம்'' என்று ராஜா நினைத்தான். அநுபவத்தில் பார்த்தீர்களா? அந்த ராஜா ராமானுஜருடைய நம்பிக்கையைக் கணக்கிலே சேர்க்கவில்லை.
--------
காமதேனு - சிலுவை
யூதர்களை ரோம தேசத்தார் வென்று யூதநாட்டில் பிலாத்து ரோமன்ராஜாதிகாரியாய்விட்டான். இயேசு கிருஸ்து தெய்வத்தை நம்பி விடுதலையை முழக்கினார். யூதகுருக்களே அவருக்கு விரோதமாய் அன்னியனான அதிகாரியிடம் கோள் மூட்டிவிட்டார்கள். உள்ளூர் யோக்கியர்கள், வெளிநாட்டு யோக்கியர்கள் எல்லோருமாகச் சேர்ந்து கிருஸ்துவைச் சிலுவையில் அடித்துக் கொன்றார்கள்.'கிருஸ்து மதத்தையே கொன்றுவிட்டோம்' என்று அந்த மூடர்கள் நிச்சயித்தார்கள். இன்று கிருஸ்து மதம் உலக முழுவதையும் சூழ்ந்து நிற்கிறது. வருந்தினால் வாராதது ஒன்றுமில்லை.
--------
காமதேனு - நம்பிக்கையின் முக்கிய லக்ஷணம்
நம்பிக்கை உண்டானால் வெற்றி உண்டு. அந்த நம்பிக்கையினமுக்கிய லக்ஷணம் என்னவென்றால் விடாமுயற்சி. மனத்திற்குள் நிலைத்த நம்பிக்கை இருந்தால் செய்கை தடைப்படுமா?முயற்சி தூங்குமா? இடுக்கண் பயமுறுத்துமா? உள்ளம் சோருமா? ராமானுஜர் சோழநாட்டிலிருந்து போகும் காலத்தில் தம்பின்னே தம்மைப்பிடித்துச் செல்லும்பொருட்டு, குதிரைப்படை வருகிறது என்று கேள்விப்பட்டபொழுது, தம்முடன் வந்த சிஷ்யர்களிடம் சொல்லிய மந்திரம் நல்ல மந்திரம்:
'எனது கோல் ஆடும்பொழுது எமனும் கிட்ட வரமாட்டான்' என்று சொன்னார்.அதற்குப் பெயர் தான் நம்பிக்கை.
''கொடுமை செய்யும் கூற்றமும்
என்கோலாடி குறுகப் பெறா''.
காமதேனு - முஹம்மதுநபி
'பழைய பொய்ச் சிலைகளின் வணக்கத்தை ஒழித்து எங்கும் வியாபித்து நிற்கும் பிரம்மத்தையேதொழவேண்டும்? என்று முஹம்மது நபி அலகிவஸல்லாம் அவர்கள் ஒரு புதிய மதம் உண்டாக்கினார் என்ற கோபத்தால்,குராயிஷ் கூட்டத்தார் அவருடைய சிஷ்யர்களைப் பயமுறுத்தியும கொலை செய்தும் அடக்கிவிட்டு நபியையும் கொல்லவேண்டுமென்று சதிசெய்து கொண்டிருக்கையிலே, அந்த மஹான்மெக்கா நகரத்திலிருந்து தப்பி மெடீனா நகரத்திற்குச் செல்லும்போது பின்னே அவரைப் பிடிக்கும் பொருட்டாகக் குராயிஷ் குதிரைப் படை துரத்திக்கொண்டு வந்தது. நபியானவர் தம்மோடு வந்த ஒரே சிஷ்யருடன் அங்கு ஒரு புதரில் ஒளிந்திருந்தார். துரத்திவரும் குதிரைகளின் காலடி சமீபமாகக் கேட்டது. சிஷ்யன் பயந்துபோய், 'இனி என்ன செய்வது?' என்று தயங்கினான். அப்போது நபி, ''அப்பா, நான் அல்லாவின் தர்மத்தை உலகத்தில் நிலைநிறுத்தும் பொருட்டாக வந்திருக்கிறேன். என் காரியம் நிறைவேறும் வரை எனக்கு மரணம் இல்லை. என்னுடன் இருப்போர் பயப்படாமல் இருந்தால் அவர்களுக்கும் இல்லை'' என்று சொல்லி அபயதானம் செய்தார். ஆபத்து வரவில்லை. குதிரைப்படையோர் இடந்தெரியாமல் ஏமாறித் திரும்பினார்கள். முஹம்மது நபி பின்னிட்டுக் காலானுகூலம் பெற்று அந்த ராஜ்யத்துக்கெல்லாம் தாமே ராஜேஸ்வரராய், தமது தரிசனத்தை என்றும் அழியாமல் நிலைநிறுத்திச சென்றார். நம்பிக்கையே காமதேனு: அது கேட்ட வரமெல்லாம் கொடுக்கும்.
---
காமதேனு - வாசக ஞானம்
வியாபாரம், கைத்தொழில், ராஜாங்கச் சீர்திருத்தம், ஜனசமூகத் திருத்தம்முதலிய லௌகிக விவகாரங்கள எல்லாவற்றிலும், மனிதர் ஏறக்குறைய எல்லாத் திட்டங்களையும் உணர்ந்து முடித்துவிட்டனர். ஒரு துறை அல்லது ஓர் இலாகாவைப் பற்றிய ஸூக்ஷம தந்திரங்கள் மற்றொரு துறையில் பயிற்சி கொண்டோர் அறியாதிருக்கலாம். ஆனால், அந்த அந்த நெறியில் தக்க பயிற்சி கொண்ட புத்திமான்களுக்கு அதனை யதனைப் பற்றிய நுட்பங்கள் முழுமையும் ஏறக்குறைய நன்றாகத் தெரியும்.
பொதுவாகக் கூறுமிடத்தே. மனித ஜாதியார் அறிவு சம்பந்தப்பட்டமட்டில் மஹா ஸூக்ஷமமான பரம ஸத்தியங்களையெல்லாம் கண்டுபிடித்து முடித்துவிட்டனர். ஆனால் அறிவுக்குத் தெரிந்ததை மனம் மறவாதே பயிற்சி செய்ய வலிமை யற்றதாய் நிற்கிறது. அறிவு சுத்தமான பின்னரும், சித்தசுத்தி ஏற்பட வழி இல்லாமல் இருக்கிறது எனவே அறிவினால் எட்டிய உண்மைகளை மனிதர் ஒழுக்கத்திலே நடத்திக் காட்டுதல் பெருங் கஷ்டமாக முடிந்திருக்கிறது. ஆத்ம ஞானத்தின் சம்பந்தமாகக் கவனிக்குமிடத்தே, இந்த உண்மையைத் தாயுமானவர்,
''வாசக ஞானத்தினால் வருமோ ஸுகம் பாழ்த்த
பூசலென்று போமோ புகலாய் பராபரமே''
என்ற கண்ணியில் வெளியிட்டிருக்கிறார்.
இதன் பொருள் "வெறுமே வாக்களவாக ஏற்பட்டிருக்கும் ஞானத்தினால் ஆனந்தமெய்த முடியவில்லையே! என் செய்வோம்? பாழ்பட்ட மனம் ஓயாமல் பூசலிட்டுக் கொண்டிருக்கிறதே? இந்தப் பூசல் எப்போது தீரும்? கடவுளே, நீ அதனைத் தெரிவிப்பாய்" என்பதாம். இதே உண்மையை உலக நீதி விஷயத்தில் ஏற்கும்படி, திருவள்ளுவர்.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்''
என்ற குறளால் உணர்த்துகிறார்.
இதன் பொருள் 'வாயினால் ஒரு தர்மத்தை எடுத்துச் சொல்லுதல் யாவர்க்கும் சுலபமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அந்தச் சொல்லின்படி நடத்தல் மிகவும் துர்லபம்' என்பது
------
காமதேனு - வாசக ஞானம்
திருஷ்டாந்தமாக, 'ஆண்களும் பெண்களும் ஸமானமான ஆத்ம இயல்பும், ஆத்மகுணங்களும் உடையோராதலால், பெண்களை எவ்வகையிலும் இழிந்தவராகக்கருதுதல் பிழை' என்ற கொள்கை ஐரோப்பாவில் படிப்பாளிகளுக்குள்ளே மிகவும் ஸாதாரணமாகப் பரவியிருக்கிறது. ஆயினும், பெண்களுக்கு வாக்குச்சீட்டு ஸ்வதந்தரம் வேண்டும் என்று கேட்டால், அதைப் பெரும்பான்மையான ஐரோப்பிய "ராஜதந்திரிகளும் பண்டிதர்களும் எதிர்த்துப் பேசுவதுடன், அங்ஙனம் எதிர்ப்பதற்குப் பல போலி நியாயங்களையும் காட்டவும் துணிகிறார்கள்.
'விஷ்ணு பக்தியுடையோர் எந்தக் குலத்தோர் ஆயினும் எல்லா வகையிலும் ஸமானமாகப் போற்றுவதற்குரியர் என்பது ராமானுஜாசார்யருடைய பரம் சித்தாந்தம்'என்பதை நன்குணர்ந்த தற்காலத்து வைஷ்ணவர்கள் பிராமண சூத்ர பேதங்களை மற்ற வகுப்பினரைக் காட்டிலும் அதிகமாகப் பாராட்டுவது மாத்திரமன்றி, இன்னும் வடகலை தென்கலைச் சண்டைகளைக்கூட விடாமல் வீண் சச்சரவுகளில் ஈடுபட்டு உழல்கின்றார்கள்.
'எல்லாச் சரீரங்களிலும் நானே ஜீவனாக இருக்கிறேன்"என்று கண்ணன் கீதையால்உணர்த்திய உண்மையையும், "எல்லா உயிர்களினிடத்தும் தன்னையும் தன்னிடத்தே எல்லா உயிர்களையும் காண்பவனே காட்சியுடையவன்" என்று கண்ணபிரான் அதே கீதையில் சொல்லிய கொள்கையையும் வேதோப நிஷத்துக்களின் முடிவான தீர்மானம் என்று தெரிந்த ஹிந்துக்கள் உலகத்திலுள்ள மற்றெல்லா ஜனங்களைக் காட்டிலும், ஜாதி வேற்றுமை பாராட்டுவதில் அதிகக் கொடுமை செலுத்துகிறார்கள்.
''இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்குவது''
என்ற குறளின்படி, ''இனிய சொற்கள் சொல்வதினின்றும் நன்மைகள் விளைவதுகண்டும் மானிடர் ஒருவருக்கு ஒருவர் கொடுஞ் சொற்கள வழங்குவது மடமை'' என்பது உலகத்தில் சாதாரண அனுபவமுடையவர்களுக்கெல்லாம் தெரியும். அங்ஙனம் தெரிந்தும், கொடுஞ் சொற்களும் கோபச் செயல்களும் நீங்கியவர்களை உலகத்தில் தேடிப் பார்த்தாலும் காண்பது அரிதாக இருக்கிறது.
'மரணம் பாவத்தின் கூலி" என்று கிருஸ்தவ வேதம் சொல்வது எல்லாக் கிருஸ்தவர்களுக்கும் தெரியும். அப்படியிருந்தும், பாவத்தை அறவே ஒழித்த கிருஸ்தவர்கள் "எவரையும் காணவில்லை. ''நாமெல்லோரும் பாவிகள்'' என்பதைப் பல்லவி போல சொல்லிக்கொண்டு காலங் கடத்துகிறார்கள்.
இதென்ன கொடுமை! இதென்ன கொடுமை! இதென்ன கொடுமை! ஸாதாரணமாக வியாபாரம், விவசாயம் முதலிய காரியங்களிலே கூட மனிதர் நிச்சயமாக லாபங்கிடைக்கும் என்று தெரிந்த வழிகளை அநுசரிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இந்தப் பெரிய சக்தி ஹீனத்திற்கு மாற்றுக் கண்டு பிடிக்காமல் நாம் சும்மா இருப்பது நியாயமன்று.
----------
காமதேனு - வாசக ஞானம்
கண்ணைத் திறந்துகொண்டு படுகுழியில் விழுவது போல, மனித ஜாதி நன்மையை நன்றாய் உணர்ந்தும் தீமையை உதற வலிமையின்றித் தத்தளிக்கிறது.
இதற்கு என்ன நிவாரணம் செய்வோம்? தைரியந்தான் மருந்து. தற்கால அஸௌகர்யங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் மனிதர் உண்மை என்று கண்டதை நடத்தித் தீர்த்துவிட வேண்டும். அங்ஙனம் தைரியத்துடன் உண்மை நெறி பற்றி நடப்போரை மற்றவர்கள் புகழ்ச்சியாலும் ஸம்மானங்களாலும் ஊக்கப்படுத்த வேண்டும். கலி போதும்; வீண் துன்பங்களும் அநாவசியக்கஷ்டங்களும் பட்டுப் பட்டு உலகம் அலுத்துப்போய்விட்டது.
வாருங்கள், மக்களே! வாருங்கள், அண்ணன் தம்பிமார்களே! ஒருவரிருவர் நேர்மை வழியில் செல்ல முயல்வதில் பல இடர்கள் ஏற்படுகின்றன. அதனால் நேர்மை வழியில் செல்ல விரும்புவோர்க்கெல்லாம் அதைரியம் ஏற்படுகிறது. வாருங்கள்,உலகத்தீரே! கூட்டங் கூட்டமாக நேர்மை வழியில் புகுவோம்.
ஆண் பெண் ஸமத்வமே தர்மமென்று தெரிகிறதா?அப்படியானால் வாருங்கள்; மாதர்களை லக்ஷக்கணக்காக விடுதலை செய்வோம். ஜாதி பேதங்கள் பிரயோஜனம் இல்லை என்று தெரிந்ததா? நிற வேற்றுமைகளும் தேச வேற்றுமைகளும் உபயோகம் இல்லாதன என்று தெரிந்ததா? நல்லது, வாருங்கள். கோடிக்கணக்காக, ஸமத்வ நெறியிலே பாய்ந்து விடுவோம். பழைய கட்டுகளை லக்ஷக்கணக்கான மக்கள் கூடி நின்று தகர்ப்போம்.
''அன்பே இன்பம் தரும். பகைமை அழிக்கும'' என்று தெரிந்தோமோ? நல்லது, எழுங்கள், கோடிக்கணக்கான மானிடர் எங்கும், எப்போதும், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தத் தொடங்குவோம். கலியை அழிப்போம். சத்யத்தை நாட்டுவோம்.
----------
காமதேனு - அமிர்தம் தேடுதல்
''காக்க நின்னருட் காட்சியல்லாலொரு போக்குமில்லை.'' --தாயுமானவர்.
பல வருஷங்களின் முன்னே தெரு வழியாக ஒரு பிச்சைக்காரன் பாடிக்கொண்டு வந்தான்.
'தூங்கையிலே வாங்குகிற மூச்சு-அது
சுழிமாறிப் போனாலும் போச்சு'
இந்தப் பாட்டைக் கேட்டவுடனே எனக்கு நீண்ட யோசனை உண்டாகி விட்டது. என்னடா இது! இந்த உடல் இத்தனை சந்தேகமாக இருக்கும்போது இவ்வுலகத்தில் நான் என்ன பெருஞ் செய்கை தொடங்கி நிறைவேற்ற முடியும்?ஈசன் நம்மிடத்தில் அறிவை விளங்கச் செய்கிறான். அறிவே தமது வடிவமாக அமைந்திருக்கிறான். அறிவு, இன்பத்தை விரும்புகிறது. அளவில்லாத அழகும் இன்பமும் கொண்ட உலகமொன்று நம்மோடு இருக்கிறது. எப்போதும் இவ்வுலகம்இன்பம். இந்த உலகம் கவலையற்றதாகும்; இதிலே அணுவிலும் அணுவொக்கும் சிறிய பூமண்டலத்தின் மீது தான் நம்மால் ஸஞ்சரிக்க முடிகிறது. இதுபோல் கணக்கில்லாத மண்டலங்கள் வானவெளியிலே சுழல்கின்றன. அவற்றின் இயல்பையும் நாம் அறிவினாலே காண்கிறோம். அவற்றிலே ஒரு பகுதியின் வடிவங்களைக் கண்ணாலே தூரத்திலிருந்தே பார்க்கிறோம். இவ்வளவில் எங்கே பார்த்தாலும் ஒரே அழகுமயமாக இருக்கிறது. நமது பூமண்டலத்திற்கு வான் முழுதும் ஒரு மேற்கட்டி போலத் தோன்றுகிறது. இடையெல்லாம் ஒரே தெளிவான வெளி, ஸூரியன் செய்கிற ஆயிர விதமான ஒளியினங்கள், மலை, காடு, நதி, கடல் - அழகு.
தவிரவும், எதைத் தொட்டாலும் இன்பமும் துன்பமும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் நாம் "அறிவினாலே பொருள்களின் துன்பத்தைத் தள்ளி இன்பத்தை எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர், குளித்தால் இன்பம்; குடித்தால் இன்பம்; தீ, குளிர் காய்ந்தால் இன்பம்; பார்த்தாலே இன்பம்; மண், இதன்விளைவுகளிலே பெரும்பான்மை இன்பம்,இதன் தாங்குதல் இன்பம்; காற்று இதைத் தீண்டினால் இன்பம்; மூச்சிலே கொண்டால் இன்பம்; உயிர்களுடனே பழகினால் இன்பம்; மனிதரின் உறவிலே அன்பு இருந்தால் இன்பக் கட்டி. பின்னும் இவ்வுலகத்தில், உண்ணுதல் இன்பம். உழைத்தல் இன்பம்; உறங்கல் இன்பம்; ஆடுதல் இன்பம்; கற்றல், கேட்டல், பாடுதல், எண்ணுதல் அறிதல்-எல்லாம் இன்பந்தான்.
---------
காமதேனு - துன்பத்தை நீக்குதல் விரைவிலே ஈடேறவில்லை
ஆனால் இன்பங்களெல்லாம் துன்பங்களுடனே கலந்திருக்கின்றன. துன்பங்களை அறிவினால் வெட்டி எறிந்து விட்டு இன்பங்களை மாத்திரம் சுவை கொள்ளவேண்டுமென்று ஜீவன் விரும்புகிறது. துன்பங்களை வெட்டிஎறியத் திறமைகொண்ட அறிவும் உறுதியும் வேண்டுமானால்,அது எளிதில் முடிகிற காரியமாகத் தோன்றவில்லை. பெரியபெரிய கஷ்டங்கள் பட்டபிறகுதான், சிறிய உண்மைகள்புலப்படுகின்றன. நம்மைச்சுற்றி இன்பக் கோட்டைகள் கட்டிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொருவனுக்கும் இருக்கிறது. மஹத்தான அறிவு வேண்டும். அழியாத நெஞ்சுறுதி வேண்டும். கல்விகள் வேண்டும். கீர்த்திகள் வேண்டும். செல்வங்கள் வேண்டும். சூழ்ந்திருக்கும் ஊரார் தேசத்தார் உலகத்தார் எல்லோரும் இன்பத்துடன் வாழும் படி நாம் செய்யவேண்டும். நல்லாசைகள் பெரிது பெரிதாக வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆசைகள நிறைவேற வேண்டுமானால், பலமான அடிப்படை போட்டு மெல்ல மெல்லக் கட்டிக்கொண்டு வரவேண்டும். நிலை கொண்ட இன்பங்களை விரைவிலே உண்டாக்குதல் சாத்தியமில்லை. ஏழையாக இருப்பவன் பெரிய செல்வனாக வேண்டுமானால் பல வருஷங்கள் ஆகின்றன. கல்வியில்லாதவர் கற்றுத்தேறப் பல வருஷங்கள் ஆகின்றன. உலகத் தொழில்களிலே தேர்ச்சியடைய வேண்டுமானால் அதற்குக் "காலம் வேண்டும். ஆத்ம ஞானம் பெறுவதற்குக் காலம் வேண்டும். 'பொறுத்தவன் பூமியாள்வான்.''பதறின காரியம் சிதறும்' இடையே குறுக்கிடும் மரணம். இங்ஙனம் இன்பங்களின் தேட்டத்தில் நம்மாலஇயன்ற வரையில் இடைவிடாமல் முயற்சி செய்துகொண்டு நாம் காலத்தின் பக்குவத்துக்காகக் காத்திருக்கும்படி நேரிடுகிறது இதனிடையே மேற்படி பிச்சைக்காரன் பாட்டு வாஸ்தவமாய் விட்டால் என்ன செய்வது? தூங்கையிலே வாங்குகிற மூச்சு, அது சுழிமாறிப் போனாலும் போச்சு. என்ன ஹிம்ஸை இது? நூறு வயதுண்டு என்பதேனும் நல்ல நிச்சயமாக இருந்தால் குற்றமில்லை. நூறு வருஷங்களில் எவ்வளவோ காரியம் முடித்து விடலாம். ''அடுத்த நிமிஷம் நிச்சயமில்லை'' என்று தீர்ந்துவிட்டால் எதைக் கொண்டாடுவது? இது கட்டிவராது. எப்படியேனும், தேகத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும். நமது காரியம் முடிந்த பிறகுதான் சாவோம்; அதுவரை நாம் சாக மாட்டோம். நம் இச்சைகள், நமுடைய தர்மங்கள் நிறைவேறும்வரை நமக்கு மரணமில்லை.
----------
காமதேனு - தர்மம்
"ஹிந்துஸ்தான் ரெவ்யூ" என்று அலஹாபாத்தில் பிரசுரமாகும் மாதப் பத்திரிகையில் ஸ்ரீீ வாடியா என்பவர் ''ஒழுக்கம்'' என்பது பற்றி மிகவும்நேர்த்தியான லிகிதம் "எழுதியிருக்கிறார். அதில் அவர் சில ரஸமான கேள்விகள் கேட்கிறார்.அவருடைய வசனங்களை முழுதும் மொழி பெயர்க்காமல் அந்தக் கேள்விகளின் ஸாரத்தை இங்கே சொல்லுகிறேன்:
'தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் போரென்று ஸாமான்யர் சொல்லுகிறார்கள். சில சமயங்களில் தர்மங்களே ஒன்றுக்கொன்று முட்டுகின்றன. ஒரு தந்தை தன் மகனைக் கொலைத்தண்டனையிலிருந்து மீட்கும் பொருட்டாய்ச் சாட்சி சொல்லுவதாக வைத்துக்கொள்வோம். அவனுடைய செய்கையை எவ்விதமாகத் தீர்மானஞ் செய்வோம்? மகனைக் காப்பது தந்தையின் கடமை. ராஜ்யத்தில் நீதி பரிபாலனத்திற்கு, தான் துணை புரிவதும் கடமை. இரண்டும் தர்மம். ஆனால் ஒன்றுக்கொன்று முட்டுகின்றன. தவிரவும், பூர்வசரித்திரங்களை ஆராய்ச்சி செய்யுமிடத்தில், யூனியுஸ் புரூத்தஸ் என்ற ரோம தேசத்தான் தேசபக்தியின் மிகுதியால் தன் சொந்த மகனைக் கொன்றான். மார்க்குஸ் புரூத்தஸ் அதே காரணத்தைச் சொல்லி யூலியுஸ் கேஸரைக் கொன்றான். பதிவிரதை நோன்பு பெரிதென்று கருதி லூக்ரேஸியா தற்கொலை செய்துகொண்டாள்; ஸீதை ராமனுடைய ஸந்தேக நிவர்த்திக்காக நெருப்பிலே விழத் துணிந்தாள். ஹிந்து மதத்தைப் புதுப்பிக்க வேண்டுமென்றஅவாவினால் சிவாஜி அப்ஜுல்கானைக் கொலை செய்தான். தர்மங்களுக்குள்ளே பரஸ்பர முட்டுப்பாடு அவசியம் ஏற்படத்தான் செய்கிறது. தர்மசாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொண்டால் இரண்டு பக்கமும் பேசுகிறது. இதற்குத் தீர்ப்பு என்ன'
மேலும், 'ஒழுக்கம் என்ற சொல்லுக்கே பொருள் சில இடங்களில் சரியாக வழங்கவில்லை' என்று அவர் சொல்லுகிறார். ஒழுக்கத்திற்குப் பணிவு, கீழ்ப்படிதல் அவசியமென்று சிலர் சொல்லுகிறார்கள். சரித்திரத்தில் மேன்மை கொண்ட பெரியோர்களைக் கருதுவோம். புராதன உலகத்தில் அலெக்ஸாந்தர், யூலியுஸ்கேஸர், ஹானிபால் என்பாரும், இங்கிலாந்தில் க்ராம்வெல், சேதாம் என்பாரும், நெப்போலியன். பிஸ்மார்க், அக்பர், சிவாஜி, ஹைதர் அலி முதலிய சக்திமான்களும், இலக்கியத்தில் மில்டனும், கெத்தேயும் மிகுந்த கீழ்ப்படிவுள்ள குணத்துடன் இருக்கவில்லை. தன்னம்பிக்கை அவர்களிடம் பரிபூரணமாக இருந்தது. ?நமது காலத்தில் நாம் மகத்தான காரியங்கள் செய்வோம்; இளைக்க மாட்டோம்: பின் "வாங்கமாட்டோம்" என்று தீவிரமாக வேலை செய்தார்கள்;சரித்திரத்தின் நாயகராயினர். நீதி சாஸ்திரம் இன்னும் நேரேவகுத்தாகவில்லை.
'அட போ. பழமொழிகளை நம்பி ஒழுக்கத்தை நடத்துவோமென்று நினைப்பதும் பயனில்லை' என்று மேற்படி வாடியா சொல்லுகிறார். 'பதறின காரியம் சிதறும என்பதாக ஒரு பழமொழி சொல்லுகிறது. 'சோற்றுக்கு முந்திக்கொள' என்று மற்றொரு பழமொழி சொல்லுகிறது. எந்தப் பழமொழியைநம்பலாம்? 'ஒழுக்கமாவது மனோதைரியம், இஷ்டத்தைக் கைவிடாத மேன்மைக் கொள்கை; மற்றதெல்லாம் அதற்கிணங்க வைத்துக்கொண்டால் அதுவே சரியான தீர்ப்பு' என்று ஸ்ரீவாடியா சொல்கிறார்.
கடைசியாகத் தம்முடைய முடிவை ஒருவிதமாக மேற்படி லிகித கர்த்தா காட்டுகிறார்:
'ஆரம்பத்தில் சொல்லியபடி பொய்ச் சாக்ஷி கூறி மகனுயிரை நீதி வஞ்சனையால் மீட்கக் கருதிய பிதாவினுடைய திருஷ்டாந்தத்தை எடுப்போம். அவன் கேவலம் தன்னுடைய குடும்ப தர்மமே உயர்வென்று நினைக்காமல் லோகதர்மமே மேலென்று நினைத்து அதன்படி உண்மை கூறியிருந்தால், மகனுயிர் போய்விடலாம். நெஞ்சு தகரலாம், மானம் அழியாமலும் தர்ம ஸம்பத்துக்கு வழியாகவும் இருக்கும' என்பது மேற்படி லிகித ஸாரம்.
---------
3. உண்மை
3.1 ரத்தினக் களஞ்சியம் | 3.2 முடிவுரை |
3.3 நம்பிக்கை | 3.4 தைரியம் |
3.5 உயிரின் ஒலி | 3.6 புனர்ஜன்மம் (1) |
3.7 பாரத ஜாதி | 3.8 ஆர்ய ஸம்பத்து |
3.9 இடையில் நமக்கு நேர்ந்த கேடு | 3.10 இடைக்காலத்து ஸங்கீதம் |
3.11 மறுபிறப்பு |
உண்மை - ரத்தினக் களஞ்சியம்
பூமண்டலத்தில் வெவ்வேறு தேசங்களில் வெவ்வேறுகாலங்களிலே பிறந்து, மனுஷ்ய ஜாதியாருக்கு ஞானதானம் செய்தசில பெரியோரின் வசனங்களை இங்கே கோத்தெழுதுகிறேன்.தயவுசெய்து சிரத்தையுடன் படிக்கும்படி தமிழ்நாட்டு மஹாஜனங்களை வேண்டுகிறேன்.
தெலுங்கு தேசத்து ஞானியாகிய வேமன்ன கவிசொல்லுகிறார்:
''கல்லைக் குவித்துப் பெரிய கோவில்கள் ஏன்கட்டுகிறீர்கள் ? தெய்வம் உள்ளுக்குள்ளே இருப்பதை அறியாமல், வீணாக ஏன் தொல்லைப்படுத்துகிறீர்கள் ?''
ஸ்வாமி விவேகானந்தர்:- ''ஒவ்வொரு மனிதனுடையஅறிவிலும் பரமாத்மா மறைந்து நிற்கிறது. வெளியுலகத்தையும்உள்ளுலகத்தையும் வசப்படுத்தி உள்ளே மறைந்திருக்கும் தெய்வத்தை வெளிப்படுத்துவதே நாம் செய்யவேண்டிய காரியம்.செய்கை, அன்பு, யோகம், ஞான இவற்றினால் அந்தப் பொருளைஅடைந்து விடுதலை பெற்று நில்லுங்கள். தர்மம் முழுதும்"இஃதேயாம். மற்றப்படி மதங்கள், கொள்கைகள், கிரியைகள்,சாஸ்திரங்கள், கோயில்கள், ஆசாரங்கள் எல்லாம் இரண்டாம்பக்ஷமாகக் கருதத்தக்க உபகரணங்களேயன்றி வேறில்லை'.
அமெரிக்கா தேசத்து மஹா வித்வானும் ஞானியுமாகியஎமெர்ஸன் சொல்லுகிறார்:
'எவன் வந்தாலும் சரி, அவனிடமுள்ள தெய்வத்தைநான் பார்ப்பதற்குத் தடையுண்டாகிறது. ஒவ்வொருவனும் தன்னுள்ளேயிருக்கும் திருக்கோயிலின் கதவுகளை மூடிவைத்துவிட்டு மற்றொருவனுடைய தெய்வத்தையும், மற்றொருவனுக்குவேறோருவன் சொல்லிய தெய்வத்தையும் பற்றிப் பொய்க்கதைகளை என்னிடம் சொல்ல வருகிறான்.'
த்ஸென்-தஸே-த்ஸுங் என்ற சீன தேசத்து ஞானிசொல்லுகிறார்:-
'பழைய காலத்திலிருந்து வந்ததென்று கருதி, ஒரு மதம் உண்மையென்பதாக நிச்சயித்து விடலாகாது. உண்மை இதற்கு நேர்மாறானது. மனித ஜாதி நாளாக நாளாக வாழ்க்கையின் உண்மை"விதிகளை நன்றாகத் தெரிந்து கொள்ளுகிறது நமது பாட்டன்மாரும்பூட்டன் மாரும் நம்பிய விஷயங்களையே நாமும் நம்பவேண்டுமென்ற விஷயமானது, குழந்தையாக இருக்கும்போதுதைத்த உடுப்புக்களையே பெரியவனான போதும்போட்டுக்கொள்ள வேண்டுமென்பதற்கு ஒப்பாகும்.'
மேற்கூறிய எமெர்ஸன் பண்டிதரின் சிஷ்யரும் நல்லஞானியுமான தோரோ சொல்லுகிறார்:-
'என்ன ஆச்சரியம்! உண்மையின் பிரகாசங்களில் நமதுகாலத்துக்குப் பயன்படாத பழையனவற்றை உலகம் ஒப்புக் கொள்ளுகிறது. இப்போது புதிய ஞானிகள் கண்டு சொல்லும் உண்மைகளை வீணாக மதிக்கிறது; சிற்சில சமயங்களில்பகைக்கவும் செய்கிறது. என்ன ஆச்சரியம்! '
ராமகிருஷ்ண பரமஹம்ஸர்:-
'ஆச்சரிய சித்திகள் காட்டுவதாகச் சொல்லும் மனிதர் இருக்குமிடத்துக்குப் போக வேண்டாம். அவர்கள் உண்மைநெறியினின்றும் தவறிவிட்டார்கள்.'
ருஷியா தேசத்து ஞானியாகிய டால்ஸ்டாய் (தோல்ஸ் தோய்):
---------
உண்மை - முடிவுரை
எனவே, எல்லா மதங்களும் உண்மைதான்: ஒருமதமும் முழு உண்மையன்று. ஆதலால் மதப்பிரிவுகளைக் கருதிமனிதர் பிரிந்துவிடக்கூடாது. எல்லா மதஸ்தரும் ஒரேதெய்வத்தைத்தான் வணங்குகிறார்கள். லௌகிக விஷயங்களைப்போலவே மத விஷயங்களிலும் ஒப்பு, உடன் பிறப்பு, விடுதலைமூன்றும் பாராட்ட வேண்டும்.
-------------
உண்மை - நம்பிக்கை
மயிலாப்பூரில் ஸ்ரீ கலவல கண்ணன் செட்டியார்ஏற்படுத்திய புதிய ஸம்ஸ்க்ருத கலாசாலையின் க்ருஹப் பிரவேசத்தை ஒட்டி நீதிப்ரவீண ஸ்ரீ சுப்பிரமணிய அய்யர்செய்த ஆசி வசனங்களிடையே, ராமானுஜா சார்யருடையமகிமையைப்பற்றிச் சில வார்த்தைகள் சொன்னார். ஸ்ரீமான்நீதிமணி அய்யர் பிரம்மவேதாந்தியாகையால் இவருக்குத்துவைதம், விசிஷ்டாத்து வைதம், அத்வைதம், என்ற மூன்றுகட்சியும் ஸம்மதம். ஸத்யம் ஒன்று; அதனை ஆராதனைசெய்யும் வழிகள் பல; அத்வைத ஸ்தாபனம் செய்தசங்கராச்சார்யரே ஷண்மத ஸ்தாபனமும் செய்ததாகஅவருடைய சரித்திரம் சொல்லுகிறது.
பக்தியின் பெருமையை உலகத்துக்கு விளங்கக்காட்டிய மஹான்களிலே ராமானுஜாசாரியார் ஒருவர்; பக்தியாவதுதெய்வத்தை நம்புதல்; குழந்தை தாயை நம்புவது போலவும்,பத்தினி கணவனை நம்புவது போலவும், பார்த்தபொருளைக் கண்"நம்புவது போலவும், தான் தன்னை நம்புவது போலவும்தெய்வத்தை நம்பவேண்டும். இரவிலும் பகலிலும், இன்பத்திலும்துன்பத்திலும், தொழிலிலும் ஆட்டத்திலும், எப்போதும் இடைவிடாமல் நெஞ்சம்தெய்வ அருளைப்பற்றி நினைக்க வேண்டும்.நோய் வந்தால், அதனைத் தீர்க்கும்படி தெய்வத்தைப் பணியவேண்டும். செல்வம் வேண்டுமானால், தெய்வத்தினிடம் கேட்கவேண்டும். கல்வி, அறிவு, புகழ், ஆயுள் முதலிய எல்லாமங்களங்களையும் தெய்வத்தினிடம் உண்மையுடன் கேட்டால்அது கொடுக்கும். தெய்வம் கொடுக்காவிட்டாலும் அதை நம்பவேண்டும். கேட்டவுடனே கொடுப்பது தெய்வத்திற்கு வழக்கமில்லை. பக்தி பக்குவமடைந்த பிறகுதான் கேட்ட வரம்உடனே கிடைக்கும். அதுவரை தாமஸங்கள் உண்டாகும். இதுகர்ம விதி. ''அடுத்து முயன்றாலும் ஆகுநாளன்றி எடுத்தகருமங்கள் ஆகா''. எனவே,நாம் தெய்வத்தினிடம் கேட்ட பயன்கைகூடுவதற்கு எத்தனை காலமான போதிலும், அதைரியப்படாமல்,தெய்வபக்தியையும் அதனாலுண்டாகும் ஊக்கத்தையும்முயற்சியையும் துணையாகக் கொண்டு நடக்கவேண்டும். விதியின்முடிவுகளைத் தெய்வபக்தி வெல்லும். இந்த உலகம் முழுமைக்கும்ஈசனே தலைவன். அவனும் பக்தர்களுக்கு வசப்பட்டவன். பக்தன்எது கேட்டாலும் கைகூடும். நம்பு; கேள். ஓயாமல் தொழில் செய்துகொண்டிரு. பயனுக்கு அவசரப்படாதே. தெய்வம் நிச்சயமாக வரம்கொடுக்கும். தெய்வம் பிரஹ்லாதனை ஹிரண்யனிடமிருந்து காத்தது."முதலை வாயிலிருந்து யானையை விடுவித்தது. பாஞ்சாலியின்மானத்தைக்காத்தது. தெய்வம் விக்கிரமாதித்யனுக்கும்,காளிதாஸனுக்கும், சிவாஜி ராஜாவுக்கும், நிகரில்லாத வெற்றியும் தீராதபுகழும் கொடுத்தது. இவ்விதமான தெய்வ பக்தியை ராமாநுஜர் மனிதருடைய இஹபரவாழ்வுக்கு முதல் ஸ்தானமாகச் சொன்னார்.ஆழ்வார்களுடைய பாட்டில் விடுதலை யொளி நிற்பதுகண்டு,அவற்றை வேதம் போல் கருதவேண்டுமென்று போதனை செய்தார்.
ஆழ்வார்களுடைய குலம் நானாவிதம்;அப்படியிருந்தும் அவர்களைக் கோயிலில் வைத்துப் பூஜைசெய்யலாமென்று ராமாநுஜர் நியமித்தார். முற்காலத்தில்பிராமணர் இதர ஜாதியாரை இழிவாக வைத்துக் கெடுத்தார்களென்றும், ஞானத்துக்குத் தகாதவரென்று சொல்லி அடிமைப்படுத்தினார்களென்றும் பொய்க்கதைகள் சொல்லி ஹிந்துதர்மத்தை அழிக்க விரும்புகிற கிறிஸ்துவப் பாதிரிகளும்அவ்விடத்து, சிஷ்யர்களும் ராமாநுஜாசாரியர் பிராமணர்என்பதை அறிய மாட்டார் போலும். சூத்திரராகிய திருக்கச்சிநம்பியை ராமாநுஜர் குருவாகக்கொண்டு அவருடையஉச்சிஷ்டத்தை உண்ணத் திருவுளங் கொண்டார். திருநாராயணபுரத்தில் பறையர் ஒருசமயம் கோயிலுக்குள் வரலாமென்றுஸ்ரீராமாநுஜர் நியமித்தருளிய முறை இன்றைக்கும் நடந்துவருகிறது.
இப்படிப்பட்ட மனுஷ்யர்களுடைய தர்மத்தைஇக்காலத்தில் வளரும்படி செய்யவேண்டுமென்ற நோக்கத்துடன்ஸ்ரீ கண்ணன் செட்டியார் ஏற்படுத்தியிருக்கும் கலாசாலையில்,பிற மதங்களும் உண்மையென்ற சமரஸ ஞானத்தை ஊட்டத்தவறலாகாது. இந்த ஸமரஸ ஞானம் இல்லாவிட்டால் எந்தச்சித்தாந்தமும் நாளடைவில் பொய்யாகவும், குருட்டுநம்பிக்கையாகவும், வீண் அலங்காரமாகவும் முடிந்து ஜனங்களை "மிருகங்களைப் போலாக்கிவிடும். வேத தர்மம் ஒன்று. அதில்ராமாநுஜர் தர்மம் ஒரு கிளை. பாஷ்ய விசாரணை நல்லது.உண்மையான பக்தியே அமிர்தம். எல்லா உயிர்களிடத்திலும்நாராயணன் விளங்குவது கண்டு, அந்த ஞானத்தாலே கலியைவென்று தர்ம ஸ்தாபனம் செய்வதற்குள்ள பயிற்சி மேற்படிகண்ணன் செட்டியார் கலாசாலையிலும், அதுபோன்று எல்லாப் பாடசாலைகளிலும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தால், தேசம்மறுபடி மேன்மையடையும். இது கைகூடும் வண்ணம் பராசக்திஅருள் செய்க.
----------
உண்மை - தைரியம்
நமது முன்னோர்களும் அவர்களைப் பின்பற்றிநாமுங்கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும்ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத்தெய்வபாஷை என்று சொல்வது விளையாட்டன்று. மற்றஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்றுசொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடையபாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா?அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷையென்கிறோம்.
அந்தப் பாஷையில் தைரியம் என்பதோர்சொல்லுண்டு தீரனுடைய இயற்கை. தைரியம். தீரன் என்றவார்த்தையின் தாதுப் பொருளைக் கவனிப்போமானால்"அறிவுடையவன் என்ற அர்த்தமாகும். துணிவுடையவனுக்கும்அந்தப் பாஷையிலே அதுவே பெயராக வழங்கப்படுகிறது.எனவே 'தைரியம்' என்ற சொல் அறிவுடைமை யென்றும்துணிவுடைமையென்றும் இருவித அர்த்தங்கள் உடையது.இங்ஙனம் இவ்விரண்டு கருத்துக்களுக்கும் ஒரே சொல்லைவழங்குவது அந்த பாஷையின் பெருமைக்குள்ள சின்னங்களிலே ஒன்றாகும்.
உலகத்தில் வேறு எந்தப் பாஷையிலும்மேற்கூறிய இரண்டு கருத்துக்களையும் சேர்த்துக் குறிப்பிடக்கூடிய ஒரே பதம் கிடையாது. எந்த நாட்டினரைக் காட்டிலும்அதிகமாக யதார்த்தங்களைப் பரிசோதனை செய்து பார்த்தமஹான்கள் வழங்கிய பாஷையாதலால், அந்தப் பாஷையிலே இவ்விரண்டு பொருள்களுக்கும் ஒரே பதம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து தெரியக்கூடியது யாதென்றால்,துணிவுள்ளவனையே அறிவுள்ளவனென்பதாக நமதுமுன்னோர்கள் மதிக்கிறார்கள். எடுத்ததற்கெல்லாம் அஞ்சும்இயல்புடைய கோழையொருவன் தன்னைப் பலசாஸ்திரங்கள்கற்றவன் என்றும் அறிவாளியென்றும் சொல்வானானால்,அவனை நம்பாதே! அவன் முகத்தை நோக்கிக் காறியுமிழ்ந்துவிட்டு, அவனிடம் பின்வருமாறு சொல்:- ''?அப்பா, நீ ஏட்டைத்துளைக்கும் ராமபாணப் பூச்சியைப்போல், பல நூல்களைத் துளைத்துப் பார்த்து ஒரு வேளை வாழ்நாளைவீணாக்கி யிருக்கக்கூடும். ஆனால் அச்சம் இருக்கும் வரை நீஅறிவாளியாகமாட்டாய். அஞ்சாமைக்கும் அறிவுக்கும் நமதுமுன்னோர்கள் ஒரே சொல்லை உபயோகப்படுத்தியிருக்கிறார்கள்.அதை நீ கேள்விப்பட்டதில்லை போலும்!'''
ஆம், அச்சமே மடமை. அச்சமில்லாமையே அறிவு.விபத்துக்கள் வரும்போது நடுங்குபவன் மூடன். அவன்எத்தனை சாஸ்திரம் படித்திருந்தாலும் மூடன்தான். விபத்துக்கள்வரும்போது, எவன் உள்ளம் நடுங்காமல் துணிவுடன்"அவற்றையெல்லாம் போக்க முயற்சி செய்கிறானோ, அவனேஞானி. ''ஹரி: ஓம்'' என்று எழுதத் தெரியாத போதிலும் அவன்ஞானிதான்.
சிவாஜி மஹாராஜா தமது சொந்தப்பிரயத்தனத்தினாலும்,துணிவாலும், புத்தி கூர்மையாலும் அவுரங்கசீப்பின்கொடுங்கோன்மையை அழித்து, மகாராஷ்டிரம் ஏற்படுத்திதர்மஸ்தாபனம் செய்தார். அவர் ஏட்டுப்படிப்பில் தேர்ந்தவர்அல்லர். இந்தக் காலத்தில் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் படித்துப் பரீக்ஷைகள் தேறி 15 ரூபாயைக் கொண்டு பிழைப்பதற்காகத் தமது தர்மத்தையும் ஆத்மாவையும் விலைப்படுத்தக் கூடிய மனிதர்கள், ஆயிரக் கணக்கான சுவடிகள் படித்துக் கண்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சிவாஜிக்கு மகாராட்டிர ராஜ்யம் லாபம்.இவ்விருவரிலே யார்சிறந்தவர்,இவ்விருவரிலே யார் அறிஞர்?
பாரதவாசிகளாகிய நாம் இப்போது புனருத்தாரணம்பெறுவதற்குக் கல்வி வேண்டும் என்று சிலர் சொல்லுகிறார்கள்.நாம் 'துணிவு வேண்டும்' என்கிறோம். துணிவே தாய்; அதிலிருந்துதான் கல்வி முதலிய மற்றெல்லா நன்மைகளும் பிறக்கின்றன.
-------------
உண்மை - உயிரின் ஒலி
சில தினங்களுக்கு முன்பு கல்கத்தாவில் ஸ்ரீ ஜகதீசசந்திரவஸு, தமது ''வஸு மந்திரம்'' என்ற கூடத்தைப்பாரதமாதாவுக்குச் சமர்ப்பணம் செய்கையில், ''உயிரின் ஒலி''என்ற மகுடமிட்டு ஒரு பிரசங்கம் செய்தார்.
அவருடைய கொள்கை எப்படியென்றால்:- நாம்ஜடபதார்த்தமாக நினைக்கும் உலோகாதிகளில் உயிர்நிறைந்திருக்கிறது. ஐந்துக்களைப் போலவே விருக்ஷாதிகளுக்கும்உணர்ச்சியிருக்கிறது. ஆகவே, மண், செடி, ஐந்து, மனுஷ்யன்அத்தனைக்குள்ளும் ஒரே விதமான ப்ராணசக்தியிருக்கிறது. 'இந்தஉலகமே உயிர்க்கடல்ய என்பது அவரது சித்தாந்தம். அவர் பலநுட்பமான கருவிகள் செய்திருக்கிறார். ஹிந்து தேசத்துத்தொழிலாளிகளைக் கொண்டு அந்த ஸூக்ஷ்மக் கருவிகளைஎல்லாம் செய்து கொண்டார். அந்தக்கருவிகளின் நேர்த்தியைப்பார்த்து ஐரோப்பிய சாஸ்திரிகளும் யந்திரிகளும்"ஆச்சரியப்படுகிறார்கள். அந்தக் கருவிகளின் உதவியால், ஒருபூண்டின் கையில் ஒரு ஊசி எழுதுகோல் கொடுக்கிறார். ஒருபுகைபட்ட கண்ணாடியின் மேல் அந்த ஊசி எழுதுகிறது;அதாவது,கோடுகள் கீறுகிறது. அந்தக் கோடுகளினால் மேற்படி செடியின்உள்ள நிலையை, அதன் நாடியின் அசைவு தெரிவிக்கிறது.
செடிக்கு விஷத்தைக் கொடுத்தால் மூர்ச்சைபோடுகிறது.மறுபடி, தெளிய மருந்து கொடுத்தால் தெளிகிறது. மதுபானம்செய்வித்தால் உண்டாட்டுக் கேளிகள் நடத்துகிறது. செடியின்சந்தோஷம், சோர்வு, வளர்ச்சி, சாவு ஆகிய எல்லாநிலைமைகளையும் கண்ணாடியிலே கீறிக் காட்டுவதைப்பார்க்கும்போது ''செடியின் நாடியுணர்ச்சிகளுக்கும் இதரமனுஷ்யமிருகாதி ஐந்துக்களின் நாடியுணர்ச்சிகளுக்கும் பேதமில்லை''என்பது ருஜுவாகிறது.
இவ்விதமான அற்புதப் பரீக்ஷைகளினால் உலகத்தின்உயிரொலியை நமக்குத் தெரியும்படி செய்த மஹானாகிய மேற்படிஜகதீச சந்திரவஸு நம்முடைய ஹிந்து மதத்தில் ஆழ்ந்தபக்தியுடையவர் என்பது சொல்லாமலே விளங்கும். ஹிந்துக்களின்மேன்மையைப்பற்றி அவர் வார்த்தை சொல்லும்போது, அந்தவார்த்தைகளிலே மிகச்சிறந்ததொரு ஜீவநாதம் உண்டாகிறது. அந்தவார்த்தைகளைப் படிக்கும்போதே படிப்போரின் ஜீவசக்திமிகுதிப்படுகிறது.
அவர் சொல்லுகிறார்:- 'ஸாதாரணக் கருவிகளால்மஹத்தான காரியங்களை நிறைவேற்றிய மஹான்களின்ஸந்ததியிலேநாம் பிறந்திருக்கிறோம். ஒருவன் ஒரு பெருங்காரியத்தில் முழுதும்தன்னை ஈடுபடுத்தினால், அடைத்திருந்த கதவுகள் திறக்கும்.அஸாத்யமாகத் தோன்றுவது அவனுக்கு ஸாத்யமாகும்; உண்மை"தேடுவதையே தொழிலாகக் கொண்ட ஒருவன் சிற்றின்பங்களைவிரும்பலாகாது. லாப நஷ்டங்களையும் வெற்றி தோல்விகளையும்ஒன்று போலக் கருதி அவன் தனது ஜீவனை உண்மைக்குநைவேத்யமாக விடவேண்டும். பாரததேசம் இப்போது வென்றுகாப்பாற்ற வேண்டிய வஸ்து யாது? சிறியதும் வரம்புற்றதுமாகியஒரு பொருளினால் பாரதமாதா திருப்தியடைவாளா? இவளுடையஅற்புதமான பூர்வ சரித்திரத்தையும் பூர்வ சாஸ்திரங்களையும்செயல்களையும் யோசிக்கும்போது, தாழ்ந்த தரமுள்ளது சிலநாள்நிற்கிறதுமான பாலமொன்றை இவள் விரும்பமாட்டாளென்பதுதெரியும்.
'இப்போது நம்முடைய கண்முன்னே இரண்டு விதமானதர்மங்கள் காணப்படுகின்றன.
''முதலாவது, (ஐரோப்பியரைப் போல நாமும்) படிப்பின்பரவுதலாலும், நகரத்தானுக்குரிய கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதாலும், கைத்தொழில், வியாபார சம்பந்தமான பலவிதமுயற்சிகளாலும், பாரதநாட்டை வலிமையுடைய நாடாகச் செய்யவேண்டும். இவையெல்லாம் தேசக் கடமையின் முக்கியாம்சங்கள்.இவற்றைப் புறக்கணித்தால் நமது ஜீவனுக்கே ஆபத்து நேரிடும்,வாழ்க்கையிலே ஜயமும், அவனவன் தன் தன் அவாவைத் திருப்திசெய்து கொள்ளும் வழியும் வேண்டிப் பாடுபட்டால், அதிலிருந்தேமேற்கூறிய லௌகிக தர்மத்திற்குத் தூண்டுதல் உண்டாகும்.இரண்டாவது, ஆத்மதர்மம். க்ஷணமாயிருக்கும் இன்பங்களைமாத்திரம் கருதாமல், மனுஷ்ய வாழ்க்கையின் அத்யுந்நதமான"நோக்கத்தை நாடி உழைத்தவர்கள். நமது நாட்டில் எக்காலத்திலும்மாறாமல் இருந்து வருகிறார்கள்.'
ஆத்ம தர்மமாவது யாதென்றால், ஸ்ரீ வஸுசொல்லுகிறார்: 'மனுஷ்ய ஜாதியின் பரம க்ஷேமத்திற்காக ஒருவன்தன்னைத் துறந்து விடுதல்' என்று. வந்தே மாதரம். இந்தத்தர்மத்தை எக்காலத்திலும் இடைவிடாமல் ஒரு சிலரேனும் ஆதரவுசெய்து வந்தமையாலேதான்-அஸ்ஸிரியா தேசத்திலும் நீலநதிக்கரையிலும் தலைதூக்கி நின்ற பெரிய ஜாதிகள் அழிந்துபோயின - நாம் அழியாமல் என்றும் இளமை கொண்டிருக்கிறோம்.கால வெள்ளத்தில் வரும் மாறுதல்களுக்கெல்லாம் மாறாமல், தான்அவற்றைத் தனதாக்கிக்கொண்டு வாழும் திறமை நமது நாட்டிற்குஇருக்கிறது.
வந்தே மாதரம்.
இதுவே உயிரின் ஒலி. ஹிந்துஸ்தானத்தைவணங்குகிறேன், ஹிந்து தர்மத்தைப் போற்றுகிறேன். லோகநன்மைக்காக என்னை மறந்து, என்னை இரை கொடுப்பேன்.
இதுதான் ஜீவசக்தியின் சாந்தி வசனம். தர்மம்ஐரோப்பியருக்குத் தெரியாது. அதை நாம் ஐரோப்பியருக்குக்கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களுடைய முயற்சிகளை நாம்"கற்றுக்கொண்டு, பிறகுதான் அவர்களுக்கு நாம்உபாத்யாயராகலாம்.
ஐரோப்பாவின் தொழில் நுட்பங்களை நாம் பயிற்சிசெய்தல் எளிதென்பது ஸ்ரீமான் வஸுவின் சரிதையிலே நன்குவிளங்கும். நம்முடைய சாந்தி தர்மத்தை ஐரோப்பியர் தெரிந்துகொள்வதால், அவர்களுக்கு விளையக்கூடிய நன்மையோ மிகமிகப் பெரியது.
ஸ்ரீீமான் ஜகதீச சந்திர வஸு சொல்லுகிறார்:- 'தன்னை அடக்கியாளும் சக்தியில்லாமையால் மனுஷ்யநாகரிகமானது சேதப் படுகுழியின் கரையில் நடுங்கிக் கொண்டுநிற்கிறது. ஸர்வ நாசத்திலே கொண்டு சேர்ப்பதாகிய இந்த வெறிகொண்ட வேகத்திலிருந்து மனிதனைக் காப்பாற்ற மற்றொருதர்மம் வேண்டும்.' அதாவது, நம்முடைய ஹிந்து தர்மம்.ஏனென்றால், 'ஆத்மத்யாகம் தனக்குத் தனக்கென்ற அவாவினால்உண்டாகாது. எல்லாச் சிறுமைகளையும் அழித்துப் பிறர்நஷ்டமெல்லாம் தனக்கு லாபமென்று கருதும் அஞ்ஞானத்தை"வேரறுப்பதால் விளையும்' என்கிறார்.
முன்னொரு முறை சில வருஷங்களுக்கு முன்புஜகதீசசந்திரர் சொல்லிய வாக்கிய மொன்றையும் இங்கு மொழிபெயர்த்துக்காட்டுதல் பொருந்தும். லண்டன் நகரத்தில் 'ராயல்ஸொஸைடி'என்ற பெரிய சாஸ்திர சங்கத்தார் முன்பு செய்தப்ரசங்க மொன்றிலே அவர் சொன்னார்:- 'ஸ்வலி கீதங்களின்பேசாத ஸாக்ஷ்யத்தை நான் பார்த்தேன். எல்லாப் பொருளையும்தன்னுள்ளே கொண்ட ஏகவஸ்துவின் கலை ஒன்றை அங்குக்கண்டேன். ஒளியின் சிறு திரைகளுக்கிடையே தத்தளிக்கிறதுரும்பும், பூமியின் மேலே பொதிந்து கிடக்கும் உயிர்களும்,நமது தலைமேலே சுடர் வீசும் ஞாயிறும் - எல்லாம் ஒன்று.இதைக் கண்ட பொழுதே, மூவாயிர வருஷங்களுக்கு முன்புஎன் முன்னோர் கங்கைக் கரையில் முழங்கின வாக்கியத்திற்குச்சற்றே பொருள் விளங்கலாயிற்று. ''இந்த ஜகத்தின் பேதரூபங்களில் ஒன்று, காண்பார் எவரோ அவரே உண்மைகாண்பார்.'' பிறர் அல்லர், பிறர் அல்லர்; இதுதான் ஜீவஒலி.வாயுபகவானுடைய ஸ்ரீ முக வாக்யம். எல்லாவற்றிலும் ஓருயிரேஅசைகிறது. அதை அறிந்தால் பயமில்லை; பயம் தீர்ந்தால்சாவில்லை.அமிர்தம் ஸதா.'
---------
உண்மை - புனர்ஜன்மம் (1)
புனர் ஜன்மம் உண்டு.
மதுரையிலே ஒரு சாஸ்திரியார் நேற்று மாலை இறந்துபோனதாக வைத்துக் கொள்ளுவோம். அவர் திரும்பவும்பிறப்பாரா ?தெரு வழியாக ஒருவன் நடந்து போகும்போது காலிலேஒரு சிற்றெறும்பு மிதிபட்டு இறந்து போவதாக வைத்துக்கொள்ளுவோம். அது திரும்பவும் பிறக்குமா? இதையெல்லாம்பற்றிச் சாஸ்திரங்கள் மிகவும் விஸ்தாரமாகப் பேசியிருக்கின்றன.அவற்றிலே படித்துக்கொள்ளலாம். ஆனால், நான் இப்போது சொல்லவந்த கதை இதுவன்று. நான் சொல்ல வந்த விஷயம்ஹிந்துஸ்தானத்தின் புனர்ஜன்மம்.
'ஹிந்து ஸ்தானம்' என்பது ஹிந்துக்களின் ஸ்தானம். இதுநமது தேசத்திற்கும், தேசத்திலுள்ள ஜனக் கூட்டத்திற்கும் பெயர்.இந்த ஜனக்கூட்டத்திற்கு 'பாரத ஜாதி' என்று பெயர்
சொல்வதுண்டு.
-----------
உண்மை - பாரத ஜாதி
பாரதம், பரதன் நிலைநாட்டியது. இந்தப் பரதன்துஷ்யந்த ராஜாவின் மகன். இமயமலை முதல் கன்யாகுமரிமுனை வரையிலுள்ள நமது நாட்டை இவன் ஒன்றுசேர்த்துஅதன்மிசை முதலாவது சக்ராதிபத்யம் ஏற்படுத்தியபடியால்,இந்த நாட்டிற்கு 'பாரத தேசம்' என்று பெயர் உண்டாயிற்று.கங்கையிலே வந்து சேரும் வாய்க்கால்களெல்லம் கங்கையாகவே மாறிவிடும். பாரத தேசத்தில் வந்துகுடியேறித் தலைமுறை தலைமுறையாக இங்குவாழ்பவர்களெல்லாம் நமது ஜனக் கூட்டத்தைச்சேர்ந்தவராகின்றனர்.
கிருஸ்தவர்களாயினும், பார்ஸிகளாயினும்,"மகம்மதியராயினும், இங்கிருந்து வந்து எந்த இஷ்டதெய்வத்தைக் கொண்டாடிய போதிலும், பாரத பூமியிலேபிறந்து வளர்ந்து இதையே சரணாகக் கொண்ட மனிதர்களையெல்லாம் பாரத ஜாதியிலே சேர்த்துக் கணக்கிட வேண்டும்.இது ஒரே ஜாதி பிரிக்க முடியாதது; அழிவில்லாதது.இதற்குஆதாரமும் மூலபலமுமாவது யாதெனில், ஆர்ய ஸம்பத்து.அதாவது ஆரியரின் அறிவும் அந்த அறிவின் பலன்களும்.
--------
உண்மை - ஆர்ய ஸம்பத்து
ஸம்பத்து என்பது ஸம்ஸ்கிருதச் சொல். இதன்பொருள் செல்வம் ஆனால் இங்கு செல்வம் என்பதுதிரவியத்தையும், பூஸ்திதியையும், ஆடு மாடுகளையும்மாத்திரமே குறிப்பிடுவதன்று. (1) அறிவுச்செல்வம், (2)ஒழுக்கச் செல்வம், (3) பொருட்செல்வம் ஆகியமூன்றையும் குறிப்பிடும். 'ஆர்ய ஸம்பத்து' என்பதுஹிந்துக்களுடைய அறிவு வளர்ச்சி.
நமது வேதம், நமது சாஸ்திரம், நமதுஜனக்கட்டு, நமது பாஷைகள், நமது கவிதை, நமது சிற்பம்,நமது ஸங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில் முறைகள்,நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள்-இவை அனைத்துக்கும் பொதுப் பெயர்'ஆர்ய ஸம்பத்து.'காளிதாசன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தி பாக்ஷையிலேதுளஸீதாஸர் செய்திருக்கும் ராமாயணம், கம்பராமாயணம்,"சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி - இவையனைத்துக்கும் பொதுப் பெயராவது ஸம்பத்து.தஞ்சாவூர் கோயில், திருமலை நாய்க்கர் மஹால், தியாகையர்கீர்த்தனங்கள், எல்லோராவிலுள்ள குகைக்கோயில்,ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், சரப சாஸ்திரியின் புல்லாங்குழல்- இவையனைத்துக்கும் பொதுப் பெயர் ஆர்ய ஸம்பத்து.எனவே, ஆர்யஸம்பத்தாவது ஹிந்துஸ் தானத்தின் நாகரீகம்.இந்த ஸம்பத்தைப் பாதுகாக்கும் வரையில் இந்த ஜாதிக்குஉயிருண்டு. இந்த ஸம்பத்திலே துருப்பிடிக்க இடம்கொடுத்தால், இந்த ஜாதியைச் செல் அரித்துவிடும்.
இந்த ஆர்ய ஸம்பத்தை உலகம் உள்ளவரைஸம்ரக்ஷணம் செய்து, மேன்மேலும் ஒளியும் சிறப்பும்உண்டாகும்படி செய்யுங் கடமை, தேவர்களால் பாரதஜாதிக்கு ஏற்படுத்தப்பட்ட கடமையாகும்.
---------
உண்மை - இடையில் நமக்கு நேர்ந்த கேடு
இந்த ஆர்யஸம்பத்தை நாம் பல நூற்றாண்டுகளாகஆதரித்துக் கொண்டு வந்தோம். சென்ற சில நூற்றாண்டுகளாகஇதில் துருப்பிடிக்க இடங் கொடுத்து விட்டோம். தேவர்கள்நமக்குக் கொடுத்த கடமையைக் கர்வத்தாலும், சோம்பலாலும்,சிறுமையாலும் உல்லங்கனம் செய்யத் தொடங்கினோம்.தேவர்கள் 'இந்தப் பாரத ஜாதியைக் கொஞ்சம் செல் அரிக்கக்கடவது' என்று ஆசீர்வாதம் பண்ணினார்கள்.
மலைப் பாம்புக் கதை கேட்டிருக்கிறீர்கள் அல்லவா?அதன் வாலிலே தீப்பற்றி எரியுமாம். மலைப் பாம்பு சுகமாகக்குறட்டை விட்டுத் தூங்குமாம். செல்லரித்துக் கொண்டு போனதுநமது ஸ்மரணையிலே தட்டவில்லை. அத்தனை கர்வம்,"அத்தனை கொழுப்பு, அத்தனை சோம்பல்.
நமது கவிதையிலே ஆனந்தம் குறையத்தொடங்கிற்று; ருசி குறைந்தது. கரடுமுரடான கல்லும் கள்ளிமுள்ளும் போன்ற பாதை நமது கவிகளுக்கு நல்ல பாதையாகத்தோன்றலாயிற்று. கவிராயர் ''கண்'' என்பதை ''சக்கு'' என்றுசொல்லத் தொடங்கினார். ரஸம் குறைந்தது;சக்கை அதிகப்பட்டது.உண்மை குறைந்தது; பின்னல் திறமைகள் அதிகப்பட்டன.
'சவியுறதெளிந்து தண்ணென்றொழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்'
என்று கம்பன் பாடியிருக்கின்றான்.
''சவி'' என்பது ஒளி; இது வடசொல்; கம்பன் காலத்தில்அதிக வழக்கத்திலிருந்தது போலும். ''ஒளி பொருந்துபடி தெளிவுகொண்டதாகித் தண்ணென்ற (குளிர்ந்த) நடையுடையதாகி, மேலோர்"கவிதையைப் போலக் கிடந்தது கோதாவரி நதி' என்று கம்பன்வர்ணனை செய்கிறான். எனவே, கவிதைகளில் ஒளி, தெளிவு,குளிர்ந்த நடை மூன்றும் இருக்கவேண்டுமென்பது கம்பனுடையமதமாகும். இதுவே நியாயமான கொள்கை.
மேலும், நெடுங்காலத்துக்கு முன்னே எழுதப்பட்டநூல்கள் அக்காலத்துப் பாஷையைத் தழுவினவை. காலம் மாறமாற,பாஷை மாறிக்கொண்டு போகிறது; பழைய பதங்கள் மாறிப் புதியபதங்கள் உண்டாகின்றன. புலவர் அந்த அந்தக் காலத்துஜனங்களுக்குத் தெளிவாகத் தெரியக்கூடிய பதங்களையே வழங்கவேண்டும். அருமையான உள்ளக்காட்சிகளை எளிமை கொண்டநடையிலே எழுதுவது நல்ல கவிதை. ஆனால் சென்ற சிலநூற்றாண்டுகளாக, புலவர்களும் சாமியார்களும் சேர்ந்து வெகுஸாதாரண விஷயங்களை அஸாதாரண அலௌகிக அந்தகாரநடையில் எழுதுவதுதான் உயர்ந்த கல்வித் திறமை என்று தீர்மானஞ்செய்துகொண்டார்கள்.
-----------
உண்மை - இடைக்காலத்து ஸங்கீதம்
பாரத தேசத்து ஸங்கீதம் பூமியிலுள்ள எல்லாத்தேசத்து ஸங்கீதத்தைக் காட்டிலும் மேலானது. கவிதையைப்போலவே ஸங்கீதத்திலும் நவரஸங்களின் தொழில் இருக்கவேண்டும். நவரஸங்களைப்பற்றி இந்தப் பத்திரிகையிலே*சுதேசமித்திரன் பத்திரிக்கை தனியாக ஒரு வியாஸம் பின்எழுதப்படும். இன்ன இன்ன ராகங்களிலே இன்ன இன்னசமயங்களில் இன்ன இன்ன ரஸங்கள் தோன்றப் பாடவேண்டுமென்று விதிகள் எல்லாம் பூர்வகாலத்து நூல்களிலேகாணப்படுகின்றன. கீர்த்தனத்திலுள்ள சொற்களின் அர்த்தமும்ராகத்தின் ஒளியும் ரஸத்திலே ஒன்றுபட்டிருக்க வேண்டும்.தியாகையர் காலம்வரை நமது தேசத்து ஸங்கீதம்ஒளியுடனிருந்தது. பிறகு இதிலும் இருள் சேரத்தொடங்கி"விட்டது. பாட்டிலே ரஸச் சேர்க்கை கிடையாது.அப்படியேசேர்த்தாலும் சோக ரஸம் (கருணாரஸம்) தான் சேர்ப்பார்கள். மற்றவை மடிந்து போயின. பாட்டுக் கிசைந்தபடி தாளம்''என்பது மாறிப் போய்'' தாளத்துக்கிசைந்தபடி பாட்டாகிவிட்டது.''இன்பத்தைக் காட்டிலும் கணக்கே பிரதானம்'' என்று முடிவுசெய்து கொண்டார்கள். இன்பமும் கணக்கும் சேர்ந்திருக்கவேண்டும். இன்பமில்லாமல் கணக்கு மாத்திரமிருந்தால், அதுபாட்டாகாது
-------------
உண்மை - மறு பிறப்பு
இடைக் காலத்தே நமக்குச் சேர்ந்த கேட்டிற்குஸங்கீதத்தையும் கவிதையையும் திருஷ்டாந்தங் காட்டினோம்.ஆனால், இந்தக் கேடு அவை இரண்டையும் மாத்திரமேதொட்டு நிற்கவில்லை. நமது சித்திரத் தொழில், நமது சிற்பம்,நமது ஜனக்கட்சி, ஜன நீதி, நமது சாஸ்திரம், தலை, கால் -எல்லாவற்றிலும் இந்தக் கேடு பாய்ந்து விட்டது. நோய்முற்றிப்போயிருந்தது. பராசக்தி நல்ல வேளையில் நமக்குள்உயர்ந்த வைத்தியர் பலரை அனுப்பினாள். அவளுக்கும்நம்மீது கிருபை வந்து விட்டது. எனவே, பிழைத்தோம்ஆனாலும், இம்முறை பிழைத்தது புனர்ஜன்மம். இந்தப் புனர்ஜன்மத்தின் குறிகளை எல்லாவற்றிலும் காண்கிறோம். பாரதஜாதி புதிதாய் விட்டது. தற்காலத்திலே பூமண்டலத்து மஹா"கவிகளில் நமது ரவீந்த்ரநாதர் ஒருவர் என்று உலகம் ஒப்புக்கொள்ளுகிறது. இதுவரை ஐரோப்பியப் பண்டிதர்கள் இயற்கைநூல் (ப்ரகிருதி சாஸ்திரம்) தமது விசேஷ உடமை என்றுகருதி வந்தார்கள். இப்போது நமது ஜகதீச சந்திர வஸு அந்தவழியில் நிகரற்ற திறமை பெற்றவர் என்பதை மேல் நாட்டுவித்வான்களில் ஒப்புக்கொள்ளாதார் யாருமில்லை. தமிழ்நாட்டிலே புதிய கவிதையும் சாஸ்திர ஒளியும் விரைவிலேதோன்றும். உலகம் பார்த்து வியப்படையும்.
செத்துப் பிழைத்தோம். ஆனால் உறுதியாக நல்லவயிரம் போலே பிழைத்து விட்டோம். புதிய ஜன்மம் நமக்குமிகவும் அழகான ஜன்மமாகும்படி தேவர்கள் அருள்புரிந்திருக்கிறார்கள் அதன் பொருட்டு அவர்களை இடைவிடாமல்வாழ்த்துகின்றோம்.
----------
4. ஓம் சக்தி
4.1 ஜன வகுப்பு | 4.2 வறுமையின் பயன் |
4.3 தீர்ப்பு | 4.4 யேசு கிருஸ்துவின் வார்த்தை |
4.5 இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை | 4.6 லோக குரு |
4.7 அடங்கி நட | 4.8 புனர்ஜன்மம் (2) |
4.9 உலக வாழ்க்கையின் பயன் | 4.10 உழைப்பு |
4.11 புராணங்கள் | 4.12 கொள்கைக்கும் செய்கைக்குமுள்ள தூரம் |
ஓம் சக்தி - ஜன வகுப்பு
இனிமேல் யாரேனும் ஒரு மஹான் வந்து மனுஷ்யனைச் சாகாமல் நூறாண்டேனும் பயமில்லாது வாழக் கூடிய மருந்தும் உபாயமும் உலகத்துக்குக் காண்பிக்கலாம். மனுஷ்யன் பாபத்தை விட்டால் அமரத் தன்மையை அடையலாம்.'பாபத்திற்கு மரணம் சம்பளம்' என்று கிருஸ்துவ வேதம் சொல்லுகிறது பாபத்தை நீக்கி மனிதர் மரணத்தை வெல்லக் கூடிய காலம் வரலாம்.
ஆனால், இப்போதுள்ள நிலைமையில் மனிதன் இந்த உலகத்தில் வாழ்வது சதமில்லை. 'இன்றைக்கிருப்பாரை நாளைக்கிருப்பார், என்று எண்ணவோ திடமில்லையே' என்று தாயுமானவர் சொன்னார்.
எங்கிருந்தோ வந்து இவ்வுலகத்தில் சில நாள் வாழ்கிறோம். செத்த பிறகு நம்முடைய கதி என்ன ஆகுமோ?கடவுளுக்குத் தான் தெரியும். மூன்றே முக்கால் நாழிகை உயிர் வாழ்வது, சந்தோஷத்துடன் இருந்துவிட்டுப் போகக் கூடாதா? அடடா! இந்தப் பூமியில் மனித உயிருக்கு எத்தனை கஷ்டம், எத்தனை பயம், எத்தனை இடையூறு, எத்தனை கொலை, எத்தனை துரோகம், எத்தனை பொய், எத்தனை கொடுமை, எத்தனை அநியாயம், ஐயோ பாவம்!
அடா, மனிதர்களே; எத்தனை சாஸ்திரங்களுக்கும், ஆக்கினைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும், நம் மனிதர் உட்பட்டிருக்கவில்லையா? ஒரு புதுக் கட்டுப்பாடு செய்து கொள்வோமே. அந்தக் கட்டுப்பாடு யாதெனில்: 'ஒருவர்க்கொருவர் மனத்தாலும் தீங்கு நினைப்பதில்லை. ஒருவர்க் கொருவர் பயப்படல் இல்லை.' மானிடரே இந்த விரதம் எடுத்துக் கொள்ளுங்கள். இது பிழைக்கும் வழி. தெருவில் நடக்கும்போதே முன்பின் தெரியாத மனிதர்கூட ஒருவர்க்கொருவர் கோபம் அல்லது அவமதிப்பு அல்லது பயத்தோடு பார்த்துக் கொள்கிறார்கள். மனிதனுக்கு மனிதன் இயற்கையில் விரோதம் என்ற நிலையில் உங்களுடைய மூடத்தனமாக மனுஷ்ய நாகரீகம் வந்து சேர்ந்து இருக்கிறது. இதை மாற்றி, அன்பை மூலாதாரமாக்க வேண்டும்.
முதலாவது, சிலருக்குச் சோறு மிதமிஞ்சியிருக்க, பலர்தின்னச் சோறில்லாமல் மடியும் கொடுமையைத் தீர்த்துவிட வேண்டும். இது இலக்கம் ஒன்று. பூமியின் மீதுள்ள நன்செய், புன்செய், தோப்பு, துரவு, சுரங்கம், நதி, அருவி, குப்பை, செத்தை, தரை - கடவுளுடைய சொத்தில் நாம் வேலி கட்டக்கூடிய பாகத்தையெல்லாம் சிலர் தங்களுக்குச் சொந்தமென்று வேலி கட்டிக் கொண்டனர் பலருக்கு ஆகாசமே உடைமை. வாயு ஆகாரம். இதற்கு மருந்து என்னவென்றால் 'எல்லோரும் சமானம், அண்ணன் தம்பிபோல' என்ற புத்தி உண்டாய் ஏழைகள் வயிறு பசிக்காமல் செல்வர்கள் காப்பாற்ற வேண்டும்.
அது முடியாவிட்டால், ஐரோப்பாவில் 'சோஷலிஸ்ட்' கட்சியார் சொல்வது போல நிலத்தை ஸகலருக்கும் பொதுவென்று ராஜ்யவிதி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
மனிதர் அத்தனை பேருக்கும் போதுமான ஆகாரம் பூமி தேவி கொடுக்கும். பூமிதேவியின் பயனை நேரே கையாளத் தெரியாமல் பொறாமையாலும், அறியாமையாலும், தாறுமாறாக விழல்படுத்தி, சோறு தேடும் இடத்தில் சோறு தேடாமல்,ஒருவர்க் கொருவர் கொல்ல வழி தேடி, பலர் வயிறு வாடச் சிலர் வயிறு ஜீர்ண சக்தியில்லாமல் போக, மனிதர் பரிதாபமாகக் காக்கையிலும் கடைப்பட்ட வாழ்வு வாழ்ந்து வீணே நசித்துப் போகிறோம். 'ஏழைகள் வருந்தினால் நமக்கென்ன?' என்றுநினைப்பவர் பரமமூடர். பலர் சௌகரியப்படும் வரை சிலர் சௌகரியம் அடைதல் இந்த உலகத்தில் சாத்தியமில்லை. பொருளாளி நல்ல உடுப்புகள் அணிந்து கொண்டு தெருவில் உலாவப் போவதையும், அவனுடைய கன்னத்தில் சதை உப்பியிருப்பதையும், அவனுடைய ஏவலாட்களின் தொகையும் சிறுமையும், மேற்படி பொருளாளி பிறரை அவமரியாதை செய்வதையும் கண்டு மயங்கிப் போய் அவன் பரமானந்த நிலையிலிருப்பதாக ஏழை நினைக்கிறான். அது தவறு. அவன் மனத்தில் ஒளிந்து கிடந்து அவன் உயிருக்கு நரகவேதனை செய்யும் துயரங்களை ஏழை அறியமாட்டான். ஒரு வகுப்பின் மனம் மற்றொரு வகுப்புக்குத் தெரியாமலும் ஒருவனுடைய உள்ளம் மற்றொருவனுக்குத் தெரிய இடமில்லாமலும், மனுஷ்ய நாகரீகம் அவ்வளவு மூடத்தனமான நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
----------
ஓம் சக்தி - வறுமையின் பயன்
ஏழையின் அழுக்குத் துணியையும், அழுக்குடம்பையும், சிரைக்காத முகத்தையும் பார்த்துப் பொருளாளியின் குழந்தைகள் மேற்படி ஏழை தமது மனுஷ்ய பதவிக்குத் தாழ்ந்த பன்றி, நாய், மாடு வகுப்பைச் சேர்ந்தவன் என்று நினைக்கிறார்கள் ஐரோப்பாவில் ஏழைக்கும் பொருளாளிக்கும் விரோதம் முற்றிப்போய், உள் நாட்டுச் சண்டைகள் நேரிட்டும், அப்படி நேரிடாதபடி தடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் ஜனங்களை ஒன்று சேர்க்கும் பொருட்டாக வெளிநாடுகளின் மீது சில ராஜாக்கள் போர் தொடங்க, கண்டங்களில் போர் பரவியும், பூமண்டலம் தூள் தூளாகிறது. கிழக்குத் தேசங்களிலும், யுத்தமில்லாமல் சமாதானத்துடன் இருக்கும் இடங்களிலும் - திருஷ்டாந்தமாக நமது தமிழ் நாட்டுப் பறையர்கூட கண் விழித்துத் தாங்கள் மனிதர் என்பதைத் தெரிந்துகொண்டு மற்ற ஜாதியாருக்குத்தாங்கள் சமானமென்று சபை கூட்டித் தீர்மானம் செய்கிறார்கள். மந்திரி மாண்டேகுவிடம் முறையிட்டார்கள். கிழக்குத் தேசங்களில் சமாதான எல்லைகளிலே கூட ஏழைகள் கண் திறந்து பொருளாளிகளை எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
சுருங்கக் கூறுமிடத்து, சோற்றுக்காக மனிதர் ஒருவர்க்கொருவர் செய்து கொள்ளும் அநியாயம், நாய்களும் பன்றிகளும் தமது ஜாதிக்குள்ளே செய்யும் வழக்கமில்லை என்பது உலகப் பிரசித்தமான விஷயம். ஆங்கில பாஷையில் (Lord Byron - லார்டு பைரோன்) என்ற மகா கவி ஒரு சமயத்தில் மனிதரை 'நாய்கள்' என்று கூறினார். பிறகு, உண்மையில் மனிதரைக் காட்டிலும் நாய் ஜாதி மேம்பட்ட தாகையால் மனிதரை நாய்களே என்று சொல்லியதிலிருந்து நாய் ஜாதிக்கு அவமரியாதை செய்வதாக ஏற்படுமாகையால், அதை மாற்றி 'ஏ மனிதரே' என்று கூப்பிட்டார்.
---------
ஓம் சக்தி - தீர்ப்பு
அன்புதான் இதற்கெல்லாம் தீர்ப்பு. எல்லா மனிதருக்கும், ஆணுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும், வெள்ளைக்கும், மஞ்சளுக்கும், செம்புக்கும், கருநிறத்துநீக்ரோவருக்கும் சகலருக்கும் உள்ளே பரமாத்மா பரம புருஷனாகிய நாராயணனே அந்தர்யாமியாக நின்று வெளித் தொழில்களை நிகழ்த்துகிறான். ஆதலால் மானிடரே, சகோதர உணர்ச்சியே தீர்ப்பு. சகோதர உணர்ச்சியைப்பற்றிக் கவிதைகள் பாடுவதும், நீதி நூல்கள் புகழ்வதும், வர்த்தமானப் பத்திரிகைகள் கர்ஜனை செய்வதும் இவ்வுலகத்தில் சாதாரணமாக இருக்கிறது. நடையில், எந்தக் கண்டத்திலும் எந்த மூலையிலும் அந்த முயற்சி காணப்படவில்லை. அதுநடைக்கு வரவேண்டும். கண்ணில்லாதவன் வான சாஸ்திரம் படிக்க முடியாது. இன்பமோ அன்புலகத்தைச் சேர்ந்த பதார்த்தம் ஆதலால் அன்பில்லாவிடின் இன்பமில்லை. இன்பத்தைத் தேடித்தேடி எங்கும் எப்பொழுதும் எதனினும் காணாமல் வருந்துகிற மானிடரே, கேளுங்கள்.
அன்புண்டானால் இன்பமுண்டு என்பதைப் புத்தபகவான் கண்டுபிடித்துச் சொன்னார். அந்த யுக்தியின் மகிமையை நேரே மனிதர் தெரிந்துகொள்ளாமல், அவர் காட்டிய பயனை அடையாமலே இருந்து வருகிறார்கள். அன்பு, கொள்கையில் இருந்தால் போதாது; செய்கையில் இருக்க வேண்டும். உன்னிடம் ஒரு கோடி ரூபாய் இருந்தால் தேச நன்மைக்காகக் கொடுத்துவிட்டு நீ ஏழையாகிவிடத் துணிவாயானால், நீ உன் தேசத்தின்மீது அன்புடையவனாகக் கருதப்படுவாய். உன்னுடைய குழந்தை உயிரைக் காக்கும் பொருட்டாகப் புலியின் வாயில் நீ போய் முதலாவது கையிடத்துணிவாயானால், நீ குழந்தையிடம் அன்புடையவனாகக் கருதப்படுவாய். பறையனுக்கும் போஜனம் செய்வித்துப் பக்கத்தில் வைத்துக்கொண்டு சாப்பிட்டால், நீ மனுஷ்யனிடம் அன்புடையவனாக விளங்குவாய்.
---------
ஓம் சக்தி - யேசு கிருஸ்துவின் வார்த்தை
யேசுவினிடம் ஒரு நாள் ஒரு மனிதன் வந்து "ஸ்வாமி எனக்கு நித்ய வாழ்வு வேண்டும். அதற்கு உபாயம் என்ன?" என்று கேட்டான்.
அதற்கு யேசு சொன்னார்:- "ஈசன் கட்டளைகள் பத்து. அவற்றின்படி நட. விகபசாரம் பண்ணாதே, சொல்லாதே, திருடாதே, பொய்ச்சாட்சி சொல்லாதே, வஞ்சனை பண்ணாதே, தாய் தந்தையரைப் போற்று" என்று. வந்த மனிதன்: "நான் இந்த விதிகளை எல்லாம் தவறாமல் நடத்தி வருகிறேன்" என்றான். அப்போது யேசு கிருஸ்து: "ஒரு குறை இன்னும் உன்னிடத்திலே இருக்கிறது. வீட்டுக்குப்போய் உன்னுடைய சொத்தை எல்லாம் விற்றுப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்துவிடு. உனக்கு மோக்ஷச் செல்வம் உண்டாகும். சிலுவையை (அதாவது வேள்வி விரதத்தைக்) கைக்கொண்டு என்னுடனே வா" என்றார்.
வந்த மனிதன் இந்த வார்த்தையைக் கேட்டு மிகவும் துயரத்துடன் திரும்பிப்போனான். அவன் பெரிய பணக்காரன். அவ்வளவையும் ஏழைகளிடம் கொடுத்து விட்டுச் சிலுவையைத் தூக்கிக்கொண்டு யேசுவின் பின்னே போவதில் அவன் மனத்திற்கு இன்பந்தோன்றவில்லை. அப்போது யேசு கிருஸ்து பக்கத்திலிருந்த தமது சீடரை நோக்கிச் "செல்வமுடையார் மோக்ஷ ராஜ்யத்தில் புகுதல் மிகவும் அரிது" என்றார். சீடரெல்லாம் இதைக் கேட்டு வியப்பெய்தினர் ஸஹஜந்தானே?பணம் நிரம்ப வைத்திருப்போர் யார்? ராஜா, மந்திரி, ஸேனாதிபதி, வியாபாரி, ஜமீன்தார், கோயிலதிகாரிகள், மடாதிகாரிகள் - இத்தனை பேருக்கும் மோக்ஷம் ஸந்தேஹமென்று சொன்னால் கேட்போருக்கு வியப்புண்டாவது ஸஹஜந்தானே? குருக்கள் கூட நரகத்துக்குத்தானா போகவேண்டும்? யேசுகிருஸ்து பின்னும் சொல்லுகிறார்:-"மக்களிலே செல்வமுடையோர் ஈசனுலகத்திற்குள்ளே புகுதல் மிகவும் அரிது. ஊசித்தொளையில் ஒட்டகை நுழைவதைக் காட்டிலும், செல்வன் மோக்ஷத்துக்குள் நுழைவது கடினம்" என்றார். அப்போது பேதுரு என்ற சீடன் சொன்னான்: "நாங்கள் அனைத்தையும் விட்டு உம்முடன் வந்திருக்கிறோம்" என்று. அப்போது "என் பொருட்டாகவும் வேதத்தின் பொருட்டாகவும் எவனொருவன் வீட்டையேனும், உடன் பிறந்தாரையேனும், தாய் தந்தையரையேனும் விட்டு வருகிறானோ, அவனுக்கு அவையனைத்தும் நூறு பங்கு பெருகிவரும். இஹத்தில் உடன்பிறந்தார், தாய்தந்தையர், பெண்டு பிள்ளைகள், பூமி-எல்லாம் திரும்பக் கிடைக்கும்; ஆனால் கொடுமை அனுபவிக்கவேண்டும். பரத்தில் நித்யவாழ்வு கிடைக்கும்; ஆனால் இப்போது முதற்பட்டிருப்போர் கடைப்படுவார்கள்" என்று யேசு சொன்னார்.
மேற்படி கதையை ஸ்ரீ காந்தி எடுத்துக் காட்டிச் சில தினங்களின் முன்பு பிரயாகையிலே ஒரு அர்த்த சாஸ்திர சபையின் முன்பு செய்த பிரசங்கத்தின் கருத்து என்னவென்றால்:- 'ஐரோப்பியர் செல்வம் தேடுவதையே ஒரு பெரிய தர்மமாக நினைத்துவிட்டார்கள். அப்படி நினைத்தபடியால், அவர்களுக்குப்பலவித அஸௌகர்யங்கள் நேரிட்டன. நாம் செல்வத்தைப் பெரிதாக வைக்கக் கூடாது' என்பதேயாம்.
ஸ்ரீ மான் காந்தி சொல்லுகிறார்:
இது கொண்டே முற்காலத்திலும் பணந்தேடும் காரியங்களுக்கு ஒரு வரம்பு ஏற்படுத்தினார்கள். லௌகீக ஆசையெல்லாம் நிறுத்திவிடவேண்டுமென்று நான் சொல்ல வில்லை. பொருள் தேடுவதையே நோக்கமாகக் கொண்ட கூட்டமொன்று நம்முள்ளே இருக்கலாம். ஆனால் அந்த நோக்கம் ஸர்வ உந்நதமன்று.
மேற்குத் தேசத்தார் தங்களுடைய அபிவிருத்தியைப் பவுன், ஷில்லிங், பென்ஸ், கணக்குப் போட்டுப் பார்க்கிறார்கள்; அமெரிக்காவின் செல்வத்தை அளவெடையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
"அங்கே எல்லாத் தேசத்தாருக்கும் அமெரிக்காவைக் கண்டால் பொறாமை. நமது தேசத்தில் சிலர் அமெரிக்காவைப்போல நாமும் செல்வந் தேடுவதே சரியென்றும், ஆனால் அந்தமாதிரி நாம் வேலைசெய்ய வேண்டாமென்றும் சொல்லுகிறார்கள். இந்த முயற்சி ஈடேறாது. ஒரு மனிதன் ஏக காலத்தில் உத்தமம், மத்திமம், அதமம் என்று மூன்று நிலைமையிலும் இருக்க முடியாது....யந்திரசாலை, ஆலை இவற்றால் என்ஜின் புகையேறிய நாட்டிலே தேவர்கள் இரார் நவீன யந்திர தந்திரங்களினாலும் அவற்றால் விளையும் செல்வத்தினாலும் இன்ப முண்டாகா."
இங்ஙனம் ஸ்ரீமான் காந்தி யேசுநாதரை மாத்திரமே யல்லாமல் முஹம்மது, நானக், கபீர், சைதன்யர், சங்கராசார்யார், தயாநந்தர், ராமகிருஷ்ணர் போன்ற ஞானிகளை எல்லாம் காட்டி, இவ்வனைவரும் வறுமையை விரதமாகக் கொண்டு மேன்மை பெற்றதையும், உலகத்துக்கு நல்ல வழி காட்டியதையும் ஞாபகப் படுத்துகிறார். ஆதலால் வறுமை விரதமே உயர்வு என்கிறாரா? ஒரேஅடியாக அப்படியும் சொல்லவில்லை. "பொன்னைக் காட்டிலும்" அதிக உண்மை காட்டவேண்டும்; அதிகாரத்தைக் காட்டிலும் அதிக தீரம், சுயநலத்தைக் காட்டிலும் அதிக ஈகை இவை வேண்டும். நமது வீடுகளையும், அரண்மனைகளையும் கோவில்களையும் பணக்கோலம் குறைவாகவும் குணக்கோலம் அதிகமாகவும் விளங்கச்செய்வோமானால், நம்மிடத்தில் பாரமான சைன்யமில்லாமலே எதிர்த்து வரும் சேனைக் கூட்டங்களைத் தடுக்கலாம்" என்று ஸ்ரீமான் காந்தி சொல்லிவருவதில் எனக்குப் பெரும்பாலும் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது. தெய்வமில்லை என்று எந்தத் தவறு செய்தாவது பணந் தேடுவோர் பணத்தையே தெய்வமென்று கொண்டோர். இவ்வினத்தார் எல்லாத் தேசங்களிலும் இருக்கிறார்கள். இவர்கள் மனத்திலே தம்மை மேதாவிகளாக நினைத்திருக்கிறார்கள். இவர்களுடைய மேதாவித் தனம் மடத்தனம். 'தெய்வத்தை நம்பி, எப்போதும் உண்மை சொல்ல வேண்டும்; பயப்படக்கூடாது. எது நியாயமென்று தோன்றுகிறதோ, அதை அச்சமில்லாமல் செய்து முடிக்க வேண்டும்'என்று காந்தி சொல்வதை நான் வேதவாக்காக ஒப்புக் கொள்ளுகிறேன். தெய்வத்தின் 'அருள் பெற்றால் மற்றச் செல்வங்களெல்லாம் கூடி வரும்' என்று யேசுகிருஸ்து சொல்லியதைக் காந்தி எடுத்துக் காட்டுகிறார். அதுவும் வேதவாக்கியமாம். ஆனால் அவர் சொல்வது துறவு நெறி. அது சிலருக்குச் சில காலங்களில் பயன்படலாம். இக்காலத்தில் பலருக்கு அது தீமை உண்டாக்கும். தெய்வத்தை எதிர்த்துச் செல்வம் தேடுதல் தீமை என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் தெய்வத்தை நம்பி உடனே செல்வம் சேர்க்க வேண்டும். இது என்னுடைய கொள்கை. எனக்குத் தெரிந்தவரை, ருக்வேதம் இது போலவே சொல்லுகிறது.
--------
ஓம் சக்தி - இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை
[20-6-20, ஞாயிற்றுக்கிழமை மாலையில், பொட்டல் புதூரிலே தெற்குப் புது மனைத் தெருவில், எல்லா வகைகளிலும் பெருமை பொருந்திய ஒரு முஸ்லீம் ஸபையின்முன்னே, "இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை" என்ற விஷயத்தைக் குறித்து ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதி செய்த பிரசங்கத்தின் ஸாரம்.]
இன்று மாலை எடுத்துக்கொண்ட விஷயத்தைப் பற்றிப் பேசு முன்பு, நான் அல்லாவின் மீது பாடிக்கொணர்ந்திருக்கும் தமிழ்ப் பாட்டை இங்கு வாசித்துக் காட்ட அனுமதி தரும்படி வேண்டுகிறேன். ஏற்கெனவே அரபி பாஷையில் 'பாத்திஹா' (ஜபம்) ஓதி முடிந்து விட்டது. அதற்கு அனுஸரணையாக இந்தத் தமிழ்ப் பாட்டைப் பாடுகிறேன்:
பல்லவி
அல்லா, அல்லா, அல்லா!
சரணங்கள்
1. பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி யண்டங்கள்
எல்லாத் திசையிலுமோ ரெல்லை வெளி வானிலே
நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன்,
சொல்லாலு மனத்தாலுந் தொடரொணாதபெருஞ்ஜோதி
(அல்லா, அல்லா, அல்லா!)
2. கல்லாதவராயினும் உண்மை சொல்லாதவராயினும்
பொல்லாதவ ராயினும் தவமில்லாதவ ராயினும்
நல்லாரை நீதியின்படி நில்லாதவ ராயினும்
எல்லோரும் வந்தேத்துமளவில்யமபயங் கெடச்செய்பவன்
(அல்லா, அல்லா, அல்லா!)
எனக்கு முதல் முதல் இஸ்லாம் மார்க்கத்திலே அன்புண்டானதின் காரணம் பின்வருமாறு:-
பல வருஷங்களின் முன்பு நான் ஒரு ஆங்கிலேய பண்டிதர் எழுதிய புஸ்தகமொன்றைப் படித்துக் கொண்டிருந்தேன்.அதில் முஹம்மது நபியின் சரித்திரத்தைக் குறித்த சில விஷயங்கள்காணப்பட்டன. அவற்றைப் படித்துப் பார்த்தபோது, நான் அற்புதமுண்டாய்ப் பரவசமடைந்தேன்.
மக்கா நகரத்தில், பூஜாரிகளின் ஸபை கூடியிருக்கிறது. பிரமாண்டமான ஸபை. நாட்டிலுள்ள பூஜாரிகள் அத்தனை பேரும் சேர்ந்து கூடும் வருஷாந்தரக்கூட்டம் திருவிழாக் காலத்தை ஒட்டி நடந்தது; முஹம்மது நபி மேற்படி பூஜாரிகளின் வம்சத்தில் பிறந்தவர். அரபி தேசத்து ஜனங்கள் அந்தக் காலத்தில் விக்ரஹாராதனையிலும் பல தேவ உபாஸனையிலும் தற்காலத்தில் தணிந்த ஜாதி ஹிந்துக்கள் எத்தனை மூழ்கிக் கிடக்கிறார்களோ, அத்தனை மூழ்கிக் கிடந்தார்கள். அவர்களிடையே முஹம்மது நபியின் குடும்பத்தாரகோவிற் குருக்களையும் பட்டர்களையும் ஒத்திருந்தனர். இவர்களுடைய வைதிகக் கோஷ்டியின் ஸபைக்கு நடுவே முஹம்மது நபி எழுந்து நின்று சொல்லுகிறார்:- நான் அல்லாவை நேரே பார்த்திருக்கிறேன். அவர் என்னைத் தமது முக்கிய பக்தராகவும் பிரதிநிதியாகவும் நியமனம் செய்திருக்கிறார். நீங்கள் இனிமேல் அவரைத் தொழுங்கள். அவரை மாத்திரம் தொழுதால் போதும். கடவுள் ஒருவர்தான் இருக்கிறார். பல ஈசுவரர் இல்லை. ஈசனைத் தவிர ஈசன் வேறில்லை. லா இலாஹா இல் அல்லா. அல்லாவைத் தவிர வேறு அல்லா கிடையாது. (அரபி பாஷையில் அல்லா என்ற பதத்திற்குக் கடவுள் என்று அர்த்தம்.)அவர் நம்மைப்போல தோலுடம்பும் கைகால் முதலிய உறுப்புக்களு முடையவரல்லர். அவரைச் சிலைகள் வைத்துத் தொழுவதிலும் அவருக்கு உங்களுடைய ஆகாரங்களை நைவேத்தியம் பண்ணுவதிலும் பயனில்லை. அவர் எல்லாவற்றையும் படைத்து எல்லாவற்றையும் இயக்கிக்காத்து எல்லாவற்றையும் வடிவுமாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் எல்லாவற்றையும் தம்முடைய உடம்புகளாகவும் தம்முடைய ரூபங்களாகவு முடையவர். அறிவு வடிவமாக நிற்பவர். அருள் வடிவமாக நிற்பவர். அவரை மனமாகிய கோயிலில் நிறுத்தி, வீரியம் பக்தி என்ற பூக்களால் அர்ச்சிப்பதேசரியான பூஜை. இடைவிடாமல் அசையாமல் அவரிடம் தீராதமாறாத பக்தி செலுத்துங்கள். அவ்விதமான பக்தி "இஸ்லாம்"என்று சொல்லப்படும். இந்த இஸ்லாமைத் தரித்திருப்போர் நித்தியானந்த வாழ்க்கையாகிய முக்தி வாழ்க்கையை எய்துவார்கள்.ஆதலால், நீங்கள் இந்தப் புராதனக் கிரியைகளையும் கொள்கைகளையும் விட்டுவிட்டு என் மதத்தில் சேர்ந்து அல்லாவின் திருவடி நிழலை அடைந்து வாழ முற்பட்டு வாருங்கள்" என்று முஹம்மது நபி யாண்டவர் திருவாய் மலர்ந்தருளினார்.
இதைக் கேட்ட மாத்திரத்தில் அங்கிருந்த பெருச்சாளிக் குருக்களெல்லோரும் தங்கள் சிஷ்யர் ஸஹிதமாக முஹம்மது நபியைப் பரிஹாஸம் பண்ணினார்கள். அந்தச் சமயத்தில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களின் மருமகனாகிய அலி என்பவர் எழுந்து "மாமா, உங்கள் கொள்கையை யார் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, நான் நம்புகிறேன். லா இலாஹா இல் அல்லா முகம்மதூர் ரஜூல் உல்லா, அல்லாவைத் தவிர வேறு கடவுளில்லை. அவருக்குச் சிறந்த நபி முஹம்மது" என்று பிரதிக்கினை செய்து கொடுத்தார். இது ஒரு செய்தி.
இரண்டாவது செய்தி, முஹம்மது நபியைத் தமது குமஸ்தாவாகப் பல வருஷம் வைத்திருந்த பிறகு அவருக்கு மாலையிட்டவராகிய கதீஜா பீவியம்மை அவருடைய மதத்தில் சேர்ந்து கொண்டது. ஒருவன் தான் நேரே கடவுளைப் பார்த்ததாகவும் அதனின்றும் தெய்வங்கள் தன்னிடத்தில் விளங்குவதாகவும் வெளியூராரிடம் சொல்லி, அவர்களை நம்பும்படி செய்தல் எளிது. இரவு பகல் கூடவே யிருந்து, நீ நோய் வேதனை பொறுக்கமாட்டாமல் அழுவதையும் இன்னும் உன்னுடைய பலஹீனங்கள், அதைர்யங்கள், அச்சங்கள், அநீதிகள், குரூரங்கள், பொறாமைகள், அதர்மங்கள், குறைகள் எல்லாவற்றையும் ஸஹிப்போராகிய உன் சுற்றத்தாரும், அத்யந்த நண்பர்களும், பக்கத்து வீட்டாரும் உன்னைக் கடவுளின் அருளும் அம்சமும் அடைந்த மஹானென்று நம்பவேண்டுமானால், நீ உண்மையிலேயே தெய்வத்தைக் கண்டால்தான் முடியும். மற்றபடி ஏமாற்றலினாலும், வேஷங்களாலும், நடிப்புகளாலும் இவர்களை நம்பும்படி செய்தல் சாத்தியமில்லை. இதுபற்றியே,இங்கிலீஷில் "எந்த மனிதனும், தன் சொந்த ஊரில்"தீர்க்கதரிசியாக மாட்டான்" என்றொரு வசனம் சொல்லுகிறார்கள்.
முஹம்மது நபியை முதல் முதல் அலியும், அதை காட்டிலும் ஆச்சர்யந் தோன்றும்படி, கதீஜாபீவியும் கடவுளின் முக்கிய பக்தனென்றும், தெய்வ அருள் பெற்றவரென்றும் பூமண்டலத்தில் கடவுளுடைய பிரதிநிதியாக அவதரித்தமஹானென்றும் அங்கீகாரம் செய்து கொண்டதைக் கவனிக்குமிடத்தே, அவர் நிகரில்லாத ஞானி யென்பதும் பக்தகுல சிரோமணி யென்பதும் மிகத் தெளிவாக விளங்குகின்றன.
மக்கத்தில் முஹம்மது நபிக்கு அநேகர் சீடராகச் சேர்ந்து விட்டார்கள். அவருடைய மதம் நாளுக்கு நாள் பிரபலமாகத் தொடங்கிவிட்டது. இதைக் கண்டு பழைய விக்ரஹாராதனைக்காரருக்குப் பொறாமையும் அச்சமும்மிகுதிப்படலாயின. மக்கத்து அதிபதி, நபியவர்களையும் அவருடைய முக்கிய நண்பர்களையும் சீடரையும் பிடித்துச் சிறையிலிடும்படி, தன் சேவகரிடம் கட்டளையிட்டான். இந்தச் செய்தி நபி ஆண்டவனுடைய செவிக்கு எட்டி விட்டது. இது 622 கி.பி. வருஷத்தில் நடந்தது. அப்பால், சில நண்பரின் வேண்டுகோளுக்கும் அல்லாவின் உத்தரவுக்கும் இணைந்த முஹம்மது ஒரே ஒரு சீடருடன் மதினாவுக்குப் புறப்பட்டார். போகிற வழியில் காடு; இவ்விருவரும் தனியே சென்று கொண்டிருந்தனர். இவர்கள் ஊரை விட்டுத் தப்பிய செய்தியறிந்து, மக்கத்து அதிபதி இவர்களின் பின்னே ஒரு குதிரைப் படையை அனுப்பினான். இவ்விருவரும் காட்டுவழியே போகையில், பின்னே குதிரைப்படைவரும் சத்தம் இவர்களுடைய காதிற் பட்டது. அங்கொரு புதருக்குள்ளே போய்ப் பதுங்கிக் கொண்டார்கள். குதிரைப் படையின் பாத ஒலி மிகவும் சமீபத்தில் கேட்டது. அப்போது நபியுடன் இருந்த "சீடர்:- "ஐயோ, இனி என்ன செய்யப் போகிறோம்? ஏது, நாம் தப்புவது கிடையாது. நம்மை இவர்கள் பார்த்துதான் போடுவார்கள். மக்கத்திற்குப் போனால் நம்மை வெட்டிக் கொல்வார்களோ, தூக்குத்தான் போடுவார்களோ!" என்று சொல்லிப் பலவாறு பரிதபிக்கலானான். அப்போது முஹம்மது நபி (ஸல்லல்லா ஹூ அலைஹி வஸல்லம்) அவர் சொல்லுகிறார்:-
"கேளாய், நண்பனே; நான் இந்த உலகத்தில் அல்லாவின் காரியஸ்தனாக வேலை செய்து வருகிறேன். அல்லாவினால் எனக்கு மானுஷ லோகத்தில் நிறை வேற்றும்படி விதிக்கப்பட்டிருக்கும் காரியங்களெல்லாம் நிறைவேறி முடியும் வரை, என்னைஉலகத்து மனனர்களெல்லோரும் ஒன்றுகூடிக் கொல்ல விரும்பினாலும் எனக்கொரு தீங்கும் வரமாட்டாது. என் தலையில் ஆயிரம் இடிகள் சேர்ந்து விழுந்தபோதிலும் எனக்கு மரணம் நேரிடாது. அல்லா ஸர்வ வல்லமை யுடையவர். அவருடைய சக்திக்கு மேற்பட்ட சக்தி இந்தஜகத்தில் வேறில்லை. ஆதலால் எனக்குப் பயமில்லை. என்னுடன் இருப்பதனால் உனக்கும் ஆபத்து வராது. நீயும்பயப்பட வேண்டிய அவசியமில்லை" என்றார்.
அப்பால் அந்தக் குதிரைப் படை அவர்களைப் பாராமலே போய்விட்டது.
இந்தச் சமாசாரத்தை நான் வாசித்துப் பார்த்தவுடனே என் மனதில் முஹம்மது நபியிடமிருந்த மதிப்பு ஆயிரம் மடங்கு மிகுதியாயிற்று ஸாதாரண காலங்களில் தைர்யத்துடனிருப்பது ஸுலபம். ஆபத்து நேரே தலையை நோக்கிவரும்போது "கடவுள் துணை செய்வார். எனக்குப் பயமில்லை" என்று மனதுடன் சொல்வோன் உண்மையான தெய்வ பக்தன். தெய்வ பக்தி ஒன்றைத் தவிர வேறெந்த சக்தியும் மனிதக் குண்டின் முன்னே தைர்யம் கொடுக்காது. சீறி வரும் பாம்பை நோக்கி அஞ்சாமல் நகைக்கவல்ல தீரர் கடவுளின் கருணை பெற்றோரேயாவர். மற்றப்படி வேறெந்த பலமும் அவ்விதமான தைர்யத்தைத் தராது. "பாம்பென்றால் படையும் நடுங்கும்." இன்னும், மதீனாவுக்கு நபி சென்ற பிறகு இதுவரை பல தடவைகளில் மக்கத்தாரின் கொரேஷ் படைகள் எதிர்த்து வந்தன. முஹம்மது நபியிடம் சேர்ந்தவர்கள் தக்க ஸைன்யப் பயிற்சி பெறவில்லை. பயிற்சி பெற்று வந்த படைகளைப் பயிற்சியற்ற மனிதர்களைத் துணைக்கொண்டு முஹம்மது நபி வென்றார். 'கலங்காத நெஞ்சுடைய ஞான தீரமும் அழியாத நம்பிக்கையும்' அவரிடத்தே யிருந்தன. ஆதலால் அவருக்கு
எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கும் வெற்றி எதனிலும் வெற்றி
விடுத்தவாய் மொழிக் கெங்கணும் வெற்றி
வேண்டும் முன்னர் அருளினர் அல்லா.
இடையிடையே நான் என் மனத்திற்குள் முஹம்மது நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களைப்பற்றிச் சித்திரம் போட்டுப் பார்ப்பது வழக்கம். நடுப்பாலைவனத்தில், நள்ளிரவிலே தனி மணல் வெளியிலே, ஒட்டகையின் மீது தனியாக ஏறிக்கொண்டு போகிறார். அல்லது, அங்கொரு குன்றின் மேல் ஏறி நிற்கிறார். கேள்வியாலும், நெடுங்காலத்துப் பக்தியாலும், நிகரற்ற அன்பினாலும், ஞானத்தினாலும் பக்குவப்பட்ட இவருடைய ஹ்ருதயம் அப்படிப்பட்ட இடத்தில் அல்லாவை நாடுகிறது. வேறு நினைப்புக்கு இடமில்லை.
அப்போது அங்கு ஞானவொளி வீசிற்று; நபி அல்லாவைக் கண்டார். சுகப் பிரம்ம ரிஷிக்கு நேர்ந்த அனுபவம் முஹம்மது நபிக்கு எய்திற்று.
அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ எங்கும் ஏன் ஏன் என்ற தென்ன, பராபரமே என்று தாயுமானவர் பாடியிருக்கிறார்.
இந்தக் கதை எப்படியென்றால், சுகப் பிரம்ம ரிஷிகாட்டு வழியாகப் போய்க் கொண்டிருக்கையில் கடவுளைப் பார்க்க வேண்டுமென்ற தாகமேலீட்டால், "கடவுளே கடவுளே" என்று தறிக்கொண்டு போனாராம். அப்போது காட்டிலிருந்த கல், மண், மணல், நீர், புல், செடி, மரம், இலை, பூ, காய், காற்று, ஜந்துக்கள் எல்லாவற்றினின்றும்,"ஏன், ஏன்" என்ற மறுமொழி உண்டாயிற்று. அதாவது, கடவுள் ஞானமயமாய் எல்லாப் பொருள்களிலும் நிரம்பிக் கிடப்பதைச் சுக முனிவர் கண்டார் என்பது இக்கதையின் பொருள். முஹம்மது நபி மஹா ஸுந்தர புருஷர், மஹா சூரர், மஹா ஞானி, மஹா பண்டிதர், மஹா பக்தர், மஹா லௌகீக தந்திரி, வியாபாரமானாலும், யுத்தமானாலும் முஹம்மது நபிகவனித்தால், அந்த விஷயத்தில் வெற்றி மிகவும் உறுதி. ஆதலால் அவர் மிகவும் அபிமானிக்கப்பட்டார்.
எனினும், புதிய மதமொன்று கொண்டு வந்ததினின்றும் அவர் சுற்றத்தாரும் அத்யந்த நண்பர்களும் பகைமை செலுத்தலாயினர். ஆனால், நபி பொருட்டாக்கவில்லை முஹம்மது நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள், உலகத்தின் பொது நன்மைக்கும் தர்மத்திற்கும் நீதிக்கும் ஸத்தியத்திற்கும் அல்லாவிற்கும்முன்னே, தம்முடைய சொந்த ஸுகங்களையும், ஸௌகர்யங்களையும், வாழ்வையும், செல்வத்தையும், அதனால் விளையும் பெருமைகளையும், இன்பங்களையும், ரக்ஷணைகளையும், உயிரின் பாதுகாப்பையுங்கூடச் சிறிய பொருளாகக் கருதினர்.
இவரிடத்தில் இத்தனை உறுதியான பக்தியிருப்பதைநோக்கியே, அல்லா இவரைத் தமக்கு மிகவும் பிரியமான நபியாகத் தெரிந்தெடுத்தார். இங்கு ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதி முஹம்மது நம்பியவர்களின் சரித்திரத்தைச் சுருக்கமாக எடுத்துரைத்தார். ஆனால் ரவண ஸமுத்திரத்திலே இஸ்லாம் மதத்தின் மஹிமையைக் குறித்துச் செய்த உபன்யாஸத்தில்,அவ்விஷயம் சொல்லப்பட்டு ஏற்கனவே மித்திரனில் வெளிப்பட்டு இருப்பதால், இங்கு மீண்டும் ப்ரசுரம் செய்யவில்லை.
அரபியா தேசத்தில் மக்கா நகரத்தில் அப்துல்லா என்ற மஹானுக்கு அவருடைய தர்ம பத்தினியாகிய ஆமீனாவுக்கும் குமாரராக கி.பி. 570-ஆம் ஆண்டில் நமது நபி ஜனித்தார். புஸ்தகப் படிப்புக் கிடையாது. கேள்வியால் மஹா பண்டிதரானார்: ஸஹவாஸத்தால் உயர்ந்த ஞானியானார்; நிகரில்லாதபக்தியால் அரசனும், கலீபும் தீர்க்க தரிசியுமானார். மக்கத்தில் பெருஞ் செல்வியாகிய கதீஜா பீவியையும், வேறு எட்டு ஸ்திரீகளையும் மணம் புரிந்தார். தம்முடைய ஒன்பது பத்தினிகளிலே அபூபக்கரின் குமாரியான பீவியைப் பிரதானநாயகியாகக் கொண்டிருந்தார். நாற்பதாம் ஆண்டில் தம்மை ஈசன் நபியாக்கிவிட்டதாக உலகத்துக்குத் தெரிவித்தார். கி.பி.632-இல் இந்தமண்ணுலகை விட்டு முஹம்மது நபி வானுலகம் புகுந்தார்.
மக்கத்தை விட்டு, இளமையிலேயே இவர் வியாபாரத்துக்காக வெளி நாடுகளில் ஸஞ்சரிக்கும்படி நேர்ந்த ஸமயங்களில், யூத கிருஸ்தவபண்டிதர்களைக் கண்டு அவர்களுடைய மதக் கொள்கையைப்பற்றி விசாரணை செய்வது வழக்கம். அதனின்றும் விக்ர ஹாராதனை விஷயத்திலும் பல தேவர் வணக்கத்திலும் இவருக்குப் பற்றுதலில்லாமற் போக ஹேது உண்டாயிற்று. ஏகேசுவர மதத்தைக் கைக்கொண்டார். யூதருக்கும் கிருஸ்தவருக்கும் பொதுவாகிய "பழைய ஏற்பாடு" என்ற பைபிலின் பூர்வ பாகத்தை இவர் உண்மையாகவே அங்கீகாரம் செய்து கொண்டார். கிருஸ்தவ நாதரையும் இவர் ஒரு சிறந்த நபியாகக் கொண்டார்; கடவுளின்அவதாரமாக ஒப்புக்கொள்ளவில்லை. விக்ரஹங்களிடத்தே கடவுளைக் காட்டி வணங்குதல் பொருந்தாத கார்யமென்று யூதருக்கும் கிருஸ்தவருக்கு ம் தோன்றியது போலவே, ஒரு மனிதன் பக்தி ஞானங்களில் எவ்வளவு சிறப்பெய்திய போதிலும்,அவன் கடவுளை நேருக்கு நேரே கண்டறிந்த வரையிலும், அதுபற்றி அவனை மிக உயர்ந்த பக்தனென்றும் முக்தனென்றும் போற்றலாமேயல்லாது, மனித வடிவத்தில் ஸாக்ஷாத் கடவுளையே சார்த்துதல் பொருந்தாதென்று முஹம்மது நபி எண்ணினார் போலும். இந்த அம்சத்தில் என்னுடைய சொந்தக் கருத்துப் பின்வருமாறு:-
இந்த உலகம் முக்காலத்திலும் உள்ளது; இது அசைகிறது; அண்டங்களாக இருந்து சுழன்றோடுகிறது; காற்றாகத் தோன்றி விரைகின்றது; மனமாக நின்று சலிக்கிறது; ஸ்தூல அணுக்களும் ஸுக்ஷ்ம அணுக்களும் ஸதா மஹா வேகத்துடன்,மஹா மஹா மஹா மஹா வேகத்துடன், இயங்கிய வண்ணமாகவேஇருக்கின்றன. இந்த உலகத்திலிருந்துகொண்டு இதனை அசைக்கிற சக்தியையே கடவுளென்கிறோம். எல்லாம் அவன். உலகத்தின் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள்.
அவனுடைய நிஜ வடிவம், அதாவது, பூர்வ வடிவம்யாது? சைதன்யம் அல்லது சுத்தமான அறிவே கடவுளின் மூலரூபம். மனிதருடைய ஸாதாரணச் செயல்கள் யாவுமே கடவுளின் செய்கைகளே யன்றி வேறில்லை. எனினும், ஜகத்தில் ஞான மயமான கடவுள் எங்கும் நிரம்பிக் கிடப்பதை நேரே ஒருவன் கண்ட பிறகு, அந்த மனிதனுடைய செயல்களிற் பல, கடவுளின் நேரான கட்டளையின்படி செய்யப்படுகின்றன. அப்படிப்பட்ட நிலைமையை எய்தின மனிதனை நபி அல்லது தீர்க்கதரிசி என்கிறோம். அப்பால் அல்லா, எப்போதுமே ஒருவனுடைய ஹ்ருதயத்தில் அந்தக் கரணத்துக்கு நன்றாக விளங்கும்வண்ணம் குடி புகுந்து, கற்றறிந்தவனுடைய அறிவு முழுவதையும் தாம் விலை கொடுத்து வாங்கிய கருவி போலே ஆக்கி கொண்டு,புறச் செயல்களும் உலகத்தாருக்கு வழிகாட்டிகளாகும்படி பரிபூர்ணசைதன்ய நிலையிலே நடத்திக்கொண்டு வரத்திருவுளம் பற்றுவாராயின், அப்படிப்பட்ட மனிதனைக் கடவுளின் அவதாரமென்று சொல்லலாம். ஆனால், கிருஸ்துநாதர் இந்நிலை அடைந்ததாக முஹம்மது நபி நம்பவில்லை போலும். இது நிற்க.
இஸ்லாம் மார்க்கத்தின் முதலாவது கலீபாவாக முஹம்மது நபி அரசாண்டார். அவருக்குப்பின் அபுபகர் அந்த ஸ்தானத்தை ஐந்து வருஷம் வகித்தார். அப்பால் ஏழு வருஷம் உமர் கலீபாவாக ஆண்டார். அந்தக் காலத்திற்குப் பின்பு, முஸல்மான்களிலே, ஷியா, ஸுந்தி என்ற இரண்டு பிரிவுகள் உண்டாயின. குரான் இஸ்லாம் மார்க்கத்திற்கு வேதம். இதை முஹம்மது நபி தம்முடைய வாக்காகச் சொல்லவில்லை. கடவுளுடைய வாக்கு, தேவதூதரின் மூலமாகத் தமக்கு எட்டியதென்றும், தாம் அதை ஒரு கருவிபோலே நின்று உலகத்தாருக்கு வெளியிடுவதாகவும் சொன்னார்.
-------------
ஓம் சக்தி - லோக குரு
சென்ற ஜூன் மாதம் பன்னிரண்டாம் தேதி ஜப்பான் ராஜதானியாகிய டோக்கியோ நகரத்தில் ஸாம்ராஜ்ய ஸர்வ கலா சங்கத்தாரின் முன்பு ரவீந்திர நாதர் செய்த பிரசங்கம் பூமண்டலத்தின் சரித்திரத்திலே ஒரு புதிய நெறியைக் காட்டுவது. விவேகாநந்தர் செய்துவிட்டுப் போன தொழிலை வளர்ப்போரில் ரவீந்திரர் ஒருவர்.
விவேகாநந்தர் ஆத்மாவின் பயிற்சியை மாத்திரம் காட்டினார். ரவீந்திரர், 'உலக வாழ்க்கையும், உண்மையான கவிதையும், ஆத்ம ஞானமும் ஒரே தர்மத்தில்நிற்பன' என்பதை வெளி நாடுகளுக்குச் சொல்லும் பொருட்டாகப் பாரத மாதாவினால் அனுப்பப்பட்டிருக்கிறார்.
'பாரத தேசமே லோக குரு' என்ற செய்தி ஏற்கெனவே பல ஜப்பானியப் பண்டிதருக்குத் தெரியும். எனினும், நம்மவர் ஒருவர் நேரே போய் அந்த ஸ்தானத்தை நிலை நிறுத்துவதற்கு இதுவரை அவகாசப்படாமலிருந்தது. வங்காளத்து மஹா கவியாகிய ரவீந்திரநாத் தாகூர் போய் அந்தக் குறையைத் தீர்த்து வைத்தார். இந்தத் தொழிலுக்கு அவர் மிகவும் தகுதியுடையவர் அவருடைய கவிதையின் கீர்த்தி பூமண்டல முழுதும் ஏற்கெனவே பரவி யிருக்கிறது. உலகத்து மஹா கவிகளின் தொகையில் அவரைச் சேர்த்தாய்விட்டது
'கீதாஞ்சலி' முதலாவதாக, அவர் இங்கிலீஷ் பாஷையில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் நூல்கள் மிகவும் சிறியன; பார காவியங்களல்ல, பெரிய நாடகங்களல்ல; தனிப் பாடல்கள் சில காண்பித்தார். உலகம் வியப்படைந்தது. நல்வயிர மணிகள் பத்துப் பன்னிரண்டு விற்றால், லக்ஷக்கணக்கான பணம் சேர்ந்து விடாதோ? தெய்வீகக் கதையிலேபத்துப் பக்கம் காட்டினால் உலகத்துப் புலவரெல்லாம் வசப்படமாட்டாரோ?
கோபோ நகரத்தில் உயேனோ என்றதோர் பூஞ்சோலையிருக்கிறது. அதனிடையே அழகான பௌத்தக் கோயில் ஒன்று இருக்கிறது. அந்தச் சோலையிலே குளிர்ந்த மரங்களின் நிழலில் பல ஜப்பானிய வித்வான்கள் கூடி அவருக்குநல்வரவுப் பத்திரிகை படித்தார்கள். ஜப்பானிய ஸாம்ராஜ்யத்தில் முதல் மந்திரியாகிய ஒகூமாப் பிரபு என்பவரும், வியாபார மந்திரியாகிய ஸ்ரீமான் கோனோவும், கல்வி மந்திரியாகிய பண்டித தகாத்தாவும் வேறு பல பெரிய கார்யஸ்தர்களும் அந்தச் சபைக்கு வந்திருந்தார்கள். நல்வரவுப் பத்திரிகை வாசித்து முடிந்தவுடனே, ரவீந்திரநாதர் பின்வருமாறு வங்காளி பாஷையில் பேசலானார்:-"எனக்கு ஜப்பானிய பாஷை தெரியாது. இங்கலீஷ் தெரியும்; ஆனால்அது உங்களுடைய பாஷையன்று. உங்களிடம் அந்தப் பாஷை பேச எனக்கு ஸம்மதமில்லை. மேலும், எனக்கே அது இரவல் பாஷை;ஆனபடியால் ஸரளமாக வராது. ஆதலால், வங்காளியிலே உங்களிடம் பேசுகிறேன்" என்றார். பண்டித கிமுரா என்ற ஜப்பானிய வித்வானொருவர் வங்கத்து மொழி தெரிந்தவராதலால் ரவீந்திர நதரின் வார்த்தைகளைச் சபையாருக்கு ஜப்பானிய பாஷையில்மொழிபெயர்த்துச் சொன்னார்.
பின்பு, ரவீந்திர நாதர் பேசுகிறார்:- "கோபோ நகரத்தில் வந்து இறங்கியவுடனே எனக்கு ஜப்பான் விஷயத்தில் அதிருப்தியுண்டாகி விட்டது. எதைப் பார்த்தாலும் மேற்குத் தேசங்களின் மாதிரியாகவேயிருக்கிரது. ஜப்பானியர் தமது ஸ்வயமான தர்ம ஸம்பத்தை இழந்துவிடலாகாது" என்றார். இந்தக் கருத்தின் விவரத்தைப் பின்னே நாம் படிக்கப் போகிற டோக்கியோ ஸர்வ கலா ஸங்க உபந்யாஸத்திலே விஸ்தாரமாகக் காணலாம். அப்போது மஹா மேதாவியாகிய முதல் மந்திரி ஒகூமா எழுந்திருந்து ரவீந்திரருக்கு நன்றி கூறினார். ஸ்ரீமான் ஒகூமா கூறியது:- "எனக்கு இங்கிலீஷ் நேரே தெரியாது இவர் வங்காளி பாஷை பேசியதை நான் இங்கிலீஷ் என்று நினைத்தேன். நல்ல தருணத்திலே இவர் நமது தேசத்துக்கு வந்தார். நியாயமான எச்சரிக்கை கொடுத்தார். நமது தேசத்தின் சித்த நிலை இப்போது இரண்டுபட்ட பாதைகளின் முன்பு வந்திருக்கிறது. நமதறிவு எந்த வழியிலே திரும்புதல் தகும் என்பதை இப்போது நிச்சயிக்க வேண்டும். இத் தருணதில் நமக்கு நல்வழி காட்டும் பொருட்டாக இந்த மஹான் தோன்றினார்."
டோக்கியோ உபந்யாஸத்தைப் பற்றி ஒரு தனிப்பகுதி எழுத வேண்டும்.
"அதன் ஸாராம்சம்:- உறங்கின ஆசியாவை ஜப்பான் எழுப்பிவிட்டது. அதன் பொருட்டு நாமெல்லோருமஜப்பானுக்கு நன்றி செலுத்த வேண்டும். உறங்கும் பூமண்டலத்தை, பாரத நாடு தலைமையாக ஆசியா எழுப்பிவிடப் போகிறது." இந்தக் கருத்தை ஜப்பானிய பண்டிதர் அந்நாட்டுப் பத்திரிகைகளில் அங்கீகாரம் செய்துகொண்டு மிகவும் அழகாக நன்றி வார்த்தைகள் சொல்லியிருக்கிறார்கள்.
டோக்கியோ ஸாம்ராஜ்ய கலாசங்கத்தில் பாரத கவி ரவீந்திரர் செய்த ஆச்சரியமான பிரசங்கத்திலே அவர் சொன்னதாவது:- "முதலாவது, உங்களுக்கு நன்றி சொல்லுகிறேன். ஆசியா கண்டத்தில் பிறந்த எல்லா ஜனங்களும் உங்களுக்கு நன்றி செலுத்தக் கடன் பட்டிருக்கிறோம். எல்லாப் பந்தங்களைக் காட்டிலும் இழிவான பந்தம் உள்ளச் சோர்வு. இதனால் கட்டுண்டவர் தம் நம்பிக்கையில்லாதவர். கேட்டீர்களா, சிலர் சொல்லுவதை:- "ஆசியாக் கண்டம் பழமையிருளில் மூழ்கிக் கிடக்கிறது; அதன் முகம் பின்னே முதுகுப் புறமாகத் திருப்பி வைக்கப்பட்டிருக்கிறது"என்று. இப்படி வார்த்தை சொல்வோரின் பேச்சை நாமும் நம்பினோம். சிலர் இதையே ஒரு தற்புகழ்ச்சியாக்கி "அப்படித்தான்; நாங்கள் பழமையிலே தானிருப்போம். அதுதான் எங்களுக்குப் பெருமை" என்றார்கள்.
"விஷயங்கள் இந்த ஸ்திதியில் இருக்கும்பொழுது நாமெல்லாம் ஒரு மோஹ நித்திரையில் வீழ்ந்திருந்த காலத்திலே, ஜப்பான் தனது கனவு நிலைமை நீங்கி எழுந்தது; நடக்கத் தொடங்கிற்று; பூதாகாரமான அடியெடுத்து வைத்தது; நிகழ் காலத்தைஅதன் முடிவிலே போய்ப் பற்றிக் கொண்டது. எல்லோரும் தட்டி யெழுப்புண்டோம்." பூமியின் மேலே, சில எல்லைக்குள்ளிருக்கும் சில தேசத்தாருக்கு மாத்திரம் முன்னேற்றம் வசப்படாது' என்ற மாயை போய்விட்டது. "ஆசியா கண்டத்தில் பெரிய ராஜ்யங்கள் ஸ்தாபனம் செய்திருக்கிறோம். பெரிய சாஸ்திரம், கலை,காரியம் - எல்லாம் இங்கே தழைத்தன. உலகத்திலுள்ள பெரிய மதங்களெல்லாம் இங்கே பிறந்தன. 'இந்த மனிதனுடைய சுபாவமே மதிச் சோர்வும் வளர்ச்சிக் குறையும் உண்டாகும்' என்று சந்தேகப் படவேண்டாம். பல நூற்றாண்டு நாம் நாகரிக நாகரிக விளக்கைத் தூக்கி நிறுத்தினோம். அப்போது மேற்குலகம் இருளில் தூங்கிக் கொண்டிருந்தது. நமக்குப் புத்தியுண்டு. நம்முடைய புத்தி ஒரு நத்தைப் பூச்சியில்லை. நம்முடைய கண் மாலைக் கண்ணில்லை. "ஆசியா, ஜப்பானுக்குக் கொடுத்தது அந்தப் பயிற்சி, ஜப்பான் இக்காலத்திலே புதியவளும் பழையவளுமாக விளங்குகிறாள். குல உரிமையால் கீழ்த்திசையில் நமது பழைய பயிற்சி அவளுக்குக் கிடைத்திருக்கிறது. 'மெய்யான செல்வமும் மெய்யான வலிமையும் வேண்டுமானால், ஆத்மாவுக்குள்ளே நோக்கத்தைச் செலுத்த வேண்டும், என்று கற்பித்த பயிற்சி, ஆபத்து வரும்போது பிரார்த்தனை தவறாதபடி காப்பாற்றும் பயிற்சி, மரணத்தை இகழச் சொல்லிய பயிற்சி, உடன் வாழும் மனிதனுக்கு நாம் எண்ணற்ற கடமைகள் செலுத்த வேண்டும் என்று தெளிவித்த பயிற்சி, 'கண்ட வஸ்துக்களிலே, அகண்ட வஸ்துவைப் பார், என்று காட்டிய பயிற்சி. 'இவ்வுலகம் ஒரு மூடயந்திரமன்று. இதற்குள்ளேயே தெய்வ மிருக்கிறது; இது யதேச்சையாக நிற்பதன்று; கண்ணுக்கெட்டாத தொலையில் வானத்திலிருக்கவில்லை; இங்கே இருக்கிறது அந்தத் தெய்வம்.' இந்த ஞானத்தை உயர்த்திய பயிற்சி: அநாதியாகிய கிழக்குத் திசையில் புதிய ஜப்பான் தாமரைப் பூவைப் போல் எளிது தோன்றி விட்டாள். பழைய மூடா சாரங்களை ஜப்பான் உதறித் தள்ளி விட்டாள்; சோம்பர் மனதிலே தோன்றிய வீண் பொய்களை மறந்து விட்டாள். நவீன நாகரிகப் பொறுப்புக்களைத் தீவிரமாகவும் தகுதியாகவும் தரித்து வருகிறாள்.
ஜப்பான் இக்காலத்திலே புதியவளும் பழையவளுமாக விளங்குகிறாள். குல உரிமையால் கீழ்த்திசையில் நமது பழைய பயிற்சி அவளுக்குக்கிடைத்திருக்கிறது. 'மெய்யான செல்வமும் மெய்யான வலிமையும் வேண்டுமானால், ஆத்மாவுக்குள்ளே நோக்கத்தைச் செலுத்த வேண்டும், என்று கற்பித்த பயிற்சிஆபத்து வரும்போது பிரார்த்தனை தவறாதபடி காப்பாற்றும் பயிற்சி, மரணத்தை இகழச் சொல்லிய பயிற்சி, உடன் வாழும் மனிதனுக்கு நாம் எண்ணற்ற கடமைகள் செலுத்தவேண்டும் என்று தெளிவித்த பயிற்சி, 'கண்ட வஸ்துக்களிலே, அகண்ட வஸ்துவைப் பார், என்று காட்டிய பயிற்சி'இவ்வுலகம் ஒரு மூட யந்திரமன்று. இதற்குள்ளேயே தெய்வ மிருக்கிறது; இது யதேச்சையாக நிற்பதன்று;கண்ணுக்கெட்டாத தொலையில் வானத்திலிருக்கவில்லை; இங்கே இருக்கிறது அந்தத் தெய்வம்.' இந்த ஞானத்தைஉயர்த்திய பயிற்சி: அநாதியாகிய கிழக்குத் திசையில் புதியஜப்பான் தாமரைப் பூவைப் போல் எளிது தோன்றி விட்டாள்.பழைய மூடா சாரங்களை ஜப்பான் உதறித் தள்ளி விட்டாள்; சோம்பர் மனதிலே தோன்றிய வீண் பொய்களை மறந்து விட்டாள். நவீன நாகரிகப் பொறுப்புக்களைத் தீவிரமாகவும் தகுதியாகவும் தரித்து வருகிறாள்.
"ஜப்பான், ஆசியாவுக்குத் தைரியம் கொடுத்தது.உள்ளே உயிர் இருக்கிறது. நமக்குள் வலிமை யிருக்கிறது.மேல் தோல்தான் காய்ந்து போயிருக்கிறது. அதைக் கழற்றியெறிந்து விட்டு அதற்கு அப்பால் ஓடுகிற கால நதியிலேமுழுகி ஸ்நானத்தைப் பண்ணி யெழவேண்டும். தற்காலத்துக்குப் பயந்து, முற்காலத்திலே போய்த் தலையை நுழைத்துக் கொள்ளுவோன் உயிருந்த போதிலும் செத்தவனுக்குஸமானமே." இது ஜப்பான் சொல்லிக் கொடுத்த விஷயம். பழைய விதையிலே உயிர் ஸத்து நீங்கவில்லை. புதிய காலமாகிய வயலிலேயே நடவேண்டும். இது ஜப்பான் சொல்லிக் கொடுத்த விஷயம். ஜப்பான் பிறரைப் போல் வெளியபிநயம் காட்டி இந்தப் பெரிய ஸ்தானத்தை அடையவில்லை. பிறரைப் பார்த்து நாமும் அவர்களைப்போல்ஆகவேண்டுமென்று பாவனைகள் காட்டினால், வலிமையுண்டாகாது. பிறரிடம் சாஸ்திர ஞானம் வாங்கிக் கொள்ளுதல் வெளியபிநயம் அன்று. பிறர் கல்வியை நாம் வாங்கலாம்;கோணல்களை வாங்கக்கூடாது. தேசத்தாருக்கென்று பிரிவுபட்டதனித்தனிக் குணங்கள் பலவுண்டு. எல்லாத் தேசத்தாருக்கும்பொதுவான மானுஷீக குணங்கள் பலவுண்டு. பிறரிடம் ஒன்றைவாங்கிக்கொள்ளும் போது, ஸாவதானமாக வாங்கிக்கொள்ளவேண்டும்."
ரவீந்திர கவியின் உபந்யாஸத்தை ஜப்பான் தேசத்தார் மிகவும் பக்தியுடன் கொண்டாடுகிறார்கள். பத்திரிகைகள் உயர்ந்த புகழ்ச்சி பேசுகின்றன. நல்ல காரியம் செய்தார். இப்படியே இங்கிலாந்து முதலிய எல்லாத் தேசங்களிலும் போய், பாரத தேசத்தின் அறிவு மஹிமையை மற்றொரு முறை விளக்கி வரும்படி புறப்பட்டிருக்கிறார் போலும். 'டோக்கியோ மானிச்சி' என்ற ஜப்பானியப் பத்திரிகைசொல்லுகிறது:- "அறிவில் ஜப்பான் பாரத தேசத்திற்குக் கடன்பட்டிருக்கிறது. ஜப்பான் நாகரீகம் பெறாதிருந்த காலத்தில்,பாரததேசம் அதில் உயர்ந்திருந்தது. பாரத ஞானம் பூ மண்டலமமுழுவதையும் தீண்டியிருக்கின்றது. 'ப்லாத்தோ'வுக்கு உபதேசம்பாரததேசத்திலிருந்து கிடைத்தது. ஸ்வேதன் போர்க் ஸாபன் ஹோவர் என்ற பிற்காலத்து ஞானிகளும் பாரத தேசத்தின் அறிவுக்கு வசப்பட்டார். பாரத நாகரீகம் நமக்குச் சீனா, கொரியா வழியாக வந்தது. நாம் இந்தியாவின் கடனைத் திரும்பக் கொடுக்க வேண்டும். ரவீந்திர நாதரை நாம் மிகவும்கௌரவப் படுத்த வேண்டும்."
"யோர்த்ரை" என்ற ஜப்பானியப் பத்திரிகை சொல்லுகிறது:- "உலக வாழ்க்கையும் கவிதையும் சுதி சேர்ந்து நிற்க வேண்டும்" என்பது ரவீந்திரர் கொள்கை. ஜப்பான் பாரத நாட்டுக்கு மிகவும் அறிவுக் கடன் பட்டிருக்கிறது.
இவ்வாறு ரவீந்திரருடைய பேச்சு வரும்போது, ஜப்பானியப் பத்திரிகைகள் தமது நாடு பாரத பூமிக்கு அறிவுக்கடன் பட்டிருப்பதை நினைத்துக் கொள்ளுகின்றன. ரவீந்திரருடைய கீர்த்தி உலகத்தில் அதிகமாகப் பரவி ஏறக்குறைய நான்கு வருஷங்களாகவில்லை. இந் நான்கு வருஷங்களுக்குள், ஜப்பான் தேசத்தில் ஸம்ஸ்கிருத இலக்கண புஸ்தகங்கள் எப்போதைக்காட்டிலும் அதிகமாக விலையாகின்றனவாம். 'பாரத தேசமே லோக குரு' என்பதைஉலகத்தார் அங்கீகாரம் செய்வார்கள். நாம் போய் நினைப்பூட்ட வேண்டும்.
பாரத பூமி உலகத்தாருக்கு எந்த விதமான ஞானத்தைக் கொடுத்துப் புகழைக் கொள்ளுமென்பதை விளக்குவதற்கு முன்பாக, சாஸ்திர (ஸயின்ஸ்) வார்த்தைஓரிரண்டு சொல்லி முடித்து விடுகிறேன் 'செடியின் நாடி மண்டலம் மனிதனுடைய நாடி மண்டலத்தைப் போலவே உணர்ச்சித் தொழில் செய்கிறது' என்பதை உலகத்தில் சாஸ்திர நிரூபணத்தால் ஸ்தாபனம் செய்தவர் நமது ஜகதீச சந்திர வஸூ. உலோகங்களிலும், இவர் பல புதிய சோதனைகள் செய்திருக்கிறார். ஒளி நூலில் மஹாவித்வான்.தந்தியில்லாத தூரபாஷைக் கருவியை 'மார்க்கோனி' பண்டிதர்உலகத்துக்கு வழக்கப்படுத்து முன்பே, ஜகதீச சந்திரர் அந்த விஷயத்தைப்பற்றித்துல்ய ஆராய்ச்சிகள் செய்து முடித்திருந்தார் செடிகளுடைய ப்ராணனில் நாடியுணர்ச்சி யெங்ஙனமெல்லாம் தொழில் செய்கிறது என்பதைக் கண்டுபிடித்ததே, இவர் மனிதசாஸ்திரத்துக்கு இதுவரை செய்திருக்கும் உபகாரங்களில் பெரிது.இப்போது சில வருஷங்களாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள பண்டிதக் கூட்டத்தார் ஜகதீச வஸுவினிடம்மிகுந்த மதிப்புப் பாராட்டி வருகின்றனர்; நல்ல புகழ்ச்சி கூறுகின்றனர். நவீன சாஸ்திர ஆராய்ச்சிக்கு மிகவும் நுட்பமானகருவிகள் வேண்டும். ஜகதீச வஸூவின் ஆராய்ச்சிக் கருவிகள்கல்கத்தாவில் நமது தேசத் தொழிலாளிகளாலே செய்யப்படுவன.ஐரோப்பிய ராஜ தானிகளிலே இத்தனை நேர்த்தியாக அந்தக் கருவிகளைச் செய்யத்தக்க தொழிலாளிகள் இல்லை. ஆகையால்அங்குள்ள பண்டிதர்கள் புதிய வழியில் செடியாராச்சிக்கு வேண்டியகருவிகளையெல்லாம் கல்கத்தாவிலிருந்து வரவழைத்துக் கொள்கிறார்கள்.
சாஸ்திரம் பெரிது, சாஸ்திரம் வலியது. அஷ்ட மஹாசித்திகளும் சாஸ்திரத்தினால் ஒருவேளை மனிதனுக்கு வசப்படலாம். பூர்வ காலத்தில் பலவகைக் கணித சாஸ்திரங்களும்இயற்கை நூலகளும் பாரத நாட்டிலேதான் பிறந்த பின்பு உலகத்திலபரவியிருப்பதாகச் சரித்திர ஆராய்ச்சியிலே தெரிகிறது. இப்போது"ஸயின்ஸ்" பயிற்சியில் இவ்வளவு தீவிரமாக மேன்மை பெற்று வருகிறோம்; காலக் கிரமத்தில் தலைமை பெறுவோம்.
இனிமேல், கதையைச் சுருக்கிவிடவேண்டும்; வருங்காலத்தில் உலகத்துக்குப் பாரத தேசம் என்ன பாடம் கற்பிக்கும்? எதனால் இந்நாடு 'லோக குரு' ஆகும்?உலகத்திற்கு நாம் கற்றுக் கொடுக்கப் போவது கர்மயோகம்.கடமையைச் செய்து, தவறாதபடி செய்து, இன்பத்தோடிருக்கவழி எப்படி? யோகமே வழி. "யோகமாவது செய்கைத் திறமை" என்று பகவான் கீதையிலே சொல்கிறார். பூமண்டலத்திற்கு யோகம் நாட்டுவோம்.
சென்னைக் கிருஸ்துவ கலாசாலையில் டாக்டர்மில்லர் என்றொரு பாதிரி யிருந்தார். அவர் நல்ல "புத்திசாலிஎன்று பெயரெடுத்தவர். அவர் ஹிந்து மதத்தைப் பற்றிப் பேசும்போது, கடவுளின் அந்தர்யாமித் தன்மையை மற்றெல்லாமதங்களைக் காட்டிலும் ஹிந்து மதத்திலேதான் தெளிவாகக் காட்டி யிருக்கிறார்களென்று சொல்லியிருக்கிறார். சாதாரணப் பாதிரி. கொஞ்சம் புத்திசாலியாகையால் இதைத் தெரிந்துகொண்டார். கடவுள் சர்வாந்தர்யாமி என்பது எல்லா மதங்களிலுமுண்டு. ஆனால் இங்கேதான் அதைத் தெளிவாகச் சொல்லுகிறோம். பிற மதங்களில் தெளிவில்லை.
'அந்தர்யாமி ' 'உள்ளே செல்வோன்.' 'உள்ளே நிற்போன்.' 'உள்ளே செல்வோன்' என்பது தாதுப் பொருள்.'உள்ளே நிற்போன்' என்பது வழக்கப் பொருள். "தெய்வம் எதற்குள்ளேயும் நிற்கிறது" என்று சாதாரணமாக எல்லோரும் சொல்லுகிறார்கள். இதன் அர்த்தத்தைஅவர்கள் நன்றாக மதியினாலே பற்றிக் கொள்ளவில்லை. "தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்." ஆம், அதன் பொருள் முழுதையுங் கண்டாயா?சாத்தன் எழுதுகிறான், கொற்றன் எழுதச் சொல்லுகிறான். "எழுதுவோன், எழுதுவிப்போன் - இரண்டும் தெய்வம். பன்றிசாகிறது; பன்றியாக இருந்து சாவது தெய்வம். எதனிலும்உள்ளே நிரம்பிக்கிடக்கிறது' என்றால், செய்கையெல்லாம் அதனுடையது என்று அர்த்தம்.
"இயற்கையின் குணங்களால் செய்கையெல்லாம் நடப்பன. அகங்காரம் கொண்ட மூடன் 'நான் செய்கிறேன்' என்று நினைத்துக் கொள்ளுகிறான்" என்று பகவத் கீதையிலே பகவான் சொல்லுகிறான். செய்கைகள் எல்லாம் பரமாத்மாவின் செய்கைகள். 'அவனன்றி ஓர் அணுவும் அசையாது.' 'என் செயலாவது யாதொன்றுமில்லை.'
நமக்குப் பொறுப்பில்லை, தொல்லை யில்லை, செய்கையில்லை; கடமை மாத்திரம் உண்டு.
'கடமையில் உனக்கு அதிகாரம், பயனிலே இல்லை,என்பது கீதை. 'செய்கையில்லாது நீங்கிவிடுவது' என்றால் சோம்பேறியாய் விடுதல் என்று அர்த்தமில்லை. பகவத் கீதை மூன்றாம் அத்தியாயத்தை ஒவ்வொரு ஆர்யனும் தினம் மூன்று வேளை வாசிக்க வேண்டும்.
முதலாவது விஷயம்:- ஒருவிதமான செய்கையுமில்லாமல் சும்மாயிருப்பது இவ்வுலகத்தில் எப்பொழுதும் சாத்தியப்படாது. நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், உன்னை எப்போதும் பிரகிருதி செய்கையிலேபுகுத்தி ஆட்டிக் கொண்டிருக்கிறாள். உன்னிஷ்டப்படி யெல்லாம் நடக்கவில்லை, நீ இஷ்டப்படுவதே மழை பெய்வதைப்போல் இயற்கையிலேயே விளையும் செய்கை.சித்தமே ஜடம்.'
இரண்டாவது விஷயம்:- 'நான் பிரிவில்லை என்று கண்டு, தெய்வமே உள்ளதாகையால் அதற்குச் சேவகமாக "உலகத் தொழில்களைப் பிழையில்லாமல் செய்து கொண்டு வரவேண்டும். கடமையைத் தவிருவோன் விடுதலை பெற்றவன் அன்று. விடுதலையின் தலைமேலே ஒரு கடமை நிற்கிறது. தெய்வத்துக்கே கடமையுண்டு. பகவான் கர்மயோகி.ஸந்யாஸம் அவசியமில்லை. பெண்டு பிள்ளைகள் பொய்யில்லை.மற்ற மனிதர்கள் மண் கட்டிகள் அல்லர். அவர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய கடமைகள் உண்டு."
'கடமை செய்யாதவன் வயிறு பிழைப்பதே நடக்காது'என்று கிருஷ்ணன் அழுத்திச் சொல்கிறார்.
'இவ்வுலகத்துச் செய்கைகளுக்கு நாம் பொறுப்பில்லை'என்று எல்லாச் செயல்களையும் ஈசனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டோர். சோம்பேறிகளாய்ப் பிறருக்கு எவ்விதப் பயனும்இல்லாமல் வெறுமே பிறர் போடும் தண்டச் சோறு தின்று கொண்டிருக்கும் துறவு நிலையிலே போய்ச்சேரும்படி நேரிடும்'என்று சில புத்திமான்கள் பயப்படுகிறார்கள். 'அப்படிப் பயப்படஇடம் இல்லை' என்பதை வற்புறுத்திக் காட்டும் பொருட்டாகவே,நான் இந்த வார்த்தையை இத்தனை விஸ்தாரப் படுத்துகிறேன்.
'தெய்வமே துணை' என்று இருப்போர் ஓயாமல் தொழில் செய்து கொண்டிருப்பார்கள். தெய்வ பக்தி உண்மையானால் பரோபகாரம் அங்கே யிருக்கும். பரோபகாரமஇல்லாத இடத்தில், "தெய்வபக்தி வேஷத்தைத் தவிர வேறொன்றுமில்லை. ஆங்கிலேயர், பிரெஞ்சியர், ருஷியர், பெல்ஜியர், செர்வியர், யுனைடெட் ஸ்டேட்ஸ்காரர், இத்தாலியர்,ஜப்பானியர், மாண்டிநீக்ரோவர், அல்பானியர், போர்ச்சுகேசியர்,ருமானியர், க்யூபா நாட்டார், பனாமர், கிரேக்கர், சீய நாட்டார்ஆகிய பதினாறு தேசத்தாரும் ஜர்மனிக்கும் அதனுடன் சேர்ந்தஆஸ்திரியா, துருக்கி, பல்கேரியா தேசத்தாருக்கும் விரோதமாகபபோர்புரிந்து வருகிறார்கள். மேன்மேலும் நம்முடைய நேசக் கட்சியாருக்குத்தான் துணை சேருகிறதே ஒழிய, ஜெர்மனிக்குப்புதிய துணை கிடையாது. மேற்கூறிய பதினாறு தேசங்களைத் தவிர, சீனா, ப்ரஜீல், பொலிவியா, க்வாடிமாலா, ஹொண்டூராஸ், நிகராகுவா, லிப்ரியா, ஹெய்தி, ஸாண்டோமிங்கோ முதலிய நாட்டார் மேற்படி ஜர்மானியருடன் தூது சம்பந்தங்களை நீக்கித்தமது விரோதத்தை உணர்த்தியிருக்கிறார்கள்.
இத்தனைக்கும் பயப்படாமல் அந்த மானங்கெட்ட ஜர்மனிக்காரப் பயல்கள், நேசக்கட்சியாருடைய நியாயங்களைக் காட்டிலும் தங்களுடைய இரும்பு வலிமையே பெரிய வலிமை என்று எண்ணி, வீண் இறுமாப்புக்கொண்டு சண்டை நடத்திக்கொண்டு வருகிறார்கள்.
'இன்றைக்கானாலும், நாளைக்கானாலும், நாளையன்றைக்கானாலும், ஒரு மாசம் சென்றாலும், ஒரு வருஷம் சென்றாலும், என்றைக்கானாலும், ஜர்மனியை நம்மால்தோற்கடிக்க முடியுமாதலால், ருஷ்யாவில் கோன்ஸ்கியை நீக்கி அதிகாரம் பெற்றிருக்கும் மாக்ஸிமிஸ்த் கட்சியார் ஜர்மனியுடன் தனி சமாதானமும் பேசத் தொடங்கியிருப்பது பெரிய காரியமில்லை.நாம், கடைசி ஆள், கடைசி ரூபாய் மிஞ்சும்வரை போரை நிறுத்தமாட்டோம்' என்ற ஒரே உறுதியுடன் மிஸ்டர் லாயிட் ஜார்ஜ் முதலிய நேசக் கட்சி மந்திரிகள் பேசுகிறார்கள்.
இதனிடையே, 'நேசக் கட்சியார் இந்தப் போரை நடத்திவரும் நோக்கந்தான் யாதோ?' என்று கேட்டால், 'ஒரு ஜாதியாரை மற்றொரு ஜாதியார் தம் இஷ்டப்படி அந்தந்தத் தேசத்தாரால் ஆளப்பட வேண்டுமென்ற கொள்கையை நிலை நிறுத்தும் பொருட்டாகவும் சண்டை போடுகிறோம்' என்று நேசக்கட்சி மந்திரிகளும் ப்ரசிடென்ட்மார்களும், பத்திராதிபர்களும், சென்ற மூன்று வருஷங்களாகத் தினம் மூன்றுமுறை ஓதிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வார்த்தையைக் கேட்டவுடன் பாரத புத்திரராகிய ஹிந்து முஹமதியர்கள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு, "சபாஷ்! நேசக் கட்சியாருக்கும் நமக்கும் ஒரே நோக்கம். நம்முடைய தேசத்தில ஆங்கிலேயர் தம் இஷ்டப்படி அரசு செலுத்தும் முறைமையை மாற்ற வேண்டும் என்றே நாமும் முயற்சி செய்து வருகிறோம். ஏற்கனவே, இங்கிலாந்தும் நம்முடைய கொள்கையைததழுவி விட்டதாகச் சொல்லுகிறபடியால், இங்கிலாந்து கஷ்ட தசையிலிருக்கும் இத்தருணத்தில் நாம் இங்கிலாந்துக்கு இடையூறுசெய்யாமல், இங்கிலாந்துக்கு நம்மால் இயன்ற உதவி செய்யவேண்டும்" என்று தீர்மானம் செய்து கொண்டார்கள்.
பாரத தேசத்தாரில் லட்ச லட்சமான ஜனங்கள் இந்தப்போரில் மடிந்து ஆங்கிலேயருக்கு உதவி புரிந்தோம் கோடானுகோடிதிரவியத்தைக் கொடுத்து வருகிறோம். இன்னும் சேனையில் ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே, நாம் வாய் திறந்து கேட்டால், இங்கிலாந்து நமக்கு இப்போது சுயராஜ்யம் கொடுக்கும்.நம்மை ஏமாற்றாது. இந்தச் சமயத்தில், நாம் இத்தனை உதவி செய்யும்போது, காங்கிரஸ் முஸ்லீம் சபையார் சொல்வதை நாம் சரி என்று நினைக்கவில்லை. சண்டை முடியுமுன்பாக இப்பொழுதேகைமேலே சுயராஜ்யம் வேண்டும் என்றுநம்மவர் கேட்கவேண்டும்என்று நான் சொல்லுகிறேன். சண்டை முடிந்த பிறகு சுயராஜ்யம் போதுமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், அது கிடைப்பது அரிதாகும். இப்பொழுதே ஏன் கொடுக்கும்படி கேட்கக் கூடாது? அயர்லாந்து தேசத்தில் சண்டை முடியு முன்பாகவே ஸ்வராஜ்யம் கொடுப்பதற்குரிய முறைமைகளைப்பற்றி ஆலோசனை செய்வதற்காக ஒரு சபை நடந்து வருகிறது. அதில் ஸகல கட்சியாரும் சேர்ந்திருக்கிறார்கள். அதுபோலவே, இந்தத் தேசத்திற்கும் ஒரு சபை ஏற்படுத்த வேண்டும்; அதில் இங்கிலீஷ் பிரதிநிதிகள் பாதித்தொகை, பாரதப் பிரதிநிதிகள் பாதித்தொகையாக இருந்து நடத்தவேண்டும். அவ்விதமான சபையை மந்திரி மாண்டேகு இந்தத் தேசத்தில் இருக்கும்போதே நியமிக்க வேண்டுமென்று நம்மவர் கிராமந்தோறும் சபைகள் கூடி 'கூ! கூ!' என்று பெரிய சப்தம் போடவேண்டும். திராவிடக் கட்சியார் என்றும், இஸ்லாமியக் கட்சியார் என்றும், யாரோ சிலர் செய்யும் பொய் மேளக் கச்சேரியை நாம் இகழ்ந்து நகைத்து, 'காங்கிரஸ் முஸ்லீம் சங்கங்களே தேசத்துக்குப் பொது'என்பதை ஒரே வார்த்தையாகஎங்கும் நிலைநிறுத்த வேண்டும். காங்கிரஸ் முஸ்லீம் சபைகளை எதிர்த்து, நமக்கு சுயராஜ்யம் வேண்டாமென்று சொல்லும் ஸ்வதேச விரோதிகளை அடக்கி விட்டு, நாம் இப்போதே ஸ்வராஜ்யம் கேட்கும்படி நமது பிரதிநிதிகளாகிய காங்கிரஸ்முஸ்லீம் சபையாரைத் தூண்டவேண்டும்.
மந்திரி மாண்டேகு சென்னைக்கு வந்திருப்பதால், இந்தச்சத்தம் கிராமங்களில் இடிமுழக்கம் போலே நடைபெற்று வரவேண்டும்.
ஜனங்களே! உடனே சுயராஜ்ய ஸ்தாபன சபையைக் கூட்டும்படி இரைச்சல் போடுங்கள். அழுதபிள்ளை பால்குடிக்கும்.
-----------
ஓம் சக்தி - அடங்கி நட
[வங்க பாஷையில் ஸ்ரீமான் ஸர். ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் எழுதப்பெற்று, 'மாடர்ன் ரிவியூ' பத்திரிகை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, அதனின்றும் ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியாரால் மொழிபெயர்க்கப்பட்டது.]
மழை கொஞ்சம் தூற 'ஆரம்பித்தால், எங்கள்சந்நிலும், அதுபோய் சேரும் சித்பூரி ரஸ்தாவிலும் நீர் வெள்ளமாய் விடுகிறது. நான் தலை நரைத்த கிழவனாய்விட்டேன். சிறுபிராய முதல் இதுவரை, ஒரு முறைகூடத் தவறாமல் வருஷந்தோறும் இப்படி நடப்பதைப் பார்க்கும்போது, இவ்வுலக வாழ்க்கையில் நீரில் பாதி, நிலத்தில் பாதிகுடியிருக்கும் ஜந்துக்களுக்குள்ள யோக்யதைத்தான் நமக்கும் இருக்கிறதென்ற எண்ணம் என் மனதில் அடிக்கடிஉதிப்பதுண்டு.
இங்ஙனம் அறுபது வருஷங்கள் ஆய்விட்டன.இதற்கிடையே உலகத்தில் நடந்த மாறுதல்கள் பல. கலியுகத்தின் குதிரையாக இருந்த நீராவியை இப்போதுமின்சார சக்தி கண்டு நகைக்கிறது. கண்ணுக் கெட்டாதிருந்ததுபரமாணு. இப்போது மனதுக் கெட்டாதிருந்த சித்தாந்தம் உண்டாயிருக்கிறது. சாகப் போகிற எறும்பைப்போல் மனிதன்சிறகு முளைத்துப் பறக்கிறான். 'வானத்தில் இடம், உனக்கா எனக்கா?' என்று நீதிஸ்தலத்திற்கு வியாஜ்யங்கள் விரைவாகவரக்கூடிய காலத்தை வக்கீல்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒரே நாள் இரவில் சீனர் எல்லோரும் 'பன்றிக் குடுமி'யை நறுக்கி எறிந்தனர். ஐந்நூறு வருஷத் தாவுதலை ஜப்பான் ஐம்பது வருஷத்தில் தாவிவிட்டது. ஆனால் இந்தச் சித்பூர்ரஸ்தாவில் மழை பெய்தால் சேறு உண்டாகாமற் செய்ய வழியில்லை அதன் ஸ்திதிக்கு மாறுதல் இல்லை. காங்கிரஸ்என்ற பெயர் உண்டாவதற்கு முன்பு நமது ஜாதிப்பாட்டு எத்தனை சோகமாயிருந்ததோ, அத்தனை சோகமாகத்தான்இப்போது ஸ்வராஜ்யம் நெருங்கி வரும் தருணத்திலும் இருக்கிறது.
குழந்தைப் பிராயமுதலாகவே நாம்பழகி விட்டபடியால், இதெல்லாம் நமக்குஆச்சரியமாகத் தோன்றவில்லை. ஆகவே, கவலைஏற்படவில்லை. தண்ணீர் தங்கி ஓயாமல் செப்பனிட்டட்ராமதண்டவாளத்தில் என்னுடைய வண்டிச் சக்கரம் போகும்போது,எனக்கு மறதி தெளிந்து ஜனங்களின் போக்குக்கும் நீரோட்டத்துக்கும் சண்டை உண்டாய் அதிலிருந்து அழுக்குத்தண்ணீர் என்மேல் வந்து தெறிக்கும் செய்தியிலே புத்தி செல்லுகிறது. 'இதை நாம் ஏன் பொறுக்கிறோம்?' என்று சிறிதுகாலமாக எனக்கொரு யோசனை உண்டாய் வருகிறது,
இதைப் பொறுக்க வேண்டுமென்று கட்டாயமில்லை. பொறுக்கக் கூடாதென்று தீர்மானிப்பதால் அனுகூல முண்டு. அதற்கு ஐரோப்பியர்கள் வாஸம் செய்கிற'சௌரிங்கி' ரஸ்தா சாக்ஷி. அந்த ரஸ்தாவில் முக்கால் பங்குக்குமேலே ட்ராம் தண்டவாளத்தைப் போட்டு, அதில் முடிவில்லாமல் 'யானை நடை'யில் செப்பனிட்டுக் கொண்டிருந்தால் அந்த வீதியார் ட்ராம்வே அதிகாரிகளுக்குஊணுறக்கம் இல்லாதபடி செய்து விடுவார்கள். நாமோ, கீழ்ப்படிதலாகிய குணமே வடிவெடுத்து வந்திருப்பதால், எதையும் திருத்த முடியுமென்பதை நம்மால் நம்பமுடியவில்லை.இதனால் நமது கன்னத்தில் கண்ணீர்ப் பெருக்கும் நமது வீதியில் ஜலதாரைப் பெருக்கும் தீர இடமில்லை. இது ஸாமான்ய விஷயமன்று. எதிலுமே 'நமக்கு நாம் நாயகர்'என்ற எண்ணம் நமக்கு ஏற்படவில்லை.
கண்ணாடி மூடிக்குள்ளே தண்ணீர் விட்டு அதில்வளர்க்கப்பட்ட பொன்னிற மீன்கள், கண்ணாடியைத் தண்ணீர்என்று நினைத்து அதில் வந்து மோதிக் கொள்ளுமாம்; பிறகுபெரிய தொட்டியில் கொண்டு போட்டாலும் தண்ணீரைக் கண்ணாடி என்று நினைத்துப் பயந்து பழைய எல்லைக்குள்ளேசுற்றுமாம். 'அதுபோல, தலை உடைந்து போமோ, என்கிற பயம் நம்முடைய எலும்புக்குள் ஊறிக்கிடக்கிறது. மஹாபாரதத்தில்,அபிமன்யு பகைவரின் வ்யூகத்துக்குள் நுழையக் கற்று, மீளுவதைக் கற்காமல் மாண்டது போலே. நாமும் பிறவி முதல்கட்டுப்படக் கற்று, அவிழ்க்கக் கல்லாமல், நமக்கு நேரிடும் சகலவிபரீதங்க்ளுக்கும் தலைகுனிகிறோம்.
மனிதருக்கும், நூல்களுக்கும், திசைகளுக்கும்,எல்லைகளுக்கும், கற்பனைத் தடைகளுக்கும் தலை குனிந்துபல தலை முறையாய் வழக்கமாய் விட்டப்படியால், எந்ததுறையிலும் நாமாக ஒன்று செய்ய முடியும்' என்கிற உண்மைநம் முகத்தின் முன்னே நின்றாலும், கண்ணுக்குத் தெரியாமல் போகிறது. ஐரோப்பிய மூக்குக்கண்ணாடி போட்டுக் கொண்டாலும்நமக்குத் தெளிவுண்டாக வில்லை.
தனக்குத்தானே நாயகனாயிருக்கும் உரிமைஎல்லா மனித உரிமைகளிலும் பெரிது. ஆனால் இந் நாட்டிலே இவ்வுரிமை, நூல் வசனங்களாலும், பழமொழிகளாலும், கிரியை சடங்குகளாலும் மறுக்கப் பட்டிருக்கிறது. இந்தத் தேசத்தில் மனிதனுடைய புத்தி வழிதவறிப் போகாமலிருக்க, கிரியைகளாலும் சாஸ்திரங்களாலும் கையையும் காலையும் கட்டிப் போட்டிருக்கிறார்கள். அடிகோணாமற் காக்குமாறு, பாதைகளை அழித்து விட்டார்கள். தெய்வத்தின் பெயர் சொல்லி மனிதனை மனிதன் கீழ்ப்படுத்தி அவமதிக்கும்படிசெய்து விட்டார்கள். இப்படிப்பட்ட தேசம் அடிமைகளைச்செய்வதற்கு நல்ல தொழிற்சாலையாயிற்று.
ஸர்க்கார் அதிகாரிகளும் அப்படியே சொல்லுகிறார்கள்:- "நீங்கள் பிழை செய்யக் கூடும். ஆதலால் சுயசிந்தையும், சுய காரியமும் உங்களுக்குத் தகாது"என்கிறார்கள். இங்ஙனம், மனுபராசராதிகளுடைய பல்லவியை இங்கிலீஷ்காரர் பாடும்போது நமக்கு செவி கூசுகிறது. இங்கிலீஷ்காரரிடம் அவர்களுடைய கொள்கைக் கிணங்கப் பின்வரும் மறுமொழி சொல்லுகிறோம்; 'பிழை செய்தால் பெரியஆபத்தில்லை. தனக்குத்தானே நாயகனாயில்லாதிருத்தல் பெரிய ஆபத்து. நம்மிஷ்டப்படி இடறி நடந்து பழகினாலொழிய நாம் உண்மைக்கு வந்து நிலைபெற முடியாது" என்கிறோம். பின்னும் சொலுகிறோம்: நம்மை ஆளுவோர் இப்போது 'ஜனாதிகாரம்' என்ற மோட்டார் வண்டியில் ஏறிப்போகிறார்கள்.ஆனால் இவர்களுடைய பழைய பார்லிமெண்ட் சபையாகிய வண்டி இரவில் பயணந் தொடங்கிய காலத்தில் ஒரு வழக்கத்திலிருந்து மற்றொரு வழக்கத்திற்கு மாறினபோது, அதன் இரைச்சல் வெற்றித்தேர்போலே கேட்கவில்லை. ஒரு வேளை ராஜாவின் சார்பு; பின்பு கோயிற் கக்ஷி; பின் ஜமீன்தார்கக்ஷி; பிறகு சாராயம் வடிப்போர் கக்ஷி; இங்ஙனம் கக்ஷி பேதமும், லஞ்சம் வாங்குதலும், கூச்சலும் சக்திஹீனமும் உடையதாய், அந்த வண்டி பக்கத்துக்குப் பக்கம் சரிந்து சரிந்துநடந்தது. ஒரு காலத்தில் அந்தச் சபை 'மெம்பர்கள் கூட்டத்துக்குவராவிட்டால் தண்டனை உண்டென்று பயமுறுத்தி அழைக்க "நேரிட்டதன்றோ? பிழைகளைக் குறித்துப் பேசுமிடத்தில் 'பார்லிமெண்ட் சபைகளின் தாய்' என்று சொல்லப்படும் பிரிட்டிஷ் பார்லிமெண்ட் சபை முன்பு அமெரிக்காவிலும், ஐர்லாந்திலும் செய்த பிழைகள் முதலாக, நேற்று 'டார்டனென்ஸ்,' 'மெஸொ-பொட்டேமியா' விஷயமாக எத்தனையோ பிழைகள்செய்யவில்லையா? இந்தியாவில் செய்திருக்கும் பிழைகள் கொஞ்சமா? மேலும் அமெரிக்கா ராஜ்யத்தில் பொருளாளிகள்நுழைந்து செய்யும் அக்கிரமங்கள் கொஞ்சமில்லை. 'த்ரெய்புஸ்'என்றவர்மேல் ஏற்பட்ட விசாரணையிலே, பிரான்ஸ் தேசத்து ராணுவ ஊழல்கல் வெளிப்பட்டன. ஆயினும், "ஸ்வராஜ்யமென்கிற ஜீவநதியானது எந்த வேகத்தால் பிழையாகிறகுழியிற் போய்விழுகிறதோ அதே வேகத்தால் அங்கிருந்து கிளம்பித் தனக்கேற்படும் இடறுகளைத் தானே நீக்கிக்கொள்ளும்'என்ற விஷயத்திலும் அத்தேசங்களிலேயுள்ள ஜனங்கள் சந்தேகப்படவில்லை."
நாம் வற்புறுத்தி மேலும் சொல்லத்தக்கதொன்றுண்டு: ஸ்வராஜ்யத்திலிருந்து ஸாமார்த்தியமும்,பாரபுத்தியும் உண்டாவதுடன் உயிருக்கே அதிகபல முண்டாகும். ஒரு கிராமம் அல்லது வகுப்பின் எல்லைக்குள் புத்தியைக் கட்டுப்படுத்தியிருப்போர் அங்ஙனம் இல்லாமல் பெரிய ராஜ்ய சிந்தனையும் அதற்குத் தக்க செய்கையும் பெறுவாரானால், மானுஷீகத்தைப் பற்றி அவர்களுக்கு விரிந்த உணர்ச்சியுண்டாகிறது. இந்த ஸௌகரியம் இல்லாமையால் இந்நாட்டில் ஒவ்வொருவனும் அரை மனிதனாகவே யிருக்கிறான். அவனுடைய யோசனைகளும், சக்திகளும்,ஆசைகளும், முயற்சிகளும் அற்பமாகவே யிருக்கின்றன.இங்ஙனம் வலிய வந்திருக்கும் உள்ளச் சிறுமை உயிர்ச்சேதத்திலும் பெரிய கேடாகும். ஆதலால் தவறுதல் நேரிடக்கூடும் என்பதைப் பொருட்டாக்காமல் நாம் சுயராஜ்யம் பெறக்கடவோம். பாதையில் இடறுதல்களை மாத்திரம் கருதி, எங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கலாகாது. இதுவே உண்மையான உத்திரம்."
இந்த மறுமொழியை ஒருவன் அதிகாரிகளிடம்சோர்வில்லாமல், மீட்டுமீட்டும் சொல்லித் தொல்லைப்படுத்தினால அவனை அதிகாரிகள் 'பந்தோபஸ்த்' பண்ணிவைக்கிறார்கள். ஆனால் அவனுக்கு ஸ்வதேசத்தாரின் மதிப்புஉண்டாகிறது. ஆயின் இதே மாதிரி ஜவாப்பை ஜாதிப்புரோஹிதரிடம் சொல்லப்போய், "ஐயரே, இது கலியுகமென்றும், மனிதனுடைய எளிய புத்தியைச் சுயேச்சைப்படி விட்டால் கெட்டுப்போகும் என்றும், ஆதலால் மூளையை உழைப்பதிலும், தலையைச்சாஸ்திரங்களுக்கு வணங்குதலே சிறந்ததென்றும் சொல்லிகிறீர்.இந்த அவமான வார்த்தைக்கு நாங்கள் அடங்கமாட்டோம்" என்று சொன்னால், அவர்களுடைய கண் சிவந்துபோய் உடனே ஜாதியைவிட்டுத் தள்ளும் படி உத்தரவு போடுகிறார்கள். ராஜாங்க விஷயமானால் வானத்தில் பறக்கும்படியாகவும், ஜாதி யாசாரமானால் கட்டையில் காலைக்கட்டிப்போடும்படியாகவும் இவர்கள் விரும்புகின்றனர். வலப்புறம் திருப்பவும் இடப்புறம் திருப்பவும் தோணியிலே சுக்கான்ஒன்றுதான் உண்டு. அது போலே, மனிதன் ராஜ்ய விஷயத்திலும் ஜாதியாசார விஷயத்திலும் இரண்டிலும் உண்மை நிலைபெற வேண்டுமானால், அதற்கு ஒரே வழிதான் உண்டு. இந்த விதியின் அனுசரணையிலேதான் சித்பூர்ரஸ்தாவுக்கும் சௌரிங்கி ரஸ்தாவிற்கும் உள்ள பேதம் தோன்றுகிறது. "எல்லாம் அதிகாரி கையில் இருக்கிறது. நம்முடைய கையைக்கட்டிக்கொண்டு நடப்பதே சரி" என்கிறதுசித்பூர் ரஸ்தா. சௌரிங்கி "ரஸ்தாவோ, "எமது கைக்குள் காரியங்கள் அடங்கி நடக்காவிட்டால், நமக்கு கையிருந்து பயன் என்ன?" என்று கேட்கிறது. தனது கைக்கும் தெய்வத்தின் கைக்கும் சம்பந்தம் உண்டென்று தெரிந்துகொண்டபடியால், 'சௌரிங்கி' உலக முழுதையும் வசப்படுத்திக்கொண்டது. இந்த நம்பிக்கையை இழந்துவிட்டபடியால் 'சித்பூர்'உலகத்தை இழந்துவிட்டது; அரைக் கண் மூடிமவுனியாய், நிஷ்டையின்பங்களை நாடுகிறது.
கண்ணை மூடிக்கொண்டால் ஒழிய, நம்முடைய அற்புதமான ஆசாரங்களைத் தவறாமல் அனுசரிப்பது ஸாத்யமில்லை. கண்ணைத் திறந்தாலோ, உலக முழுதையும் ஆளுகிற பொதுவான லோகவிதி நமக்குத் தென்படாமல் இராது. ஒரு கூட்டத்தாரேனும், ஒரு மனிதனேனும், இந்த விதியை வசப்படுத்தினால், அதிலிருந்து அதிகாரம், செல்வம்,விடுதலை என்ற பரிசுகள் கிடைக்கும். இந்த விதியைஉறுதியான அஸ்திவாரமாகக் கொண்டு ஐரோப்பிய நவீனநாகரீகம் நிலை பெற்றிருக்கிறது இதில் நம்பிக்கை யிருப்பதனால், அது பெரிய விடுதலை பெற்று நிற்கிறது.நாமோ கையைப் பிசைந்துகொண்டு, யஜமான் ஆக்கினைக்குக் காத்திருக்கிறோம். வீட்டிலே மூத்தவன், போலீஸ், தலையாரி, கோயில் குருக்கள் முதலியவர்களில்ஏதேனும் ஒன்றைப் பூஜைபண்ணி நம்முடைய சொந்த யோசனையையும், சொந்தச் செய்கையின் திறமையையும்ஆயிரம் தூளாக உடைத்து நான்கு பக்கத்துக் காற்றிலுமவீசி எறிந்து விடுகிறோம்.
இதற்கொரு காலேஜ் மாணாக்கன், "நாங்கள்இந்தக் கதையை எல்லாம் நம்புவது கிடையாது. வைசூரிக்குப்பால் குத்திக் கொள்ளுகிறோம். பேதிக்கு உப்புக் கொடுக்கிறோமவிஷ ஜ்வரம், கொசு வாயில் சுமந்து வரும் கண்ணுக்குத் தெரியாத பூச்சியால் உண்டாவதை அறிவோம். இவற்றை எல்லாம் தெய்வங்களின் கூட்டத்திற் சேர்க்கவில்லை" என்றுசொல்லக்கூடும். கொள்கை மாறக்கூடும். ஆனால் நாம் நமக்குநாயகராகாமல், புறத்தே ஓரதிகாரத்தை எப்போதும் குருட்டுத்தனமாக நம்பித் தொங்கும் குணம் நம்முடைய ஊக்கத்தை வேரறுக்கிறது. இப்படி எங்கும் சூழ்ந்த பயமானது நம் அறிவையும் உள்ளத்தையும் வசப்படுத்தி யிருப்பதால், நமதுமனம் கோழைப்பட்டிருக்கிறது. இதன் காரணம் என்னவென்றால்,உலக முழுதும் தழுவிய மாற்றொணாத ஸ்ர்வவிதியை நாம் நம்புவதில்லை. ஐயப்படுதலும், 'எது வந்துவிடுமோ, நாம் எப்படிஒன்றைத் துணிவாகச் செய்யலாம்' என்று திகைப்பதும் பயத்தின்குணங்களாகும். நமது ராஜாங்கத்தாரிடத்திலே கூட இந்தக் குணம் சில சமயங்களில் காணப்படுகிறது. ராஜாங்க யந்திரத்திலேஎப்போதேனும் ஓட்டை யுண்டாகி. அதன் வழியே பயம் நுழைந்து அதனால் அவர்கள் தமக்கினியவாகிய ஸ்வதர்மங்களைமறந்து தம் ஆட்சியை உறுதியாகத் தாங்கும் வேர்க் கொள்கையைக் கோடரியால் வெட்டுகிறார்கள். அப்போது தர்மமும் நீதியும் ஒதுங்கிப் போய், கௌரவத்தைக் காப்பாற்றவேண்டுமென்கிற எண்ணம் முன்னே நிற்கிறது. தெய்வ விதியைமீறி அழுகைக் கண்ணீரை அந்தமான் தீவில் மறைத்துவிட்டால்கசப்பு இனிப்பாய்விடும் என்று நினைக்கிறார்கள். 'ஸகல ரோகாநிவாரணி' என்று தான் ஒரு மருந்தைப் பாவனை செய்துகொண்டு, உலகப் பொது விதியைச் சிலர் உல்லங்கனம் செய்வதற்கு இஃதொரு திருஷ்டாந்தம். இதற்கெல்லாம். உட்காரணம் அற்பத்தனமான "பயமும் தன்னலம் வேண்டலும்;அல்லது, அற்பத்தனமான சூதினால் நேர் வழியை விட்டு விலகமுயலுதல். இங்ஙனம் நாம் எண்ணத் தொலையாத அதிகாரிகளுக்கு, பூஜை நைவேத்தியம் பண்ணி குருட்டு அச்சத்தால், மானுஷீக உரிமைகளைப் புறக்கணிக்கிறோம். பௌதிகசாஸ்திரத்திலும் ராஜ்ய சாஸ்திரத்திலும் நாம் எத்தனை உயர்வாகப் பரீக்ஷை தேறிய போதிலும், பிறர் உத்திரவுக்குக் காத்திருப்பதாகிய ஊறின வழக்கத்தை நம்மால் விட முடியவில்லை.தற்கால வழியை அனுசரித்து நாம் ஜனாதிகார சபைகள் ஏற்படுத்தினால் அவற்றிலும் எவனாவது ஒருவன் நாயகனாகி மற்றவர்களை மேய்க்கும் தன்மை உண்டாகிறது. இதன் காரணம்யாதெனில், பொது ஜனங்கள் தன்னை மறந்திருத்தல், தூங்குதல்,உண்ணுதல், குடித்தல், கலியாணம் பண்ணுதல், பாடையேறுதலமுதலிய ஸகல காரியங்களையும் பிறருடைய ஆணைப்படியேசெய்து வழக்கப்பட்டிருக்கிறார்கள்.
பிராமணன் ஒருவன் குடத்தில் கொண்டுவரும்ஜலம் அழுக்காக இருப்பதால் குடிக்கத்தகாதென்றும், சண்டாளன்ஒருவன் சுத்தமாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு வந்த நீர் சுத்தமாக இருப்பதால் குடிக்கத் தகும் என்றும் நான் சொன்னால்,வெறுமே குயுக்தி பேசுகிறான் என்று சொல்லி என்னைக் கண்டிப்பார்கள். ஏனெனில், எனது கொள்கை 'யஜமான் உத்தர'வுடன் ஒட்டவில்லை.
'ஒட்டாவிட்டால் என்ன குடிகெட்டுப் போயிற்று?''என்று நான் கேட்டால் உடனே என்னை ஜாதியிலிருந்து தள்ளிவிடுவார்கள். என்னை விருந்துக்குக் கூப்பிடமாட்டார்கள். நான் செத்துப்போனால், சாவுக் கிரியைகளுக்குக் கூட வரமாட்டார்கள்.
இப்படி உலக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் குரூரமான கொடுங்கோன்மை நடப்பதனால் ஜனங்களுக்கு நன்மையென்று நம்புவோர் ராஜாங்கத்தில் கூசாமல் பரிபூர்ண விடுதலை கேட்பது மிகுந்த வியப்புக் கிடமாகிறது. முன்பு, நமது தேசத்திலே, உபநிஷத்துக்காரர் தெய்வத்தின் விதியைக் குறித்துப் பேசும்போது சொல்லுகிறார்;'தெய்வத்தின் விதியை மாற்ற முடியாது. அது எங்கும் எப்போதும் இசையும்' என்று. இதை நமது முன்னோர் கண்டிருந்தனர். அந்த விதி நித்யமானது, க்ஷணிகம் அன்று. ஆதலால் அதை நாம் அறிந்துகொண்டு செய்கையில் பயன்படுத்தவில்லை. எத்தனைக் கெத்தனை அவ்விதியை நாம் ஸ்வீகரிக்கிறோமோ, அத்தனைக்கத்தனை நமது பாதையில் உள்ள தடைகள் விலகும். இந்த விதியின் ஞானமே இயற்கைநூல் (ஸயின்ஸ்) என்று சொல்லப்படும். இந்த 'ஸயின்ஸ்' வலிமையாலன்றோ ஐரோப்பா தற்காலத்தில், "பூமியில் விஷக்காய்ச்சல் இல்லாமல் செய்து விடுவேன். மனிதரின் வீடுகளில் சோற்றுப்பஞ்சமும் கல்விப்பஞ்சமும் இல்லாமல் செய்துவிடுவேன். ராஜ்யத்தின் பொதுநன்மைக்கும் மனுஷ்யனுடைய ஸ்வதந்திரத்திற்கும் முரண்படாமல் செய்வேன்" என்று துணிவுடன் கூறுகிறது.
'அறியாமையால் கட்டும், அறிவினால் விடுதலையும் கைகூடும்' என்பதை முன்னோர் அறிவார். பொய் எது? தன்னை ஸர்வத்திலிருந்து பிரிவாகக் காணுதல்.உலகமும் தானும் ஒன்றெனக் காண்பதே உண்மையறிவு. 'இத்தனை பெரிய உண்மையை அக்காலத்தில் எப்படிக் கண்டுபிடித்தார்கள்' என்பதை இப்போது நினைக்க வியப்புண்டாகிறது.பிறகு அரண்ய ரிஷிகளின் காலம் மாறி, பௌத்த சந்நியாசிகளின்காலம் வந்தது. மேற்கூறிய மகத்தான ஞானத்தை உலகத்திலிருந்துபிரித்து 'உலகத்தைத் துறப்பதே முக்தி' என்று சொல்லத் தொடங்கி விட்டார்கள். இங்ஙனம் உண்மைக்கும் பொய்க்கும் ஒப்பந்தமுண்டாய் இடையே பாகச்சுவர் போடப்பட்டது. ஆகவே,இக்காலத்தில் ஜாதியாசாரங்களில் எத்தனை அநாகரீகமும் மடமையும் இருந்த போதிலும், உண்மை கண்டவரின் சார்பிலிருந்து யாதொரு ஆட்சேபமும் பிறக்கவில்லை. உண்மைபபக்கத்தார் இதற்கெல்லாம் இடங்கொடுத்தே பேசுகிறார்கள். மரத்தின் கீழ் இருந்து சந்நியாசி சொல்லுகிறான்:- 'தன்னிடம்உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் காண்பவனே உண்மை காண்பான்' என்று. அது கேட்ட சம்சாரி தன்னிடம்உள்ள சிறந்த வஸ்துக்களை சந்நியாசியின் திருவீட்டுக்குள்ளேபோட்டுவிடுகிறான். ஆனால், தெய்வத்தின் பொது விதிக்குஅடங்கி நடப்போருடைய வீட்டிற்கு வண்ணான், அம்பட்டன் போகக்கூடாதென்று சம்சாரி விதி போடும்போது, சந்நியாசிஅதனை மகமலர்ச்சியுடன் ஏற்றுத் தனது ருஷ்டி மண்சாத்திஆசீர்வதிக்கிறான். இப்படித்தான் நமது ஜாதி வழக்கே கெட்டுப்போயிற்று. உண்மைக்குப் பரிந்து பேசுவோர் யாரும் இல்லாமலே போய்விட்டது. இதனால் பல நூற்றாண்டு நேர்ந்த அவமானத்தை-யெல்லாம் நாம் பொறுத்துக்கொண்டு அழுது கொண்டிருக்கும்படி நேரிட்டது.
ஐரோப்பாவில் அப்படி இல்லை. அங்கேஉண்மையை மனதிற்குள் மறைக்காமல் வழக்கத்திற் காட்டுகிறார்கள். ஜனக்காட்டிலும் ராஜ்யத்திலும் ஏதேனும்குற்றம் வெளிப்பட்டால் அதைப் பொதுஜனங்கள் உண்மைவழக்கால் சோதித்துத் திருத்த வழியுண்டு. இதனால் கிடைக்கும் சக்தியும் விடுதலையும் எல்லாருக்கும் பயன்பட்டுநம்பிக்கையையும் தைரியத்தையும் உண்டாக்குகின்றன. இந்தஉண்மை மாயமந்திர இருளில் மறைந்து கிடக்கவில்லை.திறந்த வெளியில், எல்லோரும் காணும்படி தானும் வளர்ந்துபிறரும் வளரும்படி செய்கிறது.
பல நூற்றாண்டு நாம் வாயை மூடிக்கொண்டுஅவமானப்பட்டதெல்லாம் ஒன்றுசேர்ந்து கடைசியில் அந்யராஜ்யமாகப் பரிணமித்தது. கை எப்போதும் உடம்பில் நோயுள்ள இடத்தைப் போய்த் தீண்டுவது போலவே நம்முடையகருத்து முழுதும் நம்மை ஆளும் மேற்குத் திசையாருடையராஜ்ய நெறியில் செல்லுகிறது. மற்றதை எல்லாம் மறந்து, 'எங்களுடைய இஷ்டத்தைச் சற்றே கவனித்து எங்களாட்சி நடக்கவிட வேண்டும். வேண்டினாலும் வேண்டாவிடினும், புறத்திலிருந்து விதிநியமங்கள் எங்கள் தலைமேல் பொழியாதுஇருக்கவேண்டும். ராஜ்யபாரம் முழுவதும் எங்களுக்குச் சுமையாகாதபடி, சக்கரங்கள் போட்ட யந்திரமாக்கி அதை உங்களுடன் நாங்களும் சேர்ந்து தள்ள இடம் கொடுக்க வேண்டும். பொறுப்பில்லாத அன்னியரின் ஆட்சியிலிருந்து விடுதலைபெற வேண்டும் என்ற பிரார்த்தனை இப்போதும் உலகத்தில் எல்லாத் திசைகளிலும் எழுகிறது. காலசக்தியின் தூண்டுதலால், இந்தப் பிரார்த்தனையில் நம்முடைய வாக்கையும்சேர்த்தது நன்றாயிற்று. அப்படியன்றி இப்போதும் வழக்கம் போல'யஜமானன் 'உத்திரவை' ஒப்புக் கொண்டு நடந்தால் அது நமக்குத்தீராத அவமானமாக முடிந்திருக்கும். இதனால் நம்முள்உண்மையின் ஒரு கிரணம் நுழையக்கூடிய துணை "இன்னும் ஏதோ மிஞ்சி இருப்பதாகத் தெரிகிறது. நாம் பார்த்தது உண்மையின் கிரணம் ஆனபடியாலே தான், நம்மையசையாதபடிபலிமிருகம் போல கட்டிப்போட்டிருந்த வீண்தற்புகழ்ச்சியை நான்நம்பிக்கையுடன் பழிக்கின்றேன். ராஜாங்கத்தாரை நோக்கி 'ஸாம்ராஜ்ய சபைகளில் எங்களுக்கு ஸ்தானம் வேண்டும்' என்றுகேட்பதும், ஜனங்களை நோக்கி, 'ஜாதியாசாரங்களிலும் சொந்தக்காரியங்களிலும்கூட எஜமான் போட்ட கோட்டை மீறி நடக்காதே'என்று சொல்வதும் ஒரேவித கர்வத்தால் உண்டாவது வினோதமன்றோ?
இதற்குப் பெயர் 'ஸனாதன தர்ம புனர் உத்தாரணம் என்கிறோம். ஸனாதன கக்ஷித் தலைவர் நாம் ஒரு கண்ணால் உறங்கி மற்றொரு கண்ணால் விழித்திருக்கும்படி அஸாத்ய உத்தரவு போடுகிறார்கள்.
கடவுளுடைய கோபமாகிய கழி நம் முதுகின்மேல் அடிக்கும்போதும், தேசாபிமானத்தால் மனம் புண்ணாகி,"மூங்கிற் காடுகளை எல்லாம் வெட்டிப் போடுவோம்" என்றுகூவலானோம். நாம் எத்தனை வெட்டினாலும் மூங்கிற்காடு உலகத்தில் மிஞ்சி இருக்கத்தான் செய்யும். காடென்ன செய்யும்?குற்றம் நமது. அது யாதெனில்:- நாம் உண்மையைவிட அதிகாரம்மேல் என்று மதிக்கிறோம். கண்ணைக் காட்டிலும் தோல் முகப்படாம் மேல்' என்று நினைக்கிறோம். நாம் இந்தக் குணத்தை நீக்கும் வரை, ஏதேனும் ஒரு காட்டில் நம்மை அடிக்க யாதேனும் ஒரு கழி மிஞ்சி இருக்கத்தான் செய்யும். ஐரோப்பாவிலும் முன்ஒரு காலத்தில் எல்லா விவகாரங்களிலும் பாதிரிகளுடைய அதிகாரம் மூர்த்தன்யமாய் நடந்தது. எங்கும் வீசி இருந்த பாதிரிவலையை அறுத்தபிறகுதான், ஐரோப்பிய ஜனங்கள் ஸ்வராஜ்யப்பாதையிலே கால் வைக்க இடம் உண்டாயிற்று. இங்கிலாந்து மாத்திரம் தீவானபடியாலும் கோயிலின் ராஜதானியாகிய ரோமாபுரியிலிருந்து மிகத் தூரம் ஆனபடியாலும் பிழைத்தது. இங்கிலாந்திலும் கோயில் (சர்ச்) அதிகாரம் முற்றிலும் நசித்து விடவில்லை. 'இங்கிலீஷ் கோயில்' பாட்டியைப் போல் முன் நடத்திய ஸர்வாதிகாரம் நீங்கி இப்போது இரக்கத்தால் அதுவும்இருந்து போகட்டுமென்று விடப்பட்டிருக்கிறது.
இங்ஙனம் 'மாமூல் கிழவி'யை இங்கிலாந்து தேசத்தார் அசைத்தது போலவே, ஸ்பெயின் தேசத்தார் செய்யக்கூடவில்லை. முன்னொரு காலத்தில் ஸ்பெயின் தேசத்தார் பாடுமிகவும் கொண்டாட்டமாக இருந்தது. அந்த அநுகூலத்தை அவர்கள் ஏன் இழந்தார்? 'மாமூல் கிழவி'க்கு மணியம் கொடுத்தமையாலேதான். ஸ்பெயின் தேசத்து பிலிப் ராஜா இங்கிலாந்தின் மீது சண்டை தொடுத்த காலத்தில், ஸ்பெயின்தேசத்துக் கப்பற் படை விவகாரங்களும் கோயில் விவகாரங்களைப்போலவே வலிய தளைகளுக்கு உட்பட்டிருந்தமை வெளியாயிற்று.இங்கிலீஷ் கப்பற் படையோ மிகச் சிறந்த சேனாதிபதிகளின் கீழே,தான் மிதக்கும் கடலலைகள் எப்படி விடுதலைகொண்டு வீசும் காற்றுக்கு ஒத்துச் சொல்லுமோ அதுபோல தானும் சென்றது. ஸ்பானியக் கப்பற்படையில் ஜாதிமரபுப்படி அதிகாரம் வகுத்திருந்தது. அது அசையாத மாமூலின் இரும்புப்பிடியினின்றுவிலக வழியில்லாமல் போயிற்று. இங்ஙனம் ஐரோப்பாவில் கோயிற்கட்டுக்குக் குருட்டுத்தனமாகக் கீழ்ப்பட்டிருந்த தளையைவெட்டித் தன் மதிப்பைக் காக்கக் கற்ற ஜாதியாரே தலைதூக்குவது இயல்பாயிற்று. ருஷ்யாவில் அவ்வாறு செய்யாத படியால், அங்கே உத்தியோகஸ்தர் காடாகப் பரந்து, ஜனங்கள்மிகச் சிறிய சர்க்கார் அதிகாரிக்கும் மிகவும் அற்பமான பழஞ்சாஸ்திரக் கட்டளைக்கும் முழந்தாள் படியிட்டு ஆண்மை இழந்துபோகின்றனர்.
ஸமயம் (மதம்) வேறு; குருக்கள் 1கட்டுப்பாடு வேறு என்பதை மறக்கலாகாது. அவை ஒன்றுக்கொன்று தீயும் சாம்பரும் போலாம். மதத்தை மீறி, கட்டுப்பாடு சொல்லும் போது நதியை மணல் மூடுவது போல் ஆகிறது. அங்கு நீர்கெட்டுப் பாலைவனம் போல் தோன்றும். 'இந்த நிலையைக் கண்டு மகிழ்ச்சி அடைவோர் மிகக் கேடு கெட்டவர்கள்' என்பதுவெளிப்படை.
ஒருவன் மற்றொருவனைக் கஷ்டப்படுத்தினால்,இருவருக்கும் கெடுதி என்று (சமயம்) மதம் சொல்லுகிறது.
மகள் விதவையாகிப் பட்டினி கிடக்கும்போது'இன்ன திதியில் அவளுக்குத் தாகத்துக்கு ஜலம் கொடுத்தாலபெற்றோர்களுக்குப் பாவம்' என்று குருக்களின் கட்டுப்பாடுசொல்லுகிறது. 'பச்சாத்தாபத்தாலும் ஒருவன் பாபத்தைக் கழுவலாம்' என்று ஸமயம் சொல்லுகிறது. 'கிரகணத்தன்று ஒருவன் இன்ன நீரில் முழுகினால்தான் பாவம் தீர்வதுடன் பதினான்கு தலைமுறை பிதிர்கள் செய்த பாவமும் தீரும்' என்று கட்டுப்பாடு சொல்லுகிறது. 'மலைகளையும் கடல்களையும் கடந்து போய், இவ்வழகிய உலகத்தின் வியப்புகளைக் கண்டு களிக்கவேண்டும்' என்று ஸமயம் சொல்லுகிறது'கடலைக் கடந்தவன் மண்ணிற் புரண்டு பிராயச்சித்தம் பண்ணவேண்டும்' என்று கட்டுப்பாடு சொல்லுகிறது. 'எக்குடிப் பிறந்தாலும், உண்மையுடையவன் தொழத்தக்கவன்' என்று ஸமயம் சொல்லுகிறது. 'பிராமணனாகப் பிறந்தவன் அயோக்கியனாக இருந்த போதிலும் அவன் பாத தூளை, பிறர்சிரத்தில் தரிக்கலாம்' என்று கட்டுப்பாடு சொல்லுகிறது. சுருக்கிச்சொன்னால், ஸமயம் விடுதலை போதிக்கிறது; குருக்கள்கட்டுப்பாடு அடிமை நிலையைப் புகழ்ந்து கீர்த்தனம் பாடுகிறது.
பக்தி குருட்டுப் பக்தியாக இருந்தாலும் அதிலொருவெளியழகுண்டு. இவ்வழகை நமது நாட்டில் யாத்திரை செய்யும்அன்னியர் சிலர் கண்டு மெச்சுகிறார்கள். சித்திரக்காரன் ஒருவன் இடிந்த வீட்டின் புராதன அழகுகளைப் பார்த்து மயங்கி, 'அதில்குடி இருக்க யோக்யதை இல்லை' என்பதை மறந்துவிடுவது போலே கங்கா ஸ்நானத்துக்குத் திருவிழாக் காலத்தில் பாரிஸால்நகரத்திலிருந்து ஆயிரக் கணக்கான யாத்திரைக்காரர் - பெரும்பகுதி ஸ்திரீகள் - வருவதைப் பார்த்திருக்கிறேன். அடடா! புகைத் தோணியிலிருந்து புகை வண்டிக்கும் புகைவண்டியிலிருந்து புகைத்தோணிக்கும் மாறுகிற கூட்டங்களில எல்லாம் அவர்கள் படும் கஷ்டத்துக்கும் அவமானத்துக்கும் ஓய்வில்லை. அவர்களுடைய பரிதாபத்துக்கிடமான பொறுமையிலும் ஒருவித அழகு இருக்கத்தான் செய்கிறது.அவர்களுடைய துயரங்கள் எப்போதும் அழகு பெறுகின்றன.வீண் கிரியை சடங்குகளுக்கு இடையே அவர்கள் வளர்க்கும்பிள்ளைகள் இவ்வுலக இன்பங்களுக்குப் பல்லைக் காட்டியிருந்துபரலோக நிழல்களைக் கண்டு நடுங்குகிறார்கள். தாம் நடக்கும்பாதையில் வளைவுதோறும் தாமே தடைகள் கட்டுவது அவர்களுடைய வாழ்க்கையின் ஒரே தொழிலாகக் காணப்படுகிறது. அத்தடை உயர்வதையே அபிவிருத்தி என்று கருதுகிறார்கள்.
இப்படி அவர்கள் தண்டனை அடையுமகாரணம் யாதெனில், ஈசனால் மனிதனுக்குக் கிடைத்தபேறுகளில் சிறந்தபேறாகிய தியாக சக்தியை இவர்கள் துர்விநியோகம் செய்கிறார்கள். கணக்குக் காட்டும் காலம்வரும்போது இவர்களால் நஷ்டக் கணக்குத்தான் காட்டமுடியும். இன்னும் ஓர் இடத்தில் லக்ஷக்கணக்கான ஜனங்கள், ஆணும் பெண்ணுமாக ஸ்தல தரிசனம் செய்து புண்ணியம்தேடப்போயினர். பாதையோரத்தில் ஒருவன் சாகக் கிடந்தான்.அவனுடைய ஜாதி இன்னதென்று தெரியாத காரணத்தால்,அவனுக்கு யாரும் தாகத்துக்கு ஜலம் கொடுப்பாரில்லை.பெருஞ் செலவு செய்து புண்ணியம் தேடப்போகும்இவர்களுடைய குருட்டுப் பக்தி எத்தனை அழகாகத் தோன்றியபோதிலும் இவருடைய காருண்யம் எத்தனை பயங்கரமானதுபார்த்தீர்களா! ஒரு தண்ணீரில் அனைவரும் சேர்ந்து விழும்படிதூண்டுகிற குருட்டுத் தன்மைதான், இனம் தெரியாத மனிதர்கஷ்டப்படும் போதும் இரக்க முண்டாகாமல் செய்துவிடுகிறது.தான் கொடுத்த சிறந்த வரத்தை இவர்கள் இங்ஙனம் துர்விநியோகம் செய்வதில் ஈசனுக்குத் திருப்தியில்லை.
படிப்பு, பக்தி, ஒழுக்கம் மூன்றும் இல்லாத கோயிற்குருக்களுடைய காலில், ஸ்திரீகள் பணத்தைக் கொட்டுவதை நான் பார்த்திருக்கிறேன். இங்ஙனம் செய்யும்வன்மையால் இவர்கள் உண்மைக்கும் கருணைக்கும் அருகே ஓர் அடியளவேனும் நெருங்கி வந்தனரா? இல்லை.
இங்கு ஓராக்ஷேபம் சொல்லலாம்:- "குருபுண்ணிய ஆத்மா என்று நம்பித்தானே பணம் கொடுத்தார்கள்.இந்த நம்பிக்கை அவர்களுக்கில்லாவிட்டால் மேற்படிபணத்தைச் செலவின்றி வைத்திருப்பார்கள். அல்லது சொந்தச்செலவுக்குச் செலவிட்டிருப்பார்கள். குருவின் கையில் கொடுத்தது விசேஷந்தானே?" என்று கேட்கலாம். தனக்காகச்செலவிட்டால் பணத்தின் பயனாவது கண்டிருப்பார்கள். தெய்வ பக்தியினால் செய்தோமென்ற பொய்மயக்கத்துக்கு அடிமைப்பட்டிருக்க மாட்டார்கள்.
வெளியே ஒரு நாயகனுடைய ஆக்கினைக்குஅஞ்சித்தன் உயிரை இழக்கத் துணிபவன் தனக்குத்தானே நாயகனாகும்போது, தர்மத்துக்காக உயிர் கொடுக்காமல் போகிறான்.
இங்ஙனம் நமது கிராமங்களில், ஆரோக்கியம்,கல்வி, உயிரின்பம் யாவும் வற்றிப் போய்விட்டன. 'கிராமத்தார் தம்முடைய சக்திகளைத் தாம் அறியும்படி செய்தாலொழிய அவர்களைக் காப்பாற்ற வேறு வழியில்லை'என்று கருதி நான் ஒரு கிராமத்தில் பிரயத்தனம் செய்தேன்.அந்தக் கிராமத்தில் ஒரு பக்கத்துக்கு ஜலம் ஒரு துளிக்கூடக்கிடையாது. தீ பிடித்தெரிந்தது. தழல் வீசி எரிகையிலே, கிராமத்தார் கூடியழுவதை யொழிய வேறொன்றும் செய்யமாட்டாமற் போயினர். நான் அவர்களிடம் சொன்னேன்:- "நீங்கள் பிரயாசை கொண்டு கிணறு தோண்ட இணங்கினால்கல் சுண்ணாம்புக் கிரயம் நான் கொடுக்கிறேன்" என்றேன்.கஷ்டத்தில் பாதி அவர்களுடையதாகவும் புண்ணியம்முழுவதையும் நான் கொள்ளையிட விரும்பிய தந்திரத்தைமெச்சித் தங்களால் முடியாதென்று சொல்லிவிட்டார்கள். அந்தக்கிணறு இன்னும் தோண்டியாகவில்லை. தண்ணீர்ப் பஞ்சம் இங்கே தீராமலேதான் இருக்கிறது. அக்நி உத்ஸவம் அடிக்கடிநடந்து வருகிறது.
ஆகவே நமது கிராமக் கஷ்டங்கள்தீராமல் இருப்பதன் காரணம் யாதெனில், ஒரு காரியம்செய்வதற்கு மோக்ஷ புண்ணியத்தை விரும்பிச் செய்தாலொழிய வேறு வழியில்லை. ஆகவே, ஒவ்வொருகுறையும் தெய்வந்தானே வந்து தீர்க்க வேண்டும்; அல்லதுமோக்ஷத்தை வேண்டி யாராவது செய்தாலுண்டு. மற்றபடிதாகத்துக்கு ஜலம் இல்லாமல் செத்தாலும் சாவார்களேயன்றி,கிராமத்தார் தாமாக ஒருகிணறு தோண்டிக் கொள்ளமாட்டார்கள்.இதற்குக் கிராமத்தாரைக் குறை கூறுவதிற் பயனில்லை. 'மாமூல் கிழவி' அபினி கொடுத்து அவர்களைப் பாதிததூக்கத்தில் வைத்திருக்கிறாள். ஆனால், படித்த பிள்ளைகள்அந்தக் கிழவியின் ஸ்துதியைப் பாடக் கேட்கும்போது, எனக்குஆச்சர்ய மிகுதியால் பேசமுடியாமல் போகிறது. "ஆஹா; இந்தககிழவி எத்தனை நல்ல மருத்துவச்சி; இவள் கைக்குள் நமதுதேசம் இருப்பது மஹிமையன்றோ! இவள் மடியிலிருந்தபடியேநமக்கு ஸ்வராஜ்யச் செங்கோலும் கிடைத்து விட்டால், எத்தனைநன்றாக இருக்கும்!" என்கிறார்கள்.
பட்டினி, தொத்து வியாதி, பஞ்சம், - இவை தலைதூக்கி ஆடுகின்றன. நம்மைப் புலியும் திருடரும் அடிக்காமற்காத்துத் துப்பாக்கி வைத்துக் கொள்ளும்படி ராஜாங்கத்தார்அனுமதி கொடுக்காமல் இருப்பது போலவே, மேற்கூறியதுன்பங்களைத் தடுப்பதற்குரிய உபாயங்களைத் தேடவொட்டாமல் ஜாதியாசாரத் தலைவர் தடுக்கிறார்கள் ஆனால் இவர்கள் நம்மிடையே 'தற்காப்புக்கு நீங்கள் கருவிகள்தேடலாமே. நீங்கள் ஸயின்ஸ் படித்து அதைத் தற்காப்புக்குஉபயோகப்படுத்தக் கூடாதென்று யாவரும் தடுப்பாரில்லையே"என்று கூறலாம். உண்மைதான்.
'தற்காப்புக்குரிய ஆயுதங்கள் நமக்குக் கிடைக்கவொட்டாமல் செய்துவிட்டார்கள் எனில் அதிசயோக்தியாகும்.ஆனால் அவற்றில் பயிற்சி பெற இடமில்லாமல் செய்வதற்குவேண்டிய முன் ஜாக்கிரதை எத்தனை உண்டோ அத்தனையும்பண்ணி வைத்திருக்கிறார்கள். நமது தேசத்தார் ஒரு பக்கம்,இராஜாங்கத்தார் ஒரு பக்கமாக, நம்மைச் சூழ ஏற்படுத்திஇருக்கும் எண்ணற்ற விதிகளைக் கடக்கக் கூடாதென்றபயத்தினால் நாம் சக்தி இழந்து, நம்மிடம் துப்பாக்கி இருந்தால்,திருடரால் ஏற்படும் விபத்தைக் காட்டிலும் துப்பாக்கியால்அதிக விபத்து நமக்கே உண்டாகும் போல் இருக்கிறது.
இந்தக் கஷ்ட தசையில் நாம் இருப்பதற்கு அன்னியர் அரசாட்சியே காரணம் என்றுசொல்லும் கக்ஷியை இப்போது ஆராய்ச்சி செய்வோம்.பிரிட்டிஷ் ராஜ்யத்தின் வேர்க்கொள்கை யாதெனில் 'ஜனங்கள்ஆட்சியில் கலக்க வேண்டும்' என்பதேயாம். அன்னியர் யாரும்பொறுப்பின்றி அரசு செய்யும் முறைமையை அக்கொள்கைகண்டிக்கிறது. நம்மிடம் இந்த விஷயத்தை அவர்கள் மறைக்கவில்லை. ஸர்க்கார் பள்ளிக்கூடங்களில் இதை நமக்குப்பஹிரங்கமாகக் கற்றுக் கொடுக்கிறார்கள். இதைப்பரீக்ஷைக்கு உருப்போடுகிறோம். இந்த அறிவை இனி நம்மிடமிருந்து பறிக்கஇடமில்லை. நம்முடைய காங்கிரஸ் சபைகளும் சங்கங்களும் இந்தக் கொள்கையை ஆதாரமாக உடையன. ஐரோப்பிய ஸயின்ஸ் தன் இயற்கையாலேயே எல்லாருக்கும் கிடைக்கத்தக்கதாக இருப்பதுபோல், மேற்படி பிரிட்டிஷ் ராஜ்யக் கொள்கையும் தன் இயற்கையாலேயே பாரத தேசத்துஜனங்களின் அங்கீகாரத்தை வேண்டுகிறது. ஹிந்து தேசத்துப்பிள்ளைகளுக்கு ஐரோப்பிய ஸயின்ஸ் கற்றுக் கொடுக்கக்கூடாதென்று சொல்லும் ஆங்கிலேயர், ஒன்று, அல்லது பத்து,அல்லது ஐந்நூறுபேர் இருக்கக்கூடும். ஆனால், அந்த ஸயின்ஸ் (சாஸ்திரமோ) பிறப்பிடத்தையும் நிறத்தையும் பொருட்டாக்காமல் எல்லோரும் வந்து தன்னைப் படித்துப்பயன் பெறும்படி கூவியழைத்து, அவ்வாங்கிலேயரை அவமானப்படுத்தும். அதுபோல், ஐந்நூறு அல்லது ஐயாயிரம்ஆங்கிலேயர் பிரசங்கங்களிலும் பத்திரிகைகளிலும் ஹிந்துதேசத்தார் ஸ்வராஜ்யம் பெறுவதைத் தடுக்க வேண்டுமென்று உபந்நியஸித்தாலும், பிரிட்டிஷ் ராஜ்ய கொள்கையானது பிறப்பிடத்தையும் நிறத்தையும் பொருட்டாக்காமல் எல்லோரும்தன் பக்கம் சேரும்படி கூவி இவ் வாயிரக்கணக்கான ஆங்கிலேயர் சொல்லும் வார்த்தையை இகழ்ச்சிக்கு இடமாக்குகிறது. 'பிரிட்டிஷ் கொள்கைகள் நம் போல்வார்க்குததகுதியில்லை' என்ற அநாகரீகமான மறுமொழி சொல்லக்கூடும்.பிரம்ம ஞானமும் விரிந்த வாழ்வும் சூத்திரனுக்குக் கிடையாதென்று முன்பு பிராமணர் விதிபோட்டது போலேதான்.
ஆனால், பிராமணன் தனது ஸ்தானத்தைமுன் ஜாக்கிரதையலே கெட்டிப்படுத்திக் கொண்டான். புறத்தைஒடுக்கு முன்பு ஜனங்களின் அறிவை ஒடுக்கி விட்டான். அறிவின்வேர்களைச் சூத்திரனிடமிருந்து பறித்து விட்டபடியால் இவன் ஸ்வதந்தர கார்யம் செய்ய ஸாத்தியப்படவில்லை. பிறகுசூத்திரனுடைய தலை பிராமணனுடைய பாததூளியிலேஈடுபட்டிருப்பதை ஸாவதானமாகக் காக்க வேறு சிரமம் வேண்டியதில்லை ஆயிற்று. ஆனால் நம்முடைய பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் விடுதலைக்கு வழிகாட்டும் அறிவுக்கதவை முற்றிலும்அடைத்துவிடவில்லை. அதிகாரிகளுக்குப் பச்சாத்தாபம் உண்டாய்,இங்கொரு கதவை அங்கொரு கதவை அடைப்பதாகிய முயற்சியைமிகத் தாமஸமாகக் கைக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும்,'சுகத்தை உத்தேசித்துத் தர்மத்தைக் கைவிடுதல் ஆத்ம சக்திக்குவழியில்லை' என்பதை அவர்களாலே கூட மறக்கலாவதில்லை.
பிரிட்டிஷாருடைய உட்குணத்தில் நம்ஸ்வதந்திரங்கள் புதைந்து கிடக்கின்றன. இந்த ஸந்தோஷகரமான உண்மையை நமது முழுவலிமையுடன்புத்தியில் நிறுத்திக் கொண்டோமானால், அது நிறைவேறுவதற்காக, நாம் கஷ்ட நஷ்டங்களுக்கு உட்படுதல்எளிதாகும். பழைய சாத்திரப்படி "அடங்கி நடப்பதை"க்கைப்பிடித்தோமோனால், நமக்கு மகத்தான ஆசாபங்கம் நேரிடும். இரண்டு வகைகளில் ஏற்கனவே இது வெளிப்பட்டுநிற்கிறது. ரஹஸ்யக் கூட்டத்தாரின் கொடுஞ் செயல்கள் ஒருவகை, நம்முடைய கூட்டத்து ராஜ தந்திரிகள் தர்க்கம் பண்ணுகிற வியர்த்தம் மற்றொரு வகை. "இந்த வைஸ்ராய்நல்லவரா? அந்த வைஸ்ராய் நல்லவரா? 'மார்லி' வந்தால்நமக்கு நிறையச் சீர்திருத்தம் கிடைக்குமா கிடைக்காதா?வீட்டுப் பூனை காட்டுக்குப் போனால், காட்டுப் பூனைபோலேகாட்டுத் தனமாய் விடுமா, ஆய்விடாதா?"
இருந்த போதினும், நாம் மானுஷ்ய ஜாதியினிடம்அவநம்பிக்கை கொள்ளக்கூடாது. பிரிட்டிஷ் ராஜ்யத்தின்அதன் வலிமை ஒன்று மாத்திரமே பெரிதன்று. அதன் அஸ்திவாரக் கொள்கைகள் அதனிலும் பெரியன என்பதைநாம் மனதார ஒப்புக்கொள்ளுகிறோம். அடிக்கடி இதற்குவிரோதமாக நடக்கக்கூடும். 'லோபம், அதிகார விருப்பம்,கோபம், பயம், கர்வம், இவை எல்லாம் தொழில் செய்வதைநாம் பார்க்கலாம்' என்பது மெய்தான். மஹிமையும், தீரமும்,விரதமும், பக்தி விசுவாசங்களும் உடையவராகிய ராஜ ஜாதியாரிடத்தில் உள்ள நல்ல அம்சங்களுடன் நாம் ஒட்டலாம்.அங்கே சத்துருக்கள் நம்மை எங்ஙனம் தாக்கிய போதிலும்,நாம் வெற்றி பெறுவோம். நினைத்த பொழுதெல்லாம், புற வெற்றி கிடைக்காவிடினும், அகவெற்றி நிச்சயம். நாம்அற்பர்களாய்ப் பயம் கொண்டிருந்தால், நம்மை ஆளுவோரின்பெரிய கொள்கைகளையெல்லாம் நமது மட்டம் ஆக்கிவிடுவோம். அவர்களுடைய கெட்ட குணங்களே தலை தூக்கஇடங்கொடுப்போம். பிராமணன் தன்னைக் கீழ் ஜாதி என்பதைச்சூத்திரன் எப்பொழுது ஒப்புக்கொண்டானோ, அப்பொழுதுபிராமணனுக்குப் பள்ளம் தோண்டியாய் விட்டது. எளியவன்வலியவனுக்குச் செய்யும் தீமை, வலியவன் எளியவனுக்குச்செய்யும் பகைமைக்கு நிகராகக்கூடும். ஒருமுறை ஒரு உயர்ந்தஸர்க்கார் உத்தியோகஸ்தர் என்னிடம், "போலீஸ் கொடுமையைப்பற்றி எப்போதும் முறையிடுகிறீர். என் மட்டில், நீங்கள்சொல்வதை நம்பக்கூடாதென்ற எண்ணமில்லை. ஆனால்,பெயர்வழி, விஷயம் எல்லாம் கொண்டுவந்து ருஜுப்படுத்தும்"என்றார். உண்மைதான். எல்லா அநியாயங்களையும் பஹிரங்கமாகத் தூற்றி, உலகறிய மீட்டும் மீட்டும் முறையிடத்தக்க தைரியவான்கள் சிலரேனும் நமது தேசத்துக்குவேண்டும். ஆனால் அற்பப் போலீஸ் சேவகனாக இருந்தபோதிலும் அவன் பின்னே பூதாகாரமான ராஜ்யாதிகாரம்ஒன்றிருக்கிறது. அவன் மேல் குற்றஞ் சாராதபடி காப்பாற்றுவற்காகப் பொதுப் பணத்திலிருந்து ஆயிரக் கணக்காகச் செலவு "செய்யக் கூடுமென்ற பீதியை மறுக்கமுடியாது. நம்மைநசுக்கினால் பொறுத்துக் கொண்டிருப்பதே நம் உடம்புக்கு நல்ல தென்று சில அதிகாரிகள் சொல்வது நல்ல மாதிரிதானே?இல்லாவிட்டால் அதிகாரிகளுடைய "ப்ரெஸ்டிஜ்" (கௌரவம்)குறைந்து போகாதோ? "ப்ரெஸ்டிஜ்" நம்மைப் பயமுறுத்தினபழம் பூச்சாண்டி; எப்பொழுதும் நம்முடைய செவியைப் பிடித்துக் கொண்டிருக்கும் நாயகன்; பேஹிலா காவியத்திற்குரியமாநஸா கவி சங்கனுடைய சண்டி; அதன் பூசைக்குப் போகையில் தர்ம நியாயங்களை அவமதித்து இடறிக் கொண்டுபோகவேண்டும்; இல்லாவிட்டால் அது நம்மை இடறும். எனவே, "ப்ரெஸ்டிஜ்" தேவதைகளுக்கு நமஸ்காரம் போடு.
யா தேவி ராஜ்யசாஸனே
'ப்ரெஸ்டிஜ்' ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம:
ஆனால் இது வெறும் அவித்தை; மாயைதவிர வேறொன்றும் இல்லை. நம்முடைய புறக் கண்ணுக்குத்தோன்றிய போதிலும் நாம் அதை நம்பக்கூடாது. உண்மைஅதன் பின்னே நிற்கிறது. அது யாதெனில் "நம்முடையஆட்சி, நம்முடைய விவகாரம்" இந்த உண்மையிலேதான்பிரிட்டிஷ் ராஜ்யத்துக்கு வலிமை உண்டாகிறது. இதுவே நமக்குப்பலம். பிரிட்டிஷ் ராஜ்யத்துக்கு வலிமை உண்டாகிறது. இதுவேநமக்குப் பலம். பிரிட்டிஷ் கொள்கைகளை நாம் தைரியமாக நம்பாவிட்டால், போலீஸ் நம்மை நசுக்கிக் கொண்டேதான் இருக்கும். மாஜிஸ்ட்ரேட்டால் நம்மைக் காகவும் முடியாது; "ப்ரெஸ்டிஜ் தேவதை மனுஷ்ய பலிகேட்டுக் கொண்டே இருக்கும். இங்கு சிலர்:- "பலத்தைக் காட்டிலும் தர்மம் பெரிதன்று; பரமார்த்திகமாகப் பேசலாமே யொழிய, நடையில்வெளியிட்டால் ஆபத்து வரும்" என்று கூறி ஆக்ஷேபிக்கலாம்ஸங்கடம் வரக்கூடும். இருந்தாலும், நாம் நம்பிக்கைப்படி செய்யவேண்டும். 'ஸ்வதேசத்தாரே "லஞ்சம் வாங்கிக் கொண்டும், பயந்தும் உமக்கு விரோதமாக ஸாக்ஷி சொல்வார்களே" என்றுசொல்லக்கூடும். இருந்தாலும், உண்மை யென்று கண்டு கொண்டதை வெளியிட்டுச் சொல்ல வேண்டும். ஸ்வதேசத்தாரேஉம்மை மறந்து நின்று தலையில் அடிப்பார்களே. லஞ்சத்தையும்ஸ்தியையும் வேண்டிச் செய்யலாம்; எனினும், நாம் உண்மையை நம்பவேண்டும். "அவ்வளவு தூரம் நம்பலாமா?"சரியாக, அவ்வளவு நம்பியாக வேண்டும்; துளி குறைந்தாலும்போதாது.
ராஜாங்கத்தாரிடம் பெரிய விஷயங்கள் கேட்கிறோம்.ஜனங்களுக்குப் பெரிய வரங்கள் தரவேண்டும். இல்லாவிட்டால்ராஜாங்கத்தாரிடம் செய்யும் பிரார்த்தனை பயன்படாது.
'எல்லோருமே வீரர் அல்லர்; பயந்தவர்கள் உலகத்தில் உண்டு' என்பதை நான் அறிவேன். இருந்தாலும்,எல்லாத் தேசங்களிலும், எல்லாக் காலங்களிலும் சிலர் தமதுஜாதியின் இயற்கைப் பிரதிநிதிகளாகப் பிறந்து தேசத்தின் கஷ்டங்களைத் தாம் பொறுக்கிறார்கள். எதிர்ப்பை எல்லாம் வெட்டிப் பாதை போட்டு, மற்றவர்பின் வருவதை எளிதாக்குகிறார்கள்; மனுஷ்ய ஜாதிகளின் வெளிநடைகளில் எத்தனை விபரீதங்கள் இருப்பினும், அவற்றைப் பொருட்டாக்காமல் அதனிடம் நம்பிக்கை செலுத்துகிறார்கள்;நிஜாந்தகாரத்தினிடையே கண் விழித்து உதயம் வருமென்றுகாத்திருக்கிறார்கள். கோழைகளின் பயத்தை நகைத்து,
-
ஸ்வல்ப மப்யஸ்ய தர்மஸ்ய
த்ராயதே மஹதோ பயாத்
அதாவது, "இந்தத் தர்மத்தில் சிறிதளவுபெரிய பயத்தினினுறும் காப்பாற்றுகிறது" என்ற, வாக்யத்தை உரைக்கிறார்கள். ராஜ்யத்தில் உண்மை அம்சம்உண்டானால் அதை வணங்குவோம்; பாபத்தை வணங்கோம், பயத்தை வணங்கோம்.
ஒருவனுடைய குழந்தைக்கு உடம்பு சொஸ்தமில்லை; ஐரோப்பிய டாக்டருக்கு பெரிய தொகைகொடுத்து வரவழைத்தான்; டாக்டரும் நாட்டு மந்திரவாதியைப் போல உச்சாடனங்கள் செய்யத் தொடங்கினான்; "சிகிச்சை செய்யும்; இந்தக் காரியத்துக்கு உம்மை அழைக்கவில்லை" என்று இவன் சொன்னான்;டாக்டர் கோபத்துடன், 'உனக்கென்ன தெரியும்? நான்வைத்தியன்; நான் எது செய்தாலும் அதுவே வைத்தியம்' என்றான். அப்போது இவன் 'உன்னைக் காட்டிலும் உன் தொழிலே பெரிது. நான் பணம் கொடுத்தது தொழிலைக்கருதி, என்கிறான். டாக்டர் இவனை அடித்துக் கீழே தள்ளிபபணத்தை இடுப்பில் சொருகிக் கொண்டு"போவதாக பாவனைசெய்து கொள்வோம். அவன் வண்டி சவாரி செய்துகொண்டுவீட்டுக்குப் போகையில் அவன் மனமே அவனைச் சீயென்றுசொல்லாதா? அதுபோல, இப்போது பிரிட்டிஷ் அதிகாரிகளின்உத்தரவுகளுக்கு உட்படாமல், பிரிட்டிஷ் ஜாதியின் ராஜ்யக்கொள்கைகளை நான் அங்கீகாரம் செய்வதை உத்தேசித்துஒருவேளை இன்று என்னை அதிகாரிகள் கஷ்டப்படுத்தலாகும்;ஆனாலும், எனக்கு நாளை வெற்றியுண்டாகும்.
நூற்றைம்பது வருஷம் பிரிட்டிஷ் ஆட்சி நடந்தபிறகு, இன்று சென்னை மாகாணத்தாரின் கஷ்டங்களுக்கு வங்காளத்தார் இரக்கப்படக் கூடாதென்று கட்டளை போடுகிறார்கள். பிரிட்டிஷ் ராஜ்யத்தின் முதலாவது நன்மை என்னவென்றால், 'அதனால் பம்பாயும், சென்னைப் பட்டணமும், வங்காளமும், பஞ்சாபும் ஐக்கியப்பட்டு வருகின்றன,என்று சொல்லக் கேள்வியுண்டு. மேற்குக் கண்டத்தில் பிரிட்டிஷார் பெல்ஜியத்துக்காகவும் பிரான்ஸுக்காகவும் இரத்தத்தை சிந்தி யமனை எதிர்க்கிறார்கள் என்றும் வதந்தி.அதே மூச்சிலே சென்னைப்பட்டணத்தாரின் சுகதுக்கங்களைவங்காளத்தார் கவனிக்கக் கூடாதென்று சொல்லலாமா? அதைஎத்தனை உரக்கக் கூறிய போதிலும், மனதிற்குள்ளே வெட்கம்உண்டாகாதோ?
அதிகாரிகளின் ரஹஸ்ய லஜ்ஜைக்கும் நம்முடையபஹிரங்க உல்லங்கனத்துக்கும் இடையே ஒரு பாலம் போடவேண்டும். இங்கிலீஷ்காரர் இந்தியாவிற்கு கொடுத்த வாக்கினால்கட்டுப்பட்டிருக்கிறார்கள். ஐரோப்பிய நாகரீகத்தின் பிரதிநிதியாகியஇங்கிலாந்து இந்தியாவிற்கு வந்தது பிரதிநிதியாகிய இங்கிலாந்துகொடுத்த வாக்குறுதியே மேற்படி ஐரோப்பிய நாகரீகத்தின் ஞானமந்திரம். இதுவே அவர்களுடைய ராஜ்யத்துக்கு பலம். இதைமஹிமைப்படுத்துவோம். 'இந்தியாவை நசுக்கும் பொருட்டுஆங்கிலேயர் இங்கு வரவில்லை' என்பதை அவர்கள் மறக்கநாம் இடங்கொடுக்கமாட்டோம்.
ஏதேனும் ஒரு பெரிய ஜாதியாருக்குபெரிய அனுபூதி உண்டாயின், அது பிறர்க்கும்கொடுக்கத்தக்கது, லோபத்தினால் தனக்கே நஷ்டம் உண்டாகும். ஸயன்ஸும் மனுஷ்ய உரிமைகளும் ஐரோப்பாவின் அனுபவப் பயன். இந்தச் செல்வத்தை நமக்குக் கொடுக்கும் பொருட்டாக தெய்வம் இங்கிலாந்தைநம்முடைய கரைகளில் கொண்டுவந்து சேர்த்தது. இந்தக்கடமையை நிறைவேற்றும்படி அவர்களை வற்புறுத்துவதுநம்முடைய கடமை. ஒரு பாலார் தம்முடைய கடமையைச்செய்யாவிட்டால், இருபாலாருக்கும் மறதியும் வீழ்ச்சியும்உண்டாகும்.
இங்கிலீஷ்காரர் தம்முடைய தேச சரித்திரத்தைத்திருஷ்டாந்தமாகக் காட்டி, "நாங்கள் நெடுங்காலம் போராடிஉழைத்ததன் பயனாக மிகவும் தாமஸமாகவே எங்களுக்குஸ்வராஜ்யம் கிடைத்தது" என்று சொல்லக்கூடும். இருக்கலாம்!வழிகாட்டுகிற ஜாதிக்குக் கஷ்டம். பின்னே வருகிற ஜாதிக்குசுலபம். திருஷ்டாந்தமாக, அமெரிக்காவில் வங்காளிமாணாக்கர்கள் தாமே யந்திரங்கள் செய்கிறார்கள். அதற்காகஆதி காலத்தில் அடுப்புச் சட்டியிலிருந்து நீராவிக் கருவிதோன்றிய நாள் முதல் இன்று வரையில் படிப்படியாக வந்த நூறு ஆண்டு காலம் இவனும் படித்துக்கொண்டு வரவில்லை.ஐரோப்பாவில் பலகாலம் வளர்ந்த பயிரை ஜப்பான் ஒருக்ஷணத்தில் கொண்டுபோய் வைத்து நேரே பயிரிட்டு வருகிறது.ஸாமர்த்தியம் குறைவென்றால், அதற்கு விரைவாகவே ஸ்வராஜ்யவழக்கத்தைக் கைக்கொள்ளவேண்டும். 'ஒருவனிடம் ஒரு திறமைஇல்லை' யென்று நாம் முன்னதாகவே தீர்மானம் செய்தால்,அப்படியே இல்லாமல் போகும். அவன் திறமை நம்முடையகண்ணுக்குத் தெரியாமலே போகும். நம்மவரை நாமே இகழ்ந்து,அவர்களிடம் நம்மை பிறப்பதை நாம் தடுத்து அவர்களை உலகம் இகழவைத்தால், அதைவிடப் பெரிய குற்றம் வேறொன்றும் இல்லை. சரித்திரத்தில் ஸூர்யோதயமாகிறபோதுகிழக்கே ஒளி ஊர்ந்தூர்ந்து வராது; பாய்ந்து வரும். எட்டுத்திசையையும் உடனே நிரம்பச் செய்யும். 'உலகத்து ஜாதியார்அங்குலத்தின் மேல் அங்குலமாக மேன்மைக்கு நகர்ந்துதான்செல்லவேண்டும்' என்று விதிபோட்டால் எந்த ஜாதிக்கும்மேன்மை நேரிடாது. தகுதி உண்டான பின்புதான் விடுதலையை விரும்பலாமென்று விதி போட்டால், எந்த ஜாதிக்கும் விடுதலைஉண்டாயிராது.
ஐரோப்பியர் தம்முள் ஜனாதிகாரம் உண்டென்றுபுகழ்ச்சி சொல்லிக் கொள்கிறார்கள். ஐரோப்பியர் அமெரிக்கர்வெளி டம்பத்துக்குள் மறைந்துகிடக்கும் அழுகற்சேற்றை கீறவிரும்பவில்லை. இவர்களுக்குத் தலை அதிகாரமாக ஒன்றைநாட்டி, மேற்படி சேறு முழுதும் கழுவின பிறகுதான், ஜனாதிகாரம் நடத்தலாமென்று விதி போட்டால் சேறும் நீங்காது;நீங்குமென்ற நம்பிக்கைக்கும் இடமிராது.
இப்படி நமது ஜாதியாசாரங்களிலும்,தனி நாட்டங்களிலும், பிழைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை நான் மறைக்க விரும்பினாலும்என்னால் முடியாது. எப்படிக்கும் நம்மை நாமே ஆளவேண்டும். ஒரு விளக்கு மங்கினதைக் குறித்து,மற்றொரு விளக்கை ஏற்றாமல் தவிர்க்கவிடலாகாது. மனுஷ்யஜாதி மொத்தத்துக்கே பெரிய திருவிழா நடக்கிறது. எல்லாநாட்டு விளக்குகளும் எல்லா விஷயங்களிலும் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஊர்கோலம் முன்னே செல்லுகிறது. நம்முடைய விளக்குச் சற்றே அவிந்தால் இங்கிலாந்தின் விளக்கிலே சற்று பற்றவைத்துக் கொள்ளலாகாதோ? இதற்கேன்கோபம்? இதனால் பிரிட்டிஷ் ஒளி குறையாது. உலகத்தின்ஒளி அதிகப்படும்.
திருவிழாவில் தெய்வம் நம்மைக் கூப்பிடுகிறது.பூசாரி தடுக்க நாம் இடம் கொடுக்கலாமா? சிறு பணக்காரர்வந்தால் பூசாரி பல்லைக் காட்டுவான். ஆஸ்திரேலியாவும்,கனடாவும் வந்தால் எதிர்கொண்டழைத்து நல்வரவு சொல்லுவான்.திருவிழாக் கடவுளுக்குக் கண் குருடில்லை. இப்படிப்பட்ட வேற்றுமைகளை அவர் பொறுக்க மாட்டார். உள்ளத்திலேபாவம் வெட்கமாக வந்து சுடாவிட்டால், வெளியே தெய்வகோலமாக வந்து சுடுகின்றது.
பிரிட்டிஷாரும் நாமும் கலந்து இக்காரியம்செய்யவேண்டும். வங்காளிகளிடம் எனக்கு நம்பிக்கைதான்.வாலிபர் கிழவேஷம் போட்டுக்கொண்டு கீழ்ப்பார்வை பார்க்கக்கூடாது. ஆங்கிலேயருக்குள் சில மஹாத்மாக்கள் தோன்றிஇங்கிலாந்தின் சரித்திரப் பயனை நாமும் அனுபவிக்கும்படிபேசி சில ஜனங்களிடம் அவமானப்படுகிறார்கள்.
இந்தியாவிலும் பிறர் சினத்தையும் தமர் நகைப்பையுங் கருதாமல், தோல்விக் கஞ்சாமல், ஆண்மை காட்டும் ஆண் மக்கள் வேண்டும்.
நமது தேசத்தின் குலதெய்வம், என்றும் விழித்திருக்கும் நித்யதேவன், நம்முடைய ஜீவன் இப்பொழுதுவெளியதிகாரிகளுக்குப் பயந்து குருட்டாசாரம் என்ற தளைபூண்டு புழுதியில் கிடப்பதை நீக்கி, அதன் ஸஹஜ நிராகாரநித்ய ஜயாமிர்த ரூபமான ஆத்ம ரூபத்தில் சேரும்படி அந்தஈசன் கூறுகிறான்.
அடிமேல் அடியடித்து "ஆத்மா நம் வித்தி","தன்னை அறி" என்கிறான்.
காலத்துக்கு முந்தியே கிழவனாகி, குருட்டு நம்பிக்கை என்ற மூடச்சுமையால் முதுகு வளைந்துபோய்,தன்னைத் தான் நம்பாத கோழையே, கேள்!
நமக்குள்ளே சில்லறைச் சண்டை, அற்பப்பகை, அற்பப் பொறாமைகளுக்கெல்லாம் இதுவன்றுகாலம். கஞ்சிக்குப் பிச்சைக்காரர் சண்டையிடுவது போலே,சிறு தயவுகளை விரும்பி நமக்குள்ளே சண்டைபோடும்காலம் சென்றது. இருட்டு மூலைக்குள் உட்கார்ந்து கொண்டு,நம்மை 'நாமே மஹான்கள்' என்று பாவனை செய்வதில்பயனில்லை. உலகத்தாரின் சபைகளில் நம்முடைய கர்வம்சிறுமைப்படுகிறது. சக்திஹீனர் போலே நாம் பிறரைக் குற்றங்கூறுதல் கூடாது. பல நூற்றாண்டு செய்த பாவம் பெருஞ்சுமையாய், நமதாண்மையை நசுக்கி நம் அறிவை மயக்கி விட்டது. அவற்றின் பெருஞ் சுமையைத் தள்ளி எறிய ஒருபெரிய முயற்சி செய்யக் காலம் இதுவேயாம். நாம் முன்னேபோகவொட்டாமல் இந்தச் சுமை பின்னே இழுக்கிறது. சென்றதை வருவதை வசியவித்தை போல கலங்கச் செய்கிறது. சென்றகாலப் புழுதியுஞ் சருகும் புதிய உதயத்தைமறைக்கின்றன. நம்முடைய புதிய இளமைத் தொழிலை அவை மூடுபனி போலே மறைக்கின்றன. நிஷ்பிரயோஜனம் என்ற அவமானத்திலிருந்து தப்ப விரும்பினால், இந்தச்சுமையைக் கூசாமல் வீசி எறிந்துவிட வேண்டும். மனுஷ்யஜாதி எப்போதும் முன்னே நோக்கிச் செல்லுகிறது; எப்போதும்விழிப்புடன் புது நிலங்களைத் தேடி மரணத்தை வெல்லுகிறது.ஜகத்தின் பெரிய சிற்பிக்கு வலக்கை போன்றது. உண்மையைக்கெஞ்சி அறிவுச் சுடர் கொளுத்திய வீதிவழியே செல்லும்பொழுது, யுகத்துக்கு யுகம் "வெற்றிகொண்டு முன்னேறும்போது,உலகம் முழுவதும். எதிரொலி கேட்கத் தனி ஆரவாரம் உண்டாகிறது. இந்த மனுஷ்ய ஜாதியுடன் நாம் ஸம நடையாகச்செல்ல விரும்பினால். இந்த முதுகுச் சுமையைக் கூச்சப்படாமல்வீசி எறிந்து விடவேண்டும்.
புறத்திலிருந்து நம்மீது இடைவிடாமல் அவமானமும்கஷ்டமும் பட்டுப்பட்டு தீண்டலாயிருப்பதைச் சுத்தி பண்ணித்தீர்க்கவேண்டும். 'தானாக விரும்பித் தான் உழைத்தல், என்னும்ஹோமத்தைச் செய்து, சுத்தி பண்ணவேண்டும். அந்த யாகத்தீயில் நம்முடைய பாவங்கள் வெந்துபோம். அஞ்ஞானப் புகைவிலகும். சோம்பற்குணம் சாம்பாலாகும்.
பெரிய தீ தேவா! நீ தீரன், தேவன்; எம்மிடத்தேமஹத்தாயும். துக்கரஹிதமாயும், நாசரஹிதமாயும் நாயக மாயும்அமரமாயும் உள்ள அம்சத்துக்கு நீ நாதன்,
அதனை உனது ராஜ ஸிம்ஹாஸனத்துக்கு வலக்கையாக அழைக்கிறாய். நம்முடைய சோர்வும், அறியாமையும் பழியுற்று, நமதடிமைக்குணம் தண்டனைப்பட்டு நம்மினின்றும் பிரிந்து செல்க; நன்மை விளைக.
------------
ஓம் சக்தி - புனர்ஜன்மம் (2)
பாப புண்ணியங்களுக்கு இணங்க மானிடரின் மர்மத்தினுடைய பலனாக அடுத்த ஜன்மத்தில் உயர்ந்த பிறப்பேனும் தாழ்ந்த பிறப்பேனும்கிடைக்கும் என்பது நமது தேசத்துப் பொது நம்பிக்கை.பாவம் செய்யும் ஒருவனை 'நீ அடுத்த ஜன்மம் மிருகமாகப் பிறப்பாய்' என்றால் அவனுடைய மனம்பதைக்கிறது. ஆனால், இந்த ஜன்மத்திலேயே தாம்மிருகங்களைப் போலிருப்பதைக் கவனிப்பது கிடையாது.ஒவ்வொரு நிமிஷத்திலேயும் ஒருவன் நினைக்கும் நினைப்புகளும் செய்யும் செய்கைகளும் அவன் பலவிதப்பிறவிகளை அடைவதற்குக் காரணமாகின்றன. இந்த உலகத்திலேயே, இப்பொழுதே, ஒரே சரீரத்திலுள்ள ஒருவன்ஆயிரம் பிறவிகள் பிறந்து மடிகிறான். ஒவ்வொரு க்ஷணமும்ஒவ்வொருவனும் பிறந்து பிறந்து பிறந்து மடிகிறான்; ஒவ்வொரு க்ஷணமும் ஒவ்வொருவனும் பிறந்து பிறந்துமாய்கிறான் என்று கூறத் தகும். மிருகங்களைப் போன்றமனிதர்களை நாம் பார்த்ததில்லையா? நம்மை "நாம்கவனிக்குமிடத்து, எத்தனை விதமான மிருகங்களாயி ருந்திருக்கிறோம் என்பது தெரியும். வஞ்சனையாலும் சூத்திரத்தாலும் சமயத்திற் கேற்பப் பலவித கபடங்கள் செய்துஜீவிப்பவன் நரிதானே? ஊக்கமில்லாமல் ஏதேனுமொன்றைநினைத்துக் கொண்டு மனஞ்சோர்ந்து தலைகவிழ்ந்துஉட்கார்ந்திருப்பவன் தேவாங்கு. மறைந்திருந்து பிறருக்குத்தீங்கு செய்பவன் பாம்பு. தாமதத்திலும், புகழிலும் விருப்பமில்லாமல், அற்ப சுகத்திலே மூழ்கிக் கிடப்பவன்பன்றி. சுயாதீனத்திலே இச்சையில்லாமல் பிறர்களுக்குப்பிரியமாக நடந்து கொண்டு, அவர்கள் கொடுத்ததை வாங்கிவயிறு வளர்ப்பவன் நாய், கண்ட விஷயங்களிலெல்லாம்திடீர் திடீர் என்று கோபமடைகிறவன் வேட்டைநாய். காங்கிரஸ்சபையிலேயும் சேர்ந்து கொண்டு, ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் ஹிதமாக நடக்க வேண்டுமென்ற விருப்பமுடைய ''மேத்தா'' கட்சியைச் சேர்ந்தவன் வௌவால்.அறிவுத் துணிவால் பெரும் பொருள்களைத் தேர்ந்து கொள்ளாமல் முன்னோர் சாஸ்திரங்களைத் திரும்பத் திரும்பவாயினால் சொல்லிக் கொண்டிருப்பவன் கிளிப்பிள்ளை.பிறர் தன்னை எவ்வளவு அவமதிப்பறாக நடத்தியபோதிலும்,அவன் அக்கிரமத்தை நிறுத்த முயலாமல் தமது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன் கழுதை. வீணமினுக்கு மினுக்கி டம்பம் பாராட்டுகின்றவன் வான்கோழி.கல்வியறிவில்லாதவனை மிருகக் கூட்டத்திலேயும் சேர்க்கலாகாது. அவன் தூண். தான் சிரமப்படாமல் பிறர்சொத்தை அபகரித்து உண்ணுபவன் கழுகு. ஓர் நவீன உண்மை வரும்போது, அதை ஆவலோடு அங்கீகரித்துக் கொள்ளாமல் வெறுப்படைகிறவன் (வெளிச்சத்தைக் கொண்டுஅஞ்சும்) ஆந்தை.
ஒவ்வொரு நிமிஷமும் "சத்தியமே பேசித் தர்மத்தை ஆதரித்துப் பரமார்த்தத்தை அறிய முயலுகிறவனேமனிதனென்றும் தேவனென்றும் சொல்வதற்குரியவனாவான். மிருக ஜன்மங்கனை நாம் ஒவ்வொருவரும் க்ஷணந்தோறும்நீக்க முயலவேண்டும்.
---------
ஓம் சக்தி - உலக வாழ்க்கையின் பயன்
உலக வாழ்க்கையில் மானிடராலும் மற்ற உயிர்களாலும் விரும்பப்படும் மிகச் சிறந்த பயன் யாது?எப்போதும் நீங்காத, எப்போதும் மாறாத, எப்போதும்குறையாத இன்பமெய்தி வாழ்தல்.
இவ் வகையான இன்பத்தை எய்தும் பொருட்டாகவே மானிடர் கல்வி கற்பதும், பொருள் சேர்ப்பதும், தவங்கள் செய்தலும், அரசாள்வதும், களவு செய்தலும், கொலை செய்வதும், பேசுதலும் சிரித்தலும், ஆடுதலும், பாடுதலும,் அழுதலும், உழுதலும் - எல்லாத்தொழிலும் செய்கிறார்கள். மனிதர் மட்டுமேயன்றி மற்ற எல்லாஉயிர்களும் தாம் செய்யும் எல்லாத் தொழில்களையும் மேற்கூறிய ஒரே நோக்கத்தோடுதான் செய்கின்றன.
ஆயினும், இதுவரை மேற்படி நித்யானந்த நிலையைஎந்த உயிரும் எய்தவில்லையென்பது தெளிவு. உலகத்தில் தவிர்க்கமுடியாத துக்கம் நிறைந்திருப்பதே, புத்தர் கண்டதாகக் கூறப்படும்நான்கு உண்மைகளில், முதலாவது. இங்ஙனம் தீராத துன்பம்இருப்பதற்குக் காரணம் ஒவ்வொர் உயிரும் தன்னையேனும் பிறஉயிர்களையேனும் பார்த்தும் கருதியும் ஓயாமல் அருவருப்பும்பயமும் அடைகின்றன வாதலேயாம்.
இங்ஙனம் ஒவ்வொரு உயிர்க்கும் தன்னிடத்தும் பிறஉயிர்களிடத்தும் பொருள்களிடத்தும் தீராத சகிப்பின்மையும், பயமும், வெறுப்பும், கவலையும் ஏற்படுவதற்குக் காரணம், அநாதி காலந் தோட்டு ஜீவர்களுக்குள்ளே நிகழ்ந்துவரும் ஓயாதபோராட்டத்தால ஏற்பட்ட பழக்கந்தவிர வேறொன்றுமில்லை.
எல்லா வஸ்துக்களும் எல்லாக் குணங்களும்ஒன்றென்னும் வேதாந்த ஞானத்தால் இந்த அஞ்ஞானப்பழக்கத்தை நீக்கவேண்டும். மேற்படி ஞானம், உலகம் தோன்றிய கால முதலாக, எத்தனையோ பண்டிதர்களின் மனத்திலும் கவிகளின் மனத்திலும் உதித்திருக்கிறது; எத்தனையோ கோடிக்கணக்கான பாமரர் மனத்துள் அவைஅழுத்தாமல், வாயினால் பிதற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஆயினும், பண்டிதர்களுக்கும் பாமரர்களுக்கும்ஒருங்கே அந்த ஞானத்தை நித்ய அநுபவத்தில் கொண்டுவரமுடியாதபடி, பழைய அஞ்ஞானம் தடுக்கிறது.
"அஞ்ஞானத்தை வென்றால், தீராத இன்பநிலையெய்தி வாழலாம், என்று சாஸ்திரம், யுக்தி, அநுபவம் - மூன்றுபிரமாணங்களாலும் விளங்குகிறது. எனினும், அந்த அஞ்ஞானப்பிசாசையும் அதன் குட்டிகளாகிய காமம், குரோதம், மோஹம்,லோபம், மதம். மாத்ஸர்யம் என்ற ஆறு யமதூதர்களையும் வெல்ல மனிதனுடைய சித்தம் இடங்கொடுக்கமாட்டேன் என்கிறது.நாயைக் குளிப்பாட்டி நல்ல உணவளித்து நடு வீட்டில் வைத்தால்.அது மறுபடியும் அசுத்த உணவு விரும்பி வாலைக் குழைத்துக்கொண்டு ஓடத்தான் செய்கிறது. எத்தனை புதிய இன்பங்களைக் காட்டியபோதிலும், மனம் அவற்றில் நிலைபெறாமல், மீண்டும் ஏதேனும் ஒரு துன்பக் குழியிலே கண்ணைத் திறந்து கொண்டுபோய் விழுந்து தத்தளிக்கத் தொடங்குகிறது.
மனம் கலங்கிய மாத்திரத்தில் புத்தி கலங்கிப்போய்விடுகிறது. ஆகையால், புத்தியை நம்பி எவனும் மனத்தைக்கலங்க விடாதிருக்கக் கடவன். மனத்தைக் கலங்க விடாமல்பயிற்சி செய்வதே எல்லாவித யோகங்களிலும் சிறந்த யோகமாகும்.மனம் தவறி ஒரு துன்பக் குழியில் போய் விழுங்காலத்தில், புத்திசும்மா பார்த்துக்கொண்டு நிற்கிறது. ஒரு வேளை புத்தி தடுத்த போதிலும், அதை மனம் கவனிப்பதில்லை. புத்தியை மீறி உழலும்சக்தி மனத்துக்கு இருக்கிறது.
ஆதலால், மனம் துன்பத்தில் நழுவி விழத் தொடங்கும்போது, அதை உறுதி அல்லது தைர்யம் என்ற கடிவாளத்தால் பிடித்துநிறுத்திப் பழகுவதே சரியான யோகப் பயிற்சியாம். இந்தப் பயிற்சிஏற்படுத்திக்கொள்ளுமாறு சிலர் உலகத்தை விட்டு நீங்கித் தனியிடங் களிலிருந்து கண்ணை மூடிக்கொண்டு பழகுகிறார்கள். வேறு சிலர் மூச்சைப் பல இடங்களில் கட்டியும் அவயவங்களைப் பலவாறு திருப்பியும் பழகுகிறார்கள். தனியே இருந்து ஜபம் பண்ணிப் பார்க்கிறார்கள்.
இதிலெல்லாம் இது வேகாது. உலகத்தாருடன் கூடி எல்லா வகைகளிலும் மற்ற உலகத்தாரைப் போலவே தொழில் செய்துகொண்டு உலக விவகாரங்களை நடத்திய வண்ணமாகவே சஞ்சலத்துக்கு இடங் கொடாதபடித் தன் மனத்தைக் கட்டக்கூடியதிறமையே பயன் தரக்கூடியது. மற்ற முயற்சிகளெல்லாம் வீண்.
நீதி, ஸமாதானம், ஸமத்துவம், அன்பு இவற்றாலேயேஇவ்வுலகத்தில் தீராத தைரியமும், அதனாலே தீராத இன்பமும் எய்தலாம். வேறு வழியில்லை.
-----------
ஓம் சக்தி - உழைப்பு
ராமகிருஷ்ணர் 'நீ யுண்டு, நீ யுண்டு,நீ யுண்டு, நானில்லை, நானில்லை, நானில்லை' என்று ஜபம் பண்ணினார். அவர் சோம்பேறியா? ஆஹா! ராமகிருஷ்ணர் விவேகானந்தரை உண்டாக்கினார். விவேகானந்தரோ புதிய பாரத தேசத்தை உண்டாக்கினவர்களிலமுதல் வகுப்பைச் சேர்ந்தவர்.
'உழைப்பு எப்போதும் உண்டு. தெய்வமே சரணென்றிருப்பார் உள்ளத்திலே தாபமில்லாமல் உழைப்பவர்களஆனபடியால், அவர்களுடைய செய்கைக்கு வலிமை அதிகம்,வேகம் அதிகம், உயர்வு அதிகம், அழகு அதிகம், பயன் அதிகம்' என்பது சொல்லாமலே விளங்கும்.
உழைப்பு எப்போதுமுண்டு. தெய்வத்தின் தலையிலேசுமையைப் போட்டுவிட்டு, நாம் கவலை, பயன் என்ற இரண்டுநாய்களுக்கும் உள்ளத்தை இரையாக்காமல், ஸந்தோஷமாகப் பாட்டுப் பாடிக்கொண்டு நிலத்தை உழுவது நல்லது. அழுதுகொண்டேஉழுதால் உழவுக்குக் கெடுதி; மனத்துக்கு ஸந்தோஷமில்லை; மடத்தன்மை தவிர வேறொன்றுமில்லை.
உழைப்பு எப்போதும் உண்டு. இதிலே நான் என்றபாரத்தை நீக்கிவிட்டு உழைத்தால், வேலை கிறுகிறுவென்று வேகமாகவும் பிழையில்லாமலும் நடக்கும். தன்னைத் தூக்கித் தலையிலே வைத்துக் கொண்டு வேலை செய்தால் வேலை குழம்பும்.
தன்னை மறந்து, வித்தையின் இன்பத்திலே தன் புத்திமுழுவதையும் செலுத்தி ஆடும் தாசி நன்றாக ஆடுவாள். நாம் அழகோ அழகில்லையோ? வகுப்பு சரியாயிருக்கிறதோ இல்லையோ? நெற்றிப் பொட்டு நேரே விழுந்திருக்கிறதோ என்னவோ? பாதி ஆட்டத்தில் முன்னொரு முறை வயிற்று வலி வந்ததுபோல் வந்துவிடுமோ என்னவோ? என்று தன் சித்தம் குழம்பிப் போயிருந்தால் ஆட்டம் நேரே வராது.
-
தன்னை மறந்து சகல உலகினையும்
மன்னி நிதங்காக்கு மகாசக்தி - அன்னை
அவளே துணையென் றமைவெய்தி நெஞ்சம்
துவளா திருத்தல் சுகம்.
நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி
அஞ்சி உயிர் வாழ்தல் அறியாமை - தஞ்சமென
வையமெலாங் காக்கு மகா சக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு.
வையகத்துக் கில்லை மனமே நினக்கு நலம்
செய்யக் கருதி யிவை செப்புவேன் - பொய்யில்லை
எல்லா மளிக்கும் இறை நமையுங் காக்குமெனும்
சொல்லால் அழியும் துயர்.
எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய்
விண்ணிற் சுடர்கின்ற மீனை யெலாம் - பண்ணியதோர்
சக்தியே நம்மைச் சமைத்தது காண் நூறாண்டு
பக்தியுடன் வாழும்படிக்கு.
----------
ஓம் சக்தி - புராணங்கள்
வேதக் கொள்கைகளை எல்லா ஜனங்களுக்கும் தெளிவாக உணர்த்தும் பொருட்டுமுன்னோர்களால் புராணங்கள் ஏற்படுத்தப்பட்டன. 'நான்' 'எனது' என்ற அகந்தையாலும் பிறருக்குப் பலவிதங்களிலே தீங்கிழைப்பதும், தமக்குத்தாமே பலவிதமானஅச்சங்களும் தீங்குகளும் வருவித்துக் கொள்ளுதல் ஜீவர்களின் இயற்கை. இந்த இழிவு கொண்ட இயற்கையைஞானத்தீயிலே போட்டுப் பொசுக்கி விடுதல் வேத ரிஷிகளால்ஏற்படுத்தப்பட்ட யக்ஞம் அல்லது வேள்வியின் கருத்து.
எல்லாம் ஈசன் செயல்; எல்லாம் அவனுடையரூபம். கம்ப ராமாயணத்தில் ஹிரண்யனுக்கு ப்ரஹ்லாதாழ்வான் உபதேசித்தருளியடி, அவன்
சாணிலு முளன்: மற்றாங்கோர் அணுவினைச் சத கூறிட்ட
கோணிலும் உளன்; மாமேருக் குன்றிலும் உளன்: இந்நின்ற
தூணிலும் உளன்: யான் சொன்ன சொல்லிலும் உளன்.
அவனைத் தவிர வேறு பொருளே கிடையாது. 'அவனன்றி ஓர் அணுவு மசையாது' ஆதலால், இந்த உலக முழுவதும்பரிபூரண அழகுடையது; பரிபூரண மங்களத் தன்மை யுடையது.அந்தக் கடவுள் ஸர்வ சக்தியுடையவன். ஆதலால் கீதையிலேசொல்லியபடி, எல்லாப் பொறுப்புக்களையும் அவன் பாதங்களிலேசுமத்திவிட்டு, நாம் எப்போதும் கவலையின்றி ஆனந்தத்துடன்வாழும்படியாக நம் மனத்தைத் திருத்திக் கொள்ளக் கடவோம்என்ற துணிவே ஞானத் தீ என்று சொல்லப்படும். அது வேதாக்நி.
இங்ஙனம் நிச்சயிக்கப்பட்ட கடவுளிடத்தும், அவனுடைய கலைகளாகிய எல்லா ஜீவர்களிடத்தும், தீராத மாறாத அன்பு செலுத்துதலே பக்தி என்று சொல்லப்படும். இந்தப் பக்திதான் முடிவான ஸாதனம். இதனால் ஈசன் நம்மிடத்தேகருணை பூண்டு நமக்கு மோக்ஷ ஸாம்ராஜ்யத்தைக் கொடுப்பான்.இது அமிர்த பானம். இதுதான் நான்கு வேதங்களின் தீர்ப்பு.
இந்தக் கடவுளை முழுமையாக நோக்குமிடத்தே,வேதம் அவனுக்கு "தத்" (அஃது) அதாவது பரப்ரஹ்மம் என்றபெயரும், "ஸத்" (உண்மைப் பொருள்) முதலிய பெயர்களும்கொடுக்கிறது.
படைத்தல், காத்தல், மாற்றுதல், அருள் செய்தல்,வலிமையுடைமை, தெளிவுடைமை, ஒளியுடைமை, எங்கும்,பரந்திருக்குந் தன்மை, பலபடத் தோன்றுந் தன்மை,ஆனந்த இயல்பு முதலிய கடவுளின் எண்ணிறந்த குணங்களையும்இயல்புகளையும் பிரிவுபடுத்தி நோக்குமிடத்தே, வேதம் அந்தந்தக்குணங்களுக்கும் இயல்புகளுக்கும் தக்கபடி, அவன் ஒருவனுக்கேபிரமன், விஷ்ணு, சிவன், இந்திரன், வாயு, ஸோமன், ஸூர்யன்,வருணன், அக்நி, பகவான் முதலிய பலவேறு நாமங்களை வழங்குகிறது.
இந்த விஷயத்தை ரிக் வேதம் "ஏகம் ஸத்" என்றதொடக்கமுடைய மந்திரத்தில் மிகவும் தெளிவாக விளக்கிக்காட்டுகிறது.
எனவே, வேதத்தின் வழி நூல்களாகியபுராணங்களில், இக் கடவுளை உணர்வதற்கு ஸாதனாங்களாகிய தவம், பக்தி, யோகம் முதலியனவற்றைஅனுஷ்டிக்கும் நெறிகளும், இந்த வழியே செல்ல விரும்புவோனுக்கு இன்றியமையாதனவாகிய திடசித்தம், நேர்மை, ஜீவகாருண்யம் முதலிய குணங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளும் நெறிகளும் இந்தக் குணங்கள்ஏற்படாதபடி தடுக்கும் பயம், கர்வம், கோபம், நிஷ்டூரம் முதலிய அசுர குணங்களை அறுக்கும் நெறிகளும் பல திருஷ்டாந்தங்களாலும் சரித்திரங்களாலும் உவமைக் கதைகளாலும் உபதேசங்களாலும் விஸ்தாரமாகக் காட்டப்பட்டிருக்கின்றன.
உபாஸனை புரிவோரின் இயல்புகளுக்கும் வேண்டுதல்களுக்கும் தக்கபடி, அப் புராணங்கள் பரமாத்மாவின் முக்கியமான மூர்த்தி பேதங்கள் அதாவது குணபேதங்களைச் சிறப்பாகக் காட்டவேண்டி, சில இடங்களில்அக்கினியையும், சில இடங்களில் இந்திரனையும், இங்ஙனமேமற்ற மூர்த்திகளையும் முதன்மையாகக் கூறும் வேத வழியைஅனுசரித்து, புராணங்களும் சில அக்கினியை மேம்படுத்தியும்சில விஷ்ணுவை மேம்படுத்தியும் சில சிவனை மேம்படுத்தியும்காட்டுகின்றன.
ஆயினும், கால நடையிலே இப்புராணங்களைமாத்திரமே ஆதாரமாகக் கொண்ட மதபேதங்கள் நம்முடையதேசத்தில் ஏற்பட்டுவிட்டன. வேதக் கல்வியும் வேத ஞானமும்குன்றிப்போயின. வேத ஆராய்ச்சி ஒரு வகுப்பினருக்கே விசேஷஉரிமையாகக் கொண்டாடப்பட்டது. இதனால் பொது ஜனங்களுக்குள்ளே வேத ஆராய்ச்சி சூன்யமாய் விட்டது. புராணங்களில் வேறு வேறு மூர்த்திகளுக்கு ஆதிக்யம் சொல்லப்பட்டிருப்பதை யொட்டி, மத பேதங்கள் கட்சி பேதங்களாகி முடிந்தன. இதனால் வைதிக மதமாகிய ஹிந்துமதம்பல பிரிவுகளுடையதாய் விட்டது. ஜனத்தொகை, அவ்வக்காலத்துஅரசர்களின் கொள்கை-இவற்றிற்குத் தக்கபடி ஹிந்து மத பேதங்களுக்கு மேன்மையும் தாழ்வும் ஏற்படலாயின. பெயரளவில் எல்லா மதங்களும் வேதம் ஒன்றையே பிரமாணமாகப் பேசியபோதிலும், நடையிலே ஹிந்து மதஸ்தர்களதத்தம் புராணங்களையே தலைமையாகக் கொண்டு அவற்றின்கருத்துக்குத் தக்கபடி வேதத்தை மாற்றிப் பொருள் செய்யலாயினர். தம் தம் மூர்த்திகளை உயர்வாகக் கூறுவதின்உண்மைப் பொருளை மறந்து இந்த மதஸ்தர்கள் மிகப் பெரியஅஞ்ஞானத்தில் ஆழ்ந்து வேதத்திற் காட்டிய இந்த "மூர்த்திகளைஇழிவுபடுத்திப் பேசலாயினர். இந்திரன், அக்கினி, வாயு வருணன்என்ற மூர்த்திகளே வேதத்தில் முக்கியமானவை. பின்னிட்டு இந்தமூர்த்திகளை தாழ்ந்த தேவதைகளாக மதிக்கத் தொடங்கி விட்டார்கள். காலக் கிரமத்தில் வைஷ்ணவம், சைவம், சாக்தம்முதலிய சில மதங்களே நாட்டில் மிஞ்சி நின்றன. எனவே, வேதத்தில் முக்கிய மூர்த்திகளாகிய வாயு, வருணன், சூரியன்,இந்திரன் முதலியவர்களைப் பிற்காலத்துப் புராணங்கள் தூஷணை செய்யத் தொடங்கிவிட்டன. முற்பகல் செய்தது பிற்பகல் விளையும். பின்னிட்டுச் சைவ வைஷ்ணவ புராணங்களில் அவ்வக் காலத்து ராஜாக்கள் ஜனங்களின்கோட்பாடுகளை உயர்த்தும் பொருட்டாக மேற்படி கட்சி பேதங்கள் பஹிரங்க விரோதங்களாக முடிந்து, சைவ புராணங்களில் விஷ்ணு தூஷணைகளும், வைஷ்ணவ புராணங்களில் சிவ தூஷணைகளும் ஏராளமாகச் சேர்க்கப்பட்டன. அதற்கிசையவே புதிய கதைகளும் கற்பிக்கப்பட்டன.
எனவே, இந்நூல்கள் பெரும்பாலும் நம்முடைய தெய்வத் தன்மையையும் வைதிக மாண்பையும் இழந்து போய், வெட்கமற்ற அவைதிக தூஷணைகள் நிரம்பிக் கக்ஷிச் சண்டைகளை மிகுதியாகச்சேர்த்து ஜனங்களுக்குள்ளே பகைமைத் தீயை மூட்டிவிடலாயினர். இங்ஙனம் பரம சத்தியமாகிய ஹிந்து மதம்சிதைவு பெற்றுப் போயிற்று. ஹிந்து ஜாதியார் வீழ்ச்சியடைந்தனர். வேதம் ஒளி மறைந்து, பிற்காலத்தில்வேதத்துக்கு நாம மாத்திரையாக கொடுக்கப்பட்ட உயர்வைக்கூட இந்தக் கக்ஷிக்காரர் சிலர் மறுக்கலாயினர். திருஷ்டாந்தமாகப் பிற்காலத்துச் சைவர்களிலே சிலர் வேதங்களைக் காட்டிலும் சிவாகமங்களே மேலென்று சொல்லத்தலைப்பட்டார்கள். இங்ஙனம் ஏற்பட்ட புராணச் சண்டைகளுக்கு வேதமே, காரணமாக இருந்ததென்று தவறாகக்கருதி வைதிக ஞானிகளே சிலர் வேதத்தைக் கர்ம காண்டமென்றும் உபநிஷத்தை ஞானகாண்டமென்றும்சொல்லலாயினர்.
வஸிஷ்டர் முதலியவர்களைக் 'கர்மி'களென்றும்பிற்காலத்துப் பண்டாரங்களை 'ஞானி' களென்றும் ஜனங்கள்மதிக்கலாயினர். இந்த அலங்கோலங்களெல்லாம் தீர்ந்து, ஹிந்துமதம் ஒருமை நிலையெய்தி, ஹிந்துக்கள் ஒற்றுமையும் வைதிகஞானமும் எய்தி, மேம்பாடு பெற்று, பூமண்டலத்தின் ஆசார்யபதவிகொண்டு வாழவேண்டுமாயின், அதற்கு நாம் கையாள வேண்டிய உபாயங்கள் பின்வருவன:-
(1) வேதம், உபநிஷத்துக்கள், புராணங்கள்-இவற்றை இக்காலத்தில் வழங்கும் தேச பாஷைகளில் தெளிவாக மொழி பெயர்க்கவேண்டும்.
(2) புராணங்களில் தத்தம் தேவர்களை மேன்மைப்படுத்தும் அம்சங்களையும், மேற்படி பொது வேதக் கொள்கைகளாகிய தவம், உபாஸனை, யோகம் முதலியவற்றைவிளக்கும் அம்சங்களையும், உலகநீதி, பூர்வசரித்திரம் இவற்றைவிளக்கும் அம்சங்களையும் மாத்திரமே ப்ரமாணமாகக் கொண்டு,இதர தேவதூஷணை செய்யும் அம்சங்களை ப்ரமாணமில்லாதனவென்று கழித்துவிட வேண்டும்.
(3) வேதத்தின் உண்மைக் கருத்தை உணர்ந்தோரும்ஸமரஸ ஞானிகளுமான பண்டிதர் மூலமாக நாடு முழுவதும்புஸ்தகம், பத்திரிகை, உபந்யாஸங்கள் முதலியவற்றால் பிரமாண்டமான ப்ரசாரத் தொழில் நடத்த வேண்டும். ஹிந்துக்களே,பிளவுண்டு மடியாதீர்கள்! வேதத்தின் பொருளை உணர்ந்து மேம்பட்டு வாழ வழி தேடுங்கள்!
-------------
ஓம் சக்தி - கொள்கைக்கும் செய்கைக்குமுள்ள தூரம்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையைஉடையவராயிருக்கலாம். அதாவது, மற்ற எல்லாரையும்விடஒரு நியாயம் அல்லது ஒரு தர்மம் அல்லது ஒரு மதம்இவற்றில் ஒன்றில் ஒருவன் விசேஷ மனப்பற்றுடையவனாய்இருக்கலாம். இவை ஒவ்வொன்றும் ஸர்வ ஸம்மதமாய் நன்மை பயக்கத் தக்கதாய் இருக்கவேண்டும் என்பது அவசியமிலை. ஒரு கொள்கை தீமையை விளையச் செய்யினும் செய்யும். ஆனால், ஒருவர் ஒரு கொள்கைப்படிகருமங்களைச் செய்யும்பொழுது அது தனக்காகவது பிறருக்காகவது நன்மை தருமென்றே செய்வார். ஒருவன்கொடுங்கோல் அரசில் குடித்தனம் செய்தால் வயிற்றுக்குசசோறில்லாமலும் சர்க்கார் அதிகாரிகளின் ஹிம்சையால் மானமிழந்தும் துன்பமடைய வேண்டியிருக்கிறது; குடியானவனாயிருந்து பயிர்த்தொழில் செய்யவோ அநேகதடங்கல்கள் இருக்கின்றன; பட்டத்தில் மழை பெய்யவில்லை;அப்படி மழை பெய்தாலும், உழ எருதுகள் இல்லை; உழுதாலும், விதைக்க வித்துக்களில்லை; விதை விதைத்தாலும்,களைகளைச் சரியான காலத்தில் எடுத்துப் பயிர் அடித்துக் காவல் காத்து மாசூலை அறுவடை செய்து வீடு கொண்டுவந்து சேர்த்து ஸூகிக்க ஐவேஜி இல்லை; அப்படி வீடுகொண்டு வந்து சேர்த்துப் பலனை அநுபவிக்கவும் இடமில்லை;ஏனென்றால் சர்க்கார் தீர்வைக்கே தானிய தவசங்களைக்களத்தில் விற்றுவிட வேண்டியிருக்கிறது. ஆகையால், உழுதுஉண்ணுவதைவிட வேறு என்ன தொழில் செய்தாயினும்பிழைக்கலாமென்று "கொள்ளைக்கூட்டத்தோடு சேர்ந்து பிரயாணிகளை வழிப்பறி செய்தோ, கன்னம் வைத்துத்திருடியோ பிழைக்க ஆரம்பிக்கிறான். அவன் செய்யும்தொழில் ஒரு கொள்கையினடியாய் உண்டானதாயினும், அதுஅவனுக்குத்தான் நன்மை தருமேயல்லாது இதரர்களுக்குத்தீமையே செய்யும். இருந்தாலும், ஆபத் தர்மம் என்ற கொள்கையை அவன் அனுசரிக்கிறான் மனைவி மக்கள்உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றிப் பார்த்தவரெல்லாம்பரிதாபங் கொள்ளும்படியாய், ஒரு புருஷன் குடும்ப சவரக்ஷனை செய்தால், அவன் மானம் அழிந்து போகிறது.'பயிர்த் தொழிலில் ஒன்றும் கிடைக்காது' என்ற நிச்சயம் ஏற்பட்டு விட்டது. திருட்டுத் தொழிலில் ஏதேனும் பசியாரஉண்ணக் கிடைக்கும் என்ற திண்ணம் உண்டு. பிரயாணிகளோஆங்கிலேயர் ஆசீர்வாதத்தால் நிராயுதபாணிகயாய் இருக்கிறார்கள். போலீஸ் என்ற உள் நாட்டுக் காவற்காரரோசம்பளம் சொற்பமானதாலும், அந்நியர் அரசாட்சி தங்கள் தயவின்றி நடவாதென்ற நம்பிக்கையாலும், தாங்களே திருடத்தயாராயிருக்கிறார்கள். கொள்ளைக் கூட்டத்தாரோடு 'எக்கிரிமெண்டு' (உடன்படிக்கை) செய்து கொண்டு அவர்கொள்ளையில் ஒரு பங்கு பெற்றுக் காலத்தைத் தள்ளக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தியாதி சவுகரியங்களால்திருட்டுப் பிழைப்பே மேலானதென்று ஒரு குடியானவன்அதைக் கைக் கொள்ளுகிறான். ஆனால், அந்தத் தொழிலில்ஜீவஹிம்ஸை செய்தே நடக்க வேண்டியிருக்கிறது. அப்படிச்செய்வது பாபமாகும். அந்தப் பாபத்தால் பாபத்திற்குரியமோடசத் தடை நேரிடும் என்ற பயமோ, சந்தேகமோஅவனுக்கு உண்டாகிறது. அதற்கு ஈடாக அவன் வழிப்பறிசெய்யுங்காலத்தில் ஒரு தருமத்தை அனுசரிக்கிறான். அதாவது, சில வகுப்பார்களை அவன் தொடுவதில்லை.ஏழைகள், துணையின்றிச் செல்லும் ஸ்திரீகள் நோயாளிகள்,தூர ஸ்தலங்களிலிருந்து வரும் யாத்திரைக்காரர்கள் ஆகியஇவர்களையும் இவர்களைப் போன்ற மற்றவர்களையும்ஹிம்ஸிப்பதில்லை. அதோடு நில்லாமல், தான் கொள்ளையடித்து ஈட்டிய பொருளில் ஒரு பாகத்தைக் கொண்டு தான தருமங்களும் செய்கிறான். தன்னைப் பகலில் கொள்ளையடித்த "சாவுகாரனையும், லேவாதேவிசெய்யும் நிஷ்கண்டகனையும், ஏன் இரவிற் கொள்ளையடிக்கக் கூடாதென்று தன்னைத்தானே கேட்கிறான். 'குனிந்தால் வரி,நிமிர்ந்தால் வரி, நின்றால் வரி, உட்கார்ந்தால் வரி, நில வரி,நீர் வரி, பாசி வரி, ரோட்டு வரி, காட்டு வரி, வீட்டு வரி,மோட்டு வரி, கொடுக்கல் வரி, வாங்கல் வரி, வருமான வரி,தொழில் வரி, தோல்கேட்டு வரி, ரயில் வரி, சாக்கடை வரி,சாராயக்கடை வரி, மாட்டு வரி, ஆட்டுவரி, நாய் வரி, பூனை வரி, இறக்குமதி வரி, ஏற்றுமதி வரி, - இன்னும்எண்ண முடியாத வரிகளைப் போட்டு, வீடு வாசல், நிலம் கரை,ஆடு - மாடு, சட்டி பொட்டி இவைகளை ஜப்தி செய்து ஏலங்கூறி கொள்ளையடித்துப் போகும் சர்க்கார் பணத்தைநாம் ஏன் திரும்பக் கொள்ளையடிக்கப் படாது?' என்றகேள்வியும் அவனுக்கு உண்டாகிறது. இவ்விதமாக ஆட்சேபணை ஸமாதானங்களால் தம் மனதில் கொள்ளையடித்துப் பிழைப்பதே நல்லதென்று ஒரு தீர்மானம் செய்துகொள்கிறான். இந்தத் தீர்மானம் அவன் பிறவிக் குணத்துக்குவிரோதமாய் இருப்பினும், தர்ம சாஸ்திரத்திற்கு முற்றும் ஒவ்வாததாய் இருப்பினும், காலசுபாவம் என்ற அவசியத்தால்ஆபத் தர்ம்மாக அவன் சித்தத்தில் நிலைத்து விடுகிறது. இதைஒரு கொள்கையாக வைத்துக்கொண்டு அவன் காரியங்களைஆரம்பிக்கிறான். சிலர் இதை நல்லதென்று சொல்லுவார்கள்.எவர் எதைச் சொல்லினும், எவர் எதைச் செய்யினும், தான்கொண்டதே கொள்கையென்று அவன் காலத்தைக் கழித்துவருகிறான். அவன் கொள்கைக்கும் செய்கைக்கும் ஒற்றுமைஇருக்கிறது. இரண்டும் ஒன்றையொன்று அடுத்துத் தொடர்ந்தேவருகிறது. அவன் மனோதிடம் வாய்ந்த புருஷன் என்றே சொல்லலாம்.
ஒரு கொள்கை என்பதென்ன? இதைநாம் ஆராய்ந்து அறிவது அவசியம். ஏனெனில், கொள்கையின்றிக் காரியங்களைச் செய்து திரியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள். பகுத்தறியும் சக்தி இல்லாதஎவனுக்கும் கொள்கையென்று ஒன்று இருக்காது. ஒரு கொள்கையை யுடையவன் பகுத்தறியும் சக்தி உடையவனாகவே இருக்கவேண்டும். ஆனால், அவ்வறிவின் துணையால் ஒரு கொள்கையை ஒப்புக்கொண்டு அதன்சாயலாகவே தன் கருமங்களைச் செய்து வருபவனல்ல.எத்தனையோ ஜீவப்பிரேதங்கள், ஜீவியத்தின் நோக்கம்இன்னதென்றே அறியாமல், கேவலம் இந்திரிய பாதைகளைக்கழித்துக்கொண்டு, உண்டு உடுத்தி, வாழ்ந்து இறந்து போகின்றனர்.அவர்களெல்லாம் ஏதோ நல்லதோ கெட்டதோ கொள்கைகளைக் கடைப்பிடித்துக் கருமங்களை அவரவற்றிற்குரியபடி செய்துஜீவிக்கும் மனிதர்களல்ல. ஆகையால் கொள்கை யென்பதென்ன?
ஒரு கொள்கையாவது, 'பகுத்தறிவின் துணையால்செய்யத்தக்கது இது, செய்யத்தகாதது இது' என்று ஒருவன்அறிந்து முன் பின் யோசித்துத் தன் வாழ்நாளில் நீடித்துச் செய்ய மனத்தால் ஒப்புக்கொள்ளும் கருமத்தொடரின் அஸ்திவாரமாகிய ஒரு கருத்தாம். நம்நாட்டில் இவ்வாறு கொள்கைகளைத் தேர்ந்து எடுத்துக்கொள்ளும் சக்தி வாய்ந்தமனிதர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் கொள்கைகளைஅவாவோடு மனத்தால் கிரகித்தல் வேறு, அவற்றின்படி நடத்தல் வேறு. யாதேனும் ஒரு கொள்கையை ஒருவன் அங்கீகரித்துக் கொண்டு அதன்படி நடக்க முடியாதவனாய் இருந்தால், அவனும் ஜீவப் பிரேதந்தான்.
இதிலிருந்து, 'கொள்கையற்ற மானிடப் பதர்கள்,கொள்கையிருந்தும் அதன்படி நடக்கவியலாத மானிடப் பதர்கள்'என்ற இரண்டு ஜாதிகள் உண்டென்று ஏற்படுகிறது. இவ்விரண்டுவகுப்பாரால் ஜன சமூகத்திற்கு அவ்வளவு கெடுதல் நேரிடாது.அவர்கள் இருக்கும் வரை சோற்றுகுக் கேடாகவும் நிலத்திற்குப்பளுவாகவும் இருந்து போவார்கள்.
ஆனால், தாங்கள் வசிக்கும் நாட்டிற்குக் குடலைத்தின்னும் அரிபூச்சுகள் போல ஒரு வகுப்பார் தலையெடுததிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தலை நிறைய திவ்வியமானகொள்கைகளை அடைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அக் கொள்கைகளை விற்றும் ஜீவிக்கிறார்கள். பொது பீடங்களினின்றும் உலகறிய அவற்றை ஸாங்கோபாங்கமாகப்போதிக்கிறார்கள். பொது ஜனங்கள் அக் கொள்கைகளைக் கேட்டுப் 'இவ்வரிய கருத்துக்களுக்கு ஆலயமாகவிருக்கும் இவர்கள் "பூஜிதையையும் ஏற்றுக்கொண்டு வெறியடைகிறார்கள்.ஆனால் அவர்களைப் பின்தொடர்ந்து அவர்களின் வீட்டிற்குச்செல்வோமானால், அங்கே எலும்பும் தோலும் குப்பையும்சகலவிதமான அழுக்குகளும் நிறைந்து கிடக்கின்றன. இம்மஹான்களின் செய்கைகள் அவர் கொண்ட கொள்கைகளுக்குமுற்றிலும் விரோதமாய் இருக்கின்றன. 'தட்டிச் சொல்ல ஆள்இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டம்' என்றபடி பேசிவிட்டு,ஆபத்து வந்த காலத்தில் 'நான் சொன்னபடி நீங்கள் செய்யவேண்டும். நான் செய்கிறபடி நீங்கள் செய்யப்படாது' என்றுஜனங்களை ஏமாற்றுகிறார்கள். அதிலும் கேடாய், தங்களுடையகொள்கைகளை ஜால வித்தைக்காரன் போல் மாற்றிவிடுகிறார்கள்.
இம் மஹா பாதகர்களால் நம் தேசத்திறகுவிளையும் தீமைகள் கணக்கில் அடங்கா. ஏனெனில் இவர்களைப் பார்த்து அநேகம் அறிவில்லாத மனிதர்கள்செல்லக் கூடாத மார்க்கங்களிற் சென்றுவிடுகிறார்கள். நமக்குகொள்கை வேண்டுமே யல்லாது ஆள் வேண்டியது அவசியமில்லை. ஒருவன் தான் பறையறையும் நல்லதோர் கொள்கையை விட்டுவிட்டு விலகி நடப்பானானால் அப்பொழுது நாம் அவனைக் கொண்டாடுவது மதியீனம். அவனை எவ்வகையாலும் நாம் இகழ்ச்சி செய்தே நடத்த வேண்டும். தான் குடிக்கும் காபிக்காகவும், தான் தின்னும் சோற்றிற்காகவும், தான் உடுத்தும் ஆடைக்காகவும் ஒருவன்தன்னுடைய அருமையான கொள்கைகளைக் கைவிடுவானானால், அவனை மானிடரால் எந்த வகுப்பில் நாம் சேர்க்கலாம்? அவனிலும் பதரான மனிதன் ஒருவன் இருக்கமுடியாது. அவன்சம்பந்தப்பட்ட மட்டில், கொள்கைக்கும் செய்கைக்கும் வெகுதூரம் உண்டு.
பாரத தேசத்தாராகிய நாம் சகலவிதமான சுதந்திரங்களையும் இழந்து எங்கேயோ யிருந்துவந்த ஒரு வெள்ளை நிற ஜாதியாருக்கு அடிமைப்பட்டிருக்கிறோம். நாம்முப்பது கோடி ஜனங்கள். அவர்கள் இரண்டு லக்ஷங்கூட இல்லை.உலகத்தோர் எல்லோரும் இதை எங்கு எக்காலத்திலும் இல்லாதஅற்புதம் என்று நினைக்கிறார்கள். இதனால் உலகத்திலுள்ள மற்றஜாதியார்கள் நம்மை (முப்பது கோடி அல்லது மூவாயிரம் லக்ஷம்ஜனங்களையும்) அடக்கி ஆளும் ஆங்கிலேயர்களை மகாவீரசூரர்களென்றும், ஒப்பற்ற பலிஷ்டர்களென்றும் ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் அதற்குப் பதிலாய், நம்மிடத்தில் அவர்களுக்கு அவ்வளவுக்கவ்வளவு வெறுப்பும் மதிப்புக் குறைவும் ஏற்பட்டு விடுகிறது. இந்தியன் எங்கே போனாலும்நிந்திக்கப் படுகிறான். யாரும் நம்மீது காறித் துப்புகிறார்கள்.உலகத்தோர 'இந்த இந்தியர் என்ற ஆடுகளை ஆங்கிலேயர்மட்டுமல்ல, வேறே எந்த ஜாதியாரும் இலேசாக ஆளலாம்.என்று நம்பியிருக்கிறார்கள். அப்படியிருக்க, நாம் மிகுந்த அந்தஸ்துக்களைப் பாராட்டினால் அது ஒவ்வா ஒழுக்கம். நாம்சுயாதீனம் அடைந்தபிறகு மீசை முறுக்கலாம். இப்பொழுது வீண் டம்பங்களைச் செய்தால் எல்லோரும் நகைப்பார்கள்.
நம்மில் ஒவ்வொரு புருஷனும் ஒவ்வொரு ஸ்திரீயும்ஏற்றுக்கொள்ள வேண்டிய கொள்கை ஒன்றேதான் உண்டு. அதாவது, நம்முடைய அருமை நாட்டில் சுயாதீனத்தை நாட்டிப்பிறர் அஞ்சி மதிக்கும்படியாக நாம் ஜீவிக்கவேண்டியது. இந்தக்கொள்கைப்படி நடக்க என்ன இடையூறுகள் வந்தாலும் இவற்றைநாம் விலக்கிக் கொண்டு போக வேண்டும். இந்தக் கொள்கையைக் கடைப்பிடித்து நடப்பதில் எவ்விதமான சுகத்தையும், மரியாதையையும் அந்தஸ்தையும் இச்சிக்கப்படாது. வீடு, வாசல், மனை மக்கள், எல்லோரையும் இழக்கும்படி நேர்ந்தாலும் இழந்தே தீரவேண்டும்.
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வவர் தீமையு மேற் கொள்ளார் - செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்வார் கருமமே கண்ணா யினார்,
என்ற மூதுரைக்கு இணங்கியே நாம் நடக்க வேண்டும். இவ்வாறு நடக்க முடியாதவன் தான் பேடியென்று ஒப்புக்கொண்டு பின்னடையவேண்டும். நானும் ஸ்வராஜ்யக் கொள்கையுள்ளவன் என்று முன்வந்து நிற்கவேண்டாம். சுதந்திரக் கொள்கையை உடையவன் தன்ஆத்மாவைத் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் இழந்துவிடச்சித்தமாயிருக்கவேண்டும், ஹோ பரதா! சோம்பலுள்ளவனுக்கு எவ்விதக் கொள்கையும் ஏற்காது மழையென்றும், வெய்யிலென்றும், காற்றென்றும், பசியென்றும், தாகமென்றும், நித்திரையென்றும் பாராட்டாதே, இந்தச் சரீரமே அநித்தியம் "என்றால்,அதையொட்டிய அவஸ்தைகள் நித்தியமாகுமா? இந்திரியஅவஸ்தைகளுக்கு அஞ்சியாவது இந்திரிய சுகங்களைக் கோரியாவதுதேசிய தர்மத்தைக் கைவிடாதே. பிரம்மமே நித்தியம், சத்தியாமஜெயம். நீயும் அடிமைத் தனத்திலிருந்து நீங்கவேண்டும். உன்னுடைய ஜய பேரிகையை அடித்துக் கொண்டு உலகத்தில்எந்தெந்த பாகத்தில் யார் யார் அடிமைப்பட்டிருக்கிறார்களோ அவரவரை விடுவிக்க வேண்டும். உன் செயலால் பாரதமாதா முன்போல் உலகத்திற்குத் திலகமாய் ஜ்வலிக்க வேண்டும். இந்தக் கொள்கைகளைக் கைவிடாதே. கைவிடாதே, கைவிடாதே. முக்காலும்சொன்னோம்.
வந்தேமாதரம்.
-------------
5. மாதர்
5.1 பெண் | 5.2 தமிழ்நாட்டின் விழிப்பு |
5.3 பதிவிரதை | 5.4 பெண் விடுதலை (1) |
5.5 பெண் விடுதலை (2) | 5.6 பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத்தக்கது யாது? |
5.7 தமிழ் நாட்டு மாதருக்கு | 5.8 தமிழ் நாட்டு நாகரீகம் |
5.9 பெண்கள் ஸம்பாஷணைக் கூட்டம் | 5.10 'சியூ சீன்' என்ற சீனத்து ஸ்திரீயின் கதை |
5.11 `சீயூ சீன்' என்ற சீனத்து ஸ்திரீ செய்த ப்ரஸங்கம் | 5.12 பெண் விடுதலை (3) |
5.13 திருவிளக்கு | 5.14 ரெயில்வே ஸ்தானம் |
5.15 முகமதிய ஸ்திரீகளின் நிலைமை | 5.16 நவீன ருஷ்யாவில் விவாக விதிகள் |
5.17 தென் ஆப்பிரிக்காவில் பெண்கள் விடுதலை | 5.18 இந்தியாவில் விதவைகளின் பரிதாபகரமான நிலைமை |
5.19 ஸ்ரீமான் காந்தி சொல்லும் உபாயம் |
மாதர் - பெண்
வேதபுரத்தில் தர்மவீதியில் வாத்தியார் பிரமராயஅய்யர் என்றொரு பிராமணர் இருக்கிறார். இவர் சாக்தமதத்தைச் சேர்ந்தவர். ''சக்தி பூஜை'' பண்ணுவோரில் சிலர்மதுமாம்ஸ போஜனம் செய்கிறார்கள். இந்த வாத்தியார் அப்படியில்லை. இவர் ''சுத்த சைவம்''. அதாவது ஆட்டுக்குட்டியை மாம்ஸம் தின்னும்படி செய்தாலும் செய்யலாம். இவர் வார்த்தியாரை மாம்ஸம் தின்னம்படி செய்ய முடியாது. இவர் இங்கிலீஷ், ப்ரெஞ்சு என்ற இரண்டு பாஷைகளிலும் நல்ல பாண்டித்யமுடையவர். கொஞ்சம் ஸமஸ்கிருதமும் தெரியும். பகவத்கீதை, வால்மீகி ராமாயணம், குமாரஸம்பவம் மூன்று நூலும் படித்திருக்கிறார். வேதாந்த விசாரணையிலே நல்ல பழக்கமுண்டு. கதை, காலக்ஷேபம், உபந்யாஸம் முதலியன நடந்தால், தவறாமல் கேட்கப் போவார்.பெரும்பாலும் கதை கேட்டுவிட்டு அதிருப்தியுடனே திரும்பிவருவார். வீட்டுக்கு வந்து உபந்யாஸிகளின் கொள்கைகளை ஒரு மாதம் தொடர்ச்சியாக நண்பர்களுடனே தர்க்கிப்பார். ''ஹிந்துக்கள் முற்காலத்தில் நல்ல மேதாவிகளாக இருந்தனர். இன்னும் அதிசீக்கிரத்தில் மேலான நிலைமைக்கு வரப்போகிறார்கள். ஆனால், இந்தத் தேதியில், பண்டிதர்களாக வெளிப்பட்டு பிரஸங்கங்களும், கதைகளும், காலக்ஷேபங்களும் நடத்தும் ஹிந்துக்களிலே நூற்றுக்குத் தொண்ணூறு பேர் சமையல் வேலைக்குப் போக வேண்டியவர்கள். அதை விட்டு உலகத்துக்கு ஞானோபதேசம் பண்ணக் கிளம்பிவிட்டார்கள். இதுபெரிய தொல்லை, உபத்திரவம், தொந்திரவு, கஷ்டம், ஸங்கடம், ஹிம்ஸை, தலைநோவு. இந்தத் தேதியில், ஹிந்து ஜாதி முழுமூடமாக இருக்கிறது. நம்மவர்கள் மூளைக்குள்ளே கரையான் பிடித்திருக்கிறது. எனக்கு ஹிந்துக்களின் புத்தியை நினைக்கும்போது வயிற்றெரிச்சல் பொறுக்க முடியவில்லை. படகோனியா தேசத்தில் கூட சராசரி நூற்றுக்கு இத்தனை பேர் மூடர்களாக இருப்பார்களென்று தோன்றவில்லை? என்று நானாவிதமாக நம் தேசத்தாரின் அறிவு நிலைமையை தூஷணை செய்துகொண்டேயிருப்பார்.
மேற்படி பிரமராய வாத்தியாருக்குத் தமிழிலும் கொஞ்சம் ஞானமுண்டு. ஐரோப்பியரின் சாஸ்திரங்களில் பலவற்றைத் தமிழில் எழுதியிருக்கிறார். சில சமயங்களில் கவிதை கூட எழுதுவார். இவருடைய கவிதை மிகவும்உயர்ந்ததுமில்லை, தாழ்ந்ததுமில்லை; நடுத்தரமானது. இவருக்கு சங்கீதத்தில் நல்ல ஞானமுண்டு. ஆனால் பாடத் தெரியாது. தொண்டை சரிப்படாது. தாளத்தில் மஹா நிபுணர். பெரியபெரிய மிருதங்கக்காரரெல்லாம் இவரைக் கண்டால் பயப்படுவார்கள்.
இவர் இந்தத் தெருவில் வார்த்தை சொன்னால் மூன்றாவது தெருவுக்குக் கேட்கும். பகலில் பள்ளிக்கூடத்துவேலை முடிந்தவுடனே வீட்டுக்கு வந்து, ஸாயங்காலம் ஆறு மணி முதல் எட்டு மணிவரை தன் வீட்டுத்திண்ணையில் சினேகிதர்களுடன் பேசிக்கொண்டு, அதாவது,கர்ஜனை செய்து கொண்டிருப்பார். பிறகு சாப்பிடப் போவார். சாப்பிட்டுக் கையலம்பிக் கை ஈரம் உலர்வதற்கு முன்பு, மறுபடி திண்ணைக்கு வந்து சப்தம் போடத் தொடங்கிவிடுவார். இவருடைய வீட்டுத் திண்ணைக்கு அக்கம் பக்கத்தார், 'இடிப் பள்ளிக் கூடம்' என்று பெயர்"வைத்திருக்கிறார்கள். அந்த இடிப்பள்ளிக்கூடத்துக்கு வந்து மாலைதோறும் நாலைந்து பேருக்குக் குறையாமல் இவருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த நாலைந்து பேருக்கும் இன்னும் காது செவிடாகாமலிருக்கும் விஷயம் அனேகருக்கு ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.
மேற்படி வாத்தியாருக்கும் எனக்கும் ஸ்நேகமுண்டு. நானும் அடிக்கடி இடிப் பள்ளிக்கூடத்துக்குப் போய் பேச்சுக் கேட்கும் வழக்கமுண்டு. ஹிந்துக்கள் பரம மூடர்களென்று அவர் சொல்லும் வார்த்தையை மாத்திரம் நான் அங்கீகாரம் செய்துகொள்வது கிடையாது. மற்றபடி, அநேக விஷயங்களில் அவருடைய அபிப்பிராயங்கள் எனக்கு நியாயமாகவே தோன்றும்.
நாலாநாள் ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் மழைத் தூற்றலாக இருந்தபடியால், நான் வெளியே உலாவப்போகாமல், பொழுது போக்கும் பொருட்டாக மேற்படி இடிப் பள்ளிக்கூடத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கே வாத்தியார் கர்ஜனை அட்டஹாஸமாக நடந்து கொண்டிருந்தது. கேட்டுக்கொண்டிருந்தவர்களின் ''ஜாப்தா'' பின்வருமாறு:
(1) வீராசாமி நாயக்கர். (இந்த நாயக்கர் ஆனைக்குட்டியைப் போலிருப்பார்; சர்க்கார் உத்தியோகம்; முப்பத்துமூன்று வயது; அதற்குள் சரியான வழுக்கை; நல்ல வ்யவஹார ஞானமுடையவர்; வாய் பேசுவது கிடையாது. கோபம் வரும்போது கொஞ்சம் பொடியெடுத்து மூக்கில் போட்டுக் கொள்வார்).
(2) கொங்கண பட்டர். (இவர் பெருமாள் கோயில்பட்டர்; ஏழரையடி உயரம்; இவரை யார் வேண்டுமானாலும் வையலாம்; வேஷ்டியைப் பிடித்திழுக்கலாம். மேற்படி வீராசாமி நாயக்கர் இவருடைய தலையில் கால்மணி நேரத்திற் கொருதரம் குட்டுவார். இவருக்குக் கோபம் வராது. இவருடைய ஜாதகத்திலே கோபத்துக்குரிய கிரகம் சேரவில்லை யென்று கேள்வி).
(3) நாராயண செட்டியார் (பணக்காரர். குள்ளம், வட்டிக்குக் கொடுக்கல் வாங்கல், இடிப்பள்ளிக்கூடம் -இந்த இரண்டு தொழிலையுந் தவிர, மூன்றாவது கார்யத்தை இவர் கவனிப்பதே கிடையாது. வாரத்துக்கொருமுறை வெள்ளிக் கிழமையன்று பிள்ளையார் கோவிலுக்குப் போவார். மற்றப் படி வீட்டை விட்டு வெளியேற மாட்டார். இவரை அந்தப் புரச்செட்டியாரென்றும் சொல்லுவார்கள்.
(4) குருசாமி பாகவதர். (ஸங்கீத வித்வான்; குழந்தைகளுக்குப் பாட்டு வாத்தியமும் சொல்லிக்கொடுப்பார். சாரீரம் கட்டை.)
மேற்படி சபையில் நானும் போய்ச் சேர்ந்தேன். பிரமராய வாத்தியாருக்கு என்னைக் கண்டவுடன் கொஞ்சம் சந்தோஷம் ஏற்பட்டது.
'வாருங்கள், வாருங்கள், உங்களுக்கு ரஸப்படக்கூடிய விஷயந்தான் பேசிக் கொண்டிருக்கிறோம்' என்றார்.
'அதாவது என்ன விஷயம்?' என்று கேட்டேன்.
'ஸ்திரீயுடைய பேச்சு' என்றார்.
'ஸ்திரீகளைப் பற்றின பேச்சா? சரிதான், மேலே உபந்யாஸம் நடக்கட்டும்' என்றேன்.
வாத்தியார் கர்ஜனையைத் தொடங்கினார்:
'நான் சொன்ன விஷயத்தைச் சுருக்கமாக ஸ்ரீபாரதியாரின் புனை பெயர். ''சக்திதாஸ''ருக்கு மறுமுறை சொல்லிக் காட்டிவிட்டு மேலே சொன்னால் தான் அவருக்குத் தொடர்ச்சி தெரியும்' என்று சொல்லி பூர்வ கதையையெடுத்தார்.
அந்த நிமிஷத்தில் வீராசாமி நாயக்கர் ஒரு தரம்பொடிபோட்டுக் கொண்டு கொங்கண பட்டர் தலையில் ஒருகுட்டுக் குட்டினார்.
'சில்லரை விளையாட்டு வேண்டாம். வாத்தியார் பிரசங்கம் நடக்கட்டும்' என்றேன்.
வாத்தியார் கர்ஜனை செய்யலானார்.
'இந்தியாவின் ஆண் பிள்ளைகளுக்குக்கூட வாக்குச் சீட்டுக் கிடையாது. அதாவது ஜனங்களுடைய இஷ்டப்படி ஆள் நியமித்து ஜன சபையாலே நடத்தும் அரசாட்சியுரிமை ஹிந்துகளுக்குக் கிடையாது. ஹிந்துக்களுக்குப் புத்தி சொற்பம். நம்முடைய தேசத்தில் ஆண் பிள்ளைகளுக்குக் கிடையாத மேற்படி வாக்குச் சீட்டுச் சுதந்திரம் வேறு சில தேசங்களிலே பெண்களுக்கு உண்டு. அதாவது, அரசாட்சி இன்னபடிதான் நடக்கவேண்டுமென்று நியமிக்கும் பாத்தியதை அங்கே ஸ்திரீகளுக்கும் உண்டு.
''ஆஸ்திரேலியா, ந்யூஸிலாந்து, டென்மார்க், நார்வே, யுனைடெட் ஸ்டேட்ஸிலே பாதி, கானடா- இத்தனை தேசங்களில்,பெண்களுக்கு வாக்குச் சீட்டு கெட்டியாகவுண்டு. இங்கிலாந்திலேகூட அந்த அநுஷ்டானத்தை ஏற்படுத்த வேண்டுமென்று பலர் மன்றாடுகிறார்கள். போன மந்திரி ஆஸ்க்வித் கூட அந்தக்கட்சியை நெடுங்காலமாக எதிர்த்து வந்து, ஸமீபத்தில் அதற்கனுகூலமாகப் பேசுகிறாரென்று கேள்வி, இதை விடுங்கள்.
''துருக்கி தேசம் தெரியுமா ? அங்கே நேற்று வரை ஸ்திரீகளை மூடிவைத்திருப்பது வழக்கம். கஸ்தூரி மாத்திரைகளை டப்பியில் போட்டு வைத்திருக்கிறார்களோ இல்லையோ ? அந்தமாதிரி; திறந்தால் வாசனை போய்விடும் என்று நம்முடைய தேசத்திலேயே கூட அநேக ஜாதிக்காரர் அந்த மாதிரிதானே செய்கிறார்கள். ஹிந்து ஸ்திரீ ஏறக்குறைய அடிமை நிலைமையிலிருக்கிறாள். நம்முடைய வீடுகளில் அறைக்குள் அடைத்து வைப்பது கிடையாது. அறைக்குள்ளே தான்இருந்தாலென்ன, குடி கெட்டுப் போச்சுது? அடிமையைத் தண்ணீர் கொண்டுவர தெருவிலே விட்டால்தானென்ன? அதுவும் கூடாதென்று கதவைப் பூட்டிக் கைதியாக வைத்திருந்தாலென்ன? எந்த நிலைமையிலிருந்தாலும் அடிமை அடிமைதானே ஸ்வாமி? மனுஷ்ய ஜீவனுக்கு இரண்டு வித நிலைமைதான் உண்டு. எதுவும் தன்னிஷ்டப்படி செய்து, அதனால் ஏற்படக்கூடிய இன்ப நஷ்டங்களுக்குத் தான் பொறுப்பாளியாக இருப்பது ஒரு நிலைமை, அதுதான் சுதந்திரம். அப்படி இல்லாமல், பிறர் இஷ்டப்படி தான் இஷ்டமிருந்தாலும் இல்லாவிட்டாலும் மீறி நடக்கக்கூடாதபடி ட்டுப்பட்டிருத்தல், அடிமை நிலை. அந்த ஸ்திதியில் நம்முடைய"ஸ்திரீகளை வைத்திருக்கிறோம். சும்மா பொய்க்கதை சொல்வதில் ரயோஜனமென்ன, ஸ்வாமி? நம்முடைய ஸ்திரீகள் அடிமைகள். திலே சந்தேகமில்லை. ஹிந்துக்களுக்குள்ளே புருஷர்களுக்கே ரசாட்சியில் வாக்குச் சீட்டுக் கிடையாது. அவர்களுக்குள்ளே ஸ்திரீகள் அடிமைகள். ஹிந்து ஸ்திரீகளைக் காட்டிலும் இப்போது துருக்கி ஸ்திரீகள் நல்ல நிலைமையில் வந்திருக்கிறார்கள். மிஸ். எல்லிஸன் என்றொரு இங்கிலீஷ்காரி ஒரு புஸ்தகம் போட்டு, நேற்றுத்தான் ஒரு பத்திரிகையில் அந்தப் புஸ்தகத்தைப் பற்றி அபிப்பிராயம் போட்டிருந்தது. அந்த அபிப்பிராயம் எழுதினவர் ஒரு சிங்களத்துப் பௌத்தர். அவர் பெயர் ஜினராஜதாஸர். அவர் ஒரு இங்கிலீஷ்காரியைக் கலியாணம் பண்ணிக்கொண்டிருக்கிறார். துருக்கி ஸ்திரீகள் படிப்பு, ராஜியப் பொறுப்பிலே ஊக்கம் முதலிய சகல அம்சங்களிலேயும் போதுமானபடி விருத்தியாய்க் கொண்டுவருவதாக அந்த இங்கிலீஷ் புத்தகத்தில் போட்டிருப்பதாக அந்த பௌத்தர் சொல்லுகிறார். ஐயோ, ராமா, ராகவா, கேசவா, விசுவாமித்ரா!- நமக்கு ஸந்தியாவந்தனம் கொஞ்சம் மறதி!'
இங்ஙனம், அவர் பிரசங்கத்தில் கொஞ்சம் மூச்சுவாங்கும் பொருட்டாக, ஒருவிகட வார்த்தை சொன்னவுடனே, அவருடைய முக்கிய சிஷ்யராகிய கொங்கணபட்டர் கொல்லென்று சிரித்தார். வீராசாமி நாயக்கர் மேற்படி பட்டாசார்யாருடைய தலையில் ஒருகுட்டுக்குட்டி ஒரு தரத்துக்குப் பொடி போட்டுக்கொண்டார்.
வாத்தியார் மறுபடியும் கோஷிக்கலானார்.
''ருதுவான பிறகு, பெண்ணுடைய இஷ்டப்படி கலியாணம் செய்யவேண்டும்; புருஷன் கொடுமையைச் சகிக்க முடியாமலிருந்தால், ஸ்திரீ சட்டப்படி அவனை த்யாஜ்யம் செய்துவிடச் சட்டமும் இடம் கொடுக்கவேண்டும் ; ஊர்க்காரரும் தூஷணை செய்யக்கூடாது. பெண் உழைத்துச் சாப்பிட முடியாது. அந்த விஷயத்தில் ஐரோப்பிய ஸ்திரீ ஸ்வதந்திர முயற்சிக்காரருடைய அபிப்பிராயத்திலிருந்து என் அபிப்பிராயம் பேதப்படுகிறது. பெண்ணை ஸம்பாத்யம் பண்ணி பிழைக்கவிடக்கூடாது. அவளுக்கு பிது ரார்ஜிதத்தில் பாகமிருக்கவேண்டும். கலியாணம் செய்து கொண்டால் புருஷனுடைய சொத்து அவளுடையதாகவே பாவிக்கவேண்டும். (பெண்டாட்டி கையில் காசு கொடுக்கக் கூடாதென்று சொல்லுகிற மனுஷ்யர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.) பெண் அவளிஷ்டப்படி சஞ்சரிக்கலாம். தனி இடங்களில் ஸ்திரீகளைக் கண்டால் மரியாதை செய்து வணங்கவேண்டும். அப்படி எந்தப் புருஷன் மரியாதை செய்யவில்லை யென்று தோன்றுகிறதோ, அவனை கிருகஸ்தர்கள் நெருங்கக்கூடாது. அவன்கூட ஒருவனும் பேச்சு வார்த்தை வைத்துக்கொள்ளாமல் இருந்து விடவேண்டும். அப்படி வீதி வழியோ, கடைத்தெருவோ, ரயில் வழியோ,காசிப்பட்டணமோ ஸ்திரீகள் தனியே போனாலும், புருடர் கண்டு வணங்கும்படி ஏற்பாடு செய்வது நாளது தேதியில் இந்த தேசத்தில் வெகு கஷ்டம். என்ன செய்யலாம்? ஹிந்துக்களிலே நூற்றுக்குத் தொண்ணூறு பேர் மூட ஜனங்கள். அது எப்படி நாசமாய் போனாலும் படித்துக் கௌரவமாகக் குடித்தனம் பண்ணும் ஜனக்கூட்டத்துக்குள்ளே ''ஸ்திரீகள் சுயேச்சையாகப் பேசலாம், சுயேச்சையாக ஸஞ்சரிக்கலாம்'' என்று வைக்க வேண்டும். அது ஸாத்யமாகும்படி புருஷரைத் தண்டிக்க வேண்டும். கையாலாகாதபேரைத் தண்டிப்பதிலே என்ன பிரயோசனம்! ஸ்வாமி எத்தனை நாள் இந்தத் தேசத்தில் பழங்குப்பையில் முழுகிக் கிடக்கப்போகிறார்கள் ? நத்தைப் புழுவைப்போல ஆணும் பெண்ணும்கூடப் பிறக்கிறோம். உடன் பிறந்தான் ஆண்டான், உடன்பிறந்தவள் அடிமை, ஸ்வாமி ! சுத்த பாமரஜனங்கள்' என்றுசோனாமாரியாகப் பொழிந்தார்.
இந்தச் சமயத்தில் என்னுடைய குழந்தை வீட்டிலிருந்து ஒடிவந்து என்னைச் சாப்பிடக் கூப்பிட்டது. நான் எழுந்தேன்.'பிரமராய வாத்தியார் சொல்லுகிற விஷயத்தைக் குறித்து உம்முடைய அபிப்பிராயமென்ன?' என்று என்னை நோக்கிக் கொங்கணபட்டர் கேட்டார்.
நான் சொல்லத் தொடங்கு முன்னே, வீராசாமிநாயக்கர் மேற்படி பட்டாசார்யாருடைய தலையில் ஒரு குட்டுக் குட்டி, 'நீர் சும்மா இருமே, ஓய்' என்று சொன்னார். பிறகு நான்: 'பூலோகத்துப் பஞ்சாயத்தெல்லாம் எனக்கு வேண்டியதில்லை ஸ்வாமி, யாருக்கு என்ன காரியம் சித்தியாக வேண்டுமானாலும், 'ஓம் சக்தி, ஓம் சக்தி' என்று சொன்னால், அவர்களுக்கு அந்தக்காரியம் சித்தியாகும். இதுதான் எனக்குத் தெரிந்த விஷயம்' என்றேன்.
பிரமராய வாத்தியார் 'அது உண்மை' என்றார். இடிப்பள்ளிக்கூட முழுவதும் ''வாஸ்தவந்தான்'' என்று ஒப்புக்கொண்டது. நான் போஜனத்துக்குப் புறப்பட்டேன்.
---------
மாதர் - தமிழ்நாட்டின் விழிப்பு
ஜீவஹிம்ஸை கூடாது. மது மாம்ஸங்களால் பெரும்பான்மையோருக்குத் தீங்கு உண்டாகிறது. மதுமாம்ஸங்கள் இல்லாதிருந்தால் பிராமணருக்கு பெரிய கீர்த்தி.அது பெரிய தவம். அது கிருத யுகத்துக்கு வேராகக் கருதக்கூடிய அநுஷ்டானம்.
ஆனாலும், தாம் ஒரு காரியத்தைச்செய்யாமலிருக்குமிடத்து, அதைப் பிறர் செய்யும்போது அஸூயைகொள்வது தவறு.
ஊண், உடை, பெண் கொடுக்கல், வாங்கல் முதலியவிஷயங்களில் மூடத்தனமாகக் கட்டுப்பாடுகளும் விதிகளும்,தடைகளும் கட்டுவதில் யாதொரு பிரயோஜனமும் கிடையாது.
மேலும் உலகத்து மனிதர்களெல்லோரும் ஒரே ஜாதி. 'இந்தச் சண்டையில் இத்தனை ஐரோப்பியர் அநியாயமாக மடிகிறார்களே'' யென்பதை நினைத்து நான் கண்ணீர் சிந்தியதுண்டு. இத்தனைக்கும் சுதேசியத்திலே கொஞ்சம் அழுத்தமானவன், அப்படியிருந்தும் ஐரோப்பியர் மடிவதில் எனக்குச் சம்மதம் கிடையாது. எல்லா மனிதரும் ஒரேவகுப்பு.
சகல மனிதரும் சகோதரர். மனுஷ்யவர்க்கம் ஓருயிர். இப்படியிருக்க நாம் ஒரு வீட்டுக்குள்ளே மூடத்தனமாக ஆசாரச்சுவர்கள் கட்டி, 'நான் வேறு ஜாதி. என் மைத்துனன் வேறு ஜாதி. இருவருக்குள் பந்தி போஜனம் கிடையாது. அவனை ஜாதிப்பிரஷ்டம் பண்ணவேண்டும்' என்பது சுத்த மடமையென்பதைக் காட்டும் பொருட்டாக இத்தனை தூரம் எழுதினேனே தவிரவேறில்லை.
தமிழ் நாட்டில் ஜாதி ஸம்பந்தமான மூட விதிகளும் ஆசாரங்களும் சடசடவென்று நொறுங்கி விழுகின்றன.
அடுத்த விஷயம், பெண் விடுதலை. தமிழ் நாட்டில் பெண் விடுதலைக் கக்ஷிக்கு தலைவியாக ஸ்ரீமான் நீதிபதி சதாசிவய்யரின் பத்தினி மங்களாம்பிகை விளங்குகிறார். ஸ்ரீஅனிபெசண்ட் இந்த விஷயத்தில் அவருக்குப் பெரிய திருஷ்டாந்தமாகவும், தூண்டுதலாகவும் நிற்கிறார்.
இவ்விருவராலும் இப்போது பாரத தேசத்தில் உண்மையான பெண் விடுதலை உண்டாக ஹேது ஏற்பட்டது இவ்விருவருக்கும் தமிழுலகம் கடமைப்பட்டது இவர்களுடைய கக்ஷி என்னவென்றால், ஸ்திரீகளுக்கு ஜீவன் உண்டு; மனம்உண்டு; புத்தியுண்டு; ஐந்து புலன்கள் உண்டு. அவர்கள் செத்தயந்திரங்களல்லர். உயிருள்ள செடிகொடிகளைப் போலவுமல்லர். சாதாரணமாக ஆண் மாதிரியாகவேதான். புறவுறுப்புக்களில் மாறுதல்; ஆத்மா ஒரே மாதிரி.''
இதனை மறந்து அவர்களைச் செக்கு மாடுகளாகப் பாவிப்போர் ஒரு திறத்தார். பஞ்சுத் தலையணிகளாகக் கருதுவோர்மற்றொரு திறத்தார். இரண்டும் பிழை.
ஸ்திரீகள் தமக்கிஷ்டமான பேரை விவாகம்செய்து கொள்ளலாம். விவாகம் செய்துகொண்ட புருஷனுக்கு ஸ்திரீ அடிமையில்லை; உயிர்த்துணை; வாழ்க்கைக்கு ஊன்றுகோல்; ஜீவனிலே ஒரு பகுதி; சிவனும் பார்வதியும்போலே. விஷ்ணுவும் லக்ஷ்மியும் போலே. விஷ்ணுவும் சிவனும் பரஸ்பரம் உதைத்துக் கொண்டதாகக் கதை சொல்லும் பொய்ப் புராணங்களிலே லக்ஷ்மியை அடித்தாரென்றாவது, சிவன் பார்வதியை விலங்கு போட்டு வைத்திருந்தாரென்றாவது கதைகள் கிடையா. சிவன் ஸ்திரீயை உடம்பிலே பாதியாக தரித்துக்கொண்டார். விஷ்ணு மார்பின் மேலே இருத்தினார். பிரம்மா நாக்குக் குள்ளேயே மனவியைத் தாங்கி நின்றார். ஜத்திற்கு ஆதாரமாகிய பெருங் கடவுள் ஆண் பெண் எனஇரண்டு கலைகளுடன் விளங்குகிறது. இரண்டும் பரிபூர்ணமானசமானம். பெண்ணே அணுவளவு உயர்வாகக் கூறுதலும் பொருந்தும். எனவே, இன்று தமிழ் நாட்டில் மாத்திரமேயல்லாது பூமண்டல முழுதிலும், பெண்ணைத் தாழ்வாகவும் ஆணைமேலாகவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு. அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம் அநீதிகளுக்கெல்லாம் கோட்டை; கலியுகத்திற்குப் பிறப்பிடம்.
இந்த விஷயம் தமிழ் நாட்டில் பல புத்திமான்களின் மனதிலே பட்டு, பெண் விடுதலைக் கக்ஷி தமிழ் நாட்டின் கண்ணே பலமடைந்து வருவதை நோக்குமிடத்தே எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி யுண்டாகிறது. இந்த விஷயத்திலும் தமிழ் நாடு பூமண்டலத்துக்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்குமென்பதில் ஆக்ஷேபமேயில்லை.
அடுத்த விஷயம் மத பேதங்களைக் குறித்தது. இதில்பாரத தேசம் - முக்கியமாகத் தமிழ்நாடு - இன்று புதிதாக அன்று, நெடுங்காலமாக தலைமையொளி வீசிவருதல் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ராமானுஜர் தமிழ் நாட்டில் பிறந்தவர் அன்றோ? "ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவதாரம் புரிந்தது தமிழ்நாட்டிலன்றோ? பறையனைக் கடவுளுக்கு நிகரான நாயனாராக்கிக் கோயிலில் வைத்தது தமிழ் நாட்டிலன்றோ ? சிதம்பரம் கோயிலுக்குள்ளே நடராஜாவுக்கு ஒரு சந்நதி, பெருமாளுக்கொரு சந்நதி. ஸ்ரீரங்கத்திலே, பெருமாளுக்கு ஒரு துருக்கப் பெண்ணைத் தேவியாக்கித் துலுக்கநாச்சியார் என்று பெயர் கூறி வணங்குகிறார்கள். 'எம்மதமும் சம்மதம்' என்றார் ராமலிங்கஸ்வாமி.
உலகத்திலுள்ள மதபேதங்களை யெல்லாம் வேருடன் களைந்து ஸர்வ ஸமய ஸமரஸக் கொள்கையை நிலைநாட்ட வேண்டுமானால், அதற்குத் தமிழ் நாடே சரியான களம். உலகமுழுவதும் மத விரோதங்களில்லாமல் ஒரே தெய்வத்தைத் தொழுது உஜ்ஜீவிக்கும்படி செய்யவல்ல மஹான்கள் இப்போது தமிழ்நாட்டில் தோன்றியிருக்கிறார்கள். அது பற்றியே பூமண்டலத்தில் புதிய விழிப்பு தமிழகத்தே தொடங்குமென்கிறோம்.
மேலே சொன்னபடி, ''பரிபூரண ஸமத்வம் இல்லாத இடத்தில் நாம் ஆண் மக்களுடன் வாழமாட்டோம்'' என்று சொல்லுவதனால் நமக்கு நம்முடைய புருஷராலும் புருஷ சமூகத்தாராலும் நேரத்தக்க கொடுமைகள் எத்தனையோ யாயினும், எத்தன்மை-யுடையனவாயினும் நாம் அஞ்சக் கூடாது. சகோதரிகளே! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு; தர்மத்துக்காக இறப்போரும்இறக்கத்தான் செய்கிறார்கள். ஆதலால், சகோதரிகளே! பெண்விடுதலையின் பொருட்டாகத் தர்ம யுத்தம் தொடங்குங்கள். நாம்வெற்றி பெறுவோம். நமக்குப் பராசக்தி துணைபுரிவாள். வந்தே மாதரம்.
-----------
மாதர் - பதிவிரதை
இந்தக் காலத்தில், பல பொய்கள் இடறிப்போகின்றன.பல பழைய கொள்கைகள் தவிடு பொடியாகச் சிதறுகின்றன. பலஅநீதிகள் உடைக்கப்படுகின்றன. பல அநியாயக்காரர்கள்பாதாளத்தில் விழுகிறார்கள்.
இந்தக் காலத்தில், யாருக்கும் பயந்து நாம் நமக்குத்தோன்றுகிற உண்மைகளை மறுக்கக் கூடாது. பத்திரிகைகள்தான், இப்போது உண்மை சொல்ல, சரியான கருவி. பத்திராதிபர்கள் இந்தக் காலத்தில் உண்மைக்குப் புகலிடமாக விளங்குகிறார்கள்.
'ஸ்திரீகள் பதிவிரதையாக இருக்க வேண்டும்' என்று எல்லாரும் விரும்புகிறார்கள். அதிலே கஷ்டம் என்ன வென்றால், ஆண் பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை. ஆண் மக்களில்ஒவ்வொருவனும் தன் மனைவி மக்கள் பதிவிரதைகளாக இருக்கவேண்டுமென்பதில் எத்தனை ஆவலோடு இருக்கிறானோ, அத்தனை ஆவல் இதர ஸ்திரீகளின் பதிவிரத்யத்திலே காட்டுவதில்லை ஒவ்வொருவனும் ஏறக்குறைய தன் இனத்து ஸ்திரீகளைப் பதிவிரதை என்று நம்புகிறான்.
ஆணும் பெண்ணும் ஒன்றுக்கொன்று உண்மையாக இருந்தால் நன்மையுண்டாகும்; பதிவிரதைக்கு அதிக வீரமும் சக்தியும் உண்டு. சாவித்ரீ தனது கணவனை எமன் கையிலிருந்து மீட்ட கதையில் உண்மைப் பொருள் பொதிந்திருக்கிறது. ஆனால், பதிவிரதை இல்லை என்பதற்காக ஒரு ஸ்திரீயை வதைத்து ஹிம்சை பண்ணி அடித்து ஜாதியை விட்டுத் தள்ளி ஊரார் இழிவாக நடத்தி அவளுடன் யாவரும் பேசாமல் கொள்ளாமல் தாழ்வுபடுத்தி அவளைத் தெருவிலே சாகும்படிவிடுதல் அநியாயத்திலும் அநியாயம்.
அட பரம மூடர்களா! ஆண் பிள்ளைகள் தவறினால் ஸ்திரீகள் எப்படி பதிவிரதையாக இருக்க முடியும்? கற்பனைக் கணக்குப் போட்டுப் பார்ப்போம். ஒரு பட்டணத்தில் லக்ஷம் ஜனங்கள், ஐம்பதினாயிரம் பேர் ஆண்கள், ஐம்பதினாயிரம் பேர் பெண்கள். அதில் நாற்பத்தையாயிரம்ஆண்கள் பரஸ்திரீகளை இச்சிப்பதாக வைத்துக்கொள்வோம். அதிலிருந்து குறைந்த பக்ஷம் நாற்பத்தையாயிரம் ஸ்திரீகள் பரபுருஷர்களின் இச்சைக்கிடமாக வேண்டும். இந்தக் கூட்டத்தில் இருபதினாயிரம் புருஷர்கள் தம் இச்சையை ஓரளவு நிறைவேற்றுவதாக வைத்துக்கொள்வோம். எனவே குறைந்தபக்ஷம் இருபதினாயிரம் ஸ்திரீகள் வ்யபசாரிகளாக இருத்தல் அவசியமாகிறது. அந்த இருபதினாயிரம் வ்யபசாரிகளில் நூறுபேர்தான் தள்ளப்படுகிறார்கள். மற்றவர்கள் புருஷனுடன் வாழ்கிறார்கள். ஆனால், அவளவளுடைய புருஷனுக்கு மாத்திரம் அவளவள் வ்யபசாரி என்பது நிச்சயமாகத் தெரியாது.தெரிந்தும் பாதகமில்லையென்று சும்மா இருப்பாருமுளர்.
ஆகவே, பெரும்பாலோர் வ்யபசாரிகளுடனே தான் வாழ்கிறார்கள். இதனிடையே, பாதிவ்ரத்யத்தைக் காப்பாற்றும்பொருட்டாக ஸ்திரீகளைப் புருஷர்கள் அடிப்பதும், திட்டுவதும்,கொடுமை செய்வதும் எல்லையின்றி நடைபெற்று வருகின்றன.சீச்சீ! மானங்கெட்ட தோல்வி, ஆண்களுக்கு! அநியாயமும் கொடுமையும் செய்து பயனில்லை!
இதென்னடா இது! ''என்மேல் ஏன் விருப்பம் செலுத்தவில்லை?''என்று ஸ்திரீயை அடிப்பதற்கு அர்த்தமென்ன? இதைப்போல் மூடத்தனம் மூன்று லோகத்திலும் வேறே கிடையாது.
ஒரு வஸ்து நம்முடைய கண்ணுக்கு இன்பமாக இருந்தால், அதனிடத்தில் நமக்கு விருப்பம் இயற்கையிலே உண்டாகிறது. கிளியைப் பார்த்தால் மனிதர் அழகென்று நினைக்கிறார்கள். தவளை அழகில்லை என்று மனிதர் நினைக்கிறார்கள் இதற்காகத் தவளைகள் மனிதரை அடித்தும், திட்டியும், சிறையிலே போட்டும் துன்பப்படுத்த அவற்றுக்கு வலிமை இருப்பதாக வைத்துக் கொள்வோம் அப்படி அவை செய்தால் நாம் நியாயமென்று சொல்லுவோமா?
தேசங்களில் அன்னியர் வந்து கொடுங்கோல் அரசு செலுத்துகிறார்கள். அவர்களிடம் அந்த ஜனங்கள் ராஜ பக்தி செலுத்த வேண்டுமென்றும் அங்ஙனம் பக்தி செய்யா விட்டால், சிறைச்சாலையிலே போடுவோம் என்றும் சொல்லுகிறார்கள். அப்படிப்பட்ட ராஜ்யத்தை உலகத்து நீதிமான்கள் அவமதிக்கிறார்கள்.
அந்த அரசுபோலே தான், ஸ்திரீகள் மீது புருஷர்"செய்யும் ''கட்டாய ஆட்சியும்'' என்பது யாவருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாக விளங்கும். கட்டாயப்படுத்தி,என்னிடம் அன்பு செய் என்று சொல்வது அவமானமல்லவா?
ஸ்திரீகள் புருஷர்களிடம் அன்புடன் இருக்க வேண்டினால், புருஷர் ஸ்திரீகளிடம் அசையாத பக்தி செலுத்தவேண்டும். பக்தியே பக்தியை விளைவிக்கும். நம்மைப் போன்றதொரு ஆத்மா நமக்கு அச்சத்தினாலே அடிமைப்பட்டிருக்கும் என்று நினைப்பவன் அரசனாயினும்,குருவாயினும், புருஷனாயினும் மூடனைத் தவிர வேறில்லை. அவனுடைய நோக்கம் நிறைவேறாது. அச்சத்தினால் மனுஷ்யஆத்மா வெளிக்கு அடிமைபோல் நடித்தாலும் உள்ளே துரோகத்தை வைத்துக் கொண்டுதான் இருக்கும்.
அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது.
-----------
மாதர் - பெண் விடுதலை (1)
இங்கிலாந்தில் பெண்களுக்கு வாக்குச் சீட்டுக் கொடுத்தாய்விட்டதென்று சில தினங்களின் முன்பு 'ராய்டர்' தந்திவந்தது. 'அதைப்பற்றிய பத்திராதிபர் குறிப்பொன்று ''ஸ்திரீகளின்ஐயம்'' என்ற மகுடத்துடன் சுதேசமித்திரன் பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது. நேற்று மாலை நானும் என்னுடைய சினேகிதர் சிரோமணி ராமராயரும் வேறு சிலருமாக இருக்கையில் மேற்படி தேதி (அதாவது ''ஸ்திரீகளின் ஜயம்'' எழுதியிருந்த) சுதேசமித்திரன் பத்திரிகையைக் கையில் எடுத்துக்கொண்டு மோட்டு வீதி கோபாலய்யர் பத்தினி வேதவல்லி அம்மை வந்தார்.
வேதவல்லி அம்மைக்கு நாற்பது வயது. தமிழிலும்இங்கிலீஷிலும் உயர்ந்த படிப்பு. ஸமஸ்கிருதம் கொஞ்சம் தெரியும். இவளுடைய புருஷன் கோபாலய்யர் பெரிய சர்க்கார் உத்தியோகத்திலிருந்து விலகி பணச்செருக்கு மிகுந்தவராய் தமது பத்தினியாகிய வேதவல்லியுடனும் நான்கு குழந்தைகளுடனும் சௌக்கியமாக வேதபுரத்தில் வாழ்ந்துவருகிறார். வேதவல்லிக்கு அவர் விடுதலை கொடுத்து விட்டார். எங்கும் போகலாம், யாருடனும் பேசலாம். வீட்டுச் சமையல் முதலிய காரியமெல்லாம் ஒரு கிழவி பார்த்துக் கொள்கிறாள். வேதவல்லி அம்மை புஸ்தகம், பத்திரிகை, சாஸ்திர ஆராய்ச்சி, பொதுக்கூட்டம் முதலியவற்றிலே காலங்கழித்து வருகிறார்.
வேதவல்லி வரும்போது நான் ராமராயர் முதலியவர்களுடன் வேதவியாசர் செய்த பிரம்ம சூத்திரத்திற்கு சங்கராச்சாரியர் எழுதின அத்வைத பாஷ்யத்தை வாசித்து அதன் சம்பந்தமாகத் தர்க்கித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் வேதவல்லியார் வந்தனர். (ஒருமை பன்மை இரண்டும்பெண்களுக்கு உயர்வையே காட்டும்) வேதவல்லிக்கு நாற்காலி கொடுத்தோம். உட்கார்ந்தாள். தாகத்துக்கு ஜலம் கொண்டுவரச் சொன்னாள். பக்கத்திலிருந்த குழந்தையை மடைப்பள்ளியிலிருந்து ஜலம் கொண்டு கொடுக்கும்படி ஏவினேன். அதனிடையே,வேதவல்லி அம்மை 'என்ன சாஸ்திரம் ஆராய்ச்சி செய்கிறீர்கள்?' என்று கேட்டாள். சங்கரபாஷ்யம் என்று சொன்னேன். வேதவல்லி சிரித்தாள். 'சங்கர பாஷ்யமா! வெகுஷோக். இந்துக்களுக்கு இராஜ்யாதிகாரம் வேண்டுமென்று சொல்லித்தான் மன்றாடப்போய் ''அன்னிபெஸண்ட்'' வலைக்குள் மாட்டிக்கொண்டாள். அவள் இங்கிலீஷ்கார ஸ்திரீ. நம்முடைய தேசத்து வீராதிவீரராகிய ஆண்பிள்ளைச் சிங்கங்கள் சங்கரபாஷ்யம் வாசித்துப்பொருள் விவரித்துக் கொண்டிருக்கிறார்கள்.க்ஷோக்! ஷேக்! இரட்டை ஷேக்!' என்றாள்.
ராமராயருக்குப் பளிச்சென்று கோபம் வந்துவிட்டது. 'சரிதானம்மா, நிறுத்துங்கள். தங்களுக்குத் தெரிந்த ராஜயுக்த்திகள் பிறருக்குத் தெரியாதென்று நினைக்க வேண்டாம்' என்றார்.
''இங்கிலாந்தில் ஸ்திரீகளுக்குச் சீட்டுக் கொடுத்தாய்விட்டது'' என்று சொல்லி வேதவல்லி தன் கையில் இருந்த சுதேசமித்திரன் பத்திரிகையை ஏறக்குறைய ராமராயர் முகத்தில்வந்து விழும்படி வீசிப் போட்டாள். ராமராயர் கையில் தடுத்துக்கீழே விழுந்த பத்திரிகையை எடுத்து மெதுவாக மேஜையின்பேரிலே வைத்துவிட்டு தலைக்குமேலே உத்தரத்தைப் பார்த்துக்கொண்டு ஏதோ யோசனையில் இறங்கிவிட்டார். குழந்தை இச்சமயத்தில் ஜலம் கொண்டு கொடுத்தது.வேதவல்லியம்மை இதை வாங்கி சற்றே விடாய் தீர்த்துக்கொண்டாள். ''என்ன ராமராயரே,! மோட்டைப் பார்க்கிறீரே? மோட்டில் என்ன எழுதியிருக்கிறது. 'ப்ரம்மம் ஸத்யம் லோகம்மித்யை ஆதலால், விதவான்கள் எப்பொழுதும் பொய் சொல்லிக்கொண்டே இருப்பதே மேன்மை' என்றெழுதியிருக்கிறதா?''"என்று கேட்டாள்.
ராமராயருக்கு முகம் சிவந்து போய்விட்டது.கொஞ்சம் மீசையைத் திருகி விட்டுக்கொண்டார். தாடியை இரண்டு தரம் இழுத்தார். கடகடவென்று சிரிக்கத் தொடங்கினார்.
ஸ்ரீமதி ஆன்னி பெஸண்ட் ராஜ்ய விஷயத்திலே தலையிட்டு சுதேசியமே தாரகமென்றும், வந்தே மாதரம் ஒன்றே ஜீவமந்திரம் என்றும் பேசத்தலைப்பட்டது மேற்படி ராமராயருக்குச் சம்மதமில்லை. வேதாந்திகள் எப்போதும் பரப்ரஹ்மத்தையே கவனிக்க வேண்டும்; லௌகிக விஷயங்களைத் துளிகூடக் கவனிக்கக் கூடாதென்பது அவருடைய மதம்.
வேதவல்லி அம்மை ராமராயரை நோக்கிச் சொல்லுகிறார்:- 'எடுத்ததற்கெல்லாம் ஆன்னி பெஸண்ட் சொன்னதே பிரமாணம் என்று தொண்டை வறண்டு போகக்கத்தி கொண்டிருந்தீர். இப்போது அந்த அம்மாள் சுயராஜ்யம் நல்லதென்று சொல்லும்போது அவளைப் புறக்கணிக்கிறீர்! ஐயோ! கஷ்டம்! புருஷ ஜன்மம்! ஸ்திரீகளுக்குள்ள திறமையிலே நாலிலொரு பங்கு புருஷர்களுக்கில்லை. எல்லா தேசங்களிலும் புருஷரைக் காட்டிலும் ஸ்திரீகளுக்கு ஆயுள் அதிகம். அதனால் சரீர உறுதி அதிகம் என்று ருஜு வாக்கியாயிற்று; புத்தி அதிகமென்பதுந்தான். ராமாயணத்தில் சீதை பொய் மானை மெய் மான் என்று நினைத்து ஏமாற்றம் அடைந்தாள் என்றும் எங்கள் வீட்டில் ஒரு தாத்தா நேற்று வந்து பேசிக்கொண்டிருந்தார். அந்த சீதை சொல்லுக்குக் கட்டுப்பட்டுஅதை வேட்டையாடப் போன ராமனுடைய புத்தியைக் காட்டிலும் அவளுக்குப் புத்தி அதிகமா, குறைவா, என்று நான் கேட்டேன். தாத்தா தலையைக் குனிந்து கொண்டு வாயில் கொழுக்கட்டையைப் போட்டுக்கொண்டு சும்மாயிருந்தார். சகல அம்சங்களிலும் ஸ்திரீயே மேல். அதில் சந்தேகமில்லை' என்று வேதவல்லி சொன்னாள்.
'ஸ்திரீகளுக்குப் பேசும் திறமை அதிகம்? என்றுராமராயர் சொன்னார்.
வேதவல்லி யம்மை சொன்னார்: 'அன்னிபெஸண்டுக்கு ஸமானமாக நம்முடைய புருஷரில் ஒருவருமில்லை. அந்த அம்மாள் கவர்னருடனே சம்பாஷணை செய்ததைப் பார்த்தீரா? அந்த மாதிரி கவர்னரிடத்தில் நீர் பேசுவீரா?'
இதைக் கேட்டவுடன் ராமராயர், ''நான் வீட்டுக்குப்போய்விட்டு வருகிறேன்'' என்று சொல்லி எழுந்து நின்றார். நான் இரண்டு கட்சியையும் சமாதானம் பண்ணிக் கடைசியாக வேதவல்லியம்மை பொதுப்படையாக ஆண் பிள்ளைகளை எவ்வளவு கண்டித்துப் பேசியபோதிலும் ராமராயரைச் சுட்டிக் காட்டி ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாது என்று தீர்மானம் செய்துகொண்டோம். அப்பால் வேதவல்லி அம்மையின் உபந்யாஸம் நடக்கிறது:-
''ஹிந்து ஸ்திரீகள் ராஜ்ய விவகாரங்களிற் சேர்ந்து பாடுபடாதவரையில், இங்குள்ள புருஷர்களுக்கு விடுதலை ஏற்பட நியாயமில்லை. இந்தத் தேசத்தில் ஆதிகாலத்துப் புருஷர் எப்படி யெல்லாமோ இருந்ததாகக் கதைகளில் வாசித்திருக்கிறோம். ஆனால் இப்போதுள்ள புருஷரைப் பற்றிப்பேசவே வழியில்லை. ஹிந்து ஸ்திரீகள் ராஜ்ய விவகாரங்களிலே தலையிட்டால் அன்னி பெஸண்டுக்கு ஸமானமாக வேலை செய்வார்கள். இங்குள்ள ஆண் பிள்ளைகள் வேதாந்த விசாரணைக்கும் குமாஸ்தா வேலைக்கும் தான்உபயோகப்படுவார்கள். ராஜ்ய க்ஷேமத்தைக் கருதி தைர்யத்துடன் கார்யம் நிறைவேறும்வரை பாடுபடும் திறமைஇத்தேசத்துப் புருஷருக்கு மட்டு. ஸரோஜினி நாயுடு எவ்வளவுதைரியமாகப் பேசுகிறார்கள், பார்த்தீர்களா? உலகத்தில் எங்குமே புருஷரைக் காட்டிலும் ஸ்திரீகள் அதிக புத்திசாலிகள் என்றும்,தைரியசாலிகள் என்றும் தோன்றுகிறது. மற்ற தேசங்களில் எப்படியானாலும், இங்கே பெண்ணுக்குள்ள தைர்யமும் புத்தியும் ஆணுக்குக் கிடையாது. இங்கிலாந்தில் பெண்கள்ஆண் பிள்ளைகளை வசப்படுத்தி எவ்வளவு சுலபமாகச் சீட்டு வாங்கி விட்டார்கள்.
ஹோ! ஹோ! அடுத்த தடவை இங்கிருந்து காங்கிரஸ்காரர் இங்கிலாந்திற்கு ஸ்வராஜ்யம் கேட்கப்போகும்போது, அங்குள்ள புருஷரைக் கெஞ்சினால் போதாது. ஸ்திரீகளைக் கெஞ்சவேண்டும். அதற்கு இங்கிருந்து புருஷர் மாத்திரம் போனால் நடக்காது. இந்த தேசத்துப் புருஷர்களைக் கண்டால் அங்குள்ள ஸ்திரீகள் மதிக்க மாட்டார்கள். ஆதலால்,காங்கிரஸ் ஸபையார் நமது ஸ்திரீகளை அனுப்புவதே நியாயம். எனக்கு இங்கிலீஷ் தெரியும். என்னை அனுப்பினால் நான் போய் அங்குள்ள பெண் சீட்டாளிகளிடம் மன்றாடி இந்தியாவுக்கும் சீட்டுரிமை வாங்கிக் கொடுப்பேன். பெண்பெருமை பெண்ணுக்குத் தெரியும். உங்களிடம் சொல்லிப் பிரயோஜனம் இல்லை' என்று சொன்னாள்.
ராமராயர்:- 'வேறு விஷயம் பேசுவோம்' என்றார். தான் பாதி பேசும்போது, ராமராயர் தடுத்துப் பேசியதிலிருந்து, அந்த வேதவல்லி அம்மைக்குக் கோபம் உண்டாகி, 'நான் இவரைக் குறிப்பிட்டு ஒன்றும் சொல்லுவதில்லை யென்றும்,இவர் சும்மாயிருக்கவேண்டும் என்றும், ஆரம்பத்தில் செய்யப்பட்ட தீர்மானத்தை இவர் அதற்குள்ளே மறந்துவிட்டார்' என்று சொல்லி வெறுப்புடன் எழுந்து போய்விட்டார்.
நான் எத்தனையோ சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. ''ராமராயர் இருக்கும் சபையிலே தான் இருக்கலாகாது'' என்று சொன்னாள். அந்த அம்மை சென்றபிறகு ராமராயர் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.'என்ன சொல்லுகிறீர்?' என்று கேட்டேன்.
ஸ்திரீகளுக்கு விடுதலை கொடுப்பது மிகவும் அவசியத்திலும் அவசியம் என்று ராமராயர் சொன்னார். பிறகு மறுபடி சங்கர பாஷ்யத்தில் இறங்கி விட்டோம்.
-----------
மாதர் - பெண் விடுதலை (2)
அடிமைகள் யாராயினும், அவர்களுக்கு விடுதலை கொடுத்தால், அதினின்றும் யுகப்பிரளயம் நிச்சயமாக நேரிட்டு, அண்டச் சுவர்கள் இடிந்து போய் ஜகத்தே அழிந்துவிடும் என்று சொல்லுதல் அவர்களை அடிமைப்படுத்திஆள்வோருடைய ஸம்பிரதாயம்.
இருபது முப்பது வருஷங்களுக்கு முன்பு, பெண்கல்வி ஏற்பட்டால் மாதர் ஒழுக்கத்தில் தவறி விடுவார்களென்று தமிழ் நாட்டில் பலர் கூறினர். இப்போதோ,பெண் கல்வி தமிழ்நாட்டில் சாதாரணமாகப் பரவியிருக்கிறது. அண்டச் சுவர்கள் இன்னும் இடிந்து போகவில்லை. இதுவரைகூடிய மட்டும் பத்திரமாகவே இருந்து வருகின்றன. ஆனால், இப்பொழுது பெண்களுக்கு விடுதலை கொடுத்தால், ஏழுலோகமும் கட்டாயம் இடிந்து பூமியின்மேல் விழும் என்றும், வால் நக்ஷத்திரம் வகையராக்களெல்லாம் நடுவிலே அகப்பட்டுத் துவையலாய் விடும் என்றும் பலர் நடுங்குகிறார்கள். 'மதறாஸ் மெயில்' போன்ற ஆங்கிலேயப் பத்திராதிபதியிடம் போய் இந்தியாவிற்கு சுயராஜ்யம் கொடுத்தால் என்ன நடக்கும் என்று கேளுங்கள். ''ஓஹோ!ஹோ! ஹோ! இந்தியாவிற்கு சுயராஜ்யம் கொடுத்தால் பஞ்சாபிகள் ராஜபுத்திரரைக் கொல்வார்கள். பிறகு, ராஜபுத்திரர் மஹாராஷ்டிரரின் கூட்டத்தையெல்லாம் விழுங்கிப் போடுவார்கள். அப்பால், மஹாராஷ்டிரர் தெலுங்கரையும் கன்னடரையும் மலையாளிகளையும் தின்று விடுவார்கள். பிறகு மலையாளிகள் தமிழ்ப் பார்ப்பாரையும், தமிழ்ப் பார்ப்பார் திராவிடரையும், சூர்ணமாக்கி விடுவார்கள். சூர்ணித்த திராவிடர் வங்காளி எலும்புகளை மலையாகப் புனைவர்' என்று சொல்லிப் பெருமூச்சு விடுவார். அதே கேள்வியை நீதிபதி மணி அய்யர், கேசவப்பிள்ளை, சிதம்பரம் பிள்ளை முதலியவர்களைப் போய்க் கேளுங்கள். 'அப்படி பெரிய அபாயம் ஒன்றும் உண்டாகாது. ஸ்வராஜ்யம் கிடைத்தால் கஷ்டம் குறையும். பஞ்சம் வந்தால் அதைப் பொறுக்கத் திறன் உண்டாகும். அகால மரணம் நீங்கும் அவ்வளவுதான்' என்று சொல்லுவார்கள்.
அதுபோலவே, பெண்களுக்கு விடுதலை கொடுத்ததனால் ஜனசமூகம் குழம்பிப் போய்விடும் என்றுசொல்லுவோர், பிறர் தமது கண்முன் ஸ்வேச்சையுடன் வாழ்வதை தாம் பார்க்கக்கூடாதென்று அசூயையால் சொல்லுகிறார்களேயொழிய வேறொன்றுமில்லை. விடுதலை என்றால் என்ன அர்த்தம்? விடுதலை கொடுத்தால் பிற ஸ்திரீகள் என்ன நிலையில் இருப்பார்கள்? பெண்களுக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்? வீடுகளை விட்டு வெளியே துரத்திவிடலாமா? செய்யவேண்டிய விஷயமென்ன என்றுபலர் சங்கிக்கலாம். இங்ஙனம் சங்கையுண்டாகும்போது விடுதலையாவது யாது என்ற மூலத்தை விசாரிக்கும்படி நேரிடுகிறது. இதற்கு மறுமொழி சொல்லுதல் வெகுசுலபம். பிறருக்குக் காயம் படாமலும், பிறரை அடிக்காமலும், வையாமலும், கொல்லாமலும், அவர்களுடைய உழைப்பின் பயனைத் திருடாமலும், மற்றபடி ஏறக்குறைய ''நான் ஏதுபிரியமானாலும் செய்யலாம்'' என்ற நிலையில் இருந்தால் மாத்திரமே என்னை விடுதலையுள்ள மனிதனாகக் கணக்கிடத்தகும் 'பிறருக்குத் தீங்கில்லாமல் அவனவன் தன் இஷ்டமானதெல்லாம் செய்யலாம் என்பதே விடுதலை'' என்று ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்சொல்லுகிறார்.
இந்த விதிப்படி உலகத்தில் பெரும்பான்மையான ஆண் மக்களுக்கே விடுதலை உண்டாகவில்லை. ஆனால் இவ்விடுதலை பெரும் பொருட்டாக நாடுதோறும் ஆண்மக்கள் பாடுபட்டு வருகிறார்கள். ஆண்மக்கள் ஒருவருக்கொருவர் அடிமைப்பட்டிருக்கும் கொடுமை சகிக்கமுடியாது ஆனால், இதில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களைக் காட்டிலும் பல்லாயிர மடங்கு அதிகக் கஷ்ட நஷ்டங்கள் பெண் கூட்டத்தை ஆண் கூட்டம் அடிமைப்படுத்தி வைத்திருப்பதால் விளைகின்றன.
அடிமைத் தேசங்களிலே கூட ஆண் மக்களிற் பெரும்பாலோர் - அதாவது ரஹஸ்யப் போலீஸ்" உபத்திரவத்திற்கு இடம் வைத்துக் கொண்டவர். தவிர மற்றவர்கள் - தம் இஷ்டப்படி எந்த ஊருக்குப் போகவேண்டுமானாலும், போகலாம், எங்கும் சஞ்சரிக்கலாம். தனியாக சஞ்சாரம் பண்ணக்கூடாதென்ற நியதி கிடையாது.ஆனால் பெண் தன்னிஷ்டப்படி தனியே சஞ்சரிக்க வழியில்லாத தேசங்களும் உள. அவற்றில் நமது தேசத்தில் பெரும் பகுதி உட்பட்டிருப்பதைப் பற்றி மிகவும் விசனப்படுகிறேன்.
'ஓஹோ! பெண்கள் தனியாக சஞ்சாரம் செய்ய இடங்கொடுத்தால் அண்டங்கள் கட்டாயம் இடிந்து போகும். ஒருவிதமான நியதியும் இருக்காது. மனுஷ்யர் மிருகப் பிராயமாய் விடுவார்கள்' என்று சில தமிழ்நாட்டு வைதிகர் நினைக்கலாம். அப்படி நினைப்பது சரியில்லை. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பெண்கள் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் போகலாமென்று வைத்திருக்கிறார்கள். அதனால் பூகம்ப மொன்றும் நேர்ந்துவிடவில்லை. ஸ்ரீமதி அனிபெஸண்டை நம்மவர்களிலே பலர் மிகவும் மரியாதையுடன் புகழ்ந்து பேசுகிறார்கள். ''அவரைப்போலே நமதுஸ்திரீகள் இருக்கலாமே'' என்றால், நம்மவர் கூடாதென்று தான் சொல்லுவார்கள். காரணமென்ன? ஐரோப்பிய ஸ்திரீகளைக் காட்டிலும் நமது ஸ்திரீகள் இயற்கையிலே நம்பத்தகாதவர்கள் என்று தாத்பர்யமா?
''மேலும் ஐரோப்பியரை திருஷ்டாந்தம் காட்டினால் நமக்கு ஸரிப்படாது. நாம் ஆரியர்கள், திராவிடர்கள். அவர்களோ, கேவலம் ஐரோப்பியர்'' என்று சொல்லிச்சிலர் தலையசைக்கலாம்.
சரி, இந்தியாவிலே மஹாராஷ்டிரத்தில் ஸ்திரீகள் யதேச்சையாகச் சஞ்சாரம் பண்ணலாம். தமிழ் நாட்டில் கூடாது.ஏன்?
பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் இன்னும் முக்கியமான - ஆரம்பப் படிகள் எவையென்றால்:-
(1) பெண்களை ருதுவாகு முன்பு விவாகம் செய்துகொடுக்கக் கூடாது.
(2) அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனைவிவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.
(3) விவாகம் செய்துகொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது.
(4) பிதுரார்ஜிதத்தில் பெண்குழந்தைகளுக்கு ஸமபாகம்செய்து கொள்வதைத் தடுக்கக்கூடாது.
(5) விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றால் கௌரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங்கொடுக்க வேண்டும்.
(6) பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக்கூடாதென்றும் பழகக்கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்து விடவேண்டும்.
(7) பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.
(8) தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக்கூடாது.
(9) தமிழ் நாட்டில் ஆண்மக்களுக்கே ராஜரிக சுதந்திரம் இல்லாமல் இருக்கையிலே, அது பெண்களுக்கு வேண்டுமென்று இப்போது கூறுதல் பயனில்லை. எனினும் சீக்கிரத்தில்தமிழருக்கு சுயராஜ்யம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும் சென்ற வருஷத்து காங்கிரஸ் சபையில் தலைமை வகித்தவர் மிஸஸ் அன்னிபெஸண்டு என்ற ஆங்கிலேய ஸ்திரீ என்பதை மறந்து போகக் கூடாது.
இங்ஙனம் நமது பெண்களுக்கு ஆரம்பப்படிகள் காட்டினோமானால், பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூரணவிடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றுவார்கள். அப்போதுதான் நமது தேசத்துப் பூர்வீகரிஷி பத்தினிகள் இருந்த ஸ்திதிக்கு நமது ஸ்திரீகள் வர இடமுண்டாகும். ஸ்திரீகளை மிருகங்களாக வைத்து நாம் மாத்திரம் மஹரிஷிகளாக முயலுதல் மூடத்தனம். பெண் உயராவிட்டால் ஆண் உயராது.
------------
மாதர் - பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத்தக்கது யாது?
[புதுச்சேரியில் ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதியின் குமாரிஸ்ரீ தங்கம்மாவால் ஒரு பெண்கள் கூட்டத்தில் படிக்கப் பெற்றது.]
ஆறிலும் சாவு; நூறிலும் சாவு; ஆணுக்கு மட்டு மன்று,பெண்ணுக்கும் அப்படியே.
ஆதலால் உயிருள்ளவரை இன்பத்துடன் வாழவிரும்புதல் மனுஷ்ய ஜீவனுடைய கடமை. இன்பத்துக்கு முதல் அவசியம் விடுதலை. அடிமைகளுக்கு இன்பம் கிடையாது. தென் ஆப்பிரிக்காவில் ஹிந்து தேசத்தார் படுங்கஷ்டங்களைக் குறித்து,1896ம் வருஷத்தில் கல்கத்தாவில் கூடிய பன்னிரண்டாயிரம் ஜனசபைக் (காங்கிரஸ்) கூட்டத்தில் செய்யப்பட்ட தீர்மானமொன்றை ஆதரித்துப் பேசுகையில் வித்வான் ஸ்ரீ பரமேச்வரன் பிள்ளை பின்வருமாறு கூறினார்:-
''மிகவும் உழைப்பாளிகளாகிய ஹிந்து தேசத்தார் அந்த நாட்டில் பரம்பரை முறியடிமைகளாக வாழும்படி நேர்ந்திருக்கிறது.அங்கு நம்மவர் உத்திரவுச் சீட்டில்லாமல் யாத்திரை செய்யக்கூடாது. இரவு வேளையில் வெளியே சஞ்சரிக்கக்கூடாது. நகரங்களுக்கு நடுவே குடியிருக்கக் கூடாது. ஒதுக்கமாக நமக்கென்று கட்டப்பட்டிருக்கும் சேரிகளில் வசிக்க வேண்டும். ரயில் வண்டியில் மூன்றாவது வகுப்பிலேதான் ஏறலாம்; முதலிரண்டு வகுப்புக்களில் ஏறக்கூடாது. நம்மை ட்ராம் வண்டியிலிருந்து துரத்துகிறார்கள். ஒற்றையடிப் பாதையினின்று கீழே தள்ளுகிறார்கள். ஹோட்டல்களில் நுழையக்கூடாதென்கிறார்கள். பொது ரஸ்தாக்களில் நடக்கக் கூடாதென்று தடுக்கிறார்கள். நம்மைக்கண்டால் காறி உமிழ்கிறார்கள். 'ஹூஸ்'என்று சீத்காரம் பண்ணுகிறார்கள். நம்மை வைகிறார்கள். சபிக்கிறார்கள். மனுஷ்ய ஜந்துக்களினால் சகிக்கக்கூடாத இன்னும் எத்தனையோ அவமானங்களுக்கு நம்மை உட்படுத்துகிறார்கள். ஆகையால் நம்மவர் இந்த நாட்டிலேயே இருந்து பஞ்சத்திலும் கொள்ளை நோயிலும் அழிந்திட்டாலும் பெரிதில்லை. நமது ஸ்வதந்திரங்களை வெளிநாடுகளில் அன்னியர் காலின் கீழேபோட்டு மிதிக்காதபடி ராஜாங்கத்தாரால் நம்மைக் காப்பாற்ற முடியாவிட்டால், நம்மவர் வேற்று நாடுகளுக்குக் குடியேறிப்போகாமல் இங்கிருந்து மடிதலே நன்று' என்றார். என்ன கொடுமையான நிலை பார்த்தீர்களா?
ஆனால், சகோதரிகளே, தென் ஆப்பிரிக்காவில் மாத்திரமே இவ்விதமான கொடுமைகள் நடக்கின்றன என்று நினைத்து விடாதீர்கள்!
சகோதரிகளே! ஓளவையார் பிறந்தது தமிழ் நாட்டில் மதுரை மீனாக்ஷியும், அல்லி அரசாணியும் நேற்று மங்கம்மாளும் அரசு புரிந்த தமிழ் நாட்டிலே நம்முடைய நிலைமை தென்னாப்பிக்காவில் ஹிந்து தேசக் கூலிகளுடையநிலைமையைக் காட்டிலும் கேடு கெட்டிருக்கிறதா? இல்லையா?உங்களுடைய அனுபவத்திலிருந்து நீங்களே யோசனை பண்ணிச்சொல்லுங்கள்.
நாமும் ஸ்வேச்சைப்படி வெளியே சஞ்சரிக்கக்கூடாது. நம்மைச் சேரிகளில் அடைக்காமல் சிறைகளில் அடைத்து வைக்க முயற்சி செய்கிறார்கள். ரயில் வண்டிகளில் நமக்கென்று தனிப்பகுதி ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். நம்மைக் கண்டாலும் ஆண் மக்கள் நிஷ்காரணமாய் சீறிவிழுகிறார்கள்; காறி உமிழ்கிறார்கள்; வைகிறார்கள்; அடிக்கிறார்கள்; நாம் நமதிஷ்டப்படி பிறருடன் பேசக்கூடாதென்று தடை செய்கிறார்கள். மிருகங்களை விற்பதுபோல், நம்மை விலைக்கு விற்கிறார்கள். நம்முடைய நூல்களிலும் ஸம்பாஷணைகளிலும் ஓயாமல் நம்மைத் தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கத்தால் நாம் இத்தனை பாடுக்கும் ஒருவாறு ஜீவன் மிஞ்சியிருக்கிறோமெனினும், இந்த நிலை மிகஇழிதான தென்பதிலும், கூடிய சீக்கிரத்தில் மாற்றித் தீரவேண்டியதென்பதிலும் சந்தேகமில்லை. இதற்கு மருந்தென்ன?
தென் ஆப்பிரிக்காவில் ஹிந்து தேசத்துக் கூலியாட்களுக்கு ஸ்ரீமான் மோஹனதாஸ் கரம்சந்த் காந்தி எந்தவழி காட்டினாரோ, அதுவே நமக்கும் வழி. தென்ஆப்பிரிக்காவில் வெள்ளையரை ஹிந்துக்கள் ஆயுத பலத்தால் எதிர்க்கவில்லை. கைத்துப்பாக்கி, வெடிகுண்டு முதலியவற்றை உபயோகிக்க விரும்பினர் சில இளைஞரைக் கூட அது செய்யலாகாதென்று மஹாத்மா காந்தி தடுத்து விட்டார். 'அநியாயத்தை அநியாயத்தால் எதிர்த்தலென்பது அவசியமில்லை. அதர்மத்தை அதர்மத்தால்தான் கொல்ல வேண்டுமென்பது அவசியமன்று. நாம் அநியாயத்தை நியாயத்தால் எதிர்ப்போம்; அதர்மத்தை தர்மத்தால் ஒழிப்போம்'என்று காந்தி சொன்னார்.
சகோதரிகளே, நாம் விடுதலை பெறுவதற்கும் இதுவேஉபாயம். நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம்அன்புத் தளைகளால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள்அண்ணன் தம்பிகளாகவும், மாமன் மைத்துனராகவும், தந்தை பாட்டனாராகவும், கணவர் காதலராகவும், வாய்த்திருக்கின்றனர். இவர்களே நமக்குப் பகைவராகவும் மூண்டிருக்கையிலே, இவர்களை எதிர்த்துப் போர் செய்ய வேண்டுமென்பதை நினைக்கும்போது, என்னுடைய மனம், குருக்ஷேத்திரத்தில் போர்தொடங்கிய போது அர்ஜுனனுடைய மனது திகைத்ததுபோல, திகைக்கிறது. ஆண் மக்களை நாம் ஆயுதங்களால் எதிர்த்தல் நினைக்கத்தகாத காரியம். அதுபற்றியே, ''சாத்வீக எதிர்ப்பி''னால் இவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்ய வேண்டுமென்று நான் சொல்லுகிறேன்.
'அடிமைப்பட்டு வாழமாட்டோம்; ஸமத்வமாக நடத்தினாலன்றி உங்களுடன் சேர்ந்திருக்க விரும்போம்'என்று அவர்களிடம் வெளிப்படையாகவும் தெளிவாகவும் சொல்லி விட்டு, அதினின்றும் அவர்கள் கோபத்தால் நமக்கு விதிக்கக் கூடிய தண்டனைகளையெல்லாம் தெய்வத்தை நம்பிப் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுப்பதே உபாயம். இந்த சாத்வீக எதிர்ப்பு முறையை நாம் அனுசரிக்கத்தொடங்க வேண்டுமாயின், அதற்கு இந்தக் காலமே சரியானகாலம். இந்த வருஷமே சரியான வருஷம். இந்த மாஸமே நல்ல மாஸம். இன்றே நல்ல நாள். இந்த முகூர்த்தமே தகுந்தமுகூர்த்தம்.
சகோதரிகளே! இப்போது பூமண்டலமெங்கும் விடுதலைப் பெருங்காற்று வீசுகிறது. கொடுங்கோலரசர்களுக்குள்ளே கொடியவனாய் ஹிரண்யனைப்போல் ஐரோப்பாவின் கிழக்கே பெரும் பகுதியையும் ஆசியாவின் வடக்கே பெரும்பகுதியையும் ஆண்ட ஸார் சக்ரவர்த்தி, இப்போது ஸைபீரியாவில் சிறைபட்டுக் கிடக்கிறான். 'பாரதநாட்டைக் காப்பதிலே எனக்குத் துணை புரிய வாருங்கள்'என்று ஆங்கிலேயன் ஹிந்துக்களைக் கூப்பிடுகிறான். விடுதலைக் காற்று ''வீர், வீர்'' என்று வேகமாக வீசுகிறது.
ஒரு ஸ்திரீயானவள் இந்த ஸாத்வீக எதிர்ப்புமுறையை அனுசரிக்க விரும்பினால் தனது கணவனிடம் சொல்லத் தக்கது யாதெனில்:-
'நான் எல்லா வகையிலும் உனக்குச் சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மதமுண்டானால் உன்னுடன் வாழ்வேன். இல்லாவிட்டால் இன்று இராத்திரி சமையல் செய்யமாட்டேன். எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிருப்பேன். உனக்குச் சோறு போடமாட்டேன். நீ அடித்து வெளியே தள்ளினால் ரஸ்தாவில் கிடந்து சாவேன். இந்த வீடு என்னுடையது. இதை விட்டு வெளியேறவும் மாட்டேன்' என்று கண்டிப்பாகச் சொல்லி விடவும் வேண்டும்.இங்ஙனம் கூறும் தீர்மான வார்த்தையை, இந்திரிய இன்பங்களை விரும்பியேனும், நகை, துணி முதலிய வீண் டம்பங்களை இச்சித்தேனும், நிலையற்ற உயிர் வாழ்வைப்பெரிதாகப் பாராட்டியேனும் மாற்றக்கூடாது. சிறிது சிறிதாக,படிப்படியாக ஞானத்தை ஏற்படுத்திக் கொள்வோம் என்னும் கோழை நிதானக் கட்சியாரின் மூடத்தனத்தை நாம் கைக்கொள்ளக் கூடாது. நமக்கு ஞாயம் வேண்டும்.அதுவும் இந்த க்ஷணத்தில் வேண்டும்.
இங்ஙனம், ''பரிபூர்ண ஸமத்வ மில்லாத இடத்திலே ஆண் மக்களுடன் நாம் வாழமாட்டோம்'' என்று சொல்வதனால், நமக்கு நம்முடைய புருஷர்களாலும் புருஷ சமூகத்தாராலும் ஏற்படக்கூடிய கொடுமைகள் எத்தனையோ-யாயினும், எத்தன்மையுடையனவாயினும், அவற்றால் நமக்கு மரணமே நேரிடினும், நாம் அஞ்சக்கூடாது. ஸஹோதரிகளே! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு. தர்மத்துக்காக மடிகிறவர்களும் மடியத்தான் செய்கிறார்கள்; ஸாமான்ய ஜனங்களும் மடியத்தான் செய்கிறார்கள். ஆதலால் ஸஹோதரிகளே, பெண்விடுதலைக்காக இந்த க்ஷணத்திலேயே தர்ம யுத்தம் தொடங்குங்கள். நாம் வெற்றி பெறுவோம். நமக்கு மஹாசக்தி துணை செய்வாள்.
வந்தே மாதரம்.
-----------
மாதர் - தமிழ் நாட்டு மாதருக்கு
இந்தியா தேசத்து ஸ்திரீகள் இங்குள்ள ஆண்மக்களால் நன்கு மதிக்கப்படுவதற்குள்ள பல உபாயங்களில் வெளி நாட்டாரின் மதிப்பைப் பெற முயல்வதும் ஒருஉபாயமாம். திருஷ்டாந்தமாக, சில வருஷங்களுக்கு முன்பு, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் 'இந்தியா நாகரீகக் குறைவான தேசம்' என்ற எண்ணம் வெகு சாதாரணமாகப் பரவியிருந்தது. மேற்றிசையோர்களுக்குள்ளே சில விசேஷ பண்டிதர்கள் மட்டும் நம்முடைய வேதங்கள்,உபநிஷத்துக்கள், ஸாங்கியம், யோகம் முதலிய தர்சனங்கள் (அதாவது ஞான சாஸ்திரங்கள்); காளிதாஸன் முதலிய மஹாகவிகளின் காவியங்கள்; ராமாயணம், பாரதம்; பஞ்ச தந்திரம் முதலிய நீதி நூல்கள் - இவற்றை மூலத்திலும், மொழிபெயர்ப்புக்களின் வழியாகவும் கற்றுணர்ந்தோராய், அதிலிருந்து ஹிந்துக்கள் பரம்பரையாகவே நிகரற்ற ஞானத் தெளிவும் நாகரீகமும் உடைய ஜனங்கள் என்பதை அறிந்திருந்தனர். இங்ஙனம் மேற்கு தேசங்களில் பதினாயிரம் அல்லது லக்ஷத்தில் ஒருவர் இருவர் மாத்திரம் ஒருவாறு நமது மேன்மையை அங்கீகாரம் செய்தனர். எனினும், அந் நாடுகளிலே பொது ஜனங்களின் மனதில் "இந்தியா தேசத்தார் ஏறக்குறைய காட்டு மனிதரின் நிலையிலுள்ளோர்'' என்ற பொய்க் கொள்கையே குடிகொண்டிருந்தது. அப்பால், ஸ்வாமி விவேகானந்தரும் பின்னிட்டு ரவீந்திரநாத தாகூர், ஜகதீச சந்திரவஸு முதலிய மஹான்களும் மேற்றிசையில் விஸ்தாரமான யாத்திரைகள் செய்து தம்முடைய அபார சக்திகளைக் காண்பித்தபின்னரே, மேற்றிசை வாசிகளில் பலர், ''அடா! இந்தஹிந்துக்கள் நாகரீகத்திலும், அறிவிலும் இவ்வளவு மேம்பட்டவர்களா' என்று வியப்பெய்தினர்.
தவிரவும், மேற்கத்தியார் நம்மைக் குறைவாக நினைக்கிறார்கள் என்பதை அவ்விடத்துப் பத்திரிகைகளின் மூலமாகவும் புஸ்தகங்களின் மூலமாகவும் தெரிந்து கொண்டவர்களால் நமது தேசத்துக் கல்விப் பெருமையால் இந்தியாவின் உண்மையான மாட்சியை அறியாது நின்ற இங்கிலீஷ் படிப்பாளியாகிய நம்மவரின் பலரும் வெளி நாட்டாரின் எண்ணத்தையே உண்மையெனக் கருதி மயங்கி விட்டனர். காலச் சக்கரத்தின் மாறுதலால் இந்நாட்டில் அறிவுத் துறைகள் பலவற்றிலும் மேற்படி இங்கிலீஷ் படிப்பாளிகளே தலைமை வகிக்கும்படி நேர்ந்துவிட்டதினின்றும், இந்தியா தன் மாண்பை முற்றிலும் மறந்துபோய் அதோகதியில் விழுந்துவிடுமோ என்று அஞ்சக்கூடிய நிலைமை அநேகமாய் ஏற்படலாயிற்று. இப்படிப் பட்ட பயங்கரமான சமயத்தில் ஸ்வாமி விவேகானந்தர் முதலாயினோர் தம்முடைய ஞான பராக்கிரமத்தால் மேற்றிசை நாடுகளில் திக்விஜயம் பண்ணி மீண்டனர். இதினின்றும், இங்குள்ள இங்கிலீஷ் படித்த சுதேச தூஷணைக்காரர் தமது மடமை நீங்கி ஹிந்து நாகரீகத்தில் நம்பிக்கை செலுத்துவராயினர். மேற்றிசையோர் எது சொன்னாலும் அதை வேதமாகக் கருதிவிடும் இயல்பு வாய்ந்த நம்மவர், முன்பு இந்தியாவை அந்த அந்நியர் பழித்துக்கொண்டிருந்தபோது தாமும் பழித்தவாறே, இந்தியாவை அவர்கள் புகழத் தொடங்கியபோது தாமும் சுதேசப்புகழ்ச்சி கூறலாயினர். விவேகானந்தர் முதலானவர்கள் ஐரோப்பிய அமெரிக்ககர்களால் போற்றப்படுவதன் முன்பு அம் ஹான்களை நம்மவர் கவனிக்கவேயில்லை. அப்பெரியோர் மேற்றிசையில் வெற்றி பெற்று மீண்ட மாத்திரத்தில், அவர்களை நம்மவர் தெய்வத்துக் கொப்பாக எண்ணி வந்தனை வழிபாடுகள் செய்யத் தலைப் பட்டனர். இந்த விஷயத்தை நம்முடைய மாதர்கள் நன்றாகக் கவனித்தறிந்து கொள்ளுதல் நன்று
அறிவின் வலிமையே வலிமை. அறிவினால் உயர்ந்தோர்களை மற்றோர் இழிவாக நினைப்பதும், அடிமைகளாக நடத்துவதும் ஸாத்யப்படமாட்டா. அறிவின் மேன்மையால் வெளித் தேசங்களில் உயர்ந்த கீர்த்திபடைத்து மீள்வோரை அதன் பிறகு இந்தத் தேசத்தார் கட்டாயம் போற்றுவார்கள். சில ஹிந்து ஸ்திரீகள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்ந்த கீர்த்தி ஸம்பாதித்துக்கொண்டு வருவார்களாயின், அதினின்றும் இங்குள்ள ஸ்திரீகளுக்கெல்லாம் மதிப்பு உயர்ந்துவிடும். இந்த விஷயத்தை ஏற்கெனவே நம்முடைய மாதர் சிலர் அறிந்து வேலை செய்து வருகிறார்கள். வங்காளத்துப் பிராமண குலத்தில் பிறந்து ஹைதராபாத் நாயுடு ஒருவரை மணம் புரிந்து வாழும் ஸ்ரீமதி ஸரோஜினி நாயுடு என்ற ஸ்திரீ இங்கிலீஷ் பாஷையில் உயர்ந்த தேர்ச்சி கொண்டு ஆங்கிலேய அறிஞர்கள்மிகவும் போற்றும்படியாக இங்கிலீஷில் கவிதைஎழுதுகிறார். இவருடைய காவியங்கள் பல இங்கிலாந்தில் அச்சிடப்பட்டு அங்குள்ளோரால் மிகவும்உயர்வாகப் பாராட்டப்படுகின்றன. மேலும், இந்த ஸ்திரீ இங்கிலாந்தில் பல இடங்களிலே நமது தேசத்து முன்னேற்றத்தையொட்டி அற்புதமான ப்ரஸங்கங்கள்செய்து சிறந்த கீர்த்திடைந்திருக்கிறார். மேலும், வங்காளி பாஷையிலே கவிதை யெழுதுவோராகிய ஸ்ரீமதி காமிநீராய், ஸ்ரீமதி மன குமாரி தேவி, ஸ்ரீமதி அநங்கமோஹினி தேவி என்ற மூன்று ஸ்திரீகளுடைய பாட்டுக்களை இங்கிலீஷில் மொழிபெயர்த்து அமெரிக்காவிலுள்ள பத்திரிகையொன்று புகழ்ச்சியுரைகளுடன் சிறிது காலத்துக்கு முன்பு ப்ரசுரம் செய்திருப்பதினின்றும், இம்மாதர்களுக்கு அமெரிக்காவில் நல்ல கீர்த்தியேற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
புனா நகரத்துச் சித்திர பண்டிதராகிய ஜனாப்பை ஜீரஹ்மின் என்பவர் அமெரிக்காவின் ராஜதானியாகிய ''நியூயார்க்'' நகரத்திற்குப் போய் சென்ற வருஷத்தில் அந்நகரத்துச் சிற்பிகளால் மிகவும் போற்றப்பட்டார். இவருடைய சித்திரங்களை அங்குள்ளோர் மிகவும் வியந்தனர். "அஜந்தாவிலுள்ள குகைச்சித்திர வேலைகளின் ஆச்சரியத்தைக் குறித்து ஸ்ரீமான் பைஜீரஹ்மின் கொலம்பியா ஸஸவகலா சங்கத்தாரின் முன்னே நேர்த்தியான உபந்யாஸம் புரிந்தார். இவருடன் இவருடைய மனைவியும் அங்கு சென்றிருந்தாள். இவர் ''இந்தியா தேசத்து சங்கீதம்'' என இங்கிலீஷில் ஒருபுத்தக மெழுதியிருக்கிறார். ஹிந்து ஸங்கீத சாஸ்திரத்திலும் வாய்ப்பாட்டிலும் நல்ல தேர்ச்சியுடையவர். இவர் அமெரிக்காவில் பல மாதர் ஸபைகளின் முன்பு ஹிந்து ஸங்கீதத்தைக் குறித்து பல உபந்யாஸங்கள் செய்தார். இடைக்கிடையே தம் உபந்யாஸக் கருத்துக்களை திருஷ்டாந்தப்படுத்தும் பொருட்டு நேர்த்தியான பாட்டுக்கள் பாடி அந்நாட்டினரை மிகவும் வியப்புறச் செய்தார். இங்ஙனம், தமிழ்மாதர்களிலும் பலர் மேல்நாடுகளுக்குச் சென்று புகழ் பெற்று மீள்வாராயின், அதினின்றும் இங்கே நம்முடைய ஸ்திரீகளுக்குள்ள மதிப்பு மிகுதிப்படுமென்பதில் சிறிதேனும் ஐயமில்லை. எவ்வாறு நோக்கிய போதிலும், தமிழ்நாட்டு மாதர் ஸம்பூர்ணமான விடுதலை பெற வேண்டுவராயின் அதற்குக்கல்வித் தோணியே பெருந்துணையாம். எனவே, கொஞ்சம் கொஞ்சம் பல துறைகளில் பயிற்சி வாய்ந்திருக்கும் தமிழ்சகோதரிகள் இரவு பகலாகப் பாடுபட்டு அவ்வத்துறைகளில் நிகரற்ற தேர்ச்சி பெற முயலவேண்டும். இடைவிடாத பழக்கத்தால் தமிழ் மாதர் தமக்குள்ள இயற்கையறிவை மிகவும் உன்னத நிலைக்குக் கொணர்ந்து விடுதல் சாலவும் எளிதாம். ஓளவையார் பிறந்து வாழ்ந்த தமிழ் நாட்டு மாதருக்கு அறிவுப்பயிற்சி கஷ்டமாகுமா? சற்றே ஊன்றிப் பாடுபடுவார்களாயின், தமிழ் மாதர் அறிவுப் பயிற்சிகளிலே நிகரற்ற சக்தி படைத்து விடுவார்கள். அறிவு திறந்தால் பிறகு விடுதலைக் கோட்டையைக் கைப்பற்றுதல் அதி ஸூலபமாய் விடும். எனவே, பலவித சாஸ்திரங்கள் படித்துத் தேறுங்கள்; தமிழ்ச் சகோதரிகளே! அங்ஙனம் தேறியவர்களில் சிலரேனும் வெளிநாடுகளுக்குப்போய்க் கீர்த்தி ஸம்பாதித்துக் கொண்டு வாருங்கள். விடுதலைத் தெய்வம் உங்களைத் தழுவும் பொருட்டுஇரண்டு கைகளையும் விரித்துக்கொண்டு காத்து நிற்கிறது. தமிழ் மாதர்களே! மனம் சோர்ந்து விடாதீர்கள். உங்களுக்கு நல்ல காலம் வருகிறது! வந்து விட்டது; நீங்கள் விடுதலை பெறுவீர்கள்; உங்களால் உலகம் மேன்மையுறும்.
சகோதரிகளே!
தமிழ் நாட்டின் நாகரீகம் மிகவும் புராதனமானது.ஒரு தேசத்தின் நாகரீகம் அல்லது அறிவு முதிர்ச்சி இன்னதன்மை யுடையதென்று கண்டுபிடிக்க வேண்டுமாயின்,அதைக் கண்ணாடி போல விளக்கிக் காட்டுவது அந்த நாட்டில் வழங்கும் பாஷையிலுள்ள இலக்கியம். அதாவதுகாவியம் முதலிய நூல்களேயாம். இங்கிலாந்து தேசத்தின்தற்கால இலக்கிய நூல்களை வாசித்துப் பார்த்தோமாயின், அதன், தற்கால நாகரீகத்தை ஒருவாறு அளவிடக் கூடும்.எனவே, தமிழ் நாட்டின் புராதன நாகரீகத்தை அளவிட்டறிவதற்கு தமிழ் நூல்களே தக்க அளவுகோலாகின்றன. இந்தியாவில் பெரும்பான்மையான"பாஷைகள் ஸமஸ்க்ருதத்தின் திரிபுகளேயன்றி வேறல்ல; அங்ஙனம் திரிபுகளல்லாததுவும் ஸம்ஸ்க்ருதக் கலப்புக்குப்பிந்தியே மேன்மை பெற்றனவாம்.
தமிழ் பாஷைக்கோ இலக்கணம் முதல்முதலாக அகஸ்தியராலும் அவருடைய சிஷ்யராகிய திரணதூமாக்நி (தொல்காப்பியர்) என்ற முனிவராலுமே சமைத்துக் கொடுக்கப்பட்ட தென்பது மெய்யே. அதனின்றும் தமிழ் இலக்கணம் பெரும்பாலும் ஸம்ஸ்கிருத இலக்கணத்தை அனுசரித்தே சமைக்கப்பட்டிருக்கின்ற தென்பது மெய்யே எனினும் வடமொழிக் கலப்புக்கு முந்தித் தமிழுக்கு வேறுவகையான இலக்கணமிருந்து ஒரு வேளை பின்னிட்டு மறைந்திருக்கக் கூடுமென்று நினைப்பதற்குப் பல ஹேதுக்கள் இருக்கின்றன. இஃது எவ்வாறாயினும், ஸம்ஸ்கிருத பாஷையின் கலப்புக்கு முன்னாகவே, தமிழ்நாட்டில் மிகவும் உயர்ந்த நாகரீகமொன்று நின்று நிலவி வந்ததென்பதற்கு அடையாளமாகத் தமிழில் மிக உயர்ந்ததரமுடைய பல பழைய இலக்கிய நூல்கள் காணப்படுகின்றன.
ஐரோப்பாவிலும், ஆசியாவிலும், பிறஇடங்களிலும் காணப்படும் நாகரீகங்களுக்கெல்லாம் முந்தியதும் பெரும்பான்மை மூலாதாரமுமாக நிற்பது"ஆர்ய நாகரீகம். அதாவது, பழைய ஸம்ஸ்கிருத நூல்களிலே சித்தரிக்கப்பட்டு விளங்குவது இந்த ஆரிய நாகரீகத்துக்கு ஸமமான பழமை கொண்டது தமிழருடைய நாகரீகம் என்று கருதுவதற்குப் பலவிதமான ஸாக்ஷ்யங்களிருக்கின்றன. ''ஆதியில் பரம சிவனால் படைப்புற்ற மூல பாஷைகள் வடமொழியென்று சொல்லப்படும் ஸம்ஸ்கிருதமும் தமிழுமேயாம்'' என்று பண்டைத் தமிழர் சொல்லியிருக்கும் வார்த்தை வெறுமே புராணக் கற்பனை அன்று. தக்க சரித்திர ஆதாரங்களுடையது. ''தமிழரும் ஆரியருமல்லாதஜனங்களைக் கடவுள் பேச்சில்லாமலா வைத்திருந்தார்?'' என்று கேட்பீர்களாயின், மற்றச் சொற்களும் பல இருக்கத்தான் செய்தன. ஆனால், மனித நாகரீகத்தில் முதன் முதலாக இவ்விரண்டு பாஷைகளிலேதான் உயர்ந்த கவிதையும், இலக்கியமும், சாஸ்திரங்களும் ஏற்பட்டன. மற்றபாஷைகளின் இலக்கிய நெறிகள் இவற்றுக்கும் பின்னேசமைதன. பல இடங்களில் இவை இயற்றின நடையையேமுன் மாதிரியாகப் கொண்டன. அதாவது ஆரியரும் தமிழருமே உலகத்தில் முதல் முதலாக உயர்ந்த நாகரீகப்பதவி பெற்ற ஜாதியார். இங்ஙனம் முதல் முறையாக நாகரீகம் பெற்ற இவ்விரண்டு வகுப்பினரும் மிகப் பழைய நாட்களிலேயே ஹிந்து மதம் என்ற கயிற்றால் கட்டுண்டு ஒரே கூட்டத்தாராகிய செய்தி பூமண்டலத்தின் சரித்திரத்திலேயே மிக விசேஷமும் நலமும் பொருந்திய செய்திகளில் ஒன்றாகக் கணித்தற்குரியது.
தமிழ் நாட்டு மாதராகிய என் அன்புக்குரிய ஸகோதரிகளே! இத்தனை பழமையும் மேன்மையுஞ்சான்ற இரண்டு பகுதிகளின் கலப்பாகுந் தன்மையால் பாரத தேசத்திலேயே மற்றப் பிரதேசங்களிலுள்ள நாகரீகத்தைக் காட்டிலுங்கூட ஒருவாறு சிறப்புடையதாகக் கருதுவதற்குரிய ஆர்ய திராவிட நாகரீகம் உங்களுடைய பாதுகாப்பிலிருக்கிறது.
இதனை மேன்மேலும் போஷித்து வளர்க்குங் கடமை உங்களைச் சேர்ந்தது. எங்ஙனம் எனில்,பொதுப்படையாக நோக்குமிடத்தே மனித நாகரீகங்கள் ஆண் மக்களின் உதவி கொண்டு பிறப்பிக்கப்படுகின்றன. அப்பால் பெரும்பாலும் பெண்களாலேயே காக்கப்படுகின்றன. இடைக்காலத்தில் மகம்மதிய நாகரீகம்"வந்து ஹிந்து தர்மத்தைத் தாக்கிற்று. ஆனால், ஹிந்து தர்மம் அதிலுள்ள முக்கிய அம்சங்களைத் தனதாக்கிக்கொண்டு, அந்தத் தாக்குதலால் அழிவெய்தாமல், முன்னைக் காட்டிலும் அதிக சக்தியுடன் மிஞ்சி நின்றது.ஸமீப காலத்தில் ஐரோப்பிய நாகரீகம் இந்தியாவுக்குவந்து சேர்ந்திருக்கிறது. இதுவும் நமது நாட்டுநாகரிகத்துடன் நன்றாகக் கலந்து விட்டது. இனி இதன் விளைவுகளை நம் நாட்டாரின் அறிவினின்றும் முற்றிலும் பிரித்துக் களைதல் ஸாத்தியப்படாது. இது நம்முடைய தேசஞானத்தின் மர்மங்களுக்குள்ளே கலந்து பெரும்பாலும் நமதாய் விட்டது. எனினும், நம்மவரிலேபல பண்டிதர்கள் பல வருஷங்களாக, 'இந்த ஐரோப்பிய நாகரீகத்தை நாம் முற்றிலும் உதறித் தள்ளி விடுதல் நன்றோ? அல்லது, இதனை நாம் முழுமையாகவேதழுவிக் கொள்ளலாமா? அல்லது இதினுள்ளே நல்ல அம்சங்களை மாத்திரம் எடுத்துக்கொண்டு தீயவற்றைக் களைந்து விடலாமா?' என்ற விஷயங்களைக் குறித்துநீண்ட ஆலோசனைகளும் விசாரணைகளும், ஆராய்ச்சிகளும் நடத்தி வருகிறார்கள். ஆனால், இந்த ஐரோப்பிய நாகரீகமென்பது ஒரு ஸ்தூல வஸ்துவன்று. ஸ்தூல வஸ்துவாக இருந்தால் அதை நம் இஷ்டப்படிதுண்டு துண்டாக வகுக்கவும், வேண்டிய அம்சங்களை எடுத்துக் கொள்ளவும், பிறவற்றை விலக்கவும் ஸௌகர்யப்படும். மனிதர்களின் பயிற்சி இத்தகையபொருளன்று. அஃது ஸூக்ஷ்மப் பொருள்.
ஐரோப்பிய நாகரீகத்தின் உண்மை இயல்புக்கு ஸம்பந்தமில்லாதனவும், அதன் புறத்தோலின் மீது தோன்றும் தோற்றங்கள் போன்றனவுமாகிய முக்கியத் தன்மையில்லாத சில புற வழக்கங்களை விரும்பாத நம்மவரில் சிலர் அந்த நாகரீகத்தையே துண்டு துண்டாக வெட்ட வேண்டிய பகுதிகளைக் கொண்டு பிறவற்றை நீக்குதல் நலமென்று கருதுகிறார்கள். திருஷ்டாந்தமாக, தலைமயிரை கத்தரித்துக் கொள்ளுதல், சுருட்டுப் பிடித்தல், சாராயங் குடித்தல், பெண்களைத் தம் இஷ்டப்படி பரபுருஷருடன் பேசவும்பழகவும் இடங்கொடுத்தல் - இவை போன்றனவெல்லாம் ஐரோப்பிய நாகரீகத்தின் கெட்ட லக்ஷணங்களென்றும்,ஆதலால் இவற்றை நாம் நீக்கிவிட வேண்டுமென்றும், ஐரோப்பியரின் உழைப்பு, விடா முயற்சி, ஒற்றுமை, பொருள் சேர்ப்பதில் அவர்களுக்குள்ள திறமை இவைபோன்றவை யெல்லாம் அந்த நாகரீகத்தின் நல்ல லக்ஷணங்களென்றும், ஆதலால் இவற்றை நம்மவர் கைக்கொள்ள வேண்டுமென்றும் நம்மவரிலே பலர் அடிக்கடிசொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால், இங்ஙனம் பேசுவோர் விஷயங்களை ஆழ்ந்து கவனியாமல் அவற்றின் புறத்தோலை மாத்திரம் கருதும் இயல்புடையார். ஏனென்றால் தலை மயிரை வெட்டுவதும், சுருட்டுப் பிடிப்பதும், சாராயங் குடிப்பதும் ஐரோப்பிய நாகரீகத்தின் தத்துவங்களல்ல புகையிலை மாத்திரம் தான் சில நூற்றாண்டுகளின் முன்பு அமெரிக்காவிலிருந்து புதிதாக வந்த சாமான். ஐரோப்பா மூலமாக அது உலக முழுவதையும் வியாபித்தது. ஐரோப்பியர் அதைச் சுருட்டாகப் பிடிக்கிறார்கள். நம்மவரும் அந்த வழக்கத்தை அங்ஙனமே கைக்கொண்டார். பலர் அப்படிக்கின்றி, கொஞ்சம் வைதிகமான ஜனங்கள் அதை வாய்ப் புகையிலையாகவும், மூக்குப் பொடியாகவும் உபயோகிக்கிறார்கள். மதுபானம் ஐரோப்பியரின் ஸஹவாஸத்தால் இந்நாட்டில் மிகுதியுற்றதென்பது மெய்யேயாயினும், அது ஐரோப்பியரால் புதிதாகக் கொண்டு நுழைக்கப்பட்ட வழக்கமன்று; புராதன கால முதலாகவே நமது தேசத்திலுள்ளது. ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய சகோதரரும், அவதார புருஷரில் ஒருவருமாகிய பலராமர் பெருகுடியரென்றும், கிருஷ்ணனே சாதாரணமாகக் குடிக்கக்கூடியவரென்றும் பகவானுடைய மக்கள் குடிவெறி மிகுதியால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு செத்தார்களென்றும் புராணங்கள் சொல்லுகின்றன.
சுருட்டுப் பிடித்தல் முதலியன ஐரோப்பிய நாகரீகத்தின் தத்துவங்களல்ல என்று மேலே சொன்னேன். அவற்றை அங்ஙனம் பாவித்தல் வெற்றிலை போட்டுக் கொள்வதையும், மூக்குப்பொடி போட்டுக் கொள்வதையும்,உச்ச நிலையில் காலணா அகலக்குடுமி வைத்துக்கொள்வதையும் ஹிந்துமதத்தின் மூல தருமங்களாகக் கருதும் மடமைக்கு நிகராகும். மேலும் இவற்றையும் ஐரோப்பாவின் ஸ்திரீகளுக்குள்ள அதிக ஸ்வதந்திரங்களையும் ஒரே ஜாப்தாவில் சேர்த்துக் கணக்கிடுதல் மிதமிஞ்சிய அஞ்ஞானத்துக்கு லக்ஷணமாம். ஏனென்றால், ஸ்திரீ ஸ்வதந்திரம் ஆத்ம ஞானத்தை ஆதாரமாக உடையது. ஆண் பெண் எல்லாரும் சமானமென்பதும் பிறருக்குத் தீங்கு விளையாதவரையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் தன்னிஷ்டப்படி யெல்லாம் நடக்கக்கூடிய அதிகார முண்டென்பதும் ஐரோப்பிய நாகரீகத்தின் மூல ஸித்தாந்தங்கள். தலைமயிர்வெட்டிக் கொள்ளுதல் முதலியன ஸௌகர்யத்தையும் காலதேச வர்த்தமானங்களையும் தழுவியேற்படும் முக்கிய தன்மையில்லாத புறநடைகள். சரீர ஸௌகரியங்களைக் கருதியும் அலங்காரத்தின் பொருட்டாகவும் ஒரு தேசத்தார் ஏற்படுத்திக் கொள்ளும் வழக்கங்கள். சில சமயங்களில் அந்த தேசத்தாருக்கு நன்மையாகவும் பிறருக்குத் தீமையாகவுமிருக்கலாம். சில சமயங்களில் இவர்களுக்கே கேடாக முடியினும் முடியலாம். இவற்றுள், அலங்காரத்தைக்கருதி ஏற்படும் உடை வழக்கங்களும், மயிர் வைத்துக் கொள்ளும் வழக்கங்களும் எந்த நாட்டிலும் சாசுவதமாக நிற்கக் கூடியவை அல்ல. அடிக்கடி மாறும் இயல்புடையன. ஒரு தேசத்திலேயே எல்லோரும் ஒரே மாதிரிஅலங்காரத்தை விரும்புவதில்ல. சிலருக்கு அலங்காரமாகத் தோன்றுவது சிலருக்கு விகாரமாகத் தோன்றக்கூடும்.திருஷ்டாந்தமாக, தமிழ் நாட்டில் பிராமணரும் வேறு சிலவகுப்பினரும் மீசையைச் சிரைத்துக் கொள்ளுகிறார்கள். ஆனால் பெரும்பான்மையான தமிழ் மக்கள் மீசையில்லாமலிருப்பது விகாரமென்று நினைக்கிறர்கள். இங்கிலாந்தில் நூறு வருஷங்களுக்கு முன்பு ஆண்பிள்ளைகள் தலைமயிரை கத்திரித்துக்கொள்ளும் வழக்கம் கிடையாது. தலைமயிர் முழுவதையும் நீளமாக வளர்த்து விடுதலே வழக்கமாகக் கொண்டிருந்தனர். தென்னிந்தியாவில் பெரும்பான்மையான பிராமணர் மீசை வைத்துக்கொள்வதில்லை. வேத பூமியாகிய ஆரியவர்த்தத்தில், பிராமணர்கள் மீசையில்லாமல் இருப்பது சாஸ்திரவிரோதமென்று பாவிக்கிறார்கள். அங்கு ஒருவன் மீசையைச் சிரைத்தால் அவருடைய நெருங்கிய சுற்றத்தாரில் யாரேனும் இறந்து போவதற்கடையாளமாகக் கருதப்படுகிறது. பல வருஷங்களில் முன்பு நான் காசியில் ஜயநாராயண கலாசாலை என்ற இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து வாசிக்கப் போனேன். நான் தமிழ் நாட்டிலிருந்து சென்றவனாதலால் தமிழ் நாட்டின் பிராமணரின் வழக்கப்படி அடிக்கடி முகக்ஷவரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் படித்துக் கொண்டிருந்த பிள்ளைகள் என்னை நோக்கி மிகவும் ஆச்சரியப்பட்டனர். எப்போது பார்த்தாலும் இவன் மீசையை சிரைத்துவிட்டு வருவதின் காரணம் யாதென்று அவர்களுக்குள்ளே பலநாள் ஆலோசனை செய்து பார்த்தார்கள். அவர்களுக்கொன்றும் புலப்படவில்லை. கடைசியாக என்னையே ஒருவன்கேட்டுத் தீர்த்தான். ''உங்கள் குடும்பத்தில் யாரேனும் வாரந் தவறாமல் செத்துப் போய் கொண்டிருக்கிறார்களா?'' என்று என்னிடம் வினவினான். அவன் இங்ஙனம் கேட்டதின் காரணத்தை அறிந்து கொண்டு 'அப்படியில்லையப்பா, தமிழ் நாட்டில் பிராமணர் மீசை வைத்துக்கொள்ளும் வழக்கமில்லை' என்று தெரிவித்தேன். ஆசாரங்களும் பழக்கங்களும் சில சமயங்களில் மதக் கொள்கைகளை ஆதாரமாகக் கொண்டிருக்கக்கூடும். யதேச்சையாகவும் அங்ஙனமின்றி வெறுமே அர்த்தமில்லாமலும் தோன்றி நடைபெறவுங்கூடும். குடுமி வைத்துக் கொள்ளும் மாதிரிகள் இவை போன்ற சரீர அலங்கார சம்பந்தமான வழக்கங்களை நமது நாட்டின் பிற்காலத்தில் மதக் கொள்கைகளுடன் பிணைத்து ஸ்ம்ருதிகளிலே அவற்றைக் குறித்துச் சட்டம்போடத் தொடங்கினார்கள். இந்த பரிதாபகரமான தவறுதல் ஆதிகாலம் முதல் மற்ற நாடுகளிலும் ஏற்பட்டு வந்திருக்கிறது. சிறிது காலத்து முன்பு வரை சீனா தேசத்தார் 'பன்றிவால்'என்று சொல்லப்படும் தமது நீளக் குடுமியை மிகவும் வைதிகமாகவும் அதனை வெட்டி யெறிதல் பெரும்பாவமுமாகவும் கருதி வந்தார்கள். சில வருடங்களுக்கு முன்பு அந்நாட்டில் ராஜவம்சத்தின் ஆட்சி அழிந்து போய் குடியரசுஸ்தாபனம் செய்யப்பட்டபோது பதினாயிரம் லக்ஷக்கணக்கான சீனர் ஏககாலத்தில் குடுமிகளை வெட்டியெறிந்தனர். அந்தரோமங்கள் ஆயிரக்கணக்கான வண்டிகள் நிறைய ஏற்றப்பட்டு வியாபாரத்துக்காக பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இவ்விஷயத்தை நான் இவ்வளவு நீட்டாக சொல்ல வந்ததின் காரணம் யாதென்றால் இத்தகைய புற ஆசாரங்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் நமது தேசத்து மாதர் மிதமிஞ்சியகவலை செலுத்துவதை மாற்ற வேண்டுமென்ற நோக்கம்.
ஸஹோதரிகளே! நீங்கள் ஐரோப்பிய நாகரீகத்தின் சேர்க்கையைக் குறித்துச் சிறிதேனும் வருத்தப்படவேண்டாம். அது நமது தேசத்துப் பயிற்சியை அழிக்கும் வலிமையுடையதன்று. அது நமக்குத் துணை. அது நாம் அஞ்சுவதற்குரிய பிசாசன்று. வெவ்வேறு வகைப்பட்ட இரண்டு நாகரீகங்கள் வந்து கூடும்போது அவற்றுள் ஒன்று மிகவும் வலியதாகவும் மற்றொன்று மிகவும் பலவீனமாகவும் இருக்குமாயின், வலியது வலிமையற்றதை இருந்த இடம் தெரியாமல் விழுங்கிவிடும். வலிமையற்ற நாகரீகத்துக்குரிய பாஷையும் மதமும் முக்கியத் தன்மையற்ற புற ஆசாரங்கள் மாத்திரமேயன்றி விவாக முறை முதலிய முக்கிய ஆசாரங்களும் அழிந்து மறைகின்றன. அந்த நாகரீகத்தைக் காத்து வந்த ஜனங்கள் பலமுடைய நாகரீகஸ்தரின் பாஷை,மதம் முதலியவற்றைக் கைக்கொள்ளுகிறார்கள். பிலிப்பைன் தீவில் அமெரிக்க நாகரீகம் இவ்வகை வெற்றியடைந்திருக்கிறது. ஆனால் நம்முடைய ஹிந்து நாகரீகம் இங்ஙனம் சக்தியற்ற வஸ்துவன்று. பிற நாகரீகங்களுடன் கலப்பதனால் இதற்குச் சேதம் நேருமென்றுநாம் சிறிதேனும் கவலைப்படவேண்டிய அவசியமில்லை. உலகத்திலுள்ள நாகரீகங்கள் எல்லாவற்றிலும் நம்முடைய நாகரீகம் அதிக சக்தியுடையது. இது மற்றெந்த நாகரீகத்தையும் விழுங்கி ஜீர்ணித்துக் கொள்ளும் திறன் வாய்ந்தது. ஆதலால், ஐரோப்பிய நாகரீகத்தின் கலப்பிலிருந்து ஹிந்து தர்மம் தன்உண்மையியல்பு மாறாதிருப்பது மட்டுமேயன்றி முன்னைக் காட்டிலும் அதிக சக்தியும் ஒளியும் பெற்று விளங்குகிறது. இந்த விஷயத்தை நம்முடைய மாதர்கள் நன்றாக உணர்ந்து கொண்டாலன்றி, இவர்களுடைய ஸ்வதர்ம ரக்ஷணம் நன்கு நடைபெறாது.
தமிழ் நாட்டு ஸஹோதரிகளே! உங்களிடம் எத்தனையோ அரிய திறமைகளும், தந்திரங்களும் உயர்ந்து இருந்த போதிலும், கல்வியின் பரவுதல் அதிகமில்லாதபடியால் அவ்வப்போது வெளியுலகத்தில் நிகழும் செய்திகளையும் மாறுதல்களையும் நீங்கள் அறிந்து கொண்டு அதற்குத் தக்கபடி நடக்க இடமில்லாமற் போகிறது.''ஸ்வதர்மத்தைக் காப்பாற்றுவதில் இறந்து விட்டாலும்பெரிதில்லை'' என்று கிருஷ்ணபகவான் பகவத்கீதையில் சொல்லுகிறார். ஆனால், இங்ஙனம் உயிரினும் அருமையாகப் போற்றுதற்குரிய கடமைகள் அல்லது தர்மங்களுக்கும் அர்த்தமற்றனவும் ஸத்தில்லாதனவுமாகிய வெற்று வழக்கங்களுக்கும் பேதமறியாமல் நீங்கள் மருட்சி கொண்டு வீணேதுயரப் படலாகாது. திருஷ்டாந்தமாக, தமிழ் நாட்டு மாதருக்குமட்டுமே யன்றி உலகத்து நாகரீக தேசங்களிலுள்ள ஸ்திரீகளுக்கெல்லாம் கற்பு மிகச் சிறந்த கடமையாகக் கருதப்படுகிறது. அதைக் காக்கும் பொருட்டாக ஒரு ஸ்திரீ எவ்வளவு கஷ்டப்பட்ட போதிலும் தகும். ஆனால் குழந்தைப்பிராய முதலாகவே செவிகளில் மிகவும் கனமான நகைகளைத் தொங்கவிட்டுத் தோள்வரையிலும், சில சமயங்களில் மார்புவரையிலும், காது வளர்க்கும் வினோதமான ஆசாரம் தமிழ்நாட்டு மாதர்களில் பல பகுதியாரிடம் காணப்படுகிறது. நம்முள்ளே புதிதாக இங்கிலீஷ் படித்துத் தேறியவர்களில் பலர் தம்முடைய மனைவியர் ஏற்கெனவே நீளமாகவும் விகாரமாகவும் வளர்த்திருக்கும் செவிகளை மறுபடி சுருக்கித்தைத்துத் தோடு போட்டுக் கொள்ளும்படி செய்ய விரும்புகிறார்கள். தமக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கேனும் அங்ஙனம் காது வளர்க்காமலிருக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள். இதற்காக பல ஸ்திரீகள் புருஷருடன் முரண்பட்டு வீட்டில் தீராத மனஸ்தாபமும் சண்டை சச்சரவுகளும் நிகழும்படி நற்கிறார்கள். கற்பு எங்ஙனம் ஸ்வதர்மமோ அதுபோலவே காது வளர்ப்பதும் ஸ்வதர்மமென்று அந்த ஏழை ஸ்திரீகள் அறியாமையாலே நினைக்கிறார்கள். மாதரிடையே கல்வி பரவுமாயின், இவ்விதமான தப்பெண்ணங்கள் தாமே விலகிப்போய் விடும். குடும்ப வழக்கங்களாயினும் தேச வழக்கங்களாயினும் ஜாதி வழக்கங்களாயினும் அவற்றுள் முக்கியத்தன்மையுடையன எவை, இல்லாதனவை எவை என்ற ஞானம் நம்முடைய ஸ்திரீகளுக்கு ஏற்படவேண்டுமாயின், அதற்குக் கல்வியைத் தவிர வேறு ஸாதனமில்லை. ஆண்களுக்கு ஸமானமான கல்வித் திறமை பெண்களுக்குப் பொதுப்படையாக ஏற்படும் வரை, ஆண் மக்கள் பெண்மக்களைத் தக்கபடி மதிக்க மாட்டார்கள். தாழ்வாகவே நடத்துவார்கள். தமிழ் நாட்டு ஸஹோதரிகளே! கணவன்மார், உடன் பிறந்தார், புத்திரர் முதலியவர்களால் நன்கு மதிக்கப்பெறாமல் இழிவாகக் கருதப்பட்டு உயிர் வாழ்வதைக் காட்டிலும் இறந்து விடுதல் நன்று.
''மானமிழந்தபின் வாழாமை முன்னினிதே. கல்விகூட அத்தனை பெரிதில்லை, தைரியம் வேண்டும். எதுவரினும் நம்மைப் பிறர் தாழ்வாகக் கருதவும் தாழ்வாகநடத்தவும் இடங்கொடுக்கக் கூடாது என்ற மன உறுதிவேண்டும்.
ஐரோப்பிய நாகரீகத்தின் புறத் தோற்றங்களிலே ஆக்ஷேபத்துக்கு இடமான அம்சங்கள் பலவும் இருக்கின்றன என்பதில் ஸந்தேகமில்லை. ஆனால் இஃது வியக்கத்தக்கதொரு செய்தியன்று. நமது ஸநாதன ஹிந்துதர்மத்தின் புறநடைகளிலேகூடப் பல வெறுக்கத்தக்க அம்சங்கள் வந்து கலந்துதான் கிடக்கின்றன. அதுபற்றி ஐரோப்பிய நாகரீகத்தையே வெறுத்தல் சால மிகப் பெரிய பேதைமையாம். நம்முடைய ஹிந்து தர்மமாகிய வேத தர்மத்துக்கு ஐரோப்பிய நாகரீகம் தனது தத்துவ நிலையில் விரோதமன்று. அதன் உள்நிலை, நான் மேலே குறிப்பிட்டபடி, நமது ஹிந்து தர்மத்துக்குப் பெருத்துணையாக அமைந்திக்கிறது. ஸர்வ ஜீவ ஸமத்வம் எல்லா உயிர்களும் தம்முள்ளே நிகர் என்பது, ஸர்வ ஜீவ ஐக்கியம் - எல்லாஉயிர்களும் ஒன்றென்பது, இவையே ஸநாதன ஹிந்து தர்மத்தின் வேர்க்கொள்கைகள். இவற்றை மனிதர் எப்போதும் தம்முடைய நினைப்புகளில் செயல்களில் விளங்கச் செய்யும் போதுதான் ஹிந்து மதத்துக்கு உண்மையான வெற்றி ஏற்படும்.இக்கொள்கையின் ஒரு சிறு அம்சத்தையே ஐரோப்பியநாகரீகம் தனக்கு ஆதாரமாக உடையது. எல்லா ஜந்துக்களும் நிகரென்பது இறுதியான உண்மை. மனிதரெல்லாரும் தம்முள்ளே ஸமானராவாரென்பது இவ்வுண்மையின் ஒரு சிறுபகுதி. இந்தப் பகுதியுண்மையை நிலை நிறுத்தவேண்டுமென்பதே ஐரோப்பிய நாகரீகத்தின் உட்கருத்து.
ஆனால், ஆழ்ந்த உண்மைகளைக் கண்டுப்பிடிப்பதில் நாம் ஐரோப்பியரைக் காட்டிலும் மிகமிக உயர்ந்திருக்கிறோமெனினும், அவற்றை அனுஷ்டானத்துக்குக் கொண்டு வருவதில் நம்மைக் காட்டிலும் அவர்கள் அதிகஊக்கம் செலுத்துகிறார்கள். ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு ஆகாது. அனுஷ்டானத்துக்கு வராத ஞானத்தை ஞானமென்று சொல்வதே பிழை. ஆகவே, பூமி முழுமைக்கும் பெருந்துணையாக நின்றுமனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றக் கூடிய ஹிந்து மதத்தின் ஸார உண்மைகளை நாம் ஒழுக்கத்தில் காண்பிக்க வேண்டும். இங்ஙனம் காண்பிக்கும்படி நம்மவரைத் தூண்டி வழிகாட்டும் கடமையும் தகுதியும் நம்முடைய மாதர்களுக்கே உரியன. இதனை ஸாதிப்பதற்குரிய உபாயங்களைக் குறித்து மற்றொருமுறை எழுதுகிறேன்.
மாதர் - தமிழ் நாட்டு நாகரீகம்
தமிழ் நாகரீகத்தைக் குறித்து சென்ற வ்யாசத்திலே பொதுப்படையாக சில விஷயங்கள் சொன்னேன். இங்கு அவற்றைச் சற்று விஸ்தாரமாகத் தெரிவிக்கின்றேன். பண்டைத்தமிழ் நாகரீகத்தில் ஸ்திரீகளுக்கு அதிகமான ஸ்வதந்திரம் இருந்தது. இதற்குரிய காரணங்களில் முக்கியமானது யாதெனில்,தமிழ் நாட்டுக்கு மூல அரண்போல் இயற்கையால் வகுப்புற்றிருக்கும் மலையாள நாட்டின் பயிற்சிக்கும் தமிழ் நாகரீகத்திற்கும் எப்பொழுதும் அதிகமான ஊடாட்டமிருந்துகொண்டு வந்தது. மலையாளத்து நாகரீகமோ ஸ்திரீகளைமுன்னிட்டு விளங்குவது.
மிகப் பழைய தமிழ் பாஷையும் மிகவும்"புராதனமான மலையாள பாஷையும் ஒரே வஸ்துதான். பிற்காலத்திலும் சேரநாடு தமிழகத்தில் ஒரு பகுதியாகவே கணக்கிடப்பட்டு வந்தது. சேரரனைவரும் தமிழரசரே. தமிழ்நாடுவேந்தருள்ளே சேர்த்தெண்ணப்பட்டு வந்தனர். பாஷையையொப்பவே நாகரீக விஷயத்திலும் மிகப் பெரிய தமிழ் நாகரீகமும் மிகப் பழைய மலையாள நாகரீகமும் ஒரே வஸ்துதான்.
பிற்காலத்தில் மலைக்கோட்டைக்கு உட்பட்ட மலையாள நாடு பழைய தமிழ் நாகரீகத்தை இயன்றவரை சிதையாமல் காப்பாற்றிக்கொண்டு வந்தது. மலையடிக்குக் கிழக்கே மைதானத்தின் மீது வளர்ச்சி பெற்ற தமிழ் நாகரீகமோவெனில், தெலுங்கு முதலிய வடநாட்டுப்பயிற்சிகளின் ஊடாட்டத்தால் நாளுக்கு நாள் அதிக மாறுதல் பெற்று ஹிந்து தேசத்தின் பொது நாகரீகத்தை அனுசரித்து வருவதாயிற்று.
எனினும், மலையாளத்துப் பழக்கம் ஒருபோதும் நீங்கவேயில்லை. மலை நாட்டு ஆண் மக்கள், உலகமெங்கும் புலி, கரடி, ஓநாய் முதலிய மலை மிருகங்களுடன் போராடியும், மலை வெப்பத்துக்கும், மலை மழைக்கும், மலைப் பனிக்கும்,மலைத் தீக்கும் தப்பியும், கஷ்டத்துடன் பிழைக்க வேண்டியவர்களாதலால், மைதானங்களில் வாழும் ஜனங்களைப்போல் ஸ்திரீகளின் விஷயத்தில் அதிக கடின சித்தமில்லாமல் அவர்களைத் தயவுடனும், மதிப்புடனும் நடத்துவது வழக்கம். ஐரோப்பாவுக்குள்ளே ஸ்விட்சர்லாண்டு தேசத்து மலைப்பெண்கள் மற்றப் பகுதியிலுள்ள மாதரைக் காட்டிலும் அதிக ஸ்வதந்திரமுடையோராக வாழ்ந்து வருகின்றனர்.
மலையாளத்திலோ, மாதர்கள் மிக உயர்ந்த சுதந்திர முடையோர்களாக யிருப்பது மட்டுமேயன்றி சொத்துடைமை அங்கு பெண் சந்ததியாருக்கு ஏற்பட்டிருக்கிறது, இவ்விதமான மலையாள நாகரீகத்துள் நெருங்கிப் பழகி ஊடாடிக்கொண்டு வந்திருப்பதினின்றும், தமிழ்நாட்டு நாகரீகமும் இங்குள்ள மாதர்களுக்கு – ஹிந்து தேசத்தின் மற்றப் பகுதிகளிலுள்ள மாதர்களைக் காட்டிலும்- அதிக ஸ்வதந்திரம் கொடுத்துக்கொண்டு வந்திருக்கிறது.முகம்மதிய நாகரீகத்தின் ஆதிக்கம் பலமடைந்ததினின்றும், வட இந்தியாவில், மேல்ஜாதி ஹிந்து ஸ்திரீகளை கோஷா என்ற முகம்மதிய வழக்கத்தைக் கைகொள்ளும்படி ஏற்பட்ட காலத்திலேகூட, தமிழ் நாட்டிலும் அதன் நாகரீகத்தைத் தழுவிய தெலுங்கு, கன்னடம் முதலிய நாடுகளிலும் அந்த வழக்கம் உண்டாகவில்லை.
மேலும் உலகத்திலுள்ள மாதர்களுக்கெல்லாம் நீதி ஆண்மக்களாலேயே விதிக்கப்பட்டது. தமிழ் நாட்டு மாதரும் ராஜநீதி சம்பந்தப்பட்ட சிறிதளவிலே பொதுவான ஆண் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தனரேயாயினும், ஜனஸமூஹ நீதிகளின் விஷயத்தில் தமிழ் நாட்டில் எப்போதும் ப்ரமாணமாக இயன்று வருவது ஓளவையின் நீதி வாக்கியங்களும் நீதி நூல்களுமேயாம். ஆண்மக்களிலேகூட உயர்ந்த கல்வி பயின்றோர் மாத்திரமே ஜன ஸமூஹ விதாயங்களில் வள்ளுவர் குறள், நாலடியார் முதலியவற்றை ப்ரமாணமாகக் கூறுவர். அதிகப் படிப்பில்லாதவர்களும், படிப்பே தெரியாதவர்களுமாகிய ஜனங்கள் ஆண் பெண் அனைவருக்கும் ஒளவையாரின் நீதியே வழிகாட்டி. தமிழ் ஜனங்களில் பெரும்பான்மையோருக்குச் சுமார் சென்ற இரண்டாயிரம் வருஷங்களாக ஓளவையாரின் நீதியே ப்ரமாணமாக நடை பெற்று வருகின்றது.
ஸாமான்ய ஜனங்கள் ஓளவை நீதியைக் கொண்டாடி வருகிறார்களெனில், கற்றோரும் அரசரும் அதைப்புறக்கணித்து வந்தார்களென்று கருதுதல் வேண்டா. கற்றோருக்கும் அரசர்க்கும் தமிழ் மக்கள் எல்லோருக்கும் குறள், நாலடியார்முதலிய நூல்களைக் காட்டிலும் ஒளவையின் நூல்களில் அகப்பற்றுதலும் அபிமானமும் இருந்து வருகின்றன. ஆனால், இந்த நீதி நூல்கள் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னேயிருந்த முதல் ஓளவையார் இயற்றப்பட்டன அல்ல வென்றும் சுமார் ஆயிரம் வருஷங்களுக்கு முன்னேயிருந்த இரண்டாம் ஓளவையால் செய்யப்பட்டன என்றும் ஒரு கட்சியார் சொல்லுகிறார்கள்.
ஓளவையார் வெறுமே நூலாசிரியர் மட்டுமல்லர். அவர் காலத்திலேயே அவர் ராஜ நீதியில் மிகவும் வல்லவரென்று தமிழ் நாட்டு மன்னர்களால் நன்கு மதிக்கப்பெற்று ராஜாங்கத் தூதில் நியமனம் பெற்றிருக்கிறார். மேலும் அவர் சிறந்த ஆத்மஞானி; யோக சித்தியால், உடம்பை முதுமை, நோவு, சாவுகளுக்கு இரையாகாமல் நெடுங்காலம் காப்பாற்றி வந்தார்.
'மாசற்ற கொள்கை மனத்தமைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு'
அதாவது, ஹிருதயத்தில் சுத்தமான, பயமற்ற, கபடமற்ற, குற்றமற்ற, பகைமையற்ற எண்ணங்களை நிறுத்திக் கொண்டால், உடம்பில் தெய்வத்தன்மை, அதாவது சாகாத்தன்மை, (அமரத் தன்மை) விளங்கும் என்றும் பொருள் படுவது. இந்தக் குறள் பாடியவர் ஓளவையார். இவர் தாமே நெடுந்தூரம் இக்கொள்கைப்படி ஒழுகியவரென்பது இவருடைய சரித்திரத்தில் விளங்குகிறது.
ஒரு தேசத்தின் நாகரீகத்துக்கு அந்த தேசத்தின் இலக்கியமே மேலான அடையாளமென்று முந்திய வியாசத்தில் சொன்னேன். திருஷ்டாந்தமாக ஆங்கிலேய நாகரீகத்துக்கு ''ஷேக்ஸ்பியர்'' முதலிய மஹா கவிகளின்நூல்களே அளவுக் கருவியாக கருதப்படுகின்றன. ''நாங்கள் இந்தியா தேசத்து ராஜ்யாதிகாரத்தை இழக்க ஒருப்பட்டாலும் ஒருப்படுவோமே யன்றி ஷேக்ஸ்பியரை இழக்க ஒருநாளும் ஒருப்படமாட்டோம்'' என்று நாம் மறுமொழி சொல்வோமென்று ''மெக்காலே'' என்னும் ஆங்கிலேய ஆசிரியர் சொல்லுகிறார்.
இந்த மாதிரியாகப் பெருமைப்படுத்தி நம்மவர் கம்பனைச் சொல்லலாம்; திருவள்ளுவரைச் சொல்லலாம்; சிலப்பதிகார மியற்றிய இளங்கோவடிகளைக் கூறலாம்; இன்னும் பல புலவர்களைக் காட்டலாம். எனினும், கம்பர், திருவள்ளுவர் முதலிய பெரும் புலவராலேயே தம்மனைவரிலும் மிகச்சிறந்தவராகக் கருதப்பட்ட ஓளவைப்பிராட்டியையே மிகவும் விசேஷமாக எடுத்துச் சொல்லக்கூடும். 'தமிழ் நாட்டின் மற்றச் செல்வங்களை யெல்லாம் இழந்துவிடப் பிரியமா?ஓளவையின் நூல்களை இழந்துவிடப் பிரியமா?' என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின், 'மற்றச் செல்வங்களை யெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மீட்டும் சமைத்துக்கொள்ள வல்லது. ஓளவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதப்பட மாட்டோம், அது மீட்டும் சமைத்துக்கொள்ள முடியாத தனிப் பெருஞ் செல்வம்' என்று"நாம் மறுமொழி உரைக்கக் கடமைப் பட்டிருக்கிறோம். தமிழ்நாட்டு நாகரீகத்துக்கு அத்தனை பெரும் செல்வமாகவும், இத்தனை ஒளி சான்ற வாடா விளக்காகவும் தனிப் பேரடையாளமாகவும் தமிழ் மாதொருத்தியின் நூல்கள் விளங்குவது நமது நாட்டுக்கு ஸ்திரீகளுக்குப் பெரு மகிழ்ச்சி தரத்தக்கதொரு செய்தியன்றோ? இது தமிழ் ஸ்திரீகளுக்கு வெறுமே புகழ் விளைவிப்பது மாத்திரமன்று. அவர்களுக்கு கிரமமான காவலுமாகும். ஓளவையார் பிறந்த நாட்டு மாதரை, ஓளவையார் இனத்து மாதரை, ஆண் மக்களைக் காட்டிலும் அறிவிலே குறைந்த கூட்டத்தாரென்று வாய் கூசாமல் எவனும் சொல்லத் துணிய மாட்டான். மற்ற தேசங்களில், திருஷ்டாந்தமாக இங்கிலாந்து தேசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே ஆண் மக்களுக்கு சமானமான உரிமைகளைப் பெண்களுக்குக் கொடுப்பது தகாதென்று வாதம் பண்ணுகிற கக்ஷியார், மாதர்கள் இயற்கையிலேயே ஆண்மக்களைக் காட்டிலும் அறிவில் குறைந்தவர்களென்றும், ஆதலால் வீட்டுக் காரியங்களுக்கே அவர்கள் தகுதியுடையோரா வாரல்லது அறிவு வன்மையால் நடத்தவேண்டிய நாட்டுப் பொதுக் காரியங்களை நிர்வகிக்க அவர்களுக்குத் திறமை கிடையாதென்றும் தர்க்கிக்குமிடத்தே, அதற்கு ஒரு ஸாக்ஷ்யமாக, 'ஆண் மக்களில் க்ஷேக்ஸ்பியர் என்னும் கவியரசர் எழுதியிருப்பது போன்ற கவிதை எழுதும் திறமை கொண்ட ஸ்திரீ ஒருத்தி நமது நாட்டில் எப்போதேனும் தோன்றியிருப்பதுண்டா? ஏன் தோன்றவில்லை? இதனால் இயற்கையிலே ஸ்திரீகள் ஆண் மக்களைக்காட்டிலும் புத்தியில் குறைந்த வாகளென்பது தெளிவாக விளங்குகிறதன்றோ?' என்கிறார்கள்.
தமிழ் நாட்டிலோவெனில், இப்படிப்பட்ட வாதம் செல்லாது. அதற்கு நேர் எதிரிடையாக இந்நாட்டில் ஸ்திரீகள்:- ''ஓளவையாரைப் போல் கவிதையும் சாஸ்திரமும் செய்யக்கூடிய ஓர் ஆண் மகன் இங்கு பிறந்திருக்கிறானா? ஏன் பிறக்கவில்லை? இதினின்றும் ஆண் மக்கள் இயற்கையிலேயே பெண்களைக் காட்டிலும் அறிவுத்திறமையில் குறைந்தவர்களென்பது தெளிவாக விளங்குகிறதன்றோ?'' என்று வாதிக்கக்கூடிய நிலைமையிலிருக்கிறார்கள்.
மகிமை பொருந்திய ஆத்ம ஞானியாகிய ஓளவையார் இயற்றியிருக்கும் 'ஓளவை குறள்' என்ற ஞானநூல் தமிழ் நாட்டு யோகிகளாலும் சித்தர்களாலும் உபநிஷத்துக்களுக்குச் சமானமாகப் போற்றப்பட்டு வந்திருக்கிறது. யோக சாஸ்திரத்துக்கும் மோக்ஷ சாஸ்திரத்துக்கும் இந்நூல் முக்கிய பாடங்களில் ஒன்றாகக் கருதத்தக்கது. மேலும் யோகாநுபூதி ஸம்பந்தமாகப் பிறர் எழுதுமிடத்தே மிகவும் கடினமும் அஸாதாரணமுமாகிய சொற்களையும் வாக்கியங்களையும் வழங்குதல் இன்றியமையாததென்ற கருத்துடன் வேலை செய்திருக்கிறார்கள். ஓளவையின் நூலோ மிகத் தெளிந்த, மிக எளிய தமிழ்நடையில் எல்லா ஜனங்களுக்கும் பொருள் விளங்கும்படியாக எழுதப்பட்டிருக்கின்றது. 'சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்' என்பது கவிதைத் தொழிலில் மிகவும் உயர்ந்த தொழில். இதில்ஓளவை ஒப்பற்றவள். இத்துடன் மிகவும் அருமையான நுட்பமான விஷயங்களை யாவருக்கும் அர்த்தமாகும்படி மிகவும் எளிய நடையில் சொல்வதாகிய அற்புதத் தொழிலை உயர்ந்த கவியரசர்களே தெய்வீகத் தொழில் என்றும்தெய்வசக்தி பெறாத சாதாரணக் கவிகளுக்கு சாத்தியப்படாத தொழில் என்றும் கருதுகிறார்கள். இந்த அற்புதத் தொழிலிலும் ஓளவை நிகரற்ற திறமை வாய்ந்தவள்.
புருஷார்த்தங்கள், அதாவது மானிட ஜன்மம் எடுத்ததினின்றும் ஒருவன் அடையக்கூடிய மிக உயர்ந்த பயன்களாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் வீடு என்று சொல்லப்படும் முக்தி வாக்குக்கும் மனதுக்கும் எட்டாதாகையால், அதனை விரித்துக் கூற முயலாமல், அதற்குச் சாதனமாகிய தெய்வபக்தியை மாத்திரம் முதல் அத்யாயத்தில் கூறி நிறுத்திவிட்டு, மற்ற மூன்று புருஷார்த்தங்களையும் விளக்கி, திருவள்ளுவ நாயனார் ''முப்பால்'' (மூன்று பகுதிகளுடையது) என்ற பெயருக்கு திருக்குறள் செய்தருளினார். ஆயிரத்து முன்னூற்று முப்பதுசிறிய குறட்பாக்களில் நாயனார் அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலையும் அடக்கிப் பாடியது மிகவும் அபூர்வமான செய்கை என்று கருதப்பட்டது. இது கண்ட ஓளவைப்பிராட்டி வீட்டுப் பாலையும் கூட்டி நான்கு புருஷார்த்தங்களையும் ஒரே சிறிய வெண்பாவுக்குள் அடக்கிப் பாடினார். இந்த ஆச்சரியாமான வெண்பா பின்வருமாறு:
-
''ஈதலறம்; தீவினை வீட்டீட்டல் பொருள்; எஞ்ஞான்றும்
காதலிருவர் கருத்தொருமித் - தாதரவு
பட்டதே இன்பம்; பரனை நினைந்திம் மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.''
எனவே, கைம்மாறு கருதாமல் பிறருக்கு எவ்விதத்திலேனும் செய்யப்படும் கஷ்ட நிவாரணங்களும் அனுகூலச் செயல்களும் ஈகை எனப்படும். இதுவே மனிதனுக்கு இவ்வுலகத்தில் அறம், அல்லது தர்மம், அல்லது கடமையாம். இனி, தீயசெயல்கள் செய்யாதபடி, எவ்வகைப்பட்ட அறிவு முயற்சியாலேனும் சரீர முயற்சியாலேனும் சேகரிக்கப்படும் உணவு, துணி முதலிய அவசியப் பண்டங்களும், குதிரை வண்டிகள், ஆபரணங்கள், வாத்தியங்கள், பதுமைகள் முதலிய சௌக்கிய வஸ்துக்களும், இவற்றை அனுபவிப்பதற்குச் சாதனங்களாகிய வீடு, தோட்டம் முதலியனவும், இப்பண்டங்களுக்கெல்லாம்பொதுக் குறியீடும் பிரதியுமாக மனிதரால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கும் பொற்காசு, வெள்ளிக்காசு, காகிதப் பணம் முதலியனவும், செல்வம் அல்லது அர்த்தம் எனப்படும் நற்செயல்களாலே சேர்க்கப்படும் பொருளே இன்பத்தைத் தருவதாகையாலும், தீச் செயல்கள் செய்து சேர்க்கும் பொருள்பலவிதத் துன்பங்களுக்கு ஹேதுவாய் விடுமாகையாலும், தீவினைகள் விட்டுச் சேர்ப்பதே பொருள் என்னும் பெயர்க்குரியதென்றும் தீவினைகளாலே சேர்ப்பது துன்பக் களஞ்சியமே யாகுமென்றும் ஓளவையார் குறிப்பிட்டருளினார்.
இனி, இன்பத்துக்கு ஓளவையார் கூறும் இலக்கணமோ நிகரற்ற மாண்புடையது. காதலின்பத்தையே முன்னோர் இன்பமென்று சிறப்பித்துக் கணக்கிட்டனர். பொருளைச் சேர்ப்பதிலும் அறத்தைச் செய்வதிலும் தனித்தனியே பலவகையான சிறிய சிறிய இன்பங்கள் தோன்றும். ஆயினும் இவை காதலின்பத்துக்குத் துணைக் கருவிகளாவது பற்றியே ஒருவாறு இன்பங்களென்று கூறத் தக்கனவாம். உலகத்தில் மனிதர் ருசியான பதார்த்தங்களை உண்டல், நல்ல பாட்டுக் கேட்டல், நல்லமலர்களை முகர்தல் முதலிய இந்திரிய இன்பங்களை விரும்பி அவற்றை அடையும் பொருட்டு மிகவும் பாடுபடுகிறார்கள். அதிகார இன்பம், புகழின்பம் முதலிய எண்ணற்ற வேறு பல இன்பங்களுக்காகவும் உழைக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் அற்பமான இன்பங்களென்று கருதி முன்னோர் இவற்றை இன்பப்பாலிலே சேர்க்கவில்லை. புகழ் அதிகாரம் முதலியவற்றை அறத்துப்பாலிலும், பொருட்பாலிலும் சார்ந்தனவாகக் கணித்தார்கள். இந்திரிய இன்பங்களுக்குள்ளே இனிய பக்ஷணங்களையும் கனிகளையும் உண்டல், மலர்களை முகர்தல் முதலியன மிகவும் எளிதிலே தெவிட்டக் கூடியனவும், வெறுமே சரீர சுகமாத்திரமன்றி ஆத்ம சுகத்துக்கு அதிக உபகார-மில்லாதனவுமாதல் பற்றி அவற்றையும் இன்பப்பாலிலேசேர்க்கவில்லை.
-
'கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்
ஒண்டொடிக் கண்ணேயுள'
''காண்டல், கேட்டல், உண்டல், மோப்பு, தீண்டுதல்எனும் ஐவகை இந்திரியங்களையும் ஒருங்கே இன்புறுத்தும் இயல்பு ஒளி பொருந்திய வளையணிந்த இப்பெண்ணிடத்தேதானுள்ளது'' என்பது அக்குறளின் பொருள். இதனுடன்உயிருக்கும் மனத்துக்கும் ஆத்மாவுக்கும் சேர இன்பமளிப்பதனால் காதலின்பம் இவ்வுலக இன்பங்களளைத்திலும் தலைமைப்பட்டதாயிற்று. ஆதலால், நான்கு புருஷார்த்தங்களுள், அதாவது மனிதப் பிறவி எடுத்ததனால் ஒருவன் எய்தக்கூடிய பெரும் பயன்களைக் கணக்கிடப் புகுந்த இடத்து நம் முன்னோர் காதலின்பத்தையே இன்பமென்னும் பொதுப் பெயரால் சொல்லி யிருக்கிறார்கள். இங்ஙனம் இன்பமொன்றை பொதுப்பெயரால் சிறப்பித்துக் கூறத்தக்க பெருஞ் சுவைத் தனியின்பம் மனிதனுக்குக் காதலின்பமே யாகுமென்பதையும், அவ்வின்பத்தை தவறுதலன்றி, நுகர்தற்குரிய வழியின்னதென்பதையும் ஓளவைப் பிராட்டியார் சால இனிய தமிழ்ச் சொற்களிலே காட்டி அருள் புரிந்திருக்கிறார்.
ஒருவன் ஒருத்தியினிடத்திலும், ஒருத்தி ஒருவனிடத்திலும் மனத்தாலும், வாக்காலும் செய்கையாலும், கற்பு நெறிதவறாமல் நித்தியப் பற்றுதலுடையோரால் மன ஒருமையெய்தித் தம்முள் ஆதரவுற்றுத் துய்க்கும் இன்பமே இன்பமெனத் தகும் என்று ஓளவையார் கூறுகிறார்.
இனி, முக்தியாவது யாதெனில்:- கடவுளை உள்ளத்திலிருத்தித் தானென்ற கொள்கையை மாற்றி ஈசபோதத்தையெய்தி, மேற்கூறிய மூன்று புருஷார்த்தங்களிலும் எவ்விதமான ஸம்பந்தமுமில்லாமலே செய்கையற்று மடிந்து கிடப்பானென்- றெண்ணுதல் பெருந் தவறு. உயிருள்ள வரை ஒருவன் தொழில் செய்யாதிருக்கக் கடவுளுடைய இயற்கை இடங்கொடாது. 'யாவனாயினும் (மனத்தாலேனும், வாக்காலேனும், உடம்பாலேனும்) யாதேனு மொருவிதமான செய்கை செய்துகொண்டிராமல் சும்மாயிருத்தல் ஒரு க்ஷணங்கூட ஸாத்தியப்படாது. இயற்கையிலேயே பிறக்கும் குணங்களால் ஒவ்வொருவனும் தன் வசமின்றியே எப்போதும் தொழில் செய்து கொண்டிருக்கும்படி வற்புறுத்தப் படுகிறான்' என்று கண்ணபிரான் பகவத் கீதையில் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.
இன்னும் ஓளவைப் பிராட்டியின் நூல்களிலுள்ள வசனங்களை உதாரணங்காட்டி அவருடைய மகிமைகளையெல்லாம் விளக்கிக் கூறவேண்டுமாயின் அதற்கு எத்தனையோ சுவடிகள் எழுதியாக வேண்டும். நமது வியாசமோ ஏற்கெனவே மிகவும் நெடிதாய்விட்டது. ஆதலால் இந்தக் கவியரசியைக் குறித்துத் தற்காலத்தினர் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்களில் மிகவும் முக்கியமாக எனக்குத் தோன்றுவனவற்றை மற்றொரு வியாஸத்தில் சுருக்கமாகச் சொல்ல உத்தேசம் கொண்டிருக்கிறேன்.
தமிழ் நாட்டு மாதராகிய, என் அன்புக்கும் வணக்கத்துக்குமுரிய, சகோதரிகளே, இத்தனை பெருமை வாய்ந்த தமிழ் நாகரீகத்தின் எதிர்கால வாழ்வு உங்களுடைய பயிற்சிகளையும் முயற்சிகளையும் பொறுத்திருக்கிறது.பூமண்டலத்தில் நிகரில்லாத அருஞ்செல்வமுடைய சேமநிதியொன்றுக்குக் கடவுள் உங்களைக் காவலாக நியமித்திருக்கிறான். மனித உலகமோ இந்த நேரத்தில் பிரமாண்டமான சண்ட மாருதங்களைப் போன்ற மாறுதல்களாலும், கிளர்ச்சிகளாலும், புரட்சிகளாலும், கொந்தளிப்புற்ற கடலிடைப்பட்டதொரு சிறுதோணிபோல் அலைப்புண்டும், புறளுண்டும், மோதுண்டும், எற்றுண்டும், சுழற்றுண்டும், தத்தளிக்கிறது. இந்த மஹா பிரளயகாலத்தில் தமிழ் நாகரீகம் சிதறிப் போகாதிருக்கும்படி கடவுள் அருள் புரிவாராகுக. அஃது அங்ஙனம் சிதறாமலிருக்குமாறு தகுந்த கல்விப் பெருமையாலும், ஒழுக்க மேன்மையாலும் விடுதலையின் சக்திகளாலும். அதைக் காப்பாற்றக் கூடிய திறமையை உங்களுக்கு பரப்ரம்மம் அருள் செய்க.
-----------
மாதர் - பெண்கள் ஸம்பாஷணைக் கூட்டம்
''காசி'' எழுதுவது:-
புதுச்சேரியில் சில தினங்களின் முன்பு நடந்தபெண்கள் ''மஞ்சள் குங்குமம் (ஸம்பாஷணை) கூட்டமொன்றில் நடந்த விஷயங்கள் பின்வருமாறு:-
ஆரம்பம்
பார்வதி, லக்ஷ்மி, ஸரஸ்வதி முதலியபடங்களுக்குப் பூஜை முடித்த பிறகு விடுதலைப் பாட்டுகள்பாடப்பட்டன. பிறகு ஸ்ரீமான் ஸ்ரீநிவாஸாசார்யர் புத்திரி மண்டயம் ஸ்ரீமதி கிரியம்மா பின்வரும் உபந்யாஸம் செய்தார்:
முயற்சியின் பயன்
நமது தேசத்தில் தெய்வ பக்தி அதிகமென்பதையாரும் மறுக்க முடியாது. ஆனால் தெய்வத்தை நம்பிவிட்டு நாம் யாதொரு முயற்சியும் செய்யாமல் வெறுமே இருந்தால், தெய்வமும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கும்.தெய்வத்தை நம்பி நாமும் முயலவேண்டும். எப்படியென்றால் ஒரு குழந்தை அழாமல் வெறுமே இருந்தால் நாம் அதன்மீது கண்ணைச் செலுத்தாமல் மற்ற வேலைகளில் கவனஞ் செலுத்துகிறோம். அழத்தொடங்கினால் ஆத்திரத்துடன் வேலையைவிட்டு அதை எந்த விதத்திலாயினும் ஸமாதானப்படுத்த முயலுகிறோம். அதுபோல நாம் ஒரு கார்யத்தில் ஊக்கம் வைத்து பிரயத்தினப் பட்டால் அந்த வேலைக்கு எப்படியாவது ஒரு முடிவைத் தெய்வம் காட்டும்.
இப்போது நாம் முயற்சி செய்யவேண்டிய விஷயம் பெண் விடுதலை. பல்லாயிரம் வருஷங்களாக, நாம் அடிமைப் பட்டு வருகிறோம். தெய்வம் தானாக நமக்கு விடுதலை கொடுத்ததா? இல்லை.
'உங்களுடைய வழி இதுதான்' என்று ஒரு சட்டம் ஏற்படுத்தி வைத்தது.
இப்போது நாம் 'இப்படி இருக்கமாட்டோம்' என்றால், 'சரி, ஆனால் பாருங்கள். உங்களுக்காக இன்னெருவழி உண்டாக்கியிருக்கிறேன். அதன்படி நடவுங்கள்' என்றுகூறி நம்மை ஊக்கப்படுத்துகிறது.
'நான் தூங்குவேன்' என்று தெய்வத்தினிடம் சொன்னால் தெய்வம்:- 'ஸூசகமாகத் தூங்கு, உனக்குமெத்தென்று படுக்கை போட்டுத் தருகிறேன்' என்று சொல்லி நம்மைத் தட்டித் தூங்கப் பண்ணுகிறது.
'மாட்டோம்! நாங்கள் எழுந்து உலக விஷயங்களைக் கவனிக்க வேண்டும். இதோ; இதோ எழுகிறோம்' என்றால், 'எழுந்திரு குழந்தாய், இதோ பார்; "உனக்கு இந்தப் பெரிய வழியை ஏற்படுத்தி இருக்கிறேன்.அந்த வழியே போய் நீ நன்மை அடை' என்கிறது.
ஆதலால், ஸகோதரிகளே, தெய்வத்தை நம்பி நாம் முன்னடையும் வழியை நாமே தேட வேண்டும். 'முயற்சி திருவினை ஆக்கும்' என்பது முன்னோர் உறுதிமொழி. நாம்எல்லாரும் சேர்ந்து முயற்சி செய்தல் அவசியம். தெய்வம்நன்மை செய்யும். நம்முள் ஏதேனும் வருத்தம் நேர்ந்தால், அதை நாம் எல்லாரும் ஒன்று சேர்ந்த இடத்தில் தாக்ஷண்யமில்லாமற் சொல்லித் தீர்த்துக் கொள்ளவேண்டும். நாம் குழந்தைகள். நாம் அழுதால் லோகமாதா பராசக்தி உணவு கொடுப்பாள். நாம் அழுவதற்கு வழி முயற்சியினால் தெய்வத்தை இரங்குவித்தல். ஆதலால் முயற்சி செய்வோம். ஓம் வந்தே மாதரம்.
-----------
மாதர் - 'சியூ சீன்' என்ற சீனத்து ஸ்திரீயின் கதை
அப்பால் ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியின்குமாரியாகிய ஸ்ரீ தங்கம்மா பின்வரும் பத்திரிகையைப் படித்தனர்:-
சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன்னே சீனதேசத்தில் செகியாங் மாகாணத்தில் ஷாங் ஸிங் என்றபட்டணத்தில் ஒரு ராஜாங்க உத்தியோகஸ்தரின் மகளாக 'சியூ சீன்' என்ற நமது கதாநாயகி பிறந்தாள். இவளைக்குறித்துச் சென்ற வருஷம் ஆகஸ்டு மாசத்து 'ஏஷியாடிக்ரெவ்யூ' (ஆசிய பரிசோதனை) என்ற பத்திரிகையில்லயோ நெல்கிப்ஸ் என்ற ஆங்கிலேயர் எழுதியுள்ள கதையில் ஸாராம்சமான சில பகுதிகளை இந்த சபையின்"முன்னே தெரிவிக்கிறேன்.
ஆசியாவில் பெண் விடுதலைக் கொடியை நாட்டவேண்டுமென்று பாடுபட்டவர்களில் இவளும் ஒருத்தியாகையால் இவளுடைய கதை பெண் விடுதலையில் நாட்டம் செலுத்தி வரும் உங்கள் அனைவர்க்கும் மிகவும் ரஸமாகத் தோன்றக் கூடும்.
''சியூ சீன்'' என்ற பெயரில் சீன் என்பதற்கு''ஒளியுடைய ரத்நம்'' என்பது பொருள். ''சியூ'' என்ற உபநாமம் ''கார் பருவம்'' (மழை பெய்யுங்காலம்) என்ற பொருள்உடையது. பின்னிட்டு இவள் சிங்ஹஸியாங் என்ற பட்டப்பெயர் தரித்துக்கொண்டாள்; அதன் பொருள் ''ஆண்மக்களுடன் போர் செய்பவள்'' என்பது இவளுக்கு ''சியெந்-ஹெநு-சி-யெஹ்'' என்றும் ஒரு பெயருண்டு.அதன் பொருள் யாதெனில் ''கண்ணாடி ஏரிக்கரைப் பெண்வக்கீல்'' என்பது. ''கண்ணாடி ஏரி'' அந்தப் பிரதேசத்தில் ஒருஏரிக்குப் பெயர்.
பதினெட்டாம் வயதில் இவள் ''லாங்'' என்ற"பெயருள்ள ஒருவனை மணம் செய்து கொண்டு அவனுடன் சீனத்து ராஜதானியாகிய பெசிங் நகரத்தில் சென்று வாழ்ந்தாள்.அங்கே இவளுக்கு ஒரு பெண் குழந்தையும் ஓராண்குழந்தையும் பிறந்தன. 1900 ஆம் வருஷத்தில் பாக்ஸர்கலக நிமித்தமாக பெகிங் நகரத்தில் அன்னிய ராஜ்யப்படைகள் புகுந்து சீனத்துக்குச் செய்த பழிகளைக் கண்டுமனம் பொறுக்காமல், இவள் 'ஐயோ, மனுஷ்ய ஜன்மத்தில் பிறந்தும் நம்முடைய மனுஷ்ய சக்தியைக் காண்பிக்கும் பொருட்டாகக் கஷ்டங்களையும் விபத்துக்களையும் எதிர்த்துஉடைக்கும் பாக்கியம் நமக்கில்லாமல் போய்விட்டதே!வீட்டுக் காரியங்களின் அற்பக் கவலைகளுக் கிரையாகி மடியவா நாம் பூமியில் பெண் பிறந்தோம்' என்று சொல்லி பெருமூச்செறிந்து வருத்தப்பட்டாள்.
சீன பாஷையில் தகுந்த பாண்டித்யம்வஹித்திருந்தது மட்டுமேயன்றி இவளிடம் கவிதா சக்தியும் சேர்ந்திருந்தது. சீன ஸம்ப்ரதாயங்களின்படி கணவனுடன்கூடி வாழும் வாழ்க்கை இவளுடைய இயற்கைக்குப் பொருந்தவில்லை. யாதலால், இவள் பாக்ஸர், கலகத்திற்குப்பின் இரண்டு மூன்று வருஷங்களுக்குள் தன் கணவனிடமிருந்து ஸமாதானமாகவே பிரிந்துவந்துவிட்டாள்.
இதனிடையே இவளுக்குப் பூர்வார்ஜிதமாகக் கிடைத்த"பணம் முழுதையும் ஒரு அயோக்கிய வியாபாரியிடம் கொடுத்து அவன் மூலமாக வியாபாரச் சூதில் இழந்து போய்விட்டாள்.
பின்பு ''ஐப்பானில் போய் ஐரோப்பிய நவீனக்கல்வி பயின்றால் இக்காலத்தில் அதிகப் பயன் பெருகி வாழலாம்'' என்ற எண்ணமுடையவளாய்த் தன்னுடைய ஆபரணங்களை விற்றுப் பணம் சேகரித்துக் கொண்டு ஜப்பானுக்குப் புறப்பட ஆயத்தங்கள் செய்தாள். ஆனால், இவள் பெகிங் நகரத்திற்குப் புறப்படு முன்னே அங்கு சீர்திருத்த கக்ஷியைச் சேர்ந்த ஒருவனை அதிகாரிகள் பிடித்து அடைத்து வைத்திருப்பதாகவும், வக்கீல் நியமிக்கவும், வழக்கு நடத்தவும் பணமில்லாதபடியால் ஏனென்று கேட்பாரில்லாமல் அவன் சிறைக்களத்திற் கிடந்து வருவதாகவும் பணத்திற் பெரும் பகுதியை அவனுக்குக் கொடுத்தனுபி விட்டாள்.
மிஞ்சிய சிறு தொகையுடன் 1904-ஆம்வருஷம் ஏப்ரல் மாஸத்தின் இறுதியில் ஜப்பானுக்குக் கப்பலேறினாள். ஜப்பான் ராஜதானியாகிய டோக்யோ நகரத்தில் தன்னுடைய சாமர்த்தியத்தால் விரைவில் கீர்த்தியடைந்து விட்டாள். சீனத்து மாணாக்கரின் ஸபைகள் பலவற்றில் சேர்ந்து விளங்கினாள். மேலும் அப்போது சீனத்தில் அரசு செலுத்திய மஞ்சு ராஜ்யவம்சத்தை ஒழித்து விடவேண்டு மென்ற கருத்துடன் இவள் தானாகவே பல ராஜ்யப் புரட்சி ஸங்கங்கள் ஏற்படுத்தித் திறமையுடன் உழைத்து வந்தாள். சீனாவில் இப்போது நடைபெறும் குடியரசுக்கு வேர் நாட்டியவர்களில் இவளும் ஒருத்தி.
1905-ம் வருஷத்து வஸந்த காலத்தில் இவள்தன் கல்வியின் பொருட்டுப் பின்னும் பணம் சேர்க்குமாறு சீனத்துக்கு வந்தாள். அப்போது சீனத்திலிருந்த பெரியராஜ்யப் புரட்சித் தலைவர்களுடன் இவள் ஸ்நேகம் ஏற்படுத்திக்கொண்டதுமன்றிக் குடியரசுக் கக்ஷியாரின் மூலஸபையாகிய ''குலாங் - பூ'' (அற்புத உத்தாரண) ஸபையில் சேர்ந்தாள். பிறகு அவ்வருஷம் செப்டம்பர் மாஸத்தில்டோக்யோவுக்குத் திரும்பி அங்கு வாழ்ந்த ஸுனயத்-ஸேன் என்ற மஹாகீர்த்தி பெற்ற குடியரசுக் கக்ஷித் தலைவனுடன்பழக்கம் பெற்றாள்.
அப்பால் சீனத்திலுள்ள ''நான்ஜின்'' நகரத்தில் ஸ்ரீமதி ய்ஜுஹுஹ என்ற தனது தோழியும் தன்னைப்போல் கவி ராணியுமான ஸ்திரீயுடன் சேர்ந்து ஒருபெண் பள்ளிக்கூடத்து உபாத்திச்சியாக வேலை செய்தாள்.
அப்பால் நாடு முழுதிலும் கலாசாலைகள் ஸ்தாபனம் செய்தும், ரஹஸ்ய ராஜ்யப்புரட்சி ஸபையின் கிளைகள் ஏற்படுத்தியும், பத்திரிகைகள் நடத்தியும் தொழில் புரிந்தாள். இங்கிலீஷ் பாஷையிலும் இவள்தகுந்த தேர்ச்சி பெற்றிருந்ததாக லயோநெல்கிப்ஸ் சொல்லுகிறார்.
அப்பால் இவள் தன் ஜன்ம ஸ்தானமாகிய ஷாவ்ஸிங் நகரத்துக்கு மீண்டும் வந்து அங்கே ஒருபாடசாலை நடத்தினாள். ஆனால் அது வெளிக்குப் பாடசாலையாகவும் உண்மையில் குடியரசுப் படைப்பயிற்சிக் கூடமாகவும் நடை பெற்றது. மாணாக்கரெல்லாம் படையாட்களாகப் பயிற்சி பெற்றனர்.
இவளுடைய முடிவைக் குறித்து லயோநெல்கிப்ஸ் பின் வருமாறு எழுதுகிறார்: ஒரு நாள் பிற்பகலில்இவளுடைய ஒற்றர் அஞ்சி வந்து மஞ்சுப் படைகள்ஷாவ்ஸிங் நகரத்தின் மீது தண்டெடுத்து வருவதாகக்கூறினார்கள். அவள் மறுபடி ஒற்றுப் பார்த்து வரும்படிசிலரை ஏவினாள். நகரத்தருகிலுள்ள நதியைத் தாண்டிக்கீழ்க் கரைக்கு மஞ்சுப்படை வந்து விட்டதெனஇவ்வொற்றர் வந்து சொன்னார்கள். பிறகு மிக விரைவில்மஞ்சுப்படை நகரத்துள்ளே புகுந்து விட்டது. மாணாக்கர்கள்அவஸரமாகக் கூட்டங்கூடி பரியாலோசனை நடத்தி இவளைத் தப்பியோடும்படி சொல்லினர். இவள் மறுமொழிகூறவில்லை. மஞ்சுப்படை கலாசாலையின் முன்னே வந்துநின்றது. எனினும் உடனே உள்ளே நுழைய அதற்குதைர்யம் ஏற்படவில்லை. மாணாக்கர்களில் பெரும்பாலோர்புழக்கடை வழியாக வெளியே குதித்தோடிவிட்டனர்.ஏழெட்டுப் பேர்மாத்திரம் ஆயுதங்கள் ஏந்திக்கொண்டு வாயிலில் நின்ற தளத்தின்மீது பாய்ந்தனர். எதிர்பார்க்காதஇச் செய்கைகளைக் கண்ட மஞ்சுப் படை திகைத்து"விட்டது. அப்போது நடந்த போரில் மஞ்சுப்படையாளர்பலர் கொலையுண்டும் புண்பட்டும் வீழ்ந்தனர். மாணாக்கரிலும் இருவர் மாண்டனர். உள்ளே ஓரறையில்வீற்றிருந்த சியூசீனையும் அவளுடன் அறுவரையும் படைவந்து கைதியாக்கிற்று. மறுநாள் நியாயாதிகாரியின் முன்னேசியூசீனைக் கொண்டு நிறுத்தி வாக்கு மூலம் கேட்டபோது உடந்தையானவர்களைக் காட்டிக் கொடுக்கக் கூடாதென்றகருத்தால் இவள் ஒரு சொல்லேனும் மொழியவில்லை.
'சியூ யூசி யூதெங் சவிஷா ஜென்' என்ற கவிதைவாக்கியத்தை மாத்திரம் எழுதிக்காட்டினாள்.
இதன் பொருள்:- 'மாரி நாட் காற்றும் மாரி நாண்மழையும், மார் புண்ணாக வருத்துகின்றனவே' என்பது.
அப்பால் இவளுக்குக் கொலை என்பது தண்டனைவிதிக்கப்பட்டது. ஜூலை 15-ம் தேதி யன்று ஸுர்யோதயவேளையில் இவள் ஷங் ஸிங் நகர மண்டபத்தருகே தூக்குண்டாள். அத்தருணத்தில் இளஞ் செந்நிறமுடைய"மேகமொன்று இவள் தலையின்மீதே வானத்தில் பறந்ததென்றும்,குளிர்ந்த வாடை வீசிற்றென்றும் தூக்கிட்டோரும் பார்த்து நின்றோரும் துக்கத்தால் மெய் நடுங்கினரென்றும், ஆனால் சியூசீன் ப்ரிபூரண சாந்தியுடன் தூக்கு மரத்துக்குச்சென்றாளென்றும் லயோநெல் கிப்ஸ் சொல்லுகிறார்.
சியூ சீன் ஒரு பொதுக்கூட்டத்தில் செய்த உபந்யாஸமொன்றின் ஸாராம்சத்தை லயோநெல் கிப்ஸ் எழுதியிருக்கிறபடிஇங்கு மொழிபெயர்த்துச் சொல்லுகிறேன். அதினின்றும்இவளுடைய உண்மையான குணத்தை அறிந்து கொள்ளுதல்சற்றே எளிதாகுமென்று நினைக்கிறேன். சியூ சீன்சொல்லுகிறாள்:-
ஸஹோதரிகளே, பல்லாயிர வருஷங்களாக நாம்ஆண் மக்களின் கொடுமைக்குக் கீழ்ப்பட்டு வாழ்கிறோம்.எந்தக் காலத்திலும் நமக்கு ஓரணு வளவாயினும் ஸ்வதந்திரம் இருந்தது கிடையாது. மூன்று விதமான கீழ்ப்படிதலென்றும், நான்கு விதமான பெண்ணறங்களென்றும் சொல்லிப் பழைய சாஸ்திர விதிகள் நம்மை இறுகக் கட்டியது மன்றி இந்தபந்தத்தை எதிர்த்து நாம் ஒரு வார்த்தைகூட உச்சரிக்கக்கூடாத வண்ணமாக நம்மை அடக்கிவிட்டன. ஸ்திரீகளாகிய நம்மைச் சிறு குழந்தைப் பிராய முதலாகவே பாதங்களைக்கட்டுதல் என்ற வழக்கத்தால் எண்ணுதற்கரியதுன்பங்களுக்காளாக்கி விட்டார்கள். இந்த முறையால் நமது பாதம் வற்றிச் சதையும், எலும்பும் குறுகிச் சிதைந்து போகின்றன. இதனால் நம்முடல் பலமிழந்து உழைப்பதற்குத் தகுதியற்ற தாய் விடுகிறது. எல்லாக் காரியங்களிலும் நாம்ஆண் மக்களைச் சார்ந்து நிற்க நேரிட்டது. விவாகம்நடந்த பின்னர் நம்மைக் கணவர் அடிமைகளைப்போல நடத்துகிறார்கள். அவர்களுக்குத் துணிப்பெட்டி தைத்துக் கொடுக்கவும், சமையல் பண்ணவும், சோறு போடவும்,தேயிலைக் காய்ச்சிக் கொடுக்கவும், வாயில் தெளிக்கவும், குப்பை பெருக்கவும், அவர்களுக்கு ஸ்நானம் செய்து வைக்கவும், பணி செய்யவும் மாத்திரமே நம்முடையசக்திகளெல்லாம் செலவாகின்றன. முக்கியமான கார்யம் எதிலும் நாம் சிறிதளவேனும் கலக்கக் கூடாது. வீட்டுக்கு யாரேனும் விருந்தாளி வந்தால் உடனே நாம் அந்தர்த்தானம்பண்ணி அறைக்குள்ளே போய்ப் பதுங்கிக் கொள்ளவேண்டும். எதைக் குறித்தும் நாம் ஆழ்ந்த விசாரணை"செய்யக் கூடாது. ஏதேனும் வாதத்தில் நீண்ட மறுமொழிசொல்லப் போனால் ஸ்திரீகள் அற்பமதியுடையவர்களென்றும் ஸ்திரபுத்தியில்லாதவர்களென்றும்சொல்லி நம்முடைய வாயை அடைத்து விடுகிறார்கள்.இதற்கெல்லாம் காரணம் நம்முடைய தைர்யக்குறைவேயன்றி வேறில்லை. இந்த தைர்யக் குறைவுக்குரியபல ஹேதுக்களில் நம்மைக் குழந்தைப் பிராயத்திலேயேபாதங்கட்டி விடுதல் ஒன்றாகும். ''மூன்றங்குலப்பொற்றாமரைகள்'' என்றும், அவற்றின் 'மோஹனச் சிறுநடை' என்றும் வர்ணித்துப் பெண் குழந்தைகளின் அடிகளைக் கட்டிப் போடும் தீமையால் நாம் சக்தியிழந்துவிட்டோம். இன்று எனது ரத்தம் கொதிப்புற்று நிற்கிறது.உங்களுடைய ரத்தத்தையும் கொதிக்கும்படி செய்ய விரும்புகிறேன். முதலாவது, இனிமேல் எல்லாஸ்திரீகளும் சூர்ணம் தடவுவதையும் முகப்பூச்சுகள்பூசுவதையும் நிறுத்திவிட வேண்டும். மோஹப்படுத்தவேண்டுமென்று பொய்ப் பூச்சுகள் பூசக் கூடாது.ஒவ்வொரு மனுஷ்ய ஜந்துவுக்கும் கடவுள் கொடுத்த முகமிருக்கிறது. பாதங்களைக் கட்டும் நீச வழக்கத்தை உடனே வேரோடு களைந்து எறிந்து விடவேண்டும்.ஐந்து கண்டங்களிலுமுள்ள வேறெந்த நாட்டிலும் இவ்வழக்கம் கிடையாது. அப்படியிருந்தும் உலகத்தில் சீனாவே அதிக நாகரீகமுடைய தேசமென்று நமக்குள்ளே"பிதற்றிக் கொள்ளுகிறோம். பாதக்கட்டு மட்டுமேயன்றி,இன்னும் பழைய கெட்ட வழக்கங்கள் எத்தனை உள்ளனவோ அத்தனையும் ஒழித்தெறிவோம். ஆண்மக்களுக்கு இனி அடிமைகளாக வாழ மாட்டோம்.தைர்யத்துடன் எழுந்து நின்று தொழில் செய்துநம்முடைய ஸ்வதந்திரத்தை நிலைநிறுத்திக் கொள்ளுவோம்.
-----------
மாதர் - பெண் விடுதலை (3)
சீனபாஷையில் 'சீயூ சீன்' என்ற ஸ்திரீ பாடியபாட்டின் தமிழ் மொழி பெயர்ப்பு.
-
விடுதலைக்கு மகளி ரெல்லோரும்
வேட்கை கொண்டனம்; வெல்லுவமென்றே
திட மனத்தின் மதுக் கிண்ணமீது
சேர்ந்து நாம் பிரதிக்கினை செய்வோம்
" உடையவள் சக்தியாண் பெண்ணிரண்டும்
ஒரு நிகர் செய் துரிமை சமைத்தாள்,
இடையிலே பட்ட கீழ் நிலை கண்டீர்
இதற்கு நாமொருப்பட்டிருப்போமோ? (1)
திறமையா லிங்கு மேனிலை சேர்வோம்.
தீய பண்டை யிகழ்ச்சிகள் தேய்ப்போம்
குறைவிலாது முழுநிகர் நம்மைக்
கொள்வ ராண் களெனி லவரோடும்
சிறுமை தீர நந்தாய்த் திரு நாட்டைத்
திரும்ப வெல்வதிற் சேர்ந்திங் குழைப்போம்
அற விழுந்தது பண்டை வழக்கம்
ஆணுக்குப் பெண் விலங்கெனு மஃதே (2)
விடியு நல்லொளி காணுதி நின்றே
மேவு நாக ரீகம் புதிதொன்றே!"
கொடியர் நம்மை யடிமைக ளென்றே,
கொண்டு தாமுதலென்றன ரன்றே!
அடியொடந்த வழக்கத்தைக் கொன்றே
அறிவு யாவும் பயிற்சியில் வென்றே
கடமை செய்வீர் நந்தேசத்து வீரக்
காரிகைக் கணத்தீர் துணிவுற்றே. (3)
அப்பால் சில பெண்கள் பேசினர். மங்களப் பாட்டுடன்'மஞ்சள் குங்கும'க் கூட்டம் முடிவு பெற்றது.
நிகழும் காளயுக்தி வருஷம் சித்திரை மாதம்31-ம் தேதி திங்கட்கிழமை யன்று மாலை புதுச்சேரியில்ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதி வீட்டில் திருவிளக்கு பூஜைசெய்யப்பட்டது. சுமார் ஏழெட்டு ஸ்திரீகள் கூடி விளக்குபூஜை முடித்துப் பாட்டுகள் பாடினர். அப்பால் ஸ்ரீ வ.வே. சுப்பிரமணிய அய்யரின் பத்தினியாகிய திருமதிபாக்கியலக்ஷ்மியம்மாள் பின்வரும் உபன்யாஸம்புரிந்தனர்:-
ஊக்கம்
சகோதரிகளே,
பெண் விடுதலை முயற்சிக்கு இந்த ஊர்"ஸ்திரீகள் தகுந்த படி உதவி செய்யவில்லையென்று நாம்மனவருத்தப்பட்டு நம்முடைய நோக்கத்தைத் தளரவிடக்கூடாது. நாம் செய்யும் கார்யம் இந்த ஒரூர் ஸ்திரீகளுக்குமாத்திரமேயன்று; பூமண்டலத்து ஸ்திரீகளுக்காக நாம்பாடுபடுகிறோம்.
உலகமெங்கும் விடுதலை யருவிநீர் காட்டாறுபோலே ஓடி அலறிக்கொண்டுவரும் ஸமயத்தில் நீங்கள்நாவு வறண்டு ஏன் தவிக்கிறீர்கள்?
ஸகோதரிகளே, தயங்காதீர்கள், மலைக்காதீர்கள்.திரும்பிப் பாராமல் நாம் செய்யவேண்டிய எந்தக்கார்யத்தையும் நிறைவேற்றும் வரை - நம்முடையலக்ஷ்யத்தை அடையும் வரை - முன் வைத்த காலைப்பின் வைக்காமல் நடந்து செல்லுங்கள். பேடிகளாயிருந்தால்திரும்புங்கள்.
நாம் கொண்ட காரியமோ பெரிது. இதற்குப்பெரிய இடையூறுகள் நிச்சயமாக நேரிடும். ஆனால்நீங்கள் பயப்படக் கூடாது.
'பயமே பாபமாகும்' என்று விவேகாநந்தர்"சொல்லியதை மறவாதீர்கள். நந்தனார் விடுதலைக்குப் பட்டசிரமங்களை நினைத்துப் பாருங்கள்.
உங்களில் ஒவ்வொருவருடைய கொள்கைகளைஇன்று வாய் விட்டு விஸ்தாரமாகச் சொல்லிவிடுங்கள்.மனதிலுள்ள பயம், வெட்கம் என்ற பேய்களை தைர்யவாளால் வெட்டி வீழ்த்திவிட்டு பாரத ஸஹோதரிகள்பாரதமாதாவுக்குத் தெரிவிக்க வேண்டுமென்பதே என்னுடையப்ரார்த்தனை. ஓம் வந்தே மாதரம்.
ஸ்ரீரங்கப் பாப்பா
பிறகு ஸ்ரீமான் மண்டயம் ஸ்ரீநிவாஸாசாரியார்குழந்தை ரங்கா பின் வரும் உபந்யாஸத்தை படித்தது:-
அநாகரீக ஜாதியார்
இந்தியாவில் முன்பு ஆரியர் குடியேறு முன்னேஇருந்த பூர்வீக ஜனங்கள் கருநிறமாகவும் சப்பை மூக்காகவும்இருந்தார்கள்; நாகரீகமற்ற பேதை ஜனங்கள். அவர்களுடையசந்ததியார் இப்போது சில குன்றுகளின் மீதும் சில"கனிகளிடையிலும் வஸிக்கின்றனர். இந்த வகுப்பைச் சேர்ந்தஜூலாஸ் குலக் என்ற ஜாதி ஒன்று இப்போது ஒரிஸ்ஸாதேசத்தில் இருக்கிறது. துரைத்தனத்தார் அந்த ஜாதிக்குஇனாமாகத் துணி கொடுத்துக் கட்டிக் கொள்ளும்படி செய்து,துணி கட்டிக் கொள்வோருக்கு வெகுமதி கொடுத்துத் துணிகட்டும் நாகரீகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்திக்கொண்டு வருகிறார்கள். இதுவரை அந்த ஜாதியார் இவைகளைஉடைபோல் உடுப்பது வழக்கம். இந்த அநாகரீக ஜாதியிலுள்ளமனுஷ்யர் கூடப் பெண்களை மிருகங்கள் மாதிரியாகவேநடத்துகின்றனர்! ஆதலால், நம்முடைய ஆண் மக்கள் நம்மைக்கீழாக நடத்துவது தங்களுடைய உயர்ந்த அறிவுக்குலக்ஷணமென்று நினைத்தால் சரியில்லை. நம்மைக் காட்டிலும்ஆண் மக்கள் சரீர பலத்தில் அதிகம். அதனால் நம்மைஇஷ்டப்படி ஸஞ்சரிக்க வொட்டாமலும் பள்ளிக்கூடம் போய்படிக்கவொட்டாமலும் தடுக்க முடிந்தது. இதனால் அவர்கள்நம்மைவிட மேலென்று நினைத்துக்கொள்ளுதல் தவறு.
-----------
மாதர் - ரெயில்வே ஸ்தானம்
ஒரு சிறிய கதை
வஸந்த காலம். காலை நேரம். தென்காசிஸ்டேஷன். இது பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்தது.இதற்கு மேற்கேயுள்ள அடுத்த ஸ்டேஷன் செங்கோட்டை.இது திருவாங்கூர் ஸமஸ்தானத்தைச் சேர்ந்தது. தெற்கேஇரண்டு மைல் தூரத்தில் மிகக் கீர்த்திபெற்ற குற்றாலத்தருவிவிழுகிறது. பக்கமெல்லாம் மலைய கிரிச் சாரல். கொஞ்சம்மேற்கே போனால், செங்கோட்டை ஸ்டேஷன் முதல்திருவனந்தபுரம் வரை பாதையிலே பத்து ஸ்டேஷன் மட்டும்.இரண்டு பக்கங்களிலும், செங்குத்தான மலைகளும், ஆழமானபள்ளங்களும், மலையை உடைத்து ரயில் வண்டி ஊடுருவிச்செல்லும் பொருட்டாக ஏற்படுத்தப்பட்ட நீண்ட மலைப்புழைகளும் இருபாரிசத்திலும் இயற்கையாய்ப் பச்சை உடுத்து,சால மிகப் பெருஞ் செழிப்புடனே களிகொண்டு நிற்கும்பலவகைப்பட்ட வனக்காட்சிகளும் ஒரு முறை பார்த்தால்பிறகு எக்காலத்திலும் மறக்கமுடியாதன.
இந்தத் தென்காசி ஸ்டேஷன் வெளி முற்றத்தில்காலை நேரத்திலே திருநெல்வேலிப் பக்கம் கிழக்கே போகும்ரயில் வரப்போகிற சமயத்தில் சுமார் நூறு பிரயாணிகள் வந்து கூடியிருக்கிறார்கள்.
இவர்களிலே சிலர் பிராமண வைதீகர். நீர்க்காவிஅழுக்கு நிறமாக ஏறிப்போன மிகப் பழைய வெள்ளைத்துணி உடுத்து உடல் வேர்க்க உட்கார்ந்து கொண்டு, இன்னஊரில், இன்ன தேதி, இன்னாருக்குச் சீமந்தம் என்ற விஷயங்களைப் பற்றி சம்பாஷணை செய்து கொண்டிருக்கிறார்கள்.
பிராமண விதவைகள் பலர் ஒரு புறத்திலே யிருந்து தமக்குள் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். சுமங்கலிப் பிராமணத்திகள் ஒரு பக்கத்தில் தலைகுனிந்துநின்று கொண்டு, போவார் வருவோரை கடைக்கண்ணால்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு சில உத்தியோகஸ்தர்கள் தலைப்பாகை, கோட்டு, கெடிகாரச் சங்கிலிசகிதமாக உலாவுகிறார்கள். சில போலீஸ்காரர்கள் சக்கரவர்த்திகளைப் போல தலைநிமிர்ந்து நடக்கிறார்கள்.சில முகம்மதிய ஸ்திரீகள் முட்டாக்குப் போட்டு தலையையும் முகத்தையும் மூடிக்கொண்டு திசைக்கொருத்தியாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.வெற்றிலை, பாக்கு, புகையிலை. சுருட்டு, பீடி, பொடிப்பட்டை, முறுக்கு, தேன்குழல், சுகியன், காப்பி முதலியனவியாபாரம் செய்யும் ஓரிரண்டு பிராமணரும் சூத்திரமும்பகற் கொள்ளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதாவதுகாசு பெறாத சாமான்களுக்கு மும்மடங்கு நான்கு மடங்குவிலைவைத்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ரயில் வண்டி அன்றைக்கு ஒரு மணிநேரம் தாமஸமாக வந்தது. எனக்குப் பொழுது போகவில்லை. தண்டவாளத்தின் ஓரமாகச் சிறிதுதூரம் உலாவி வரலாமென்று கருதித் தென்புறமாகக்கூப்பிடு தூரம் போனேன். அங்கு ஒரு மரத்தடியிலேமிகவும் அழகுள்ள ஒரு மகம்மதிய கனவான் உட்கார்ந்திருக்கக் கண்டேன். சரிகைத் தொப்பி, சரிகைக் கரைகள் தைத்த மஸ்லீன் சட்டை. சரிகைக்கரை போட்ட நிஜார், சரிகை போட்ட செருப்பு, பூர்ணச் சந்திரன் போன்ற முகம், செழித்து வளர்ந்தமீசை. அவனைப் பார்த்த மாத்திரத்திலே அவன் பிரபுக் குலத்தில் பிறந்தவனென்று எனக்கு நிச்சயமாகிவிட்டது. அவன் கண்களினின்றும் தாரை தாரையாகக்கண்ணீர் ஊற்றுகிறது. இதைப் பார்த்து எனக்கு மிகவும்பரிதாப முண்டாயிற்று. நான் போய் அவனை ஏன்அழுகிறாய் என்று கேட்டால், அதினின்றும் அவனுக்குஒரு வேளை கோபம் உண்டாகுமோ என்பதைக்கூடயோசனை செய்யாமல் சரேலென்று அவன் முன்னேபோய் நின்றுகொண்டு:- ''தம்பி, ஏன் அழுகிறாய்?''என்று கேட்டேன்.
அவன் என்னை ஏற இறங்க ஒருமுறைபார்த்தான். அவனுக்கு 25 வயதுக்குமேல் இராது. அவன் தலையைக் குனிந்து அழுது கொண்டிருந்தபோதே மிகவும் சுந்தர புருஷனாகக் காணப்பட்டான்.பிறகு அவன் என்னைப் பார்த்தவுடன் கண்ணைந்துடைத்துக்கொண்டு என் இரண்டு கண்களுடனேஅவனிரண்டு கண்களும் பொருந்த நோக்கிய காலத்திலஅவன் ரூபம் எனக்கு சாட்சாத் மன்மத ரூபமாகவேதென்பட்டது.
என்னை உற்று நோக்கியதினின்றும் அவனுக்கு எப்படியோ என்னிடத்தில் நல்லெண்ணம்உண்டாய் விட்டது. சற்றேனும் என்னிடம் கோபம்கொள்ளாமல் ''ரயில் எப்போது வரப்போகிறது?'' என்றுகேட்டான்.
''இன்றைக்கு ஒரு மணி நேரம் ரயில்தாமதித்து வரப்போவதாக ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார்'' என்றேன்.
எனக்கு ஹிந்துஸ்தானி அல்லது உருது பாஷை நன்றாகத் தெரியும். ஆதலால் நான் அவனிடம்உருது பாஷையிலே ஆரம்ப முதல் பேசினேன். ?உங்களுக்கு உருது எப்படித் தெரியும்? உங்களைப்பார்த்தால் ஹிந்துக்கள் போலத் தோன்றுகிறதே? என்றுகேட்டான்.
அதற்கு நான்:- ''சிறு பிராயத்திலேயேநான் காசிப் பட்டணத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தேன். அங்கு எனக்கு ஹிந்துஸ்தானி பாஷை பழக்கமாயிற்று'' என்றேன்.
''காசியில் ஹிந்தி பாஷை அன்றோ பேசுகிறார்கள்?'' என்று அந்த முஸல்மான் கேட்டான்.
அதற்கு நான்:- ''ஹிந்தி, உருது, ஹிந்துஸ்தானி எல்லாம் ஒரே பாஷைதான். முகலாயராஜாக்கள் பாரசீக பாஷையிலே தான் பெரும்பாலும்ஆரம்பத்தில் விவகாரம் நடத்திவந்தார்கள். பின்னிட்டுஅவர்கள் தமக்கும் தம்முடைய பரிவாரங்களுக்கும் இந்ததேசத்துப் பாஷையாகிய ஹிந்தியைப் பொது பாஷையாகக்கைக்கொண்டார்கள். ஹிந்தி பாஷை ஸம்ஸ்கிருதத்திலிருந்துபிறந்தது. அது ஸம்ஸ்கிருத பாஷை சிதைவு. அதைஹிந்துக்கள் தேவ நாகரியில் எழுதி ஸ்வம்யம்புவாகப்பேசுகிறார்கள். அதையே பார்ஸி லிபியில் எழுதிக் கொண்டுபல பார்ஸி அரபி மொழிகளைக் கலந்து முஸல்மான்கள்பேசியபோது அதற்கு ஹிந்துஸ்தானி அல்லது உருது என்றுபெயர் வழங்கினார்கள். உருது என்றால் கூடார பாஷை யென்று அர்த்தம். அதாவது, மொகலாய ராஜ்யத்தின் சேனைகள் கூடாரம் அடித்துக்கொண்டு பல தேசத்துப் போர்வீரர்கள் கலந்திருக்கையில் அங்கு தோன்றிய கலப்பு பாஷைஎன்று பொருள். எனக்கு ஹிந்தி தான் மிகவும் நன்றாகத் தெரியும். எனிலும் ஹிந்துஸ்தானி அல்லது உருது மேற்படிஹிந்தி பாஷையில் பார்ஸி அரபிச் சொற்கள் சேர்ந்ததேயாகுமாதலால் தான் இதிலும் நல்ல பழக்கமுடையவனானேன்.இது நிற்க. ''நீ வருத்தப்பட்டுக்கொண்டிருந்த காரணம் யாது?''என்று மறுபடியும் என்னை அறியாமலே கேட்டேன். இதுகேட்டு அந்த முகம்மதியப் பிரபு சொல்லுகிறான்:-
''சுவாமி, உங்களைப் பார்த்த மாத்திரத்திலேயேஎனக்கு உங்களிடம் விசுவாசம் உண்டாகிறது. உங்களிடம்சொன்னால் என் துக்கத்திற்கு நிவர்த்தி உண்டாகுமென்று என்மனதில் ஒருவித நிச்சயம் தோன்றுகிறது. என் துயரம் சாதாரணமாக மற்றவர்களிடம் சொல்லக்கூடியதன்று. எனினும்உங்களிடம் சொல்லலாமென்று நினைத்துச் சொல்லுகிறேன்.என் துயரத்தைத் தீர்த்து விட்டால் உங்களுக்கு மிகுந்தபுண்ணிய முண்டு. இந்த உபகாரத்தை நான் இறந்து போகும்வரை மறக்க மாட்டேன்'' என்றான்.
''முதலாவது உம்முடைய கஷ்டத்தைச் சொல்லும்.தீர்க்க வழி கிடைத்தால் தீர்த்து விடுகிறேன்'' என்றேன்.
அப்போது அம் முகம்மதியப் பிரபு பின்வருமாறு சொல்லத் தொடங்கினார்:
''எங்கள் ஜாதியில் சிறிய தகப்பனார், பெரிய தகப்பனார் மக்களை விவாகம் செய்து கொள்ளலாமென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும். நான் பிறந்தது வடக்கே ஹைதராபாத் நகரம். சிந்து மாகாணத்து ராஜதானியாகிய ஹைதராபாத் அன்று. நிஜாம் அரசரின் ராஜதானியாகிய ஹைதராபாத் நகரம். நான் என்பிதாவுக்கு ஒரே பிள்ளை. நான் பிறக்கும் போது என் பிதாமிகவும் ஏழையாக இருந்தார். நான் பிறந்து சில வருஷங்களுக்குப் பின் எங்கள் ராஜ்யத்தில் ஒரு பெரிய 'லாட்டரி' ஏலச் சீட்டுப் போட்டார்கள். அந்தச் சீட்டுக்கு என் பிதா யாரிடமிருந்தோ 10 ரூபாய் "கடன் வாங்கி அனுப்பினார். அதிர்ஷ்டம் அவருக்கிருந்தது. அவருடைய தரித்திரத்தை நாசம் பண்ணிவிட வேண்டுமென்று அல்லா திருவுளம் பற்றினார். ஒரு கோடி ரூபாய் சீட்டு அவருக்கு விழுந்தது. பிறகு அவர் அதைக் கொண்டு சில வியாபாரங்கள் நடத்தினார். அந்த வியாபாரங்களிலும் அவருக்கு மிதமிஞ்சிய லாபம் கிடைக்கத் தொடங்கி சில வருஷங்களுக்குள்ளே ஏழெட்டுக் கோடிக்கு அதிபதியாய் விட்டார். அப்பால் சற்றே நஷ்டம் வரத்தொடங்கிற்று. என்பிதா நல்ல புத்திமான். நஷ்டம் வரத்தொடங்கிய மாத்திரத்திலே திடீரென்று வியாபாரங்களை யெல்லாம் நிறுத்திக்கொண்டு, பணங்களைத் திரட்டி ஏராளமான பூஸ்திதிகள் வாங்கி அவற்றினிடையே மாளிகை கட்டிக்கொண்டு தம்மால் இயன்றவரை பரோபகாரத்தில் ஈடுபட்டவராய் வாழ்ந்து வந்தார்.
நான் பதினைந்து வயதாக இருந்தபொழுது அவர் இறந்து போய்விட்டார். நான் ஒரே பிள்ளையாதலால் அவர் சொத்தெல்லாம்எனக்கு வந்து சேர்ந்தது. என் வீட்டு மேற்பார்வை செய்யஎனது சிறிய தகப்பனார் நியமிக்கப்பட்டிருந்தார். என் தந்தை இறக்குந் தறுவாயில் சிறிய தகப்பனாருக்குச் சில லக்ஷங்கள்பெறக்கூடிய பூமி இனாம் கொடுத்தது அன்றி, என்னைப்பராமரித்து வரும் கடமையையும் அவருக்கே சார்த்தி விட்டுப் போனார். எனது சிறிய தகப்பனார், முதலாவது வேலையாக, தம்முடைய குமாரத்திகளை எனக்கே மணம் புரிவித்தார். என் பிதா இறந்து இரண்டு வருஷங்கள் ஆகுமுன்னரே, மேற்படி விவாகம் நடைபெற்றது. என் சிறிய தகப்பனாருக்கு ஆண் குழந்தை கிடையாது. மூன்று பெண்பிரஜை தான் அவருக்குண்டு. ஆகவே என்னுடைய சொத்துவெளிக் குடும்பங்களுக்குப் போய்விடக்கூடாதென்று உத்தேசித்து அவர் இங்ஙனம் செய்தார். இந்த விவாகம் என் தாயாருக்குச் சம்மதமில்லை. அவள் தன்னுடைய வகையில் ஒரு அழகான பெண்ணை எனக்கு மணம் புரிவிக்க விரும்பினாள். அதை விட்டு நான் சிறிய தகப்பனாரின் பெண்களை விவாகம் செய்துகொண்டாலும் அவர்களில் யாரேனும் ஒரு பெண்ணை மாத்திரம் மணம் செய்து கொல்வதே சரியென்றும் ஒரேயடியாக மூவரையும் மணம்புரிவது கூடாதென்றும் என் தாய் வற்புறுத்தினாள். இதினின்றும் என் தாயாருக்கும் சிறிய தகப்பனாருக்கும் மனஸ்தாபம் மிகுதியாக ஏற்பட்டது. சிறிய தகப்பனார் என்னைத் தனியாக வேறே ஊருக்கு அழைத்துக்கொண்டுபோய் அங்கு என் தாயாருடைய அனுமதியில்லாமலே விவாகத்தை முடித்து வைத்து விட்டார். சிறிது காலத்துக்கெல்லாம் என் தாயார் என் செய்கையாலே ஏற்பட்ட துக்கத்தைப் பொறுக்க மாட்டாமலே உயிர் துறந்து விட்டாள்.
சிறிய தகப்பனார் இட்டதே என் வீட்டில் சட்டமாய் விட்டது. சொத்து விஷயங்களை நான் கவனிப்பதே கிடையாது. எல்லாம் அவர் வசத்தில் விட்டு விட்டேன். அவரும் என் சொத்தில் தம்மால் இயன்றவரை இரண்டு மூன்று வருஷங்களுக்குள்ளே அறுபத்தேழு லக்ஷம் - கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரை - தாஸிகளின் விஷயத்திலும் குடியிலும் நாசம் பண்ணிவிட்டு கடைசியில் குடி மிகுதியால் குடல் வெடித்துச் செத்துப்போனார். பிறகு என் சொத்தை யெல்லாம் நிர்வகிக்க வேண்டிய கடமை என்னைப் பொறுத்ததாயிற்று. சரி. இந்த விஷயத்தை விஷ்தாரமாகச் சொல்வது என்னுடைய நோக்கமன்று. சொத்துக் கொஞ்சம் நஷ்டமானதில் எனக்கு அதிகக் கஷ்டமில்லை. இதனிடையே என்னுடைய மூன்று மனைவிகளால் நான் படும் பாடு சொல்லுந் தரமன்று. அதோ - பார்த்தீர்களா? ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் முகம்மதிய ஸ்திரீகள் உட்கார்ந்திருக்கும் கூட்டம் தெரிகிறதன்றோ? நடுவே யிருக்கும் மூன்று பேரும் என்னுடைய பத்தினிமார். சுற்றி உட்கார்ந்திருப்போர் வேலைக்காரிகள். அந்த மூன்று பேரும் மூலைக் கொருத்தியாக முகத்தைத் திருப்பிக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்குள்ளே மனவொற்றுமை யில்லையென்பது பிரத்யக்ஷமாக விளங்கவில்லையா? இவர்களில் மூத்தவள் பெயர் ரோஷன். அவளுக்கு வயது இருபத்திரண்டு.அடுத்தவள் பெயர் குலாப் பீவி. அவளுக்கு வயது பத்தொன்பது. அதற்கடுத்தவள் பெயர் ஆயிஷா பீவி. அவளுக்கு வயது பதினாறு. ரோஷனிடத்தில் நான் பேசினால் குலாப் என்னை வெட்டலாமென்று கருதுகிறாள். குலாபிடம் வார்த்தை பேசுவது ஆயிஷாவுக்குச் சம்மதியில்லை. அவளுக்குஒரு நகை வாங்கிக் கொடுத்தால் இவள் ஒரு நகையை உடைத்தெறிகிறாள். இவளுக்கொரு பட்டுச் சட்டை வாங்கிக் கொடுத்தால்".
-------------
மாதர் - முகமதிய ஸ்திரீகளின் நிலைமை
இரண்டு தினங்களுக்கு முன்பு என்னுடைய முகம்மதிய நண்பர் ஒருவர் என்னைப்பார்க்கும் பொருட்டு வந்திருந்தார். இவர் இஸ்லாம் மார்க்கத்தில் ஆழ்ந்த பற்றுதல் உடையவர். எதிர்காலத்தில் இஸ்லாம் மதம் மிகுந்த மகிமையும் ஒளியும்உடையதாய் உலகத்துக்கு எண்ணிறந்த நன்மைகள் செய்யப்போகிறதென்று இவர் உறுதியாக நம்புகிறார்.இவரது நம்பிக்கை நிறைவேறு மென்பதற்கு பல அடையாளங்கள் இக் காலத்தில் உலகமெங்கும் பல அடையாளங்கள் இக் காலத்தில் உலகமெங்கும் தோன்றுவதால், நானும் இவருடைய கருத்தை அங்கீகாரம்செய்கிறேன். ஆதலால், இவருக்கும் எனக்கும் மிகுந்த நட்பேற்பட்டு வளர்ந்து வருகிறது.
இவர் அன்று மாலை என்னிடம் முதலாவதுகேட்ட கேள்வி:-
''சென்ற 22-5-20-ல் சுதேசமித்திரன் பத்திரிகை7-ம் பக்கத்தில் 'ரெயில்வே ஸ்தானம்' என்றொரு கதை எழுதியிருந்தீர்களே'' அது மெய்யாகவே நடந்த விஷயமா''வெறும் கற்பனைக் கதை தானா?'' என்றார்.
''வெறும் கற்பனை'' என்று நான் சொன்னேன்.
'என்ன கருத்துடன் எழுதினீர்?'' என்று அவர் கேட்டார்.
அதற்கு நான்:- ''பொதுவாக நான் கதைகளெழுதும் போதும், வெறுமே கற்பனை நயத்தைக் கருதிஎழுதுவது வழக்கமேயன்றி ஏதேனும் ஒரு தர்மத்தைப் போதிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் எழுதும் வழக்கமில்லை. தர்மபோதனைக்கு வியாஸங்களெழுதுவானேன்'' கற்பனைப் புனைவையே அதில் நான் முக்கியமாகக் கருதுவேன். எனிலும் என்னை மீறியே கதைகளிலும் பெரும்பாலும் தர்மபோதனைகள் வந்து நுழைந்து விடுகின்றன. அவ்வாறே இந்த ''ரெயில்வே ஸ்தானம்'' என்ற கதையிலும் ஒரு தர்மக் கொள்கை இருக்கத்தான் செய்கிறது. ஒருவன் பலமாதரை மணம்புரிந்து கொண்டால் அதினின்றும் அவனுக்குக் கஷ்டம் தான் விளையுமென்பதும், விவாகத்தில் ஒருவன் இன்பம் காணவேண்டினால் அவன் ஒருத்தியை மணம் செய்துகொண்டு அவளிடம் மாறாத தீராத உண்மைக் காதல் செலுத்துவதே உபாயமாகுமென்பதும் மேற்படி கதையினால் குறிப்பிடப்படும் உண்மைகளாகும்? என்றேன். அப்போது அந்த முஸ்லீம் நண்பர்:- ''அந்தக் கதையில் ஒரு பிழைஇருக்கிறது'' என்றார்.
"என்ன பிழை?" என்று கேட்டேன்.
''அக் கதையில் ஒரு முகம்மதியப் பிரபு மூன்றுசகோதரிகளை மணம் செய்ததாக எழுதியிருக்கிறீர்கள். அப்படி சகோதரமான மூன்று பெண்களை மணம் புரிந்து கொள்ளுதல் முகம்மதிய சாத்திரப்படி ''ஹராம்'' (பாதகம்) ஆகக் கருதப்படுகிறது. தன் மனைவி உயிருடனிருக்கையில் அவளுடன் பிறந்த மற்ற ஸ்திரீயை ஒரு முஸ்லீம் மணம் புரிந்து கொள்ளக்கூடாதென்பதே எங்களுடைய சாத்திரங்களின் கொள்கை'' என்று அந்த முகம்மதிய நண்பர் சொன்னார்.
இதைக் கேட்டவுடன் நான்:- ''சரிதான், எனக்கு அந்த விஷயம் தெரியாது. மனைவியொருத்தியின் சகோதரிகளை மணம் புரியும் வழக்கம் ஹிந்துக்குளுக்குள்ளே உண்டாதலால், அதுபோலவே முகம்மதியர்களுக்குள்ளேயே இருக்கலாமென்று நினைத்து அங்ஙனம் தவறாக எழுதி விட்டேன். எனவே அந்தக் கதாநாயகனாகிய முகம்மதியப் பிரபுவுக்கு அவனுடைய சிற்றப்பன் தன் மூன்று குமாரத்திகளையும் மணம் புரிவித்தானென்பதை மாற்றித் தன்னினத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை மணம் புரிவித்தானென்று திருத்தி வாசிக்கும்படி ''சுதேச மித்திரன்''பத்திரிகையில் எழுதி விடுகிறேன்'' என்றேன். (-ரெயில்வே ஸ்தானம்- என்ற கதையில் நான் மேலே கூறிய சாதாரணத்தவறு புகவிட்டது பற்றி பத்திராதிபரும் பத்திரிகை படிப்போரும் என்னைப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன். உலகமெல்லாம் மாதர்களுக்கு நியாயம் செய்ய வேண்டுமென்ற கிளர்ச்சி நடப்பதை அனுசரித்து முஸ்லீம்களும் ஏக பத்தினி விரதம், பெண் விடுதலை, ஆண் பெண் சமத்துவம் என்ற கொள்கைகளைப் பற்றிமேன்மை அடைய வேண்டுமென்பதே என் கருத்து. இந்தக் கருத்து நிறைவேறும்படி பரமாத்மாவான அல்லாஹூத்த ஆலா அருள் புரிவாராக).
இதிலிருந்து சம்பாஷணை பொதுவாக முகமதிய விவகாரங்களின் விஷயத்தைக் குறித்து நடைபெறலாயிற்று. அப்பால் முகம்மதிய மாதர்களின் ஸ்தானத்தைக் குறித்துப் பேசலானோம்.
என்னுடனே ஒரு ஹிந்து நண்பர்இருந்தார். அவர் அந்த முஸ்லீம் நண்பரை நோக்கி:-''உங்களுக்குள்ளே ஸ்திரீகளை அந்தப்புரத்தில் மறைத்து வைப்பதாகிய (கோஷா) வழக்கம் எக்காலத்தில் ஏற்பட்டது?'' என்று கேட்டார்.
அது கேட்டு அந்த முகம்மதிய நண்பர்:-''முகம்மது நபி (ஸல்லல்லாஹி அலகிவஸல்லா) அவர்கள் காலத்திற்கு நெடுங்காலம் முன்னே இந்த வழக்கம் அரேபியாவில் இருந்து இடையே மாறிப்போய்விட்டது.பிறகு முகம்மது நபி அதை மீளவும் விதியாக்கினார்''என்றார். அப்போது நான் ''மதவிஷயங்களை அதாவது அல்லாவிடம் செலுத்தவேண்டிய பக்தி முதலிய விஷயங்களைத் தவிர, விவாகம், ஸ்திரீகளை நடத்த வேண்டிய மாதிரி முதலிய ஜனசமூகத்தின் ஆசார நியமங்களில் காலத்துக்குத் தக்கபடி புதிய மாறுதல்கள் செய்து கொள்ளலாமன்றோ?'' என்று கேட்டேன்.
''அங்ஙனம் ஆசார விஷயங்களிலேகூட மாறுதல்கள் செய்ய எங்கள் சாஸ்திரங்கள் இடங்கொடுக்கவில்லை!'' என்று அந்த முஸ்லீம் நண்பர் சொன்னார்.''எந்த சாஸ்திரங்களுமே ஆசார நியமங்களில், அதாவது நம்மால் விதிக்கப்பட்ட புதிய ஆசாரமுறையில் அதற்குப்பிறகு யாதொரு மாறுதலும் ஏற்படக்கூடாதென்று விதிப்பதுதான் வழக்கம். ஆனால் அதன்படி எங்கும்நடப்பதில்லை. எல்லா ஜாதிகளிலும் எல்லா ஜன சமூகங்களிலும் எல்லா தேசங்களிலும் எல்லா மதஸ்தர்களுக்குள்ளும் காலத்துக்குக் காலம் ஆசாரங்களில் புதிய மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் வருகின்றன''என்று நான் சொன்னேன்.
''புராதன நபிகளால் விதிக்கப்பட்ட ஆசாரங்களில் சில முகம்மதிய நபியின் காலத்தில் மாறவில்லையோ? அது போல் முகம்மது நபியின் காலத்தில் ஏற்பட்ட ஆசாரங்களை அதன் பிறகு மாற்றக்கூடாதோ?'' என்று என் ஹிந்து நண்பர் கேட்டார்.
அது கேட்ட என் முஸ்லீம் நண்பர்:''கூடாது. ஏனென்றால் முகம்மது தான் கடைசி நபி.அவருடைய உத்தரவுகள் கடைசியான உத்தரவுகள். அவற்றை மாற்றுவதற்கு இடமில்லை'' என்றார்.
''முந்திய நபிகளின் கட்டளைகளும் கடவுளுடைய நேரான கட்டளைகளேயன்றி அந்தந்த நபிகளின் சொந்தக் கருத்துக்களல்ல என்பதை இஸ்லாமானவர்கள் அங்கீகாரம் செய்கிறார்கள். காலத்தின மாறுதலுக்கிணங்க, அல்லா, தன் பழைய கட்டளைகளைமாற்றி ஒவ்வொரு புதிய நபி மூலமாகவும் புதிய கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டு வந்திருக்கிறார்; எனவே, முகம்மது நபி இருந்த காலத்துக்கும் தேசத்துக்கும் பொருந்த அவர் மூலமாகப் புதியகட்டளைகள் கொடுக்கப்பட்டன மதக்கொள்கைகள் எக்காலத்துக்கும் எந்த தேசத்திற்கும் பொது. ஆதலால்அவற்றை மாற்றக்கூடாது. வெறுமே ஜனங்கட்கு சம்பந்தமான ஆசார விவகாரங்களை காலதேசங்களுக்குப் பொருந்தும்படி மாற்றலாமென்று முகம்மது நபி சொல்லவில்லையா?'' என்று அந்த ஹிந்து நண்பர் கேட்டார்.
அங்ஙனம் எங்கள் நபிநாயகம் அவர்கள்உத்தரவு கொடுக்கவில்லை'' என்று என் முஸ்லீம் நண்பர்தெரிவித்தார்.
''உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமோ? நீங்கள் கொரான் முழுதும் வாசித்திருக்கிறீர்களோ?'' என்றுநான் கேட்டேன்.
அதற்கு என் முஸ்லீம் நண்பர்:- ''நான் கொரான் முழுதும் ஓதியதில்லை. என் சுற்றத்தாரில் சிலர் கொரான் முற்றிலும் ஓதியிருக்கிறார்கள். இந்த விஷயத்தைப்பற்றி அவர்களிடம் கேட்டுத் தெரிவிக்கிறேன்'' என்றார். பிறகு இந்த விஷயத்தை விட்டுவிட்டோம்.
அப்பால் நான் என் முஸ்லீம் நண்பரை நோக்கி:- ''தென் ஜில்லாக்களிலே தமிழ்ப் பேசும் முஸ்லீம்(ராவுத்தர்) களுக்குள்ளே கோஷா வழக்கம் காணப்படவில்லையே! அதன் காரணம் யாது?'' என்று கேட்டேன்.''இங்கும் சிலர் அந்த வழக்கத்தைப் பரிபாலிக்கத்தான் செய்கிறார்'' என்று என் முஸ்லீம் நண்பர் சொன்னார்.
''எனினும் பலர் அதைப் பரிபாலிக்கவில்லையே?அதன் முகாந்திரம் யாது?'' என்று கேட்டேன்.
''வேதசாஸ்திர விதிகளில் அவர் செலுத்தக் கடமைப்பட்ட அளவு பயபக்தி செலுத்தாமலிருப்பதே அதற்கு முகாந்திரம்'' என்று என் முஸ்லீம் நண்பர் தெரிவித்தார்.
''அப்படியிருந்தும், தென் ஜில்லாக்களிலுள்ள இந்த முஸ்லீம்கள் மற்றப் பக்கத்து முஸ்லீம்களைக் காட்டிலும் அல்லாவின் பக்தியிலும் மதப்பற்றுதலிலும் சிறிதேனும் குறைந்தவர்களில்லை என்பது பிரத்யக்ஷ மன்றோ? அங்ஙனமாக, இவர்கள் கொரான் விதிகளில்போதிய அளவு பயபக்தி செலுத்தாமல் இருக்கிறார்கள்என்று சொல்லுதல் நியாயம் அன்று. இந்த கோஷா விஷயத்தில் மாத்திரம் இந்த தேச சம்பிரதாயங்களைத் தழுவி நடக்கிறார்கள். இவர்களுடைய கூட்டத்தில் எத்தனை ஞானிகளும் பக்திமான்களும் அவதாரம் செய்திருக்கிறார்கள். அவர்கள் இந்த கோஷா விஷயத்தை இக்கூட்டத்தின் மீது வற்புறுத்தாமல் தான் இருந்திருக்கிறார்கள். ஆதலால் மதபக்தி முதலிய விஷயங்களில் மாறுதல்கள் கூடாதேயொழிய, ஆசாரங்களில் காலத்துக்குத் தகுந்த இடத்துக்குத் தகுந்த மாறுதல்கள் செய்து கொள்ள இஸ்லாம் சாஸ்திரங்களே அனுமதி தரக்கூடும் என்று நினைக்கிறேன்'' என்று நான் சொன்னேன்.
இது கேட்டு அந்த முஸ்லீம் நண்பர் மீளவும்:-''நான் நன்றாகக் கொரான் ஓதியவர்களை விசாரித்து இந்த விஷயத்தில் முடிவு சொல்லுகிறேன்'' என்றார். ''இடைக்காலத்து சாஸ்திரங்கள் இந்த விஷயத்தில் அதிகமுரண் செலுத்தக் கூடும். ஆதலால் சாட்சாத் கொரான் வேதத்தையே நன்றாகப் படித்து உணர்ந்தவர்களிடம் விசாரணை செய்யுங்கள்'' என்றேன்.
''சரி, அங்ஙனமே செய்கிறேன்'' என்று என்முஸ்லீம் நண்பர் சொன்னார்.
பிறகு துருக்கி தேசத்தில் ஸ்திரீகளுக்குள்ளே பிரம்மாண்டமான விடுதலைக் கிளர்ச்சி நடந்து வருவதைப்பற்றியும் அங்கு பல மாதர்கள் கோஷா வழக்கத்தை முற்றிலும் ஒழித்துவிட்டு, கல்வி கேள்விகளில் உயர்ந்த தேர்ச்சியுடையோராய், தங்களுக்குள்ளே சபைகள் சேர்த்தும் தாங்களே உபந்நியாஸங்கள் முதலியன நடத்தியும், உலகத்துமற்ற மாதர்களைப்போல் துருக்கியிலுள்ள மாதரும் கல்வி, விடுதலை, ஆண்களுடன் சமத்துவம் இவற்றை எய்தி மேன்படுமாறு அதிதீவிரமான முயற்சிகள் செய்து வருவதைப்பற்றியும் நான் சில வார்த்தைகள் சொன்னேன்.
அப்பால் எங்கள் காலைக் கூட்டம் கலைந்துவிட்டது. என் முஸ்லீம் நண்பரும் தம் வீட்டுக்குப் போயினர்.
--------------
மாதர் - நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்
ருஷ்யாவில் ஜார் சக்ரவர்த்தியின் ஆட்சி பெரும்பாலும் ஸமத்வக் கக்ஷியார் அதாவது போல்ஷிவிஸ்ட் கக்ஷியாரின் பலத்தாலே அழிக்கப்பட்டது. எனினும் ஜார் வீழ்ச்சியடைந்த மாத்திரத்திலே அதிகாரம் போல்ஷிவிஸ்ட்களின் கைக்கு வந்துவிடவில்லை. அப்பால் சிறிது காலம், முதலாளிக் கூட்டத்தார் கெரன்ஸ்கி என்பவரைத் தலைவராக நிறுத்தி, ஒருவிதமான குடியரசுநடத்தத் தொடங்கினார்கள். ஆனால் கெரன்ஸ்கியின் ஆட்சிஅங்கு நீடித்து நடக்க வில்லை. இங்கிலாந்து, ப்ரான்ஸ்முதலிய நேச ராஜ்யங்களிடமிருந்து பலவகைகளில் உதவிபெற்ற போதிலும் புதிய கிளர்ச்சிகளின் வெள்ளத்தினிடையே, கெரன்ஸ்கியால் தலைதூக்கி நிற்க முடியவில்லை. சில மாதங்களுக்குள்ளே கெரன்ஸ்கி தன் உயிரைத் தப்புவித்துக் கொள்ளும் பொருட்டாக ருஷ்யாவினின்றும் ஓடிப்போய், நேசவல்லரசுகளின் நாடுகளில் தஞ்சமென்று குடிபுகநேரிட்டது.
போல்ஷிவிக் ஆட்சி ஏற்பட்ட காலத்திலே அதற்குப் பலவகைகளிலும் தோஷங்கள் கற்பிப்பதையே தம் கடமையாகக் கருதியவர்களிலே சிலர் அதன்மீது ராஜரீக நெறிகளிலே குற்றங்கள் சுமத்தியது போதாதென்று, போல்ஷிவிஸ்ட் கக்ஷியார் ஸ்திரீகளையும் பொதுவாகக்கொண்டு ஒருத்தியை பலர் அனுபவிக்கிறார்களென்று அபாண்டமான பழி சுமத்தப்பட்டது. ஆனால், 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு' ஒன்பதாம் நாள் உண்மை எப்படியேனும் வெளிப்பட்டுவிடும். ஒரு பெரிய ராஜ்யத்தைக் குறித்து எத்தனை காலம் பொய் பரப்பிக் கொண்டிருக்கமுடியும்? சில தினங்களுக்கு முன்பு, இங்கிலாந்து தேசத்தில் மாஞ்செஸ்டர் நகரத்தில் பிரசுரம் செய்யப்படும் 'மாஞ்செஸ்டர் கார்டியன்' என்ற பத்திரிகை நவீன ருஷியாவின் விவாக விதிகளைப் பற்றிய உண்மையான விவரங்களைப் பிரசுரம் செய்திருக்கிறது.
அவற்றைப் பார்க்கும்போது, நவீன ஐரோப்பிய நாகரீகம் என்று புகழப்படும் வஸ்துவின் நியாயமான உயர்ந்த பக்குவ நிலையை மேற்படி போல்ஷிவிஸ்ட் விவாக சம்பிரதாயங்களில் எய்தப்பட்டிருக்கிறதென்று தெளிவாக விளங்குகிறது ஆண், பெண் இருபாலாரும் பரிபூரண ஸமத்துவ நிலைமையுடையோர். இங்ஙனம் இருபாலாரும் முற்றிலும் சமானம் என்ற கொள்கைக்குப் பங்கம் நேரிடாதபடி விவாகக்கட்டைச் சமைக்க வேண்டும் என்பதே ஐரோப்பிய நாகரீகத்தின் உண்மையான நோக்கம். பெண்களுக்கு விடுதலை தாங்கள்வேறு பல ஜாதியார்களைக் காட்டிலும் அதிகமாகக் கொடுத்திருப்பதே தாம் நாகரீகத்தில் உயர்ந்தவர்கள் என்பதற்கு முக்கியமான அடையாளங்களில் ஒன்றாமென்று ஐரோப்பியர்கள் சொல்லுகிறார்கள். அந்த வகையிலே பார்த்தால், ஐரோப்பாவின் இதரப் பகுதிகளைக் காட்டிலும் நவீன ருஷியா உயர்ந்த நாகரீகம் பெற்றுள்ள தென்பது பரத்யக்ஷமாகத் தெரிகிறது.
''மாஞ்செஸ்டர் கார்டியன்'' சொல்லுகிறது:- தெற்கு ஸோவியட் (போல்ஷிவிஸ்ட்) ருஷியாவில் இதுவரையிலிருந்த வீண் நிர்ப்பந்தங்கள் இனி விவாகவிஷயத்தில் இல்லாதபடி ஒழித்துவிடப்படும். அதாவது,வேற்றுமைகள் முதலியன விவாகங்களுக்குத் தடையாகக்கணிக்கப் படமாட்டா! இப்போதுள்ள சட்டப்படி ஸ்திரீகளுக்கும் புருஷர்களுக்கும் எவ்விதத்திலும்வேற்றுமை கிடையாது. இருபாலோரும் ஸமானமாகவேகருதபடுவர். எல்லாக் குழந்தைகளும் ஸமூஹச் சட்டப்படி பரிபூரண சமத்வம் உடையனவாம். பாதுகாப்பில்லாத குழந்தைகள் யாருக்குப் பிறந்த போதிலும், அவற்றைப் பாதுகாக்க ஒரு தனி இலாகா ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் ராஜாங்க சாஸனப்படி நடைபெறும் விவாகங்களையே அங்கீகாரம் செய்யும். பெண்கள் பதினாலு வயதுக்குள்ளும், ஆண்கள் பதினெட்டு வயதுக்குள்ளும் விவாகம் செய்துகொள்ள வேண்டும். இரு திறத்தாரும் மனமொத்தால்தான் விவாகம் செய்யலாம். விவாகம் முடிந்ததும் புருஷன் அல்லது ஸ்திரீயின் பெயரைக் குடும்பத்தின் பெயராக வைத்துக் கொள்ளலாம். விவாகத்துக்குப் பிறகு தம்பதிகள் பரஸ்பரம் உதவியாக வாழக் கடமைப் பட்டிருக்கிறார்கள். புருஷனேனும் ஸ்திரீயேனும் விவாக பந்தத்தை நீக்கிக்கொள்ள விரும்பினால், அங்ஙனமே நீக்கிக் கொள்ளச் சட்டம் இடங்கொடுக்கிறது.'
மேற்படி விவரங்கள் 'மான்செஸ்டர் கார்டியன்' பத்திரிகையிலே காணப்படுகின்றன. சில தினங்களின் முன்பு ஒருகிராமாந்தரத்து ஸ்திரீ 'மாதர் நிலை' என்ற மகுடத்தின் கீழே 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் ஒரு வியாஸம் எழுதியிருந்தார். அந்த வியாஸத்தை வாசித்துப் பார்த்தால் (ஸ்ரீ மான்காந்தி சொல்லுவது போல) எவனுக்கும் அழுகை வராமல் இராது. அந்தவ்யாஸத்தில் நம்முடைய தேசத்து ஸ்திரீகளை நம்மவரில் ஆண்மக்கள் எத்தனை இழிவாகவும் குரூரமாகவும் நடத்துகிறார்களென்பதை அந்த ஸ்திரீ மிகவும் நன்றாக எடுத்து விளக்கியிருந்தார். உலகத்தில் ஒரு ஸ்திரீ ஜனன மெய்திய மாத்திரத்திலே பூமாதேவி மூன்றே சொச்சம் முழம் கீழே அமிழ்ந்து போய் விடுவதாக இந்நாட்டில் முந்தைய ஆண்மக்கள் எழுதி வைத்திருப்பதையும் அதுபோல் ஸ்திரீகளை இழிவாகவும் குறைவாகவும் சொல்லும் வேறு பல 'சாத்திர' வசனங்களையும் மேற்கோள் காட்டி, அந்த மாது நம் பெண்மக்களின் ஸ்திதி, விலங்குகளின் ஸ்திதியைக் காட்டிலும் பரிதாபத்துக்கு இடமாக விளக்கி மிகவும் வருத்த முணர்த்தியிருந்தார்.
இப்படிப்பட்ட நம்முடைய ஸ்திரீகளின் நிலைமையை நவீன ருஷ்யாவில் ஸ்திரீகளின் விஷயமாக ஏற்பட்டிருக்கும் சட்டங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போதுதான் நம்மை ஐரோப்பிய நாகரீகம் எந்த சக்தியினாலே கீழே வீழ்த்திற்று என்பதும், எந்த அம்சங்களில் நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் வழியைப் பின்பற்றத் தகும் என்பதும் தெளிவுறப் புலப்படும். நாம் ஐரோப்பியர் காட்டும் நெறிகளை முற்றிலுமேகைப் பற்றிக் கொள்ளுதல் அவசியமில்லை. திருஷ்டாந்தமாக, நாம் குழந்தைகளை குடும்ப சம்ரக்ஷணையினின்றும் பிரித்து ராஜாங்க ஸம்ரக்ஷணையில் விடவேண்டியதில்லை. பெண்கள் 14வயதுக்குள்ளும் ஆண்கள் 18 வயதுக்குள்ளும் விவாகம் பண்ணித் தீர வேண்டுமென்று நிர்பந்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை. விவாகத்தை ரத்து செய்யும் விஷயத்தில் அவஸரப்பட வேண்டியதில்லை. பொறுமையை உபயோகப்படுத்தி விவாகக் கட்டை நிரந்தரமாகப் பாதுகாப்பதே மனித நாகரீகத்தின் சிறப்பாதலால் நாம் அதற்குரிய ஏற்பாடு செய்வோம். ஆனால் 'ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்விதத்திலும் வேற்றுமை கிடையாது. இருபாலோரும் ஸமானமாகவே கருதப்படுவார்கள்' என்று ருஷ்யச் சட்டம் கூறுமிடத்திலே நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் கருத்தை அனுஸரித்தல் மிக, மிக, மிக, மிக அவசரம்.
-----------
மாதர் - தென் ஆப்பிரிக்காவில் பெண்கள் விடுதலை
தென் ஆப்பிரிக்காவிலே ''பியேட்டர் மாரிட்ஸ் புர்க்'' என்ற பட்டணத்தில் 1910-வருடத்தில் ''பெண்கள் விடுதலைச் சங்கம்'' என்றொரு சபை ஸ்தாபனம் செய்யப்பட்டது. இதிலே பல வகுப்புக்களைச் சேர்ந்த பெண்கள் ஒன்றுகூடி ''பார்லிமெண்டு'' சபையிலே பிரதிநிதிகள் நியமிப்பதற்காக சீட்டுப் (ஓட்)போடும் சுதந்திரம் பெண்களுக்குக் கொடுத்தால் ஒழியவேறு விதமான சீர்திருத்தங்கள் பெண்களுடைய நிலைமையிலே உண்டாக்குவது சாத்தியமில்லை என்று முடிவு செய்துகொண்டு அந்நோக்கத்தை நிறைவேற்றும்படி பிரயத்தனம் செய்து வருகின்றார்கள். இந்தச் சங்கம் ஆரம்பித்த காலத்தில் 'நட்டா' லிலே பெண்கள் நகர சபை(Municipality) க்குச் சீட்டுப் போடும் உரிமைகூட இல்லாதிருந்தனர். இச் சங்கத்தினரின் முயற்சியால் ஸ்திரீகளுக்குள்ளே ஜாதி, குலம், செல்வம், ஸ்தானம், பட்டம் முதலியவற்றால் ஏற்பட்டிருந்த அனாவசியமான தாரதம்யங்கள் குறைந்து வருகின்றன. கல்வி விஷயத்திலே (அதாவது பெண்கல்வி மாத்திரம் அன்று), பொதுவாக தேசத்து ஜனங்களின் படிப்பு விஷயத்தில் இவர்கள் மிகவும் சிரத்தை செலுத்தி வருகிறார்கள். பள்ளிப் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் இயற்கை விதிகள் நன்றாகக் கற்றுக் கொடுத்து மேற்படி விதிகளைத் "தவறினால் இயற்கையே தண்டனை செய்யம் என்பதை அவர்கள் நன்றாகத் தெரிந்து கொள்ளும்படி செய்து, பொதுஜன அறிவை இயற்கை நெறியில் ஓங்கும்படி செய்யவேண்டும் என்று பாடுபடுகிறார்கள். நிலை தவறிப்போன ஸ்திரீகளைக் கொடூரமான அவமதிப்பாலும் அசிரத்தையாலும் மேன்மேலும் கெட்டழிந்து துன்பப் படாதபடி நல்வழி காட்டி நேர்மைப்படுத்தலே தகுதியென்று தீர்மானித்து அதற்குரிய முயற்சி செய்து வருகிறார்கள். ''ஜன சபை ராசி'' (ஜன சபைபார்லிமெண்டு) ரோசி கமிட்டியென்று தன் ராசி ஒன்றுநியமித்து அந்த ராசி (கமிட்டி) யைச் சேர்ந்தவர்கள் அப்போதப்போது ஜன சபைக்கு முன்பு வரும் மசோதாக்களைப் படித்து ஆராய்ச்சி செய்கிறார்கள். ஏதேனும் ஒரு மசோதா சட்டமாவதனாலே ஜனங்களுக்குப் பிரதிகூலம் ஏற்படும் என்று தோன்றினால், உடனே ஜனசபைக் காரரைத் தனித்தனியே போய்ப் பார்த்து ஆட்சேபங்கள் செய்தல், தந்திகளின் மூலம் ஆட்சேபித்தல் முதலிய காரியங்கள் செய்கிறார்கள். ஸ்திரீகளுக்குத் தொழிற்சாலைகளிலே கொடுக்கும் சம்பளம் இன்ன அளவுக்குக் கீழே "போகக்கூடாதென்று நிர்ணயஞ் செய்தஜன சபையார் ஒரு ''சம்பளக் கீழெல்லை மசோதா'' கொண்டு வரவேண்டும் என்று சொல்லி, அதற்காகப் பல ''மெம்பர்''களைப் போய்ச் சந்தித்து வாதாடி வருகிறார்கள். (நடுவிலே ஒரு ரசமான வார்த்தை.''மெம்பர்'' என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் எனக்கு அகப்பட வில்லை. இது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். ''அவயவி'' சரியான வார்த்தை யில்லை. ''அங்கத்தான்'' கட்டிவராது. ''சபிகன்'' சரியான பதந்தான். ஆனால் பொதுஜனங்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்லபதங்கள் கண்டு பிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரைமணி நேரம் யோசித்துப் பார்த்தேன்; 'உறுப்பாளி' ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனதிற்குப் பொருந்தவில்லை. என்ன செய்வேன்! கடைசியாக ''மெம்பர்'' என்று எழுதி விட்டேன். இன்னும் ஆர, அமரயோசித்துச் சரியான பதங்கள் கண்டு பிடித்து மற்றொருமுறை சொல்லுகிறேன்)
ஸ்திரீகளுக்கு நகர சபையிலே சீட்டுப்போடும் சுதந்திரம் மேற்படி சங்கத்தாரின் முயற்சியாலே தான்கைக்கூடிற்று. ஸ்திரீகளையும் குழந்தைகளையும் யாரேனும் அடித்து ஹிம்சை செய்ததாக நியாய ஸ்தலங்களிலே வழக்கு வரும்போது, மேற்படி சங்கத்தின் காரியஸ்தர்கள் போயிருந்து கவனித்து வருகிறார்கள். தென்னாப்பிரிக்கா முழுமைக்குமாக ஒரு பெரிய 'விடுதலை'க்கோட்டம் (கோட்டம் என்பது பெருஞ் சபை) ஏற்பட்டிருக்கிறது. அதனுடன் இந்தச் சங்கமும் சேர்ந்திருக்கிறது. ''பிருத்தானிய ஸ்திரீ ஸாம்ராஜ்யம்'' என்ற பெரிய கோட்டத்துடன் இவையெல்லாம் ஐக்கியப்பட்டிருக்கின்றன. அந்நிய தேசங்களில் உள்ள விடுதலைக் கூட்டத்தாருடனே இவர்கள் அடிக்கடி கடிதப்போக்கு வரவு நடத்துகிறார்கள். இவ்விஷயமெல்லாம் சென்னையில் மிஸஸ் அன்னி பெஸண்ட் என்ற பண்டிதை நடத்தும் ''காமன்வீல்'' (பொது நலம்) பத்திரிகையிலே சொல்லப்படுகிறது. மிஸஸ் அன்னி பெஸண்ட் பெண்கள் விடுதலை விஷயத்திலே தீவிரமான பக்தியுடையவர் என்பது சொல்லாமலே விளங்கும். இப்படியே எல்லா தேசங்களிலும் பெண்கள் மேன்மேலும் சுதந்திரம் பெற்று மனித ஜாதியை மேன்மைப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.தமிழ் நாட்டு ஸ்திரீகள் மாத்திரம் தமது மனுஷ்ய பதவியை ருசுப்படுத்துவதற்கு யாதொரு வழியும் செய்யாமல் இருக்கிறார்களே! ஏன்? என்ன காரணம்?
---------
மாதர் - இந்தியாவில் விதவைகளின் பரிதாபகரமான நிலைமை
ஸ்ரீமான் மோஹனதாஸ் கரம்சந்திர காந்தி (மகாத்மா காந்தி)யால் நடத்தப்படும் ''நவஜீவன்''என்ற பத்தரிகையில் ஒருவர் பாரத தேசத்து விதவைகளைப் பற்றிய சில கணக்குகளைப் பிரசுரம்செய்திருக்கிறார். அவற்றுள் குழந்தை, கைம்பெண்களைப் பற்றிய பின் வரும் கணக்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.
வயது | மணம்புரிந்த மாதர் | கைம்பெண்கள் |
0-1 | 13,212 | 1,014 |
1-2 | 17,753 | 856 |
2-3 | 49,787 | 1,807 |
3-4 | 1,34,105 | 9,273 |
4-5 | 3,02,425 | 17,703 |
5-10 | 22,19,778 | 94,240 |
10-15 | 1,00,87,024 | 2,23,320 |
இந்தக் கணக்கின்படி இந்தியாவில் பிறந்து ஒரு வருஷமாகு முன்னரே விதவைகளாய்விட்ட மாதர்களின்தொகை 1,014! 15 வயதுக்குக் குறைந்த கைம்பெண்களின்தொகை 3 1/2 லக்ஷம்! இவர்களில் சற்றுக் குறைய 18000 பேர் ஐந்து வயதுக்குட்பட்டோர்!
இப்படிப்பட்ட கணக்குகள் சில கொடுத்துவிட்டுஅவற்றின் இறுதியில் மேற்படிக் கடிதம் எழுதியவர். ''இக்கைம்பெண்களின் மொத்தத் தொகை மிகவும் அதிகமாகஇருக்கிறது. இதைப் படிக்கும்போது எந்த மனிதனுடையமனமும் இளகிவிடும். (இந்நாட்டில்) விதவைகள் என்றபாகுபாட்டை நீக்க முயல்வோர் யாருளர்?'' என்று சொல்லிவருத்தப்படுகிறார்.
இந்த வியாசத்தின்மீது மகாத்மா காந்திபத்திராதிபர் என்ற முறையில் வியாக்கியானம் எழுதியிருக்கிறார். அந்த வியாக்கியானம் ஆரம்பத்தில் ஸ்ரீமான் காந்தி ''மேலே காட்டிய தொகையைப் படிப்போர்அழுவார்கள் என்பது திண்ணம்'' என்கிறார். அப்பால்,இந்த நிலைமையை நீக்கும் பொருட்டு, தமக்குப் புலப்படும்உபாயங்களில் சிலவற்றை எடுத்துச் சொல்லுகிறார். அவற்றின்சுருக்கம் யாதெனில், (1) பால்ய விவாகத்தை நிறுத்திவிடவேண்டுமென்பதும் (2) 15 வயதுக்குட்பட்ட கைம்பெண்களும் மற்ற இளமையுடைய கைம்பெண்களும் புனர் விவாகம் செய்துகொள்ள இடம் கொடுக்க வேண்டுமென்பதுமே யாகும்.
ஆனால் இந்த உபாயங்கள் விருப்பமுடையோர்அநுசரிக்கலாமென்றும், தமக்கு இவற்றை அநுசரிப்பதில்விருப்பமில்லையென்றும், தம்முடைய குடும்பத்திலேயேபலவிதவைகள் இருக்கலாமென்றும், அவர்கள் புனர் விவாகத்தைப்பற்றி யோசிக்கவே மாட்டார்களென்றும்,தாமும் அவர்கள் மறுமணம் செய்துகொள்ளும்படி கேட்கவிரும்பவில்லை என்றும் ஸ்ரீமான் காந்தி சொல்லுகிறார்.
----------
மாதர் - ஸ்ரீமான் காந்தி சொல்லும் உபாயம்
''ஆண்மக்கள் புனர் விவாகம் செய்து கொள்ளுவதில்லை என்ற விரதம் பூணுதலே விதவைகளின் தொகையைக் குறைக்கும் அருமருந்தாகும்'' என்று ஸ்ரீமான் காந்தி அபிப்பிராயப்படுகிறார். இந்த விநோதமான உபாயத்தை முதல் முறைவாசித்துப் பார்த்தபோது எனக்கு ஸ்ரீமான் காந்தியின் உட்கருத்து இன்னதென்று விளங்கவில்லை. அப்பால், இரண்டு நிமிஷம் யோசனை செய்து பார்த்த பிறகுதான், அவர் கருத்து இன்னதென்பது தெளிவுபடலாயிற்று. அதாவது, முதல் தாரத்தை சாககொடுத்தவன் பெரும்பாலும் கிழவனாகவே யிருப்பான். அவன் மறுபடி ஒரு சிறுபெண்ணை மணம் புரியுமிடத்தே அவன் விரைவில் இறந்துபோய் அப்பெண் விதவையாக மிஞ்சி நிற்க இடமுண்டாகிறது. ஆதலால் ஒரு முறை மனைவியை இழந்தோர் பிறகு மணம் செய்யாதிருப்பதே விதவைகளின் தொகையைக் குறைக்க வழியாகும்? என்பது ஸ்ரீமான் காந்தியின் தீர்மானம்.
சபாஷ்! இது மிகவும் நேர்த்தியான உபாயம்தான். ஆனால் இதில் ஒரு பெரிய சங்கடம் இருக்கிறது. அதுயாதெனில், இந்த உபாயத்தின்படி ஆண்மக்கள் ஒருபோதும் நடக்கமாட்டார்கள். மேலும், பெரும்பாலும் கிழவர்களே முதல்தாரத்தை இழப்பதாக ஸ்ரீமான் காந்தி நினைப்பதும் தவறு. 'இந்தியாவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சராசரி 25-ம் பிராயத்தில் மரணம் நேருகிறது' என்பதை ஸ்ரீமான் காந்தி மறந்துவிட்டார். எனவே, இளம்பிராயமுடைய பலரும் மனைவியாரை இழந்து விடுகிறார்கள். அவர்கள் ஸ்ரீமான் காந்தி சொல்லும் சந்நியாச மார்க்கத்தை ஒருபோதும் அநுஷ்டிக்க மாட்டார்கள். அவர் அங்ஙனம் அநுஷ்டிப்பதினின்றும் தேசத்துக்குப் பல துறைகளிலும் தீமை விளையுமேயன்றி நன்மை விளையாது. ஆதலால் அவர்கள் அங்ஙனம் துறவு பூணும்படி கேட்பது நியாயமில்லை.
ஸ்திரீ-விதவைகளின் தொகையைக் குறைக்க வழி கேட்டால், ஸ்ரீமான் காந்தி ''புருஷ-விதவை'' களின் (அதாவது: புனர் விவாகமின்றி வருந்தும் ஆண்மக்களின்) தொகையை அதிகப்படுத்த வேண்டுமென்கிறார்! இதினின்றும், இப்போது ஸ்திரீ-விதவைகளின் பெருந்தொகையைக் கண்டு தமக்கு அழுகை வருவதாக ஸ்ரீமான் காந்தி சொல்லுவதுபோல், அப்பால் புருஷ விதவைகளின் பெருந்தொகையைக்கண்டு அழுவதற்கு ஹேது உண்டாகும்.
மேலும், ஆணுக்கேனும், பெண்ணுக்குகேனும் இளமைப் பிராயம் கடந்த மாத்திரத்திலே போக விருப்பமும் போக சக்தியும் இல்லாமற் போகும்படி கடவுள் விதிக்கவில்லை. உலகத்தின் நலத்தைக் கருதி கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும்போக இச்சையை அக்கிரமமான வழிகளில் தீர்த்துக்கொள்ள முயல்வோரை மாத்திரமே நாம் கண்டிக்கலாம். கிரமமாக ஒரு ஸ்திரீயை மணம் புரிந்துகொண்டு அவளுடன் வாழ விரும்புவோர் வயது முதிர்ந்தோராயினும் அவர்களைக் குற்றம் சொல்வது நியாயமன்று. சிறிய பெண் குழந்தைகளை வயது முதிர்ந்த ஆண்மக்கள் மணம் புரியலாகாதென்பதை நாம் ஒருவேளை பேச்சுக்காக ஒப்புக் கொண்டபோதிலும், வயதேறிய பெண்களை வயது முற்றிய ஆண்மக்கள் மணம் புரிந்துகொள்ளக் கூடாதென்று தடுக்க எவனுக்கும் அதிகாரம் கிடையாது. எனவே, எவ்வகையிலே நோக்குமிடத்தும் ஸ்ரீமான் காந்தி சொல்லும்உபாயம் நியாய விரோதமானது; சாத்தியப்படாதது; பயனற்றது.
விதவைகளின் தொகையைக் குறைப்பதற்கும் அவர்களுடைய துன்பங்களைத் தீர்ப்பதற்கும் ஒரேவழிதான் இருக்கிறது. அதை நம்முடைய ஜனத்தலைவர்கள் ஜனங்களுக்கு தைர்யம் போதிக்க வேண்டும். அதை ஜனங்கள் எல்லோரும் தைர்யமாக அனுஷ்டிக்கவேண்டும். அதாவது யாதெனில்:- இந்தியாவில் சிற்சில ஜாதியாரைத் தவிர மற்றப்படியுள்ளோர்,நாகரீக தேசத்தார் எல்லோரும் செய்கிறபடி, விதவைகள் எந்தப் பிராயத்திலும் தமது பிராயத்துக்குத் தகுந்த புருஷரைபுனர் விவாகம் செய்துகொள்ளலாம். அப்படியே புருஷர்கள் எந்தப் பிராயத்திலும் தம் வயதுக்குத் தக்க மாதரை மறுமணம் செய்து கொள்ளலாம். இந்த ஏற்பாட்டை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வரவேண்டும். வீண் சந்தேகம், பொறாமை, குருட்டுக்காமம், பெண்களை ஆத்மாவில்லாத, ஹ்ருதயமில்லாத, ஸ்வாதீனமில்லாத அடிமைகளாக நடத்தவேண்டுமென்ற கொள்கை இவற்றைக்கொண்டே நம்மவர்களில் சில புருஷர்கள் 'ஸ்திரீகளுக்கு புனர் விவாகம் கூடாது' என்று சட்டம் போட்டார்கள். அதனாலேதான், மனைவியில்லாத கிழவர்கள் சிறு பெண்களை மணம் புரிய நேரிடுகிறது. அதனாலேதான், ஹிந்து தேசத்து விதவைகளின் வாழ்க்கை நரக வாழ்க்கையினும் கொடியதாய் எண்ணற்ற துன்பங்களுக்கு இடமாகிறது பால்ய விதவைகள் புனர் விவாகம் செய்து கொள்ளலாமென்று ஸ்ரீமான் காந்தி சொல்லுகிறார். ஆனால் அதைக்கூட உறுதியாகச் சொல்ல அவருக்குத் தைரியம் இல்லை.
----------
This file was last updated on 2 July 2016.
.